இருள் விலகியிருக்காத அதிகாலைப்பொழுது அது. கங்கை ததும்பலாக ஓடிக் கொண்டிருந்தது. மேலும்கீழுமான நீரின் எழும்பல்கள் இளங்காலைக்கான ஒளியை ஏந்தியபடி தனக்கென பிரத்யேக சத்தங்கள் ஏதுமற்றதுபோல ஓவியமாக நகர்ந்துக் கொண்டிருந்தன. இமயத்திலிருந்து உருட்டிக் கொண்டு வரப்பட்டு சிதறலாக கிடந்த பாறைக்கற்களை நுரைகளாக கடந்தோடியது கங்கை. எங்கோ விடப்பட்ட தீபங்களும் மாலைகளும் நதியை புனிதமாக்கியபடி மிதந்தன.
அவள்
கங்கையின் ஆளரவமற்ற படித்துறையொன்றில் அமர்ந்திருந்தாள். நீலமும் வெள்ளையுமாக
வர்ணமடிக்கப்பட்ட படிகள், நீலமும் வெள்ளையுமான சங்கிலித்தடுப்புகளால்
இணைக்கப்பட்டிருந்தன. சங்கிலிகளில் வேண்டுதலுக்காகவோ வேறெதற்காகவோ கட்டப்பட்ட
சிவப்பும் மஞ்சளுமான ஜரிகை வஸ்திரங்கள் பளபளப்பாக மின்னியது. காவியுடுத்திய சாது
ஒருவர் தலைப்பாகை, குடை எவர்சில்வர்துாக்கு சகிதம் கம்பளியை போர்த்திக் கொண்டு
அமர்ந்திருந்தார். அங்கிருந்த கல்லில் வெள்ளை பெயிண்ட்டால் வரையப்பட்ட பட்டையும்,
சற்று மேலே அதே வெள்ளை பெயிண்டால் ஹிந்தி மொழியில் ஓம் என்ற எழுத்தும்
எழுதப்பட்டிருந்தது.
கங்கா கங்கேதியோ ப்ரூயாத்
யோஜனானாம் சதைரபி
முச்யதேசர்வ பாபேப்ய
விஷ்ணு லோகம் சச்சதி.
யோஜனானாம் சதைரபி
முச்யதேசர்வ பாபேப்ய
விஷ்ணு லோகம் சச்சதி.
இமயத்தின்
சிகரங்களில் பனி கவசமிட்டிருந்தது. உடனடிப் பார்வைக்கு மலையடுக்குகள் மறைந்து பனியடுக்குகள் அந்தரத்தில் தொங்கிக்
கொண்டிருந்தன. காட்சிகள் பழக்கத்திற்கு வந்தபிறகு சிகரங்கள் அவற்றுக்கான
அடையாளங்களை கொண்டிருந்தன. கம்பீரமாக நிமிர்ந்து நின்ற சிகரங்கள், உயர மிகுதியில் உருகி, வழிந்தவாகில் நின்று
விட்ட போன்சாய் சிகரங்கள், வேகமாக சரிந்து, பின் சுதாரித்து நிமிர்ந்திருந்தன
சிலவை. அவற்றுக்கு அண்டைக் கொடுத்து ஆணவச்செருக்குடன் நின்றவைகள் மணலில் கட்டிய
வீடுகளைப் போன்றிருந்தன. எங்கிருந்தோ உருவி வந்து நட்டன போல சிலவும், உச்ச
மலைகளின் எச்சம் போல சிலவும் நின்றிருந்தன. சிகரங்களின் இடுக்குகள் ரகசியமாக இருளை
பொத்தி வைத்திருந்தன. எல்லா ரகசியங்களும் புனிதங்களல்ல. மர்மங்களை களைந்து உயர்ந்தெழும்பிய சிகரங்களை
பனி வெள்ளிக்கிரீடம் சூட்டி வாழ்த்திக் கொண்டிருந்தது.
அவளுக்கும்
கீரிடங்கள் சூட்டுவது பிடித்தமானது. பாலகனோ, கோபியர் சூழ களித்திருப்பவனோ, வத்ஸாசுரன்
வதமோ, காளிங்கநர்த்தனம் புரிபவனோ எப்படியாக இருந்தபோதிலும் கிருஷ்ணனுக்கு கிரீடங்கள்
சூட்டி விடுவது அவளுக்கு பிடித்தமானது. அவன் வனபாலகனாக அலைந்தாலும் தலைப்பாகையாவது
வரைந்து அதிலிரண்டு மயிலிறகுகளை சொருகி வைப்பாள்.
ஆறு மலையை அறுத்து உருவாக்கிய பள்ளத்தாக்கு வழியாக மலைவிளிம்பைச் செதுக்கி போடப்பட்டிருந்த
சாலைகளில் பயணித்து வந்திருந்தாள். சூரியனின் தொடுகையில் உருகி நீராக வழிந்த பனியை
ஒட்டிக் கொண்டு முன்னால் நகரும் வாகனங்களின் சக்கரஅச்சுகளை பார்த்தபடியே பயணிப்பது
பிடித்திருந்தது. காமத்தின் அடுக்குகள் பனியாக உருகி சிகரங்களிலிருந்து வழிந்தது. அவை
நதியாய் பெருகியோடுகையில் நிலமெங்கும் வளம் கொழிக்கும். அவை அள்ளஅள்ளக் குறையாத செல்வம். கிள்ளிக் எடுக்க கூட விரும்பமின்றி
தள்ளிக் கிடந்தவனின் உணர்வுகளுக்குள் தன்னுணர்வையும் அடக்கியாக வேண்டிய நியதி
அவளுக்கிருந்தது. ஆனால் சூரியனும் பனியுமாக கலந்து நீராக வழிந்தோடவே
விருப்பமிருந்தது. பகீரதினின் பகீரத முயற்சியில் வெளிப்பட்ட கங்கை மீண்டும் அடங்கிட
முடியாது. சிகரங்களின் இடுக்குகளில் ஒளிந்துக் கிடக்கும் ரகசிய ஆழங்களெல்லாம்
அவளுக்கிருக்கவில்லை. வாதைகளை வார்த்தைகளாக்கினாள். பகீரதனின் முயற்சி பலிதமாகவில்லையெனில்,
கங்கைக்கு இங்கு வேலையில்லை. காலம் கடந்திருந்தது. இப்போது அவள் புனிதமாக
மதிக்கப்படுபவள். தினந்தோறும் ஆரத்தி எடுக்கப்பட்டு வணங்கப்படுபவள்.
சிகரங்களில்
வழிந்திருந்த பனியின் தடங்கள் நீண்ட காதுகளும் ஞான உதடுகளும் கொண்ட
நீள்புத்தர்களாக தோன்றின. சிலவை புடைந்தெழுந்த கிருஷ்ணனின் ஓவியங்கள் போன்றிருந்தன.
கால்பந்தாட்ட வீரனின் பக்கவாட்டு தோற்றம் போல கூட தோன்றின. அடையாளங்கள்
புறவயமானவை. அடையாளங்கள் நீர்த்து போக வேண்டும். அதற்கு இருப்பை சாத்தியமில்லாமல்
ஆக்க வேண்டும். ஆனால் இருந்து விட்டாலே அது இருப்பாகி விடுகிறது. பிறகு, காலையை ஓட்டிக் கொண்டு
போய் இரவில் சேர்க்க வேண்டும். வேதாளம் முருங்கைமரத்துக்கு ஓடுவது போல, மீண்டும்
இரவு கனிந்து காலைக்குள் ஒளிந்துக் கொள்ளும். காலை அழகானதுதான். மனிதனை விட
அறிவில் குறைந்த ஜீவராசிகள் உயிர்ப்புடனிருக்கும் தருணமது. கூடுதல் ஒரு சுமைதான்.
சுமையை உருட்டிக் கொண்டு போய் மீண்டும் இரவுக்குள் சேர்க்க வேண்டும். அதில்
அவளுக்கு அலுப்பிருந்தது. பறந்தலையும் பட்சிகளுக்கு பகல்களை இரவுகளில் சேர்த்து
விடும் எண்ணமுமில்லை. தேவையுமில்லை.
தடவரை அதிரத் தரணி விண்டு இடியத்
தலைப்பற்றிக் கரைமரம் சாடிக்
கடலினைக் கலங்கக் கருத்து இழிகங்கை’
தலைப்பற்றிக் கரைமரம் சாடிக்
கடலினைக் கலங்கக் கருத்து இழிகங்கை’
கங்கையின்
முரட்டு பிரவாகத்தில் மலைகளெல்லாம் நடுங்கின. பூமியே பிளந்து உள்ளே விழுகிறது.
கரையிலுள்ள மரங்களை வேரோடு பெயர்ந்து இழுத்துச் செல்கிறது. கடலையே குழம்பச்
செய்யும் வேகத்தோடு கங்கை பெருகி ஓடுகிறது.
அவளுக்கு லேசாக தொப்பை
விழத் தொடங்கியிருந்தது. பொதுவாக அவளின் எல்லா குற்றங்குறைகளையும் போல இதையும் அவன்
சுட்டிக் காட்டினான்.
”நான் பாத்துக்கறேன்..”
என்றாள்.
”அதென்ன அத்தனை ஆணவம்..
எல்லாத்தயும் நீயே பாத்துக்க வேண்டியதுதானே..?”
அவன்தான் பார்த்துக்
கொண்டான். அவளுக்கு சோறு போடுவதும், உடுப்பு வாங்கித் தருவதும், வீட்டில்
இடமளித்தது உட்பட.
அவளும் பார்த்துக்
கொண்டாள் நன்றிக்கடனாக. கூடவே சில குறும்புகளோடு. இட்லியை முக்கோணங்களாக்குவாள்.
தோசைகளை சதுரமாக்குவாள். மஞ்சள்பொடி கலக்காத எலுமிச்சைசாதமும், லேசான மஞ்சள்
வண்ணத்திலிருக்கும் தேங்காய் சாதமும் அவனுக்கு நிறக்கவில்லை. அதை பிளைவுட்,
பெயிண்ட். பிரஷ் சகிதம் அவள் தன்னறைக்கு ஒதுங்கும்போதுதான் வெளிப்படுத்துவான்.
”இட்லி அநியாயத்துக்கு தடிமனா இருக்கு..”
”சரி..”
”இப்டியெல்லாம்
வேணும்னு யாரும் அழுவுல..”
இட்லிகள்
சதுரங்களாகும். வட்டங்களுக்குள் வருவதில்லை.
கண்களை மூடிக் கொண்டபோதும்,
நீர் நுங்கும்நுரையுமாக பெருகியது. அலை போல எழுந்தது. சுழல்களை உருவாக்கியது. அதன்
தெளிந்தத் தடத்தில் மீன்கள் நீந்தி விளையாடின. காற்று மலைகளின் மூச்சைப் போல ஒரே
சீராக வீசியது. மூச்சுக்காற்றை அனுபவிக்கலாம். ஆனால் அதன் ஆன்மாவில் உறைந்துக்
கிடக்கும் அர்த்தங்கள் அவற்றுக்கானவை. வேதாளம் முருங்கைமரத்திலிருப்பதால் என்ன
கெட்டு விடப் போகிறது..? இருந்து விட்டு போகட்டும். மனமெங்கும் பிரவகிக்கும் கங்கை
உடலுக்குள் நுழைந்துக் கொள்ளும் ஆனந்தத்திற்கு மூச்சைதான் தட்சணையாக்க வேண்டும்.
இம்மாதிரியான தட்சணைகள் குறித்தும் அவள் அறிந்திருக்கிறாள். அது விடுதலைக்கான
தேடலும் கூட.
ஆனால் விடுதலை என்பது
எதிலிருந்து? அப்படியாயின் சிறையிலிருந்ததென்பது முடிவாகிறது. இமயம் உயர்ந்து
நின்றது. காட்சிகள் மேல் மனதை சிதறடித்து. ஆழ்மனத்தை மேலெழுப்பியது. பூரணத்துவம் என்பது ஆதிகணத்தின் அறிதலோடு
அதிலிருந்து கிளைக்கும் முரண்களையும் உள்ளடக்கியது. காரியத்திற்கான காரணங்கள் அறிய
முடியாதவை. எனினும் முழுமையானவை. எதுவொன்றிலும் ஒன்றை போல மற்றொன்று இருப்பதில்லை.
பொதுமையாக இருப்பதாலேயே ஒன்றுக்கொன்று தொடர்புடையதும் அல்ல. எதுவும் நிலையானவையுமல்ல.
விளக்கை போன்று ஒளிர்ந்து பின் புகைந்து போகும் மானிட வாழ்விது.
கங்கையின் வேகத்தை
தாங்கிக் கொள்ள சிவன் உண்டு. அவளுக்குள்ளும் சிவமுண்டு. கடந்து போன காலங்களில்
மோதல்களின் கூர்கள் தணிந்திருந்தன. சில மௌனத்தால் கரைந்திருந்தன. கூரான உறைக்குள்
வைக்கப்பட்ட மொன்னையான வாள்கள். வாள் கூரானது என்ற வெற்றுக் கருத்தியல், அவள்
முன்பு எழுப்பிய வெட்டிக் கூச்சல்களுக்கு ஒப்பானது.
கங்கை நிதானமாக ஓடிக்
கொண்டிருக்க, சூரியன் நீரில் படரத் தொடங்கியிருந்தது. நீரின் எழும்பல்கள் அவள் எழுதிய சித்திரங்களை
போன்றிருந்தன. கிருஷ்ணனின் நீலமேனி அணிகலன்களில் ஜொலிக்க, இடையில் பட்டாடை உடுத்தி
கால்களை பின்னிக் கொண்டு கையில் குழலேந்தி, காது வரை ஓடிய கண்களில் பரவசநிலைக்
காட்டி, குத்துவசமாக வைத்திருந்த இடதுக்காலை இடுப்பையொட்டி உடலை வளைத்த பசு பரிவாக
ஒத்தியெடுக்க.. கிருஷ்ணன்.. கிருஷ்ணன்.. அவள் நதியில் இறங்கினாள். அவன்
மாயக்கண்ணன். பிடிக்குள் அகப்படாமல் விலகி விலகி ஓடினான். இன்னதென்று சொல்லவியலாத உணர்வில் மயங்கியது
மனம். அது அவள் அறையெங்கும் நிறைத்து வைத்திருக்கும் ஓவியங்களை எழுதி முடித்தபோது
பெற்ற மீட்சியை போன்றது.
நலம் திகழ் சடையான் முடிக்கொன்றை மலரும்
நாரணன் பாதத்துழாயும்
கலந்து இழிபுனலால் புகர்படு கங்கை’
நாரணன் பாதத்துழாயும்
கலந்து இழிபுனலால் புகர்படு கங்கை’
சிவபெருமானின் சிரசை அலங்கரிக்கும் கொன்றை மலரும், நாராயண மூர்த்தியின் திருவடிகளில் சமர்ப்பிக்கப்பட்ட துளசியும் கலந்தோடும்
எழிலான கங்கை சூரிய ஒளியில் தகதகக்க, துாரத்தில் அடம்பலான புகை உடுக்கையடித்தபடி
நெளிந்தாடியது. எங்கிருந்தோ தீபங்கள் மிதந்து வந்தன. நெருங்கி வர வர அவை ஓடங்களாக
உருமாறின. உள்ளுர்வாசிகளின் பிரயாணம் தொடங்கி விட்டது.
அதிலொன்றில் ஏறிக்
கொள்ள அவள் முடிவு செய்துக் கொண்டாள்.
வெவ்வேறு உணர்வு தளங்களுக்கு நகர்த்தும் இனிய கதை. கங்கை ஓடலாம், ஓடத்திலும் ஏறலாம். அவளுக்கென்ன தடை, யார் தடை போட முடியும். அவளாக தன்னை தளைத்துக் கொள்ள நினைத்தாலும் முடியாது என்பதல்லவோ நிஜம்.
ReplyDeleteநன்றி நண்பரே
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDelete