Search This Blog

Sunday, 18 June 2017

தஞ்சை ஹரிணி

பெரியாயி சிறுகதை குறித்து தஞ்சை ஹரிணியின் விமர்சனம்
வாசிப்புத் தொடங்கிய காலந்தொட்டு மண்சார்ந்த கதைகள் நிரம்பப் பிடிக்கும். அதன் இயல்புத் தன்மையை நாம் சித்திரிப்பு செய்யமுடியாது. அனுபவிக்கலாம். அனுபவித்ததை அப்படியே சொல்லலாம். இதுபோன்ற கதைகளை வாசிக்கும்போது இயல்பான உரையாடலில் தொடங்கி இயல்பாகவே முடியுமென்றாலும் அது மனத்தைக் கசிய வைக்கும். இன்றைக்கும் இப்படித்தான் கிராமத்தின் மண்மனிதர்களின் வாழ்வியல் இருக்கிறது எனும்போது நாம் முழுமையாக நிறைவுபெற்ற மானுட சமுகத்தினை அடையவில்லை என்பது உறுத்தும்.
உறவுகளை அழைக்கிற சுகத்தைப் பற்றி தனியொரு கதை எழுதலாம். பெரியம்மா. சின்னம்மா. ஆத்தா, அம்மாயி, அப்பாயி, தாத்தா, சித்தி, அத்தே, சின்னாயி, பெரியாயி இப்படி அழைப்பதில் இழையும் அன்னியோன்யம் கொடுக்கும் சுகத்தை சிறுகதை போன்ற இலக்கியப் படைப்பில் குறைவற அனுபவிக்கலாம்.
இந்த வாரக் கல்கியில் கலைச்செல்வியின் பெரியாயி சிறுகதை வந்திருக்கிறது. கதை முழுக்க வலியிழைகிறது.
அது நம் வாழ்வின் இன்னொரு பரிமாணத்தைக் காட்சிப்படுத்துகிறது. விவசாயமும் அதன் விளைச்சலும் தரும் விளைவில்தான் கணவன், மனைவி, குடும்பம் என்பன இணைந்துகிடப்பதை மீள்பதிவு செய்யும் கதை.
வீரியமான இயற்கையும் மண்ணும் சார்ந்த உரையாடல்களில் கதை சிறக்கிறது.
இளநீருக்குள் இருக்கும் நீரைப்போல தூய்மையான அன்பில் மாமனை மணந்துகொள்ளும் பெரியாயியின் அன்பைப் புரிந்துகொண்டாலும் ஆணுக்கேயுரித்தான கொழுப்பில் இன்னொரு மனைவியைத் தேடிக்கொள்ளும் மாரியப்பனை எண்ணி தொலைந்துபோன வாழ்வு பெரியாயியுடையது. இருப்பினும் அதன் வழியான பேரப்பிள்ளைகளை உள்ளுக்குள் நேசித்து வெளியில் பொய் வெறுப்புக் காட்டி நடிக்கிறாள். ஒவ்வொரு நாளின் வயிற்றுத்தீயை அணைப்பது பெரியாயிக்கான சவால். அதன் வெளிப்பாடு கதைமுழுக்க அடிக்குத் தப்பி உயிரைக் காப்பாற்ற ஓடும் பாம்பைப்போலத் தெரிகிறது.
நம்மின் முதுகெலும்பாய் வாழ்வின் அடி ஆதாரமாய் இலங்கும் விவசாயம் பொய்த்துப்போன வாழ்வில் இயலாமையின் தவிப்பைப் பெரியாயி கதை முழுக்க உணர்த்துகிறாள்.
கடைசியில் எல்லாவற்றையும் தோற்கடித்து வெல்லுகிறது பசி.
கணவனை வெறுத்து தனக்கான சுவரை எழுப்பி தடுப்பில் வாழ்ந்தாலும் மனதுக்குள் அவளால் அந்த தடுப்பை வைக்கமுடியவில்லை.
மார்கழி மாதக் குளிர் வயதான உடலைத் துளைத்துக்
கொண்டிருந்தது. இதற்கெல்லாம் பயந்தவளல்ல அவள்.
நெற்பயிர்கள் கரும்பச்சையும் இளம் மஞ்சளுமாக மினுமினுத்துக்
கிடக்கும் மார்கழி வயலைப் பார்த்துப் பரவசமடைவாள். பகலெல்லாம்
பாடுபட்ட வயலில் பரவியிருக்கும் பயிர்களின் ஈரப்பதம் வாசத்தை
வெளியில் இறைத்துப்போடுவதை இரவெல்லாம் முகர்ந்து
கிடப்பாள். பயிர் பால்பிடிக்கும் நேரத்தில் மழை வந்து கெடுத்து
விடுமோ என்ற பதைப்புமிருக்கும் கிராமம் மொத்தத்துக்கும்.
எத்தனை உயிர்ப்பான விவசாய வாழ்வியலைக் காட்சிப்படுத்தும் இந்த தொடர்கள் உயிரைப் பிசைகிறது. இன்றைய விவசாயச் சீரழிவை மனதுக்குள் கசிய வைக்கும் சொற்கள். எப்படி அன்றைய வாழ்க்கை பச்சையாகவும், மினுமினுத்தும், பரவசமூட்டியும் ஈரப்பதத்துடனும் வாசமாகவும் பால்பிடித்தும் கிடந்தது. வலிக்கிறது.
இவை கதையின் உச்சக்கரு.
கதை முழுக்க வேளாண் பண்பாட்டின் சிதைவு குருதியாறாகப் பெருகியோடுகிறது.
குத்துக் குத்தாக நெல் செடிகள் காயத் தொடங்கியிருந்தன/// கருக்காய்க்குக் கூட வழியில்லை பொங்கல் நெருங்கிவிட்டது//// முற்றமும் தாழ்வாரமுமாக இருந்த வீடு//// தானியம் இல்லாத வீட்டில் பத்தாயத்துக்கென்ன வேலை ///இடுப்பொசரம் நிக்க வேண்டிய நெல்லு காலொசரங்கூட எம்பல..///அம்மாச்சி அம்முச்சியான அவலம்///ஒண்டியாளா நா செய்வேய் நூறாளு வேல../// அலைகிறது ஒரு வாய் டீக்கு..
இப்படி கதைமுழுக்க சொற்கள் மனத்தைக் காயப்படுத்துகின்றன. வலிக்கச் செய்கின்றன.
கொல்லப் பயித்தங்காயைக்கூட திங்க முடியாத சூழல்.
வருடக்கணக்கில் புழங்கிய வீடு…வருடக் கணக்கில் நுழையாத வீடும்கூட…
வயதின் தளர்வில் பசி வெல்கிறது.
பெரியாயி அருமையான கதையல்ல. அவலமான கதை. நம் பண்பாட்டின் சிதைவைச் சொல்லுகிறது முறையில் அற்புதமான வாழ்வியலை நாம் தொலைத்துவிட்ட அவலத்தைச் சொல்லிப்போகிறது.
சகோதரி கலைச்செல்விக்கு உயிர்ப்பான வாழ்வியலின் கதையை வாசிக்கத் தந்தமைக்கு நன்றிகள்.
நன்றி கல்கி. 25.6.2017

No comments:

Post a Comment