இந்தியா அல்லது பாகிஸ்தான் ராணுவத்தில் பணி செய்வதற்காகத் தங்கி வி்ட்ட பிரிட்டிஷ்
அதிகாரிகள் மதத்தின் பெயரால் நடந்துக் கொண்டிருக்கும் மிக மிக மோசமான நிகழ்வுகளை கண்ணுற்று
அதிர்ந்துப் போயினர். இது… இது… இரண்டாம் உலகப்போரில் நாங்கள் கண்டதை விட இது மிகவும்
மோசமானது… மிக மோசமானது… என்றனர் அதிர்ச்சி விலகாமல்.
இரு நாடுகளிலும் தப்பியோடுதல் அதிகரித்த போது எல்லைப்பகுதிகளில் ரயில் பெட்டிகளில்
கூட்டம் கூட்டமாய் வந்த அகதிகள்தான் தாக்குதலின் முக்கிய இலக்குகள் ஆயினர். ரயில் பாதைகள்
பெயர்க்கப்பட்டு வண்டிகள் கவிழ்க்கப்பட்டு உயிர்கள் எடுக்கப்பட்டன. ரயில்கள் நிலையங்களில்
நின்ற போதோ அல்லது வன்முறை கும்பல்
அபாய சங்கிலியை இழுத்து வெட்டவெளிகளில் ரயில்களை நிறுத்தியோ உயிர்களை பிணங்களாக்கி
அதே ரயில்களில் அனுப்பி வைத்தனர். இந்தியாவில் சுன்னத் செய்யப்பட்டவர்களும் பாகிஸ்தானில்
சுன்னத் செய்யப்படாதவர்களும் வெட்டிச் சாய்க்கப்பட்டனர். பெண்களின் நிலையோ கூறத்தக்கதாக
கூட இருக்கவில்லை. மதத்தின் மூடாக்குகளுக்குள் குழந்தைகளின் மரணக் கதறல்கள் தேய்ந்துப்
போயின. ரயில் நிலையத்தில் வந்து நிற்கும் பெட்டிகளின் கதவுகள் வழியாக ரத்தம் வழிந்தது.
அவர் சந்தேகப்பட்டு பின் சந்தோஷப்பட்ட கல்கத்தாவின் அமைதியின் மீதும் கல்லெறியப்பட்டிருந்தது.
தலைநகர் டில்லியிலும் அதே நிலைமையே. கடும் குளிர் வாட்டி வதைத்த டிசம்பர் மாதத்தின்
பின்னாள் ஒன்றில் அவர் வருத்தத்தில் தோய்ந்தெடுத்த வார்த்தைகளை வேதனையின் வலியிலிருந்து
பிரசவிக்கிறார்.