Search This Blog

Tuesday 30 July 2024

எழுத்தாளர் ஜெயமோகனின் வெண்முரசு - நீலம் நாவல் குறித்த ஒரு பார்வை

 ததும்பும் சொற்கள்

 


சொற்கள்… சொற்கள்.. சொற்கள்.. பெருகி வரும் சொற்கள்… அணியணியான சொற்கள்.. மணிமணியான சொற்கள்… உயிருக்குள் உயிர் நுழைந்து உயிரறுத்து வெளியேறி உயிரென எஞ்சி நிற்கும் உயிர்சொற்கள். மெய்யெனத் திரண்டு மெய்யுள் நிறைந்து மெய்யே அறுதியென்றாகும் காமம் கொண்ட மெய்சொற்கள், தாபமும் தவிப்பும் மோகவும் காதலுமாக உயிருள் மெய் கலந்த உயிர்மெய் சொற்கள். ததும்பி நிற்பன, பொங்கி வழிவன, திகைந்து நிலைப்பன, உயிர் அறுப்பனவென உயிரின் வழியெங்கிலும் சொற்கள் பாதையமைக்க அதனுள் நீலம் வழிந்தோடுகிறது. அதில் ராதை பிச்சியென உறைகிறாள். நிறைகிறாள், மிதக்கிறாள், திரள்கிறாள், அமிழ்கிறாள், ஆனந்திக்கிறாள். பெருகி நிற்கும் தன் உறவுலகுள் தன்னுலகு ஒன்றை கண்டுக் கொள்ளும் பித்தி அவள். பெற்றவளிடமிருந்து வளர்க்கப் போகிறவளுக்கு கை மாறும் நாளன்று அச்சின்னஞ்சிறு சிசு பிஞ்சுப்பாதங்களோடு அவளுலகில் நுழைகிறான். நுழைந்தவுடன் அவளுலகு மூடிக் கொள்கிறது. அவளுக்கும் அவனுக்குமான அவ்வுலகில் யாருக்கும் அனுமதியில்லை. புத்தம்புதிதாய் குடிநிறைந்து நிற்குமவளை ஊரும் உறவும் கொண்டாடி களி்த்திருக்க, அவளோ உஷைப்பொழுதில் தன் மைந்தனை, காதலனை, நண்பனை, பித்தனை தேடியோடுகிறாள். எண்ணமெல்லாம் அவனே… சொந்தமெல்லாம் அவனே… சித்தமெல்லாம் அவனே. ஒவ்வொரு சொல்லும் அவனே ஒரு சொல்லும் அவனல்ல. 

Tuesday 16 July 2024

எழுத்தாளர் ஜெயமோகனின் வெண்முரசு - மழைப்பாடல் - வழிந்திறங்கும் தாரை…

 



புவி நிற்கவில்லை. துவாபரயுகத்தில் அது சுழன்றுக் கொண்டிருந்தது. அஸ்தினபுரியின் மீது விழுந்த கனலும் கருக்கழியவில்லை. அம்பை வனயட்சியாகிறாள் அல்லது வனமே அம்பையால் நிறைகிறது. அம்பிகையும் அம்பாலிகையும் சூதப் பெண்ணான சிவையும் வியாசரின் குருதிவழி குழந்தைகளை விசித்திரவீரியனின் வாரிசாக, அஸ்தினபுரியின் அடுத்த தலைமுறைக்கான தலைமைகளாக பெற்றெடுக்கின்றனர். அதில் அம்பிகையின் மகன் திருதராஷ்டிரன் விழியிழந்தவனாகவும் அம்பாலிகையின் மகன் உடல் வெளுத்து நரம்புகள் பின்னிக் கொள்பவனாகவும் (வம்சத்தின்மீது பால்ஹீகரின் சாபம் இருந்தபடியால்) பிறக்கின்றனர். மூன்றாவதாக சிவையின் வயிற்றில் அறிவார்ந்த விதுரன் பிறக்கிறான். ஒருவன் ஊனத்தாலும் மற்றொருவன் உடற்குறையாலும் மூன்றாமானவன் குலத்தாலும் அரியணை ஏற வழியற்றவர்களாக வளர்கின்றனர். முறையான தலைமையின்றி திகழும் அஸ்தினபுரியை வலுவாக்கும் முயற்சியில் சத்யவதிக்கு இது தோல்வி முகம். போர்க்களத்தில் வெற்றிக்கான சூட்சுமத்தை கற்றுணர்ந்த நெடிந்துயர்ந்தவருக்கோ வாழ்க்கைக்கான சூத்திரங்களை செயல்படுத்த இயலாத நிலைமை. அறத்துக்கும் கடமைக்கும் நடுவே தடுமாறும் பீஷ்மர் அஸ்தினபுரியிலிருந்து கிளம்பி விடுகிறார். இம்முறை வனத்தை நோக்கி அல்ல. 

Monday 15 July 2024

தேவனாம்பிய பியதசி

May 2024 வல்லினம் இணைய இதழில் பிரசுரமானது.

‘பௌத்தம் என்பது மாயமல்ல. அதை உங்கள் வாழ்வில் அனுமதித்த கணமே அற்புதங்கள் எதுவும் நிகழ்ந்து விடாது. நீங்கள் எந்தளவுக்கு அதன் சாரத்தை உள் வாங்குகிறீர்களோ அதற்கேற்ப உங்களிடம் மாற்றங்கள் நடக்கும். அதற்கு நானே சாட்சி“ 



ரூப்நாத்தில் கற்பாறையொன்றில் செதுக்கப்பட்டிருந்த கணவர் அசோகரின் செய்தியை வரிவரியாக வாசித்தார் ராணி வேதிதாதேவி. சமஸ்கிருதத்தோடு பாலியிலும் பிராகிருத மொழியிலும் அவருக்குப் புலமை இருந்தது. சக்ரவர்த்திக்கு ரூப்நாத்தில் மட்டுமல்லாது பேரரசெங்கும் தனது செய்திகளை பாறைகள், ஸ்துாபிகள், கம்பங்களில் செதுக்கும் வழக்கமிருந்தது. அது அவர் நாட்டு மக்களுக்கும் நாளைய வரலாறுக்கும் விடுக்கும் செய்தி என்று சொல்லிக் கொண்டனர். உஜ்ஜையினிக்கு அருகிலிருக்கும் ரூப்நாத்துக்கு ராணி அன்று நேரிலேயே சென்றிருந்தார். களிறென மதர்த்து நின்றிருந்த அப்பாறை நேர்த்தியுடன் வடிவாக்கப்பட்டிருக்க, அதில் எழுத்துகள் புத்தம்புதியனவாய் செதுக்கப்பட்டிருந்தன.  தேவனாம்பிய பியதஸி… என்று தொடங்கியிருந்த எழுத்துகளின் வரி வடிவின் மீது ராணி வேதிதாதேவி தன் விரல்களைக் கொண்டு வருடினார். தேவனாம்பிய பியதஸி… (கடவுளுக்கு பிரியமானவர்) வாய் விட்டு சொல்லிக் கொண்டார். இப்போதெல்லாம் அவர் கணவர் தனக்கு தானே அப்படிதான் விளித்துக் கொள்கிறாராம். அவர் கடவுளுக்கு மட்டும் பிரியமானவர் அல்ல. எனக்குமே.. அவருக்குமே நான் பிரியமானவள்தான். ஆம்.. அதைதான் அவர் குறிப்பிடுகிறார். இவை எழுத்துகளல்ல. என் கணவரி்ன் மனம்… அவரின் குரல்… அவரின் உணர்வு… அவர் என்னிடம் தன்னை அறிவிக்கிறார். அவர் என்னுடன் உரையாடுகிறார். ஆம்… இவையெல்லாம் எனக்கான செய்தியே…  துள்ளிய மனத்தை கட்டுப்படுத்திக் கொண்டு தொடர்ந்து வாசித்தார். 

அக்னி பர்வதம்

வனம் மே 2024 




படுத்துக் கொண்டேயிருப்பது பெரும் பாரமாக தோன்ற அவள் எழுந்து நடக்கத் தொடங்கினாள். வெளியே வெயில் வெளிர்மஞ்சள் பந்தலிட்டிருந்தது. நாரத்தை மரம் அண்டையாக தோன்ற அவள் அதன் உதிரியான நிழலுக்குள் வந்தாள். மாமரத்திலிருந்து வீசிய புளிப்புக் காற்று நாசிக்குள் ஏறியதில் நாக்கு கூசுவது போலிருந்தது. அவைப் பழுத்தாலும் கூட பட்சிகளுக்கு மட்டுமே உகந்தவையாக இருக்கும். அணிலொன்று வாலைத் துாக்கிக் கொண்டு கொய்யா மரத்தில் ஏறியது. அருகிலிருந்த ஓலைக்கூரையால் வேயப்பட்ட நீர்ப்பந்தலில் சிறுமியொருத்தி பானை மோரை முகர்ந்து குடித்தாள். வீட்டின் முன்புற கட்டுமானத்தில் வேய்ந்திருந்த சிவந்த ஓட்டின் மீது எட்டி மரம் படுத்து கிடந்தது. சுவருக்கும் கல் பாவிய நடைபாதைக்குமிடையிலிருந்த சிறு மண்பரப்பில் புளியமரக்கன்று வளர்ந்திருந்தது. அதன் இளங்கொம்பை மென்மையாக வளைத்து பிடித்தபடி வீட்டை புதிதாகப் பார்ப்பது போல பார்த்தாள் அவள். கல்கத்தாவில் அவளிருக்கும் வீடு இதில் பத்தில் ஒரு பங்குக் கூட இருக்காது. இந்த வீட்டிற்கு வயது முன்னுாறு இருக்குமா? பெருக கட்டி பெருகி வாழும் இது எத்தனை தலைமுறைகளை பார்த்திருக்கும்? அய்யோ வீட்டை இது என்கிறேனே.. அதற்காக இவர் என்று சொல்ல முடியுமா..? அல்லது இவளா? எது சரி…? எதுவாக இருந்தாலும் நேரத்திற்கேற்ப சுருங்கி விரியும் இந்த வீட்டுக்கு நிச்சயம் உயிரும் உணர்வும் இருக்கதான் வேண்டும். குழந்தைகள் ஓடி விளையாடும்போது அவர்களை அணைத்துக் கொள்வதுபோல வீடு சிறியதாகி விடும். காலையிலிருந்து புகைந்துக் கொண்டிருக்கும் அடுப்பு சமைத்தனுப்பும் பண்டங்களை ஆண்களுக்கு பரிமாறி விட்டு மீதமிருப்பதை உண்டு விட்டு பெண்களும், உண்ட களைப்பில் ஆண்களும் ஆளுக்கொரு பக்கம் ஒண்டிக் கொள்ளும் மதிய நேரங்களில் வீடு பெரியதாகி விடும். விஷேச நாட்களிலோ விருந்தாளிகளின் இறைச்சலுக்குள் வீடு தன்னை குறுக்கிக் கொண்டு விடும். எது எப்படியிருந்தாலும் நாலப்பாட்டு தறவாட்டுக்கென்றிருக்கும் அந்தஸ்தும் மரியாதையும் வெளியுலகில் குறைவதேயில்லை.    

Sunday 14 July 2024

ஆடல்

April 10, 2021 Solvanam E-magazine, காந்தியை சுமப்பவர்கள் - காந்திய கதைத்தொகுப்பு, மொழிமாற்றம் செய்யப்பட்டு கன்னட தொகுப்பு, மற்றும் கன்னட பத்திரிக்கை மற்றும் தெலுங்குப் பத்திரிக்கை 




டெல்லி நகரின் அந்த மாலை நேரம், பகல் நேரத்தில் தலைக்காட்டிய வெதுவெதுப்பு மறைந்து குளிருக்குள் நுழைந்துக் கொண்டிருந்தது. யமுனை நதியை தொட்டு மேலெழுந்தக் காற்று நகரை மேலும் குளிர்வித்துக் கொண்டிருந்தது. சற்று முன்பு வரையிலும் தெய்வீகத்தை உணர வைத்துக் கொண்டிருந்த பிரார்த்தனைக்கான மேடை இப்போது தன் புனிதத்தைத் தொலைத்திருந்தது. இசைக்கருவிகள் இசைப்பாரும் கேட்போருமின்றி கிடக்க, ஒலித்தக்குரல்களில் பதற்றமும் அழுகையும் தொற்றியிருந்தன. நடைப்பாதையை அடுத்திருந்த புல்வெளிகள் நடந்த துயரை ஏந்திக் கொண்டு நகரும் வழியின்றி திகைத்திருந்தன. தலைக்கு மேலாக கவிழ்ந்திருந்த நீலவானத்தில் சிறு மேகக்கூட்டமொன்று திட்டாகக் குவிந்திருந்தது. 

“மோகன்.. உங்களால எழுந்திரிக்க முடியும். முயற்சி செஞ்சுப் பாருங்க 

“நிச்சயமா… நிச்சயமா முயற்சி செய்வேன் கஸ்துார். எல்லோரும் என்னை சுத்தி நிற்பதையும் பதறுவதையும் உணர்றேன். நான் இப்பவே பிரார்த்தனை மேடைக்கு போயாகணும். இல்லேன்னா அவங்க எல்லோரோட நேரமும் வீணாப்போயிடும் 

யாயும் ஞாயும் யார் ஆகியரோ?

மே 2023 வல்லினம் இணைய இதழில் வெளியானது  




இது இந்தியாவில் அவரது அதிகாரப்பூர்வமான கடைசி விடியல். கடைசி விழிப்பும் கூட. விடியல் வேண்டுமானால் எல்லோருக்கும் பொதுவானதாக இருக்கலாம். விழிப்பு என்பது உறங்கினால் மட்டும்தானே சாத்தியம்? அவரால் படுத்த நிலையிலேயே உடலின் பாரத்தை உணர முடிந்தது. குளிரூட்டியையும் மின்விசிறியும் மீறி லேசாக வியர்ப்பது போலிருந்தது. அவர் படுத்தவாறே அறையை ஆராய்வதுபோல பார்வையை சுழற்றினார். இரவு விளக்கின் ஒளியில் அறை வெண்ணிற போர்வை கொண்டு மூடியது போலிருந்தது. அதை அறை என்பதை விட வீடு எனலாம். அதன் விசாலத்துக்கு ஈடு கட்டுவது போல உயரமான கூரை. டில்லியின் அதீத வெப்பத்தையும் குளிரையும் தன்னுள் அதிகம் ஈர்த்துக் கொள்ளாவண்ணம் மரப்பேனல்களால் மூடப்பட்ட சுவர்கள், உயர்ந்து அகன்ற தனது தேகத்தில் திரைசீலைகளை அணிந்திருந்த சன்னல்கள், மர அலமாரிகள், ரேக்குகள், அலங்காரப்பொருட்கள், ஓவியங்கள், வெள்ளியாலான புழங்குப் பொருட்கள்… போதும்… போதும்… அவர் கண்களை மூடி காட்சிகளை மறைத்துக் கொண்டார். இதில் அவருடைய தனிப்பட்ட உடமைகள் பெரும்பான்மையாக இல்லை. அவையெல்லாம் தயாராக எடுத்து வைக்கப்பட்டு விட்டன. இனி பயணம் மட்டுமே மிச்சம்.