Search This Blog

Tuesday 16 July 2024

எழுத்தாளர் ஜெயமோகனின் வெண்முரசு - மழைப்பாடல் - வழிந்திறங்கும் தாரை…

 



புவி நிற்கவில்லை. துவாபரயுகத்தில் அது சுழன்றுக் கொண்டிருந்தது. அஸ்தினபுரியின் மீது விழுந்த கனலும் கருக்கழியவில்லை. அம்பை வனயட்சியாகிறாள் அல்லது வனமே அம்பையால் நிறைகிறது. அம்பிகையும் அம்பாலிகையும் சூதப் பெண்ணான சிவையும் வியாசரின் குருதிவழி குழந்தைகளை விசித்திரவீரியனின் வாரிசாக, அஸ்தினபுரியின் அடுத்த தலைமுறைக்கான தலைமைகளாக பெற்றெடுக்கின்றனர். அதில் அம்பிகையின் மகன் திருதராஷ்டிரன் விழியிழந்தவனாகவும் அம்பாலிகையின் மகன் உடல் வெளுத்து நரம்புகள் பின்னிக் கொள்பவனாகவும் (வம்சத்தின்மீது பால்ஹீகரின் சாபம் இருந்தபடியால்) பிறக்கின்றனர். மூன்றாவதாக சிவையின் வயிற்றில் அறிவார்ந்த விதுரன் பிறக்கிறான். ஒருவன் ஊனத்தாலும் மற்றொருவன் உடற்குறையாலும் மூன்றாமானவன் குலத்தாலும் அரியணை ஏற வழியற்றவர்களாக வளர்கின்றனர். முறையான தலைமையின்றி திகழும் அஸ்தினபுரியை வலுவாக்கும் முயற்சியில் சத்யவதிக்கு இது தோல்வி முகம். போர்க்களத்தில் வெற்றிக்கான சூட்சுமத்தை கற்றுணர்ந்த நெடிந்துயர்ந்தவருக்கோ வாழ்க்கைக்கான சூத்திரங்களை செயல்படுத்த இயலாத நிலைமை. அறத்துக்கும் கடமைக்கும் நடுவே தடுமாறும் பீஷ்மர் அஸ்தினபுரியிலிருந்து கிளம்பி விடுகிறார். இம்முறை வனத்தை நோக்கி அல்ல. 

கூர்ஜரத்தில் சிந்து கடலை சந்திக்க வருகிறது. கழிமுகத்தில் இரண்டுமே ஆவேசம் கொண்டிருக்கும். சிந்துவின் நீலத் திரைச்சீலைக்குள் மதயானைகள் புகுந்து கொண்டு மத்தகம் முட்டி ஓலமிட்டு வருவதுபோல அலைகள் பொங்கி வர மொத்த நதியும் பேரருவியென கடலுக்குள் கொட்டிக் கொண்டிருந்தது. கிருத யுகத்தில் கங்கை ஓடிய பள்ளத்தின் விளிம்பிலிருக்கும் அஸ்தினபுரியை சேர்ந்த பீஷ்மருக்கு கடல் புதிது. விடியற்காலை பொழுதின் இரண்டு நாழிகை நேரம் மட்டுமே கடலுக்கு செல்வதற்குரியது என்கிறான் படகோட்டி. அவர் பயணித்த படகை நீரோட்டம் அள்ளித் துாக்கி மானஸுரா தீவுக்கு கொண்டு சென்று சேர்க்க, அவர் அங்குள்ள தேவபாலபுரம் துறைமுகத்துக்கு வந்து சேருகிறார். அது பாரதவர்ஷத்தின் மிகப்பெரிய துறைமுகம். அவர் அவ்விடம் வந்து சேருமுன்பாக கங்காமுகத்துக்கும் அங்கிருந்து பிரியதர்சினி கரைக்கும் சப்தசிந்துவைக் கடந்து மூலத்தானிநகருக்கும் அங்கிருந்து சிபி நாட்டுக்கும் ஓடிக் கொண்டிருந்தார். அகம் அவரை துரத்திக் கொண்டிருந்தது. பேரரசி சத்யவதியின் அழைப்பாணையை அறிவிப்பதற்காக ஒற்றர்களும் அவரை துரத்திக் கொண்டிருந்தனர். 

துறைமுகத்தில் மழைக்கான முன்னெடுப்பு உறுமல் போன்ற ஒலியுடன் தொடங்கியிருந்தது. கடல் அலைகளின்றி அசைவிழந்திருக்க, கடற்பாறைகள் நீருடனான விளையாட்டை நிறுத்தி விட்டு சிலைத்திருக்க, வானில் வந்திறங்கிய ஒளியாலான வேர் இருண்ட வானை இருண்ட கடல் தொடும் தொடுவான் கோட்டை வெளிச்சமிட்டு காட்ட, பாறைகள் உருள்வது போல வானமதிர, மேகங்கள் இரண்டாக பிரிந்து ஒளியாலும் ஒலியாலும் போட்டியிட, குளிர்க்காற்று பேரொலியுடன் மோதி தள்ள, பல்லாயிரம் குட்டிக் குதிரைகள் பாய்ந்து செல்வதை போல நீர்த்துளிகள் நீரிலும் கடற்பாறையிலும் மண்ணிலும் மரங்களிலும் அறைந்து செல்ல, ஆவேசமாகக் குரலெழுப்பியபடி வந்த மழை அனைத்தையும் மூடிக் கொள்கிறது. நள்ளிரவின் இந்நிகழ்வனைத்தையும் பார்த்தபடியே நிற்கிறார் பீஷ்மர். அரசியின் ஆணை அவருக்கு தெரிவிக்கப்படுகிறது.   

நீண்ட பதினேழு வருடங்களில் அஸ்தினபுரியில் இயல்பான மாற்றங்கள் நிகழ்கின்றன. அரண்மனை பெண்கள் தங்கள் மகன்களின் மீது ஆதிக்கம் செலுத்துகின்றனர். அவர்களுக்கு வேறு வழியும் இருந்திருக்காது. அம்பிகையை பொறுத்தவரை விசித்திரவீரியனுடன் கிடைத்த அரிய அந்த மணமங்கல இரவில் அவளிடமிருந்த தெளிவு, அறிவு, புரிந்துணர்வு, கல்வியால் பெற்ற ஞானம் என சுடர் விட காத்திருந்த அனைத்தும் பொசுங்கிப்போகிறது. தான் தேடுவதென்ன? எதை பெற்றால் தன் அகம் நிறையும் என்றறியாது புலம்புகிறாள். தன்னுள் எரியும் அக்னியே மகனின் கண்களை கருக்கி விட்டதாக அழுகிறாள். விசித்திரவீரியனுக்கு தாய் சத்யவதியின் ‘நீ உயிரோடிருக்கிறாய் என்ற சொல்லே ஆப்த வாக்கியம் என்றாவதுபோல பார்வையற்ற திருதராஷ்டிரனுக்கு தாயின் அணுக்கமே உலகம் என்றாகிறது. பேரூடல் கொண்ட அவன் தன் உடலும் தன் தாயும் மட்டுமே தனக்கென்று உள்ளவர்கள் என்று கருதுகிறான். வெளி அனுபவங்களற்றவன். மூர்க்கமே இயல்பானவன். அனைவரும் தானறியாமல் தன்னை எள்ளிநகையாடுவதாகவும் ஏமாற்றுவதாகவும் கற்பனை செய்துக் கொள்கிறான். அந்த கற்பனை மீதெழுந்த நம்பிக்கையில் அனைவரையும் வதைக்கிறான். அன்னையை தவிர யாராலும் அடக்கவியலாதவனாக ஆகிறான். அடங்காத விடாய்கள் கலைகளை நீரென அருந்துகின்றன. அவனை யாழ் ஏந்திக் கொள்கிறது. 

அவனை வசுமதி பெருங்காதலோடு ஏந்திக் கொள்வது அவன் நல்லுாழ். ஆனால் மணஇணைவுகள் காதலால் முடிவாவதல்ல. வருங்கால கணக்குகளே அதன் இலக்கு. மணமங்கல நிகழ்வுகள் என்பது அரசியல் சூழ்ச்சிகளுக்கும் சூட்சுமங்களுக்கும் மேலெழும் வெற்றுச் சடங்கே. உள் முடிச்சு எப்போதும் மண் தான். பெண்களை பொறுத்தவரை அது தருணம். அம்பை பங்கப்படுத்தப்படுவதாக உணர்ந்த தருணத்தை போல காந்தாரிக்கு பெருமைக் கொள்ளத்தக்க தருணம் ஒன்று வாய்க்கிறது. அது அவளுக்காக திருதன் கதவைப் பிளந்து உள்ளே வந்ததும் அவளை துாக்கி தோளில் அமர்த்திக் கொண்டதுமான தருணம். அக்காட்சியை அவள் ஆன்மா ஒருபோதும் மறக்கப்போவதில்லை. 

பீஷ்மருக்கும் சகுனிக்குமான சூட்சுமத் தருணங்களே இம்மணஇணைவை ஒருங்கிணைக்கின்றன. அல்லது வசுமதியை பெண் கேட்க செல்லும் பீஷ்மரின் வார்த்தைகளின் மீது முதற்கனலின் சிறு பொறி விழுந்திருக்க வேண்டும். “அஸ்தினபுரி இன்று பாரதவர்ஷத்தின் ஐம்பத்தாறு ஷத்ரிய நாடுகளில் தலையாயது. அதனாலேயே நாங்கள் சூழப்பட்டிருக்கிறோம். எங்கள் மன்னன் விழியிழந்தவன். நானோ முதியவன். தாங்கள் வல்லவர். எங்களுக்கு படையும் செல்வமும் உறவும் கொண்ட காந்தாரம் போன்ற நாட்டின் மணம் பெரும் நன்மை பயக்கும். அதேபோன்று காந்தாரத்துக்கும் அஸ்தினபுரி வலிமை சேர்க்கும்என்ற பிதாமகரின் வார்த்தைகளில் விழியிழந்த மன்னன், முதிய தளபதி, நீ வல்லவன் என்னும் மூன்று சொற்சேர்க்கைகளையும் சகுனியின் அகம் இணைத்துக் கொள்கிறது. இதை அவரும் அறிந்திருந்தார். அதை அவனும் உணர்ந்திருந்தான். அது மிக நுணுக்கமான அரசியல் சூழ்மொழி. 

தெரிந்தே அடுத்தடுத்து வார்த்தைகளை அடுக்குகிறார். காசி மகள்களை பலவந்தமாக துாக்கி வந்தவர், வசுமதியின் நல்வாக்குக்காக நாவை இழக்கிறார். நாக்கை, ஆன்மா குடியிருக்கும் வீட்டின் திண்ணையில் விடப்பட்ட கைக்குழந்தை என்று சுக்ர ஸ்மிருதி வகுக்கிறது. “அவள் வயிற்றில் பிறக்கும் மைந்தன் பாரதவர்ஷத்தின் மாபெரும் சக்கரவர்த்தியாவான் என்று அவளிடம் சொல்லுங்கள். மாமனின் வில்லும் அவள் அளிக்கும் மணிமுடியும் ஐம்பத்தைந்து ஷத்ரியர்களையும் அந்த மைந்தன் முன் அடிபணியச் செய்யமுடியும்.” என்கிறார். மாமனின் வில்லை முதலில் வைத்த கூர்மை. மீண்டும் ஓர் அழகிய சொல்லிணைவு. வெண்முரசு ஆசிரியர் விளையாடி விடுகிறார். 

சகுனிக்கு மூதாதையன் துர்வசு விட்டு விட்ட வந்த அனைத்தையும் அதை விடவும் வெற்றிக் கொள்ளும் வெறி இருந்தது. அது காந்தாரத்து ஓநாயின் வெறி. உணவின் பச்சை ஊன்குருதியை சுவைத்துண்ணும் உவகையை அது அடைய வேண்டுமென்றால் இன்னொரு ஓநாயை கடித்துக் கிழித்தாக வேண்டும். மற்றொன்று மகதம். அது இருநாடுகளுக்குமான பொது கணக்கு. அவன் மகதத்தின் வளர்ச்சியை கவனித்துக் கொண்டேயிருப்பவன். அது கங்கைக்கரையின் விளைநிலங்களையும் இமயத்து மலை நிலங்களையும் கங்கையின் நாவாய்த் துறைகளையும் ஒருங்கே கொண்ட நாடு. கலிங்கமும் கூர்ஜரமும் பெருநாவாய்களை கொண்டிருந்தாலும் அவை பிற நாடுகளிலிருந்தே பொருள் கொள்ள முடியும். ஆனால் மகதத்தின் இயற்கையமைப்பு வேறானது. கடலிலிருந்து பெருங்கலங்கள் வருவதற்கேற்ப அங்கு ஆழமாக ஓடும் கங்கை மகதத்துக்கு பொருள் வல்லமையை சேர்த்திருந்தது. பொருள் வல்லமையே படை வல்லமையாகவும் குலப்பெருமையாகவும் மாறும் யுகம் பிறந்துக் கொண்டிருக்கும் நிலையில் மகதத்தின் உறவு காந்தாரத்தின் தேவை. இது சகுனியின் கணக்கு. வசுமதியை மணம் செய்விப்பதன் மூலம் வெற்றிக்கான காய்களை நகர்த்த விழைபவனுக்கு அவமானமே மிஞ்சுகிறது. இந்நிலையில் அஸ்தினபுரியின் உறவு மிக பெரிய சாதகம். 


அஸ்தினபுரியின் மாமன்னர் ஹஸ்தி அவரது ஆட்சிக்காலத்தில் பதினெட்டு நாடுகளை வென்று கங்கைக்கரையி்லிருக்கும் அனைத்து சந்தைகளையும் தன் ஆட்சியின் கீழ் கொண்டு வந்திருந்தார். அதற்கு பிறகான ஆட்சிகளில் அஸ்தினபுரி ஏற்றத்தாழ்வுகளை சந்தித்திருந்தது. அதனை சமன் செய்தாக வேண்டிய நெருக்கடி அஸ்தினபுரிக்கிருந்தது. கங்கைக்கரையின் அனைத்து அரசுகளையும் கப்பம் கட்டக்கூடியவைகளாக ஆக்கிக் கொள்வதன் மூலம் அந்நாடு கடல் வணிகத்தில் நுழைய முடியும். அதன் மூலம் வரும் செல்வத்தைக் கொண்டு இமயமலை அடிவாரத்திலும் விதர்ப்பத்திலும் உள்ள அனைத்துக் காடுகளையும் ஜனபதங்களாக ஆக்க முடியும். அதன் மூலம் அடுத்த பத்தாண்டு காலத்தில் ஆரியவர்த்தம் முழுவதையும் தனது ஆளுகையின் கீழ் கொண்டு வர முடியும், கிட்டத்தட்ட சீனத்தில் இருக்கும் பெருநிலம் கொண்ட பேரரசுகளைப்போல என்பது சத்யவதியின் கனவு. வனத்தின் பெருவேழமென பீஷ்மர் இருக்கையில் சத்யவதிக்கு கனவுகளுக்கு பஞ்சமிருப்பதில்லை. ஆனால் கங்கையின் அனைத்துப் படகுகளிலும் சுங்கம் கொள்ளத் தொடங்கியிருக்கும் மகதத்தை வெல்லாமல் அவர்களால் கங்கைக்கரை வணிகத்தை தொடர முடியாது. அதற்கு காந்தாரத்தின் உதவியிருப்பின் நல்லதே. காந்தாரத்திற்கு செல்வவளத்துக்கு குறைவில்லை. குஃபாவதிக்கரையிலிருக்கும் புருஷபுரமும் அதற்கப்பால் உத்தரபதத்தின் அருகிலிருக்கும் தக்ஷசிலையும் காந்தாரத்திற்கு செல்வவளத்தை கொண்டு வந்திருந்தன. இக்கணக்குகள் இணையுமிடமே மணவிழா என்றானது. 

மலை போன்ற திருதனுக்கு கொடி போன்ற வசுமதி. கூடவே இலவச இணைப்புகளை போல தங்கைகளான பத்து சிறுமிகள் மனைவி என்னும் போர்வையில். நாம் எவற்றையெல்லாம் துறக்கும் உரிமை கொண்டிருக்கிறோமோ அவையே நம் செல்வம். மற்றவை நம்முடையவையே அல்ல, என்ற சிந்தனை ஞானம் கொண்ட வசுமதி பார்வையைத் துறந்து கண்களை கட்டிக் கொண்டு கணவனின் உலகிற்குள் தன்னை நுழைத்துக் கொள்கிறாள். ஆனால் அவனது கலாரசனைக்குள் அவளால் புக முடியாது. அந்த இடத்தை பிரகதி என்ற வைசியப் பெண் பிடித்துக் கொள்கிறாள். 

அம்பாலிகையின் மகன் பாண்டுவுக்கு பெரிய பாட்டன் தேவாபியிடம் இருந்த அதே குறைபாடு. வெயிலில் தலைக்காட்ட முடியாது. கல்வியிலும் ஈடுபாடில்லை. அம்பாலிகைக்கு மற்றுமொரு விளையாட்டு பாவை அவன். மாயநீர் யானத்தில் என் இறைவர் வந்த போது நான் அவரிடம் வல்லமையும் அழகும் கொண்ட மைந்தனுக்காக கோரவில்லை. என் அறியாமையால் எனக்கொரு விளையாட்டுப்பாவையையே கோரினேன். ஆகவேதான் நீ வந்தாய். அனைத்தும் என் பிழை என்கிறார்கள். உன்னைக் காணும் போதெல்லாம் என் நெஞ்சு விம்முகிறது. உண்மையிலேயே என் பிழையின் விளைவைத்தான் நீ சுமக்கிறாயா? நான் இப்பெரும்பாவத்துக்கு எப்படி கழுவாய் ஆற்றுவேன்?” என்று கதறுகிறாள். அவனோ நிதர்சனங்களை மன ஆழத்துக்குள் செலுத்தி சுய பகடிகளால் தன்னை சமன் செய்துக் கொள்ளும் கவிஞன். காமம் இயல்பாகவே விருப்பமானது. தான் காண முடியாத உலகை ஓவியங்களாக தீட்டிக் கொள்கிறான். 

அழகென்பது பார்க்கப்படுவதற்காக மட்டுமே உள்ளது என்பது எவ்வளவு மடமை. அது தன்னளவில் ஒரு முற்றிருப்பு அல்லவா? நான் ஓவியங்களை வரைந்ததும் என் அன்னை கேட்பாள், அவற்றை மனிதர்கள் பார்க்கவேண்டுமல்லவா என. ஏன் பார்க்கவேண்டும்? பார்ப்பதன் மூலம் ஓவியம் வளர்வதுமில்லை தேய்வதுமில்லை. சுவைகள் மண்ணில் முடிவில்லாது கிடக்கின்றன. கடலின் உப்பை நாக்கு உருவாக்கவில்லை. நாக்கால் அறியப்படாவிட்டாலும் உப்பின் முடிவின்மை அங்குதான் இருக்கும் என்கிறது, புடவியிலிருந்து தன்னை நோக்கும் அவனது தரிசனப் பார்வை. 

இப்பெருங்காதையில் அரசகுல பெண்களை திருமணத்துக்கு முன்.. பின் என இரு நேர் துண்டுகளாகப் பகுக்கலாம். திருமணத்துக்கு முன் துடிப்பும் ஞானமும் கொண்டவர்களாக இருப்பவர்கள் திருமணத்துக்கு பின் மனவளர்ச்சியற்ற அணங்கு பீடித்தவர்களாக மாறி விடுகின்றனர். துறுதுறுப்பான சூதப்பெண்ணான சிவை அந்த ஒரு நாளிரவுக்காக வாழ்க்கை மொத்தத்தையும் தொலைத்து விடுகிறாள். மகன் விதுரன் கூட அவளுக்கு சொந்தமில்லை. அப்பெண்களின் பார்வைக்குள் மனம் இருப்பதில்லை. விதி வந்ததும் சாய்வதற்காக எந்நேரமும் காத்திருக்கின்றனர். பெண்களாலான உலகில் பெரும்பாலானவர்களுக்கு கணவர்களே இருப்பதில்லை. அரச நிகழ்வுகளில் அணிகளோடு அமர்வதை தவிர வேறெந்த முக்கியப் பணியும் இல்லாத அவர்களுடைய வாழ்வில் பொறாமை, வன்மம், ஆற்றாமை, ஆங்காரம் போன்றெழும் குணங்களே சிறிதளவாவது வர்ணத்தைக் கொண்டு வருகிறது. போரற்ற நாட்டில் துருவேறும் போர்க்கருவிகளை போல அப்படியே இறந்தும் போகிறார்கள். 

மழை என்ற ஒற்றைச் சொல்லின் பல்வேறு பரிமாணங்களை இந்நாவலில் அனுபவிக்கலாம். பாலை நாட்டை சேர்ந்த காந்தாரி கூட அஸ்தினபுரிக்கு வரும்போது மழையை அழைத்து வருகிறாள். மூன்று மாதங்களாக மழை மரத்துப் போயிருந்தது அப்பூமியில் பெருமழைக்கான முந்தைய தினத்தின் மாலை முதலே காற்று அசைவிழந்திருந்தது. நள்ளிரவில் சடசடவென்று மரக்கிளை முறிந்து விழும் ஓசையை போல, மரங்களின் இலைகள் வழியாக நுாற்றுக்கணக்கான குரங்குள் தாவி வருவது போல, புற்சரங்களை போல, கனத்த நீர்த்துளிகள் பாய்ந்து வந்து தரையில் சிதறுகின்றன. மரங்களின் கிளைகள் மிரண்ட புரவிகளென எழுந்து கொப்பளிக்க, அரண்மனையின் கதவுகள் அறைந்து திறந்தும் திறந்தவற்றை மூடியும் பறந்து வந்த நீர்த்துளிகள் கூழாங்கற்களை போல எதிர்ச்சுவரை அறைகின்றன. உச்ச ஒலியில் முழங்கிய மழை மேலும் உச்சத்துக்கு செல்கையில், மழைத்தாரைகள் வெண்தழலென வெடித்து சிதறுகையில், அரசியருக்கான கூண்டு வண்டி வந்து சேர்கிறது. புது அரசியை வரவேற்பதற்காக சத்யவதி, அம்பிகை மற்றும் சேடிப்பெண்கள் வாயிலுக்கு வர, பேரோசையுடன் வீசிய காற்று எதிர்த்திசை நோக்கிச் சென்று ஏதோ எண்ணிக்கொண்டு சுழன்று திரும்பி வந்து பெண்களின் ஆடைகளை அள்ளிப்பறக்கச் செய்து பந்தலை அப்படியே தூக்கி பின்பக்கம் சரித்தது. அவர்கள் மேல் மழை அருவிபோல இறங்க, வசுமதியாகிய காந்தாரி வந்திறங்குகிறாள், கூடவே அவளது பத்து தங்கையரும். 

காந்தாரத்தின் மணற்புயல் கூட பெருமழை போன்றதுதான். மணற்புயலின் போது பெருமழை வருவது போல வானம் மங்கலடைந்து மண் கருமைக் கொள்கிறது. அனைத்துப் பாறைகளும் உயிர் கொண்டவை போல ஓலமிடுகின்றன. மலைகள் மேல் மழை போல மணல் வந்து மோதுகிறது. கடலெழுந்து வரும் இரைச்சலோடு மணற்புயல் அனைத்தையும் அறைந்தபடி சூழ்ந்துக் கொள்கிறது. மாபெரும் பட்டுத்துணி இழுப்பட்டு நகர்ந்து விடுவது போல செல்லும் புயல் உருவாக்கும் புழுதியோ இறங்குவதற்கு நாளொன்று பிடிக்கிறது. 

அம்பாலிகையின் மகன் பாண்டுவுக்கு குந்தியுடன் திருமணம் நடக்கிறது. அஸ்தினபுரியின் வரலாற்றில் அவ்வாண்டுக்கிணையானதொரு மழைக்காலமே வந்ததில்லை என்றனர் கணிகர். ஆறுமாதகாலம் மழை பிந்தியதுமில்லை. வந்த மழை மூன்று மாதம் நின்று பொழிந்ததுமில்லை. புராணகங்கையில் நீர் ஓடியதைக் கண்ட எவருமே அஸ்தினபுரியில் வாழ்ந்திருக்கவில்லை. நூற்றைம்பதாண்டுகளுக்கு முன்பு அதில் நீர்பெருகியதை கணிகர்நூல்கள் குறிப்பிட்டன. குந்தி அஸ்தினபுரி வந்து சேருகிறாள். இந்நாவலில் மழை ஒரு படிமம். 

பாண்டுவின் திருமணமும் ஒரு அரசியல் கணக்குதான். இதில் யாதவ குலத்தவளான மணப்பெண் ஏதுமறியாதவள் அல்ல. அரசு சூழ்தலை முறைப்படி ஏழு நல்லாசிரியர்களிடமிருந்து  ஆழக் கற்றவள். பெண் என்பவள் மழை போன்றவள், அனைத்து விதைகளையும் முளைக்கச்செய்து மண்ணை காடாக்கவேண்டியவள் என்று இளமையிலேயே கற்பிக்கப்பட்டவள். தசபதத்தின் தலைவரான விருஷ்ணி குலத்து சூரசேனரின் மகளாக பிறந்து மார்த்திகாவதியின் தலைவரான குந்திபோஜனிடம் மகளாக தத்துப் போனவள். நான் யாதவகுலத்தவள், அந்தப்புரத்தில் ஒடுங்கிய ஷத்ரியப்பெண் அல்ல. ஒருபோதும் என் ஆணவம் அழிவதை ஏற்கமாட்டேன், என்ற நிமிர்வு கொண்டவள். மார்த்திகாவதியின் ஸ்திரத்தின் மீதும் யாதவகுலத்தின் வளர்ச்சியின் மீதும் தான் கொண்டுள்ள அக்கறையை திருமணமாக்கிக் கொள்கிறாள். அதை வெளிப்படையாக கணவனிடம் சொல்லும் துணிவும் திமிரும் அவளுக்கிருந்தது. 

அவளின் தமையன் வசுதேவன் உறவினரான மதுராபுரி அரசர் உக்ரசேனரின் அரண்மனைக்கு வந்து சேருகிறான். உக்ரசேனனின் மகனும் வசுதேவனின் ஒத்த வயதினனுமான கம்சன் அவனுக்கான சில ஆதாயங்களோடு குந்தியை மணமுடிப்பதில் ஆர்வம் காட்டுகிறான். அவனின் பாத்திரப்படைப்புக் ஆர்வகோளாறானாகவும் சிந்தனைத் தெளிவற்று முன்பின் இடவல யோசிப்பின்றி ஆராயாத முடிவுகளெடுக்கும் அவசர கதியிலிருப்பவனாகவும் அறிமுகமாகிறது. வசுதேவனுக்கு கம்சனின் சிற்றப்பனான உத்திரமதுராபுரியின் மன்னன் தேவகரின் மகள் தேவகியின் மீது காதல். உன் தங்கையை நானும் என் தங்கையை நீயும் திருமணம் செய்துக் கொள்வோம் என்கிறான் கம்சன். இதை கேள்வியுறும்போது குந்திக்கு மகன் பிறந்திருக்கிறான். அதை கம்சனும் அறிவான். மந்தன பிரசவத்திற்காக அவள் உத்திரமதுராபுரியில் தங்கியிருப்பதும் அவனுக்கு தெரிய வருகிறது. தேவகருக்கு தன் தம்பி சுதேவனுக்கு பிருதையை திருமணம் செய்ய எண்ணம். அந்நேரம் அஸ்தினபுரியிலிருந்து அவளுக்கு மணவோலை வரவே, அவள் மார்த்திகாவதிக்கு அழைக்கப்படுகிறாள். அங்கிருந்து கிளம்பும் அவளை கம்சன் இடைநுழைந்து அவளறியாது கடத்த முயல்கிறான். அதை அறிந்துக் கொள்ளும் தருணத்தில்தான் அவள் அந்த முடிவை எடுக்கிறாள். 

மறைவிடம் செல்வதாக கூறி படகிலிருந்து குழந்தையோடு இறங்கிய பிருதை, தன்னுடன் அட்டை போல ஒட்டிக் கொண்டு வந்த காவல் பெண்ணைக் கொன்று விட்டு யமுனையின் படித்துறைக்கு குழந்தையை இறுக அணைத்துக் கொண்டு ஓடி வருகிறாள். அங்கு செம்படவர்களின் மீன்பிடிப் படகுகள் அணி வகுத்திருந்தன. படகுகளிலும் கரையில் பூட்டபட்ட கதவுகளுடன் இருந்த கட்டடங்களிலும் எவரும் இருக்கவில்லை. இறுக அணைத்த குழந்தையோடு தன் கையிலிருந்த கத்தியால் கட்டுக் கயிறுகளை வெட்டி படகுகள் அனைத்தையும் நீரோட்டத்தில் விட்டு விட்டு ஒரு படகில் ஏறிக்கொள்கிறாள். மான்தோல் போர்வையை நன்றாக விரித்து அதில் குழந்தையை படுக்க வைத்து விட்டு அமரத்தில் அமர்ந்து துடுப்பால் ஒரே உந்தலில் படகை நீரோட்டத்துக்கு நடுவே கொண்டு செல்கிறாள். அங்கிருந்தபடியே தான் தேடப்படுவதை அறிந்துக் கொள்கிறாள். அவள் கட்டறுத்து விட்ட படகுகளில் இரண்டு நீரில் மிதக்க, மூன்று கரையை அணுகிக் கொண்டிருந்தன. அவள் இருமுறை தலைத்துாக்கி அந்த படித்துறைகளைப் பார்க்கிறாள். பின்பு படகின் மீதான பிடியை விட்டு விடுகிறாள். குழந்தை படகில் அலைகளுடே எழுந்தும் அமிழ்ந்தும் செல்வதை பார்க்கிறாள். பீறிட்டெழுந்த மனதை கட்டுப்படுத்திக் கொண்டு அங்கிருந்து விலகி நீந்துகிறாள். (பிறகு அக்குழந்தை மதுராபுரிக்கு வடக்கிழக்கே அமைந்துள்ள காலவனம் என்ற சிற்றுாரைச் சேர்ந்த ராதை, அதிரதன் என்ற சூத தம்பதிகளிடம் போய் சேருகிறது) 

நவீன நாவலுக்குரிய கட்டமைப்பு இது. கர்ணனை நதியில் விடுவதற்கான தர்க்கப்பூர்வமான நிரூபணம். போலவே, மந்திரங்கள் அவளுக்கு குழந்தையை அளித்து விடுவதாக வரும் மாயாஜாலங்கள் இதிலில்லை. “நான் குந்தியல்ல, யாதவப்பெண்ணான பிருதை. என்ன நிகழ்ந்ததென்று என் அளவையறிவைக் கொண்டு உய்த்தறிய முயன்றேன். துர்வாசரின் மந்திரத்தால் நான் அவனை மயக்கி என்னருகே கொண்டுவந்துவிட்டேன். அதைவிட நான் என்னையே மயக்கி ஒரு கனவாக அதை ஆக்கிக்கொண்டேன். நான் விழைந்த ஆணின் கருவை ஏந்தியிருக்கிறேன். மலர்கள் மகரந்தங்களை ஏந்துவது போன்றது மங்கையரின் கரு என இளமையிலேயே கேட்டு வளர்ந்தவள் நான். எதற்காக அஞ்சவேண்டும்?” என்ற பிருதையின் நிமிர்வு நாவலை நவீனப்படுத்துகிறது. வசுதேவன் தன் தந்தையிடம் நான் இடையனாக மாட்டேன்என்னை மேய்ச்சல் பூமிக்கு அழைத்துக் கொண்டு சென்றால் பாம்பிடம் கையை நீட்டுவேன்என்று வாதிடுவது கூட புதுமையானதுதான். உவமைகள் உருவகங்களிலும் கூட நவீன மெருகேற்றல்கள் நிறையவே உண்டு.  நாகத்தின் முன் சிலைத்து மீசை அசையாமல் நின்று தன் இறுதிக்கணத்தை அறியும் எலியைப்போல. மயிர்சிலிர்த்து ஒருகணம் செயலற்றுவிட்டேன் என்று கூறுவதாக ஓரிடம் வரும். உண்மையிலுமே இப்படிப்பட்ட சொல்லாட்சியின்முன் நாம் திகைத்து நின்று விடதான் வேண்டியிருக்கும். வசுமதி தன் கண்களை கட்டிக் கொள்வதை வரிகளென படித்திருந்த எனக்கு வெண்முரசு அதை கவிதையென சொல்கிறது. 

மந்தண அறையில் அந்த முக்கியமான நிகழ்வு நடக்கிறது. இளவரசர்கள் இருவரும் அங்கு வருகின்றனர், சத்யவதியின் அழைப்பின்றி. விதுரன் வரவழைத்திருக்க வேண்டும். சகுனியும் அங்கிருக்கிறான். திருதன் தம்பியிடம், தம்பி, அவர் கைகளைப் பற்றிக் கொள். இந்நாடும் நம் வாழ்வும் இனி இவர் கைகளில் திகழ்வதாக… என்று பாண்டுவிடமும், “இனி எனக்கு மட்டுமல்ல, என் தம்பிக்கும் நீங்கள்தான் காவல்… என்று சகுனியிடமும் கூறுகிறான். சகுனி பாண்டுவின் கையை பற்றிக் கொள்கிறான். அஸ்தினபுரியின் முக்கிய அமைச்சர்கள் அங்கிருக்கின்றனர். சத்யவதி தன் கவலையெல்லாம் தீர்ந்ததாக கூறுகிறாள். அவளே முடிசூடும் நாள்  குறித்த பேச்சை தொடங்குகிறாள். முடி திருதனுக்கு என்பதால், பாண்டுவிடம் கருத்துக் கேட்கிறான் விதுரன். 

பாண்டு தன்னிடம் கோரும் கருத்தின் கனம் அறிந்தவனோ புரிந்தவனோ, என்னிடம் முதன்முதலாக கருத்துக் கேட்கப்படுகிறதல்லவா… என்கிறான் விளையாட்டாக. மூத்தவரின் மணிமுடியைக் காத்து நிற்பதும் அவரது எண்ணங்களுக்கு கட்டுண்டிருப்பதும் குலமுறைப்படி தங்கள் கடமை. ஆனால் இந்நாட்டின் நேர்பாதி நிலம் தங்களுக்கு உரிமை. மூத்தவர்மீது நீங்கள் மனவேறுபாடு கொண்டீர்களென்றால் எப்போது வேண்டுமென்றாலும் உங்கள் நிலத்தை நீங்கள் அவரிடம் கோரிப் பெற முடியும். தன்னாட்சி புரியவும் முடியும். அதற்காக தமையனிடம் போர் புரிவதற்கும் ஷத்ரியமுறை ஒப்புக் கொள்கிறது என்று விதுரன் நுால்நெறியை கூறிய பிறகும் விளையாட்டு வார்த்தைகளே வந்து விழுகின்றன அவனிடமிருந்து. 

“பாதி நிலமா? ஒன்று செய்யலாம்.. நிலத்தை பகலில் தமையன் ஆளட்டும். இரவில் நான் ஆள்கிறேன்எனக்கு இரவில்தான் கண்கள் தெளிவாக உள்ளனஎன்று நகைக்க, திருதனோ, என் தம்பியிடமிருந்து நான் ஏன் நிலத்தைப் பெறவேண்டும்? ஓங்கி ஓர் அறைவிட்டால் அவனே நிலத்தை எனக்குக் கொடுக்கப்போகிறான்விதுரா, நீ பேரரசியையும் பிதாமகரையும் இந்த விளையாட்டில் சேர்த்திருக்கிறாயா?” என்கிறான். பாண்டு, தன் தமையன் பாரதவர்ஷத்துக்கே மன்னராக வேண்டும் என்று தான் விரும்புவதாக கூற, விதுரன், அப்படியானால் உங்கள் தமையனிடம் பரிசில் பெற்றுக் கொண்டு இந்த நாட்டில் உங்களுக்குரிய பாதியை உங்கள் தமையனுக்கு நீரளித்துக் கொடுக்கலாமே என்று எடுத்து வைக்கிறான். அந்த பரிசில் அஸ்வதந்த வைரம். அது காந்தார கருவூலத்துக்கு நிகரான, பல்லாயிரம் புரவிகளுக்கு நிகரான வைரம். அது காந்தார இளவரசனால் சற்று முன்னர்தான் சத்யவதியிடம் வழங்கப்பட்டிருந்தது. 

தங்க பேழைக்குள் வைக்கப்பட்ட அந்த வைரத்தை திருதராஷ்டிரன் பாண்டுவிடம்  அளித்து, விலைமதிப்பற்ற இந்த வைரத்தை அளித்து உன் மண்ணை நான் விலையாகப் பெற்றுக்கொள்கிறேன் என்று விதுரன் சொல்லிக் கொடுத்த வார்த்தைகளை தெளிவில்லாமல் முணுமுணுக்கிறான்.என் நிலத்தை இம்மணிக்கு ஈடாக என் தமையனுக்குக் கையளிக்கிறேன் என்று சொல்லி நீரூற்றுங்கள்என்றபடியே விதுரன் அங்கிருந்த குவளை நீரை எடுத்து பாண்டுவுக்கு அளிக்கிறான்.   

பாண்டு நீரை ஊற்றியபடி தெளிவான குரலில்என் தமையனின் பாதங்களில் என் பங்கு நிலத்தை இம்மணிக்கு ஈடாக வைக்கிறேன். அவர் நாடும் மங்கலங்களும் பொலியட்டும். அவர் புகழ் பாரதவர்ஷமெங்கும் பரவட்டும். அவரது குலங்கள் பெருகட்டும். அவர் விரும்பியதனைத்தையும் அடைந்து நிறைவுறட்டும்என்கிறான். 

திருதராஷ்டிரன்இதென்ன நாடகம். அவன் ஒன்றும் தெரியாத மடையன். அவனை அழைத்துவந்து…” என்று முனகியபடி சொல்கிறான். பாண்டு கைகூப்பியபடி குனிந்து திருதராஷ்டிரனின் பாதங்களைத் தொட்டுதங்கள் பாதங்களில் நான் அடைக்கலம் மூத்தவரேஎன்கிறான். 

பீஷ்மர் அசையா நிலையில் அசையும் அனைத்தையும் பார்த்தபடி அமர்ந்திருக்கிறார். 

வார்த்தை விளையாட்டுகளிலும் வாழ்க்கை விளையாட்டிலும் வாசகர் ஸ்தம்பிக்கும்போது, இதென்ன பிரமாதம் என்று அடுத்தொரு நிகழ்வு. அங்கிருந்து விடைபெறும்போது கதவு மூடுவதை திரும்பிப் பார்த்தபின் பாண்டு, விதுரனை நோக்கி புன்னகைசெய்துஒவ்வொரு சொல்லிலும் நீ ஒளிவிடுகிறாய் தம்பிஅனைத்தையும் கொண்டு சென்று சேர்த்துவிட்டாய்என்கிறான். “என் கடமைஎன்கிறான் விதுரன். பாண்டுஇந்த வைரத்தை வைத்து நான் என்னசெய்யப்போகிறேன்? எனக்கு பாவைகளை வைத்து விளையாடுவதில் இனி ஆர்வமில்லை. இந்த வைரத்தை உனக்கு அளிக்கிறேன்என்று விதுரனிடம் அளிக்கிறான். 

பிரமாதங்கள் கூடுகின்றன. குருதிவழியில் வியாசரின் மைந்தனான விதுரன், நியோகமுறைப்படி மாமன்னர் விசித்திரவீரியரின் மைந்தனாக வைதிக ஏற்பு பெற்றவன். இக்கணம் வரை நான் பேரரசியின் மடியில்தான் வளர்ந்திருக்கிறேன். ஆயினும் நான் சூதன். எங்கோ அந்த அவமதிப்பு எனக்கு நிகழும் என்று என் அகம் அஞ்சிக்கொண்டுதான் இருக்கிறது என்ற பதைப்புடன் இருப்பவன். அவன் பாண்டு அளித்த  வைரத்தை வாங்கிக் கொண்டு கண்களில் ஒற்றிக் கொள்கிறான். மூத்தவரே தங்கள் அன்புக்கு நிகராக நான் எதையும் எண்ணுபவன் அல்லஎன்றபின் பெருமூச்சுடன் தலைவணங்குகிறான். 

திருதன் முடிசூடவிருக்கும் நிலையில், அஸ்தினபுரியின் வடபுலத்து ஜனபதம் ஒன்றில் புவியதிர்வு நிகழ்கிறது. விழியிழந்தவன் மன்னனானால் நாடு அழியும் என்ற ஐயம் எதிர்ப்பாக எழ, முடிசூட்டு விழா நின்று விடுகிறது. தமக்கையின் மகன் பிறந்து வளர்ந்து வரும் வரை பொறுத்திருக்குமாறு சகுனியிடம் வேண்டிக் கொள்கிறார் பீஷ்மர். அவரின் வார்த்தைக்கு கட்டுப்படுகிறான் சகுனி. பாண்டு அரசனாக, குந்தி தேவயானி அமர்ந்த அரியணையில் அமர்கிறாள். யாதவ பெண் அரியணையில் அமர்வதா என ஷத்திரியர்கள் எதிர்க்க, ஷத்திரியப் பெண்ணான மாத்ரியை அவளது தமையன் மணக்கொடை தர ஒப்புக் கொள்கிறான். அன்று திருதன் சொன்ன வார்த்தைகள் பாண்டுவின் பெருந்தன்மைக்கு சற்றும் குறைந்ததல்ல. முடிசூட்டுக்காக நிறையணிகளுடன் அமர்ந்திருக்கும் அவனிடம் விஷயம் கூறப்பட்ட போது, இருக்கையிலிருந்து கையூன்றி எழுந்து, இளையோன் அரசணிக்கோலம் பூண்டு அரியணை மேடை ஏறட்டும். வலப்பக்கத்தில் பிதாமகரின் அருகே என் பீடத்தை அமைக்கச்சொல்என்கிறான். “ஆம் அரசே. தங்கள் ஆணைஎன்றான் விதுரன். அரசே, கொலைவேழத்தின் பெருங்கருணையை ஒருவன் மட்டிலுமே அறிவான். அவன் ஒவ்வொருநாளும் அதன் காலடியில் வாழும் எளிய பாகன்என்று நெகிழ்கிறான். 

அரசனாக கானேறும் பாண்டுவுடன் குந்தியும் மாத்ரியும் உடன் செல்கின்றனர். அங்கு குந்திக்கு மூத்த மைந்தனின் பிறப்பை போலவே மூன்று மைந்தர்கள் பிறக்க, மாத்ரிக்கு இரண்டு மைந்தர்கள் பிறக்கின்றனர். தர்மன் பிறந்து விட்ட நிலையில் காந்தாரிக்கு மதங்க கர்ப்பத்தில் இருபது மாதங்கள் வயிற்றில் வளர்ந்து பெரிய குழந்தையென துரியோதனன் பிறக்கிறான். அதே நாளில் துரியோதனனுக்கு பின்னதாக பீமன் பிறக்கிறான். காட்டிலும் நாட்டிலும் தம்பியும் அண்ணனும் அடுத்தவர் வாரிசுகளை குறித்து உவகைக் கொள்கின்றனர். அவர்கள் ஒருவரையொருவர் சந்தித்துக் கொள்ளும் முன் பாண்டுவை மரணம் சந்தித்து விடுகிறது. மாத்ரியுடன் காமம் கொள்ளும் பாண்டு அது நிறைவேறுவதற்குள் இறந்து விட, தான் செல்லாமல் கணவருக்கு நீத்தாருலகில் இடமில்லை என்றும் வாழ்வுக்கும் மரணத்துக்கும் நடுவே இருக்கும் வெளியில் ஊழிக்காலம் வரை அவர் தவிக்கவேண்டும். அதை நான் எப்படி ஒப்புக்கொள்வேன்? இது என் கடமை என்றும் கருதும் மாத்ரி ஐந்து குழந்தைகளையும் குந்தியிடம் ஒப்படைத்து விட்டு சிதையேறுகிறாள். 

உண்மையில் இந்நகரம் இன்று நம் ஆணையில் இருக்கிறதா?” என்கிறாள் சத்யவதி. “இன்று இருக்கிறதுஎன்றான் விதுரன். அவள் பெருமூச்சுடன்நான் முடிவுகளை எடுத்தபின் திரும்பிப்பார்ப்பதில்லை. ஆனால் இப்போது ஒவ்வொரு கணமும் ஐயங்கள் என்னை வதைக்கின்றன. சரியானதைத்தான் செய்திருக்கிறேனா? அஸ்தினபுரியை குழந்தையைக் கொண்டு சென்று ஓநாய் முன் போடுவது போல விட்டு விட்டேனா? தெரியவில்லைஎன்கிறாள். 

“பேரரசியார் இந்த இக்கட்டை நன்கு தேர்ந்த பின்னர்தானே முடிவெடுத்தீர்கள்? என்கிறான் விதுரன். “ஆம், அனைத்தையும் சிந்தனை செய்தேன். சூதரும் ஒற்றரும் அளித்த அனைத்துச் செய்திகளையும் நுண்ணிதின் ஆராய்ந்தேன். ஆனால் அரசுசூழ்தலில் முதன்மை விதியொன்றுண்டு, அதை தவறவிட்டுவிட்டேன். ருவனைப்பற்றி எந்த இறுதி முடிவையும் எடுப்பதற்கு முன் அவனை நேரில் பார்த்தாகவேண்டும். அவனிடம் சிலமுறையாவது பேசியாகவேண்டும். எத்தனை நுணுகியறிந்திருந்தாலும் நேரில் பார்க்கையில் நம் அனைத்து கணிப்புகளும் பிழைபட்டு விடுகின்றன.” அவள் தலையை அசைத்தாள். “நான் சகுனியைப் பற்றி அனைத்தும் அறிவேன் என நினைத்தேன். அவனை நேரில் கண்டதும் என் கணிப்புகளை எண்ணி திகைத்தேன்மகாபாரதத்தின் மிக முக்கியமான கட்டம். வார்த்தைகளின் அணிவகுப்பு திகைப்புண்டாக்குகிறது. 

பாண்டு இறந்த செய்தி கேட்டு அம்பாலிகையை போல அம்பிகையும் உள்ளும்புறமும் சிதற தங்கையை அள்ளிக் கொள்கிறாள். பங்கீட்டில் துக்கம் குறைய, அவர்கள் தெளிந்த சிந்தனையோடு கானேற முடிவெடுக்கின்றனர். சத்யவதியும் அவர்களோடு இணைந்துக் கொள்கிறாள் என்பதாக மழைப்பாடல் முடிகிறது. 

மழைப்பாடல் பாரதவர்ஷத்தின் மிக பெரிய வரைப்படம். நாடுகள், நகரங்கள், நதிகள், போக்குவரத்து, புவியியல், வணிகம், வரலாறு, சமூகம் இவற்றோடு மழையும் மக்களுமாக பெருகி வரும் நாவல் இது. அல்லது பெருகி வரும் பெருநாவலின் முன்னோட்டம். பெரும் மையக்குவிவின் பெருந்தொடக்கம். அரசக்குலம், அவர்களின் உணவு உடைகள் நடவடிக்கைகள் உள்ளிட்ட அன்றாடங்கள், நுால்கள், அரண்மனைகள், அந்தபுரங்கள், லதாமண்டபங்கள் வேழக்கொட்டில்கள், குதிரைகள், மாடுகள் அவற்றின் அன்றாடங்கள் என அனைத்தையும் கண் முன் கொண்டு வந்து விடுகிறது கற்பனை. ஏற்படவிருக்கும் பெருந்துயரின் அடிப்படை மனநிலைகள் இந்நாவலில் உருவாகி வருகிறது. பெண்கள் உணர்வுகளால் நடத்தி முடித்த போர்களைதான் பின்னாளில் ஆண்கள்  சமர்க்களத்தில் நடத்துகின்றனர் போலும். மழை… மழை… மழை… பல்லாயிரம் தவளைகளின் ஒற்றை பேரொலியென தவளை வேதமொலிக்க, கங்கை கருமையாக அலைகளின்றி பளபளக்க, பெண்கள் மூவரும் கரைக்கப்பால் எங்கோ சென்று மறைகின்றனர். இப்போது அம்மூன்று பெண்களும் அஸ்வதந்த வைரத்தை பற்றியோ, மண்ணாள்வதை பற்றியோ, அரசர்களை பெற்ற பேரரசிகள் என்றாவதை குறித்தோ என்ன நினைத்திருக்க முடியும்? 

வெண்முரசு ஆசிரியர் தன்னுள் திரண்டவைகளை வெளியேற்றியதன் வழியாக காவியத்தை சமைத்திருக்கிறார்.

 

***

No comments:

Post a Comment