Search This Blog

Wednesday 23 June 2021

மகாத்மா காந்தியின் பதினேழு தொகுப்பு நுால்களில் முதலாவதான தென்னப்பிரிக்க சத்தியாகிரகம் நுாலில் பிற்சேர்க்கையாக சேர்க்கப்பட்டுள்ள “தென்னாப்பிரிக்கா பற்றி காந்தியின் பேச்சுகள், கட்டுரைகள்“ என்ற சிறுத்தலைப்பிலான உபத்தொகுப்பு குறித்த நுால் அறிமுகம்.

 


இந்நுால் பொது புரிதல்களின் வழியாக அல்லது சாதாரண வாசிப்பில் காந்தியடிகளின் தென்னாப்பிரிக்க வாழ்க்கை மற்றும் போராட்டங்கள் குறித்த ஒரு மேலோட்டமான சித்திரத்தை நமக்களிக்கும். அதே சமயம்தென்னாப்பிரிக்க சத்தியாகிரகம்“ என்ற காந்தியடிகள் எழுதிய நுாலை வாசித்த பிறகோ அல்லது அவரை ஓரளவுக்கு அணுகியபிறகோ இத்தொகுப்பை வாசித்தால் காந்தி மகாத்மாவாகும் தருணங்களை அணுகி நுகர முடியும். அந்த வகையில் இந்த தொகுப்பு மிக முக்கியமானது.

காந்தியடிகளின் எழுத்துகள், உரைகள் அனைத்தையும் திரு.தி.சு.அவினாசிலிங்கம் அவர்களின் தலைமையின் கீழ் அமைக்கப்பட்ட காந்தி நுால் வெளியீட்டுக் கழகம் 1957ல் வெளியிடப்பட்டுள்ளது.  இந்நுால்களின் சிறப்பு இதன் மொழிப்பெயர்ப்பும் அடிக்குறிப்பும் என சொல்லலாம். மொழிப்பெயர்ப்பு செய்து கிட்டத்தட்ட 64 வருடங்களை கடந்த பிறகும் வாசிப்பதற்கு தடைகள் ஏற்படுத்தாத நவீன புனைவுமொழி புழங்குவதில் சிரமமேற்படுத்துவதில்லை. இந்நுாலை திரு.இரா.வேங்கடராஜுலு அவர்கள் மொழிப்பெயர்த்துள்ளார். இரண்டாவதாக சம்பங்கள், பெயர்கள், இடங்கள், அது தொடர்பான நிகழ்வுகள் என எதுவாக இருப்பினும் அடிக்குறிப்பில் அவை தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது கிட்டத்தட்ட மொழிப்பெயர்ப்புக்கிணையான உழைப்பு கோருபவை. காந்தியக் கொள்கைகளின் மீதான பிடிப்பம் ஆர்வமுமின்றி இத்தனை பெரிய பணியை செய்து விட முடியாது. ஆனால் இத்தகைய அளப்பறிய கூட்டு உழைப்பை ஒரு தனி மனிதர் கோருகிறார் எனில், அவர் வாழ்ந்த வாழ்க்கையின் பரிமாணத்தை புரிந்துக் கொள்ளலாம்.  

அவர் அரசிடம் பேச்சு வார்த்தை நடத்திய விதம், ஐரோப்பியர்கள் மீது அவர் கொண்டுள்ள பார்வை, சத்தியாகிரக போராட்டம் பிறந்த விதம், சாத்விக போராட்டத்தின் த்துவமும் அனுபவமும், கொள்கையில் உறுதிக் கொள்வது, மகனுக்கு சிறையிலிருந்து எழுதிய கடிதங்கள், ஜெனரல் ஸ்மட்ஸை சந்திந்து விட்டு அந்த அவசரநிலையிலும் அதனை பதிந்து வைத்த விதம், சத்தியாகிரக போராட்டத்தில் தமிழரின் பங்கு, அவருக்கு நடந்த பிரிவு உபச்சார விழாக்களின்போது அவரது உரை என பரவலான பார்வையை அளிக்கும் நோக்கோடு இந்நுால் தொகுக்கப்பட்டுள்ளதாகவும் கொள்ளலாம். 

1896 அக்டோபர் 14 அன்று முதன்முதலாக காந்தி முதன்முறையாக மதராஸ் வருகிறார். அக்டோபர் 26 பச்சையப்பாஸ் ஹாலில் பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்றுகிறார். மதராஸ் மகாணத்தின் தலைநகராகவும் அந்த பிராந்தியத்தின் வணிக, அரசியல் மையமாகவும் விளங்கிய மதராஸ்தான் நேட்டால் பிணைத்தொழிலாளர்கள் பலருக்கும் சொந்த ஊர் என்பதால் அங்கு கூட்டத்திற்கு குறைவில்லை. 


தென்னாப்பிரிக்காவில் வசிக்கும் ஒரு லட்சம் பிரிட்டிஷ் இந்தியர்கள் சார்பாக நான் உங்களிடம் முறையிட்டுக் கொள்ளவே வந்திருக்கிறேன் என்று தொடங்குகிறார்.. 

1) 

உரையின் தொடக்கத்தில் தென்னாப்பிரிக்காவை, நேட்டாலை பற்றி சிறு அறிமுகம் செய்கிறார். 

2)   ஒப்பந்தக்கூலிகளில் சென்னையிலிருந்து வங்காளத்திலிருந்துமே அதிகம் பேர் சென்றிருப்பதாக அதனுடன் நம் தொடர்பை கூறுகிறார். 

3)   தென்னாப்பிரிக்க இந்தியர்கள் நடத்தப்படும் வித்த்தை தெளிவாக எடுத்து வைக்கிறார். அங்கு இந்தியர்கள் கூலிகள் என்றே அழைக்கப்படுகின்றனர். கூலி கடைக்கார்ர்கள், கூலி ஸ்டோர், கூலி முதலாளிகள் என்று. கப்பலே வைத்திருந்தாலும் கூலி கப்பல் என்றுதான் அழைக்கப்படுமாம். 

4)   ரயில்வே டிராம் அதிகாரிகள் இந்தியர்களை மிருகங்களை போல நடத்துகின்றனர். இந்தியர்கள் கோச்சு வண்டிகளில் உட்புறம் அமர முடியாது. எப்படிப்பட்ட குளிர்க்காலம் என்றாலும் ஐரோப்பியரை போல பணம் செலுத்திய போதிலும் வெளிப்புறம் தொற்றிக் கொண்டுதான் பயணிக்க வேண்டும். எத்தனை வசதிப்படைத்த ஆசியர் என்றாலும் உணவகங்களில்  அமர்ந்து உண்ண முடியாது. 

5)   நடைப்பாதையில் நடக்கும்போது அவமதிக்கப்படலாம். பிடித்துத் தள்ளப்படலாம். 

6)   இந்தியர்களை ஆசிய ஆபாசங்கள், காட்டு மிராண்டிகள், கருப்பு விஷமிகள், வெள்ளை முயல்களை போல ஏராளமான பிள்ளை பெற்றுக் கொள்கிறவர்கள் என்று எள்ளல் செய்வார்கள். அவர்களின் சட்டப்புத்தகங்கள் கூட இந்தியர்களை ஆசியாவின் நாகரிகமற்ற இனத்தை சேர்ந்தவர்கள் என்றே விவரிக்கிறது. 

7)   டிரான்ஸ்வாலில் நாம் சொந்தமாக நிலம் வைத்துக் கொள்ளக்கூடாது. குறிப்பிட்ட இடத்தை தவிர வேறு இடங்கிளல் வசிக்கவோ வர்த்தகம் செய்யவோ கூடாது. ஆரஞ்சு ப்ரீ ஸ்டேட்டிலும் இதே நிலைமைதான். 

8)   நேட்டால் சட்டசபை இந்திய குடியேற்ற திருத்த மசோதாவை கொண்டு வருவதால் இந்தியர்களின் வாக்குரிமை பறிக்கப்படுகிறது. குறிப்பாக இனரீதியாக இயற்றப்படும் சட்டத்தையும் அதன் காரணமாக ஏற்படும் அவமதிப்பையும் ஆட்சேபிக்கிறோம். இந்த மசோதாவுக்கு பிரிட்டிஷ் மன்னரின் அனுமதியும் கிடைத்திருக்கிறது. புதிதாக எந்த சலுகையும் பெற வேண்டும் என்பதற்காக இந்த மசோதாவை மறுக்கவில்லை. இதுவரை அனுபவித்து வருவதையே பறிப்பதாக இருப்பதால்தான் எதிர்க்கிறோம் 

9)   அவர்களின் நோக்கமோ எதிர்காலத்தில் உருவெடுக்கப்போகும் தென்னாப்பிரிக்க தேசியத்தின் ஒருபகுதியாக இந்தியர் உருவெடுப்பதை தவிர்த்து அந்நாட்டு சுதேசிகளின் நிலைக்கு இந்தியரை இழிவுப்படுத்துவதே. மேலும் நாம் வர்த்தகத்தில் முன்னேறி வருவது அவர்களை கலக்கம் கொள்ளச் செய்கிறது. 

10) ந்த சட்டத்தின்படி ஒப்பந்தக்கூலிகளுக்கான சலுகைகள் ரத்து செய்யப்பட்டு விட்டன. அவர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா திரும்பவில்லையெனில், வருடத்துக்கு 3 பவுன் தலைவரி செலுத்தவேண்டும் என்கிறது சட்டம். மூன்று பவுன் வரி என்பது  அவர்களுடைய அரை ஆண்டு சம்பளத்துக்கு சமமான தொகை. மீறுபவர்களின் பொருட்களை பறிமுதல் செய்து விட அரசுக்கு அதிகாரம் உண்டு. நாங்கள் உள்ளுர் பார்லிமெண்டின் இந்த மசோதாவை பலமாக எதிர்த்தோம். இதனை நிராகரிக்க வேண்டும் என்று குடியேற்ற நாட்டு மந்திரி சேம்பர்லேனுக்கு மனு செய்தோம். 

11) நேட்டாலில் இருக்கும் இந்தியர் சம்பந்தமான விஷயங்களை விசாரிப்பதற்கென ஒரு கமிஷன் நியமிக்கப்பட்டது. அதன் உறுப்பினர்கள் இந்தியர்களுக்கு தம் வாழ்நாளின் பொன்னானக்காலத்தை நாம் பயன்படுத்திக் கொண்டு அவர்களுடைய நன்மையெல்லாம் பெற்றுக் கொண்டு அவர்களை மீண்டும் பட்டினியில் வாட திருப்பியனுப்புவது நியாயமில்லை என்று தனிக்குறிப்பில் கருத்து தெரிவித்திருந்தனர். உண்மைதான். திரும்பி விடும் இந்தியர்கள் இங்கே வேலை தேடிக் கொள்வது சிரமம்தான். 

12) இந்த புதிய சட்டம் மாற்றப்படாவிட்டால் அல்லது ரத்து செய்யப்படாவிட்டால் மோசமான நிறத்துவேஷமும் தற்கொலை சாவுகளும் நிகழும். ஏனெனில், ஒப்பந்த தொழிலாளிகளுக்கு ஒப்பந்த வேலையை விடுத்து வேறு வேலைக்கும் மாற்றிக் கொள்ள முடியாது. ஒப்பந்த்திலிருந்து விடுப்பட்ட ஒருவரை பின்தொடர அவது சுயேச்சை அடையாள அட்டை போதும். அதை தொலைத்து விட்டால் 3 பவுன் வரி செலுத்த வேண்டும். இரவு 9 மணிக்கு மேல் இந்தியர் வெளியே செல்ல வேண்டுமென்றால் அனுமதி சீட்டு வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால் இருட்டறையில் அடைத்து வைக்கப்படுவர். 

13) திரும்பி விடுவதற்கான சந்தர்ப்பத்தை இந்தியர்கள் உபயோகித்துக் கொள்வதில்லை என்பது இருக்கும் கஷ்டங்களை அவர்கள் சகித்து கொள்வார்கள் என்பதை நிரூபிப்பதாக இருக்கலாம். தங்களுடைய நிலைமையை அறிந்தும் கஷ்டங்களுக்கு உடன்படுதல் அவமானகரமானது என்பதை அவர்கள் உணரும்படி செய்வது நமது கடமையாகிறது. 

14) இப்படி எல்லா பக்கங்களிலும் நெருக்குதலை இந்தியர்கள் சந்திக்கின்றனர்.. இங்கும் இங்கிலாந்திலும் எங்களுக்காக எதுவும் செய்யப்படாமல் போகுமானால் கௌரவமான இந்தியர் யாரும் தென்னாப்பிரிக்காவில் வாழ முடியாது அழிந்துப் போக வேண்டியதுதான். 

15) இதனால்  எங்கள் நிலையில் நீங்கள் இன்னும் கவனம் செலுத்த வேண்டும் என்பதே என் தாழ்மையான அபிப்பிராயம். எல்லா சமூகங்களிலும் உள்ள நியாயவான்களும் பத்திரிக்கைகளும் எங்களுக்கு இழைக்கப்பட்டு வரும் கொடுமைகளை குறித்து தங்கள் வெறுப்பை தெரிவித்தால் அதன் மூலம்  அந்த அநீதிகளின் வேகம் தணியலாம் அல்லது நீங்கலாம் என்பதால் பொதுமக்களிடம் முறையிட்டுக் கொள்கிறோம். எங்கள் சுதந்திரத்தை பாதிப்பதாக இருக்கும் சட்டங்களை காலனிசட்டசபைகள் நிறைவேற்றினாலும் அதை பிரிட்டிஷ் சர்க்கார் அனுமதிக்க்கூடாது என சர்க்காரை வற்புறுத்துகிறோம். 

அங்கிருக்கும் நிலையை தெளிவான புரிதலோடு முன்வைக்கிறார்.



லார்ட் செல்போர்னிடம் முறையீடு

1905 நவம்பர் 22 ஆம் தேதி பிரிட்டிஷ் இந்திய சங்கத்தலைவர் அப்துல்கனியும் காந்தியும் மற்ற மூவரும் அடங்கிய துாதுக்குழு ஒன்று ஹை கமிஷனர் லார்ட் செல்போர்னை கண்டு பேசியது.  துாதுக்குழுவினர்  தயாரித்திருந்திருந்த அறிக்கையை செல்போர்னிடம் கொடுப்பதற்கு முன்னால் காந்தி அவரிடம் கூறிய விபரம்

சொல்ல வந்ததை கூறுவதற்கு முன்பாக தென்னாப்பிரிக்க இந்தியர்களின் மனநிலை முன் வைக்கிறார். லார்ட் செல்போர்ன் கூட்டத்தில் பிரயோகித்த சொற்களிலும் கருத்துகளிலும் உறுத்தலாக தோன்றியவற்றை நேரிடையாக அவரிடம் எடுத்துக் காட்டுகிறார்.

அகதிகளல்லாத பிரிட்டிஷ் இந்தியர் எவரும் அடுத்தாண்டு பிரதிநிதிகளின் சபை இவ்விஷயத்தை பரிசீலனை செய்வதற்கு முன்னால் காலனிக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் 

கூலிக்காரக் கடைக்கார்கள்என்று உபயோகித்த சொற்பிரயோகம்.

இவையிரண்டுமே இந்தியரின் நலனுக்கானதல்ல என்று கூறி விட்ட பிறகு விஷயத்துக்கு வருகிறார்.

அமைதி பாதுகாப்பு அவசரச்சட்டம் இந்தியக்குடியேற்ற தடைச் சட்டமாகி விட்டது. அனுமதிச்சீட்டு பெறுவதற்கு இந்தியர்களுக்கு அதிகளவு காலதாமதம் ஏற்படுகிறது. லஞ்சஊழல் ஏஜெண்டுகள் அகதிகளை உறிஞ்சுகிறர்கள். அனுமதிச்சீட்டு பெற சாட்சிகளாக இருவரை குறிப்பிட வேண்டும். அதுவும் ஐரோப்பியர்களின் சாட்சியம் வேண்டும் என்பதெல்லாம் இந்தியரை ஒழித்துக் கட்டும் நடைமுறைகள். பதினாறு வயதிற்குட்ட சிறுவர்களுக்கும் இப்போது அனுமதி கேட்கப்படுகிறது. இதனால் பிள்ளைகள் பெற்றோர்களை விட்டு பிரிய நேரிடுகிறது. நாங்கள் விரும்புவது அரசியல் அதிகாரத்தையல்ல. மற்ற பிரிட்டிஷ் பிரஜைகளுடன் அமைதியாகவும் ஒற்றுமையாகவும் சுயமரியாதையுடனும் கௌரவமாகவும் வாழ்வதைதான் விரும்புகிறோம்.

ஒரு இனத்துக்கும் மற்றோர் இனத்துக்கும் வேற்றுமைப்படுத்தும் சட்டத்தை இயற்ற பிரி்ட்டிஷ் அரசு முடிவு செய்ய மாத்திரத்திலேயே பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் நாங்கள் விரும்பி போற்றிய விலை மதிக்க முடியாத சுதந்திரத்துக்கு முடிவுக்காலம் வந்து விட்டது என்றே கருதுகிறேன்.

மகாத்மா மீது வழக்கு – 1907 (இது குறித்து இந்தியன் ஒப்பீனியனில் வெளியான செய்தி)

ஆசியர்களை பாதிப்பதற்கென்றே டிரான்ஸ்வாலில் கொண்டு வரப்பட்ட சட்டத்திற்கு பிரிட்டிஷ் அரசின் அங்கீகாரம் கிடைத்து விடாதபடி காந்தியடிகள் செய்த முயற்சியெல்லாம் வீணாயின.

ஜோஹான்னஸ்பர்க் எம்பயர் தியேட்டரில் நடந்த 3000 பேருக்கும் மேல் கூடிய பொதுக்கூட்டத்தில் என்னவானாலும் சரி, சட்டத்தை மீறி போராடுவது, அதனால் ஏற்படக்கூடிய துன்பங்களை ஏற்றுக் கொள்வது என்று முடிவெடுக்கப்பட்டது.

1907 டிசம்பர் 26 அச்சட்டத்திற்கு பிரிட்டிஷ் மன்னரின் அங்கீகாரம் கிடைத்தவுடன் ஆசிய சமூகங்களை சேர்ந்த பல தலைவர்களுக்கும் மாஜிஸ்டிரேட் முன் ஆஜராகும்படி சம்மன்கள் வந்தன. சட்டப்படி பதிவு செய்ய மனுப்போடாததால் அவர்கள் டிரான்ஸ்வாலை விட்டு குறிப்பிட்ட தேதிக்குள் வெளியேறி விட வேண்டும் என்றும் தவறினால் இரண்டுமாத வெறுங்காவல் தண்டனை என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதன்படி கைது செய்யப்பட்டு கோர்ட்டுக்கு கொண்டு வரப்பட்டவர்களில் காந்தியும் ஒருவர்.

சட்டப்படி பதிவு அத்தாட்சியை பெறாமல் அவர் டிரான்ஸ்வாலில் இருந்தார் என்பது அவர் மீதான குற்றச்சாட்டு. கோர்ட்டில் ஏராளமான கூட்டம். தடுப்புகள் துாக்கியெறியப்படுமளவுக்கு நெரிசல். அவர் தன் தரப்பு வாதத்தை முன் வைக்க அனுமதி கேட்டபோது மாஜிஸ்டிரேட் மறுத்து விடுகிறார். 48 மணிநேரத்தில் காலனியை விட்டு வெளியேற வேண்டும் என்று உத்தரவிடுகிறார்.

மீண்டும் காந்தி 1908 ஜனவரி 11 ஆம் தேதி தனக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மீறி விட்டதாக ஒப்புக் கொள்கிறார். இதே போன்ற குற்றங்களுக்கு என் சகாக்களுக்கு 3 மாத கடுங்காவல் தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டதாக அறிகிறேன். அபராதம் செலுத்த தவறினால் மேலும் 3 மாதங்கள் கடுங்காவல் தண்டனை வழங்கப்படும் என தீர்ப்பு கூறியுள்ளீர்கள். அவர்கள் செய்தது குற்றமானால் அதை விட பெரிய குற்றம் செய்த எனக்கு மேலும் கடுமையான தண்டனை தர வேண்டும் என்கிறார்.


இறுதியில் காந்திக்கு 2 மாத வெறுங்காவல் தண்டனை கிடைத்தது.

மகாத்மா மீது வழக்கு – 1913

காந்தியடிகள் மீது 3 குற்றங்களைச்சாட்டி 1913 நவம்பர் 11 ஆம் தேதி டண்டீ மாஜிஸ்டிரேட் முன்னால் வழக்கு விசாரணைக்கு வருகிறது. காந்தி தரப்பில் காட்பிரே ஆஜராகிறார். இந்திய ஒப்பந்தக்கூலிகளை மாகாணத்தை விட்டு போய் விடும்படி துாண்டினார் என்பது அவர் மீதான முக்கிய குற்றச்சாட்டு.

காலனிக்கு வெளியே அம்மக்களை அழைத்துச் சென்றது சிறந்ததொரு நோக்கத்திற்கே. மற்றபடி முதலாளிகள் மீது எனக்கு எந்தவித விரோதமும் கிடையாது. இந்த போராட்டத்தால் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் நட்டத்திற்கு வருந்துகிறேன். ஆனால் விதிக்கப்பட்டிருக்கும் வரி என் நாட்டாரால் தாங்கமுடியாத பளு. அதை நீக்க வேண்டும். ஸ்மட்ஸுக்கும் கோகலேக்குமிடையே இருக்கும் நிலைமையை முன்னிட்டு தெளிவாகக் காட்டக்கூடிய காரியம் ஒன்றை செய்தாக வேண்டியது என் கடமை. என் நாட்டினருக்கு யோசனை கூறியதிலும் எனக்குள்ள கடமையையே செய்திருக்கிறேன். வரி நீக்கப்படும் வரை வேலைக்குப் போக வேண்டாம் என்றும் தானமாக கிடைக்கும் உதவிகளை கொண்டு வாழுமாறும் அவர்களுக்கு மீண்டும் ஆலோசனை கூறியாக வேண்டியதும் என் கடமை. சிரமப்படாமல் அவர்களுடைய குறைகளுக்கு பரிகாரம் கிடைத்து விடாது என்பதில் நிச்சயமாயிருக்கிறேன் என்று வாக்குமூலம் கொடுக்கிறார்.

வரியை நீக்குவதாக ஸ்மட்ஸ் வாக்குறுதி அளித்திருக்கிறார்.

ஆனால் அரசோ பெண்கள் குழந்தைகளுக்கு மட்டுமே இவ்வரியை நீக்க நேட்டால் பார்லிமெண்ட் ஒப்புக் கொண்டுள்ளது. ஆண்கள் மீதிருக்கும் வரியை நீக்குவதாக எந்த வாக்குறுதியும் கொடுக்கவில்லை என்றார்கள்.

இதை ஆதாரமாக கொண்டே வேலைநிறுத்தம் செய்வதென்பது சட்டத்தை மீறுவதாகும் என்பதாக குற்றம் சாட்டி அவருக்கு கடினமான வேலையுடன் கூடிய ஒன்பது மாத சிறைத்தண்டனை வழங்கப்படுகிறது.

அவரை காண மக்கள் பெருமளவில் கூடியிருக்க, போலீசார் அவரை ரகசியமாக சிறைக்கு கொண்டு போய் விட்டனர். பிறகு வக்கீல் அவரை சந்தித்தபோதுதான் சந்தோஷமாகவும் உறுதியாகவும் இருப்பதாகவும் 3 பவுன் வரியை ரத்து செய்தாலன்றி வேலைநிறுத்தத்தை கை விட வேண்டாம் என்றும் மக்களுக்கு சேதி அனுப்புகிறார்.

சிறை அனுபவங்கள்

அவர் முதன்முதலில் சிறைப்பட்டது 1908 ஜனவரி 10ஆம் தேதியன்று. 1908 ஆம் ஆண்டின் அந்த ஜனவரி பத்தாம் நாளன்று ஜோஹானஸ்பர்க்கின் ஃபோர்ட் பிரிசன் சிறையில் அவரை உடைகளை களையச்செய்து உடல் எடை பார்க்கப்பட்டு அவரது விரல் ரேகைகள் பதியப்பட்டன. பிறகு அவருக்கு சிறைக்கான உடைகள் அளிக்கப்பட்டபோது பொழுது நகர்ந்து மாலையாகியிருந்தது. இரவு உணவுக்காக எட்டு அவுன்ஸ் ரொட்டி கொடுத்து அவரை சிறையறைக்கு அனுப்பியபோது இலண்டனில் சட்டம் பயின்ற அந்த பாரிஸ்டருக்கு அது முன்பின் அறியாத புதிய அனுபவமாகவே இருந்தது. அவரை தவிர அவ்வறையில் பனிரெண்டு கைதிகள் இருந்தனர். அவர் கையோடு எடுத்துச்சென்றிருந்த பகவத்கீதையையும் டால்ஸ்டாய், சாக்ரடீஸ் ரஸ்கின் ஆகியோரின் புத்தகங்களையும் தம்மருகே வைத்துக் கொண்டார். இரவுணவுக்கு பின் மரப்பலகை படுக்கையில் படுத்துக் கொள்கிறார். 


அவர் தனது சிறை அனுபவங்களை குறித்து எழுதியிருக்கும் கட்டுரையை கூட  சாப்பாடு, படிப்பு, இடம், நோய், சிறை வேலைகள், தான் அங்கு படித்தவை, உணர்ந்துக் கொண்டவை என பிரித்துக் கொள்கிறார்.

1)   சிறையுணவு, சத்தியாகிரக கைதிகளுக்கு உண்ணாமுடியாத அளவுக்கு இருந்தது. அதுவும் உண்டு பழக்கமில்லாத சோளக்கஞ்சி போன்ற உணவுகள் உடலாலும் மனதாலும் கூட ஏற்றுக் கொள்ள முடியாமலிருந்தது. அது நாள் கடந்துப்போகும்போது மன உறுதியை குலைத்து விடும். 

2)   எங்கு வாழ்கிறோமோ அந்த நாட்டின் உணவு வகைகளை ஏற்றுக் கொள்வது அந்நாட்டிற்கு மரியாதை செலுத்துவது போன்றது என்று நினைத்தாலும் உணவுக்குறித்த பரிசோதனைகளில் ஈடுப்பட்டு வரும் அவருக்கு அவர்கள் தொடர்ந்து அளித்து வரும் உணவில் ஆசியர்களின் உடல்நலம் கெட்டு விடலாம் என்ற அச்சமும் இருந்தது. 

3)   மேலும் ஆசியர்களுக்கும் ஐரோப்பியர்களுக்குமான அளிக்கப்படும் சலுகையிலிருந்த பெரும் ஏற்றத்தாழ்வுகள் அவரை காயப்படுத்தின. 

4)   அதற்காகவே சிறைகளின் டைரக்டருக்கு சிறையுணவு குறித்தும் மனு எழுதுகிறார். 

5)   பூர்வக்குடிகளோடு ஆசியர்களை இணைப்பதென்பது ஆசியர்களின் உரிமைகளை முடக்கிப்போடுவதோடு மேற்கொண்டு குடியேற்றம் நடைபெறவிடாமல் பார்த்துக் கொள்ளும் அரசின் நடவடிக்கையின் ஒரு வெளிப்பாடு என்பதை உணர்ந்துக் கொள்வதால் அதை எதிர்க்க வேண்டும் என்று நினைக்கிறார். இதில் நாம் தலையிட ஒன்றுமில்லை என்று எண்ணி விட்டால் சுயமரியாதையை இழந்து விடுவோம். சிறிய காரியங்கள்தான் நம்மை உயர்த்தவோ தாழ்த்தவோ செய்கிறது. சுயமரியாதை இல்லாதவனுக்கு எம்மதமும் இல்லை என அரபுநுால் ஒன்று கூறுகிறது என்கிறார்.

நோய்

கடுமையான வெயிலில் சத்தியாகிரக கைதிகளுக்கு மண்ணை தோண்டும் பழக்கமில்லாத வேலை அளிக்கப்படுகிறது. அதோடு சிறையிலிருந்து வேலை செய்யும் இடத்துக்கு கிட்டத்தட்ட ஒன்றரை மைல் துாரத்திற்கு நடக்க வேண்டும். வேலை செய்த களைப்போடு மீண்டும் நடந்து திரும்ப வேண்டும். வேலை சற்று மந்தப்பட்டால் வார்டன் உடனடியாக அதட்டுவார்.  காந்திக்கும் கைகளில் கொப்பளங்கள் ஏற்பட்டன. மண்வெட்டி தூக்கிப்பிடித்து நிலத்தை கொத்த இயலவில்லை. எனினும் கடவுளிடம் பிரார்த்தனை செய்துக்கொண்டு மனதிற்கு நம்பிக்கை அளித்துக் கொள்கிறார். ஆனால் சக கைதிகளின்/ சத்தியாகிரகிகளின் துயரங்களை காணும்போது மனம் நம்பிக்கை இழந்துப்போகிறது. பகல் முழுவதும் அதீத வெயிலில் வேலை செய்ய நேரிட்டமையால் சிலருக்கு மயக்கத்தோடு கூடிய இழுப்பு நோய் வந்து. என்னை நம்பி இத்தனை பேர் தங்கள் துயரை பொறுத்துக் கொள்கிறார்களே...? நான் எடுத்து வைத்த அடி சரியானதுதானா? நான் அவர்களுக்கு சொன்ன யோசனை தவறாக போகுமானால் கடவுள் முன்னிலையில் நான் எவ்வளவு பெரிய பாவம் செய்தவன் ஆகிறேன்? அவரது இந்த எண்ணம் அவருக்கு எத்தனை பெரிய துயரை தந்திருக்கும்? கடவுளையே சாட்சியாக வைத்து மீண்டும் இதை குறித்து நினைத்துப் பார்க்கிறார். தான் செய்துக் கொண்டிருப்பது சரி என்ற உறுதி ஏற்படுகிறது. எதிர்கால இன்பத்தை முன்னிட்டு நிகழ்காலத்தில் எல்லாவித துன்பங்களையும் சிரமங்களையும் அனுபவிப்பதில் தவறில்லை. நிரந்தர அடிமையாக வாழ்வதை விட துன்பம் அனுபவிப்பது சாவதே மேல் என்றும் தோன்றுகிறது.

இடம்

ஐம்பது பேர் தங்குமிடத்தில் 100 பேர் தங்க வேண்டியிருந்த்து. எச்சில் துப்பும் பழக்கம் வேறு நிறைய பேருக்கிருந்த்து. நல்லவேளையாக சொன்னால் கேட்டுக் கொண்டார்கள் என்றார். கழிவறை பகுதிகளை சுத்தமாக வைத்துக் கொள்ள பழக்கி விடுகிறார். இது சுகாதாரக்கேடுகளால் விளையும் நோயை உண்டாக்காமல் செய்தது.

படிப்பு

ஒரு மேசை, பேனா, மை வைத்துக் கொள்ள அனுமதி உண்டு. காந்தி அங்கு கார்லைல் எழுதிய நூல்கள், பர்ன்ஸ், ஜான்ஸன், ஸ்காட் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்று நூல்கள், ஹக்ஸ்லியின் சொற்பொழிவுகள், பகவத்கீதை, டால்ஸ்டாய், ரஸ்கின், சாக்ரடீஸ் ஆகியோரின் புத்தகங்களை தீவிரமாக வாசிக்கிறார். காலையில் கீதை, பகல்வேளைகளில் குர்ரான், சீனகிறிஸ்துவர் ஒருவருக்கு பைபிள் போதனை மற்றும் ஆங்கிலம் கற்றுத்தருதல் என்று நேரத்தை வகுத்துக் கொள்கிறார்.

அதை ஒரு படிப்பினையாக்கிக் கொள்ளுதல்

வார்டன் உடலுக்கிழைத்த துன்பத்தையெல்லாம் பொறுமையாக சகித்து வந்தேன். பிறகு வார்டனே அந்த கடுமையை விலக்கிக் கொண்டு விட்டார். ஒருவேளை நான் அவரை எதிர்த்திருந்தேனானால் எனது சக்தி அங்கேயே விரயமாகி போயிருக்கும். அவரும் என் விரோதியாகியிருப்பார் என்கிறார். இது சத்தியாக்கிரகத்தின் சிறு வடிவம். இதிலிருக்கும் மூன்று இலாபாத்தை அவர் உணர்கிறார்.

1.   யாரையும் விரோதித்துக் கொள்ள தேவையில்லை

2.   அவர்களின் மனச்சாட்சியை போய் தட்டிவிட்டு வர முடிகிறது.

3.   மனவலிமை கூடி விடுகிறது.

ஒட்டுமொத்தமாக தன் சிறை வாழ்க்கையே அவர் தனக்கு படிப்பினையாகவும் வாசிக்க வேண்டிய இடமாகவும் மாற்றிக் கொள்கிறார். இன்னும் கூடுதல் நாட்கள் இருந்திருப்பின் தான் வாசித்தவைகளை மொழிப்பெயர்ப்பு செய்திருப்பேன் என்று ஆதங்கப்படுகிறார். 

சத்தியாகிரகம் பிறந்த விதம்

தாகத்துக்கு நீர் கொடுத்தவருக்கு நீ திரும்ப நீர் கொடுத்து விடுவதில் பெரிது ஏதுமில்லை

தீமை செய்தவருக்கு நன்மை செய்வதிலேயே உண்மை பெருமை உண்டு.

இந்த குஜராத்திப்பாடல் அவரை சிறு வயதிலேயே மனதில் அதிக மாறுதலை உண்டாக்கியது என்கிறார்.

பைபிளின் புதிய சித்தாந்தமே நியாயமாக நடப்பதில் எனக்கு விழிப்புண்டாக்கியதோடு சாத்விக எதிர்ப்பின் மேன்மையை உணரச்செய்தது. மலை பிரசங்கத்தில் தீயவனாக இருப்பவனை எதிர்க்காதே. வலது கன்னத்தில் அடித்தால் இடதுக்கன்னத்தில் காட்டு. உன்னுடைய விரோதிகளிடமும் அன்பு செலுத்து. உன்னை துன்புறுத்துபவர்களும் பரலோகத்திலிருக்கும் உன் பிதாவின் மக்களாக இருக்க வேண்டுமென்று அவர்களுக்காக பிரார்த்தனை செய் என்ற உபதேசங்களை பகவத்கீதை உறுதிப்படுத்தியது.

டால்ஸ்டாயின்உன்னுள் இருக்கும் கடவுளின் ராஜ்யம்என்ற புத்தகம் அதற்கு நிரந்தரமான உருவை அளித்த்து.  


மனித வர்க்கம் எவ்வளவு தொன்மையானதோ அவ்வளவு தொன்மையானது சாத்விக எதிர்ப்பு என்ற ஆன்மசக்தி. ஏசு கிறிஸ்து, சாக்ரடீஸ், டேனியல் போன்றவர்கள், ஆன்மாவோடு ஒப்பிட்டால் உடல் மிக மிக அற்பமானது என்று கருதினார்கள். “தீயச்செயல்களின் தொந்தரவிலிருந்து நிவாரணம் பெறுவதற்கு நாம் ஆன்மசக்தியை உபயோகிப்பின் இன்றிருக்கும் துன்பங்களை தவிர்க்க முடியும். இதனால் மற்றவர்களுக்கும் துன்பம் விளையாது. இதை தவறாக உபயோகித்து வி்ட்டால், உபயோகிப்பவருக்குதான் சிரமமே தவிர யாருக்கு எதிராக பிரயோகிக்கபட்டதோ அவருக்கு துன்பத்தை உண்டாக்குவதில்லை. தீமையை தீமையால் எதிர்ப்பதை விட நல்லது செய்வதனால் எதிர்க்க வேண்டும். அதாவது மிருகபலத்தை, மிருகபலத்தால் எதிர்க்காமல் ஆன்மபலத்தால் எதிர்க்க வேண்டும். இதுவே இந்திய வேதாந்தத்தில்எந்த ஜீவராசிக்கும் தீங்கிழைக்காத தன்மைஎன்று விவரிக்கப்பட்டுள்ளது. இதை அனுசரிக்கும்போது சரீரத் துன்பங்களை அனுபவிக்க நேரிடும். ஆனால் அது உலக துன்பங்களை விட குறைவானது.

இந்த சக்தியை வெற்றிகரமாக உபயோகிக்க, உடலிலின்று ஆன்மா வேறானது என்பதையும் அது நிரந்தரமானது, உயர்வானது என்பதையும் உணர வேண்டும் என்கிறார்.

1909ல் சத்தியாகிரக போராட்டம் சம்பந்தமாக அவர் இந்தியாவுக்கு அனுப்பி வைத்த செய்தியில்

1.   மிருகபலத்தை விட சாத்விக எதிர்ப்பே மேலானது.

2.   ஐரோப்பியருக்கும் இந்தியருக்கும் இயற்கையான தடைகள் ஏதுமில்லை.  இந்தியாவில் ஆட்சி நடத்தும் பிரிட்டிஷாரின் நோக்கம் எதுவாக இருப்பினும் நியாயம் வழங்க வேண்டும் என்ற ஆர்வம் பொதுவாகவே அவர்களுக்குண்டு என்கிறார்.

3.   அது அவர் போராட்டத்தில் ஈடுப்பட்டிருக்கும் காலம். ஜெனரல் ஸ்மட்ஸின் நம்பிக்கைத்துரோகத்துக்கு பிறகும் அவருடைய எதிரிகளை குறித்த அவர் கருத்து அப்போதும் அதுவாகவே இருந்த்து,

4.   அவர் காங்கிரசுக்கு அனுப்பிய செய்தியிலும் சத்தியாகிரகத்தில் வன்முறை முழுமையாகவே நிராகரிக்கப்படுகிறது. நிரந்தரமான சீர்த்திருத்தங்களை அடைவதற்கு சரியான மார்க்கம் துன்பங்களை தாமே அடைவதற்கு தயாராக இருப்பதுதான். துவேஷத்தை அன்பைக் கொண்டு எதிர்க்க பாடுபடுவதை இங்குள்ள இந்தியர்கள் புரிந்துக் கொண்டு விட்டனர் என்கிறார். அரசுக்கும் அரசியலமைப்பு சட்டங்களுக்கும் கீழ்ப்படிவதை விட கடவுளுக்கும் அவரது சட்டங்களுக்கும் கீழ்படிதலே முக்கியமானது. மனிதன் ஆக்கி வைக்கும் சட்டங்கள் கடவுளுக்கு முரணானது என்று கருதும்போது எதை எதிர்க்கவோ மறுக்கவோ தயங்குவதில்லை. அதனால் ஏற்படும் துன்பங்களை வருத்தப்படாமல் ஏற்றுக்கொண்டு அதற்கான நிவர்த்தியை காலப்போக்கின் மீதும் மனித சுபாவத்தின் சிறந்த பண்பின் மீது நம்பிக்கை வைத்து துன்பத்தை அனுபவிக்கின்றனர். இதனால் பணக்கார்கள் கூட பரம ஏழைகள் ஆகி விட்டனர். ஒருவரில்லாமல் மற்றவரால் ஆகாது என்பதை உணர்வதால் மதம் சார்ந்த பிரச்சனைகள் இங்கில்லை. ஒரே நோக்கமும் ஒருமித்த செயல்பாடுகளுமாக நாங்ள் இருக்கிறோம். இப்போராட்டத்தை காங்கிரஸ் கவனிக்க வேண்டும் என்கிறார். கூடவே தன்னை அதிகபிரசங்கி என கருதிக் கொள்ள வேண்டாம் என்வும் கூறுகிறார். 

மணிலாலுக்கு கடிதம். அப்போது அவருக்கு பதினேழு வயதிருக்கலாம். 25.3.1909

கல்வி கற்க விரும்பும் மகனிடம் நீ பாபுவின் பள்ளியில் படிப்பதாக கேட்பவரிடம் சொல் என்கிறார். வெறும் எழுத்தறிவு கல்வியாகி விடாது. நன்னடத்தையை விருத்தி செய்வதுதான் உண்மையான கல்வி. கடமையை பற்றிய அறிவே கல்வி. அம்மா, அண்ணி பார்த்துக் கொள்ளும் அரிய வாய்ப்பு இது. இதன் வழியே நீ கல்வி கற்றுக் கொண்டிருக்கிறாய் என்கிறார்.

நாட்டின் நன்மைக்காபடிக்க வேண்டுமென்றால் இப்போதே அதைதான் செய்துக் கொண்டிருக்கிறாய். தன்னைத்தானே அறிந்துக் கொள்ள படிக்க வேண்டுமென்றால் நல்லவனாக இருக்க கற்றுக் கொள்ள வேண்டும். நீ இப்போதும் அப்படிதான் இருக்கிறாய் என மற்றவர்கள் சொல்கிறார்கள். பிழைப்புக்கு சம்பாதிக்க வேண்டும் என படிக்க விரும்பினால் அது தவறானது. ஏனெனில் ஒவ்வொருவருக்கும் படியளப்பவர் கடவுள். உடலை உழைத்து ஏதாவது சிறு வேலை செய்து சம்பாதித்துக் கொள்ளலாம். போனிக்ஸில் செய்வதை தொடர்ந்து செய்து வா. நமது லட்சியம் ஃபீனிக்ஸை உயர்த்துவது. அதன் வழியே நாம் ஆன்மாவை கண்டடையவும் நாட்டுக்கு தொண்டு செய்யவும் முடியும்.

பனிரெண்டு வயதிற்குட்பட்ட வாலிபப்பருவத்தோடு வேடிக்கை, விளையாட்டு என்பவற்றை முடிவுக்கு கொண்டு வந்து விட வேண்டும். பிறகு புலனடக்கம், உண்மையை அறிவதற்காக ஆர்வம், பிற உயிர்க்கு தீங்கு எண்ணாமை போன்றவற்றை மனதின் இயல்புகளாக்கி கொள்ள வேண்டும். வற்புறுத்தலின் காரணமாக இவை மனதில் உதிக்காமல் மகிழ்ச்சியோடு இச்செயல்களில் ஈடுபட வேண்டும். தான் கண்டறிந்தவற்றை குருவாக நின்று மகனுக்கு பயிற்றுவிக்கிறார்.  

ஏழ்மையே நமக்குள்ள நிலைமை. அதுவே பாக்கியம் என்கிறார்.

தோட்டவேலைகளில் அதிகம் ஈடுபட சொல்கிறார். பிற்காலத்தில் அதை நம்பிதான் இருக்க வேண்டியிருக்கும் என்கிறார். கணிதம், சமஸ்கிருத்த்தில் அதிக கவனம் செலுத்தும்படியும் படித்தவற்றில் சிறந்தவற்றை நோட்டுப்புத்தகத்தில் குறித்து வைக்கும்படியும் கூறுகிறார்.

பதினேழு வயது வாலிபனின் தலையில் குடும்ப்பாரத்தில் சுமத்தி விட்டு காரியம் அதிகமாக இருக்கிறது என்ற பதற்றப்படாதே, நேரத்தை ஒரு வினாடி கூட வீணாக்காமல் பார்த்துக் கொள். கணக்கு எழுது என்கிறார்.

தென்னாப்பிரிக்க இந்தியர் போராட்டம் சம்பந்தமாக தான் 1911 மார்ச் 27 அன்று ஜெனரல் ஸ்மட்ஸை சந்திந்து பேசியவற்றை குறிப்புகளாக எழுதி வைத்திருக்கிறார். தான் சந்தித்து பேசியவைகளை உடனுக்குடன் வேலை அவசரத்திலும் அவசரஅவசரமாக எழுதி வைக்கிறார்.

ஜெனரல், ஃப்ரீ ஸ்டேட்டுக்குள் நுழைய அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை நியாயமற்றது. இதுவரை எழுப்ப்படாது என்கிறார் ஸ்மட்ஸ்.

காந்தி அதை இனவாத தடை. இதை எதிர்த்து சத்தியாகிரகிகள் போராடுவோம் என்கிறார்.

நீங்கள் முன் வைக்கும் மாற்றங்களை ஃப்ரீஸ்டேட்கார்ர்கள் ஒப்புக் கொள்ள மாட்டார்கள் என்கிறார்.

அவர்களை ஒப்புக் கொள்ள வைப்பது உங்கள் பொறுப்பு என்கிறார் காந்தி.

சந்திப்புக்கு பிறகு ஸ்மட்ஸ் காந்தி என்ன செய்துக் கொண்டிருக்கிறார் என்று வினவ, சத்தியாகிரகிகளின் குடும்பங்களை கவனித்துக்கொள்வதாக சொல்கிறார்.  இவர்களை சிறை வைப்பது உங்களை விட எனக்கு அதிக துன்பம் தருகிறது. தம் மனசாட்சிக்காக கஷ்டங்களை அனுபவிப்பவர்களை சிறை வைப்பது என் வாழ்வின் கசப்பான காலக்கட்டம் என்கிறார் ஸ்மட்ஸ்.

தென்னாப்பிரிக்காவிலிருந்து பிரிவு

காந்தி தம்பதிகள் தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு திரும்பும் முன் எல்லா சமூகங்களிலிருந்து அவருக்கு பிரிவுச்சார விழா நடக்கிறது. டர்பனில் நடந்த இந்த விழாவிற்கு மேயர் ஹோம்ஸ் தலைமை வகித்தார். நேட்டால் பிஷப், ஜெனரல் போத்தா, ஸ்மட்ஸ் உட்பட பல முக்கியஸ்தர்கள் அவருக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தனர். மேயரும் மற்றும் பலரும் அவரை பாராட்டி பேசியதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக காந்தியடிகள் பேசிய உரை.

தன்னையும் தன் மனைவியையும் விட நிறைய சத்தியாகிரகிகள் ஒப்பற்ற சேவையை செய்திருக்கிறார்கள். காலன்பாக் சேவை செய்தார் என்பதை விட உங்கள் நியாயத்தை வற்புறுத்த முற்பட்டதில் அவர் அதிக பலனடைகிறார் என்ற காலன்பாக்கின் கூற்றை அவர் வழிமொழிகிறார். இது அவரின் சிந்தனையின் போக்கை சொல்கிறது. கஷ்ட நிவாரண மசோதா திருப்தியளிப்பதாக இல்லை என மேயருக்கு சில தந்திகள் வந்திருக்கின்றன என்பதை அறிவேன். இந்த உலகில் எல்லோருக்கும் திருப்தியளிக்கக்கூடிய ஒன்றை செய்வது சிரமமான விஷயம். கோகலேயின் தலைமையில் இந்தியர் செய்த உதவி, வைசிராய் ஹார்டிஞ்ச் செய்த உதவியை நன்றியுடன் நினைவுக்கூர்கிறார். முக்கியமாக எந்த ஒரு ஐரோப்பியர் மீதும் துவேஷம் இல்லை என்றார்.


ஜோஹான்னஸ்பர்க் பிரிவு உபச்சார விழா

கிட்டத்தட்ட பிரிவு உபச்சார விழாக்களில் அவர் இதையே பேசுகிறார். கூடவே அந்தந்த நகரங்களில் தான் பெற்ற அனுபவங்களையும் நினைவுக் கூர்கிறார். தில்லையாடி வள்ளியம்மை, நாராயணசாமி, நாகப்பன் போன்ற தமிழர்களின் தியாகத்தை புகழ்ந்ததோடு வயதான ஹர்பதன்சிங் சிறையேற்றதையும் அவரை பற்றிய நினைவுகளையும் கூறி நெகிழ்ந்தார்.

தென்னாப்பிரிக்காவிற்கு பிரிவு செய்தி

இந்தியாவுக்கு கப்பலேறுவதற்கு முன்பாக தமது பிரிவுச்செய்தியை கேப்டவுன் ராய்ட்டர் செய்தி ஸ்தாபன நிருபரிடம் கொடுத்தார்.

1.   ஒப்பந்தத்தை பராமரியுங்கள்.

2.   அளிக்கப்பட்டிருக்கும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுகிறதா என கவனியுங்கள்.

3.   இந்தியருக்கு எதிரான துவேஷமும் கிளர்ச்சியும் எழுவதற்கும் வளர்வதற்கும் காரணமாக நம்மிடம் இருக்கும் குறைகள் அகல தீவிரமாக பாடுபடுங்கள். அதிகாரத்திலிருக்கும் அரசாங்கமும் சட்டசபையும் நமது உரிமைகளை அளிப்பதற்கு ஐரோப்பிய பொது ஜனங்களின் அபிப்பிராயத்தை பெறவும் வளர்க்கவும் வேண்டும் என்கிறார்.

தென்னாப்பிரிக்காவில் தமிழர் சேவை

காந்தி தம்பதிகள் தாயகம் திரும்பியதும் 1915 ஏப்ரல் 21ல் சென்னை விக்டோரிய பப்ளிக் ஹாலில் நடந்த பாராட்டுக்கூட்டத்தில் ஜி..நடேசன் வாசித்த வரவேற்பு பத்திரத்திற்கு பதிலளித்து பேசியது

தமிழர்களுக்கு மத்தியில் தமிழர்களின் தியாயங்களை பற்றி பேசுகிறார். சத்தியாகிரகம் நடந்த இந்த 8 ஆண்டுகளில் ஒருமுறையாவது அல்லது இருமுறையாவது சிறை செல்லாத தமிழர்களே இல்லை. அப்படி யாரேனுமிருந்தால் அவரை சென்னை மாகாணத்துவாசிகளே மானமில்லாதவன் என்று அழைத்து விடுவார்கள்.  இங்கும் நாகப்பன், நாராயணசாமி, வள்ளியம்மையின் தியாகத்தை பற்றி கூறுகிறார்.

நான் அவர்களுக்கு இத்தகைய உணர்ச்சியை ஊட்டினேன் என்று பாராட்டியுள்ளீர்கள். ஆனால் ஒரே உறுதியும் இலட்சியத்தில் முழு நம்பிக்கை வைத்து வெகுமதி என்பதை சிறிதும் எதிர்பாராமல் பாடுப்பட்ட எளிமை மிக்க அவர்களே எனக்கு உணர்ச்சியை உண்டாக்கியவர்கள். என்னை சரியான நிலையில் வைத்தவர்கள். தங்களுடைய தியாகம், திடமான நம்பிக்கை, கடவுளிடம் கொண்ட உறுதியான பற்று இவற்றின் மூலம் நான் செய்ய வேண்டிய வேலையை செய்து முடிக்க உதவினார்கள் என்றார்.

தமிழர்களுக்கு நன்றியறிதலை தெரிவித்துக் கொள்வதை முன்னிட்டாவது தமிழ் புத்தகங்களை சரியாக படித்தாக வேண்டும் என்று நினைத்தேன். படிக்க படிக்க அதன் இனிமையை உணர்ந்தேன்.

தென்னாப்பிரிக்க சத்தியாகிரக போராட்டத்தின் பலன்கள்

1911ல் காந்தி குஜராத்தியில் எழுதிய கட்டுரை, ஆங்கிலத்தில் மொழிப்பெயர்க்கப்பட்டு சென்னையில் வெளியாகும்இந்தியன் ரெவ்யூஎன்ற மாத இதழில் டிசம்பர், 1911ல் வெளியானது.

1.   இந்த போராட்டத்தால் இந்திய சமூகம் தன் தேசிய சுயமரியாதையை காத்துக் கொள்ள முடிந்தது.

2.   1907 ஆம் ஆண்டு பதிவுச்சட்டம் ஒழிக்கப்பட்டது

3.   நம் துயரங்கள் யாவை என இந்தியாவும் உலகமும் அறிந்துக் கொண்டது.

4.   இந்திய அரசாங்கம் நேட்டாலுக்கு ஒப்பந்தக்கூலிகளை அனுப்புவது தடை விதிக்ப்பட்டது.

5.   நேட்டால் அனுமதிச்சீட்டு விவகாரத்தில் விரும்பத்தக்க மாறுதல்கள் ஏற்பட்டன.

6.   நம் போராட்டம் மாத்திரம் இல்லையானால் டிரான்ஸ்வாலில் கொண்டு வரப்பட்டது போல குடியேற்ற கட்டுப்பாட்டு சட்டங்களை தென்னாப்பிரிக்காவின் மற்ற காலனிகளும் கொண்டு வந்திருக்கும்.

7.   வெள்ளையர் மற்றும் வெள்ளையர் அல்லாதோர் என்ற இனப்பாகுபாட்டை பயன்படுத்தி ஏற்படுத்தப்பட்ட ரயில்வே சட்டத்திட்டங்கள் ரத்தாயின.

8.   பதிவுச்சட்டத்தை தொடர்ந்து கொண்டு வரப்படவிருந்த சட்டங்களும் வரமுடியாதபடி தடுக்கப்பட்டன.

9.   ஹாஸ்கென் தலைமையில் கொண்டு வரப்பட்ட ஐரோப்பியர் அடங்கிய கமிட்டி எதிர்கால போராட்டங்களில் இந்தியருக்கு உதவியாக இருக்கக்கூடும்.

10. நம் பலம் வென்று விட முடியாததென அரசாங்கம் உணர்ந்திருக்கிறது.

11. போராட்டம் இந்திய மக்களை அவர்களின் சுயபலத்தை அவர்களுக்கே அடையாளம் காட்டியது.

12. பெண்களுக்கான தனி இயக்கம் மேரிவோக்லேயின் தலைமையில் உருவாகியது.

13. இந்தியரை நடுங்கச்செய்த சிறைவாழ்க்கை இப்போது ஏதுமில்லை என்றாகி விட்டது.

14. சொத்துகளை இழந்தாலும் மனோதிடத்தையும் ஒழுக்கத்தையும் அடைந்திருப்பதாக கச்சாலியா உட்பட நிறையபேர் கருதுகின்றனர்.

15. இப்போராட்டம் இல்லாமலிருந்தால், இந்திய மக்களுக்கே பொக்கிஷம் போன்றவர்களும்  எந்த சமூகத்துக்குமே பெரும் மதிப்பை உண்டாக்கக் கூடியவர்களுமானவர்கள் தமிழர்கள் என்பதை இந்திய மக்கள் உணராமல் போயிருப்பர்.

16. போராட்டத்துக்கு முன்னால் நமக்கு விரோதமான சட்டங்கள் நம்மை பொருட்படுத்தாமலேயே போடப்பட்டன. ஆனால் இப்போதோ நம்முடைய கருத்துகளையும் உணர்வுகளையும் அரசு மதிக்க வேண்டியதாகி விட்டது.

17. சத்தியம் அசைக்க முடியாதது என்பது நிரூபணாகியிருக்கிறது.

18. எங்கே சத்தியமும் மத தருமமும் இருக்கிறதோ அங்கே வெற்றி உண்டு என்பதை இந்திய சமூகம் நிருபித்திருக்கிறது.

இந்த தொகுப்பை வாசித்தபிறகு காந்தியின் எண்ணங்களும் அதை நோக்கி அவர் வகுக்கும் செயல்திட்டங்களும் புரிய வருகிறது.  

1.   ஒவ்வொரு செயலையும் அவர் திட்டமிட்டே செய்கிறார். அது கடிதம் எழுதுவதாகவோ, போராட்டம் நடத்துவதாகவே, அரசதிகாரத்தை சந்திப்பதாகவோ எதுவாக இருப்பினும் தன்னுடைய நடவடிக்கைகளில் ஒரு திட்டமிட்ட மிகத் தெளிவான போக்கை கடைப்பிடிக்கிறார்.

2.   திட்டமிடும்போதே அதன் கடின சூழ்நிலைகளையும் கருத்தில் எடுத்துக் கொள்கிறார்.

3.   தனது திட்டத்தை எதிர்தரப்பினருக்கு தெளிவாக எடுத்து வைக்கிறார்.

4.   எதிராளி என யாரையும் கருதுவதில்லை. எதிராளி என்பவர் ஒரு கொள்கை வேறுபாட்டின் காரணமாக எதிரணியில் இருப்பவர். ஆனாலும் அவர் நம் நண்பர் என்ற எண்ணம் கொண்டவர். அதனால்தான் போராட்ட வாழ்வில் அரசாங்க அதிகார மையத்திலிருப்பவர்கள் மட்டுமன்றி சிறையதிகாரிகள், சிறை மருத்துவர்கள் போலிஸ்கார்கள் என அவருக்கு நிறைய நண்பர்கள் இருந்தனர்.

5.   போராட்டத்துக்கான ஆதரவை எல்லா தரப்புகளிலிருந்தும் திரட்டுகிறார்.

6.   தங்கள் போராட்டம் நியாயமானது என்றாலும் சட்டத்திற்கு எதிரானது என்பதை ஒப்புக்கொண்டு நீதிமன்றத்தில் அதற்கான அதிகபட்ச தண்டனையை கோருகிறார்.

7.   தியாகம், பிரம்மச்சரியம், தொண்டு என தன்னை போலவே எல்லோரையும் மாற்ற எண்ணுகிறார்.

8.   அதிகாரிகளை சந்திப்பதிலோ கடிதங்கள் எழுதுவதிலோ அவர் தயங்குவதேயில்லை. மேலை, கீழை நாடுகள் என்ற உயர்வு தாழ்வு மனப்பான்மைகெல்லாம் அவர் நோக்கில் இடமேயில்லை.

9.   சொன்னவற்றையே சளிப்புறாது மீண்டும் மீண்டும் கூறுகிறார்.

10. எதிராளிகள் என்ன செய்வார்கள் என்பதை முன்கூட்டியே அறிந்த பிறகு போராடுவதால் அவர்களுடைய நடவடிக்கையை ஒப்பி ஏற்றுக் கொள்ளும் மனநிலையை உருவாக்குகிறார்.

11. எதிராளியை ஏமாற்றக்கூடாது. அவன் இக்கட்டில் மாட்டிக் கொண்டிருக்கும்போது அத்தருணத்தை நமக்கு சாதகமாக மாற்றிக் கொள்ளக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார்.


அவர் தென்னாப்பிரிக்காவிலிருந்து திரும்பியபோது அவருக்கு நாற்பத்தைந்து வயதுதான் ஆகியிருந்து. ஆனால் அதற்குள் அவர் வாழ்வின் எல்லா துறைகளிலும் அனுபவமுதிர்ச்சியும் பக்குவமும் பெற்ற மகாத்மாவாக மாறி ஒட்டுமொத்த இந்தியாவையும் தன்னுடைய கதகதப்புக்குள் பொதிந்துக் கொள்ள தயாராக வந்து சேர்ந்தார் என்றுதான் கூற வேண்டும்.

***

 

No comments:

Post a Comment