இலக்கிய விமர்சகர் சரவணன் மாணிக்கவாசகம் அவர்களின் விமர்சனக் கட்டுரை
மரிக்கின்ற சேனையோ பிள்ளையின் வடிவிலே......
கலைச்செல்வி திருச்சியில் அரசுப் பணியில் இருப்பவர். இதுவரை ஐந்து சிறுகதைத் தொகுப்புகளும்,
நான்கு நாவல்களும் வெளியாகியுள்ளன. வேறொரு நாவலுக்குக்
காந்தி குறித்த தகவல்கள் சேகரித்தபோது, ,காந்தி இவரை சிக்கென பற்றிக்கொண்டதால்
உருவான முழுநாவல் இது.
kristin Hannahவின் Masterpiece ஆன Nightingaleக்கும் இந்த நாவலுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. இரண்டுமே, வேறு நூலுக்கான ஆராய்ச்சியின்
போது கிடைக்கும் தகவல்கள், புதிய நாவலுக்கு தூண்டுகோலாக அமைவது. Historical fiction எழுதுவது என்பது எளிதான விசயமல்ல. அதுவும் இந்தியா போன்ற Dataவில் குறைபாடு கொண்ட தேசத்தில் சரித்திர நாவல்கள் என்பது எப்போதுமே சவால் தான்.
இந்த நாவலில் காந்தியையும்,
ஹரிலாலையும் இணைக்கும் பாலம் கஸ்தூரிபா. கஸ்தூரிபா என்ன நினைத்தார் என்று காந்தி சொல்லி இருக்கிறார்,
மற்றவர்கள் சொல்லி இருக்கிறார்கள். ஆனால் தன் டைரி மூலமாகவோ, சுயசரிதை மூலமாகவோ பா ஒருநாளும் பேசியதில்லை. ஹரிலால் ஒரு ரயில் நிலையத்தில் சந்தித்து, உன்னுடைய எல்லாமும் என் அம்மாவிடமிருந்து பெறப்பட்டவை என்று காந்தியைப் பார்த்து சொன்னதற்கு பின்புலம் என்னவாக இருந்திருக்கும்?
கஸ்தூரிபா அதை ஆமோதித்தாரா அல்லது எதிர்த்தாரா
அல்லது மௌனமாக இருந்தாரா! நிறைய நிகழ்வுகளில்
பா என்ன நினைத்திருப்பார் என்று பல வருடங்களாக யோசித்திருக்கிறேன். யாருமே அதை அறிவதற்கில்லை. காந்தியே அறிந்தாரா என்ற சந்தேகம் எனக்குண்டு. காற்றோடு கரைந்த பாவின் நினைவுகள்.
நாவலில் வரும் ஏராளமான சம்பவங்கள் உண்மை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டவை. ஹரிலால் குறித்த, Western Educationஐ தந்தை தனக்குத் தரவில்லை என்பதில் இருந்து ஏராளமானவை உண்மையில் நடந்தவை. மிலி, போலக் தென்னாப்பிரிக்காவில் இருந்த காலத்தில் இருந்து கடைசிவரை காந்தியின் நெருங்கிய நண்பர்கள். வந்தியத்தேவனின் கண்ணை ஒரு பெண்ணின் கண் கவ்விக் கொண்டதால், அருள்மொழிவர்மனுடன் நடந்த வாள்சண்டையில் வாள் கையிலிருந்து
நழுவியது என்பது போல் இது போன்ற நாவல்களை எழுத முடியாது. யாரேனும் வரலாற்றிலிருந்து
பிழைகளைச் சுட்டிக்காட்டும்
சாத்தியக்கூறுகள் இது போன்ற நாவல்களில் மிக அதிகம். கலைச்செல்வி கவனமாக இந்த நாவலை எழுதி இருக்கிறார்.
எல்லோருக்கும் தெரிந்த வரலாறை நாவலாக எழுதும் பொழுது, சுவாரசியம் குன்றாமல் விறுவிறுப்பாக
வாசிக்க வைப்பது புனைவாசிரியரின் திறமை. அதைக் கலைச்செல்வி சீராக செய்திருக்கிறார்.
தென்னாப்பிரிக்காவில் ஆரம்பிக்கும்
நாவல் தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா கிளம்பும் போது முடிந்து விடுகிறது. இதற்குப்பிறகே காந்தியின் பிம்பம் மாறப்போகிறது. அவரை மகாத்மா என்று அழைக்கப் போகிறார்கள்.
எனவே தொடர்நாவல்களில்
இது முதல்நாவல் என்றும் சொல்லலாம்.
கஸ்தூரிபாவின், ஹரிலாலின் சலனங்கள், அக அலைக்கழிப்புகளை நாவலில் அழகாகப் படம் பிடித்திருக்கிறார் கலைச்செல்வி. ஹரிலால் அப்பா என்னைக் குழந்தையில்
கொஞ்சினாரா என்ற ஏக்கத்துடனான கேள்விக்கு, கஸ்தூரிபாவின்
சமாளிப்பான பதில் உண்மையாக நடந்ததற்கு வெகு பக்கத்தில் இருக்க வேண்டும். . ஒவ்வொருவர் பற்றிப் பேசும் போதும் அவர்களது வக்கீல் ஆகிறார்.
காந்தி பற்றிப் பேசுகையில் மட்டும் இவரை அறியாமல் அவர் பக்கம் தராசு தாழ்கிறது.
காந்தி தன்னை வருத்தித் தன்னைச் சார்ந்தவர்களையும் வருத்தினார். நேரு, காந்தியை எளிமையாக வைத்திருப்பதற்கு
நாங்கள் நிறையச் செலவுசெய்ய வேண்டியதாய் இருக்கிறது என்றது அவர் மேல் வைத்த கிண்டலான விமர்சனம். கோட்சே மட்டுமில்லை, அவரது கடைசி உண்ணாவிரதத்தினால் கோடிக் கணக்கானோர் அவர் மரிக்க வேண்டும் என்று நினைத்தார்கள்.
மரணம் தன்னை நெருங்குகின்றது என்று காந்திக்கே தெரியும். தன் உயிரின் மீது கவலை இல்லாத பிடிவாத குணம் அவரை எல்லா வலிகளோடும் தொடரச் செய்தது. காலமெல்லாம் அகிம்சையைப்
போதித்த மனிதர் சொந்த நாட்டவராலேயே, வன்முறையால்
கொல்லப்பட்டதும், அவரது மரணத்திற்கு பழிவாங்க மகாராஷ்டிர பிராமணர்கள் கொல்லப்பட்டதும் இந்தியா போன்ற தேசத்தில் மட்டுமே நடக்கும். மகாத்மாவின் ஆன்மா கதறியிருக்கும்.
இளைய காந்தி என்று ஆரம்பத்தில் அழைக்கப்பட்ட ஹரிலாலின் வாழ்க்கை எந்தப்புள்ளியில் மாறியது. தந்தையை நிராகரிப்பவராக தன் வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்க ஹரிலாலைத் தூண்டிய விசயங்கள் என்ன? குழந்தைப் பருவத்தில் காந்தியை அறியாது, அவர் அண்ணன் வீட்டில் வாழ்ந்த ஹரிலாலுக்கு
இயல்பாக தந்தையிடம் வரவேண்டிய பாசம் வற்றி விட்டதா? ஹரிலால் குறித்து ஆரம்பத்தில் இருந்தே முழுதாக அறிந்தவர் யார் என்று யோசித்தால் கஸ்தூர்பா மட்டுமே என்று தோன்றுகிறது. Chandulal எழுதிய வாழ்க்கை வரலாறு கடிதங்களை, சபர்மதி ஆசிரம தஸ்தாவேஜ்களை
அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது. ஹரிலாலின் பேத்தியும், அவரது தம்பி மகன் எழுதிய வாழ்க்கை வரலாற்று நூல்கள் ஹரிலாலை எந்த அளவிற்கு வெளிப்படுத்துகின்றன? நம் தாத்தா குறித்து நமக்கு எவ்வளவு தெரியும்!
காந்தி இறந்து ஆறுமாதங்களுக்குள் ஹரிலாலும் இறக்கிறார். எந்த விதி இருவரையும் பிரித்ததோ அதே விதி ஹரிலால் காந்தியின் மறைவுக்குப்பின்
வாழ்வதில் பொருளில்லை என்று முடிவு செய்திருக்கும்.
கலைச்செல்வியின் இந்த நூல் சரித்திர நிகழ்வுகளை புனைவில் தோய்த்து, ஒரு ஆவணமாக்கும்
முயற்சி. தமிழில் தொடர்ந்து இதுபோல ஆய்வு செய்யப்பட்ட நூல்கள் வரவேண்டும். கலைச்செல்வியின் இலக்கியப் பயணத்தில் ஒரு மைல்கல் இந்த நாவல்.
நூல் பெயர்- ஹரிலால் த/பெ மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி
ஆசிரியர்- கலைச்செல்வி
வெளியீடு - தன்னறம் நூல்வெளி
முதல்பதிப்பு ஜனவரி 2022
No comments:
Post a Comment