Search This Blog

Friday, 16 June 2017

அண்டனுார் சுரா

“நெனப்பு“ சிறுகதை குறித்து

இன்றைய சிறுகதை ஊடகத்தில் தவிர்க்க முடியாத ஆளுமையாக கால் ஊன்றிருக்கும் எழுத்தாளர் இவர். இவர் பெண்பால் எழுத்தாளர்கள் பெண்ணிய வாழ்வியல் கூறுகளை மட்டுமே ஆழ , அகலத்துடன் எழுதுவார்கள் என்கிற சூத்திரப் பின்னலை கத்தரிக்கும் படியான எழுத்து இவருடையது. எல்லாருக்குள்ளும் இருக்கும் பசியைப் போல எல்லாருக்குமான எழுத்து இவருடையது. மனிதர்கள் சந்திக்கும் அத்தனை உணர்வுகளையும் இவரது கதைகள் உரக்கப் பேசக்கூடியது. இவரது சமீப சிறுகதைத் தொகுப்புஇரவு’. அதிலொரு கதை நெனப்பு.

அண்ணன் தங்கை இருவருக்கிடையில் படரும் பாசம், இடையில் மெல்லிய விரிசல், இருவரின் தரப்பிலும் ஆழப்படியும் ஏக்கம், ஏதேனும் ஒரு தருணத்தில் இருவரும் ஒன்று சேர மாட்டோமா என்கிற ஏக்கத்துடன் இக்கதை தன் பரப்பை விரித்துச்செல்லும். இக்கதையை வாசிக்கையில் அவரவர் உடன்பிறப்புகள் ஒரு கணம் நினைவிற்கு வந்து ஆழ்மனதை தரைத்தட்டவே செய்யும்


இக்கதையை வாசிக்கையில் எனக்கு கிழக்குச்சீமை திரைப்படத்தில் கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய ஒரு பாடல்வரி நினைவிற்கு வந்தது. ‘அணில் வால் மீசைக்கொண்ட அண்ணன் உன்னை விட்டு ; புலி வால் மீசைக்கொண்ட புருசனோட போய் வரவா....’ என்கிற வரிதான் அது.

இக்கதையின் கருவும் ஏறக்குறைய அதேதான். அண்ணன் இலகுவானவராக இருக்கிறார். புருசன் வழக்கம் போல மீசை முறுக்கி. அவளது பிறந்த வீட்டில் குடும்ப நிகழ்வில் பந்தி நடைபெறுகிறது. ‘ விருந்துன்னா விருந்தாடிவளுக்கு கொண்டாட்டம்தேன்....’ என அண்ணியார் சொல்லிவிடுகிறார். இச்செய்தி அவரது காதில் விழுந்து விட துண்டை உதறி தோளில் கிடத்திக்கொண்டு கிளம்பி விடுகிறார். ஆண்களுக்கு கோபம் வரும் நேரமேசாப்பாட்டில் கை வைக்கும் நேரம்தானே...’ இதற்கு மேல் இங்கு இருந்து விருந்து சாப்பிடுவது மரியாதை இல்லையென மகளை அழைத்துகொண்டு மனைவியிடம்வாரதுன்னா வா....ணொண்ணந்தேன் வேணுமின்னா அங்கிட்டு இருந்துக்க....’ எனக் கிளம்பி விடுகிறார்.
 
மனைவி புருசனுடன் ஓடி வருகிறாள். மனைவி மரகதம். அண்ணன் துரைராசு. புருசன் சின்னய்யா. இவர்களைச் சுற்றும் சிலந்தி வலைச்சுற்றும் இக்கதை ஒரு புள்ளியில் குடும்பம் இணைந்து சுபம் பெறுகிறது.

இக்கதையின் சிறப்பு பெண் அவஸ்தைகளை சொல்லிருக்கும் இடங்கள்தான். இத்தகைய கதைகளில் பெண் வலிகளைச் சொல்கையில் செயற்கைத்தனம் 

தலைத்தூக்கச்செய்யும். ஆனால் இவர் பெண் வலியுடன் அண்ணனின் நகர்வை இடம்பெறச் செய்து கதைக்கு உயிரூட்டிருக்கிறார். எழுத்தின் உயிர் அதை வாசிக்கும் ஆண்களையும் உணர வைத்துவிடுகிறது.

மரகதத்துக்கு மாதாந்திர ஒதுக்கம். சற்று அதிகமாகவே வலி தரும் விஷயம். ‘ பொட்டப்புள்ள இதுக்கலெ்லாம் ...ஊன்னு கெடந்தா நாளக்கு பெரசவ வலிய எப்படி பொறுப்ப...?’  என அவள் அம்மா கண்டிக்கும் இடமும். ‘இந்தாடீ....கக்கூசுக்கு போய்ட்டு தண்ணீ ஊத்தாமயே வந்துட்டீயா....?’  ‘ எங்கிட்ட சொல்லி தொலைச்சிருந்தா நானாது ஊத்தி வுட்டுருப்பன்ல்ல...ஒங்கண்ணங்காரன் கக்கூசுக்கு போனவன் இதென்னாமா ஒரே ரத்தமா கெடக்குன்னு பதறிக்கிட்டு ஒடியாந்தான்....என்னான்னு சொல்ல சொல்ற...?’ என அம்மா கிசுகிசுப்பும் கதையின் ஓட்டத்தில் மையம் கொண்டு அழுத்தம் கொடுக்கின்றன.
இக்கதையின் மைய கருவோட்டம் இதுதான்.

அண்ணி - நாத்தனார் உறவு முறை புனிதமானது. பல நாத்தனார்களுக்கு அக்கொடுப்பினை கிடைப்பதே இல்லை. ஆனால் இக்கதையில் இருவருக்குமிடையேயான பந்தம் பசபசக்கிறது. ஏக்கத்தைத் திணிக்கிறது.

பொதுவாக பெண் எழுத்தாளர்கள் தன் வலியை மட்டுமே எழுதிச்செல்வார்கள் என்கிற பாதி உண்மைக்கலந்த நிதர்சனத்தை அவர் முதல் தொகுப்பிலேயே கடந்துவிட்டாலும் சமீப இவரது எழுத்துகள் யாவும் உயிரின் வலிகளைப் பேசுவதாகவும் உணர வைப்பதாகவும் இருந்து வருகிறது


No comments:

Post a Comment