Search This Blog

Saturday, 1 July 2017

'இரவு' தொகுப்பு குறித்து திரு.பாவண்ணன்

தாய்மையின் முகங்கள்

சமீப காலமாக பொருட்படுத்தி வாசிக்கும் விதத்தில் தொடர்ந்து சிறுகதைகள் எழுதிவரும் படைப்பாளி கலைச்செல்வி. அசலான வாழ்வனுபவங்கள் சார்ந்து மானுட மன ஆழத்தைத் தொட முனையும் விழைவை அவர் கதைகள் புலப்படுத்துகின்றன. அவர் கதைகளில் சித்தரிக்கப்படும் எல்லாச் சம்பவங்களும் மிக இயல்பான முறையில் பொருந்தி, கதைகளுக்கு ஒருவித நம்பகத்தன்மையை வழங்குகின்றன. கச்சிதமாக வடிவமைக்கப்பட்ட ஆடைகளென கதைகளின் வடிவம் கலைச்செல்விக்கு மிக இயல்பாகவே கை வந்திருக்கிறது.

குடும்ப உறவுகள் சார்ந்த பரிவுமிக்க ஆய்வுநோக்கு கலைச்செல்வியின் கதைகளில் கவனிக்கத்தக்க அம்சமாக உள்ளது. இப்படிப்பட்ட ஆய்வுகளும் அலசல்களும் படைப்புகளுக்குள் நிகழும்போது எழுதுகிறவர்களின் கட்டுப்பாட்டை மீறி சில விபத்துகள் இயற்கையாக நேர்ந்துவிடுவதுண்டு. உணர்ச்சி வேகத்தில் யாராவது ஒருவரை குற்றவாளியாக நிற்கவைத்துவிடுவது ஒரு விபத்து. உறவுகளை ஒட்டிய சார்புநிலைப் பார்வையோடு படைப்பின் எல்லைக்கு அப்பால் நின்று சில சொற்களை ஆவேசத்துடன் சொல்ல முனைவது இன்னொரு விபத்து. ஒருபுறம் மாறும் சமூகச் சூழல்கள் வழங்கும் நெருக்கடிகளுக்கும் மறுபுறம் மரபான உறவுகளின் எதிர்பார்ப்புகளுக்கும் இடையில் சமநிலையைக் கண்டடைவதற்கு மாறாக சமூகத்தையும் உறவுகளையும் சாடிச்சாடி சொற்களை இறைப்பதில் வேகமாக ஈடுபடுவது மற்றொரு விபத்து. இப்படி எந்த விபத்துகளிலும் அகப்பட்டுவிடாமல் உண்மையான விழைவோடும் அந்தந்தத் தருணங்களின் அழுத்தங்களையும் கணக்கிலெடுத்துக்கொள்ளும் பார்வையோடும் உறவுகளை மதிப்பிட முனைகின்றன கலைச்செல்வியின் கதைகள்.



கலைச்செல்வியின் கதைகளில் பெண்களே பிரதான பாத்திரங்கள். ஆண் பாத்திரங்கள் கூட பெண்களின் பார்வையில் காட்சிப்படுத்தப்படுகிறார்கள். கலைச்செல்வி கண்டடைந்து காட்டியிருக்கும் பெண்கள் சலிப்பற்ற  உழைப்பாளிகள். ஊக்கம் நிறைந்தவர்கள். உண்மையான அன்பை வழங்குகிறவர்கள். அன்பை எதிர்பார்ப்பவர்கள். ஏமாற்றத்தை மறைத்துக்கொள்ளத் தெரிந்தவர்கள். வெற்றி தோல்வி கணக்கைப்பற்றி எதுவும் தெரியாதவர்கள்.

கலைச்செல்வியின் இரண்டாவது சிறுகதைத் தொகுதியாக  இரவு  வெளிவந்துள்ளது. இத்தொகுதியில் பதினைந்து சிறுகதைகள் உள்ளன. இரவு, அப்பாவும் மோட்டார்பைக்கும், பிரசவவெளி, அம்மாவும் தனமும் ஆகிய சிறுகதைகள் கலைச்செல்வியை ஒரு முக்கியமான ஆளுமையாக மதிப்பிட போதுமான சான்றுகளாக உள்ளன.

தொகுதியின் தலைப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இரவு, இதுவரை தமிழ்ச்சிறுகதை உலகம் தொட்டுப் பார்க்காத அபூர்வமானதொரு கணத்தை நம் முன் தீட்டிக் காட்டியிருக்கிறது.   மகளும் புதுமாப்பிள்ளையும் அறையில் படுத்திருக்க, வெளியே படுத்திருக்கிறாள் அம்மா. மகள் கருவாக வயிற்றில் உருவாகியிருக்கும்போதே கணவனைப் பறிகொடுத்த அபலை அந்த அம்மா. புகுந்த வீட்டினரின் ஆதரவோடு எப்படியோ மகளை வளர்த்து ஆளாக்கி திருமணம் வரைக்கும் எப்படியோ கொண்டுவந்துவிட்டாள். ஏறத்தாழ கால்நூற்றாண்டு காலம். அதுவரை தோன்றாத ஒரு விசித்திர உணர்வு, அவர்கள் இருவரும் அறைக்குள் தனித்திருக்கும் இரவு நேரத்தில் திடீரென தலைதூக்கி அவளைப் பாடாய்ப் படுத்தியெடுக்கிறது. தெரிந்தோ தெரியாமலோ அவளுடைய பார்வையில் அவர்கள் நெருங்கியிருக்கும் காட்சிகள் பட்டுவிடக்கூடாது என்பதில் அவள் மிகவும் கவனமாகவே இருக்கிறாள். அவளுடைய எச்சரிக்கையுணர்வு கூர்மை அடையுந்தோறும், அவர்களைப்பற்றிய எண்ணங்களே அவளை ஆக்கிரமிக்கின்றன. அசைவுகளாகவும் ஓசைகளாகவும் தம்பதியினரின் இருப்பை அவள் ஒவ்வொரு கணத்திலும் உணர்ந்தபடி இருக்கிறாள். அதுவே அவளை வதைக்கிறது.

அவர்கள் அறைக்குள் சென்று அடங்கிவிட்ட ஓர் இரவுக்காட்சியோடு கலைச்செல்வி கதையைத் தொடங்குகிறார். அவள் அருந்துவதற்காக எடுத்துவைக்கப்பட்ட பால் ஏடு கட்டி ஆறிவிடுகிறது. அவள் அதைத் தொடவே இல்லை. ஏடு கட்டிய பால் ஒருவகையில் நெஞ்சை முட்டி நிற்கும் பழைய நினைவுகளின் புறஅடையாளமாக தோற்றமளிக்கிறது. சத்தம் கேட்காதபடி கதவைத் திறந்துகொண்டு அடிஅடியாக எடுத்துவைத்து ஒருவரை அடுத்து ஒருவராக புதுமணமக்கள் கழிப்பறைக்குச் சென்று வருகிறார்கள்வளையல் சத்தம். கொலுசுச்சத்தம். அனைத்தையும் செவிமடுத்தபடி கண்களை மூடி உறங்குபவள்போல படுத்திருக்கிறாள் அந்தத் தாய். சட்டென ஏதோ ஒரு கணத்தில் தன் கணவனோடு தான் கழித்த இரவுகளை நினைத்துக்கொள்கிறாள். இரவுகளில் வளையல்களைக் கழற்றுவதற்குள் அவன் காட்டிய அவசரமெல்லாம் நினைவுக்கு வருகிறது. தலை ஆடிக்கு அழைத்துச் செல்ல வந்த பெற்றோருடன் அவளை அனுப்பிவிட்டு பத்து நாட்களில் இறந்துவிட்ட துக்கமும் நினைவுக்கு வருகிறது. திகட்டத்திகட்ட அவனுடன் கழித்த கடைசி இரவுதான் அவள் அவனை உயிருடன் பார்த்த இறுதிநாள். கால்நூற்றாண்டாக நினைவின் அடுக்குகளுக்குள் எங்கோ அதலபாதாளத்தில் அமிழ்ந்துபோயிருந்த அந்த இரவின் நினைவுகள் மகளும் மாப்பிள்ளையும் அறைக்குள் உறங்கும் இரவு நேரத்தில் பொங்கிப்பொங்கி வருகின்றன. அவளைப் பொறுத்தவரையில் இன்பத்தின் அடையாளமும் அந்த இரவுதான். துன்பத்தின் அடையாளமும் அந்த இரவுதான். அந்த வேதனையை அவளால் கடக்கமுடியவில்லை. தாங்கிக்கொள்ளவும் இயலவில்லை. இரவெல்லாம் உறக்கமின்றி தவித்து எப்போது உறங்கினோம் என்பதே தெரியாமல் உறங்கி, அதிகாலையில் மகள் எழுந்து காப்பி போட்டுக்கொண்டு வந்து எழுப்பும்போது எழுந்திருக்கிறாள். தாமதத்தை ஒட்டிய குற்ற உணர்ச்சியும் எரிச்சலும் அவளுக்குள் ஒரே சமயத்தில் பொங்கியெழுகின்றன.  விடியல் அனைவருக்கும் ஒருவிதத்தில் ஆறுதலே. ஆனாலும் மீண்டும் இரவு வரும்போது கவியத் தொடங்கிவிடும் நினைவுகளை எப்படி ஒதுக்குவது?

அம்மாவும் தனமும் சிறுகதையும் ஒருவகையில் அபூர்வமானதொரு தாயின் சித்திரம். கதையின் தலைப்பு, முதலில் இருவேறு பெண்களைப்பற்றிய உறவைப்பற்றிய கதை என்று எண்ணும்படி அமைந்திருந்தாலும் உண்மையில் அது ஒரே பெண்மணியைப்பற்றிய கதை மட்டுமே. அவள் மங்களத்தின் அம்மா. அந்த அம்மாவின் பெயர் தனம். எந்திரமயமான வாழ்வில் ஓர் எந்திரம் போல உழைத்து உழைத்து அவள் தன்னையும் ஓர் எந்திரமாகவே உருமாற்றிக் கொண்டுவிட்டவள். அவள் கணவனோ பெருங்குடிகாரன். அவனுக்கு ஐந்து பெண்பிள்ளைகளைத் தொடர்ந்து பெற்று வளர்க்கிறாள் அவள். ஒருபுறம் கணவன் இழைக்கும் துன்பங்கள். துரோகங்கள். மறுபுறம் தனி ஆளாக நின்று போராடி தன் பிள்ளைகளை ஆளாக்கி திருமணம் செய்துவைக்கவேண்டும் என்று அவள் கொள்கிற வைராக்கியம். தனத்துக்குள்ளிருந்து அம்மா என்னும் ஆளுமை அபூர்வமான ஒருசில கணங்களில் மட்டுமே வெளிப்படுகிறது. அம்மாவுக்குள்ளிருந்து தனம் என்னும் ஆளுமை வெளிப்படும் தருணங்களே மிகுதி. தனத்துக்குள் வெகு ஆழத்தில் அடங்கிப் போயிருக்கும் அம்மா ஆளுமை சட்டென மேல்தளத்துக்கு பொங்கியெழுந்து வெளிப்படும் கணத்தைச் சித்தரிக்கிறது அம்மாவும் தனமும் சிறுகதை.

பகல்முழுக்க ஆடுகளை மேய்த்த மங்களம் என்னும் சிறுமி பொழுது சாய்ந்ததை ஒட்டி ஆட்டை ஓட்டிக்கொண்டு வீட்டுக்குத் திரும்பும் காட்சியிலிருந்து தொடங்குகிறது சிறுகதை. வாய்க்குச் சுவையான உணவைப்பற்றி நினைக்கத் தொடங்கி, அதன் தொடர்ச்சியாக தன் அம்மாவைப்பற்றி நினைக்கத் தொடங்குகிறாள் அவள். அம்மாவின் வாழ்க்கை மகளின் நினைவுகளில் ஒரு பின்னோக்குப் பார்வையில் காட்சித் தொகுதிகளாக நகர்கின்றன. ஒரு குடிகாரனை மணந்துகொண்டு கிராமத்துக்கு வந்து வேதனையை விழுங்கிக்கொண்டு வாழ்ந்த அவள் வாழ்க்கை மேடுபள்ளங்கள் நிறைந்தது. ஆட்டுக்கிடையை மெல்ல மெல்ல விரிவாக்கி, வளர்த்து பாதுகாத்து குடும்பத்தை நடத்துகிறாள். தொடர்ச்சியாக ஐந்து பெண்பிள்ளைகள். அதனாலேயே ஐந்தாவது பிள்ளையின் பெயர் மங்களம். அவள் பிறந்த சமயத்தில் அம்மா நடுவயதைக் கடந்துவிட்டாள். மற்ற பிள்ளைகளுக்குக் கிடைத்த பாசமோ, அன்போ, அரவணைப்போ, பரிவோ எதுவுமே அவளுக்குக் கிடைக்கவில்லை. எரிச்சலையும் கோபத்தையும் மாற்றிமாற்றிக் கொட்டுகிற அம்மாவையே அவள் தினமும் பார்க்கிறாள். அந்த அச்சத்திலேயே அவளுக்குப் பேச்சு வருவதில்லை. அதனால் அவள் ஊமச்சி என்னும் பட்டப்பெயரையும் சுமக்கவேண்டியிருக்கிறது. உறங்கும்போது அம்மாவை அணைத்துக்கொண்டு உறங்கவேண்டும் என்பது அவள் ஆசை. ஆனால் பகல்முழுக்க உழைத்துச் சோர்வோடு படுக்கச் செல்லும் அம்மா அதை அனுமதிப்பதில்லை.

மங்களத்தின் நினைவுகளில் பதிந்து கிடக்கும் சம்பவங்கள் ஒவ்வொன்றுமே அழுத்தம் நிறைந்தவை. வியாதி முற்றி படுத்த படுக்கையாகக் கிடந்த அப்பாவை மருத்துவம் பார்த்து பிழைக்க வைத்தவள் அம்மா. அந்த நன்றியுணர்ச்சி கூட அவள் அப்பாவுக்கு இல்லை. இரவு நேரத்தில் கிடைக்குக் காவலிருக்கச் சென்ற இடத்தில் வேறொரு பெண்ணுடன் கட்டிலில் கொஞ்சுகிறார். அதை அம்மாவே நேருக்கு நேர் பார்த்து ஆவேசத்துடன் குமுறியபோது இரவோடு இரவாக ஓடிப் போகிறார், அக்காவின் திருமணச்செலவுக்காக வளர்த்துவந்த ஆடுகளையும் திருடிக்கொண்டு போய்விடுகிறார். திருமணம் நின்றுபோகிறது.  

மங்களத்தின் மனத்தில் இப்படி ஏராளமான நினைவுகள் பொங்கி வருகின்றன.   அனைத்தையும் அசைபோட்டபடி மெதுவாக வீட்டை நோக்கி நடக்கிறாள். அவளால் நடக்கமுடியவில்லை. அடிவயிறு வலிக்கிறது. இடுப்பும் கால்களும் துவண்டுபோகின்றன. அம்மாவிடம் சொல்ல அவளுக்கு அச்சமாக இருக்கிறது. சரியாகச் சாப்பிடமுடியாமல் ஒதுக்கிவைத்துவிட்டு, சிறுநீர் கழிக்க ஓரமாக ஒதுங்கிச் செல்கிறாள். கால்களில் வழிந்துசெல்லும் ரத்தப்பெருக்கைப் பார்த்ததும் அவளுடைய அச்சம் பல மடங்காக மாறிவிடுகிறது. அதற்குள்என்னாடி பண்ற ஊமச்சி இங்க நின்னு?” என்று கேட்டபடி அவள் அம்மாவே சத்தம் போட்டபடி அங்கு வந்துவிடுகிறாள். பாவாடையை இழுத்துப் பிடித்து மறைக்கும் மங்களத்தின் கையை ஒருகணம் தட்டிவிட்டு பார்த்ததும் அவளுக்குப் புரிந்துவிடுகிறது. அதுவரை எரிச்சலை மட்டுமே பொழிந்த அவள்அடிப்பாவி…. பெரிய மனுசியாயிட்டியாடீ…” என்று மகளை இழுத்து ஆசையோடு அணைத்துக்கொள்கிறாள். சாண வாசம். மாடு வாசம். பால் வாசம். கோழி வாசம். சோறு வாசம் என கலவையான வாசனைகள் அம்மாவிடம் அடங்கியிருக்கின்றன. பதினான்கு ஆண்டுகளாக அவள் ஏங்கிக் கிடந்த அணைப்பையும் ஆதரவையும் முதன்முறையாக உணர்கிறாள் மங்களம். அவளைத் தீண்டிவிட்டதைச் சுட்டிக் காட்டும் இன்னொரு பெண்ணிடம்அட, என்ன பண்ணச் சொல்ற….அவ ஏற்கனவே பயந்து கெடக்கறாஎன்று ஆதரவோடு இன்னும் இறுக்கி அணைத்துக்கொள்கிறாள் அம்மா. தனம் என்னும் உழைப்பாளிப் பெண்ணிடமிருந்து அம்மா என்னும் ஆளுமை முதன்முதலாக வெளிப்படுகிறது.


இந்த வெளிப்பாட்டை முன்வைத்த விதத்தில் கலைச்செல்வியின் ஆளுமை முக்கியத்துவம் கொள்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு அம்பை அம்மா ஒரு கொலை செய்தாள் என்றொரு சிறுகதையை எழுதியிருந்தார். அக்கதையில் ஒரு நடுத்தட்டுக் குடும்பத்தில் இப்படி அடுத்தடுத்து பெண்களைப் பெற்ற ஒரு தாய் இடம்பெறுகிறாள். அம்மா ஊரில் இல்லாத சமயத்தில் அக்குடும்பத்தின் கடைக்குட்டி பருவமடைந்துவிடுகிறாள். பதற்றமும் அச்சமும் அவளை ஆட்டிப் படைக்கிறது. அம்மா வந்து தன்னை அணைத்துக்கொள்ளப் போகும் கணத்துக்காகக் காத்திருக்கிறாள். இறுதிக் கட்டத்தில் அம்மா வெளியேயிருந்து வீட்டுக்குள் நுழைகிறாள். வந்ததும் அவளுக்கு அந்தத் தகவல் தெரிவிக்கப்படுகிறது. கைவிரித்து அணைக்கவரக்கூடும் என்று அம்மாவைப்பற்றிய கனவோடு அச்சிறுமி எதிர்பார்த்திருக்கும் தருணத்தில் கூர்மையான வாளைச் சுழற்றுவதுபோல சொற்களைச் சுழற்றியெறிகிறாள் அவள்.

அவள் அப்படிச் சொல்வதற்கான காரணங்கள் ஆயிரம் இருக்கலாம். அம்மா என்னும் முகமூடிக்குள் ஒளிந்திருக்கும் குரூரத்தையும் கசப்பையும் சலிப்பையும் அம்பையின் கதை அந்தக் காலத்தில் முதன்முதலாக முன்வைத்தது. இத்தனை காலமும் அந்தச் சிறுகதை வைக்கப்பட்டிருந்த  தராசின் மறுதட்டில் வைக்க முற்றிலும் தகுதியான ஒரு சிறுகதை  இல்லாமல் இருந்த குறையை கலைச்செல்வியின் இந்தக் கதை தீர்த்துவைத்துவிட்டது. காலமெல்லாம் கசப்பையும் வேதனையையும் அனுபவித்து அனுபவித்து உருக்குலைந்துபோன தனம், மங்களம் பருவமடைந்ததை முன்னிட்டு எரிச்சலையும் வெறுப்பையும் தாராளமாகக் கொட்டியிருக்கலாம். அவள் வாழ்வில் அப்படி கொட்டுவதற்கான வாய்ப்புகளே மிகவும் அதிகம். ஆனால் அவையனைத்தையும் உதறிவிட்டு அவள் நெஞ்சிலிருந்த அம்மா முதன்முறையாக சட்டென்று வெளிப்பட்டுவிடுகிறாள். காலமெல்லாம் சொற்களால் குதறியெடுத்தவள் முதன்முறையாக புன்னகையாலும் அணைப்பாலும் மங்களத்துக்குத் தைரியமூட்டிப் பேசுகிறாள்.

அப்பாவும் மோட்டார் பைக்கும் சிறுகதையிலும் ஒருவகையில் அம்மாவைப்பற்றிய சித்திரமே இடம்பெறுகிறது. அது ஒரு மகனுடைய பார்வையில் முன்வைக்கப்படும் சித்திரம் என்பது மட்டுமே வேறுபாடு. அப்பா ஒரு முரட்டு ஆண். குடும்பத்தில் மற்ற உறுப்பினர்களுடைய விருப்புவெறுப்புகளை கிஞ்சித்தும் பொருட்படுத்தாமல் முடிவெடுப்பவர். கடுமையான சொற்களையும் வசைகளையும் அம்மாவை முன்வைத்து கொட்டிக்கொண்டே இருப்பவர். தம் சொற்களாலேயே அம்மாவை ஒரு பம்பரமாக ஆட்டிவைப்பவர். காய்ச்சலில் நாலைந்து நாட்கள் படுத்த படுக்கையாக இருந்துவிட்டு எழுந்து உட்கார்ந்திருப்பவரை தற்செயலாக சந்திக்க வருகிறார் பால்யகால நண்பரொருவர். அவருடன் உரையாடும் காலைப்பொழுதிலிருந்து தொடங்குகிறது கதைவழக்கம்போல கூடத்திலிருந்து சமையலறையை நோக்கிப் பறந்து செல்கின்றன உத்தரவுகள். நண்பர்கள் தம் இளமைப்பருவத்து வீரதீர விளையாட்டுகளை ஒட்டி நிகழ்த்தும் உரையாடலின் ஒரு பகுதியின் வழியாக அப்பா அதுவரைக்கும் யாருக்கும் தெரியாமல் மறைத்துவைத்திருக்கும் அவருடைய செயலின்மையைப்பற்றிய ஒரு தகவல் அம்பலத்துக்கு வருகிறது. தன் மெளனத்தால் அப்பா அதை வேகமாகக் கடந்துவிடுகிறார். ஆனால் மகன் அதைக் கவனித்துவிடுகிறான்.

இத்தனை காலமும் வீட்டு வாசலில் இடத்தை ஆக்கிரமித்து நின்றிருக்கும் மோட்டார் பைக் அதன் பழமையின் காரணமாகத்தான் அவர் ஓட்டுவதில்லை என அவன் நினைத்திருந்த எண்ணங்கள் சரிந்துவிழுகின்றன. பொய்யான ஒரு கெளரவத்துக்காகவும் கம்பீரத்துக்காகவும் மட்டுமே அந்த வண்டியின் இருப்பை அவர் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் என்னும் உண்மை உறைக்கிறது. தன்னுடைய திறமையின்மையை வசைகளென்னும் கவசத்தால் மறைத்துக்கொண்டிருப்பவராக முதன்முறையாக அப்பாவை உணர்கிறான்.

கதையின் இறுதியில் ஒரு வெளியூர்ப்பயணம் திட்டமிடப்படுகிறது. அவனையும் அழைக்கிறாள் அம்மா. அவன் மறுக்கிறான். “ஒத்த புள்ள ஒன்ன உட்டுட்டு டூர் போவச் சொல்றியா?” என்று கேட்கிறாள் அம்மா. தனது சொந்தத் திட்டம் சிதைந்துபோகிறதே என்னும் வெறுப்பில்இன்னும் ரெண்டு பேர பெத்திருக்கவேண்டிதுதான, நானாவது நிம்மதியா இருந்திருப்பேன்என்று சலித்துக்கொள்கிறான் மகன். “இதுக்கே ஒங்கப்பாவுக்கு ஒம்பாடு எம்பாடு ஆயிபோச்சி. எல்லாம் அந்த பைக்குமாதிரிதான்என்று முணுமுணுத்தபடி செல்கிறாள் அம்மா. எந்த உத்தேசமும் இல்லாமல் அந்தச் சொல் வந்து விழுந்துவிடுகிறது. ஒரே ஒரு கணம் புன்னகையின் வழியாக விழுந்த அம்மாவின் அச்சொற்களோடு கதை முடிவுறுகிறது. இல்லற உறவு சார்ந்த அவருடைய திறமையின்மையை அவள் உள்ளூர நெஞ்சில் அடக்கிவைத்திருந்தாலும் அந்தக் கணத்தில் வெளிவந்த சொற்களில் சற்றே கசிந்துவிடுகிறது.

திறமையின்மையை தன் அதிகாரத்தின் வழியாகவும் ஆணவத்தின் வழியாகவும் மறைத்துக்கொண்டு வெளிப்படும் ஆணின் முகத்தையும் அனைத்தையும் அறிந்திருந்தபோதிலும் ஒரு சமரசமான வாழ்க்கைக்காக நெஞ்சிலேயே அடக்கிக்கொண்டு புன்னகையால் கடந்து செல்லும் பெண்ணின் முகத்தையும் உணர்த்துகிறது சிறுகதை. அப்பாவும் மோட்டார்பைக்கும் ஒருவகையில் செயலின்மையின் அடையாளங்கள். ஆனால் தம் இருப்பின் வழியாகவே தம் குறைகளை மறைத்துக்கொள்கின்றன.

தொகுதி முழுதும் ஏராளமான அம்மாவின் சித்திரங்கள் வந்தபடி உள்ளன. ஆழம் சிறுகதையில் ஆழ்துளைக் கிணற்றுக்காக தோண்டிய குழியில் பிள்ளையைப் பறிகொடுத்துவிட்டு கதறும் அம்மாவின் சித்திரத்துக்கு கலைச்செல்வியின் மொழி உயிர்கொடுத்து நிற்கிறது. பிரசவவெளி சிறுகதையில் காணப்படும் நுண்சித்தரிப்புகளோ கலைச்செல்வியின் படைப்புமொழிக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளன.

கோடையின் வெப்பத்தையும் குளிர்காலத்தின் குளிரையும் உள்ளது உள்ளபடி ஏற்றுக்கொள்வதுபோலவே வாழ்வின் மேடுபள்ளங்களையும் உணர்வின் அழுத்தங்களையும் ஏற்றுக்கொள்ளும் நெருக்கடிகளையே இந்த வாழ்க்கை பலருக்கும் வழங்குகிறது. அதையொட்டி முணுமுணுப்புகள் உள்ளபோதும் விலகியோட விதியில்லாமல் வாழ்க்கை இழுத்த இழுப்புக்கு நாமும் நகர்ந்தபடியே இருக்கிறோம். எந்தத் தட்டு சார்ந்த பெண்களாக இருந்தாலும், அந்தந்தத் தட்டு சார்ந்த நெருக்கடிகளுக்கெல்லாம் பழகி தன் தகுதியையும் இடத்தையும் அவர்கள் நிறுவிக்கொள்கிறார்கள். அவர்களைத் தேடித்தேடி அவர்களுக்கென ஒரு தனித்த உலகத்தைக் கட்டியெழுப்ப முனைகின்றன கலைச்செல்வியின் படைப்பாளுமை. தன் முயற்சியில் அவருக்குக் கிடைத்திருக்கும் வெற்றிக்கு அடையாளமாக விளங்குகிறது இத்தொகுதி.

(இரவு. கலைச்செல்வி. சிறுகதைகள். நியு செஞ்சுரி புக் ஹவுஸ், 41-ப், சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை-98. விலை.ரூ.140)



No comments:

Post a Comment