Search This Blog

Thursday 20 April 2023

ருட்டியாகிய நான்…

 'தமிழ்வெளி' ஏப்ரல் 2023 வெளியீடு



ருட்டி வெகு உரிமையாக படுக்கையில் தன்னருகே சாய்ந்து கொண்ட ஷப்புர்ஜியின் மெத்தென்ற கழுத்தை மிக மென்மையாக வருடினாள். அது கழுத்தை மேலும் வாகாக்கி கொண்டு அவளின் இளஞ்சூடான ஸ்பரிசத்தில் மெய்மறந்து கொண்டிருந்தது. கோபத்தோடு தங்களையே குறுகுறுவென்று பார்த்துக் கொண்டிருந்த ஃபிடோவை பார்த்ததும் அவளுக்கு சிரிப்பு வந்தது. “கமான் ஃபிடோ…” என்றபோது காத்திருந்தது போல அவளிடம் ஓடி வந்தது. அவளிடம் யார் முதலில் செல்வது என்ற ஆர்லெட்டுக்கும் ஃபிடோவுக்குமான வழக்கமான சண்டையில் ஆர்லெட் வழக்கமற்று தோற்க, அந்த எரிச்சலில் அவள் காலடியில் படுத்துக் கொண்டு மீசைக்குள்ளிருந்த தன் அரும்பு வாயை திறந்து மியாவ்... என்றது ஆர்லெட்.


வெளியே பம்பாய் நகரம் தன் நெருக்கமான அன்றாடங்களுக்குள் புகுந்து கொண்டாலும் குளிர் முற்றிலும் விலகியிருக்கவில்லை. பொதுவாக பிப்ரவரி மாதத்தின் பின்னாட்களில் மூன்று மாதங்களாக முகாமிட்டிருக்கும் குளிர் மெல்ல எழுந்து தன் மூட்டை முடிச்சுகளை கட்ட தொடங்கும். ஆனால் இவ்வாண்டு அங்கிருந்து கிளம்புவதற்கு ஏனோ அதற்கு அதிக விருப்பமிருக்கவில்லை. 

தின்பாய் பெத்திக் அந்த பெரிய வீட்டுக்குள் காற்றை போல நுழைந்தார். அவருடைய மகள் ருட்டி என்கிற ரத்தன்பாய் அங்குதான் இருந்தாள். அவளுக்கு மீண்டும் உடல்நலம் சரியில்லையாம். அவ்வப்போது மகள் உடல்நலமின்றி போய் விடுவது தின்பாய்க்கு வருத்தமாக இருந்தது. பணிப்பெண்கள் அவரை வரவேற்று ருட்டியின் அறைக்கு அழைத்துச் சென்றனர். அந்த பெரிய வீட்டின் மரத்தாலான தரை தன் மீது விரிக்கப்பட்டிருந்த விலையுயர்ந்த விரிப்புக்குள் குளிரை பொத்தி வைத்துக் கொண்டு பாதங்களுக்கு கதகதப்புக் கொடுத்தது. தின்பாய் தரையில் கால்படாமல் வளர்ந்தவர். பார்ஸி இனத்தின் மிக பெரிய செல்வந்தரான சர் ஜாம் ஜெட்ஜி ஜீஜீபாயின் மகள். அதை விட பெரிய செல்வந்தரான தின்ஷா பெத்திக்கின் மனைவி. 

ருட்டி மர வேலைப்பாடுகள் செய்யப்பட்ட அந்த பிரம்மாண்ட கட்டிலில் ஒரு கோடு போல படுத்திருந்தாள். சுற்றிலும் அவளுடைய வளர்ப்பு செல்லங்கள். திருமதி பெத்திக் அங்கிருந்த உயர்தர மெத்திருக்கையில் அமர வைக்கப்பட்டார். அவரது கைப்பையை வெகு பணிவோடு பெற்று அதைவிட பவ்யமாக அதனை மேசையில் வைத்தாள் அவருடன் வந்திருந்த ஆங்கில தாதி. அவர் அணிந்திருந்த ஃபிரெஞ்ச் ஷிஃபான் சேலை தோளிலிருந்து வழியாமல் வைர அங்கி பிடித்து வைத்திருந்தது. சேலைக்கு பொருத்தமான ஆங்கில பாணி சட்டையும் கழுத்தில் நீண்ட முத்து ஆரமும் அணிந்திருந்தார். முக்காடிடுவதை அந்த செல்வாக்கான குடும்பம் எப்போதோ தவிர்த்து விட்டதால் கூந்தலில் அணிந்திருந்த தங்கத்தாலான தலையலங்கார அணி பார்வையில் பளிச்சிட்டது. 

“ருட்டி… நீ இன்னும் சாப்பிடலயா...?” என்றார் ஆங்கிலத்தில். தாய்மொழி குஜராத்தி என்றாலும் ஆங்கிலத்தில் பேசுவது அவர்களின் வழக்கமாக இருந்தது. 

கட்டிலுக்கு அருகிலிருந்த உயர்தர தேக்காலான மேசையின் மீதிருந்த பெரிய வெள்ளி தாம்பாளத்தில் பழங்களும் கொட்டைகளும் பழச்சாறும் பரப்பி வைக்கப்பட்டிருந்தன. 

“ம்ம்… சாப்பிடணும்”   

தாயும் மகளும் பாரிசில் தங்கியிருந்து விட்டு சில மாதங்களுக்கு முன்புதான் இந்தியா திரும்பியிருந்தனர். அங்கும் ருட்டிக்கு உடல்நல குறைப்பாடு இருந்துக் கொண்டுதானிருந்தது.  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவளை அவளுடைய கணவர் சிறப்பாகவே கவனித்துக் கொண்டார். இத்தனைக்கும் அவர் அப்போதைய பரபரப்பான அரசியல் களத்தில் அவசியம் இருந்தாக வேண்டிய சூழல். சைமன் ஆணையத்தின் தோல்விக்கு பிறகு அவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் லக்னோவில் கூடவிருக்கும் அனைத்துக் கட்சி மாநாட்டில் அவர் கலந்துக் கொள்ள வேண்டியிருந்தது. அதற்கான அறிக்கை தயாரிப்பு, கூடவே அவருக்கான வழக்குகள் என எல்லாவற்றையும் அவர் மனைவிக்காக தள்ளி வைத்திருந்தார். பாரிஸில் வைத்தியத்துக்கு குறைவில்லை என்றாலும் ருட்டிக்கு நோய் தீரவில்லை. பிரத்யேகமாக நோய் எதுவும் கண்டுப்பிடிக்கப்படவில்லை என்றாலும் ஏதோ ஒன்று அவளை வருத்திக் கொண்டிருந்தது.  சிலர் இதை நீலப்பேய் என்பார்கள். மனஅழுத்தத்தை கூட இதே பெயரிட்டு அழைப்பதாக அங்கிருந்தவர்கள் பேசிக் கொண்டார்கள். 

தின்பாய் பெத்திக் பணிப்பெண்ணிடம் உணவு தட்டை எடுத்து வருமாறு கை சாடையில் பேசியதை கவனித்த ருட்டி, “நீ ஏன் வந்தே?” என்று தாயாரை எரிந்து விழுந்தாள்.   

“உன்னை பார்க்கறதுக்காகதான்...” தாயாரின் மனம் தழுதழுத்தாலும் வெளியே காட்டிக் கொள்ளவில்லை. அவர் பெற்ற நான்கு குழந்தைகளில் மூத்தவளான இவள் மட்டுமே பெண்பிள்ளை. 

சிறிது நேரம் நிலவிய மௌனத்துக்கு பிறகு ருட்டி “போல்ஷியை அழைச்சிட்டு வர்லயா அம்மா?” என்றாள். வார்த்தைகள் குளறின. மார்ஃபைன் எடுத்துக் கொண்டிருப்பாள் போல. 

“உன் கட்டிலுக்கு கீழேதான் உட்கார்ந்திருக்கு பாரு” 

“போல்ஷி...” என்றாள் குழைவாக. 

போல்ஷி என்ற அவளது செல்ல நாய் கையால் வளைத்து அணைத்துக் கொள்ளவியலாத அகலமும் நீளமுமாக இருந்தது. கர்ர்.. என்று செல்லமாக முனகி கொண்டே தனது முன் கால்கள் இரண்டையும் கட்டில் மீது துாக்கி வைத்துக் கொண்டது. ருட்டி படுக்கையில் சாய்ந்து உட்கார்ந்தபடி தன் செல்ல நாயின் காதை நீவி விட்டாள். பணிப்பெண் தனக்கு எடுத்து வந்த பழச்சாறை ருட்டி அதனிடம் நீட்ட போல்ஷி அதனுள் நாக்கை நுழைத்து குடித்தபோது உதட்டருகே தெறித்த சாற்றை நாக்கால் நக்கிக் கொண்டாள். 

“நான் துாங்க போறேன். நீ அப்பறமா வா...” 

ருட்டி உடலை சரித்து தாயாருக்கு எதிர்புறமாக திரும்பி படுத்துக் கொண்டாள். தின்பாய் தலையணையை மகளின் தலைக்கு வாகாக எடுத்து வைத்தார். அவள் அணிந்திருந்த ஃபிரில் வைத்த ஷிஃபான் கவுன் தொடை வரை ஏறி கிடந்தது. பொன்னாக மின்னும் தேகம் விடியற்காலை பனியால் மூடப்பட்ட டிசம்பர் மாத பம்பாய் போன்று மங்கலாகி இருந்தது. முகத்தில் தெரிந்த அயர்ச்சியும் கண்களில் தட்டுப்படும் ஏதோவொன்றும் அவளது இருபத்தொன்பது வயது யெவனத்தை குறைத்து விட்டது என்று ருட்டியிடமே சரோஜினி அடிக்கடி சொல்லுவார். சரோஜினிக்கு கிட்டத்தட்ட தின்பாயின் வயது. அவர் தனது வாழ்க்கையை வேலைகளால் நிரப்பி கொள்பவர். தீவிர அரசியலும் கனிந்த கவிதையுமாக எதிரெதிர் முகங்களால் தன்னை இணைத்துக் கொள்பவர். நேரங்களை மிச்சப்படுத்தி பிள்ளைகளுக்கு கடிதம் எழுதுவது அவ்வப்போது குடும்பத்தை பொறுப்பாக கவனித்துக் கொள்ளும் மருத்துவ கணவர் நாயுடுவை தங்களது ஹைதராபாத் இல்லத்துக்கு சென்று சந்தித்து விட்டு திரும்புவது என்று தனதுலகை புத்துணர்வோடு கட்டமைத்துக் கொள்பவர். சரோஜினியின் மகள்கள் பத்மஜாவும் லைலாமணியும் ருட்டிக்கு சமவயது தோழிகளாக இருந்தபோதிலும் அதை விட அவர்களின் தாயார் சரோஜினியின் அண்மையும் தோழமையுமே ருட்டிக்கு அதிகம் பிடித்திருந்தது. பத்மஜா, லைலாமணியை போல நானும் அவரின் மகளாக இருந்திருக்கலாம். ஆனால் நான் ஒன்றும் குறைந்தவள் இல்லையே. பெத்திக் குடும்பத்தாரின் பெருமை மிக்க மகள் அல்லவா? ஆனால் இப்போதும் அந்த பெருமையை கொண்டாட எனக்கு தகுதி இருக்கிறதா? நான் திருமணமாகி வெளியே வந்திருக்கலாம். ஆனால் என் உடலில் ஓடும் இரத்தம் அவர்களுடையதுதானே? ஆனால் அவள் இப்போது பார்ஸி இல்லை. ஜொராஷ்டிரிய மதம் அவளை விலக்கம் செய்து விட்டது. 

மாறி மாறி எழுந்த எண்ணங்களின் முடிவில் கண்களை மூடிக் கொண்டாள். உரையாடல்கள் ஏதுமின்றி அமைதியாக கழிந்த சிறிது நேரத்துக்கு பிறகு, திருமதி பெத்திக் அங்கிருந்து கிளம்ப எத்தனித்தார். இனி இங்கிருப்பது வீண் என்று அவருக்கு தெரியும்.  அவர்களது பெத்தி்க் மாளிகை பம்பாயின் மலபார் ஹில் பகுதியில் இருந்தது. அவளுடைய கணவரின் சவுத்கோர்ட் பங்களாவும் அதே பகுதியில்தானிருந்தது. பெத்திக் மாளிகைக்குள்  நுழைந்ததும் தாயாருக்கு தன்னால் எழுந்த சங்கடங்கள் தணிந்து விடும் என்று ருட்டிக்கு தெரியும். தின்பாய் பெத்திக் வீடு முழுக்க நிறைந்திருக்கும் பணியாட்கள் மூலம் குடும்பத்தை பராமரிப்பார்.  தாதிகளிடம் வளரும் குழந்தைகளை  அவ்வப்போது கண்காணிப்பார். நண்பர்களுக்கும் தன்னைப் போன்ற செல்வந்தர்களுக்கும் விழாக்கள் நடத்துவதும் விருந்து கேளிக்கைகளில் பங்குக் கொள்வதும் விடுமுறைகளை வெளிநாடுகளில் அனுபவிப்பதுமாக திருமதி தின்ஷா பெத்திக் என்ற அடையாளத்துக்குள் அழகாக பொருந்தி போகும் நாகரிக வாழ்க்கை வாழ்பவர். ஆனால் ருட்டியின் ஆதர்ஸ எழுத்தாளர்களான  ஹெச்.ஜி.வெல்ஸ், ஜார்ஜ் மூர் ஆகியோரின் புதினங்களில் வரும் கதைநாயகிகள் இரு வேறு பாதைகளுக்கு நடுவே தங்கள் போராட்டங்களை எதிர் கொள்வார்கள். ஒரு பக்கம் பழமையான கருத்தை ஒட்டி திருமணம் செய்து கொண்டு வாழும் கட்டுப்பெட்டி வாழ்க்கை.. இன்னொரு பக்கம் தங்கள் வாழ்க்கையைக் குடும்பங்களுக்கு வெளியே தேடிக் கொண்டிருக்கும் போராட்ட வாழ்க்கை.. வளரிளம் பருவத்திலேயே அவர்களின் புதினங்களை அவள் தீவிரமாக வாசிக்கத் தொடங்கியிருந்தாள். 

தின்பாய் அங்கிருந்து  வெளியேறுவதை அவளால் உணர முடிந்தது. தன் செல்லப்பூனைகளின் காலடியோசையை கூட அவளால் பிரித்தறிய முடியும். நாய்களும் குதிரைகளும் கூட அவளுக்கு பிடித்தமானவைதான். விருந்துகளுக்கோ வெளியிடங்களுக்கோ செல்லும்போது அவளுடைய சேலையை ஒத்தாற்போல போல்ஷியும் கழுத்தில் ரிப்பன் அணிந்திருக்கும். வெளியூர் பயணங்களின்போது கூட அவள் தன் செல்லங்களை பிரிவதில்லை. பணிப்பெண்கள், உடைகள், ஐஸ்பெட்டிகள் அடங்கிய அவளுடைய பயணக்குழுவில் நாய்குட்டிகளும் பூனைக்குட்டிகளும் நேரம் பொருந்தி வந்தால் வளர்ப்புக் குதிரைகளும் அடங்கியிருக்கும். 

ருட்டி, பணிப்பெண்களிடம், தான் அழைப்பு மணியடிக்கும் வரை யாரும் உள்ளே வர வேண்டாம்.. யாரையும் அனுமதிக்க வேண்டாம் என்று கட்டளையிட்டு விட்டு கையை வளைத்து நெற்றியின் மீது வைத்து கண்களை மூடிக் கொண்டாள். 

தன் மீது ஏறி விளையாடிய ஆர்லெட்டை மார்பில் போட்டு கொண்டாள்.  கணவரிடமிருந்தோ மகளிடமிருந்தோ பெற முடியாத ஏதோவொன்றை இந்த செல்லங்கள் கொடுக்கின்றனவா? அவளால் எதையும் பிரித்தறிய முடியவில்லை. அவளுடைய மகள்... ம்ம்ம்.... அவளுக்கு என்ன பெயர்? எதுவுமே அவளுக்கு நினைவில்லை. அவளுக்கு வேண்டியவற்றை செய்ய நிறைய தாதிகள் இருக்கிறார்கள். குழந்தை வளர்கிறாள். வேறென்ன வேண்டும். ஜே... அவள் பிரிய கணவர். அவரை அப்படிதான் அழைப்பாள். அவளுக்கு மிகவும் பிடித்தமானவர். அதனால்தான் எல்லாவற்றையும் துறந்து அவரிடம் வந்து சேர்ந்திருந்தாள்.  அவளுக்கு பனிரெண்டு வயதிலிருந்தே அவரை தெரியும். அப்போது அவருக்கு முப்பத்தாறு வயதிருக்கும். ஆறடி உயரமிருந்த அவரை அண்ணாந்து பார்ப்பது அவளுக்கு பிடித்திருந்தது. அதனாலெல்லாம் காதல் வந்து விடுமா? எப்போது வந்தது காதல்? விடுமுறை காலங்களில் குடும்ப உறுப்பினர்களோடும் முக்கியமான நண்பர்களோடும் பணிப்பெண்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், சமையலர்கள் புடைசூழ வெளிநாடுகளுக்கு பயணம் செய்வது பெத்திக் குடும்பத்து வழக்கம். அப்படியான பயணமொன்றின் போதா? உயர்தரமான தேர்ந்தெடுக்கப்பட்ட நல்லுடையில் ஆங்கிலேய கனவானை போன்றிருக்கும் அவரது தோற்ற பொலிவினாலா? விருந்துகள் விழாக்கள் அரசியல் நிகழ்வுகள் எதுவொன்றிலும் பெண்கள் பக்கம் ஈடுபாடு காட்டாமல் மற்ற ஆண்களுடன் அரசியல் பேசும் அவர் சுபாவத்தினாலா? பளீரென்ற அழகான முகத்தில் தெரியும் மிடுக்கான பாவனைகளாலா? அவரது தீர்க்கமான அறிவுசார் உரையாடல்களா? அனைவரின் கவனத்தையும் ஈர்த்து விடும் சிந்தனை தெளிவாலா? அல்லது சீராக வாரப்பட்ட தலைமுடியில் எட்டி பார்க்கும் சில வெளுத்த முடிகளாலா? எல்லாவற்றையும் விட அவர் தன் தந்தை தின்ஷா பெத்திக்கிடம் பெண் கேட்ட தோரணை அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. 

தன்னை விட மூன்று வயதே இளையவர். மதத்தால் வேறுபட்டவர். சிறிது காலம் மனைவியுடன் வாழ்ந்திருந்தாலும் ஏற்கனவே திருமணமானவர். எந்த துணிச்சலில் என் மகளை திருமணம் செய்து தருமாறு அவரால் கேட்க முடிந்தது? ஆனால் அவரை விட தன் மகள்தான் மிகுந்த துணிச்சல்காரி என்பதை  தின்ஷா பெத்திக் அப்போது உணரவில்லை. 

ருட்டியிடம் பின்னாளில் ஜே சொல்லியிருக்கிறார், “உன் அப்பா நான் சொன்னதை கேட்டதும் அப்படியே உறைந்து விட்டார்” 

ஒருவேளை வில்லியம் மாரிஸ் அவளின் பிரிய ஜே...வுக்காகவே கவிதை எழுதியிருப்பாரோ? 

உன் ஆன்மாவின் சட்டதிட்டங்களில் நீ தொடர்ந்து வாழ பழகு

யாரேனும் உன் வழியை தடுத்தாலும் கண்டு கொள்ளாதே

உன்னை யாரும் வெறுத்தாலும் நீ கவலைப்படாதே

நீ உன் பாட்டைப் பாடு

உன் கடமையை செய்

உன் நம்பிக்கைகளின் மீது மட்டும் நம்பிக்கை வை

உன் வழிபாடு தொடர்ந்து ஒலிக்கட்டும்... 

ருட்டி உறக்கமும் விழிப்புமாக இருந்தாள். அவளுக்கு நீண்ட நேரம் அமைதியாகவும் நிம்மதியாகவும் உறங்க ஆசை. ஆனால் இப்போதுதான் துாக்கமாத்திரைகளின் வீரியம் கூட குறைந்து விடுகிறதே. அவள் தேவைக்கு அதிகமாகவே துாக்க மாத்திரைகளை வாங்கி வைத்துக் கொண்டாள். 

ருட்டியின் மீதான தன் விருப்பத்தை வெளிப்படுத்திய பிறகு ஜே. வும் தின்ஷாவும் ஒரே மேடையில் அமர வேண்டிய கட்டாயம். அது கோபால கிருஷ்ண கோகலேயின் அஞ்சலி கூட்டம். தவிர்க்க முடியாது. ஆனால் இருவரும் ஒருவரையொருவர் தவிர்த்து விட்டனர்.

 


விஷயம் வெளியே வெகுவாக புழங்க தொடங்கியது.  அவருக்கு அரசியல் அந்தஸ்து வந்திருக்கலாம். புகழ் பெற்ற வழக்கறிஞராகி நிறைய சம்பாதித்திருக்கலாம். ஆனால் பல பஞ்சாலைகளுக்கு அதிபரான பரம்பரையிலே பணக்கார பார்ஸியான தின்ஷா பெத்திக்கின் அழகு மகளை அந்த வயதான இஸ்லாமியர் திருமணம் செய்து கொள்கிறேன் என்று கேட்பதற்கு எத்தனை துணிச்சல் இருக்க வேண்டும்?” ருட்டியின் குடும்பமும் பார்ஸி சமூகமும் கொந்தளித்தது. பார்ஸி சமூகத்து பணக்கார இளம்பெண்கள் அவள் அழகில் பொறாமை கொண்டாலும் அவளுடன் நட்பிலிருப்பதை பெருமையாக நினைத்துக் கொள்வார்கள். விழாக்களில் அவளே கதாநாயகி. எத்தனை செல்லமானவள்… அவளது பிறந்த நாளான பிப்ரவரி 20 ஆம் தேதி அவர்களின் மாளிகையே ஒருமுறை எழும்பி அடங்கும்.  பொதுவெளி ஆச்சர்யப்பட்டது. எப்படி… எப்படி… எத்தனை அழகு அந்த பெண்… எது அவளை இந்த முடிவுக்கு துணிச்சல்படுத்தியது? அதிக கட்டுப்பாடுகள் இல்லாத வளர்ப்பா… செல்வத்தின் செழிப்பில் ஏற்பட்ட அலாதி மனப்போக்கா? அவளுடைய ஆழ்ந்த புத்தகவாசிப்பா..? 

அடங்க மறுக்கும் பதினாறு வயது மகள். தனது பெருஞ்சமுதாய அந்தஸ்து இரண்டிற்கும் இடையில் தடுமாறி நின்ற தின்ஷாபெத்திக்கால் ஜே.. வுக்கு எதிராக தடையுத்தரவு வழக்குதான் தொடுக்க முடிந்தது. 

ஆனால் அவர்கள் சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொண்டார்கள். அவளுடைய ஜே… திடமானவர். தீர்க்கமானவர்… உணர்ச்சிகளில் ததும்பாதவர். அவர்கள் தெளிவாக திட்டமிட்டு கொண்டனர். திருமணத்துக்கு முந்தைய நாள் மாலையில் பெத்திக் மாளிகையிலிருந்து சவாதானமாக சவுத்கோர்ட்டுக்கு நடந்து வந்து இஸ்லாமுக்கு மாறியவள், அன்றிரவு வழக்கம்போல பார்ஸி மாளிகைக்கு திரும்பி சென்றாள். அடுத்த நாள் மாலையில் முந்தைய தினத்தை போலவே சவுத்கோர்ட்க்கு வந்தவள், இம்முறை திரும்பி செல்லவில்லை. டஜனுக்கும் மேற்பட்ட துணிமில்கள், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பண்ணை வீடுகள், பிரிட்டிஷ் அரசாங்கத்திடமிருந்து கிடைக்கும் நேரடி மரியாதை போன்ற பிறந்த வீட்டின் செல்வாக்கெல்லாம் அவளுக்கு ஜே.. யை விட சிறியதாகி போனது. கிரேக்கநாட்டு துாண்கள், பெர்ஷிய நாட்டு கம்பள விரிப்புகள், நீரூற்றுகள், இறக்குமதி செய்யப்பட்ட விலைமதிப்பற்ற பளிங்கு கற்களால் அமைக்கப்பட்ட வளைந்து மேலேறும் படிக்கட்டுகள், கடலை நோக்கி திறக்கும் படுக்கையறைகள், நிழல் மரங்கள், கடலின் கரையை தொட்டுக் கொண்டிருக்கும் அழகிய தோட்டம், பிரான்ஸ் நாட்டிலிருந்து தருவிக்கப்பட்ட பூச்செடிகள், பூங்காக்கள் என்று காணுமிடமெல்லாம் பணத்தின் பகட்டு நிரம்பி வழிந்த மலபார்ஹில்லில் கடலை நோக்கி கம்பீரமாக எழும்பியிருக்கும் அவர்களின் பெத்திக் மாளிகையிலிருந்து ருட்டி தனது செல்ல நாய்க்குட்டியோடும் கையில் குடையோடும் புக போகும் வீட்டுக்கு கிளம்பி விட்டாள். அப்போது அவளுக்கு பதினெட்டு வயது முடிந்து இரண்டு மாதங்களாகியிருந்தன. பிறகு பெத்திக் மாளிகையின் கதவுகளை அவள் தட்டவேயில்லை. 

அவள் கணவருக்காக இஸ்லாம் மதத்துக்கு மாறியதை போல அவரும் மனைவியின் விரும்பத்துக்கேற்ப தன் தோற்றத்தை மாற்றிக் கொண்டார். இந்தியாவின் ஈடு இணையற்ற பாரிஸ்டர், தேசிய உணர்வுள்ள மக்கள் தலைவர்களில் ஒருவர், பம்பாய் உயர் நீதி மன்றத்தில் பார் அட் லா வழக்கறிஞர், வைஸ்ராயின் சட்டசபை உறுப்பினர், பம்பாய் மாகாணத்து இஸ்லாமியர்களின் பெருந்தலைவர். பெரிய அரசியல் நிபுணராக வளர்ந்துக் கொண்டிருப்பவர், தன் இளம் மனைவிக்காக தலைமுடியை நீளமாக வளர்த்து பின்புறம் வழித்து சீவிக் கொண்டார். நீண்ட வளைந்த தன் மீசையை பார்ஸி இளைஞனை போல மழித்துக் கொண்டார். இந்த மாற்றங்கள் அவர் தோற்றத்திலிருந்த இஸ்லாமிய அடையாளங்களை மாற்றி விட்டதை அவர் கண்டுக் கொள்ளவில்லை. 

அவளுக்கு நெற்றி பொட்டில் தெறிப்பது போல வலித்தது. காஞ்சி துவாரகதாஸ் எப்போது வருவார் என்றிருந்தது. அவர் ஜே.வின் நண்பர் என்றாலும் அவளுக்கும் நெருங்கிய நண்பர்தான். அவளை புரிந்துக் கொண்டவர். அவள் இந்த அமைதியின்மையிலிருந்து வெளியே வந்து விட வேண்டும் என்று மனதார நினைப்பவர். சென்ற முறை அவளை பார்க்க வந்தபோது ப்ளாவட்ஸ்கியின் ‘ரகசியக் கொள்கை’ நுாலை கொண்டு வந்திருந்தார். 

“எப்போது ஓய்வு கிடைக்கிறதோ அப்போதெல்லாம் நீங்கள் இங்கு வந்து விடுங்கள். என்னை காப்பாற்றவோ பாதுகாக்கவோ முடியாதளவுக்கு நான் விலகி கொண்டிருக்கிறேன். தயவு செய்து நான் உங்களோடு எப்போதும் தொடர்பில் இருக்க ஏதாவது ஒன்றை செய்து விடுங்களேன்…” அவள்  காஞ்சியிடம் கிட்டத்தட்ட கெஞ்சினாள். 

ஆனால் காஞ்சி துவாரகதாஸுக்கு அன்னிபெசன்ட்டின் பம்பாய் வருகையை முன்னிட்டு அவருடன் இருக்க வேண்டியிருந்தது. கௌரவ மாஜிஸ்ட்ரேட்டாக அது அவர் கடமை. அவர் சமூக சேவகரும் கூட. அவளுக்கு சமூகசேவை செய்யும் ஆர்வம் கிளம்பிய நேரத்தில் காஞ்சி தான் உடனிருந்தார். அவர்கள் நாய்கள் காப்பகம் சென்றனர். பெத்திக் குடும்பம் கூட அப்படியான ‘பிஞ்ச்ரபோல் ஒன்றை நடத்தி வந்தது.  காப்பகங்களில் நாய்கள் கருணையோ சுகாதாரமோ இன்றி மிக கொடுமையான சூழலில் இருந்தன. அவை பட்டினியில் கிடந்தன. அழுக்கான நீர் மட்டுமே உணவு. ஏதோ கழிவுகள் அங்கு மலை போல குவிந்துக் கிடந்தது. எக்ஸிமா வியாதியால் தோல்கள் புண்ணாகி சீழ் வடிந்து அழுக்கான இடத்தில் கிடந்த நாய்களை கழிவிலிருந்து கிளம்பிய புழுக்கள் துளைத்துக் கொண்டிருந்தன. அவை அவளை போல மெல்ல மெல்ல கொடூரமாக செத்துக் கொண்டிருந்தன.  

துாக்க மாத்திரையை எடுத்து தர சொல்வதற்காக பணிப்பெண்ணை அழைத்தவள் பிறகு வேண்டாமென்று முடிவெடுத்துக் கொண்டாள். வெரோனல்… அந்த மாத்திரைகளால் அவளின் மனதையும் ஆத்மாவையும் திருப்திபடுத்த முடியுமா? மார்ஃபைன்.. அதுதான் சரி. இருக்கும்போதே இல்லாதிருப்பது… நிற்கும்போதே பறப்பது… தற்காலிகம் என்றாலும் நிவாரணம்… போதும்.. இப்போதைக்கு இது போதும். கண்களை மூடி அனுபவித்தாள். 

மிதந்து வந்த அழகு மலரொன்று

தன் வண்ணங்களின் மாயை பற்றி

மெல்ல தன் ரகசியத்தை என்னிடம் கொட்டியது

தவழ்ந்து வந்த தென்றல் அன்போடு அணைத்தது

மெல்ல என் காதுகளில் சென்று வந்த

துாரம் பற்றி என்னிடம் முணுமுணுத்தது.

காதல் தன் அனைத்து நறுமணத்தோடும் என்னிடம் வந்தது

அதன் மணத்தை மூச்சு முட்ட உள்ளிழுத்தேன்

அது போதும்.. போதும் என்றாயிற்று

அடுத்து கருப்புடையில் சோகம் வந்து தீண்டியது

ஆனால் என்னை விட்டு விலகவில்லை

அதன் கசப்பு அத்தனையும் விழுங்கினேன்

விழித்தாலும் அதன் கசப்பு.. துாங்கினாலும் அதன் கசப்பு

சிரித்தாலும் அதன் கசப்பு… அழுதாலும் அதன் கசப்பு

துன்பங்களுக்கு ஏது திருப்தி 

அவள் வார்த்தைகளை கோர்த்து கோர்த்து வடித்தாள். அது முடியாமல் பெருகிக் கொண்டே போனது.  

என் கல்லறையை மூடி விடுங்கள்

அதிலிருந்து சொற்கள் தெறித்து விட கூடும்

என் கல்லறையை மூடி விடுங்கள் 

என் சொற்கள் என் மீது இரக்கம் கொண்டவரின் கைகளிலும் என்னைப் புரிந்து கொள்ள கூடியவரின் கண்களிலும் போய் சேர வேண்டும். பத்மஜா… வேண்டாம். அவளுக்கு என்புருக்கி நோய் வந்து விட்டது. லைலாமணி தீவிரமாக படித்துக் கொண்டிருக்கிறாள். எனக்கு? எனக்கென்று யார் இருக்கிறார்கள்? ஆவிகளுடன் தொடர்புக் கொண்டு கேட்டால் என்ன? அது என்னை காப்பாற்றுமா? நான் நம்பும் ஆன்மிக அனுபவத்தை நேரடியாக பெற முடியுமா? என் உள்மன போராட்டங்கள் முடிவுக்கு வருமா… அய்யோ… எனக்கு என்ன ஆகிறது? உலகமே ஏன் பெரிய ஐஸ்கட்டியை போல உறைந்து கிடக்கிறது? விருந்து விழா கேளிக்கை நண்பர்கள் பெற்றோர்கள் தம்பிகள்… திருமணம்… ஜே… எல்லாமே ஏமாற்று.. ஏமாற்று… ஆனால் எல்லோருமா ஏமாந்து விடுகிறார்கள்? ஜே கூட இரண்டாக பிளந்த முஸ்லிம் லீக் கட்சியை ஒன்றாக்குவதற்காகவே பிறந்தவர் போல செயல்படுகிறார். அவர் எந்த வேதனைக்கும் உள்ளாவதில்லையா? அல்லது அப்படி நடிக்கிறாரா? 

உடல் அசைக்க முடியாததொரு கல்லை போன்று கிடந்தது. அன்று ஜெனிவாவில் நடைபெற்ற அகில உலக தொழிலாளர் சங்க மாநாட்டில் கலந்து கொண்டு திரும்பிய ஜே..யின் நண்பர் சமன்லால் பாரிஸில் அவளை காண மருத்துவமனைக்கு வந்திருந்தபோது கூட அவள் தன்னுடலை இப்படிதான் உணர்ந்தாள். ஆனால் அவள் கைகள் மட்டும் ஆஸ்கார் ஒயில்ட்டின் கவிதை நுாலை அழுத்தமாக பிடித்திருந்தது. 

“எனக்காக அதை கொஞ்சம் வாசியுங்களேன் சமன்” 

காதலன் ஒருவன் தன் காதலியை நினைத்துக் கொண்டு பரத்தையின் வீட்டின் முன்பாக சாலையில் நின்றபடி பாடுகிறான். 

அமைதியைப் போர்த்திக் கொண்டு நீளமாய்

நீண்டு கிடக்கும் சாலை

கிழக்கு வெளுக்கிறது

வெள்ளிக் காலணி அணிந்து

அச்சத்தை போர்த்திக் கொண்ட சிறு பெண் போல

வெளிச்சம் நழுவி மெல்ல நுழைகிறது

அவள் கண்கள் மெல்ல நழுவி உறக்கத்துக்கு சென்று விட்டது.

 


சிரிப்பா… அழுகையா ஏதோ ஒன்று வந்தது அவளுக்கு. வெளிச்சமாக… இருளாக… நான் மகிழ்ச்சியில் மிதக்கிறேன். சோகத்தில் ஆழ்ந்து கிடக்கிறேன். ஆனால் இந்த உணர்வுகள் எல்லாம் இதயத்தில் இல்லை. இவை என் ஆன்மாவின் உணர்வுகள். ஆன்மா என்பது எது..? என் மனமா? எண்ணங்களா? பொங்கி வரும் உணர்வுகள் என் உடம்பின் ஒவ்வொரு அணுவையும் எரித்து நொறுக்கிறது… அய்யோ… எனக்கு என்ன வேண்டும்? நிரம்பி நிற்கிறது… எல்லாமே நிரம்பி நிற்கிறது… ஆனால் உள்ளே வெறுமை. வாழ்க்கை வெறுமையாக நிற்கிறது. ஆனால் உள்ளே ததும்பி வழிகிறது. எனக்கு என்ன வேண்டும்? அன்று யாரோ சொன்னார்கள்… கனவுகளின் வழியாக நமது எண்ணங்களை பிறர் மேல் செலுத்த முடியும்…  அதை முயன்று பார் என்று… யார் சொன்னார்கள்… யார் சொல்லியிருப்பார்கள்… அவளுக்கு எதுவும் நினைவில்லை. எதையும் உணர முடியவில்லை. 

ஆனால் பதினாறு வயது இளம்பருவத்தில் தனக்குள் ததும்புவது காதல்தான் என்பதை அவளால் உணர முடிந்தது. எனது பொங்கி வரும் உணர்வுகள் என்னைச் சுட்டெரிக்கின்றன. அவை என் தசைநார்களை கிழித்தெறிகின்றன. ஆனால் இவை தரும் இன்பவேதனையை என் மனம் நாடுகிறது. அந்த துன்பமே என்னைப் புடமிடுகிறது. முழுமையாக்குகிறது. என் மனதை கனியச்செய்து விடுகிறது. நான் காதல் வசப்பட்டு விட்டேன். உணர்ந்ததை எழுதி பார்த்தாள். எழுதியதை அணைத்துக் கொண்டாள். அணைப்பை உணர்ந்து பார்த்தாள். எல்லாமே தித்திப்பு... தித்திப்பு... 

அவளுடைய காதல் கம்பீரமானது. அவளுடைய ஜே… கௌரவமான இறுக்கத்துடனும் யாரும் எளிதில் தாண்டிச் செல்ல முடியாத தன்மையுடனும் இருப்பவர். அவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் எந்த கிசுகிசுப்பும் இல்லை. தன் மேன்மைக்காக மிகவும் கஷ்டப்பட்டு உழைக்கும் கடினமான பிரம்மச்சாரி. அப்படிப்பட்ட மனிதரைதான் அவள் தன் காதலால் புடம்போட்டு விட்டாள். அதை அவர் சொல்லவில்லை. அவள் உணர்ந்திருந்தாள். திருமணத்துக்கு பிறகு அதை நிச்சயப்படுத்தியும் கொண்டாள். ஜே..வின் அறையிலிருந்த ரிச்சர்ட் ஜெஃப்ரிஸின் சுயசரிதை நுாலில் ‘என் இதயம் துாசி படிந்து கிடக்கிறது’ என்ற வரிகளை அவர் அழுத்தமாக அடிக்கோடிட்டிருந்தார். ‘வறண்டு கிடக்கும் என் உள்ளத்தின் மீது உணர்வுகள் பெருமழையாக பெய்ய வேண்டும். என் மனமும் இதயமும் காய்ந்து பிளந்து கிடக்கின்றன. மனதை சுற்றி கரும்போர்வை மூடி கிடக்கிறது. எனது வாழ்க்கை சின்ன சின்னப் பழக்கவழக்கங்களால் அடைந்துக் கிடக்கிறது’ என்று அதிலிருந்த வரிகளை நாட்குறிப்பேட்டில் எடுத்தெழுதியிருந்தார்.. அவளுக்கு தெரியும்... தான் பெருமழையென்று. மழை பொழிந்து பொழிந்து காடெல்லாம் மூழ்கிப் போனது. அன்று அந்த வரிகளை கையால் தடவி பார்த்துக் கொண்டபோது உடல் எங்கோ பறப்பது போலிருந்தது. 

அவளுடைய எண்ணங்கள் நிற்காமல் பறந்தலைந்து கொண்டிருந்தது. எனக்கு பற்றிக் கொள்வதற்கு எதாவது வேண்டும். என் ஆன்மா முழுவதும் சிக்கலில் விழுந்து தவிக்கிறது. அதிலிருந்து மீள்வதற்கு நான் எவ்வளவு கடுமையாக முயற்சிக்கிறேன் என்பது எனக்கும் கடவுளுக்கும் மட்டுமே தெரிந்த உண்மை. நான் தேடும் தீர்வுகள் அனைத்தும் பலனின்றி போகின்றன. எனக்கு அழகிய மகுடம் ஒன்று கிடைக்கும் என்று நினைத்து பலவற்றையும் புரட்டுகிறேன். ஆனால் முள்ளாலான மகுடம் கூட எனக்கு கிடைக்கவில்லை. மனதில் நிம்மதியோ அமைதியோ இல்லவே இல்லை. யாராவது பெரும் மனோபலத்துடன் வந்து என்னைக் காத்து விட மாட்டார்களா என்று ஏங்குகிறேன். 

காந்திக்கு கடிதம் எழுதலாமா? ஆனால் ஜே..க்கு அவர் மீது அத்தனை பிரியமில்லை. அவர் காந்திக்கு முன்பே அரசியல்களத்தில் இருந்து வருகிறார். ஆனால் ரௌலட் மசோதாவுக்கு எதிராக காந்தி நடத்திய போராட்டங்களினாலும் ஒத்துழையாமை இயக்கம், கிலாஃபத் இயக்கம் போன்றவற்றாலும் காந்தி இப்போது புகழின் உச்சிக்கு சென்று விட்டார். தலைமைப் பொறுப்புக்கு ஜே..வே தகுதியானவர் என்ற நிலை கனிந்து வந்திருக்க வேண்டிய நேரத்தில் காந்தி வந்து விட்டார். அரசியல் களம் காந்தியின் கைக்கு சென்று விட்டது. அதனை பெரும்பலத்தோடு கட்டி இழுக்க பார்க்கிறார் ஜே. அதனால்தான் அவருக்கு கூடுதல் வேலை பளு. காந்தி ஜே… வுக்கும் அவளுக்கும் கடிதம் எழுதியிருக்கிறார். ஒருமுறை அவர் தன் கடிதத்தில் நுாற்பு பயிற்சி வகுப்புக்கு வருமாறு ருட்டியை அழைத்திருந்தார். ஜே.. மேடைகளில் இந்துஸ்தானியிலும் குஜராத்தியிலும் பேச வேண்டும். உன்னிடத்தில் நான் இருந்திருந்தால் அவரிடம் அந்த மொழிகளில்தான் பேசுவேன்” என்று எழுதியிருந்தார். இப்போது என்னிடத்தில் அவர் இருந்திருந்தால் என்ன செய்திருப்பார்? இதை அவரிடம் கேட்கலாமா?    

ஆனால் ஆசிரமத்தில் எதுவுமே சகிக்க முடியாதாம். மோதிலாலின் மகள் விஜயலட்சுமி அந்த ஆசிரமத்தை பற்றி சொல்லியிருக்கிறாள். காலையில் நாலரை மணிக்கு எழுந்தவுடன் இறை வழிபாடு, அதிலிருந்து தினசரி வேலைகள் தொடங்கி விடுமாம். கழிவறையை சுத்தம் செய்து விட்டு, இருக்குமிடத்தை கழுவிச் சுத்தப்படுத்தி விட்டு ஆற்றிற்கு சென்று துணிகளை துவைக்க வேண்டுமாம். பின் மாட்டுப் பண்ணையில் வேலை, தொடர்ந்து நுால் நுாற்றல்.. காபி தேநீர் எதுமிருக்காது. ஒரு நாளைக்கு இரண்டு வேளைதான் உணவு. இளங்காலையிலேயே தோட்டத்தில் விளைந்த அத்தனை காய்களும் மொத்தமாக ஒரே நீராவிக் கொப்பரையில் உப்பு, உறைப்பு, எண்ணெயில்லாம் வேகுமாம். அதை சப்பாத்தி அல்லது கைக்குத்தல் அரிசியோடு சேர்ந்து சாப்பிடுவார்களாம். 

அவள் உடலை திருப்பி நேராக்கிக் கொண்டாள். இப்போது அவளுக்கு செய்வதற்கு வேலைகள் எதுவுமே இல்லை. ஜே.. இத்தனை பரபரப்பில் கூட தான் பம்பாயிலிருக்கும் நாட்களில் அவ்வப்போது அவளுடைய வீட்டுக்கு மாலை நேரங்களில் வந்து செல்கிறார். இத்தனைக்கும் அவர் சமீபத்தில் அவளால் இரண்டு முறைகள் புண்பட்டிருக்கலாம். ருட்டி பாரிஸில் தான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது உடனிருந்து கவனித்துக் கொண்ட ஜே..யை பொருட்படுத்தாமல் தன் உடல்நிலை தேறி முடிப்பதற்குள் தாயாருடன் இந்தியா திரும்பி விட்டாள். இரண்டாவதாக அவள் அங்கிருந்து பம்பாய்க்கு கப்பல் ஏறும்போது அவருக்கு எழுதிய கடிதம். அவளுக்கு அத்தனை வரிகளுமே நினைவிலிருந்தன. இப்போது எழுதினாலும் அதையே எழுதுவாள். 

டார்லிங்… ஜே… நீங்கள் பறித்து முகர்ந்த அழகான மலராக என்னை நினைத்துக் கொள்ளுங்கள். நிச்சயமாக நீங்கள் காலில் போட்டு மிதித்த மலராக நினைக்க வேண்டாம். அன்புக்குரியவரே… நான் மிகவும் கஷ்டப்பட்டு விட்டேன். ஏனெனில் என் காதல் அத்தனை ஆழமானதாக இருந்தது. நான் பட்ட வேதனையின் அளவும் நான் உங்கள் மேல் வைத்திருந்த காதலும் ஒரே அளவில் இருந்தன. ஒருவேளை என் காதலின் அளவு இன்னும் சிறிது குறைந்தால் நிச்சயமாக நான் உங்களோடு இணைந்திருப்பேன். மிக அழகான மலர் ஒன்றைப் படைத்து விட்டு அதனை சகதியில் இழுத்துப் புரட்டியெடுக்க முடியுமா? நமது சோகங்கள் எல்லாம் காதலில் இருந்துதான் முளை விட்டு கிளம்பின. அவை அடங்குவதும் அங்கேயே நடக்கட்டும்.. டார்லிங்… விடை பெறுகிறேன்.   

அவளுக்கு பத்மஜாவுக்கு தான் அனுப்பி வைத்த பூனைக்குட்டியை பார்க்க வேண்டும் போலிருந்தது. அதே சமயத்தில் அவளுடைய மேலும் இரண்டு பூனைக்குட்டிகள் வேறு இறந்துவிட்டன. அவையெல்லாம் இங்கிருந்தால் எத்தனை நன்றாக இருந்திருக்கும்… ஒருமுறை அவள் லண்டனுக்கு சென்றிருந்த சமயத்தில் ஜே… நாய்களை அடிப்பதற்காக பிரம்பு வைத்திருந்தாராம். அதை கேள்விப்பட்டதும் அவளுக்கு உயிரே போய்விட்டது.  லோஷ்பரும் போல்ஷியும் ஜே.யை பொது எதிரியாக ஆக்கிக் கொள்வார்கள் என்று நினைத்தேன். ஆனால் பாவம்… அவை நன்றியுள்ளவை. அதனால்தான் லோஃபர் நொண்டுகிறது என்றாள் பரிதாபமாக, அவற்றை கவனித்துக் கொள்ளும் பணிப்பெண்ணிடம். காஞ்சியிடம் பூனைகளை நன்றாக பார்த்து கொள்ள சொல்ல வேண்டும். 

என்ன செய்வது என்று புரியவில்லையாயினும்  எதையாவது செய்ய வேண்டும் என்று மனம் நெருக்கியது. எதை செய்வது? காஞ்சியின் மூலம் இறைஞானசபையை பற்றி அறிந்துக் கொண்டாள். ஆர்வம் பெருகியது. தியோசோபிஸ்டுகளும் புனிதர்களும் உலகின் தீர்க்கதிரிசிகளோடு வைத்துக் கருதப்பட வேண்டியவர்கள். இதைப் புரிந்து கொள்ளாத குருட்டுத்தனத்தில் நாம் உலாவிக் கொண்டிருக்கிறோம். அவர்களுடைய ஆன்மிக பலம் நம்மால் புரிந்து கொள்ள முடியாதது. நமது அரைகுறையான புத்தி அவர்களைக் கண்டடையாது என்று தீவிரமாக நம்பினாள். ஆனால் திடீரென்று அந்த நம்பிக்கை தோன்றியது போலவே மறைந்தும் போனது. அரசியல்…? கணவனோடு சேர்ந்து அதிலும்தான் ஈடுபட்டிருந்தாள். அவளுக்கு மேடையேறி பேசுவதற்கு துளியும் அச்சமிருக்காது. திருமணமான புதிதில் ஜே.. நடத்திய வைஸ்ராய் வில்லிங்டனுக்கு நினைவகம் கட்டுவதற்கு எதிரான போராட்டத்தில் எந்தவித முன்தயாரிப்பும் இல்லாமல் திடீரென்று மேடையேறி முழங்கினாள். பம்பாய் பொதுக்கூட்டத்திலும் தயாரிப்பு ஏதுமில்லாமல் தைரியமாக பேசியிருக்கிறாள்.  ஜே..யின் நண்பரான ஹானிமன் நாட்டை விட்டு துரத்தப்பட்ட சமயத்தில் அவரை ஆதரித்து எத்தனை அழகாக பேசினாள்… ஆனால் எல்லாம் முடிந்து போனது. ஆவியோடு பேச ஆசை எழுந்து அதுவும் கூட மறைந்து விட்டது. என் மனம் எதற்காக புரட்சி செய்கிறது? ஏன் எதையும் ஒப்பு கொள்ள மறுக்கிறது? அவளால் இயல்பான நோக்கமற்ற வாழ்க்கைக்குள் புகுந்துக் கொள்ள முடியாது. நிகழ்ந்ததும் நிகழ்பவையுமாக குழப்படியான எண்ணங்கள் அவளை மூழ்கடித்தது.  எல்லாமே என்னிடமிருந்து மறைந்து போகிறது… ஆனால் எதை வெறுத்து ஒதுக்குகிறேனோ அந்த தனிமை மட்டும் ஏன் இன்னும் மறையவேயில்லை…  

அவளுக்கு குளிர்வது போலிருந்தது. ரஜாயை உடலில் இண்டு இடுக்கு விடாமல் இழுத்து விட்டுக் கொண்டாள். யாரோ அவளை பார்த்து எக்காளமிட்டு சிரிக்கிறார்கள். அதை பற்றி் அவளுக்கு கவலையில்லை. ஆனால் முன்பு அவள் முன்னே பலமற்று நிற்பவைகளெல்லாம் இப்போது பலம் பெற்று விட்டன. ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது? எது என் பிடியிலிருந்து நழுவுகிறது? நான் பெற வேண்டிய அடையாளங்களும் என் வெளிபாடுகளும் இவை அல்ல.  அவை ஏன் இன்னும் வசமாகவில்லை? அவற்றுக்காக நான் காத்திருக்க வேண்டுமா?   அது என்னால் முடியாது. நான் வசதிகளோடும் சலுகைகளோடும் வாழ்ந்து பழகி விட்டேன். நான் விரும்பவதை அடைவதற்கு ஒரு காலக்கெடுவை வைத்துக் கொள்ள முடியாது. மேலும் நான் மிகவும் பலவீனமாக இருக்கிறேன். 

அவளுக்கு திடீரென்று மும்தாஜின் ஞாபகம் வந்தது. அவள் பதினான்கு வயதில் இந்துார் இளவரசரின் அந்தபுரத்துக்கு கொண்டு வரப்பட்டவள். அங்கு பத்தாண்டுகள் அனுபவித்த சிறைவாசம் போன்ற கொடுமையிலிருந்து தப்பி எப்படியோ பம்பாய்க்கு வந்து விட்டாள். அங்கு அப்துல்காதர் பாவ்லா என்ற பணக்காரரோடு வாழ்க்கை நடத்த தொடங்கிய அவளை இளவரசரின் ஆட்கள் வெறியோடு தேடுகிறார்கள். அவள் பாவ்லாவோடு மலபார் தொங்குதோட்டம் பகுதியில் காரில் பயணித்துக் கொண்டிருக்கும்போது இளவரசரின் அடியாட்கள் பாவ்லாவை கொன்று விட்டு அவளை இழுத்து செல்கிறார்கள். அவள் உதவிக்காக கத்தி கூச்சலிடும்போது தற்செயலாக அங்கு வந்த ராணுவ அதிகாரிகளால் அவள் காப்பாற்றப்படுகிறாள். வழக்கு நீதிமன்றம் வருகிறது. ஜே… குற்றவாளி தரப்பில் வாதாடி மரணதண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து விட்டார். ஆனால் பிறகென்ன ஆயிற்று? அந்த மும்தாஜ் எங்கிருக்கிறாள்? தான் தேடிய வாழ்க்கையில் தானே விழுந்து பலியாகி விட்டாளா? தேடல் அத்தனை பாவச்செயலா? 

டில்லியில் இந்து முஸ்லிம் இணைப்பு மாநாடு நடந்த சமயத்தில் ஜே..வுடன் அவளும் டில்லிக்கு சென்றிருந்தாள். அங்கு நீண்டநாள் தங்கும் நோக்கில் பணிப்பெண்களோடு ஒப்பனைப் பொருட்கள், புடவைகள், பூனைகள் நாய்கள் என பெரும்படையையும் அழைத்துக் கொண்டாள். டில்லி அவளுக்கு பிடித்தமான தட்பவெப்பத்தில் இருந்தது.  தோட்டங்களில் குண்டு குண்டான காய்களுடன் பீன்ஸ் செடிகள் செழித்திருந்தன. மலர்கள் அழகு வண்ணங்களில் பூத்துக் குலுங்கின. மாநாடு ஆரம்பித்திருந்தது. அவளை போல அங்கு வந்திருந்த முக்கியமான தலைவர்களின் மனைவிகள் திருமதிகளாக ஒயிலாக வலம் வந்து கொண்டிருந்தனர். அவள் வெறுப்பும் தவிப்புமாக அறைக்குள்ளேயே பம்மிக் கொண்டாள். பிறகு தன் பரிவாரங்களோடு அங்கிருந்து கிளம்பி விட்டாள். 

குளிர் வி்ட்டிருந்தது. அவள் ரஜாயை ஒதுக்கி விட்டு எழுந்தாள். எங்கேயாவது சென்று வந்தால் தேவலாம் என்றிருந்தது. ஆனால் அந்தளவுக்கு அவளால் தன்னை வெளிக்கிளப்பிக் கொள்ள முடியாது. மேலும் சமீபமாக அவள் எந்த புடவையையும் வடிவமைக்கவில்லை. அலமாரியில் இருப்பவையெல்லாம் சென்ற மாதத்தில் தயாரிக்கப்பட்டு வந்திறங்கியவை. வெளிர் நீல நிறத்தில் மென்மையான வெண்மை நிற பூக்கள் சிதறிக் கிடந்த புடவையை மார்பில் வழிய விட்டுக் கொண்டாள். அதற்கு பொருத்தமாக நீலநிற ரவிக்கை. முன்புறம் ஆழமாக இறங்கியும் பின்கழுத்தில் முடிச்சுக்கு பிறகு அவளின் படர்ந்த முதுகை  முழுமையான தெரிய விட்டு அடியில் சிறு வரியாக ஓடியும் முழுமை பெற்றிருந்தது அந்த ரவிக்கை. அதை அணிந்துக் கொள்ளும் பொறுமை அவளுக்கில்லை. முகத்தை ஒப்பனை மட்டும் செய்துக் கொண்டாள். ஆனால் கண்ணாடியில் தெரிவது அவளா…? அவள் உருவா…? உருண்ட விழிகள், நீண்டு கவிழ்ந்த மூக்கு, அழகிய சிறிய அதரங்கள், அலங்கார அணிகள் அணிவதற்கேற்ற விசாலமான காதுகள், இருபுறமும் வளைந்து இறங்கிய முடி சுருள்கள், வெண்ணிற கழுத்து, பெண்மையான தோள்கள், மென்மையான கரங்கள், தளிர் விரல்கள் எல்லாம் அவள்தான்.. அவள்தான்.. என்றது. ஆனால் ஜீவன் எங்கே? கண்கள் ஏன் பம்மி பதுங்குகின்றன? நான் மீள முடியாத பள்ளத்துக்குள் வழுக்கி விழுந்து விட்டேனா, காப்பாற்ற முடியாதளவுக்கு சென்று விட்டேனா? நான் என்ன அத்தனை பெரிய தவறு இழைத்து விட்டேன்? என் திருமணம் தோல்வியடைந்து விட்டதா? அல்லது அது மட்டும்தான் என் பிரச்சனையா? எம்மெலின் பங்க்ஹர்ஸ்ட் கூட தன்னை விட 24 வயது மூத்த வழக்கறிஞரைதானே திருமணம் செய்து கொண்டார். அவர் வாழ்க்கையில் வெற்றி பெறவில்லையா? 

அவள் ஒப்பனைகளை களைத்துக் கொண்டாள். ஒப்பனை பொருட்களை பார்த்து பார்த்து தேர்ந்தெடுப்பவள் அவள். இப்போது எதுவுமே அவளுக்கு பிடித்தமில்லை. நான் அதிகம் செலவு செய்கிறேனா? ஜே.. தான் தங்க முட்டையிடும் மாட்டுக்கன்று அல்ல என்று என்னிடம் நிரூபிக்க முயல்கிறாரோ? பெரும் செல்வத்தையெல்லாம் விட்டு விட்டு அவரை திருமணம் செய்வதற்காக ஓடி வந்தவள்தானே அவளும்… நான் ஹைதராபாத்தில் குதிரை வாங்கியதில் அவருக்கு விருப்பமில்லை. அதை நேரடியாக சொல்லாமல் அந்தக் குதிரை போதுமான பாதுகாப்பு மருந்துகள் கொடுக்கப்படாமல் வளர்க்கப்பட்டிருக்கிறது என்று ஏதோ ஒரு காரணத்தைக் கூறுகிறார்.. தேவையில்லாமல் ஜே.. இவ்வளவு முட்டாள்தனமாக இருக்க மாட்டார். அப்படி பார்த்தால் நான் கல்யாணத்துக்கு முந்தி அப்படி பாதுகாப்பான மருந்துகள் எடுத்துக் கொண்டேனா என்ன? குதிரைகள் நம்மை விட மதிப்பு உள்ளவைதான் போலும். திருமணம் என்னும் மேடையில் யார் பலியிடப்படும் ஆடு? 

அவளுடைய நண்பர்கள் எல்லோருக்கும் ஏதோ ஒரு வேலையிருக்கிறது. சமன்லால், காஞ்சி, ஜே…, பத்மஜா, நாயுடு, லைலாமணி, சரோஜினி எல்லோருமே ஏதோ செய்து கொண்டேயிருக்கிறார்கள். அவளுக்கு எதுமில்லை. யாருமில்லை. யாரும் தேவையில்லை. அரசியல் வேண்டாம்… ஆன்மீகம் வேண்டாம்… காஞ்சி வேண்டாம்… பெத்திக் வகையறாக்கள் வேண்டாம்… ஜே வேண்டாம்… வேண்டாம்… யாருமே வேண்டாம்… கடவுளே… எல்லோரிடமிருந்தும் என்னை பிரித்து விடு… பிரித்து விடு… கண்ணீர் பெருக்கி அழுதாள். அவள் பிறந்ததினமான இதே பிப்ரவரி 20 ஆம் தேதி இன்றோடு அவள் வாழ்க்கையில் இருபத்தொன்பது முறை வந்திருக்கிறது. ஆனால் இம்முறை இது வி்த்தியாசமாகி விட்டது… அதற்கு அவள் பொறுப்பில்ல… ஆமாம் நான் பொறுப்பில்லை… 

இறப்பு மேலேறி வந்து பிறப்பை அணைத்துக் கொண்டது. 

அடுத்தநாளுக்கான செய்தித்தாள்களில் அந்த செய்தியே பிரதானமாயிற்று. 

‘திருமதி ஜின்னா பம்பாயில் திடீர் மரணம்

 

***


1 comment:

  1. கலை வரலாறு கவிதையியல் இதை எப்போதும் கலந்து முன்னிருத்தும் படைப்புலகமே கலைச்செல்வி அவர்கள் முன்னிறுத்தும் படைப்பு மனம்.அவரது சொற்களுக்கு மேலேயும் அதன் ஆழங்களுக்குள்ளும் ஒளியே இருக்கிறது.நல்வாழ்த்துகள் எப்போதும்

    ReplyDelete