Search This Blog

Monday 15 July 2024

அக்னி பர்வதம்

வனம் மே 2024 




படுத்துக் கொண்டேயிருப்பது பெரும் பாரமாக தோன்ற அவள் எழுந்து நடக்கத் தொடங்கினாள். வெளியே வெயில் வெளிர்மஞ்சள் பந்தலிட்டிருந்தது. நாரத்தை மரம் அண்டையாக தோன்ற அவள் அதன் உதிரியான நிழலுக்குள் வந்தாள். மாமரத்திலிருந்து வீசிய புளிப்புக் காற்று நாசிக்குள் ஏறியதில் நாக்கு கூசுவது போலிருந்தது. அவைப் பழுத்தாலும் கூட பட்சிகளுக்கு மட்டுமே உகந்தவையாக இருக்கும். அணிலொன்று வாலைத் துாக்கிக் கொண்டு கொய்யா மரத்தில் ஏறியது. அருகிலிருந்த ஓலைக்கூரையால் வேயப்பட்ட நீர்ப்பந்தலில் சிறுமியொருத்தி பானை மோரை முகர்ந்து குடித்தாள். வீட்டின் முன்புற கட்டுமானத்தில் வேய்ந்திருந்த சிவந்த ஓட்டின் மீது எட்டி மரம் படுத்து கிடந்தது. சுவருக்கும் கல் பாவிய நடைபாதைக்குமிடையிலிருந்த சிறு மண்பரப்பில் புளியமரக்கன்று வளர்ந்திருந்தது. அதன் இளங்கொம்பை மென்மையாக வளைத்து பிடித்தபடி வீட்டை புதிதாகப் பார்ப்பது போல பார்த்தாள் அவள். கல்கத்தாவில் அவளிருக்கும் வீடு இதில் பத்தில் ஒரு பங்குக் கூட இருக்காது. இந்த வீட்டிற்கு வயது முன்னுாறு இருக்குமா? பெருக கட்டி பெருகி வாழும் இது எத்தனை தலைமுறைகளை பார்த்திருக்கும்? அய்யோ வீட்டை இது என்கிறேனே.. அதற்காக இவர் என்று சொல்ல முடியுமா..? அல்லது இவளா? எது சரி…? எதுவாக இருந்தாலும் நேரத்திற்கேற்ப சுருங்கி விரியும் இந்த வீட்டுக்கு நிச்சயம் உயிரும் உணர்வும் இருக்கதான் வேண்டும். குழந்தைகள் ஓடி விளையாடும்போது அவர்களை அணைத்துக் கொள்வதுபோல வீடு சிறியதாகி விடும். காலையிலிருந்து புகைந்துக் கொண்டிருக்கும் அடுப்பு சமைத்தனுப்பும் பண்டங்களை ஆண்களுக்கு பரிமாறி விட்டு மீதமிருப்பதை உண்டு விட்டு பெண்களும், உண்ட களைப்பில் ஆண்களும் ஆளுக்கொரு பக்கம் ஒண்டிக் கொள்ளும் மதிய நேரங்களில் வீடு பெரியதாகி விடும். விஷேச நாட்களிலோ விருந்தாளிகளின் இறைச்சலுக்குள் வீடு தன்னை குறுக்கிக் கொண்டு விடும். எது எப்படியிருந்தாலும் நாலப்பாட்டு தறவாட்டுக்கென்றிருக்கும் அந்தஸ்தும் மரியாதையும் வெளியுலகில் குறைவதேயில்லை.    

அவள் அங்கிருந்த படிக்கட்டின் விளிம்போரம் அமர்ந்துக் கொண்டாள். காய்ச்சல் தணிந்திருந்தாலும் உடல் வலியெல்லாம் பெரிதாக விட்டு போய் விடவில்லை. யாராவது பிடித்து விட்டால் தேவலாம் என்று எண்ணிக் கொண்டபோதே நமுட்டு சிரிப்பாக சிரித்துக் கொண்டாள். அவனிடம் தன்னை ஒப்படைத்து விட்டு அவள் பட்டதெல்லாம் போதும். அவளை அவனுக்கு புரியவேயில்லை. காதோரம் கிசுகிசுத்த போதிருந்த கிளர்ச்சி அவன் தன் மீதிருந்து எழுந்து கொண்டபோது எங்கோ போயிருந்தது. உடலை வாசிக்கவோ இசைக்கவோ தெரியாதவன். அவளுடைய தாஸேட்டன் கூட அப்படிதான். மென்மை  என்பதே தெரியாது. விழுவதும் எழுவதும்… உறவுக்கு பின் காட்டும் மிதமிஞ்சிய அசட்டையும்… அவள் அவமானப்படுத்தப்பட்டவள். காயப்பட்டவள். திருமணத்துக்கு முன் அவள் தாஸேட்டனிடம் அவர் தன்னை காதலிக்கிறாரா என்று கேட்டபோது அதற்கு பதிலளிக்காமல் அவளை  முத்தங்களால் மொய்த்தார். பதிலளிக்க இயலாத எத்தகைய கேள்வியையும் இதைப் போன்ற எல்லை மீறிய பாச வெளிப்பாட்டின் மூலம் தீர்வு கண்டு விட முடியுமென்று அவர் இன்று வரை எண்ணிக் கொள்கிறார். அவளும் கூட காமத்தை நேசமென்று தவறாக எண்ணிக் கொள்கிறாள். அதை உணர்வதற்குள் எப்போதுமே காலம் கடந்து விடுகிறது. 

“கமலா… எந்திரிச்சிட்டீயா… படுக்கையில காணாமேன்னு தேடீட்டு வந்தேன்என்றாள் பாட்டி. வீட்டில் பெரிய பாட்டி, சின்ன பாட்டி, அம்மும்மா, தாய்மாமனின் சின்னத்தை, இன்னும் இரண்டு பாட்டிகள் என்றிருந்தாலும் அவளுக்கு அம்மும்மாவே அதிகம் பிடித்தமானவள். பால் எடுத்துட்டு வரட்டுமா… நாலு நாளு காய்ச்சல்ல முகமெல்லாம் வத்திப்போச்சு. ஆளே கருத்தாப்பல போயிட்டே…என்றாள்  பாட்டி. பாட்டி நல்ல சிவப்பு. ஆபரணமே தேவையில்லை. அதனால்தான் போட்டிருக்கும் ஆபரணங்களையெல்லாம் இந்த மகாத்மாகாந்தி கழற்றி வாங்கிக் கொண்டு போய் விட்டார் போல என்று கமலா சிரித்தபோது ஏய்… அவரை பத்தி அப்டியெல்லாம் சொல்லாதடீ… மனுஷன் தனக்காகவா கேக்குறாரு? என்று கடிந்துக் கொண்டாள். அம்மா இவளின் கருப்பு நிறத்தை போக்க சிறு வயதில் ஆலிவ் எண்ணெயில் முக்காட்டி வைத்திருப்பாளாம். கவிதையெல்லாம் எழுத தெரிந்த அவளுக்கு பிறந்த நிறம் போகாது என்று தெரியாதது ஆச்சர்யம்தான். பள்ளி பருவத்தில் ஒருமுறை அவளது அண்ணனின் ஆங்கிலேய நண்பன் வில்லியம், “நீ பஞ்சு வச்சு நல்லா உடம்பை தேய்ச்சு குளிச்சா எங்களை மாதிரி கலரா ஆயிடுவே”, என்றான். அவளுக்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது. புத்தகப்பையோடு எங்கோ நடந்தவள் மருதாணி வேலிக்கு அப்பாலிருந்த நிழல் அண்டையில் ஒடுங்கி உட்கார்ந்துக் கொண்டாள். இந்த உலகத்தில் சிவந்த தோல்காரர்கள்தான் அழகானவர்கள்… நான் அழகற்றவள்… என்னை யாருமே காதலிக்க போவதில்லை. மருதாணியின் பச்சையான இலைக்குள்ளிருந்து சிவந்த நிறம் வருவதை போல காதலாலும் வெட்கத்தாலும் என் கன்னங்கள் ஒருபோதும் சிவக்கப் போவதில்லை. அவளை தன்னிரக்கமும் தனிமையும் வளைத்துக் கொண்டன. மருதாணியின் இலைகளைத் தொட்டு வீசிய காற்றின் மணம் அவளை அங்கிருந்து நகர விடவில்லை. மூச்சை உள்ளிழுத்து அதன் மணத்தை ஆயுள் முழுக்க நிரப்பிக் கொள்வதுபோல நுரையீரலுக்குள் பத்திரப்படுத்திக் கொண்டாள்.



 க்கூக்ட்ருகு… க்கூக்ட்ருகு… க்கூக்ட்ருகு…. ரிதம் மாறாத ஒழுங்கில் ஏதோ ஒரு பறவை இசைத்துக் கொண்டிருந்தது. கண்களை மூடிக் கொண்டபோது உலகத்து ஒலிகளெல்லாம் க்கூக்ட்ரு… எனும் ஒற்றை இசையானது. உடல் சீரான மெல்லிய தாளமென அதிர அவள் அதில் மூழ்கிக் கொண்டிருந்தாள். நீர் பட்ட பூமியின் புற்களென அவள் உடலெங்கும் சொற்கள் முளைத்தன. மரத்தின் இலைகளை போல அவை வளர்ந்தன. எங்கோ அடியாழத்தின் மௌனத்திலிருந்து கிளர்ந்து வரும் அவை ஒருபோதும் நிற்க போவதில்லை.

ஒரு சமயம் தனிமை என் வீடாக இருந்தது.

இன்று நான் அதன் வீடாகி விட்டேன்.

அது உருவமற்றது எனினும்

காலி நெற்குதிர் போன்றது

என்றென்றும் எனக்குள் நிலைத்திருப்பது

கனமில்லாதது எனினும் அதன் பாரத்தால்

என் கால்கள் தளர்வதை உணர்கிறேன்.

 ஆம்… தனிமை கனமானது. வீரியமானது. அது கண்ணனுக்காக காத்திருக்கும் ராதையின் தனிமை. இடது காலை நிலத்தில் ஊன்றி வலது காலை ஒயிலாய் சாய்த்து நிற்கும் கண்ணனின் தோரணையே அலாதி. ஒய்யார கீரிடத்திற்குள் செருகியிருக்கும் மயிற்பீலியும் அதரங்களில் தொற்றிக் கொண்டிருக்கும் புன்னகையும் மட்டுமா அவன்? துளையிட்ட மூங்கிலுக்குள் எப்படி அத்தனை நாதமிருக்க முடியும்? மெலிதான நீண்ட அந்தக் குழலின் மீது பிசிறின்றி விரல்கள் புரியும் நர்த்தனத்தில் வழியும் இசையும் அவன்தானே… அவள் தன்னை நீங்கி சென்ற கண்ணனுக்காக காத்துக் கிடந்தாள்… தனித்துக் கிடந்தாள்… 

நெடுங்கால காத்திருப்புகள் அவளுக்கிருந்தன. கிராமத்து தொடக்கப் பள்ளியில் பெஞ்சில் தன்னருகே அமர்ந்திருந்த வேலுவின் மீது பரிவு இருந்தது. சற்றே மேல் வகுப்பில் தன்னுடன் படித்த கோவிந்தகுறுாப்பு ஆசிரியரை எதிர்த்து விட்டு வகுப்பறையை விட்டு வெளியேறிய போது அவனை காதலிக்கவும் திருமணம் செய்துக் கொள்ளவும் தோன்றியது. வளரிளம் பருவத்தில் தன்னுடலில் நடந்த மாற்றங்களை கிளர்ச்சியோடும் ஆர்வத்தோடும் கவனித்த அவளுக்கு வீரம் செறிந்த மகன்களை பேறுக் கொள்ள அப்படியான தகப்பன்களை தேர்ந்தெடுத்த மகாபாரத குந்தியின் மீது பொறாமை ஏற்பட்டது. பூப்படைந்த தருணத்தில் அவளை படமெடுக்க வந்த காமிரா இளைஞன் அவளை அழகி என்று புகழ்ந்தபோது அவளுக்கு அவனுடன் உறவில் ஈடுபட தோன்றியது. ஆனால் அப்போது அவளுக்கு தாஸேட்டனுடன் திருமணம் நிச்சயமாயிருந்தது. பிறகு அண்டை வீட்டில் குடியிருந்த மாணவப் புரட்சிக்காரனை விரும்புவதை அவள் அறிந்துக் கொண்டாள். 

நான் ஒரு மனிதரைச் சந்தித்தேன்

அவரைப் பெயர் சொல்லி அழைக்காதீர்கள்

அவர் ஒரு பெண்ணை விரும்பும்

ஏதோ ஒரு ஆண், நான் எப்படி

காதலை விரும்பும் ஒரு பெண்ணோ அப்படி

அவருக்குள் பசி வேகம் கொண்ட ஆறுகள்

எனக்குள்… கடலின்

களைப்பில்லாத காத்திருப்பு 

உடல் தீண்டாது உள்ளம் தொடாது உயிர் தீண்டிய அவன் எங்கு சென்று விட்டான்? சிந்தையறியாது சித்தமறியாது அவன் ராதைக்குள் புகுந்த தருணம்தான் எது? குழந்தை கண்ணனை குமரி ராதை கண்டது போல பள்ளிப்பருவத்தில் அவளும் அவனை கண்டிருக்கிறாள். அப்போது அவர்கள் கல்கத்தாவில் இருந்தார்கள். அன்றும் அவளுக்கு காய்ச்சல். பள்ளிக்கு செல்லவில்லை. மாத்திரைகளை விழுங்கி விட்டு உறக்கம் விழிப்புமாக படுக்கையில் கிடந்தபோது எதிரிலிருந்த சுவரின் மீது ஏதோ நிழல்கள் அசையக் கண்டு பயந்து போனாள். வீட்டில் யாருமில்லை. சுவர் கடிகாரம் காலை மணி பதினொன்று என்றது. அவள் சிரமப்பட்டு தைரியத்தை உண்டாக்கி இறுக்கி மூடிக் கொண்ட கண்களை திறந்துக் கொண்டாள். சுவரில் எங்கோ ஒரு தாழ்ப்பாள் நீக்கப்பட்டு கதவு திறக்கப்படுவது போலவும் அதன் வழியே ஏதேதோ உருவங்கள் உள்ளே நுழைவன போலவும் தோன்றியது. கனவா… கற்பனையா… இல்லையில்லை… நிஜம்தான். அவளால் பசுக்களின் கழுத்து மணியோசையை கேட்க முடிகிறது. யாரிவர்கள்…? முன்னால் வந்த இளைஞனை அவள் உற்றுப் பார்த்தாள். ஆணென நெடிந்த உடல். இறையென விரித்த கைகள்… இவன்… இவன்… இவளை அவள் நன்கறிவாள். அவன் பிறிதொருவன் அல்ல. உள்ளிருப்பவன். குழைந்த இதழின் குறுநகையும் மையிட்ட கண்களின் குறுகுறுப்பும்… இவன் கண்ணன்.  கண்ணன் என்றால் பார்த்த கண்களை விலக்கவிடாது வைத்திருப்பவனோ? அவள் கண்களை விரித்துக் கொண்டாள். காட்சிகள் பனித்துளிகளைக் கொண்டு மூடின போன்று மங்கலாக தோன்றினாலும் மயிற்பீலி சூடிய கொண்டையுடன் கரிய உடலில் மின்னும் பொன்னாபரணங்களோடு செல்பவன் அவன்தான். அவனேதான். அவன் கானமிசைக்கத் தொடங்கியதும் பசுக்களும் கன்றுகளும் புள்ளினங்களும் மயங்கி, செல்லும் திசையறியாது இலக்கறியாது வழியறியாது அவன் பின்னே நடந்தன. அவள் தன்னுள் ஊற்று போல பெருகிய ஏதோவொன்றை அனுபவித்தாள். ராதையென கிறங்கினாள். காதல் கொண்ட அவளது விழிகள் காட்டை எரிக்கும் தழல்கள் போன்றாயின. ஆனால் அவை பெருக்கும் கண்ணீரோ கரும்பம்ச்சாரென தித்தித்தது. கண்ணா… குன்றாப் பெருந்தாபம் கொண்டுள்ளேன் உன் மீது. விதை விட்டெழுந்த முளை மீண்டும் விதையடங்காது. 

என்னுள் இருக்கும்

அனைத்தும் உருகுகின்றன

மையத்தின் இறுகிய கடுமை கூட

ஓ… கிருஷ்ணா நான்

உருகி உருகி உருகிப் போகிறேன்

வேறு எதுவுமே இல்லை

உன்னைத் தவிர

“கமலாதாஸ்ங்கிற பேர்ல நீதானே கவிதையெல்லாம் எழுதுவது?

 



“ஏன்… கதை, கட்டுரையெல்லாம் கூட எழுதுவேனே? அப்போது அவள் எதிர்காலச்சுமை இல்லாத ஒருவரால் மட்டுமே எழுதக்கூடிய விதத்தில் வார்த்தைகளைக் கோக்க தொடங்கியிருந்தாள். 

பெண்குறியின் உள்ளடுக்கின்

பட்டு மடிப்புகளில்

எங்கோ உள்ளே

ஒரு சுடர் தயங்கி எரிகிறது

ஒழுக்க விதிகளை மீறி

மாதவிக்குட்டிங்கிறதும் நீதானே..? நீ காதலுக்கும் காமத்துக்கும் புதிய விளக்கங்கள் தர்றே… உங்க மாமாவுக்கு தெரிஞ்சிடுச்சுன்னா…? 

கவிஞரும் மொழிப்பெயர்ப்பாளருமான நாரயணமேனன் என்ற அவளது தாய்மாமாவால் எதை வேண்டுமானாலும் செய்ய முடியும். எழுத முடியும். விதிகளெல்லாம் பெண்களுக்குதான். தாயார் பாலாமணியால் அவளை விட சிறந்த கவிதைகளை படைக்க முடியும். ஆனால் அவளோ கணவரின் கைகளுக்குள்ளிருந்து எவ்வளவு முடியுமோ அவ்வளவேதான் செய்ய விரும்புவாள். ஆனால் அவளால் அப்படி இருக்க முடியாது. 

“நாலப்பாட்டுத் தறவாட்டைச் சேர்ந்த ஒருவர் இப்படி எழுதலாமா? ஏன் இப்படி கன்னாபின்னான்னு எழுதி உன்னையும் உன் குடும்பத்தையும் அசிங்கப்படுத்திக்கிறே… உங்கப்பா மாத்ருபூமி பத்திரிக்கையோட நிர்வாக இயக்குநர்... காந்தியவாதி… அவரோட நிலைமையை கொஞ்சமாவது யோசிச்சுப் பார்த்தியா? இனிமேலாவது இதையெல்லாத்தையும் விட்டுட்டு ஒழுங்கா எழுதற வழிய பாரு… அறிவுரைகள் அவள் மீது விழுந்துத் தெறித்தன. பொருட்படுத்துவதற்கு அவையொன்றும் அறவுரைகளல்லவே. அவள் ஆங்கிலத்தில் எழுத தொடங்கியபோதுதான் ஆங்கிலமோ மலையாளமோ மரபான இந்திய மனம் ஒரே மாதிரியான சிந்தனையைதான் வெளிப்படுத்தும் என்றறிந்துக் கொண்டாள். ஒரு படைப்பாளியாக தனது கலைக்காவும் பெண்ணாக தன் இருப்புக்காவும் அவள் தன்னையே ஆகுதி ஆக்கிக் கொள்கிறாள் என்று தன்னைக் குறித்து எழும் வார்த்தைகளையும் அவள் விரும்பவில்லை. 

“என் கதையில் தொனிப்பது பெண்ணின் ஒப்புக் கொள்ளல் அல்ல. வேறு எந்த மதிப்பீட்டை விடவும் முற்றான அன்பை விரும்பும் பெண்ணுக்கு  அது மறுக்கப்படும் நிலையையே நான் பேசுகிறேன். அக்கினி பர்வதத்தை ஈரத்துவாலையால் மூட முடியாது

“கமலா… பால் ஆறி போயிடும்… எடுத்துக் குடிபாட்டி ஞாபகப்படுத்தி விட்டு போனாள். நாராயணமேனனின் குரல் அவர் வீட்டுக்கு வந்து விட்டதை சொன்னது. அவருக்கு சாப்பிடுவதற்கு ஏதேனும் கொடுக்க வேண்டும். பாட்டியின் நடையில் வயதை மீறிய வேகமிருந்தது. 

உறுத்தமளவுக்கு வெயில் வந்திருந்தது. உடலில் வெம்மை ஏறியிருந்தது காய்ச்சலால் அல்ல, வெயிலால் என்பதே ஆறுதலாக இருந்தது அவளுக்கு. வியர்த்து கிடந்த உடுப்புகளை கழற்றி எறிய வேண்டுமாய் தோன்றியது. உடைகளை மட்டுல்ல… ஆபரணங்களையும்… அதன்பின் உடலை மூடியிருக்கும் தோலை… உள்ளிருக்கும் சதைகளை… தாங்கி நிற்கும் எலும்புகளை… எல்லாவற்றையும் உதறினால்தான் அனைத்துக்கும் அடியிலுள்ள ஆன்மாவை காண இயலும். மதுராவின் அரசன் என்னை அறிவான். ஆனால் மீள வருவானா? தன்னுடன் அழைத்துக் கொள்வானா? அவள் ஒருமுறை தோழிகளுடன் துணிக்கடைக்கு சென்றபோது பல வண்ணத்திலான துணிகள் பேரதிசயங்களைப் போல வந்து விழுந்ததும் மலைத்துப் போனாள். ஒவ்வொரு துணிக்கட்டையும் கலைத்துப் போடும்போது எழுந்த புதுமணம் ஆண்களின் மீது கொள்ளும் புதுபுது காதலை போல பித்தேற்றியது. கிருஷ்ணன் பித்தனா? அல்லது அவனால் சித்தம் கலைந்தலையும் கோபியர்கள் பித்தர்களா? தன்னை சுற்றியலையும் கோபியர் அனைவரிடமும் அவனால் உறவு கொள்ள முடியுமா?  கொண்டால்தான் என்ன?  கடலாழமும் மலையுச்சியும் தனிமை தவத்தை கலைத்து விடுவதில்லையே. அது நிறைவு தரும் தனிமை. தவத்தின் ஒருங்கிணைவே தனிமை. அதுவே பூரணம். 

உச்ச இசையிலும் நடன விரைவிலும் முழுமைக் கொள்ளும் அவளது நம்பிக்கையை அவள் குடும்பத்தாரின் எளிமை தகர்ந்தெறிந்தது. அடர்ந்த நிறங்களை விரும்பும் அவளுக்கு பெற்றோர்கள் எளிய கதராடைகளையே வாங்கியளித்தனர். அவள் கனவுகளில் கோபியரைப் போல ஆபரணங்களை அணிந்துக் கொண்டாள். சரிகை உடுப்புகளை உடுத்திக் கொண்டாள். சிவந்த நிறத்தைப் பெற்றாள். அவளது கூந்தல் கூட கருமை மாறி பொன்னிறத்தில் மின்னியது. மற்றவர்களின் எதிரில் ஒரு வானவில்லைப் போல தோன்றிய அவள் குடை போல் விரிந்த தன் பாவாடையின் விளிம்பைப் பிடித்தபடி பாலே நடனமாட, அரசனும் அரசியும் ராஜகுமாரிகளும் அவள் மீது ரோஜாப்பூக்களை துாவினர். 

நான் ஒன்றும் பெண் பிறவியின் துயரக் குறியீடு அல்ல. அவள் உற்சாகமானாள்.  அவளுலகம் காதலர்களால் ஒளிர்ந்தது. ஓவியம் கற்றுத் தர நியமிக்கப்பட்ட அருங்காட்சியத்தின் துணைக்காப்பாளர் பதவியிலிருந்த இருபத்தொன்பது வயது இளைஞருடன் அவளுக்கு காதல் உண்டானது. வீட்டாருக்கு இது தெரிய வந்ததில் பயிற்சி நிறுத்தப்பட்டது. மகளின் காதல்கள் அவர்களுக்கு தீராத அவமானத்தை ஏற்படுத்தி விடலாம். ஆனால் அவளால் எதையும் நிறுத்த முடியாது. அவள் அவளுக்கானவள். காதலனுடனான ரகசிய சந்திப்புக்காக அவள் அருங்காட்சியகம் வந்தபோது வெளியே மழை கொட்டிக் கொண்டிருந்தது. 

கண்ணே உன்னால் நம்ப முடியாது

இத்தகைய தொரு வீட்டில்

அன்பு பாராட்டப்பட்டு செருக்கோடு

வாழ்ந்தேன் என நம்ப முடியாது

அத்தகைய நான் வழி தவறிப்போய்

அந்நியர் வாசல்களில் நின்று

சில்லறையாக வேனும்

அன்பைப் பெற நிற்கிறேன் 

அவளுக்கு நிலையானதும் பாதுகாப்பானதுமான அன்பு தேவை. அதுவே கால்கள் ஊன்றுவதற்கான அடித்தளத்தை உருவாக்கும். அவள் அதை தேடியே ஒடிக் கொண்டிருக்கிறாள். எல்லா பெண்களுக்கும் காதலன் ஸ்ரீகிருஷ்ணனா? எல்லா ஆண்களுக்கும் காதலி ராதையா? அருங்காட்சியக காதலன் அணிந்திருந்த வெள்ளை நிற ஜிப்பா அவளது கண்ணீரால் நனைந்தது. அவன் விவரிக்க முடியாத பொறுமையுடன் கதவை மூடி விட்டு அவளது ஈர உடைகள் ஒவ்வொன்றையும் களைந்தெடுத்து பிழியத் தொடங்கியபோது அவளுக்கு தன் பெண்மை குறித்தும் அதன் செழுமைக் குறித்தும் பெருமை உண்டானது. நேசிப்பதொன்றும் மோசமான செயலல்ல.. அவனது கண்களும் அதையேதான் சொல்கின்றன. மகாத்மா காந்தியின் தாக்கத்தால் புலனடக்கத்தில் மீட்சி இருப்பதாக அவள் பெற்றோர்கள் உணர்வதை போல அவளால் உணர முடியாது. அவளால் அவர்கள் மீது எந்தவொரு செல்வாக்கையும் செலுத்த முடியாதபோது அவர்களாலும் அது முடியாது. அவளுக்கு வெட்கம் ஏதும் எழவில்லை. மடி நிறைந்த பசுக்கள் செல்வத்தை புதையலென கொண்டு வந்து சேர்த்து விட்டு எங்கோ சென்று விட்டன. 

எங்கு சென்றன அவை…? நான் யார்? ராதையென்றாகி கண்ணனை தேடுகிறேனா? கண்ணணென மாறி ஆன்மாவை தேடுகின்றேனா? கிருஷ்ணன் தன் உயிரான ராதையை மறந்து விட்டான். மதுராவுக்கு சென்று விட்டான். ராதை கை விடப்பட்டவள்தான். ஆனால் கண்ணனை தவற விடும் முட்டாளல்ல. தவற விடவும் முடியாது. கண்ணனும் அவளும் வேறுவேறு அல்ல. நினைவுகள் மங்குவதும் எழுவதும் இயல்பே. அதை அவளால் உயிர்ப்பிக்க முடியும். அவள் மகன்பேறுக்காக கல்கத்தாவிலிருந்து நாலப்பாடு இல்லத்துக்கு வந்திருந்த சமயத்தில் படிப்புரை மாளிகை அறைக்கு அழைத்துச் சென்ற உறவுக்கார இளைஞன் அவள் உதடுகளில் முத்தமிட்டு அவள் அழகை வர்ணித்தபோது அவள் தன்னுள் எழுந்த மகிழ்ச்சியை அவனிடமிருந்து மறைத்துக் கொள்வதற்காக விரல்களால் முகத்தை மூடிக் கொண்டாள். விரலிடுக்குகளின் வழியே அவனை தேடியபோது அவளுக்கு தன் திருமண வாழ்க்கை சிதைந்த ஓவியமென தோன்றியது. 

ஒவ்வொரு பெண்ணின் மனதிலும்

பிருந்தாவனம் வாழ்கிறது

அவரவர் கணவரிடமிருந்தும் வீட்டிலிருந்தும்

புல்லாங்குழல் கவர்ந்திழுக்கிறது

பின்னர் அவளுடைய

மார்பகத்தின் பழுப்பு வட்டத்தின்மீது

ஒரு நீண்ட கீறலைப் பார்த்துக் கணவர்

வினவிய போது அவள் வெட்கத்துடன் சொல்கிறாள்

வெளியே ஒரே இருட்டு

கானகத்தில் உள்ள புதர்ச் செடி மீது

தடுக்கி விழுந்து விட்டேன். 

எங்கிருந்தோ கிளம்பிய அவள் இலக்கின்றி எங்கோ நடந்து உலகின் மறுமுனையை எட்ட விரும்பினாள். அது பாம்பின் தலை அதன் வாலை கவ்விக் கொண்டதுபோல கிளம்பிய இடத்திலேயே முடிந்தபோது அவளுக்கு சமுதாயத்தின் திட்டமிட்ட பொய்கள் புரிய வந்தன. அழியக் கூடிய மனித உடலை ஒழுக்கத்தின் அடிக்கல்லாக்கி அதன்மீது விதிகளை நிர்ணயித்துக் கொள்ளும் இந்த சமுதாயம் நேர்மையற்றது. உண்மையற்றது. அழகற்ற அருவருப்பான சூனியக்கிழவி. அந்த கிழவிக்கு பகைமை நிறைந்தவர்களும் பொய் சொல்பவர்களும் ஏமாற்றுக்காரர்களும் தன்னலவாதிகளும் ரகசியக் கொலையாளிகளும்தான் விருப்பமானவர்கள். அவர்களை அவள் தன் கருப்புக் கம்பளியால் பாசத்தோடு போர்த்தி அரவணைத்துக் கொள்கிறாள். பொய்களைச் சொல்லியும் நடித்தும் நம்பிக்கை துரோகமிழைத்தும் அந்தக் கிழவியின் ஒழுக்கப் போர்வைக்குள் ஒடுங்குவதற்கு அவளொன்றும் வெற்றுத்தோலாலான கூத்துப்பாவை அல்ல. அவள் உயிர்ப்பானாவள். அவளெழுத்தும் கவிதையும் அவளேயன்றி வேறு அல்ல. தனிப்பட்ட இருப்பிடம் இல்லாததும் தனித்து விடப்பட்டதும் வெகு அழகானதுமான ஆத்மாவை உணர்தலே அவள் இலக்கு. உலகத்தாரே… என்றேனும் உடல் என்கிற ஆடையைக் களைந்து முழு நிர்வாணமாக நிற்கும் என் ஆன்மாவை நேசிப்பீர்களா? கூறுங்கள்… அவள் உள்ளம் புயல் வீசும் கடலைப் போல கொந்தளிந்தது. 

ஒரு தலைக்காதலில்

நினைவுகளில் துளை போடுகின்ற

துாக்கத்தை அனுமதிப்பது

புத்திசாலித்தனமானது தான்

அந்தத் துாக்கம்

மாத்திரைகளில் மையத்திலிருந்து

வந்த குளிர்ந்த

ஒளிர்ந்த துாக்கமானாலும் சரிதான் 

தெற்கு வானத்திலிருந்து ஒரு நட்சத்திரம் நாலப்பாட்டு இல்லத்தின் சுற்று சுவருக்குள் உதிர்ந்து விழுந்ததை கண்டதும் உடலெங்கும் பரபரப்புத் தொற்றிக் கொள்ள அவள் சமையல்கார சங்கரனிடம் ஓடினாள். சங்கரன் அவளைத் தொட்டு ஆசுவாசப்படுத்தினான். “பாப்பா… பயப்படாதே… நட்சத்திரம் உதிர்ந்து விழுந்ததை நானும் பார்த்தேன். அது இங்கே விழல.. பக்கத்தில இருக்கற குளத்தில விழுந்திருச்சு… 


உதிர்ந்த நட்சத்திரம் வானில் ஒட்டிக் கொண்ட தருணமொன்றில் அவள் முழு விழிப்புக் கொள்ள, அப்போது வெள்ளி முளைத்திருந்தது. சங்கரன் குளியலாடி விட்டு அடுப்பை மூட்டியிருந்தான். அவன் நெற்றியின் மீது சந்தனக்கீற்று மின்னியது. 

“அது உனக்கு கிடைத்ததா சங்கரா…? 

எதை கேட்கிறீர்கள் கமலாக்குட்டியம்மா? 

நேத்து ராத்திரி குளத்தில் விழுந்ததே அந்த நட்சத்திரம் 

இல்லை… எனக்கு கிடைக்கல. ரொம்ப நேரம் தண்ணீக்குள்ளே தேடி பார்த்தேன். வள்ளியம்மாவின் சிவப்பு நிறமுள்ள சோப்புப் பெட்டியின் மூடிதான் கெடச்சுச்சு… இதோ பாருங்க… 

அவள் தன்னை முடித்துக் கொள்ள விரும்பினாள். வாழ்ந்துக் கொண்டிருப்பவர்களின் உலகத்தில் ஒரு காலையும் இறந்தவர்களின் உலகில் மறு காலையும் வைப்பதே முழுமையான நிலைப்பாடு. அதுவே சமநிலை. அஞ்சுவதற்கு ஏதுமில்லை. அவள் துாக்கமாத்திரையின் பெயரைக் காகிதத்தில் எழுதி சங்கரனிடம் கொடுத்தாள். “இது எதற்கான மருந்து கமலாக்குட்டியம்மா?”  “இது சாவதற்கான விஷம்“இதுல பாதியை எனக்கும் தரணும். நானும் செத்துப் போகணும்என்றான். வார்த்தைகள் ஸ்திரத்தோடு வெளியானதில் ஒலியும் கூடியிருக்க வேண்டும். அங்கு வந்த சமையல்கார மாதவியம்மா “எனக்கும் வேணும் கொழந்தே என்றாள். மூன்று பேர் தற்கொலைக்கு காத்திருக்க, மருந்துக்கடையிலோ கை விரித்து விட்டனர். அன்று அவள் நீண்டநேரம் திண்ணையில் தனித்திருந்தாள். அவன் என்னுடைய யாராக இருந்தான்? இருக்கிறான்… இருப்பான்?   

வீட்டுக்குச் செல்லும் நீண்ட வழியே

ஒருவேளை மிக இடர் தருவதாக இருக்கலாம்

அகத்தினுள் நீ செல்லும் பாதையோ

களைத்துப் போன

அடி மேல் அடி வைத்து

உன் ரத்தத்தின் தர்க்கம் மீறிய

அகங்காரத்தைக் கடந்து

ஆம் எலும்பைக் கடந்து

எலும்பினுட் தசை கடந்து

கண்ணுக்குப் புலப்படா வலி மையத்துக்கு

உன்னை அழைத்துச் செல்லும்

ஆம், நீ மரணமில்லாப் படைப்பாய்

உன் சுயத்தில் கட்டுண்டு கிடப்பாய்

உன் ஆன்மாவோடு கட்டுண்டு

கிடக்கும் அது

ஓயாமல் தன்னை விடுவிக்கப் போராடும்   

வாழ்க்கை ஒரு மந்திரஜாலம். அதை பருகப்பருக தாகமும் அதிகரிக்கும். வாழ்க்கையும் காதலும் போதுமென்று அவளால் ஒருபோதும் சொல்ல முடியாது. ஒவ்வொரு காதலுணர்வும் அவளை  துயரத்தில் அமிழ்த்தினாலும் அவள் அதை விரும்பவே செய்தாள். சாகசமிக்க ஆபத்தான இடங்களுக்கு செல்ல வேண்டுமென்ற இனம்புரியாத ஆவேசம் அவளுள் எழும்பியது. பட்டுப் போய்க் கொண்டிருக்கும் மரமொன்றில் தற்செயலாக ஒரு தளிர் துளிர்ப்பதைப் போல அடுத்த வாரமே அவளுக்கு  வேறொரு இளைஞனுடன் காதல் மலர்ந்தது. 

நீ என்னை காதலிக்கிறாயா?அவள் அவனை சிரித்துக் கொண்டே கேட்டபோது அவளது குழந்தைகள் புற்தரையில் ஓடி விளையாடிக் கொண்டிருந்தனர். கணவர் வரவேற்பறையில் ஒரு மென்னிருக்கையில் அமர்ந்து அலுவலகக் கோப்புகளை கவனி்த்துக் கொண்டிருந்தார். அவன் அவளை மென்மையாக ஆமோதி்த்தான். அவர்கள் வெயிலில் கைகோத்துக் கொண்டு இலக்கின்றி நடந்தனர். தாங்கள் மனித உலகிற்கு வழி தவறி வந்த தெய்வங்கள் என எண்ணிக் கொண்டனர்.  முருக்கம் பூக்கள் பற்றியெறியும் கோடையில் நந்தியாவட்டை பூக்களை தனது கூந்தலில் சூட்டிய அந்த இளைஞன் தன்னிடமிருந்து எதைதான் எதிர்பார்க்கிறான்? அவளுக்கு புரியவில்லை. உடலோடு உடலை சேர்த்து ஈர விழிகளுடன் அவனை ஏறிட்டு “என்னை என்ன வேண்டுமானாலும் செய்து கொள். நான் உன்னுடையவள்என்றாள் அவனிடம். குரல் கிசுகிசுப்பாய் வழிந்தது. அவன் அதனை வேய்ங்குழலின் நாதமென உணர்ந்தான். 

என் கண்களில் நீ தெய்வம். உன் உடலும் எனக்கு புனிதமானது. அதை நான் எப்போதும் அவமதிக்க மாட்டேன்  

முழுவதுமாக சரணடையக் கற்றுக் கொண்ட தன்னுடலை அவள் பெருமிதமாக கருதிக் கொண்டாள். அவளிடம் அள்ளிக் கொடுக்க அன்பு இருந்தது. பிச்சைப் பொருள் பிச்சைப் பாத்திரத்தை தேடுவதை போல அவளது அன்பு அதனைத் தழுவிக்கொள்ளும் மனித உடலைத் தேடிக் கொண்டிருந்தது. வழிபடும் வேளையில் எந்தவொரு கல்லும் தெய்வச்சிலையாகி விடலாம். தனது கனவுத் தேக்கங்களில் அவ்வப்போது தென்படும் நீலத்தாமரைப் போல ஒரு அறிமுகமான முகத்தை, உடலற்ற ஒருவனை எப்போதும் தேடிக் கொண்டிருந்தது. அவளது இத்தாலிய நண்பன் கார்லோவை அவளுக்கு பிடித்திருந்தது. அவனுடன் செலவழித்த நேரங்களில் அவள் சூக்கும உடலுடன் இருந்தாள். ஸ்துால உடலுக்குரிய கமலா என்ற பெயரெல்லாம் அதற்கில்லை. கார்லோ அவளை சீதா என்றழைத்தான். அப்போதுதான் அவள் தன்னுடலுக்கு மிதமிஞ்சிய சுதந்திரம் கொடுத்த கணவர் ரகசியமான முறையில் தன் ஆன்மாவை சிறைப்படுத்தி விட்டதை உணர்ந்தாள். கார்லோ நிழல் தரும் மரமாக இருந்தாலும் கணவர் காலடிகளை தாங்கும் நிலமாக இருப்பதையறிந்தாள். தாஸேட்டனை கை விடச் சாத்தியமில்லை என்பதை உறுதி செய்துக் கொண்ட பிறகு என்னை ஏன் விரும்புகிறாய்? என்னுடன் ஏன் இத்தனை மணி நேரங்களை செலவழிக்கிறாய்? அநீதி.. முழுவதும் அநீதி.. கார்லோவுக்கு இந்தியாவில் தங்குவதற்கு காரணங்கள் ஏதுமில்லை. 

ஒரு சுதிவிலகல் தன்னுடன் சேர்ந்திசைக்கும் இசைக்கலன்களின் ஒத்திசைவை பிறழ வைத்து விடும். பிறழ்வு கணத்துக்கு கணம் பெருகி கனம் கொண்டதாயிற்று. கார்லோவுக்கு அதை தெரிவித்து விட்ட பிறகு உலகம் முழுவதும் இத்தாலியிலிருந்து வரும் பதில் கடிதத்திற்காக காத்திருந்ததை கார்லோ அறிந்திருக்க முடியாது என்றுதான் எண்ணியிருந்தாள், தன் வீட்டு வாசற்கதவு கார்லோவால் தட்டப்படும் வரை. 

எத்தனை நாள் இந்தியாவில் தங்கியிருப்பீங்க?தவிப்பும் களிப்பும் அவளுடைய வார்த்தைகளை குளற வைத்தது. கண்கள் ஏங்கி கலங்கின.

 “அது உனக்குதான் தெரியும்

 அவள் ஆழமாக அவனை நோக்கினாள்.

 “என்னாச்சு சீதா?”

 அது உங்களுக்குதான் தெரியும்

 அவன் ஆமோதிப்பாய் தலையசைத்தான்.

“ஓ.. கார்லோ… அவள் அவனுடைய விரல்களை பற்றிக் கொண்டு அழுதாள். சுதியொருமைபோல பிறழ்வதற்கு எளிமையானதும் அமைவதற்கு கடினமானதும் வேறொன்றில்லை இவ்வுலகில். 

அன்று எழுத்தாளர் சந்திப்பிற்கு பிறகான காக்டெயில் விருந்தில் அவளுக்கு போதை மிதமிஞ்சிப் போனது. தடுமாறும் உடலைக் கட்டியிழுத்துக் கொண்டு கார்லோவின் விடுதிக்கு சென்றபோதும் அவன் அதையேதான் கேட்டான். 

“என்னாச்சு சீதா… 

நான் ஓய்வெடுக்கணும் 

இந்த நேரத்தில் இப்படி ஆகி விட்டது

ஆறு நம்முடையது

அந்த வயதான கடம்பமரம்

நமக்கு மட்டுமே சொந்தம்

மனை ஏதுமற்ற நம் ஆன்மாக்கள்

ஏதேனும் ஒருநாள் திரும்பி வரும்போது

அதன் பரிசுத்த உடலில்

வௌவால்கள் தொங்கும் 

கண் விழித்தபோது தான் படுக்கையில் கிடத்தப்பட்டிருப்பதும் தனது நெற்றியில் யூடிகோலோன் நனைத்த துவாலையை கார்லோ ஒத்திக் கொண்டிருப்பதும் தெரிந்தது. அவள் முகம் கழுவிக் கொண்டு நாற்காலியின் மீது மடித்து வைக்கப்பட்டிருந்த தனது புடவையை உடுத்திக் கொண்டாள். முகத்திற்கு டால்கம் பவுடரைப் பூசி சிறு ஒப்பனை செய்துக் கொண்டாள். கார்லோ அறையைப் பூட்டி விட்டு அவள் கையைப் பிடித்து வெளியே அழைத்து வந்து காரிலேற்றினான். சாக்லெட் பெட்டியை அவளிடம் நீட்டி இதை குழந்தைகளுக்குக் கொடு… அவர்கள் உன்னைக் காணாமல் பயந்துக்கிட்டிருப்பாங்கஎன்றான். 

அவள் குளிர்ந்திருந்த முற்றத்தில் தனியளென அமர்ந்துக் கொண்டாள். நிலவு எங்கோ சென்றிருந்தது. நட்சத்திரங்கள் ஏதுமற்ற வானில் எங்கிருந்தோ ஒளியின் சிதறல். மெல்லொளி மினுக்கல்.  மென்னோசையென தவழ்ந்த வேய்ங்குழலின் இசை. குழல்கள் காற்றிலாட இமைகளை மூடி இனிய அதிர்வின் ஒத்திசைவை அவள் உடலெங்கும் உணரத் தொடங்கினாள். இனிமை நெகிழ்ந்து காடுகளில் வழிந்து, பரவி அருவியென விழுந்து ஆறாக பெருகியது. கண்ணனிடம் பறிக் கொடுக்கவிருக்கும் ஆடைகளுடன் மயக்கும் விழிகள் காட்டி கோபியர்கள் நடனமிட்டனர். அவளுள் வழிந்த இசையின் வண்ணங்கள் பெருமோனமென கரைந்து கலந்து மண்ணில் வழிந்தோட சாரலென விழுந்த பனியின் ஈரத்தில் இலைகள் குழைந்து குவிந்து குளிர்ந்து கிடக்க அவன் அங்கமெங்கும் இசையென்ற ஒளி மின்னும் புன்னகையை ஏந்தி நிறைந்து தளும்பி அவளை நோக்கி வந்துக் கொண்டிருந்தான். 

“எங்கிருந்தாய் நீ? என் நினைவை ஒருகணமேனும் உணர்ந்தாயா?ஒலித்தது தன் குரலா என்று ஐயம் கொண்டாள். ஐயம் சரியானதுதான். அவன்தான் கேட்கிறான். அவள் பெருமிதம் மின்னும் கண்களால் அள்ளியள்ளி அவனை அணிந்துக் கொண்டாள். இன்னும் கண்டுபிடிக்கப்படாத நிலபகுதியாகிய தன் மனதின் துறைமுகங்களை தீ நாளங்களைப் போல சுடர் விடும் வார்த்தைகளைக் கொண்டு அவனால் ஒளிர வைக்க முடியும். ஆம்… அவனொருவனால்தான் ஒளிர வைக்க முடியும். 

“நீ மட்டுமே கண்டுபிடிக்கும் இடத்தில்…அவள் தன் அதரங்களை மொட்டிதழ்களை போல அவிழ்த்தாள். அவன் விரல்கள் தோள்களில் படிந்தன. கரங்கள் இடைவளைத்தன. பறவை தன் சிறகுகள் மேகங்களாலானவை என்று புரிந்துக் கொண்டன. அவன் கரங்கள் மேலெழும்பி முதுகை அழுத்தி மார்பை ஒன்றோடொன்று இறுக்கி ஒட்ட வைத்துக் கொண்டன.  

“ஆம்… அது உன் ஒருத்திக்கு மட்டுமே சொந்தமான இடம்… ஒருவருமே அறியாத இடம்அணி களைந்து ஆடை களைந்து உடலெங்கும் ஈர இதழில் தடங்கள் பதித்து… உச்சம் தொட உடல் விழையும் வேளையில் அவள் அவனை நகர்த்தி விட்டாள். இவ்வுலகில் காமத்தை படைத்து விளையாடும் இவனை யார்தான் தண்டிப்பது? ஆனால் நகர்த்திய வேகத்தில் ஒட்டிக் கொள்ள இவை உடல்களா? பசைப் பொருட்களா? 

“நான் மட்டுமே அறியும் இடம்இதழ்கள் வார்த்தைகளை உகுக்கும்போது வேய்ங்குழலை எங்ஙனம் இசைக்க முடியும்? இதழ்களை இதழ்களால் மூடி விட்டால் எண்ணங்களும் நின்று விடுமா? அவன் ஆடையென்றாகி ஆள, அவள் அவனை நேர்த்தியாக அணிந்துக் கொண்டாள். ஒவ்வொரு தசையும் நெகிழ்ந்து இயைந்து அசைந்து நடனம் புரிந்தன. தன்னை பிறிதொன்றுடன் பிணைத்துக் கொள்ளும் சுதி விலகாத தாளவொழுங்கு. கண்ணன் நாம் அறிபவனல்ல… நம்மை அறிவபவனே அவன். குழலிசை அருவியெனப் பெருகி மண் நிறைத்து பரவி மெலிந்து ஓய்ந்து துளித்து சொட்டி நிலைத்து அமைதி கொண்டது. ஆணாகி பெண்ணாகி ஆணும் பெண்ணுமாகி… அவள்  முதன் முதலாக வெட்கம் கொள்கிறாள். 

“எப்போது பெண்ணானாய்..கிசுகிசுத்தான். 

“உன்னை ஆணென உணர்ந்த போதில்…கிசுகிசுத்தாள். 

“உடலாலா?அவன் இதழ்களை பிரிக்கவில்லை. 

இல்லை… அகத்தால். இனி எஞ்சுவதற்கு ஏதுமில்லை 

அவளிருந்த அறையில் மெல்லிய விம்மலொளி எழும்பியது.

 

***

 


 

No comments:

Post a Comment