நாவலுக்கான முன்னுரை
உலகமே நிலையாமையின் கூடு. உயிர்களாகிய நாம் அதற்கேற்ப பாவனைகளோடு பிம்பங்களை உருவாக்கிக் கொண்டு அலைகிறோம். எதுவும் நிஜமில்லை. எதுவும் நித்தியமில்லை. காலம் மட்டுமே முழு முற்றான உண்மை. நகர்ந்து விடும் காலத்தின் கைகளுக்குள் எத்தகைய முக்கியத்துவங்களும் நழுவியோடி விடும் என்பதே நிதர்சனம். வெறுமையின் தரிசனமே வாழ்வின் பேருண்மை என்பன போன்ற எண்ணங்களுக்கு மத்தியில் இருத்தல் என்பதே அசாத்தியம்தான். அதேசமயம் உலகம் கூடுதல் பாவனையாளரையே நம்புகிறது, விரும்புகிறது, ஏற்கிறது, கொண்டாடுகிறது. இவற்றிலிருந்து ஒதுங்கிக் கொள்வதும் ஆபத்தானதாகத்தானிருக்கிறது. நம் முன்னே குவிந்து கிடக்கும் காலங்களை காலால் எவ்வி விளையாடி, பிறகு அதனிடம் தோற்று உருண்டோடி மறைந்துப் போகும் இந்த உலகியல் விளையாட்டு மனம் முழுக்க ஒரு வெறுமையை உண்டாக்குகிறது. மௌனத்தின் இடைவிடாத ஓசை மனதை இம்சிக்கிறது. புறவாழ்வின் அர்த்தங்களுக்கும் அகத்தின் நிலைப்பாடுகளுக்குமான இடைவெளி நீண்டு கொண்டே செல்வது சொல்லவியலாத ஆயாசத்தை தருகிறது.
‘ஆலகாலம்’ என்ற இந்த நாவலை எழுத விழைந்தது எக்கணம் என்று யோசித்துப் பார்க்கிறேன். முன் திட்டமிடல் என்று ஏதுமில்லை. ‘அற்றைத்திங்கள்’ (யாவரும் பதிப்பக வெளியீடு) நாவலை முடித்திருந்த நேரம் அது. கணினியின் விசைகளை வெற்றாக தட்டியபோது வந்து விழுந்தவற்றை கோர்த்தெடுத்துக் கொண்டேன். வெற்று.. வெறுமை... ஏதுமில்லாமை இவைதான் மனித வாழ்வு என்பதும் அவற்றை கலையோ அவற்றையொத்த விசைகளோதான் முன்செலுத்துபவை என்றும் தோன்றியது.
பூமி விடியல் முடித்து இரவும் இரவு கழிந்து விடியலையும் அனுபவித்து அவை, நாட்கள், வருடங்கள், நுாற்றாண்டுகள், யுகங்கள் என கடந்தபோதும் வாழ்வின் அடிநாதம் அதுவொன்றுதான். அதை வடிவாக்கும் எண்ணம் கொண்டேன். எழுத உட்கார்ந்தபோது அவை பிடிக்கு அகப்படாமல் கலைந்தோடின. பிடித்து அமர்த்தியபோது அது படைப்பாகவில்லை. நானும் பிடிவாதம் கொண்டேன். அதேநேரம் என் மனதை சிறுகதைகள் பக்கம் திருப்பிக் கொண்டேன். இருப்பினும், உள்ளார்ந்து ஓடிக் கொண்டிருந்தவைகளும் என் கவனத்தில்தானிருந்தன. ஒரு புள்ளியில் அவை நிலைகொள்ள, எழுதத் தொடங்கினேன். பாகங்கள் ஒவ்வொன்றாக உருவாகி வந்தபோது ஏதொன்றிலாவது மனம் சிக்கிக் கொண்டு நகரவியலாது நின்று விடும். மிகப் பெரிதாக நான் மூச்சடைத்துப் போனது நான்காவது பாகத்தில்தான். அதில் காந்தியடிகளை கதாபாத்திரமாக்கி உலவ விட்டிருந்தேன். ஆனால் அவரோ என்னை தன் மீது பித்தாக்கி அலைய விட்டு விட்டார். நாவலை அந்தப்புள்ளியில் நிறுத்தி விட்டு காந்திய சிறுகதைகளை எழுத தொடங்கினேன். அதுவும் போதவில்லை. எனது ஆர்வம் கனிந்து ‘ஹரிலால் S/0 மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி’ என்ற நாவலை எழுத வைத்தது. (இந்நுால் தன்னறம் நுால்வெளியின் பதிப்பாக இதே 2022 ஜனவரி புத்தகக்கண்காட்சியில் வெளியாகியுள்ளது. இதன் இரண்டாம் பாகத்தை இப்போது எழுதிக் கொண்டிருக்கிறேன்).
அந்நாவலை எழுதி முடித்த பிறகு மனம் மீண்டும் பிடிவாதம் கொள்ள தொடங்கியது. எழுதி வைத்தவைகளை எடுத்து பார்த்தபோது அதனை தொடர்ந்து செய்யும் ஆர்வம் கிளர்ந்தெழுந்தது. நான் அடையாளம் காண வேண்டிய புள்ளி வடிவென துலங்கி வர, அதை நோக்கி பயணப்பட தொடங்கினேன். ஆலகாலம் உருவானது.
இந்நுாலுக்கு முன்னுரை எழுதியளித்த நண்பர் சரவணன் மாணிக்கவாசகம் அவர்களுக்கு நன்றி. இந்நுாலின் இறுதிப்பகுதியில் எழும் கவிதைகளை தந்துதவிய கவிஞர்.மஞ்சுளாதேவிக்கும் உடனுக்குடன் வாசித்து கருத்துகளை பகிர்ந்துக் கொண்ட எழுத்தாளர் கண்மணிக்கும் நன்றி. மேலும் இந்நுாலின் உருவாக்கத்தில் துணிப்புரிந்த எண்ணற்ற நுால்களின் ஆசிரியர்களுக்கு மனமார்ந்த நன்றி.
இந்நுாலை சிறந்த முறையில் பதிப்பித்த “யாவரும் பதிப்பகத்தாருக்கு“ என் நன்றியும் மனமார்ந்த அன்பும்.
என்னை என் மனநிலையில் முடிந்தவரை
தக்க வைத்துக் கொள்ள உதவிய குடும்பத்தாருக்கு என் அன்பு.
No comments:
Post a Comment