Search This Blog

Wednesday, 19 July 2017

“பிக்“பாஸ் – சிறு கருத்து


  அந்தரங்கம் புனிதமானது என்கிறது வழக்கு. புனிதத்தை தொன்மமாக்குவது இயல்பு. ஆனால் அந்தரங்கத்தை தொன்மவகையறாவுக்குள் சேர விடுவதில்லை நாம். வேண்டுமென்றே சில ஓட்டைகளை அனுமதிக்கிறோம். ஏனெனில் அந்தரங்கத்துக்கு சுவாரஸ்யம் அதிகம். அதை தொன்மக்கட்டுக்குள் நுழைத்து விட்டால் அவிழ்க்க முடியாமல் போய் விடும். அந்தரங்கத்தை அவ்வப்போது தொட்டுக் கொண்டால் தானே வாழ்க்கை அர்த்தப்படும்

  சாமான்யர்களின் அந்தரங்கமே இத்தனை சுவாரஸ்யம் என்றால்.. புகழ் பெற்றவர்கள்.. அதுவும் சினிமாக்காரர்களின் அந்தரங்கம் எத்தனை சுவாரஸ்யமானது..? ஒருவகையில் நமது இயலாமையின் ஏக்கம் கூட இந்த அதீத சுவாரஸ்யத்தில் கோர்த்துக் கிடக்கலாம். நம்மால் இயலாத ஒன்றை.. ஆனால் மனம் ஆசைக் கொள்ளும் ஒன்றை.. அவர்கள் வெகு இயல்பாக பெற்று விடுவதற்கு, அவர்கள் தரும் கூலியாக அவர்களின் அந்தரங்களை வெளிச்சப்படுத்துவது நமக்கு பிடித்தமானதுதான்.. ஆகவே இது குறித்து நம்மிடம் குற்றவுணர்வுகள் ஏதுமில்லை. அதேநேரம் தங்களை பரிசோதனை எலிகளாக்கும் நம்மை, அவர்கள் சட்டை செய்து யோசிப்பார்களா.. என்பதை பிக்பாஸ் அனுமதித்தால் அவர்களிடம் கேட்கலாம்.

 அந்தரங்கம் அறிதலை நிறைய வகைப்பாடுகளுக்குள் அடக்க முடியும். மெலெழுந்தவாரியாக வம்பு என்றும் சொல்லலாம். பொதுவாக இவை உத்தேசத்தின் அடிப்படையில் எழுவது.. அல்லது உத்தேசத்தையே உறுதியாக்கிக் கொள்ள விழையும் குரூரத்தின் வழியே.. வன்மத்தோடு எழுப்பப்படலாம். காலமாற்றம் காமிரா மூலம் அந்தரங்கத்தை அதி நவீன சுவாரஸ்ய விளையாட்டாக்குகிறது. பணம் பண்ணும் வித்தையாளர்கள் இந்த சுவாரஸ்யத்தின் மீது தங்களின் கோடிகளை எழுப்பிக் கொள்கிறார்கள்.

  சமூக வலைத்தளங்களில் சிலர், பிக்பாஸ் குறித்து பதிபவர்களை “பிக்பாஸ் பார்ப்பவர்கள்“ என்ற கேவலமான விளித்தலில் புதிய “பிராமணியத்தை“ உருவாக்கி.. தங்களை மேம்படுத்திக் கொள்வதும் உண்டு. அதாவது எனக்கு மற்றவர்களின் அந்தரங்கத்தின் மீது ஆர்வமில்லை என்பதாக இதனை பொருள் கொள்ளலாம். ஆனால் அவர்களே முகநுாலில் எந்தவித லஜ்ஜையுமின்றி மற்றவர்கள் டேக் செய்வது வேறு விஷயம். ஆதார் அட்டைக்குள் நம் அத்தனை அந்தரங்கத்தையும் கொட்டி குவித்த பின் இம்மாதிரி நிகழ்வுகளெல்லாம் நாமறியாமலே நகைப்பிற்கு இடமாகி விடுகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் சினேகன் என்றொரு கவிஞர் இருக்கிறார். அவர் கமலின் கேள்வி ஒன்றிற்கு “நாங்க எங்களுக்குள்ளயே பிரச்சனைய தீர்த்துக்கலாம்னு நெனச்சோம்..” என்று பதில் கூறுகிறார். அதற்கு கமல் தலையை பின்னுக்கு சாய்த்து சிரிப்பார். நமக்கான அந்தரங்களை திருடிக் கொண்டு அதிகாரம் கூட அப்படிதான் சிரிக்கிறது.

  நியாயத்தின் சரடுகள் தான் எத்தனை விதமாக மாறி நிற்கின்றன..? ஆர்த்தி என்ற கலைஞர் சராமாரியாக ஒருவரை தாக்குகிறார்.. அவரை ஃபேக்.. ஃபேக்.. என்று சொல்லி சொல்லியே தமிழின் அருஞ்சொற் அகராதியில் புது வார்த்தையை உண்டாக்கி விடுகிறார் அந்த பெண்மணி.  பார்வையாளர்களுக்கு அவரின் நியாயமற்ற போக்கு புரிகிறது. ஆனால் அவரோ தான் நினைப்பதனைத்தும்.. செய்வதனைத்தும் நியாயமே என்பதை தீவிரமாக நம்புகிறார். கலாய்ப்பது.. எனதுரிமை.. அதை எல்லோரும் லைட்டாக எடுத்துக் கொள்ள வேண்டும்.. இதுதான் நான் என்று வாதாடுகிறார். அதாவது “கலாய்க்கப்படுபவருக்கு’ இதில் கருத்து சொல்ல உரிமையில்லை என்ற வாதம் அவருடையது... இதுதான் இன்றைய நாட்டின் நிலவரமும். உறங்க செல்லும் முன் நாம் குடியிருக்கும் வீடும்.. உழுதுக் கொண்டிருக்கும் வயலும் நம்முடையதாக இருக்கலாம். உறங்கி எழுந்த வேளையில் சிலபல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் நம் அனுமதியின்றி.. அதை நம்மிடமிருந்து பறித்திருக்கலாம். இங்கும் அடுத்தவருக்கான நியாயங்கள் வெகு சுலபமாக மீறப்பட்டு விடுகின்றன. இது பிக்பாஸ் அல்ல.. வெரி(றி).. வெரி(றி).. பிக்பாஸ்.

  ஜுலியானா என்றொரு பெண்ணும் இந்த விளையாட்டில் உண்டு. அவருக்கு பணம்.. புகழை வெற்றிக் கொள்வதில் அதீத நாட்டம். எத்தனை தடைகள் வந்தாலும்.. எத்தனை அவமானங்கள் சேர்ந்தாலும்.. தான் கொண்டதே கொள்கை என நின்று ஆடும் மனப்போக்கு கொண்டவராக தோன்றுகிறது. ஈன.. மான.. ரோஷ.. காவியங்கள்.. மூச்.. இடுக்குமின்றி சிடுக்குமின்றி இவரது ஆளுமைக்குள் எளிதாக நுழைந்து விடலாம். ஆர்த்தியை போன்றவர்கள் இதைதான் சாதகமாக்கிக் கொள்கிறார்கள். பகைவர்களை கூட நேருக்குநேராக இத்தனை கடுமையாக விமர்சிப்போமா என தெரியவில்லை. அத்தனையும் பொறுத்துக் கொள்கிறார் ஜுலியானா. போதாகுறைக்கு ஆர்த்தியிடம் இழைந்து இழைந்து மன்னிப்பு வேறு கோருகிறார்.. மன்னிப்பையும் வெறுத்தொகுக்கும் ஆர்த்தி, தான் செய்த தவறென்ன என தனது நீக்கத்திற்கு பிறகு கமலிடன் வினவுவது எத்த வகையோ..? சரியோ.. தவறோ.. கொண்ட கொள்கையில் ஜுலியானாவுக்கு அத்தனை பிடிப்பு.. அதே நேரம் அனுபவமின்மை சில சமயங்களில் அவரை வென்று விடுவதால் வெளிப்படையாக தன் ஆசைகளை சொல்லிக் கொள்கிறார். பிறகு வழக்கம்போல அடிவருடிகிறார். அது, சமுதாய பிரக்ஞையின்றி ‘எரிகிற கொள்ளியில் பிடுங்கும் வரை லாபம்’ என அடிவருடி பிழைக்கும் நம் தந்திரமன்றி வேறென்ன..?

  இலக்கியத்தில் கூட அந்தரங்கத்தை தொட்டு பார்த்து விடும் எண்ணமுண்டு பலருக்கு. நான் கூற வந்தது அக இலக்கியம் பற்றி அல்ல. படைப்பு மனதை பற்றி. அங்கீகாரத்தை தேடுவது படைப்பு மனத்தின் ஒரு கூறு. நான் இலக்கியம் புனைகிறேன்.. அது எனக்கு மட்டுமே.. என்று வாதிட்டால் படைப்புகளை அவரவர் கணினிக்குள் பத்திரப்படுத்திக் கொள்ளலாம். அங்கீகாரத்தை நாடும் படைப்பாளிகளின் அந்தரங்க மனதை துலாவி எடுத்து அதற்குள் காசு பார்க்கும் வக்கிரங்களும் இங்குண்டு. சமீபத்தில் மறைந்த எழுத்தாளர் ஒருவரின் “நினைவை“ போற்றும் வகையில் சிறுகதை போட்டி ஒன்றை அறிவித்தது ஒரு மேடை ஒன்று. பரிசுத் தொகைகள் கூட அறிவிக்கப்பட்டது. ஆனால் சம்பவத்தன்று.. அப்படிதான் சொல்ல வேண்டும்… விழாவன்று.. மிக தந்திரமாக எழுத்தாளர்கள் ஏமாற்றப்பட்டனர். பரிசளிப்பு விழா.. சிறுகதை வெற்றியாளர்களை அறிவிக்கும் விழா என்றெல்லாம் தகதகத்த அறிவிப்பை விழா மேடையில் “கெட் டுகெதர்“ என்று அறிவித்தனர். சென்னை.. வேலுார்.. மதுரை.. ஆரணி.. தேனி.. பாண்டிச்சேரி.. கடலுார்.. என துாரம் கருதாது எழுத்தாளர்கள் குழுமியிருந்தனர். ஆனால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளருக்கு இது குறித்து எவ்வித தாக்கீதுமில்லை  “கூடி பிரிந்தது..“ கூட்டம். விழா முடிந்த பிறகு எல்லோரும் இது குறித்தே பேசினாலும் யாரும் பகிரங்கப்படுத்த முன்வரவில்லை.

 இன்னுமொரு உதாரணமும் கூறலாம். சமீபத்தில் பதிப்பகம் ஒன்று சிறுகதை போட்டியினை அறிவித்தது. அதில் வெற்றிப் பெற்ற கதைகளை தொகுப்பாக்கி சமீபத்திய சுதந்திர தினத்தன்று விழாவாக கொண்டாடி வெளியிட்டது. மொத்தம் பனிரெண்டு கதைகள் கொண்ட தொகுப்பு. அதில் பரிசுப் பெற்ற முதல் மூன்று கதாசிரியர்களை தவிர்த்து, மற்றவர்களுக்கு இதனை தகவலாக கூட பகிரவில்லை, விழாக் குழுவினர். தொடர்பு கொண்டதில், தொகுப்பு வேண்டுமெனில் பணம் அனுப்புங்கள் என்று கறாரான பேச்சு வேறு.

 இம்மாதிரி அசிங்கமான நிகழ்வுகள் தனிப்பட்ட ஆளுமைக்கு பங்கம் விளைவிக்கவில்லையா..? அவர்களின் அந்தரங்கத்தை தொட்டு விளையாடியிருக்கவில்லையா.. எவ்வித லஜ்ஜையுமின்றி இயல்பாக.. வெட்டி நியாயங்களோடு முகநுால் பக்கங்களை நிரப்பிக் கொண்டு உலாவும் அவர்கள் இதற்கான அதிகாரத்தை ‘பாதிக்கப்பட்டவர்களின்’ மௌனங்களின் வழியேதானே பெற்று தங்களுக்கான பிழைப்பை நடத்துகின்றனர்..? 

  காயத்ரி என்றொரு பெண்மணி. நடன கலைஞர் அவர்.  நடன இயக்குநராக இருப்பார் என கருதுகிறேன். ஆனால் அவரோ உலகம் முழுமைக்குமான இயக்குநர் போல தன்னை கருதிக் கொண்டு சுற்றியிருப்பவர்களையும் கருத வைப்பதில் வெற்றிக் கொள்கிறார். அவருக்கான அடிவருடிகளில் முதன்மையானவராக சிநேகன் என்பவர் இருக்கிறார். மற்றவர்களும் சளைத்தவர்களல்ல.. ஏனென்றால் சினிமாவுக்குள் ‘கிடந்துக்’ கொண்டேயிருக்க காயத்ரி போன்றவர்களின் தயவு தேவைப்படும். காயத்ரி நாக்கை மடக்கி விஷம் என்று சொல்லும்போதே விஷம் தெறிக்கிறது. ஆனால் அவருக்கு ‘சீராக’ என்ற தமிழ் வார்த்தைக்கு அர்த்தம் தெரியாதாம். கச்சிதமான பம்மாத்து வேலை இது. தமிழ் தெரியாது என்பதை மிக பெருமையாக சொல்லிக் கொள்ளும் அவர் “சீராக..“ என்பது ஆங்கில வார்த்தையெனில் இதே பெருமிதம் கொள்வாரா..? என்னவகையான மனோபாவம் இது.. இவற்றை பல்கி பெருக வைக்கும் நாம் அந்தரங்கசுத்தியை பற்றி அடுப்பு பற்ற வைக்கிறோம்..

 நடப்பது எல்லாமே நாடகம்தான்.. எழுதி கொடுத்த ஸ்கிரிப்ட்டைதான் நடித்துக் காட்டுகிறார்கள்.. அல்ல.. அல்ல.. அவர்களே ஏமாற்றப்படுகிறார்கள்.. அல்ல.. இதுதான் அவர்களின் இயல்பு.. என வேலையற்ற வீணர்களாக கருத்து யுத்தங்கள் நமக்குள். எல்லாமே நாடகமாக இருக்க வேண்டும் என்ற ஆசை இல்லாமலில்லை நமக்கும்.. ஹைட்ரோகார்பன் திட்டம்.. கெயில் குழாய் பதிப்பு.. கதிராமங்கலம் பதைபதைப்பு.. இவையெல்லாமே நாடகமாக இருக்க வேண்டும்.. திரை விழுந்ததும் பழைய நிலைக்கு திரும்ப வேண்டும்.. தி.ஜானகிராமனின் “காவிரி“யை காண வேண்டும் என்ற ஆசைக்கு ஓய்வேது..? 

  ஆனால் நிஜங்கள் வேறானவை. அதிகாரம்.. பணம்.. என்ற இரைகளை நோக்கி தன்முனைப்புடன் நகர்பவை. அனைத்தையும் கண்காணிப்புக்குள்ளாக்கி.. அதனை தனிமனித பணப்பைக்குள் தள்ளிக் கொண்டே இருப்பவை. அந்தரங்கம் புனிதமானதுதான்.. அதை பிக்பாஸ் மட்டுமே காவு வாங்குவதில்லை..

***

No comments:

Post a Comment