இவ்வாண்டு (2022 பிப்ரவரி) புத்தகக் கண்காட்சி, சென்னையில்
‘யாவரும் பதிப்பக’த்தின் வெளியீடாக வெளியாகியிருக்கும் எனது ‘ஆலகாலம்’ என்ற நாவலில்
காந்தியடிகளை ஒரு கதாபாத்திரமாக்கியிருந்தேன். அதன்பொருட்டு நிறைய நுால்களை படிக்க
வேண்டியிருந்தது. காந்தி எழுதியவைகளும் காந்தியைப் பற்றி எழுதப்பட்டவைகளுமாக கொட்டிக்
கிடக்கும் பரந்தவெளியில் எடுக்க எடுக்க குறையாத எழுத்துகளை அள்ளியள்ளி ஏந்திக் கொண்டேன்.
அது கடலை போன்றது. அள்ள அள்ள தீராதது. யாருக்கேனும் அவற்றை ஒட்டு மொத்தமாக அள்ள முடிந்தால்
அதுவே சாதனைதான். ஆனால் அச்சாதனையை அவர் வாழ்வாக வாழ்ந்திருக்கிறார். அது கம்பீரமாக
உயர்ந்து நிற்கும் இமயம் போன்றும் பெருகியோடும் கங்கையைப் போன்றும் பிரம்மாண்டமானது.
அவர் 1869 முதல் 1948 வரையிலான தன் வாழ்நாளுக்குள் பல நுாறு வாழ்க்கைகளை வாழ்ந்து விட்டவர். நாடு, மதம், இனம், மொழிகளை கடந்த நட்பும் மனிதக்குலத்தின் மீது தீராத காதலும் கொண்டவர். அவரை குறித்து ஆன்மீகவாதியா, அகிம்சைவாதியா, அரசியல்வாதியா, அறவாளரா, துறவாளரா, குடும்பஸ்தரா, சமூக நீதி காவலரா என்று எதை கேட்டாலும் ஆம்.. ஆம்.. ஆம்… என்று கூறிக் கொண்டே போகலாம். அதே சமயம் அவர் ஏதொன்றிலும் நிலைப்பெறுபவர் அல்ல. விரிக்க விரிக்க விரிந்தும் எடுக்க எடுக்க பெருகியும் விளையாடும் வித்தகர். எதையொன்றை முடிவு செய்துக் கொண்டு அவரை அணுகினாலும் அதனை மீறி நழுவிச் செல்பவர். ஆழம் துழாவி அகழ்ந்தெடுத்தாலும் மிச்சமென நிறைபவர்.
அதிசயத்தக்க மனிதர்களை காவிய நாயகர்களாக்கி காவியங்கள் புனையலாம்.
கவிப்பாடி மகிழலாம். நாமும் அவற்றை வாசித்து எங்கோ எப்போதோ நிகழ்ந்தவையென புளங்காகிதம்
கொள்ளலாம். ஆனால் காந்தியடிகளோ அவற்றை நம் கண்ணெதிரே இரத்தமும் சதையுமாக நிகழ்த்தி
விட்டு போயிருக்கிறார். வாசிக்க வாசிக்க பெருகி
நின்றவரை என்னால் ஒரு கட்டத்தோடு நிறுத்த இயலவில்லை. பல்வேறு தலைப்புகளில் காந்திய
சிறுகதைகளை எழுதத் தொடங்கினேன். ஹரிலாலைக் குறித்தும் எழுத வேண்டுமென எண்ணம் தோன்றியது. அதற்கான தரவுகளை திரட்டத்
தொடங்கியபோது அதனை சிறுகதைக்குள் அடக்க முடியாது என்பதை உணர்ந்தேன். அவ்வாறு உருவானதுதான்
‘ஹரிலால் த/பெ மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி’
என்ற இந்நாவல். (இந்நாவலின் இரண்டாம் பகுதியை எழுதிக் கொண்டுள்ளேன்)
நான் எழுதிக் கொண்டிருந்த “ஆலகாலம்” என்ற நாவலை அதேப்புள்ளியில்
நிறுத்தி விட்டு ஹரிலாலை எழுதத் தொடங்கினேன். இதனை எழுதிய மூன்று மாதக்காலமும் நான்
காந்தியவர்களின் குடும்பத்துக்குள்ளேயே இருந்தது போலிருந்தது எனக்கு. இதற்கு தேவைப்பட்ட
பல நுால்களுள் ஒன்றான GANDHIJI’S LAST JEWEL
என்ற நுாலை திரு.அண்ணாமலை, இயக்குநர், தேசிய காந்தி அருங்காட்சியகம், புதுடெல்லி
அவர்கள் எனக்கு PDF வடிவில் எடுத்து அனுப்பி வைத்தார்கள். இதனை ஒரே நாளில் வாசித்து
வாழ்த்திய திரு.மோகன், சேர்மன், காந்தி கல்விநிலையம் அவர்களுக்கும் திருமதி.பிரேமா
அண்ணாமலை, திரு.சு.சரவணன் அவர்களுக்கும் என் இனிய நட்புகளான கவிஞர்.மஞ்சுளாதேவி மற்றும்
எழுத்தாளர் கண்மணி ஆகியோருக்கும் என் மனமார்ந்த
நன்றி.
மேலும் இந்நுாலின் உருவாக்கத்தில் துணைப்புரிந்த மோகன்தாஸ்காந்தி
உட்பட எண்ணற்ற நுால்களின் ஆசிரியர்களுக்கு மனமார்ந்த நன்றி.
காந்தியவர்களை வாசித்தபோதினில் நெகிழ்ந்தும் ததும்பியும்
நின்ற நேரங்களில் எனக்கு உறுதுணையாகவும் ஊக்கமளித்தும் இந்நாவலுக்கு முன்னுரையும் வழங்கியுமாக
நிறைவான நட்பை வழங்கிய எனது இனிய நண்பர், எழுத்தாளர் பாவண்ணன் அவர்களுக்கு என் மனமார்ந்த
நன்றி.
தன்னறம் என்ற சொல் எழும்போதே அதனை ‘சிவராஜ்’ அவர்களின் வாய்
நிறைந்த சிரிப்புடன் மனம் கோர்த்துக் கொள்கிறது. அதே நெகிழ்வும் மகிழ்வுமாக இந்நாவலை வெளியிட முன்வந்த தன்னறம் நுால்வெளிக்கு
என் மனமார்ந்த நன்றி.
No comments:
Post a Comment