Search This Blog

Monday, 17 July 2017

'அற்றைதிங்கள்' நாவலின் முன்னுரை

தேடல்..

பழங்குடியினரை பற்றி எழுதும் முன் திட்டம் ஏதும் எனக்கு இருக்கவில்லை. ஆனால் காடுகள் மீது தீராக்காதல் உண்டு. காடும் காட்டை சார்ந்த வாழ்வும் எப்படியானதாக இருக்கும் என்ற ஆவலுண்டு. தேடல்களை  அதை நோக்கி நகர்த்தத் தொடங்கினேன்.  கானகம் என்பதே இயற்கை.. ரசிக்கத்தகுந்தது.. மழையும் மலையும் மரங்களுமானது.. விலங்குகளுக்கானது.. என்ற சமவெளி மக்களின் புரிதல்தான் எனக்கும். அங்கிருக்கும் மனிதர்கள் பற்றி எவ்வித உணர்வுகளுமற்றே இதுவரை கடந்திருந்தேன்.. வீரப்பன் வேட்டை.. வாச்சாத்தி சம்பவம்.. போன்ற பெரிய சம்பவங்களில் காடு பின்னகர்ந்திருக்கும். மான்..மயில் போன்றவற்றின் உயிரற்ற உடல்களை கிடத்தி அதனருகில் கால்களை மடித்து சம்மணமிட்டோ.. மடித்த கால்களின் மீது கைகளை நீட்டியோ அமர்ந்து வனத்துறையினருடன் போஸ் கொடுக்கும் பழங்குடியினரை தொலைக்காட்சி அல்லது பத்திரிக்கைகளின் வழியே நிமிடக்கணக்கில் மட்டுமே அறிமுகம் எனக்கு.

இயல்பாகதானிருந்து தொடக்கம்.


பிறகு என்னை சூழ்ந்த அனுபவங்களும் கண்டுணர்ந்த ஆய்வுகளும் செய்திகளும் இயல்பின்மையை நோக்கி நகரத் தொடங்க எனக்குள் மிகை ஆர்வம் எழுந்தது. பழங்குடிகளின் வாழ்விட வளம் அரசின் ஒத்துழைப்போடு அவர்களை ஒட்டுமொத்த அழிவுப்பாதைக்கு அழைத்துச் செல்லும் ஒரு பெரும் அரசியலை சிறிது சிறிதாக உணரத் தொடங்கினேன்.

காலனிய நாட்களில் ஆங்கிலேய அரசு வனப்பகுதிகளில் அரசதிகாரத்தை நிலைநாட்டவும் பழங்குடிகளின் உரிமைகளை கட்டுப்படுத்தவும் வனச்சட்டத்தினை உருவாக்கியது. வரிகள் போடப்பட்டன. வன வளங்களை ஏற்றுமதி செய்துக் கொள்வதற்கும்.. தங்கும் சூழல்களை உருவாக்கிக் கொள்வதற்கும்.. தங்களுக்கேற்ப பயிர்களை விளைவித்துக் கொள்ளவுமாக காடுகளை அவர்கள் அசூரத்தனமாக ஆக்கிரமித்திருந்தனர். ஆரம்ப நாற்பதாண்டுகளில் பல இலட்சம் மரங்கள் அழிக்கப்பட்டு எண்பதாயிரம் மைல்களுக்கும் மேல் ரயில் பாதைகள் போடப்பட்டன. சாலையமைக்க.. சுரங்கம் தோண்டுவதற்கென இம்மக்களின் உழைப்பையும் அபகரித்துக் கொண்டது அந்நிய அரசு. காட்டுவாசி மக்கள் அழிவுக்குள்ளாயினர். இங்கு ஒன்று குறிப்பிட்டாக வேண்டும். நம் சமுதாயத்தில் காட்டுவாசி என்ற சொல் நாகரீகமின்மையை குறிப்பதாக பொருள் கொள்ளப்படுகிறது. இயற்கையோடு இயைந்து வாழும் இவர்களை நாகரீகமற்றவர்கள் என்று கூறிக் கொள்ளும் நாம், இயற்கை அழிப்பவர்கள் என்பது அவல முரண்.

சுதந்திரத்திற்கு பிறகும் பழங்குடி மக்களின் மீது அரசுக்கு பெரிய பரிவென்று ஏதுமில்லை. நாட்டின் வளர்ச்சிக்காக வெளியேற்றப்பட்டவர்களில் 40% மக்கள் பழங்குடியினத்தவர்களே. வனபாதுகாப்பு என்று பெயரில் மலைவாழ் மக்களுக்கு காடுகள் மீதிருக்கும் உரிமை மறுக்கப்பட்டு வாழ்வாதாரம் புதிராக்கப்பட்டது. தனி மனித வணிகத்திற்காக அம்மக்கள் பலியாக்கப்பட்டனர்.

உயிரினங்கள், உயிரற்ற வாழ்விட சூழலுடன் இணைந்து, இயற்கை வாழிடத்தை.. சூழ்நிலை மண்டலத்தை உருவாக்குகின்றன. பல்லுயிரின பெருக்கத்துக்கு காடு சார்ந்த சூழியல் மண்டலம் மிக அவசியமானது. காட்டின் படிநிலை அமைப்புகள் ஆற்றின் நீர்வரத்தை முடிவு செய்கின்றன. அந்நிய மரங்களும்.. அந்நிய சூழல்களும் இயற்கைக்கு விரோதமாகி போவதால் காடுகள் உணர்வுரீதியாகவும் அழிந்து போகிறது. இது மனிதனால் ஏற்படுத்தப்பட்ட செயற்கை பஞ்சமே. நுகர்வு கலாச்சாரம் நம் நுண்ணுணர்வுகளை அழித்துக் கொண்டு வருகிறது. நுகர்வின் மீது எவ்வித கட்டுப்பாடும் நமக்கிருப்பதில்லை.. அல்லது அவ்வாறான கட்டுப்பாடுகள் விதித்துக் கொள்ள தயங்குகிறோம். இவையும் காடழிப்புக்கு அல்லது பழங்குடிகள் வெளியேற்றத்திற்கு ஏதுவான சூழல்தான்.
.
பெரும்போராட்டத்திற்கு பிறகு 2006ல் வனச்சட்டம் கொண்டு வரப்படுகிறது. ஆனால் இன்னமும் இதனை நடைமுறைப்படுத்தவியலாத அளவுக்கு இங்கு சிக்கல்கள் நிலவுகின்றன. மாறாக வனத்துறையினரிடம் அதிகாரங்கள் குவிக்கப்பட்டன. கேட்போரின்றி நடக்கும் ராஜாங்கத்தின் அடிமைகளாக பழங்குடி இன மக்கள் மாற்றப்பட்டனர். சுற்றுச்சூழல் பாதுகாப்பு.. வன வள பாதுகாப்பு.. உயிர் சூழல் பாதுகாப்பு.. புலிகள் பாதுகாப்பு என கவர்ச்சியான மூடாக்குகளில் மறைத்துக் கொண்டாலும் வனவாழ் மக்களை வெளியேற்றுவதே அனைத்து திட்டங்களின் நோக்கமும்.

பழங்குடிகளுக்கான அடிப்படை வசதிகள் மறுக்கப்பட்டும்,. அதே நேரம் வனப்பகுதிகளில் சுரங்கம் தோண்டுதல்.. மரம் வெட்டுதல் போன்ற பணிகளுக்கு அனுமதியும் அளிக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து வனப்பகுதிகள் குறுகியும். வன மாப்பியாக்கள் பெருகியும் போயினர். இந்த இரைச்சலில் பழங்குடி மக்கள் புலிகளுக்கு எதிரானவர்கள் இல்லை என்பதும் காலம் காலமாய் வன விலங்குகளுடன் அவர்கள் இரண்டறக் கலந்து வாழ்பவர்கள் என்ற உண்மையும் எடுபடாமல் போனது. உண்மையில் நேர் எதிராய் நிறுத்தப்படும் பழங்குடி மக்களும் பாவம்.. புலிகளும் பாவமே.  

பழங்குடி மக்கள் ஒரு புறம் அரசு சார்ந்த அமைப்புகளின் தாக்குதலை எதிர் கொள்ளும் சூழலில் மற்றொரு புறம் வன  சுற்றுச்சூழல்வாதிகள் மற்றும் வன விலங்கு ஆர்வலர்கள் என தங்களை பிரதிநிதிதுவம் செய்யும் அரசு சாரா தொண்டு நிறுவனங்களின்  தாக்குதலையும் எதிர் கொள்ள வேண்டியுள்ளது. மண்ணை விட்டு விரட்டப்படும் மனிதனுடன் கலாச்சாரத்தின் வேர்களும் பிரித்தெடுக்கப்படுகிறது. ஆயிரமாயிரம் ஆண்டுகால பழங்குடி மொழியும்  அவனோடு சேர்ந்து அழிந்து போகிறது.

சட்டமும் அரசாங்கமும் காக்க தவறிய நீதியை கையிலெடுப்பதாக வாக்குறுதிகளை கொடுக்கிறது தீவிரவாதம்.. ஆட்சியாளர்கள்.. அதிகார வர்க்கத்தினர்.. நீதித் துறை.. இவற்றின் மீதான நம்பிக்கை விடுபடும் இடத்திலிருந்து தீவிரவாதம் தொடங்குகிறது எனலாம்.

நாட்டில் பன்முகதன்மை நீங்கி கொண்டிருக்கும் தருணமிது. வளர்ச்சி என்ற பெயரில் விவசாயம்.. சிறு தொழில்கள் நசுக்கப்பட்டு அவை நிலமாகவும் வணிகமாகவும் பெரு முதலாளிகளுக்கு கை மாற்றப்பட்டு வருகிறது. பன்னாட்டு வணிகமும், உலக வங்கி நிதியமும் உள்நாட்டு வர்த்தககத்தோடு.. உள் விவகாரங்களோடு.. உள்அரசியலோடு.. தன்னை இணைத்துக் கொண்டு நவீன காலனீயவாதத்தை உண்டு பண்ணுகிறது. வலியது வாழத் தொடங்க, எளியவைகள் வீழ்ச்சியுற்று போகின்றன. அறமற்ற செயல்கள் எவ்வித குற்றவுணர்வுமின்றி அரங்கேறுகின்றன.  விழிப்புணர்வுகள் போதைக்குள் அடங்கி தெருக்களில் மயங்கிக் கிடக்கிறது. பெண்களை அடிப்படைவாதத்திற்குள் முடக்குகிறது. இந்நிலைகள் மாற வேண்டும்.. மாறிதான் ஆக வேண்டும். இல்லாவிடில் சொந்த நாட்டின் ஏதிலிகள் என்ற ஒரு புது மனித திரள் உருவாகி விடும்.

அடுத்தது கண்ணம்மா. பாரதியின் துடிப்பான இயல்பும்.. சமுதாய அறமும் அவனது விளிப்பான “கண்ணம்மா“வை ஒரு அகப்பொருளாக என்னுள் ஆழ்த்தியிருந்தது. என்னுடைய கதைகள் சிலவற்றில் கண்ணம்மாவை பெயராகவும் சிலவற்றில் கதாபாத்திரமாகவும் இழுப்பதுண்டு நான். இந்த நாவலின் நாயகி பரணியும் “கண்ணம்மாவின்“ வெளிப்பாடுதான். பரணி பெண்ணல்லவா.. சமுதாய அழுத்தங்கள் அவளுக்கு நிறையவே உண்டு. அகமும் புறமும் அவளை அலைக்கழித்தாலும் இரண்டுக்குமான சமநிலைக்கு தனது பணியினை சாதகமாக்கி நாவலில் பயணிக்கிறாள் பரணி.. உடன் குணாவையும் செராவையும் அழைத்துக் கொண்டு.

யாவரும் பதிப்பகம் ஜீவகரிகாலன் அவர்களை கணையாழி இதழ் வாயிலாக அறிவேன். பிறகு முகநுால் வழியாக அறிமுகம் தொடர்ந்தது. அவரின் மொழியும் எனது மௌன மொழியை ஒத்து “கண்ணம்மா“வாக .இருந்ததில் வியப்பெனக்கு. அதுவே நட்பைக் கூட்டியது. சிறுகதைகள் தொகுக்கலாமா.. என்றார். நாவல் எழுதிக் கொண்டுள்ளேன் என்றேன். தொகுப்பில் போடுமளவுக்கு சிறுகதைகள் என் வசமிருப்பினும் நாவல் எழுதுகிறேன் என்று கூறிய நொடி என் வாழ்வின் முக்கியமான தருணம் என நினைக்கிறேன். எழுதி முடிங்க.. போடலாம் என்றார்.

இந்த இடத்தில் ஒன்றை குறிப்பிட்டாக வேண்டும். இந்த நாவலுக்கான தகவல்களை திரட்டி ஒன்றரை ஆண்டுகள் கழிந்தும் என்னால் அவற்றை திரள்வாக கொண்டு வர இயலவில்லை. காரணம் மிகையான தகவல்கள். அவை கலைப்படைப்பை வெற்று செய்திகளாகி விடும். திருச்சியைச் சேர்ந்த இலக்கிய விமர்சகர் திரு.வி.நா.சோமசுந்தரம், அவர்களும் இதே கருத்தையே வழிமொழிந்தார்கள்.    

இத்தனை விழி பிதுங்கலை உணர்ந்தும் துணிச்சலாக.. அப்படிதான் கூற வேண்டும்… துணிச்சலாக ஒப்புக் கொண்டேன்.

ஜீவாவும் நம்பிக்கையாக ”முடிச்சிடுலாம்..” என்றார்.

திகைத்து தடுமாறி நாவலுக்குள் நுழைய தயங்கிய எனக்கு அந்த வார்த்தைகள் உற்சாகத்தை உண்டாக்கின. கண்ணம்மா பரணியாக உருப்பெற்ற தருணமது. கண்ணம்மாவுக்குள் உறைந்தேன். அகமாக வாழ்ந்தேன். அறங்கள் வெளிச்சமிட்டன. போக வேண்டிய பாதைகள் புலப்படத் தொடங்கின. வார்த்தைகளை வாழ்க்கையாக்கினேன். தினசரி செய்திகளுக்குள் கையாலாகதத்தனத்துடன் சோர்ந்துப் போன மனம் பரணியின் வார்த்தைகளில் உயிர் பெற்றது.

ஜீவாவுக்கு அனுப்பி வைத்தேன். அவருக்கும் குடும்பம் சார்ந்த ஒரு நெருக்கடி அப்போது. மீறி படித்திருந்தார். நேரில் வருகிறேன்.. என்றார். பிறகு அலைபேசியில் ”ஏன்.. பரணியே பேசலாமே..” என்றார்.

யோசனையோடு “சரி..“ என்றேன். அதாவது கதைச்சொல்லி ஆசிரியராக இல்லாமல் கதாபாத்திரமாக இருக்கட்டுமே என்பது அவர் தரப்பு.

கதைக்குள் நுழைந்து விட்டால் வெளியே வருவது சிரமமாகுமே..” என்றேன். களிமண் சேற்றில் கால் பதித்த கொக்கு போல என்னை இழுத்துக் கொண்டுதான் வர வேண்டியிருக்கும் என்ற பயம் எனக்கு.

”எழுதுங்க.. இன்னொரு பரிமாணம் கிடைக்கும்..” என்றார். தீவிரமான இளைஞனின் துாண்டுதல் அது.

புரிந்துக் கொள்ள முடிந்தது என்னால்.

எழுதவே இத்தனை சிரமமெனில், வாழ்பவரின் வலி எத்தகையதாக இருக்கும்..?

பதிப்பித்துக் கொடுத்த “யாவரும்“ பதிப்பகக் குழும உறுப்பினர்கள் திரு.ஜீவகரிகாலன், ………………………. ,…………………….. .., ………………….... ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றி. சம்பிரதாயமல்ல. நன்றியை நன்றி என்றுதான் உரைக்க வேண்டுமென்பதால்.. நன்றி.  குடும்பமுமாக மாறி போனதால் கூடவே அன்பும்.

ஒத்துழைப்பும் உரிய நேரமும் வாய்க்கப் பெற வைத்த பாசமான என் குடும்பம் எனக்கு வரம்.


No comments:

Post a Comment