Search This Blog

Thursday, 15 November 2018

முத்துபொம்மு (சிறுகதை)

பதாகை நவம்பர் 2018 இதழில் வெளியானது.



கருவேலங்காட்டுக்குள் புதைந்துக் கிடந்தது அந்த குடியிருப்பு. மண்சுவரும் கீற்றுக்கூரையுமாக ஒழுங்கமையாத வரிசைக்குள் வீடுகள் நெருங்கிக் கிடந்தன. படுக்கவும் உடுக்கவும் தவிர்த்து மீதி புழக்கமனைத்தும் வெளியே சிதறியிருக்க, சாக்கடையாக தேங்கிக் கிடந்த புழங்குநீரை ஈக்கள் கொண்டாடிக் களித்தன. பத்தேறிய கரிப்படிந்த பாத்திரங்களை புழங்காத நேரத்தில் உருட்டி விளையாட நாய்களுக்கு அச்சமிருப்பதில்லை. குடங்களில் பத்திரப்படுத்தியிருந்த பிளாஸ்டிக் நீர் சூடேறிக் கிடந்தது. சோற்றுக்கஞ்சியின் தடம் பதிந்த தரைகள், பாயோடு படுக்கையோடு கிடக்கும் வயதானவர்கள் என யாரையும் எதையும் மிச்சம் வைக்காமல் மதிய வெயில் குடியிருப்பை எரிச்சலாய் சூழ்ந்திருந்தது. வெயிலை உறிஞ்சிக் கொண்டு காற்றிலசைந்த கறிவேலஞ்செடிகள் மெலிதாய் மலவாடையை பரப்பியது.


”சோறாக்கி வச்சிட்டு போறதில்லயா..?”

காத்தானின் கேள்விக்கு சோலை பதிலேதும் சொல்லவில்லை. குடத்திலிருந்த நீரை அரிசியில் சரித்து கையால் அளைந்தாள். விரல்களே மூலதனம். பிழைப்பை தேடி இங்கு வந்த பிறகு, ஓட்டலில் பாத்திரங்கள் கழுவித் தள்ளும் வேலை அவளுக்கு வாய்த்திருந்தது. அதிகாலையி்லேயே அங்கிருக்க வேண்டும். ஆனால் அதற்கும் அதிகாலையிலேயே சமையலை முடித்திருப்பாள்.

உலைநீரை அடுப்பிலேற்றியபோது டேக்சா லேசாக சரிந்து நீர் விறகடுப்பில் சிந்த, பாத்திரத்தை நிமிர்ந்தி வைத்தாள். காலை எழுந்ததிலிருந்தே தடுமாற்றம்தான். அவளிடம் குக்கர் ஒன்றிருந்தது. அதை உபயோகப்படுத்த கரண்ட்அடுப்பு வாங்க வேண்டும் என்று ஆசைப்பட்டாள். வேலை செய்யுமிடத்தில் பார்த்திருக்கிறாள். கரண்ட்அடுப்பில் பாத்திரங்கள் கரிப்பிடிக்காதாம். சூடு ஏறாதாம்… என்ன மாயாஜாலமோ.. ஒருமுறையாவது அந்த அடுப்பில் சமைக்க வேண்டும் என உலை வைக்கும்போதெல்லாம் தோன்றும் வழக்கமான எண்ணம் இன்று தோன்றவில்லை.

”பயலுக்கு சரியான பசி.. பிஸ்கட் வாங்கியாந்துக் குடுத்தேன்..” பேச்சுக் கொடுத்தான் காத்தான். 

”ஆயிடும்.. ஆயிடும்..” என்றாள் வெற்றாக.

கொடியடுப்பில் பருப்பை வேகவிட்டாள். குடிசைக்குள் காய் எதாவது இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். அவசரமாய் வந்தவளை புடவைத் தடுக்கியது. “நவுந்து ஒக்கார்லாமில்ல” பிஸ்கெட் பாக்கெட்டோடு குடிசை வாசலி்ல் அமர்ந்திருந்த மகனை கடிந்தாள்.

”இப்ப எதுக்கு அவன்ட்ட கத்தற..?”

”ஒத்தரயும் ஒண்ணுஞ்சொல்லிடக் கூடாது.. எல்லாம் என் எழவயே எடுங்க..” காய்ந்து சூம்பியிருந்த நாலைந்து கத்திரிக்காய்களை பருப்பில் அரிந்து போட்டாள். புகைந்த அடுப்பில் விறகை நுழைத்து காற்றை ஊத, பற்றிக் கொண்ட விறகை நிதானமாக்கினாள். குடிசைக்குள்ளிருந்த மிளகாய்துாள் டப்பாவை எடுத்துக் கொண்டு  திரும்பியபோது வடித்து விட்டிருந்த கஞ்சியில் கால் வழுக்கியது.

”சனியனே.. போ அங்கிட்டு” சோற்று வாசத்துக்கு கால்களுக்குள் வாலை ஒளித்துக் கொண்டு பம்மிய நாயை விரட்டினாள்.

”நீ சாப்ட்ல..?” காத்தான் சுடசுட சோற்றில் குழம்பை கலந்து பிசைந்துக் கொண்டே கேட்டபோது, சோலை புழங்கியப் பாத்திரங்களை அடுப்பு சாம்பலால் தேய்த்துக் கொண்டிருந்தாள்.

”என்னாச்சுல..” கைகளை துடைத்துக் கொண்டே அருகில் வந்தவனிடம் நிமிர்ந்தபோது கண்கள் கலங்கியிருந்தன.

“இன்னிக்கு அப்பிசி ரெண்டு..” என்றாள்.   

2

அடித்து பெய்த கனமழை ஓய்ந்திருந்தாலும், ஒளி போதாமையால் படப்பிடிப்பை நிறுத்தியிருந்தான் இயக்குநர் சரண். காற்று சிலிர்ப்பாகவும் வெப்பம் மிதமாகவும் நிலவ, கிளம்ப மனமின்றி ஓடைக்கரையோரமாக கிடந்த பாறையொன்றில் அமர்ந்துக் கொண்டான். உதவி இயக்குநரை தவிர்த்து மீதமானவர்களை அனுப்பி விட்டிருந்தான். மெலிதாக விழுந்த இளந்துாறல் ஓடை நீருக்குள் வட்டவட்டமாக சிலிர்த்துக் கொண்டிருந்தது. பெருங்குடைகளாக பரவியிருந்த கரையோர மரங்களில் வெண்பூக்களாய், துள்ளியெழும் மீன்களுக்காக வெண்கொக்குகள் காத்துக் கிடந்தன. பூவாய் சிதறிய துாறல்களை பூமி பூரிப்பாக உள்வாங்கிக் கொண்டிருந்தது. சிலீரென்றிருந்த ஓடைநீரும் வெதுவெதுப்பாக உடலில் வழிந்த மழைநீரும் மனதை கிளர்ந்தெழுப்ப, கைகளை விரித்து முகத்தை பின்னுக்குத் தள்ளி துளிகளை முகத்தில் ஏந்திக் கொண்டான் சரண்.


எதிரே தெரிந்த மலையடுக்குகள் பால் மார்புகளை திறந்தவாறு மல்லாந்துக் கிடக்கும் மங்கையாய் மதர்த்துக் கிடந்தன. பச்சை மனிதனுக்கு பொன்கொண்டையிட்டது போல அதனுாடே சூரியன் ஒளிர்ந்துக் கொண்டிருந்தது. ஈரத்தை உறிஞ்சிய புற்கள் கசிய விடும் பசிய வாசம் நாசியை நிறைக்க காலமத்தனையும் இங்கேயே தொலைத்து விடும் பேராவலோடு இயற்கையின் முன் நிராயுதபாணியாக நின்றிருந்தான். இம்மாதிரியாதொரு உந்துதலில்தான் படமெடுக்கும் எண்ணம் தோன்றியதும்.

”சார்.. மழை பெருசாயிடும் போலருக்கு.. கேரவனுக்கு போயிடலாம் சார்..” ஐப்பசி மழை அத்தனை சீ்க்கிரத்தில் விடாது.

”ம்ம்..” என்றான் எழுந்துக் கொள்ளும் எண்ணமேதுமின்றி.

அவனுடைய யூனிட்டில் வளர்மதிக்கு் மட்டுமே அவனையொத்த ரசனையிருந்தது. காடுதான் நாயகன் என்றாலும் அவளை சுற்றியும் கதையை அமைத்திருந்தான். பனிரெண்டு வயதிருக்கும் அவளுக்கு. அவளை கண்டுக்கொண்டதும் அழகான இளங்காலை நேரமொன்றில்தான். கதவை திறந்துக் கொண்டு தெருவில் இறங்கி ஓடியபோது ஆழ்ந்த உறக்கத்திலிருந்த நாயொன்று தலையை துாக்கி பார்த்து விட்டு பிறகு அசட்டையாக படுத்துக் கொண்டது. சைக்கிளின் பின்னிருக்கையிலில் கட்டியிருந்த துளசியிலை முட்டையை ஒரு கையால் தாங்கி பிடித்தபடி சைக்கிளை தள்ளிக் கொண்டு சென்ற தந்தையின் பின்னோடு நடந்துக் கொண்டிருந்தாள் வளர்மதி. அவன் அவர்களை உரக்க அழைத்தபோது திரும்பிய வளர்மதியின் உதடுகள் புன்னகைத்தப்படியே இருந்தது. அடர்ந்த புருவங்களுக்கு கீழிருக்கும் கரிய உருண்ட விழிகளோடும் மாநிறத்துக்கும் சற்று குறைவான நிறத்தில் துறுதுறுப்பான நாசிகளோடுமிருந்த அவளை அப்போதே ஒப்பந்தம் செய்து விட்டான்.


கதையில் உள்ளவாறே நிஜத்திலும் அவளுக்கு காடு பிடித்திருந்தது. இடுப்பிலிருந்து இறக்கி விட்ட குழந்தையாய் ஓடை நீரில் இயல்பாக மீன் பிடித்தாள். மழை பெய்த சகதிகளில் வழியுண்டாக்கிக் நடந்தாள். படுகையெங்கும் உருண்டுக் கிடக்கும் கூழாங்கற்களில், பொடிகளாக சேகரித்து மடியில் கட்டிக் கொண்டாள். நீருக்கும் மரத்துக்குமிடையே நீளமான வால்களை தொங்க விட்டு அலையும் குரங்குகளை பயங்கலந்த பிரமிப்போடு பார்த்து “கொரங்காட்டீ எங்க..“ என்றாள். தாவர இடுக்குகளுக்குள் சொட்டுசொட்டாக நுழையும் சூரியன் தன் மீதிடும் கோடுகளுடன், உடலை அங்குமிங்கும் நகர்த்தி விளையாடுபவளின் பாவனைக் காட்டும் கண்களை அவன் காமிராவுக்குள் ஏந்திக் கொண்டேயிருந்தான்.

பசுங்குகைக்குள்ளிருந்து வனமகள் நீந்தியபடி வர, வழியெங்கும் மலர்கள் உதிர்ந்து அவளை வரவேற்றன. அவள் உடலிலிருந்து கசியம் பசியவாசம் பூமியெங்கும் பரவியது. காட்டின் ஓசையும் நறுமணமும் அதற்கு பக்கவாத்தியங்களாயின. பிரக்ஞைப்பூர்வமான மௌனங்கள் பாடல்களாலும் இசையாலும் கலைந்துப் போவதை அவன் விரும்புவதி்ல்லை. காட்சிகளின்போது கூட காட்டின் ஒலிகளை அதிகமும் பயன்படுத்தியிருந்தான. இயற்கையின் முன் மொத்த அகந்தையும் அழிந்து விடுகிறது. ஆனால் சில கணங்களிலேயே அது முன்பை விட தீவிரமாக எழுந்தும் விடுகிறது. அது காட்டின் அற்புத கணங்களை அவனுக்கு உணர்த்திக் கொண்டேயிருந்தது.

.”சார்.. மழ வலுத்திடுச்சு சார்..”

வாய்க்குவாய் சார் போட வேண்டியிருந்தது அவன் இயக்குநர் என்பதால் மட்டுமல்ல.. சரண் மெத்த பணக்காரன் என்பதற்காகவும் இருக்கலாம்.

”செரி.. கௌம்பலாம்…”

சரணை போலவே ஓடையும் மழையை உள்வாங்கிக் கொண்டு பூரிப்பாக நகர்ந்தது. 

3

அது ஒரு ஐப்பசி மாத காலை. மழை நான்கு நாட்களாக விடாமல் பெய்ததில் பாதையெங்கும் செம்மண் சேறாக ஓடியது. மரங்களும், புல்பூண்டுகளும் வேரறுக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டிருந்த அந்த நிலத்தில் என்றோ நடப்பட்டிருந்த அந்த சிறு செவ்வக வடிவ கருங்கல் துறுத்தலாய் தொற்றிக் கொண்டிருந்தது. அவர்கள் அங்கு சிறு கூட்டமாய் கூடியிருந்தனர்.

வளமான மண்ணும் சுற்றிலும் மலைகளுமான இதமான சூழலுக்குள் கதகதப்பாய் ஒளிந்திருக்கும் இந்தப்பகுதியில் முன்பெல்லாம் மரங்களடர்ந்திருக்கும். புல்பூண்டு தாவரங்களுக்கும் குறைவிருக்காது. மேய்ச்சலுக்கு வரும் ஆடுகள் பெயருக்கு அங்குமிங்கும் அலைந்து விட்டு இறுதியில் இங்கு தஞ்சமடைந்து விடும். மழை உருவாக்கும் சிறுசிறு ஓடைகளால் நீருக்கும் பஞ்சமிருக்காது. இந்த பகுதியை யாரோ விலைக்கு வாங்கி சொகுதி விடுதி கட்டப் போவதாக பேச்சு அடிப்பட்ட கொஞ்சநாட்களிலேயே முள்வேலி அமைக்கப்பட்டு வெளிநடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

”கும்பல பாத்துட்டு வாச்சுமேனு எதும் வந்து தொலச்சிடப் போறான்.. சீக்ரமா முடிச்சுக்குணும்..” என்று அபிப்பிராயப்பட்டது கும்பல்.

முள்வேலி கிழித்த காயத்திலிருந்த வழிந்த இரத்ததை சட்டை செய்யும் மனநிலையின்றி கூப்பிய கையோடு நின்றிருந்தாள் சோலை. பலியிட முடியாது. கண்டுபிடித்து விடுவார்கள்.

”ஆயி.. தப்புதவருந்தா மன்னிச்சு சுத்த பூசய ஏத்துக்க தாயீ..”

சென்ற ஆண்டு இத்தனை கெடுபிடி இல்லை. கனவில் வந்துக் கொண்டேயிருந்த மகளுக்கு சேவலை பலியிட்டு இரத்தகாவு கொடுத்திருந்தாள். கையில் அமுக்கிப் பிடித்திருந்த சேவல், திமிறலாய் விலகி இறக்கையை படபடப்பத்துக் கொண்டு கட்டியக் கால்களோடு தானாகவே பலிபீடத்தில் அமர்ந்துக் கொண்டது.

”மவளே.. ஏத்துக்க. ஏத்துக்க.. ரெத்த காவ ஏத்துக்க.. ஏத்துக்கிட்டு அவுக வம்சத்தயே கொலயறுக்குணும்.. செய்வியா.. செய்வியா..” தன்நிலையிழந்து ஆவேசப்பட்ட சோலையை அம்சடக்கிய போது வாட்ச்மேன் வந்திருந்தான். மயங்கி சரிந்தவளை தாங்கிப்பிடித்தபடி கலைந்து போனதை நினைத்துக் கொண்ட கூட்டம் அவளை அவசரப்படுத்தியது.

காத்தான் மழைக்கு அணையாக குடையை சரித்து பிடித்திருந்தான். சோலை நிறை வயிற்றோடு குனிந்து கல்லிலிருந்த நீரை கையால் வழித்து விட்டாள். மஞ்சளைக் குழைத்து கல்லின் நடுவே பூசி அதன் மீது குங்குமத்தால் பொட்டிட்டாள். கதம்ப மாலையைச் சூட்டி நடுவே காட்டு செம்பருத்தியை வைத்தாள். துாக்கில் எடுத்து வந்திருந்த சர்க்கரைசோற்றை இலையிலெடுத்து கல்லின் மீது வைத்தாள். அதற்குள் மழை கூடியிருந்தது.

“நா தன்னந்தனியா கெடக்கேன்.. தவியாதவிக்கறன்.. விடமாட்டேம்பில.. விட மாட்டேன்..” இரட்டை பின்னலும் காட்டுச்செம்பருத்தி சூடிய தலையுமாக பாவடை சட்டையணிந்த சிறுமி ஒருத்தி முள்வேலியை பிடித்தபடி கத்தியதாக வேலுமணி மேஸ்திரி பதறிக் கொண்டு சொன்னது நினைவுக்கு வந்தது அவளுக்கு.

”மவ கேட்டத நீயும் மறந்துட்டீயா..” என்றாள் அழுகை கொப்பளிக்க நின்ற கணவனிடம். 

4

சரண் என்று பெரிய எழுத்துகளில் பொறிக்கப்பட்டிருந்த அந்த சொகுசு விடுதியின் அலங்கார புல்வெளியைக் கடந்து, பெரிய போர்ட்டிகோவிற்குள் நுழைந்தபோது சரணின் நனைந்த உடல் நடுங்கத் தொடங்கியது. இயற்கையின் ஈர்ப்பில் மனம் கவிதையாய் உருக, உடன் வந்த பணியாளையும் நகரும் படிக்கட்டையும் மின்துாக்கியையும் ஒதுக்கி விட்டு படிகளில் ஈரம் சொட்ட சொட்ட நடந்து மேலேறி முதல் தளத்திலிருந்த தனது அறையை நோக்கி நடந்தான். அறையின் தடிமனான மரக்கதவின் செதுக்கல்கள் ஓடையிலிருந்து சுழித்து கீழிறங்கும் நீரை போல படிபடியாக உள்ளொடுங்குவதை ரசித்தவாறு நின்றிருந்தவனிடம், யாரோ தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு சிநேகமாக சிரிக்க, சூழலிலிருந்து கலைய மனமில்லாதவனின் மௌனம் வந்தவருக்கு கனமாக தோன்றியிருக்கலாம். மேற்கொண்டு யாரையும் சங்கடப்படுத்த விரும்பாமல் அறைக்குள் நுழைந்து, மிதமாக இயங்கிக் கொண்டிருந்த சூடேற்றியை நிறுத்தினான்.  டிகாஷன் துாக்கலாக அரை இனிப்பில் மிதமாக சூட்டில் காபி தேவைப்பட்டது அவனுக்கு. அப்பாவிடமிருந்து அவனுக்கு தொற்றிக் கொண்ட ருசி அது.


உடைகளை மாற்றிக் கொண்டான். ஃப்ளாஸ்க்கிலிருந்த காபியை கோப்பைக்கு மாற்றிக் கொண்டு ஜன்னலோர சோபாவில் அமர்ந்தான். மழை முற்றிலும் நின்றிருந்தது. தெளிந்த வானில் வெண்ணிற மேகம் துணுக்குகளால் விரவியிருந்தன. மலையடுக்குகள் பனித்திரைக்குள் கோட்டோவியங்களாய் தெரிந்தன. அதனுள் உறைந்திருக்கும் மௌனத்தை மேகங்களால் புரிந்துக் கொள்ள இயலும். அவனும் மேகத்தையொத்தவனே. தனிமை அவனுக்கு நிறையவே பிடித்திருந்தது. அதுவும் தந்தையின் இறப்புக்கு பிறகு அதற்கான சந்தர்ப்பங்களை அவனையுமறியாது நிறையவே உருவாக்கியிருந்தான். அறுபது வயதில் எதிர்பாராது நிகழ்ந்த அவரின் மரணத்தை ஏற்றுக் கொள்ளவியலாத தவிப்பே தனிமையை நாட வைத்திருக்கலாம். அன்பை தோழமையாக காட்டத் தெரியாது அவருக்கு. ஆனால் உணர்வின் வழியாக அவர் கடத்தியிருந்ததை அவன் உணர்ந்துக் கொண்டேயிருந்தான்.

இதே மாதிரியான அடைமழை நாளில்தான் அவர் இறந்துப் போயிருந்தார். இதே சொகுசு விடுதியின் தோட்டத்தில் சேற்றில் முகம் பதித்து மரித்துக் கிடந்தவரின் நினைவுகளை ரசனையின் வழியேதான் கடக்க வேண்டும்.
நின்றிருந்த மழை கனத்து பெய்யத் தொடங்கியது.  
5
மதியம் அடித்த வெயிலின் சுவடேயின்றி வானம் கருமைத்தட்டிப் போயிருந்தது.

”ஒரு நா அங்க போய்ட்டு வர்லாங்கறேன்..” என்றாள் சோலை.

சொகுசு சுற்றுலா விடுதி கட்டப்பட்ட பிறகு வாழிடம் கை நழுவிப் போக, பிழைப்புக்காக ஊருராய் அலைந்தாலும் முத்துபொம்முவின் நினைப்பு மட்டும் அவர்களுக்குள் மாறாமலேயே இருந்தது.  

“போயீ..?” என்றான் காத்தன்.

”உசுருட்ட எடத்தில பலி குடுத்து படயல் போடணும்.. அவ நெனப்பு நமக்கிருக்கமேரி நம்ப நெனப்பு அவளுக்கிருக்குமில்ல.. காத்துல அலஞ்சுட்டிருக்கவள கலங்க வுடக்குடாது”

”கட்டடம் கட்டங்குள்ளவே நம்பள வெரட்டியடிச்சிட்டானுங்க.. கட்டுன கட்டடத்தில ஊசுருட்ட எடத்த எங்கன்னு நீ தேடுவ..  அதும்பக்கங்கூட போ முடியாது பாத்துக்க..”

மழையில் காடுகள் செழித்து, மலையே தீவனமாக தெரிந்ததில் ஆடுகள் கொண்டாட்டத்தில் திக்குமுக்காடிக் கிடந்தன. அவற்றை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்வதில் முத்துபொம்முவுக்கும் கொண்டாட்டம்தான்.  நீண்ட கழியும், மதிய சோறுமாக கிளம்பி விடுவாள். வயிறு நிறைந்த திருப்தியில் மசங்கி மசங்கி வரும் ஆடுகளை மேய்த்துக் கொண்டு கீழிறங்கும்போது அந்திசாய தொடங்கியிருக்கும். அன்று அந்தி சாயத் தொடங்கிய நேரத்தில் ஆடுகள் ஒவ்வொன்றாக பட்டிக்கு வரத் தொடங்கின, மேய்த்துச் சென்ற முத்துபொம்முவை தவிர்த்து.

மழை பெய்த சகதியில் கால்களை பரப்பியபடி செத்துக் கிடந்தாள் முத்துபொம்மு. பனிரெண்டு வயதின் குழந்தைத்தனமும், பருவம் எய்தும் குமரித்தனமுமான அவளின் இளம்உடல் மரங்களடர்ந்த காட்டுப்பகுதியில் விறைத்து மல்லாந்திருந்தது உடலில் ஆடை ஏதுமின்றி. பதிலாக அது கழுத்தை இறுக்கிக் கிடந்தது.

ஆவேசம் தாளாது ஈரமண்ணை வாரியடித்தாள் சோலை. ”தாயீ.. பெத்த வயிறு ஒலையா கொதிக்குது... என் உசுரு எறியறப்பல ஒங்கொலய அறுத்தவன் வமுசத்தயே கொலயறுக்குணும் தாயீ..” வயிற்றிலறைந்துக் கொண்டாள்.

மழை பேயாய் அடிக்கத் தொடங்க, வீடு முழுமையாக நனைந்துப் போனது.

6

கலவையான எண்ணங்களில் சரணுக்கு உறக்கம் நகர்ந்திருந்தது. அறையின் பின்புற கதவை திறந்து பால்கனிக்கு வந்தான். பால்கனி கண்ணாடி தடுப்புகளால் மூடப்பட்டு சிறுஅறை போன்ற தோற்றத்திலிருந்தது. உடுத்தியிருந்த கம்பளியையும் மீறி குளிர்காற்று சிலிர்ப்பாக உடலில் இறங்கியது. காணுமிடங்கெங்கும் ஆர்ப்பரிப்பாக தோன்றியது வனத்தின் இருள். விளக்குகளை வெற்றிக் கொள்ளும் இருளின் அவ்வொளி, அகத்தின் அடுக்குகளில் ஊடுருவி கண்களை நிறைந்துக் கொண்டே வர, ஒலிகளும் பழகத் தொடங்கின. எங்கோ விழும் அருவியின் ஓசையும், விடாது கேட்கும் சீவிடுகளின் ஒலியும் மெலிதாக எழும் காற்றின் இசையோடு கலந்திருந்தன. இவை மௌனத்தின் மொழிகளாகதானிருக்க வேண்டும். கண்களை மூடி அனுபவித்தான்.


அதேநேரம் இன்னும் ஓரிரு நாட்களில் இங்கிருந்து கிளம்ப வேண்டியிருக்கும் என்ற எண்ணம் அச்சுறுத்தலாக எழுந்தது.  படப்பிடிப்பு வேலைகள் கிட்டத்தட்ட முடிந்திருந்தன. இது சரணின் இரண்டாவது படம். தந்தையின் திடீர் மரணத்தையொட்டி வெளிநாட்டிலிருந்து திரும்பியவனுக்கு மீண்டும் அங்கு செல்ல மனமில்லாமல்போனது அவனுக்கே புதிராகதானிருந்தது. கூடவே படமெடுக்கும் ஆசையும் தொற்றிக் கொள்ள, முதல் படத்தில் தன்னை நன்றாகவே நிரூபித்திருந்தான்.

உறக்கமும் விழிப்புமாக நகர்ந்த இரவு பறவைகளின் கீச்சொலிகளால் மீள, எழுந்து பால்கனிக்கு வந்தான். இருளும் விலகாத நிலவும் நகராத புத்தம்புதிதான நாள். வானில் நட்சத்திரங்கள் மினுங்கலாய் நடுங்கின. காடு பொழுதுகளுக்கேற்ப ரூபம் கொள்பவை. பழக்கப்பட்ட காட்சிகள் கூட அவனுக்கு புதிது போல தோன்றின.  கண்ணாடி தடுப்பை திறந்தான். காத்துக் கிடந்ததுபோல காடு உள்ளே வரத் தொடங்கியது. துாரத்து காட்டையும் அழைத்துக் கொள்ள விரும்பி பைனாக்குலரை கண்களில் பொருத்திக் கொண்டான்.

மலையடுக்குகள் பெரும்சரிவாக இறங்கி மீண்டன. சிறு குன்றுகளும் அதை தொடர்ந்து சாலைகளும் ஊர்களை அடையாளம் காட்டின. மலையை நீராக சரித்து விட்டதுபோல் அருவி ஆர்ப்பரிப்பாய் கொட்ட, அதன் ஓடையோ எவ்வித பரபரப்புமின்றி நிதானமாக ஒடிக் கொண்டிருந்தது. அதிக உயரமில்லாத மரங்கள் சரிவுகளில் செறிந்திருந்தன. பசும் பரப்பின் மீது மேகங்கள் குவியல் குவியலாக பரவி பின் கரைவதும் தோன்றுவதுமாக இருந்தன. பெரிய மரமொன்று வேரோடு விழுந்து பொக்கையாகி போன இடத்தில் நீர் குட்டையாக தேங்கிக் கிடந்தது. தேன்கூடுகள் ஆங்காங்கே கருத்த பைகளாய் தொங்கிக்கொண்டிருந்தன.

காட்சிகள் மாறிக் கொண்டே வர, அங்கு வளர்மதி நின்றுக் கொண்டிருந்தாள். மிகுந்த ஆச்சர்யத்தோடு காட்சியை துல்லியமாக்கி அவளருகே கொண்டுச் சென்றான். அவளேதான். விடுதியின் வெளிப்புற சரிவில் நின்றுக்  கொண்டிருந்தாள். உடுப்புக்கு மேல் கம்பெனி ஸ்வெட்டர் அணிந்திருந்தாள். குளிருக்கு அணையாக கைகளை கன்னங்களுக்கு முட்டுக் கொடுத்து தோள்களை உயர்த்தியபடி நின்றிருந்தாள். இயற்கை மீது இத்தனை ஈர்ப்பா இவளுக்கு..? என்று தோன்றியபோதே, அவளது பாதுகாப்புக் குறித்த பதற்றமும் எழுந்தது அவனுக்கு.

விடுதி உறங்கிக் கொண்டிருந்தது. ஓசையெழுப்பாது வெளியே வந்தான். வானம் மழைக்கான அறிகுறிகளோடு கம்மிக் கொண்டிருந்தது. இன்றும் படப்பிடிப்பு தள்ளிப் போகலாம். அதுவும் நல்லதுதான். கூடுதலாக இங்கு தங்கிக் கொள்ள வாய்ப்புக் உருவாகும். எடிட்டிக், ரீரிகாட்டிங்.. இசைக்கோர்ப்பு என இனி அடுத்தடுத்து வரவிருக்கும் நாட்கள் இயந்திரத்தனமானவை.

உறை அணிந்த கைகளை ஜெர்க்கினுக்குள் விட்டபடியே நடந்தான். விடுதியின் போக்குவரத்துக்காக போடப்பட்டிருந்த தார்சாலை கரும்பாம்பாய் வளைந்தோடியது. விடுதிக்கு எதிர்புறம் மலை சரிந்திருந்தது. வளர்மதி சாலையை கடந்து சரிவை நோக்கி திரும்பியபடி நின்றிருந்தாள். கைகளிரண்டும் இயற்கையை அள்ளிக் கொள்வதுபோல வானை நோக்கி விரிந்திருந்தன.

சாலையை கடந்து அவளருகே சென்றான். இயற்கைக்குள் ஆழ்ந்துக் கிடப்பவளை கலைக்க எண்ணமில்லாமல். ”வளர்மதி..” என்றான் அவளுக்கு கேட்காத குரலில்.

வெளிச்சத்துக்காக செல்போன் டார்ச்சை இயக்க எண்ணி, ஜெர்கினுக்குள் கை விட்டு செல்போனை உருவ, அது லேசாக நழுவியது. அதை பிடிக்க எண்ணிய வேளையில் இடதுகால் சரிவிலிறங்கியது. வலதுகால் உடலை தாங்கவியவாது தடுமாற,  சுதாரிக்கும்முன்பே உடல் வழுக்கி வழுக்கி முனைப்புடன் சரிவில் உருண்ட போது வெட்டிய மின்னல் ஒளியில் அவள் வளர்மதி அல்ல என்று அனிச்சையாக அவன் சிந்தைக்குள் படிந்ததே கடைசி உணர்வாக இருக்கலாம். அவள் சூடியிருந்த காட்டுச்செம்பருத்தி அதிகாலையில் மலர்ந்திருக்கலாம்.



அன்றும் அப்படியானதொரு மின்னலொளியில்தான் முத்துபொம்மு பிணமாக கிடந்ததை கண்டுக் கொள்ள முடிந்தது. அவளுடன் சென்ற சிலுப்பி, மதிய சாப்பாட்டுக்கு பிறகு ஆடுகளை ஒருங்கு கூட்டுவதற்காக தானும் முத்துபொம்முவும் ஆளுக்கொரு திசையாக பிரித்து சென்று விட்டதாக சொன்னாள். கூடவே முத்துபொம்மு போன திசையில் யாரோ ஒரு ஆள் சென்றதாகவும் கூறினாள். பிறகு அவருக்கு அறுவது வயதிருக்கலாம் என்றும் சொன்னாள்.


***



No comments:

Post a Comment