Search This Blog

Saturday, 1 July 2017

அலங்காரம்

2017 க்கான இலக்கிய சிந்தனை விருதுப் பெற்றது.
கணையாழி ஜுலை 2017ல் வெளியானது






முடிசூட்டு விழாவுக்கு இலட்சக்கணக்கில் கூட்டம் சேர்ந்திருந்தாலும் இன்னும் வருவோர் எண்ணிக்கை குறையவில்லை. அனுமர் தங்கத்தாலான குடங்களில் முடிசூட்டு விழாவுக்கான தீர்த்தங்களை நிரப்பி, ஏந்திக் கொண்டு வந்தார். அவரின் மனம் அதிகப்படியான மகிழ்ச்சியில் ஊறிக் கிடந்தது. போர் முடிந்து விட்டது. இராவணனை வென்றாயிற்று. அன்னை சீதா மீட்கப்பட்டு விட்டார். அசோகவனத்திலிருந்து சீதாதேவி சிறை மீண்ட அன்றைய தினம் அவரின் நினைவிலாடியது. மறக்க முடியாத நாளல்லவா..? அந்த தினத்தை குறித்த எண்ணங்களே அவருக்கு மனம் நிறைய களிப்பையளித்தது. கூடுதல் களிப்பாக தன் இனிய இல்லாளை அழைத்து வரும் அற்புதமான பொறுப்பை அவரிடமல்லவோ அளித்திருந்தார் அவரின் இதய தெய்வம் இராமர்.



”அன்புள்ளவனே.. நீ சீதையிடம் சென்று இராவண வதத்தை தெரிவிப்பாயாக..” என்ற மொழிகளை கேட்டதும் ஏற்பட்ட புளகாங்கிதம் இன்னமும் குறையவில்லை அனுமருக்கு.

அசோகவனத்தில் வருத்தத்தில் தோய்ந்த முகத்துடன் அமர்ந்திருந்த அன்னையை வணங்கி அத்தனை பெரிய மகிழ்ச்சியை தெரிவிக்கும் நேரம் கனிந்து வந்தது.

”அன்னையே.. ஸ்ரீராமதேவரீருக்கு பத்து மாதங்கள் இடுக்கண் தந்த இராவணன் இராமபாணத்தால் ஒழிந்து போனான்.. விபீஷ்ணனுக்கு முடி சூட்டி விட்டார்கள்..” என்கிறார் அனுமர். அன்னையின் மகிழ்ச்சி சிதறலை நேரில் காண கிடைக்கும் பேராவல் அனுமனின் முகமெங்கும் பரவியிருந்தது. எத்தனையோ செயற்கரிய சாதனைகளை செய்த அத்தீரருக்கு அம்மகிழ்வை வார்த்தைகளாக்கி விளக்க தெரியவில்லை என்பதே அவரே உணர்ந்திருந்தார்.

மகிழ்ச்சிக்கு பின் நெகிழ்ச்சி சீதை அன்னையின் முகத்தில். ”அனுமனே.. மகனே.. நானென்ன கைம்மாறு செய்வேன் உனக்கு.. இத்தகு பெரும்பேறுக்கு நான் என்ன கைம்மாறு செய்வேன்..? உனக்கு என்ன வரம் வேண்டுமோ கேள் மகனே..” என்கிறாள்.

”நானொரு பிரம்மச்சாரி தாயே.. எனக்கென்று தனிப்பட்ட ஆசைகளாக என்ன இருந்து விடப் போகிறது..? பத்து மாதங்களாக உங்களை சித்ரவதைக்குட்படுத்திய இந்த கொடிய அரக்கியரை கொளுத்த வேண்டும்.. இந்த வரத்தை எனக்கு தருவாயாக அம்மா..” என்று இறைஞ்சி நிற்கிறார்.

சீதை அன்னையின் மறுமொழிகளை இப்போது எண்ணினாலும் உரோமங்கள் சிலிர்த்து விடுகிறது. அனுமனுக்கு. ”மகனே ஆஞ்சநேயா.. இந்த அரக்கியர்கள் எனக்கு எந்த தீங்கும் செய்யவில்லை.. என் துன்பத்துக்கு என் வினையே காரணம்.. எம்பெருமான் கானகம் வந்தார்.. அவருக்கு துணை செய்யும் பெரும்பேறு வேண்டி நானும் உடன் வந்தேன்.. நாடு நீங்கி கானகம் தழுவிய நான், வந்த வேலையை மறந்து அந்த மாய மான் மீது ஏன் ஆசை கொள்ள வேண்டும்..? அதனால்தானே இத்தகு துன்பம்..? இது மட்டுமா நான் செய்த பிழை. தமையனே உலகென்று கருதி.. உண்ணாது உறங்காது தொண்டாற்றிய என் மைத்துனரை நீ மாற்றாந்தாய் மகன்.. நீ நயவஞ்சகன் என்றெல்லாம் புண்படுமாறு பேசிய என் வினைக்கான விடையே எனது இந்த நெடிய துன்பத்திற்கு காரணம்.. என் வீட்டிலேயே இருந்துக் கொண்டு எனக்கு தீங்கு செய்த கூனியை விடவா கொடியவர்கள் இந்த அரக்கியர்.. வேண்டாம் மகனே ஆஞ்சநேயா.. எனக்காக பொறுத்தருள்க..” என்றார். எத்தனை பெருந்தன்மை அன்னைக்கு. கண்கள் கசிந்தன அனுமருக்கு.

இன்று அந்த அன்புள்ளம் கொண்ட அன்னை முடிசூட்டு விழாவில் அரியணையை தன் நாதனோடு அலங்கரிப்பாள். ஆஹா.. அரண்மனைதான் எத்தனை விதமான அலங்காரங்களுடன் ஜொலித்துக் கொண்டிருக்கிறது. முடிசூட்டு மண்டபம் பொன்னாலும் மணியாலும் விதவிதமான பூக்களாலும் நிறைந்து வழிகிறது. வேத மந்திரங்களின் ஒலியால் நாடே புனிதப்பட்டுக் கொண்டிருந்தது. தாங்களுக்கான தலைவன் கிடைத்து விட்ட மகிழ்ச்சியில் குடிமக்கள் குடும்ப விழாவாக்கி பூரித்துக் கிடந்தனர். அன்னை சீதாதேவி சர்வ அலங்காரங்களுடன் அரியணையில் அமரவிருக்கும் காட்சியை மனக்கண்களில் கொண்டு வந்து மகிழ்ந்தார் அனுமர். நாட்டுமக்களும் நானும் செய்த பெரும்பேறல்லவா இது..?

போர் முடிந்த தருணத்திலேயே தன் தேவியை ஆடை அணிகலன்களோடு அலங்காரமாக பார்க்கும் ஆசை எம்பெருமானுக்கு ஏற்பட்டிருக்க வேண்டும். அதனால்தான் விபீஷ்ணரை அழைத்து “தம்பீ.. நீ சீதையை நீராட வைத்து அணிகலன்களால் அலங்கரிக்க செய்து இங்கு அழைத்து வா..” என்று சொல்லியிருந்தார். பிரிவு அத்தனை கொடுமையானது அல்லவா..? அன்னையின் மகிழ்வை காணும் வாய்ப்பு ஏற்கனவே கிடைத்து விட்டது. இப்போது எம்பெருமானின் உளக்கிடக்கையை உணர்ந்து உவகைக் கொள்ளவிருக்கும் வாய்ப்பும் கிடைக்கவிருக்கிறது. அனுமனின் மனம் துள்ளாட்டம் போட்டது.

ஆனால் கணவரை காணும் ஆவலில் தவித்த மனதுடன் இருந்த எம்பிராட்டி அன்னை சீதாதேவிக்கு அலங்காரம் செய்து கொள்ள பிரியமில்லை. மனதிற்குள் பூஜித்து வந்த கணவனின் நிஜ உருவை பார்க்கும் ஆவலே மனதை உந்துகிறது. ஆனால் அதை அப்படியே கூறினால் விபீஷ்ணர் ஏற்க மாட்டார். அதற்காக ஒரு உபாயம் செய்கிறார் அன்னை.. ”அன்பரே.. இங்கு உண்ணாமல் உறங்காமல் நான் பூண்டிருந்த என் தவக்கோலத்தை என் நாதர் காண வேண்டாமா..?” என்கிறார்.

விபீஷ்ணரோ விடாக்கண்டன்.. ”தலைவனின் கட்டளையை மீறுவது எங்ஙனம்..” என தடுமாறுகிறார். தன் பொருட்டு இனி யாரும் சங்கடப்படுவதை அந்த தாய் விரும்பவில்லை. அலங்கரித்துக் கொள்ள சம்மதம் தெரிவிக்கிறார். ஊர்வசி.. ரம்பை.. மேனகை.. திலோத்தமை போன்ற தேவமகளிர் அவரை தீண்டி, அவரின் கூந்தலுக்கு நறுமண தைலம் பூசி, சிடுக்கெடுத்து நறுமண நீரில் மூழ்க வைத்து ஆடை அணிகலன்களால் அலங்கரித்து பல்லக்கில் ஏற்றி வந்து எம்பெருமான் முன் கொண்டு வந்து நிறுத்துகிறார்கள். என் அன்னை அன்று மற்றுமொரு முறை புதிதாக பிறந்திருக்கக் கூடும். அதற்கு அவர் தன் கணவனை தொழுது நின்ற காட்சியே அல்லவா சாட்சி.

தாதி பெண்ணொருத்தி எதிரில் வந்ததும்தான் சுயநினைவு திரும்பியது அனுமருக்கு.
”வாயு மைந்தா.. தங்களை எம்பிராட்டி அழைக்கிறார்..”

”நானா.. அந்தபுரத்திற்கா..?”

”அந்தபுரத்திற்கல்ல வாயு மைந்தா.. அன்னை அதோ அங்கிருக்கும் சோலையில் தங்கள் வரவுக்காக காத்துக் கொண்டுள்ளார்..”

அனுமரின் உடலெங்கும் பரபரப்புத் தொற்றிக் கொண்டது. நாடே விழா முனைப்பிலிருக்க.. விழாவின் நாயகி தன்னை அழைக்கிறார்.. அதுவும் அவசரமாக.. தாயுள்ளம் மகனறியாததா..? இத்தகைய பெருவிழா நடப்பதற்கு நானும் ஒரு காரணம் என்று அன்னை தீவிரமாக நம்புகிறார். அந்த நன்றியை என்னிடம் சொல்ல விழைகிறார். மணிமண்டபம் சென்று விட்டால் பேசும் தருணம் வாய்க்குமோ என்னமோ என்ற பதைப்பிருக்கும் அவருக்கு.

அனுமருக்கும் சீதாதேவியை காணும் ஆவலிருக்கதான் செய்தது. அன்று சரயு நதி தீரத்தில் அன்னையைக் கண்ட பின்.. கண்ணாறக் காணும் பிறிதொரு வாய்ப்பு இன்னும் அமையவில்லை. அன்று எம்பெருமான் எத்தனை உற்சாகமும் சந்தோஷமும் பெருக்கெடுக்க தன்னை அலங்கரித்துக் கொண்டார்..? தம்பிமார்கள் இணைந்துக் கொண்டதில் ஏற்பட்ட உற்சாகம். மணித்தேரில் எம்பெருமான் அமர, இளவல் இலட்சுமணர் குடைப் பிடிக்கிறார். சத்ரூகனர் வெண்சாமரம் வீசுகிறார். பரதர் சாரதியாகி தேரை செலுத்த, தேரின் இருபாகங்களிலும் விபிஷ்ணரும் சுக்ரீவனும் யானைகள் மீதேறி வந்தனர். அங்கதன் முன்னே செல்ல இவற்றையெல்லாம் ரசித்தப்படி தான் பின்னே நடந்து வந்தது நினைவிலாடியது அவருக்கு. மாந்த உருவம் கொண்டு வானர மாதர்கள் பெண் குதிரை.. யானை.. பல்லக்குகளில் உடன் வர, தேவக்கணங்கள் மலர் மழை பொழிந்த கணத்தை எங்ஙனம் மறப்பது..? விண்மலர்களால் பூலோகம் பூ உலகாக அல்லவா மாறியது..? பதினான்கு ஆண்டுகள் தன் தலைவனை பிரிந்திருந்த குடிமக்கள் எத்தனை மகிழ்வாக அத்தருணங்களை உணர்ந்தார்களோ அதே மகிழ்வோடு அன்னையை பார்க்க காற்றாய் விரைந்தார் வாயு மைந்தன்.

சோலையின் நடுவே அன்னை சிலையாக நின்றிருந்தார். அவரது கூந்தல் எவ்வித அலங்காரங்களுமற்றிருந்தது. உடைகள் ஆடம்பரமின்றி இருந்தன. எதையோ தேடியலையும் கண்களும் சோர்ந்த முகமுமாக அனுமனை எதிர்பார்த்து  காத்திருந்தார். அனுமனுக்கு தன் பலமனைத்தும் நீர்த்துப் போனது போன்றதொரு உணர்வு. கூனியை போல வேறு யாரேனும் ஏதேனும் சதி செய்து விட்டார்களா..? கடவுளே.. இதென்ன சோதனை..? அல்ல.. இது கடவுளுக்கல்லவா சோதனை.. நான் எங்கு சென்று முறையிடுவேன்..?”

”நலமா மகனே ஆஞ்சநேயா..?” சீதையின் பாசமான விசாரணையில் நினைவுலகம் மீண்டு வந்தார் அனுமர்.

”நலம்தான் தாயே.. தாங்கள் ஏதோ பிரச்சனையில் உள்ளீர்கள் போல் உணர்கிறேன் தாயே.. யாது அம்மா..? என் உள்ளம் சோர்வடைகிறது..  தங்களை மனவருத்தத்திற்குள்ளாக்கியவர் யாராக இருப்பினும் அவரை எதிர் கொள்ள என்னுடல் பரபரக்கிறது தாயே..”

”மகனே பொறு.. எம்பெருமான் போல உனக்கும் எதிலும் அவசரந்தானா..?“
அன்னையை நிமிர்ந்து நோக்கினார் அனுமர்.

”எம்பெருமானுக்கு என்ன அவசரம் தாயே.. ஓ அன்று தங்களை அலங்கரித்து வர சொன்னதை நினைவுறுத்துகிறீர்களா..”

”இல்லையப்பா.. அதன் பின் நடந்தவற்றை குறித்து பேசுகிறேன். அன்று அய்யன் என் மீது சுமத்திய பழி இன்றும் என்னை சுமையாய் அழுத்துகிறது மகனே.. அக்னியில் குளித்து மீண்டது எம்பெருமானுக்காக.. ஆனால் எனக்காக.. எனக்காக.. எனக்கானது என்ன மகனே இவ்வுலகில்.. பொன்னும் பொருளுமா நான் விரும்பியது..? நான் கொள்ளையடித்து வைத்திருந்த எம்பெருமானின் மனம் இதுவன்று மகனே.. அதை நான் இழந்து விட்டேன்..”

”தாயே.. ஏன் இந்த விபரீத எண்ணங்கள் தங்கள் அலைக்கழிக்கிறது..?  தாங்கள் சிறிது நேரம் கண்களை மூடி எம்பெருமானை நினைத்து தியானமிருங்கள்.. தவ வலிமைக்கு முன் இம்மாதிரியான எண்ணங்கள் தவிடுபொடியாகி விடும்..”

”இல்லை மகனே.. எல்லாமே மாயைப் போலுள்ளது.. எனது தவ வாழ்வின் தொடர்ச்சியாக அன்று அய்யனை சந்திக்க ஆவல் கொண்டேன். ஆனால் எம்பெருமானுக்கு அதில் உடன்பாடில்லை என்ற தகவல் விபீஷணனால் கிடைக்கப் பெற்றதும் வேறு வழியின்றி நான் என்னை அலங்கரித்துக் கொள்ள வேண்டியதாயிற்று. ஆனால் என் தோற்றத்தை கண்டு இன்புறுவதற்கு மாறாக என்னை மனதால் நையப்புடைத்தது ஏன் மகனே..? உனக்காக இந்த யுத்தத்தை செய்யவில்லை.. இட்சுவாகு குலத்தில் பிறந்த என் மனைவியை ஒரு அரக்கன் கவர்ந்து விட்டான் என்ற பழியை தீர்க்கவே இந்த போர் என்கிறார். இந்த ஆடையணிகளை இராவணன் அளித்தானா என்கிறார். கற்புடைய மகளிர் கணவனை பிரிந்த அக்கணமே இறந்து விடுவார்கள் என்றும் இத்தனை நாட்கள் உயிர்தரித்திருந்த என்னால் பெண் குலத்திற்கே பழி உண்டாகியது என்றும் கூறியதை நீயும் அறிவாயல்லவா..? நீ இந்த இடத்தை விட்டு போகலாம்.. அல்லது சாகலாம் என்றாரே.. அதை மறந்து விட்டாயா மைந்தா.. அல்லது ஆணினத்துக்கேயான அகம்பாவத்தில் இந்நிகழ்வே மறைந்து போனதா உன் மனதிலிருந்து..?

”ஏனம்மா இதனை தவறாக புரிந்துக் கொண்டீர்கள்.. அவரின் இளவலை தாங்கள் மனம் வருந்துமாறு பேசியதாக கூறினீர்கள் அல்லவா..? அந்த சம்பவத்துக்கு பிறகு எம்பெருமான் தங்களை அன்றுதானே சந்திக்கிறார். அவரின் தார்மீக நீதிமன்றத்தில் உறவுகளுக்கோ பாசத்திற்கோ நெகிழ்வில்லை என்பது தாங்கள் அறியாததா..?”

”அப்படியாயின் அதே நீதியை மற்றவர்க்கும் அவர் வழங்கியிருக்கலாம் அல்லவா..? இலக்குமணனை அவர் மனைவியிடமிருந்து பதினான்கு நீண்ட நெடும் ஆண்டுகள் பிரித்தமைக்கு என்ன தண்டனை மகனே..? தன் சிற்றன்னையையும் இளவல் பரதனையும் மீண்டும் மனைவியாகவும் மகனாகவும் ஏற்றுக் கொள்ளுமாறு விண்ணுலகிலிருந்து இறங்கி வந்த தந்தையிடம் முறையீடு வைக்கும் தனையனுக்கு தந்தை கூறிய பதில் யாது..? பரதனை வேண்டுமானால் மகனாக்கிக் கொள்கிறேன்.. உன் சிற்றன்னை என் மனைவியாக மாட்டாள் என்ற தகப்பனாரை நான் என் அவதாரக் கடமை மறந்து தங்களின் எண்ணத்திற்கிணங்க நாடாளும் ஆவல் கொண்டதால் ஏற்பட்ட பிழை என்றுதானே சமாதானப்படுத்துகிறார். இந்த பிழையை நான் செய்யாதிருக்கும் நிலையை எனக்கருளியது என் சிற்றன்னைதானே என்றருளி இணைப்புக்கு பாலமிடுகிறார். அவ்வாறாயின் அவரின் இராவண வதம் என்ற அவதார நோக்கிற்கு நானும் பெரும் பங்களிப்பு செய்திருக்கிறேன் அல்லவா..? பிறகேன் எனக்கு அக்னி பிரவேசமும் அதை விட கொடிய வார்த்தைகளும் பரிசாக கிடைத்தன..?

”அக்னிதான் தங்களை தீண்டவில்லையே தாயே..”

”அது வேறு மகனே.. இக்கொடிய தண்டனையை எனக்களித்தமையின் நோக்கமென்ன என்பதுதான் என் கேள்வி.. உடல்.. என் உடல்.. பெண்ணுடல்.. இதன் மீது ஏற்றி வைத்துள்ள புனிதம்தானே..? என்னுடல்தான் நானா..? எனக்கென்று மனமில்லையா..? உணர்வில்லையா..?  மாதர் குலத்தை நான் மாசடைய செய்து விட்டேன் என மொழிந்தார் அல்லவா.. அதுவன்று நிஜம்.. மாதர்குலத்தின் மீது நான் பெருஞ்சுமையையல்லவா இதன் மூலம் ஏற்றி வைத்திருக்கிறேன்.. இதுதானே நிதர்சனம்..”

”தனிமையான நேரத்தில் இதனை வெளிப்படுத்தியிருக்கலாம் என்கிறீர்களா தாயே..”

”தனிமையோ.. பலர் கூடியிருக்கவோ ஒரு செயல் நடந்து விட்டது என்பதை விட அதன் உள்ளர்த்தம் உணர்த்துவது யாது என்ற மையம்தான் என்னை அலைக்கழிக்கிறது மகனே.. தங்களை காணும் ஆவலில்தான் நான் உயிர்தரித்திருந்தேன் என்ற என் வாய்மொழிகள் அவருக்கு கோப மிகுதியில் கேட்கவில்லையாயினும்.. என் மனதின் மொழி அவரறியாததா..? நான் சீதா.. இராமபிரானின் மனைவி சீதா.. உடல் மட்டுமல்ல.. மனம்.. ஆவி அனைத்தையும் அவருக்கானதாக்கியவள் என்பது அவருக்கு தோன்றவில்லையே..? என்னை பிரிந்திருந்த தருணங்களில் அவர் மனம் இடறியிருக்கும் என்று கிஞ்சித்தும் எண்ணம் எழவில்லையே எனக்கு.. நான் நிலத்தில் புழுவைப் போல தோன்றியவள்தானே என்று கீழ்மைப்படுத்தியல்லவா என்னை ஏசினார். அப்போதிருந்து நான் எனது மானிட உணர்வை விடுத்து புழுவாக என்னை உணரத் தொடங்கி விட்டேன் மகனே..”

”தாயே.. மன்னியுங்கள் எம்மை.. நீ்ங்கள் மனதை குழப்பிக் கொள்கிறீர்கள் என தோன்றுகிறது.. அரண்மணை.. ஆரண்யம்.. அசோகவனம்.. மீண்டும் அரண்மணை என்று மாறிக் கொண்டேயிருக்கும் தங்களின் புறச்சூழல்கள் தங்கள் மனதை இம்சிக்கிறது என்பதை உணர முடிகிறது தாயே..”

”இல்லை மகனே.. நீ மட்டுமல்ல.. என்னை யாருமே உணரவில்லை.. உணர்ந்துக் கொள்ளும் அவசியமோ தேவையோ ஆணினத்துக்கு இல்லை என்பதே உண்மை.  உணர தளைப்பட்டிருப்பின் எம்பெருமான் உட்பட உலகம் முழுமைக்கும் என் கற்பின் வலிமையை உணர்த்திய பிறகும், அயோத்திக்கு திரும்பும் வழியில் புஷ்பக விமானத்தில் அமர்ந்தபடி இதோ இந்த சேது அணையை பார்ப்பாயாக.. இதனை பார்த்த மாத்திரத்தில் எல்லா பாவங்களும் தொலைந்து போகும் என்றாரே என்னிடம்.. இதற்கு என்ன பொருள்..?“

”அன்னையே.. அமைதி பெறுவீர்கள்..”

”மைந்தா.. நான் செய்த பாவமென்ன..? என் மைத்துனரை புண்படுத்திய தவறுக்கு வருந்தி அவரை கொண்டே எனக்கான தீயை வளர்க்க செய்தேன்.. மானை கண்டு மயங்கிய எனக்கு அசோகவனத்தில் சிறை தண்டனை அளிக்கப்பட்டது.. பிறகும் நானென்ன பாவமிழைத்தேன்.. இன்றும் அணியாலங்காரங்களுடன் தோன்றதான் வேண்டுமா நான்..? இவைகளா நான்..? இவையா என் விருப்பம்..? என் நிலை யாருணர்வார்..? இவ்வுடலை அழகுப்படுத்தி மேலதிக சுமையை சுமக்க முடியும் என்று தோன்றவில்லை எனக்கு..”

”தாயே.. கருணைக் கடலே.. உங்களுக்கு தீங்கிழைத்த அரக்கியருக்கு கூட தீங்கிழைக்க தங்கள் மனம் விரும்பாது என்பதை நானறிவேன் அம்மா..”

நீண்ட மௌனம் இருவருக்குமிடையே நிகழ.. சோலை காற்று அதனை கலைக்கும் முனைப்புடன் தென்றலாய் வருடி தோற்றுப் போனது. இருவரின் மனங்களும் எண்ணங்களால் கனத்திருந்தன. இனி அதரங்களிலிருந்து வெளியாகும் எந்தவொரு வார்த்தையும் மிகுந்த வலியும்.. பொருளும் கொண்டவை என்பதை அன்னையால் உணர முடிந்தது. இருவருக்குமே தங்களின் பொறுப்புகளையும் கடமைகளையும் குறித்த தெளிவிருந்தது.

முடிசூட்டு மண்டபம் வேத மந்திரங்களால்  நிறைந்து வழிந்துக் கொண்டிந்திருந்தது. திரும்பிய இடமனைத்தும் மகிழ்ச்சி ஆரவாரங்கள் பொங்கி வழிந்தன. தேவர்களால்.. மனிதர்களால்.. வானரங்களால்.. நாடே நிரம்பியிருந்து. அவையில் நடுநாயகமாக அழகு நாயகன் வீற்றிருக்க.. அரசிக்குரிய அத்தனை அலங்காரங்களுடனும் அழகுடனும் அருகே வந்தமர்ந்தார் சீதாதேவி. பரதர் வெண்கொற்றக்குடை பிடிக்க.. இலக்குமணரும் சத்ருகனரும் வெஞ்சாமரம் வீச.. உலகே எதிர்பார்த்திருந்த திருநேரம் கனிந்து வர, இராமபிரானுக்கு வசிஷ்டமுனி தன் திருக்கரங்களால் திருமுடி சூட்டினார். வானவர் மலர்மாரி பொழிந்தனர் அரம்பையர்கள் ஆடினர். நாரதர் முதலானோர் பாடினர். நாடே குதுாகலத்தில் மிதந்தது.

சிங்காதனத்தை தாங்கிக் கொண்டிருந்த அனுமனின் கைகள் நடுங்கின.


***

No comments:

Post a Comment