Search This Blog

Wednesday, 25 April 2018

பிரியாணி


கணையாழி ஜனவரி 2018ல் வெளியானது.

கண்களை திறக்க முடியவில்லை அவளால். ஆனாலும் மூடிய இமைக்குள் விழிகள் எதையோ தேடுவது போல அவ்வப்போது நழுவி ஓடி நின்றன.  அக்கம்பக்கத்து அஞ்சலம் அத்தை.. மரகதம் பெரீம்மா.. மாரியம்மா அக்கா.. கெங்கா சின்னம்மா.. எல்லோரும் அவளை எழுப்பி உட்கார வைத்து காபி கொடுப்பது நிஜமாக நடப்பது போலவே இருக்கிறது. ஒருமுறை சைக்கிளில் அடிப்பட்டு பேச்சு மூச்சின்றி கிடந்தபோது அப்படிதான் எழுப்பி உட்கார வைத்தனர். ஆனால் இப்போது வாயில் காபியும் இல்லை. அருகிலும் யாருமில்லை. ஏதேதோ நினைவுகள் மட்டும் ஓடிக் கொண்டேயிருந்தன.



என்றுமில்லாத திருநாளாக அவளின் எண்ணவோட்டங்களில் அம்மாவும் இருந்தாள். அவளை இடுப்பில் துாக்கிக் கொள்ள முயன்றாள்.. ஆனால் பதிமூன்று வயது பெண்ணான இவளால்தான் இடுப்பில் ஏறிக் கொள்ள இயலவில்லை. கால்கள் நீண்டு விட்டன. தரையை தொட்டு விடுமோ..? சிரிப்பு வந்தது. அவளுக்கு எதற்கெடுத்தாலும் சிரிப்புதான். சென்ற வருடம் பெரியவளான தருணத்தில் ‘பொசுக்குபொசுக்குன்னு பொட்டச்சிக்கு என்னாடீ சிரிப்பு..’ என்றாள் திண்ணைக் கிழவி ஒருத்தி. “இனிம சிரிச்சன்னா வாய் மேலயே போடுவன்..“ கனகாக்கா விளையாட்டாக கையை ஓங்க அப்போதும் சிரிப்பு பொங்கி வந்தது அவளுக்கு. இடுப்பிலிருந்து கால்கள் வழிந்து தரையை தொடுவதை நினைத்தபோதும் சிரிப்பு வந்தது. ஆனால் சிரிப்பதற்கு வாயை விரிக்க முனைந்தபோது கன்னங்கள் தீப்பிடித்தது போல் எரிந்தன. “ம்மா..“ தன்னையுமறியாமல் அனத்தினாள். மிக சன்னமான ஒலி. கிழிந்து கிடக்கும் வாயிலிருந்து அவ்வளவு ஒலியே அதிகம்தான்.

Wednesday, 10 January 2018

மையம்

டிசம்பர் 2017 சொல்வனம் இணைய இதழில் வெளியானது


கடல், நீரையள்ளி தெளித்ததில் தரையோடு படிந்துக் கிடந்த மணல் காலடிகளை உள்வாங்கி தடமாக பதித்திருந்தது. ஃபாதர் தாமஸ்ஃபிலிப்புக்கு வளமையான பெரிய கால்கள் வேறு. அச்செடுத்தது போல இங்குமங்குமாக படிந்துக் கிடந்தன. இருள் விலகாத, பகல் பிரியாத நேரமது. இளங்காலை நேரத்துக் கடல் முதிய தாயைப் போல ஆதுரமாக அணைத்துக் கொள்ளும். அதன் அலைகள் பொக்கை வாயில் வழியும் கனிந்த சிரிப்பை போல கடலெங்கும் ததும்பி கிடக்கும். இந்த அனுபவத்துக்காகவே அவ்வப்போது அவர் இங்கு வருவதுண்டு. கடலும் அலைகளும் அதன் இறைச்சலும் வெற்றுக் காட்சிகளாக இன்று அவர் கண்களை நிறைத்துக் கொண்டிருந்தன.
கடலையொட்டி அமைந்த புனித தேவாலயத்திற்கும் தாமஸ்ஃபிலிப்புக்கும் கிட்டத்தட்ட முப்பதாண்டுப் பழக்கம். அது அவரின் வயதில் நான்கில் ஒரு பகுதி. இத்தனை ஆண்டுகளும் பூசை.. புனிதங்களை தவிர்த்து, கடலையும் அவரையும் தவிர வேறு யாருமற்ற தனிமை. அவராகவே விரும்பி ஏற்றுக் கொண்டதா.. அல்லது விதிக்ப்பட்டதை விருப்பமாக்கிக் கொண்டாரா என்பது அவருக்கே தெரியவில்லை.

Wednesday, 6 December 2017

சித்ராவுக்கு ஆங்கிலம் தெரியாது - என்னுரை


இந்த நுாலுக்கான முன்னுரையை எழுதத் தொடங்கும்போதே, இலக்கியம் ஏன்..? அதற்கும் எனக்குமான புரிதல் என்ன..? என்ற சுய அலசலுக்குள் மனம் செல்கிறது. ஏன் எழுதுகிறேன்..?
ஏன்.. எதற்காக..? என்பதை விட நான் எப்போது எழுத தொடங்கினேன் என்பதை யோசிக்கிறேன்பிறப்பும் கல்வியும் நெய்வேலி நகரத்தில். வாசிப்பிற்கு நேரம் செலவிட தோதான வாழ்க்கையமைப்பு. ஆனாலும் அதிகபட்ச இலக்கிய புத்தகங்களாக அறிமுகமானவை அமுதசுரபி, மஞ்சரி போன்றவைதான். உயர்கல்விக்கு பிறகு  பணிப்புரிவதில் எனக்கு விருப்பமில்லை. அப்பா சொல்கிறார்.. நான் செய்கிறேன்.. என்பதைத் தாண்டி வேறேதும் வேலைக்கான தேர்வுகள் குறித்து எனக்கு தோன்றியதில்லை. வங்கித்தேர்வு.. அதைத் தொடர்ந்து அடுத்தடுத்த இரண்டு அரசு தேர்வுகளில் வெற்றி பெற, ஏதோ ஒரு வேலைக்குள் என்னை முழ்கடிக்க வேண்டியிருந்தது.

Thursday, 30 November 2017

மலைக்கோட்டை மாவட்ட இலக்கியம்

கணையாழி டிசம்பர் 2017 இதழில்..

மனிதனில் உள்ளுணர்வாக பதியப்பட்டிருக்கும் அடிப்படை இச்சைகள் அவனை வாழ்தலை நோக்கி உந்துகின்றன. இணைந்தே, நாகரிகமும் உருவாகிறது. அறத்திற்கான விழுமியங்கள் நாகரிக வாழ்வை கட்டமைக்கிறது. இவ்விழுமியங்களை உருவாக்குவது இலக்கியம் எனலாம்.. இச்சைகளுக்கும் அறத்துக்குமான போராட்டத்தை வாழ்க்கை எனலாம். அதேசமயம் விழுமியங்கள் பண்பாட்டு சிக்கலுக்குள் அடைப்பட்டு போகும்போது இலக்கியம் அதன் கட்டற்ற தன்மைக்குள் ஒழுங்கமையாது போய் விடும் அபாயமும் உண்டு.

சிறுகதைத் தொகுப்புகள்


“வலி“ சிறுகதைத் தொகுப்பு
காவ்யா பதிப்பகம் 2014

இரவு சிறுகதைத் தொகுப்பு
NCBH PUBLICATION
2016
வாசகசாலை பதிப்பகம்
23.12.2017

சுழற்சி