Search This Blog

Friday, 9 November 2018

கற்பின் நீட்சி (கட்டுரை)

“குறி“ அக்டோபர் - டிசம்பர் 2018 இதழில் வெளியானது.


சமீபத்தில் ஒரு நிகழ்வு நடந்தது. தொலைக்காட்சி நடிகை ஒருவரின் காதலரான(?) ஒருவர் எரிவாயு ஊற்றி தன்னை எரித்துக் கொண்டு மாய்ந்து போனார். திரைப்பட உதவி இயக்குநர் என்று அறியப்படும் அவருக்கு சமூகம் கொடுத்த முகவரி “நடிகையின் காதலன்“ என்று.
தொலைக்காட்சி செய்தி சேனல்கள் ‘நடிகையின் காதலன் தற்கொலை… நடிகை தலைமறைவு என்று அதிமுக்கியமான இந்த செய்தியை  தொடர்ந்து ஒளிப்பரப்பிக் கொண்டிருந்தன. யூ ட்யூப் சேனல்கள் எந்த தரவரிசைக்குள்ளும் அடங்காதவை என்பதால், அந்த நடிகையை மிக கேவலமாக சித்தரித்து, அவர் அந்த நபருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ஒருமையில் விளித்து முடிந்தளவு அருவருப்புடன் செய்தியை பரப்பிக் கொண்டிருந்தது. இறந்த நபரின் குடும்ப உறுப்பினர் ஒருவர் “அவ வீடியோவ எடுத்து வுட்டுருவேன்..“ என்று இறந்த நபரின் குடும்ப உறுப்பினர் ஒருவர் மிரட்டிக் கொண்டிருந்தார். அந்த நபரின் அசிங்கமான பேட்டியை தரமான(?) சேனல்கள் கூட மாறி மாறி ஒளிப்பரப்பிக் கொண்டிருந்தன.

இது குறித்து சக நடிகை ஒருவரிடம் கருத்துக் கேட்கப்பட்டது. “ஒருவரை பார்க்கும்போதே நல்லவரா.. கெட்டவரா என்று என்னால் கணித்து விட முடியும். அந்த நடிகையை எனக்கு அறிமுகமில்லையென்றாலும் அவர் மீது எனக்கு நல்ல அபிப்பிராயம் இல்லை. ஒருவர் வாய்ப்பு வாங்கித் தருகிறேன் என்று சொன்னால் உடனே பின்னால் சென்று விடுவதா..? ஆண்கள் அப்படிதான் சொல்வார்கள். நாம்தான் புத்தியோடு செயல்படவேண்டும். முதலில் அந்த நடிகை அப்படி சொல்வதையே நான் நம்பவில்லை. சும்மா ப்ளா.. ப்ளா.. என்று இடதுகை விரல்களை மடக்கி மடக்கி விரித்து தீர்ப்பெழுதினார்.

இந்த சம்பவத்திற்கு முன்பாக நிகழ்ந்த மற்றொரு உண்மை நிகழ்வில் ஒரு பெண், காதலுக்காக, தான் பெற்ற குழந்தைகளையே கொன்றிருந்தார். அந்த பெண்ணோடு, இந்த நடிகையை ஒப்பிட்டு மீடியாக்கள் ஜாலியாக பேச முற்பட, தன்னை நோக்கி நீளும் பிரச்சனைகளின் வீரியம் தாங்காமலோ அல்லது நியாயம் வேண்டியோ அந்த நடிகை காவல்துறையில் புகார் அளித்து விட்டு வரும்போது மீடியாக்கள் ஆயிரத்தெட்டு மைக்குகளுடன் அவரை சூழ்ந்துக் கொண்டன.

அவர் அழுதுக் கொண்டே தனது கதையை சொல்ல ஆரம்பித்தார். கணவனை விட்டு பிரிந்து வாழும் தனக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும், பெற்றோர், உடன்பிறப்பு என யாருமற்ற நிலையில் வாழ்வதாகவும் கூறினார். இறந்துபோன நபர் தன்னை விரும்பியதாகவும், தானும் பாதுகாப்புக் கருதி அவரை திருமணம் செய்துக் கொள்ள சம்மதித்ததாகவும், பிறகு அந்த நபரின் எண்ணற்ற பெண் தொடர்புகள் தெரிய வர திருமண முடிவிலிருந்து பின் வாங்கிக் கொண்டதாகவும் கூறினார்.

ஒரு செய்தியாளர், ”நீங்கள் அவரை மோசடி செய்தததால்தானே இறந்துப் போனார்..?” என்றார்.

”அவரிடம் என்ன இருக்கிறது..? நான் மோசடி செய்ய..? பணமா.. நல்ல பதவியா.. சமூக அந்தஸ்தா..? அவர் நடவடிக்கைகள் பிடிக்காதபட்சத்தில் விலகி வந்து விட்டேன்.. இதில் என்ன மோசடி உள்ளது..? என் தரப்பை நான் சொல்லக் கூடாதா..? அது அத்தனை குற்றமா..?” என்றெல்லாம் அழுதார். கேள்வி எழுப்பியவர்களின் வயதுகள் சராசரியாக இருபத்தைந்திருக்கலாம். இதில் பெண்களும் அடக்கும்.



இப்படியான நீண்ட அந்த தெருமுனைப் பேட்டியில் அவரை நோக்கி நீளும் அத்தனை ஒலிவாங்கிகளும்  பெண் என்பவளுக்கான எல்ல விழுமியங்களையும் (?) மீறியவளாக அவளை சித்திரிப்பதில் அதீத முனைப்புக் காட்டியது. இப்படியெல்லாம் ஒரு ஆண் சொல்ல வேண்டிய அவசியம் உள்ளதா..?

அந்த பெண் செய்தது தவறு.. சரி என்பது குறித்தல்ல விவாதம். தவறு, சரிகளை நோக்கிய கற்பிதங்களை சமூகம் எத்தனை ஆழமாக பதிய வைத்திருக்கிறது என்பதையும் அத்தனையும் பெண்களை நோக்கியே நீள்கின்றன என்பதையும் இங்கு வேதனையாக பகிர வேண்டியுள்ளது. சொந்த நாட்டில், சொந்த மாநிலத்தில், சொந்த ஊரில், ஏன் சொந்த வீட்டில் கூட ஒரு பெண், பெண் என்பதற்கான நியாயங்களிலிருந்து (?) விலகி விட முடியாது.  அன்பாகவும் அனைத்துமாகவும் அவளை ஏந்தும் குடும்பம் கூட, தன்முனைப்போடு இயங்க தளைப்படும் பெண்களை முடிந்தவரை முடக்கி போட்டு விடுகிறது. சமூகம் நீதியரசர்களாக மாறி அவளை குதறிப் போட்டு விடுகிறது. பதவியோ, படிப்போ, அறிவோ, அல்லது இவை எல்லாமுமோ கொண்டிருந்தாலும் பெண், பெண்ணாக மட்டுமே பார்க்கப்படுவதன் நீட்சிதான் அந்த நடிகைப் பெண்ணை நோக்கி நீளும் ஒலிபெருக்கிகள். கற்பிதம் செய்யப்பட்ட நெறிகளிலிருந்து(?) பிறழ்ந்தவளாக, சமுதாயத்தின் அருவருப்பான கரங்களால், அதீத வெறியோடு குத்திக் கிழிக்கப்பட்ட முகத்தோடு நின்றுக் கொண்டிருந்தாள் அவள்.

இதன் பின்னிருக்கும் காரணியாக எதை சொல்வது..?

அவள் குறிப்பிடத்தக்க அவயங்களை தாங்கிய உடலை கொண்டிருக்கிறாள் என்பதை தவிர்த்து? அது மட்டுமே அவளின் அடையாளம். அவளின் அகம், புறம் என்னவாக இருப்பினும், அவள் ஆண்களின் தேவைகளை நிறைவேற்றும் உடலைக் கொண்டவள். பெண்கள் படுக்கை தேவையின்பொருட்டு பாதுகாக்கப்பட வேண்டியவர்கள். தியாகம் செய்ய வேண்டியவர்கள். வலிந்து எடுக்கப்பட்டாலன்றி, விரும்பிக் கொடுக்கும் தகுதியற்றவர்கள் என்பதான நியதிகள் அவள் உடல் என்ற மையத்திலிருந்து கிளம்பியிருக்கும் கருத்தியல்கள்தானே..?

சமுதாயம் கற்பு என்பது வெற்றுக் கருத்தியலை புனித பொதிக்குள் அடைத்து, ஒவ்வொரு பெண்ணின் அவயத்திலும் பூட்டாக்கி தொங்கவிட்டுள்ளது, கற்பு என்பது எதுவரை என்பது குறித்து சில மாயக்கயிறுகள் அதன் கைவசமுள்ளது. ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தில் ஆண்களை பார்ப்பதோ, ஆண்களின் பார்வைக்குள் வருவதோ கூட தவறு என்றாகிறது. இல்லத்தரசிகளுக்கு பேச்சுக்கான சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. வேலை பார்க்கும் பெண்களுக்கு அவை கருத்து பரிமாற்றம் வரை அனுமதிக்கப்பட்டுள்ளது. சில தருணங்களில் அலுவலகநிமித்தம் ஒன்றாக பயணிப்பது வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நடிக்கும் பெண்களுக்கு அவை உடல் தொடுகை வரை அனுமதிக்கப்பட்டுள்ளது. அந்தந்த வகையினர், அந்தந்த கயிற்றின் நீளத்திற்குள் அடங்கிக் கொள்ள வேண்டும். இதில் சிறு தடுமாற்றமோ, அல்லது அடிபிறழ்வோ ஏற்படும்போது அவள் மீது சமுதாயம் காட்டும் அசிங்கமான முகம்தான் அந்த பெண்ணிடம் வெளிப்பட்டதும்.

மென்மை, பொலிவு, நளினம் போன்றவை புறத்திலும் தியாகம், கருணை, தன்னலமின்மை போன்ற இத்யாதிகள் அக அடையாளங்களாகவும் கொள்வதில்தான் ஒரு பெண்ணின் பிறப்பே அடங்கியிருக்கிறதாம். அதுதான் அவளுடைய அழகாம்.

சுயம் தொலைக்காத வெளிப்படையான பெண்கள் அழகுதான்.

***


No comments:

Post a Comment