இரவு சிறுகதை தொகுப்பு குறித்த கரன்கார்க்கி அவர்களின் விமர்சனம் “புத்தகம்பேசுது 2016 செப்டம்பர் இதழில்.
வாழ்வின் அழகை. அதன் மகிழ்வை.. துள்ளல் எள்ளலென மனிதத் துயரை, புழுக்கத்தை.. சக மனிதருடனான நுட்பமான உள்ளடக்கத்தை ஒரு கவிதையிலோ புதினத்திலோ சொல்வதை விட சிக்கலான ஒன்றாக சிறுகதையைக் கருத இடமுள்ளது. கருத்தும், அழகும் மொழியுமென செறவாக குறிப்பிட்ட எல்லைக்குள் தன்னை தற்காத்துக் கொண்டு வீச்சோடு பாய வேண்டும் என்கிற கட்டுகள் நிறைந்த சிறுகதையில் நளினமாக – அதே நேரம் சுருக்கென தைக்கும் தையல் வித்தையை எழுத்தாளர் கலைச் செல்வி கற்றுத் தேர்ந்துள்ளார். இது அவரின் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு. ‘‘சக்கை’’ என்ற புதினமும் எழுதியுள்ளார்.
இரவு என்கிற தலைப்பில் மொத்தம் 15 கதைகள். அனைத்துமே வாசகரை உலுக்கியெடுக்கும் கதைகளாக இருக்கின்றன. பெண்ணின் அகத்தை… அவளின் சுயத்தை.. கருணையை வெடிப்பை.. தீர்மானமான பாய்ச்சலை.. நிறைவேறா காதலின் துயரை அவள் எப்படி சுமந்து கடக்கிறாள் என்பதை வாழ்வியல் காட்சிகளோடு, சூடு குறையாத அழகியலோடு வரைந்து காட்டியிருக்கிறார்.
கதாசிரியர் ஏன் எழுதுகிறோம். எதற்காக எழுதுகிறோம் என்கிற கூரிய தெளிவுடன் கதாபாத்திரங்களை நம்மோடு உரையாட விடுகிறார். பெண்ணின் விடுதலை, சுயமரியாதை உணர்வையும் அவர்களின் ஆழ்மன தகிப்பையும் அதன் உளவியல் வழி நின்று இந்த கதைகளை அழகுப்பட செதுக்கியிருக்கிறார்.
பெண் தன் இருப்பையும் சுதந்திரத்தையும் ஆளுமையையும் தக்க வைத்துக் கொண்டு, தேவையற்ற சமூக அச்சத்தைத் தூக்கியெறிந்து யதார்த்தத்தில் தனக்கும் மற்றவருக்கும் பயனுள்ள ஒன்றை தேர்ந்துக் கொள்ளும் ஆளுமைமிக்க கதையாக ‘‘மஞ்சுக்குட்டி’’. இந்த கதை வாசிக்க வியப்பாக இருக்கிறது. இந்த தொகுப்பு மரணத்தையும் அதன் வலியையும் பேசும் அதே நேரம் இனம் புரியாததொரு விடுதலையையும் உணர்வதாக பெண் மனம் சொல்வதாக நுட்பமாக பதிகிறது. கதையின் நோக்கத்தை துல்லியமான செறிவான வார்த்தைகளால் அடையாளம் காட்டுகிறார்.
‘அப்பாவும் மோட்டார்பைக்கும்’ என்ற சிறுகதையில் ‘‘ஆமா.. ஒத்தப்புள்ள பெக்கறதுக்கே ஒங்கப்பனுக்கு ஒம்பாடு.. எம்பாடு.. ஆயி போச்சு.. எல்லாம் இந்த பைக்கு மாதிரிதான்..’’ இந்த ஒற்றை வார்த்தை உள்ளார்ந்த வலியை சொல்கிறது.
ஆழம் கதையில் வரும் கதாபாத்திரம் பேசும் அரசியல்.. தாய்மையின் துயர் மிக்க கதறல்.. அதனூடே அங்கு நடக்கும் அதிகாரம் செறிந்த உத்தரவுகள்.. அலட்சியங்கள் என மிக யதார்த்தம். தனது குழந்தை உயிரோடு கிடைக்காது என புரிந்த பிறகு அந்த தாய் அதிகாரிகளிடம் பேசும் யதார்த்தம் அருமையான பகுதி. அந்த தாயின் கதறல் கதையை கடந்த பிறகும் ஒலிக்கிற மாயத்தை ஆசிரியரால் நிகழ்த்த முடிகிறது.
இதில் வரும் பெரும்பாலான கதைகள் முக்கியமான சிற்றிதழ்களில் வெளிவந்து கதைகளாகவும் சில போட்டிகளில் பரிசுப் பெற்ற கதைகளாகவும் இருக்கின்றன. துயரை, ஏக்கத்தை, குமுறலை, வாழ்வை, யதார்த்தமும் அதன்மீதான புனைவும் சேர்த்து அதேநேரம் அழகியலோடும் கட்டுக்கோப்பான உயிர்ப்போடும் தனது படைப்பை செதுக்கியிருக்கிறார் எழுத்தாளர் கலைச் செல்வி.
No comments:
Post a Comment