Search This Blog

Saturday 17 June 2017

பெரியாயி

17.06.2017 கல்கியில் வெளியான சிறுகதை

“நாதாறி மக்க..  இங்கிட்டு கால வக்காதன்னா கேக்றாளுவளா.. பொசக்கெட்ட பொம்பள.. கேடுகெட்டவ வவுத்துல பொதாரு மொளயாம நெல்லா மொளயும்.. எவன் ஏறுவான்னு தெறந்து போடற செம்மங்க..” சக்களத்தியின் மகளை கரித்துக் கொட்டினாள் பெரியாயி. வயது எழுபதை நெருங்கினாலும் வாழ்க்கையை தொலைத்து விட்ட கோபம் இன்னும் வீரியமாகவே இருந்ததில் சத்தத்திற்கு குறைவில்லை. இத்தனைக்கும் நேற்று முழுக்கவும் நீராகாரம்தான் ஆகாரம்.   

கணவன் மாரியப்பன் இவளுக்கு தாய்மாமனும் கூட. கணக்குக்கு நாலு மாமன்கள் அவளுக்கு. பெரியாயியின் வயசுக்கு நான்காவது மாமனே கொஞ்சம் அதிகம்தான். ஆனாலும் அவள் இரண்டாவது மாமனைதான் கட்டுவேன் என்று பிடிவாதமாக நின்று விட்டாள். பதினாறு வருட வித்யாசம் இருவருக்கும். அவர்களின் அன்னியோன்யத்தில் வயது மறைந்து போய் விடும், அடுத்தடுத்து நான்கு குழந்தைகள். நான்குமே குறை பிரசவத்தில் போய் விட, வெறுத்து வந்தது மாரியப்பனுக்கு. ”நான் இங்ஙனயே சுத்திட்டு கெடந்தா ஒனக்குந் தொந்தரவு.. எனக்கும் மனசாவல.. வெளிநாடு போயிட்டு வந்தா வைத்தியத்துக்கு காசுன்னா சேரும்..” என்றான். பெரியாயிக்கும் அது சரியாகதான் தோன்றியது. “இதெல்லாம் பெரிய வைத்தியம்மா.. ஒன் கர்ப்பப்பை வெயிட் தாங்க மாட்டேங்குது.. தனியார் ஆஸ்பத்திரின்னா ஒழுங்கா கவனிப்பாங்க.. இங்க ஒனக்கு தோது வாய்க்காது..” விவசாய காய்கறிகளை பெற்றுக் கொண்ட நன்றியில் கவர்மெண்ட் ஆஸ்பத்திரி நர்ஸம்மா வேறு அறிவுரை வழங்கியிருந்தாள்.

”சீமாறு பிஞ்சுப் போவும்.. எவன் ஏறுவான்னு எவளும் தெறந்து போட்டுட்டு கெடக்கல.. அவவோ புத்திய அடுத்தவளுக்கு சொல்றது..” சரிக்கு சரியாக கத்தினாள் சிவகாமி. மாரியப்பனின் இரண்டாவது மனைவியின் மகள். தாயும் தகப்பனுமின்றி பெரியாயியுடன் தனியாக மல்லுக்கட்ட வேண்டியிருந்தது. அவள் கணவன் ஏதோ ஒரு வங்கியில் காவலாளியாக இருக்கிறான். ”ஒனக்கும் நாலு புள்ளங்களாச்சு.. நீ பாட்டுக்கு மசுறே போச்சுன்னு இருந்தீன்னா இந்த வீம்புக்காரப் பொம்பள அம்புட்டையும் ஆண்டனுவிச்சுட்டு எவனுக்காது துாக்கி குடுத்துட்டு போயிடுவா பாத்துக்க..” கணவனின் இறப்புக்கு பிறகு இரண்டாவது மனைவி, மகள் சிவகாமியை கூடவே அழைத்துக் கொண்டாள்.

கணவன் இரண்டாவதாக திருமணம் செய்து வெளியூரில் குடும்பம் வைத்திருக்கிறான் என்பதே சிவகாமி பிறந்த பிறகுதான் பெரியாயிக்கு தெரிய வந்தது.  ”களிச்சல்ல போறவனே.. ஒனக்கு நா என்னாத்த கொற வச்சேன்.. வெளிநாட்டுக்கு போறேன்னுட்டு எவளையோ இளுத்தாந்து குடும்பம் பண்றியே.. நீ பண்ணுனத நா பண்ணுனா சொம்மா வுடுவியா.. நீ நாசமாதா போவே.. வதமளிஞ்சு போயிடுவே..” மண்ணை வாரி துாற்றினாள். ஏதோ ஒருபோக்கில் புது மனைவி கட்டிக் கொண்டாலும் மாரியப்பனால் பெரியாயியின் அசரடிக்கும் பாசத்தை மறக்க இயலவில்லை. எத்தனையோ பஞ்சாயத்துக்கள் கடந்தன. தனக்கென ஒரு ஏக்கர் நிலமும் ஓட்டு வில்லை வீட்டின் ஒரு பகுதியையும் பிரித்து வாங்கிக் கொண்டதோடு சரி.. கொட்டி கொட்டி கொடுத்த அத்தனை பாசமும் வெறுப்பாக மாற, கணவன் இறக்கும் வரை அவனை ஏறெடுக்கவும் மறுத்து விட்டாள் பெரியாயி. ஒரே நெட்டுக்குமான ஓட்டு வில்லை வீடு அது. கையில் பணம் இருந்த காலக்கட்டத்தில் கணவன் குடும்பம் நடத்துவதை பார்க்க சகிக்காது திண்ணையில் சுவரெழுப்பி தடுப்பாக்கிக் கொண்டாள்.

சிவகாமிக்கு பதினான்கிலிருந்து நான்கு வயது வரை வரிசையாக நான்கு மகன்கள். பயல்கள் திண்ணைத் தடுப்பை தாண்டி உள்ளே வந்து எதாவது குறும்பு செய்து விட்டு ஓடுவதை பெரியாயியால் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை. ”இங்குட்டு காலு வரட்டும்.. ஒடிச்சு அடுப்புல வக்கிறன்.. பொது சொத்தா ஆக்குனாலும் ஆக்குவன்.. ஒரு தம்புடி ஒம் புள்ளையளுக்கு தர மாட்டன் பாத்துக்க..” எக்கிக் கொண்டு கத்தினாலும் வயிறு பசியில் பம்மிக் கிடந்தது.

”துாத்தெறி.. தாத்தேன் சொத்து பேரப்புள்ளக்குதான்.. போவும்போது வூட்டையுமில்ல துாக்கீட்டு போவாளுவோ.. புளுபூச்சி அண்டுனாதானே பாசம்பட்டதுன்னு வரும்.. கட்டுனவனையே வெரட்டுனவதானே..”

”பொல்லாத புள்ள பெத்துட்டாளாம்.. புள்ள.. தாத்தன் புத்திதானே அதுங்களுக்கும்... பேள்ற புத்தி..”

”இதாரு ஆயி.. ஒங்க சண்டயெல்லாம் எங்கப்பன் ஆத்தாளோட முடிஞ்சுப் போச்சு.. எம் புள்ளய எதும் பேசுற வேலை வச்சீன்னா பிஞ்சு போயிரும் ஆமா..” தடுப்பைத் தாண்டி கத்தினாள் சிவகாமி.

சரிக்குசரி நிற்க முடியவில்லை இன்று. வயிற்று பசி இறுக்கியது. மீனாம்பா கொடுத்த வரகரிசி குறுணையும் தீர்ந்திருந்தது. மார்கழி மாதக் குளிர் வயதான உடலை துளைத்துக் கொண்டிருந்தது. இதற்கெல்லாம் பயந்தவளல்ல அவள். நெற்பயிர்கள் கரும்பச்சையும் இளம் மஞ்சளுமாக மினுமினுத்துக் கிடக்கும் மார்கழி வயலை பார்த்து பார்த்து பரவசமடைவாள். பகலெல்லாம் பாடுப்பட்ட வயலில் பரவியிருக்கும் பயிர்களின் வாசத்தை ஈரப்பதம் வெளியில் இறைத்துப் போடுவதை இரவெல்லாம் முகர்ந்துக் கிடப்பாள். பயிர் பால் பிடிக்கும் நேரத்தில் மழை வந்து கெடுத்து விடுமோ என்ற பதைப்புமிருக்கும் கிராமம் மொத்தத்துக்கும். மீறி வந்து விட்டால் அதை கையில் ஏந்தி நிலத்தில் விழுந்து விடாமல் தடுப்பவள் போல பெரியாயிக்கு உறக்கமே பிடிக்காது. அதிகாலையில் தெருவையடைத்துக் கோலமிடுவாள். சிவகாமியை போல கோலத்தில் வண்ணமிட தெரியாது அவளுக்கு. நடுக்கோலத்தில் பசுஞ்சாணத்தை உருட்டி வைத்து, அதில் பூத்தக்கள்ளியை ஊன்றுவாள். சுற்றிலும் பட்டமிளகாய்.. நெற்கதிர்.. கண்ணுபீளைச்செடி.. நெல்லிக்கொத்து பூக்கள்.. அருகம்புல் என குத்தி வைப்பாள். இது மாடுக்கு திருஷ்டி எடுக்கும் என்பாள். இன்று மாடுமில்லை. மழையுமில்லை. சென்ற ஆண்டு வறட்சியில் மாடு கை நழுவி விட்டது.

”ஏய்.. அந்த கெய்வீ வூட்டாண்ட போனீங்கன்னா கால ஒடச்சிடுவேன்.. நரவ பேச்சு.. நரவ பேச்சு.. அதான் எங்கப்பன் நிக்காம ஓடிட்டான்.. ஆயுசு போட்ட அளவுக்கு அதுக்கு புத்திய செஞ்சு வக்கில கடவுளு..” மகன்களுக்கு சொல்வது போல பெரியாயிக்கு சாடை பேசி விட்டு எங்கோ வெளியே போனாள் சிவகாமி.

வயக்காட்டுக்கு போகும் தெம்பு மனதிலும் இல்லை. உடம்பிலும் இல்லை பெரியாயிக்கு. குத்துகுத்தாக நெல் செடிகள் காயத் தொடங்கியிருந்தன. போன வருடமும் வறட்சிதான். ஆனால் இந்தளவுக்கு பஞ்சமில்லை. ஊரே பஞ்சத்திலிருக்கும்போது யாரிடம் கேட்பது..? பயிர் பால் பிடிக்கும் நேரத்தில் மழை பிடித்துக் கொண்டால் மொத்த நெல்லும் கருக்காயாகி விடும். இன்று கருக்காய்க்கு கூட வழியில்லை பொங்கல் நெருங்கி விட்டது.

எக்கி கத்த முடியாதவளாக எழுந்து உள்ளே போனாள். முன்கட்டும் பாதி அடைப்பட்டுப் போன முற்றமும் பின் தாழ்வாரமுமான வீடு. முன்பெல்லாம் இங்கு நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் தாழ்வாரத்தை பந்தாயம்தான் இரண்டாக பிரித்திருந்தது. முன்பகுதியை பெரியாயி எடுத்துக் கொண்டாள். பின்பகுதியை எடுத்துக் கொண்டாலும் பழுதில்லை. தானியம் இல்லாத வீட்டில் பந்தாயத்துக்கென்ன வேலை..? அலுப்பாக பாத்திரங்களை உருட்டினாள். நொய்யரிசி கூட இருப்பிலில்லை. பிள்ளைகள் என்று இருந்தாலாவது காசியம்மா மகனை போல டவுன் வேலைக்கு சென்றிருக்கும். அதற்கும் கொடுப்பினையில்லை. அழுகை முட்டிக் கொண்டு வந்தது. ஒரேடியாக செல்வ செழிப்பான வீட்டில் பிறந்திருக்காவிட்டாலும் இத்தனை வறுமையை இதுவரை பார்த்ததில்லை. மூன்று போகம் இல்லாவிட்டாலும் இரண்டு போகமாவது விளைந்து வயக்காடு காப்பாற்றி விடும். போன வருடம் அறுவடையான ஒரு போகம் எத்தனை நாட்களுக்கு சோறிடும்..?

‘இல்ல.. இல்லங்கும்போதுதான் வயிறு கொண்டா.. கொண்டாங்குது.. இடுப்பொசரம் நிக்க வெண்டிய நெல்லு காலொசரங்கூட எம்பல.. நாசமா போற புல்லு ஆளொசரம் எந்திரிச்சிடும் போல.. இத வதமளிச்சு மறுக்கா வெதைக்க கூட நாதியத்து நிக்குதே மனுச பொளப்பு..’ இயலாமை புலம்ப வைத்தது.

”அம்முச்சி.. ந்தா அம்முச்சி..” சிவகாமியின் கடைசி மகன்கள் இருவருக்கும் கொல்லைப்புறம் வந்த அவளை வம்பிக்கிழுக்கிழுந்தனர். அவளை சீண்டுவதும் இவள் குச்சியை துாக்கிக் கொண்டு அடிக்க ஓடி வரும்போது எகிறி ஓடுவதுமான விளையாட்டுக்கு தயாராக இருந்தனர். பின்கட்டுக்கு தடுப்பில்லை.. எட்டி ஓடினால் பிடித்து விடலாம். ஆனால் அதற்கெல்லாம் உடலில் தெம்பு வேண்டும். ”அம்முச்சி.. ந்தா.. வா.. வா.. வா.. என்ன புடிச்சுப் பாரு..” பெரியாயிடமிருந்து எதிர்வினையை வரவழைக்க சின்னவனை பெரியவன் அவளை நோக்கி தள்ளி விட அவன் எகிறிக் கொண்டு பின்நோக்கி ஓடி “அம்முச்சி.. தோ.. இங்ஙன.. இங்ஙன..” என்று போக்கு காட்டினான். சிறுமியாக இருக்கும்போது அம்மாச்சி வீடு என்ற உரிமையில் ஓடி விளையாண்ட வீடு. இன்று அம்மாச்சியை அம்முச்சியாக கிண்டலடித்துக் கொண்டு ஓடுகிறார்கள் பேரன்கள்.

எத்தனை நேரம் துாங்கினாளோ தெரியாது. எழும் போது பசியும் கூடவே எழுந்துக் கொண்டது. அல்லது பசி வயிற்றை இறுக்கியதில் விழிப்பு வந்திருக்கும். முகம் கழுவ எழுந்தாள். உடல் தள்ளாடுவது போலிருந்தது. ஊர் எல்லையில் ஏதோ விவசாயக் கூட்டம் என்று நோட்டீசு கொடுத்தது நினைவுக்கு வந்தது. வீட்டில் இருந்தால் காலி பாத்திரங்களே பசியைத் துாண்டி விடும். மீட்டிங்கில் டீ..கீ.. கிடைக்க வாய்ப்பிருக்கும். தனியாக நடக்க முடியுமென தோன்றவில்லை. துரட்டிக்காக சீவி வைத்திருந்த குச்சியை துணையாக்கிக் கொண்டு ஊர் எல்லையிலிருக்கும் மைதானத்துக்கு நடந்தாள்.

வயக்காடு வழியாக நடந்த போது அதை திரும்பி பார்க்கக் கூட திராணி வரவில்லை அவளுக்கு. ”ஒண்டியாளா நா செய்வேன் நுாறாளு வேல..” என்பாள். எரு அடித்து.. விதைநெல் வாங்கி.. நாற்றங்கால் சேறு அடித்து.. அடி உரம் போட்டு.. நாற்று நட்டு என எந்த உழைப்புக்கு அஞ்சுவதில்லை. மழை ஏமாற்றாது என்ற நம்பிக்கையில் ஒன்றுக்கு இரண்டு முறை உழவு ஓட்டினாள். நடவுக்கூலிக்காக காதில் இருந்தவைகளையும் கழற்றி அடகுக் கடைக்கு இடம் மாற்றினாள்.

பனி கவிய தொடங்கியிருந்தது. மைதானத்தில் விவசாயிகள் நிறைய பேர் கூடியிருந்தனர். அரசாங்கம்.. கோருட்டு அதுஇதுங்கிறாவோ.. தண்ணி தொறக்கற வழியதான் காணாம்.. சம்பாவாது தேறிக்கும்னு நெனச்சேன்.. ஒரு போவங்கூட பொளைக்கலேன்னா மக்கமனுச வாழறதெப்புடீ.” புலம்பிக் கொண்டே நடந்தாள். வறட்சி அவளின் அத்தனை பலவீனங்களையும் வெளியே இழுத்துப் போட்டிருந்தது. கேன் டீக்காரர் கூட்டத்தினுாடே சுற்றிக் கொண்டிருந்தார்.

”விவசாயிகள் மேல எந்த அரசுக்கும் கவலையில்ல.. இன்னொரு தாது வருஷம் உருவாகிடாம பாத்துக்கறது அரசாங்கத்தோட கையிலதான் இருக்கு.. ஆனா  மாநில அரசு விவசாயத்தை ஒரு பொருட்டா கூட மதிக்கல.. விவசாய உயிர்களை காப்பதறத விட உள்கட்சி பிரச்சனைதான் அவங்களுக்கு பெருசா தோணுது..  காப்பீட்டு நிறுவனங்களுக்கு விவசாயிகள் கட்டின பிரிமியத்தையும் கட்டலை.. தான் கட்ட வேண்டிய பணத்தையும் கட்டல.. இப்ப வறட்சின்னு போய் நின்னா இன்ஷுரன்ஸ் கம்பெனியெல்லாம் கைய விரிக்கறாங்க.. அரசாங்கம் நடக்குதா என்னான்னு சந்தேகமா இருக்கு...” தலைவரொருவர் மைக்கில் பேசிக் கொண்டிருந்தார்.  ”போராடுவோம்.. போராடுவோம்.. உரிமை காக்க போராடுவோம்..” போராட்ட குரல் ஒன்று கூட்டத்தில் எழ உணர்ச்சி வயப்பட்ட சிலர் தங்களையுமறியாத எழுச்சியில் குரலெழுப்பினர்.

”விவசாயிகளோட கஷ்டம் மத்தியில ஆள்றவங்களுக்கு தெரியாதுன்னு நினைக்கிறீங்களா.. நல்லாவே தெரியும்.. விவசாயத்துலேர்ந்து நம்பள அப்பறப்படுத்துணும்கிறதுதான் அவங்க திட்டமே.. ஆத்து மணலை வறள வளற அள்ளி வித்து ஆளுக்கு கொஞ்சமா பங்குப் போட்டுக்கிறாங்க.. குழாய் பதிக்கிறேன். மீத்தேன் எடுக்கிறேன்னு எல்லா திட்டத்தையும் விவசாய நிலத்தில கொண்டாந்து வைக்கிறாங்கன்னா தெரியாமலா வைக்கிறாங்க.. வெளிநாட்டுக்காரனுங்களையும் பெரிய மொதலாளிங்களையும் வாழ வைக்கறதுக்காக நம்ப வாழ்க்கைய ஈடா கொடுக்கிறாங்க..”

கண்கள் இருட்டிக் கொண்ட வந்தது அவளுக்கு. அவர்கள் பேசியது புரியவில்லை என்பது ஒருபுறம் என்றாலும் பேச்சு கூட ஏதோ கிணற்றுக்குள்ளிருந்து பேசுவது போல கேட்டது. மீட்டிங் முடிஞ்சா டீ குடுப்பாங்களா.. இல்ல காசு குடுத்து டீ வாங்கிக்கிணுமா. எதுவும் புரியவில்லை பெரியாயிக்கு. முந்தானையில் முடிந்திருந்த காசை அவிழ்த்துப் பார்த்தாள். ஐந்தும் பத்துமாக இருபது ரூபாய்கள் தேறும். கடைசி கடைசியாய் இருக்கும் காசு.. குறுணையரிசி வாங்கிக் கொண்டால் நீக்கத்தண்ணியா வச்சு நாலைஞ்சு நாளு பொழக்கலாம்.. மீனாளும் பெரியநாயகியும் ஆளை கண்டுடுட்டா கும்பாவுல சோத்த அள்ளி வைப்பாளுங்கதான்.. எத்தன நாளு ஒருத்த வீட்ட எதிர்பாக்கறது..

வீட்டுக்கு கிளம்பினாள். யாரோ அவளை தொட்டு விட்டு ஓடினார்கள்.  ”அம்முச்சி.. இப்ப என்னா பண்ணுவே.. இப்ப என்னா பண்ணுவே....” சிவகாமியின் மகன்தான். வளைந்து வளைந்து அவளுக்கு போக்கு காட்டுவது போல ஓடினான்.
”எலய்.. இங்க எங்கடா வந்தே..” குச்சியை துாக்கினாள்.

”தோ.. எங்கம்மா வந்துருக்கு பாரு..” கூட்டத்தை நோக்கி கைக்காட்டினான்.

”என்ன அப்புச்சீ.. மீட்டிங்கெல்லாம் போவுற..” என்றான் அந்தபக்கமாக வந்த பக்கத்து வயக்காட்டுக்காரன்.

”எம்புட்டு நாளி சும்மா குந்தியிருக்க.. அதான்..” முணுமுணுத்துக் கொண்டாள். ஆத்திரஅவசரத்துக்கு உதவுபவன். பேசாமல் போனால் முகத்தை துாக்கிக் கொள்வான்.

படலை திறந்துக் கொண்டு உள்ளே நுழைவதே பெரும்பாடாகிப் போனது. பந்தாயத்தில் சிதறியிருந்த அரிசியும் வடித்து தின்றாகி விட்டது. பொறந்த நாலும் பளுதாயி போவலேன்னா நானும் இன்னைக்கு அதுங்களோட டவுனு பக்கட்டு போயீ வவுத்தயாவது ரொப்பியிருப்பன்..’ எண்ணெய் சிக்கு தலையணையை வயிற்றுக்கு அணைவாக வைத்துக் கொண்டு கால்களை குறுக்கி படுத்துக் கொண்டாள். கண்ணிலிருந்து வழிந்த நீர் காதை நனைத்தது. ‘கொல்லைல பயிந்தங்காயி இருந்தா பறிச்சு திங்கலாம்..’ நினைப்பே நடையில் தெம்புக் கூட்ட பின்கட்டுக்கு வந்தாள். சிவகாமி வீட்டில் யாருமில்லை. ஆளிருந்தால் குண்டு பல்பை எரிய விட்டிருப்பாள். அவளுக்கென்ன.. மாச சம்பளக்கார புருசன்.. வெள்ளாமை இல்லேன்னாலும் வவுத்துப்பொளப்புக்கு பஞ்சமில்ல..’ பின் மாடத்திலிருந்த டார்ச்சை எடுத்துக் கொண்டாள்.   

சொல்லி வைத்தது போல எல்லா பயித்தங்காய்களையும் பயல்கள் உருவியிருந்தனர். காம்புகாம்பாக நின்ற செடி பசியை துாண்டியது. ”களிச்சல்ல போறவனுங்க.. என் வவுத்துல அடிக்கிறானுங்களே.. வௌங்குவானுங்களா..“ கோபத்திலும் பசியிலும் வார்த்தை நடுங்கியது. சிவகாமியின் கொல்லையிலும் பயித்தஞ்செடி முளைத்திருக்கும்.  ஏதோ ஒரு வேகத்தில் அங்கு சென்றாள். பின்கதவு பின்பக்கமாக கொண்டியிடப்பட்டிருந்தது. இனமறியா உந்துதலில் கொண்டியை நீக்கி கதவை திறந்து உள்ளே சென்றாள். வருடக்கணக்காக புழங்கிய வீடு.. வருடக்கணக்கில் நுழையாத வீடும் கூட.. பார்வையை சுழற்றினாள். ஒரு ஓரமாக சோற்றுப்பானை கஞ்சி வடிய விடப்பட்டிருந்தது.  அருகிலிருந்த அலுமினிய குண்டான் மூங்கில் தட்டால் மூடப்பட்டிருந்தது. மூங்கில் தட்டின் மீதிருந்த கரண்டியில் குழம்பு காய்ந்திருந்தது. சோற்றுப்பானையை நிமிர்த்தினாள் பெரியாயி. அங்கிருந்த தட்டில் சோற்றை இட்டு குழம்பை ஊற்றி மளமளவென்று திங்க தொடங்கினாள்.

***


2 comments: