Search This Blog

Monday, 11 June 2018

பெல்ஜியம் கண்ணாடி

பதாகை ஜனவரி 2018ல் வெளியானது

என்னிடம் பிரதிபலிக்காத கண்ணாடி ஒன்றுள்ளது. ரசமெல்லாம் போகவில்லை. ஒருவேளை பிரதிபலிப்பதற்கு ஏதுமில்லாமல் இருக்கலாம். இதற்கு முன் உடைபட்டிருந்தது என்பதை சட்டென கணிக்க இயலாதளவுக்கு பளிச்சென்று இருந்தது. உடைசல் பெருந்துண்டுகளாக இருப்பது ஒருவகையில் வசதிதான். சிறு வீறல்களெனில் பார்வைக்கு தென்பட்டு விடும். குடிசை யாருடையதோ என்றாலும் அப்படியும் இப்படியுமாக ஓரளவுக்கு அதை பொருத்தி வைத்திருந்தேன். யாரோ இதை பெல்ஜியம் கண்ணாடி என்றார்கள். பிறப்பிடமும் வாழிடமும் முற்றிலும் வேறானவை என்பதாக இதைப் புரிந்துக் கொண்டேன். அதற்கே இருபத்துநான்கு வருடங்கள் தேவைப்பட்டிருந்தது.



“உங்க பேரு..?”

பெல்ஜியத்தில் வைத்தப் பெயரா..?



அந்த மரக்கூண்டை இரு கைகளாலும் பற்றியபடி என்னை தாங்கிக் கொண்டேன். உள்ளங்கையின் ஈரத்தில் மரம் வழுக்கியது. சிமிண்ட் தரை குண்டும்குழியுமாக இருந்தது. அறைக்கு வெளியேயும் உள்ளேயும் கால்கள்.. கால்கள்.. சிலவை சப்பாத்துகளும்  சிலவை செருப்பும் அணிந்திருந்தன. எல்லாமே என்னை நோக்கி நெட்டித் தள்ளியபடி.. மைக்குகளை போல.. ஆர்வம் விழுங்கியவைகளாக.

”உங்க பேரை சொல்லுங்க...” கேள்விகளால் நிறைந்த உலகம்.

கருப்பு அங்கி அவரை வழக்கறிஞர் என்று மூளையில் ஏற்றியது.

”சித்ரலேகா..”

அம்மா தலைமையாசிரியை. மாணவிகளை அழைப்பது போல என்னையும் முழு பெயரிட்டுதான் அழைப்பாள். அப்பாவுக்கு நான் எப்போதுமே பாப்பாதான். தவிர இருவருக்கும் நான் மட்டுமே பாப்பா.

”வயசு..”

இருபத்தியோரு வயதிற்குள் எல்லாமே முடிந்திருந்தது. தொடக்கமும் அதே வயதில்தான். ஆனால் இரண்டுக்கும் இடையே இரண்டு மாத காலங்களிருந்தது. இன்னும் சொல்லப்போனால் என் வாழ்நாளி்ல் நான் தினேஷ் வீட்டில் கழித்த நான்கு மணி நேரத்தை மட்டுமேயும் கணக்காக கொள்ளலாம்.

”அப்பா பெயர்..?”

அதைதான் கெடுத்திருந்தேன் என்று அம்மா தலையலடித்துக் கொண்டு கதறினாள். தினேஷை என் நண்பன் என்ற அளவில் அவளுக்கும் தெரியும். தினேஷ் அவளின் பழைய மாணவனும் கூட.

”தினேஷ் என்பவருக்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு..?” வழக்கறிஞருக்கு நடுத்தர வயதிருக்கும். முகம் கடினமாக தெரிந்தது.

”கேள்வியை நிதானமாக்குங்கள்..” என்றார் நீதிபதி. பெரிய மேசைக்கு பின்புறம் அமர்ந்திருந்தார். சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்ட தரை அவருடையது.

“லவ்வாடீ பண்றே லவ்வு..” என் விஷயத்தை அம்மா கண்டுப்பிடித்திருந்தாள்.

ஆனால் அப்போது திருமணமுமாகியிருந்தது. முன் திட்டமெல்லாம் இல்லை என்றாலும் சமீபத்தில் நடந்த இதே போன்றதொரு சம்பவம் எங்களை பயமுறுத்த, இரண்டு மாதங்களுக்கு முன் கோயிலிலும் அதை தொடர்ந்து திருமணப்பதிவும் செய்திருந்தோம்.

காதல் என்ற வார்த்தைக்கே அப்பா ஓங்கியடித்தார். அதுவும் தினேஷுடன் என்ற போது, என்னை சுவரோடு ஓடுக்கி கழுத்தைப் பிடித்து உயரத் துாக்கினார். கதவுகளையெல்லாம் அடைத்து விட்டு அம்மா ஓலமிட்டு அழுதாள். சித்தப்பா, பெரியப்பா, மாமா, பெரியப்பாவின் மகன்கள் என எல்லோருடைய ஆதரவும் அவர்களுக்கிருந்தது. தனியாளாய் நான் வாய் கிழிப்பட்டு நின்றேன்.

”இனிம அவன பாக்க மாட்டேன்.. பேச மாட்டேன்னு சொல்லுடீ..”

இரத்தம் கறையாகப் படிந்து வாய் முழுக்க இரத்த வாடை வீசியது. நான் பெரியப்பாவின் மகனை.. அண்ணனை பார்த்து பதில் சொன்னேன். என் வயதையொத்த அவனால் என்னை புரிந்துக் கொள்ள முடியும்.

அவனை பார்க்காமல் என்னால் ஒருநாள் கூட இருக்க முடிந்ததில்லை. எனக்காக அவன் எதை வேண்டுமானாலும் செய்வான். ஆனால் முதன்முதலாக நான் அவனிடம் என்னை வெளிப்படுத்தியபோது ”என்னை உண்மையிலுமே விரும்புனீங்கன்னா.. எனக்காக எதும் செய்ய நினைச்சீங்கன்னா இந்த விஷயத்தை இத்தோட விட்டுருங்க..” என்றான். நான் அவனுக்காக எதுவுமே செய்ததில்லை.

”நான் அவனை கல்யாணம் செஞ்சுக்கிட்டேன்..”

”அப்டீன்னா அவர் உங்க கணவர்.. அப்படிதானே..” என்றார் வழக்கறிஞர்.

ஆனால் வீடு அவனை ………..ப்பய என்றது. ”உள்ளத சொல்லுடீ.. என்னடீ ஆச்சு..?” அம்மாவின் பயத்திலிருந்த மற்றொரு பரிமாணத்தை அப்போது நான் உணரவில்லை.

அன்று இரவு முழுக்க எல்லோரும் பேசிக் கொண்டேயிருந்தனர்.. தினேஷின் தொடர் குறுஞ்செய்திகளைப் போல. பொதுவாக இரவு நேரத்தில் எங்களுக்குள் செய்தி பரிமாற்றம் இருக்காது. தினேஷ் ஏதோ வித்யாசமாக உணர்ந்திருக்க வேண்டும்.

”அந்த மசிறுதான் புளீக்.. புளீக்குன்னு மெசேஜ் அனுப்புது..” அப்பா கோபமாக என் அலைபேசியை எடுக்க, அதை விட கோபமாக அதை பிடுங்கி ஏதோ பதிலனுப்பினான் அண்ணன். ”ஓடுகாலீ.. பொட்டப்புள்ளய தலைல துாக்கி வச்சுட்டு ஆடுனீங்கள்ள.. இப்ப அனுவீங்க நெல்லா..”

”கொஞ்சம் பேசாம இருங்கண்ணீ.. அண்ணனே முடியாதவரு.. ரொம்ப டென்ஷன்ல வேற இருக்காரு.. எதாவது ஆயிட போவுது..”

நான் சட்டென்று நிமிர்ந்துப் பார்த்தேன். அய்யய்யோ.. அப்பாக்கு ஹார்ட் அட்டாக் வந்துட்டா.. கடவுளே.. அப்பா என்று கதறினேன்.

”சொல்லுடீ.. சொல்லுடீ.. இனிம பாக்க மாட்டேன்.. பேச மாட்டேன்னு சொல்லுடீ..” வேகமாக என்னருகே வந்தார் அப்பா. கூடவே பெரியப்பாவும். ”தம்பி பொறுமடா.. பொறும..” என்றார்.

”செரி.. பொறுமையாவே சொல்றேன். இங்காரு பாப்பா.. எல்லாத்தையும் வுட்டுட்டு மொதல்ல படி.. மத்ததெல்லாம் அப்றம் பாத்துக்குவோம்..”

எனக்கு குழப்பமாக இருந்தது. ‘அப்றம்னா.. படிச்சு முடிச்சவொடனே பெரிய அளவில ரிசப்ஷன் வைச்சு ஊரைக் கூட்டி சொல்வாங்களோ..’ கோபத்தில் பேசி விடுவதும் பிறகு அணைத்துக் கொள்வதும் அப்பாவின் குணம்.

”மயிலே மயிலேன்ல்லாம் புருசாரம் புடிக்க முடியாது.. படிப்ப நிறுத்திட்டு சூட்டோட சூடா எவனாயாது பாத்து முடிச்சிட்டாதான் தேவல.. பாவீ.. பாவீ.. ஒத்தையாச்சேன்னு உருவி உருவி வளத்ததுக்கு நல்லா துாக்கி நெஞ்சுல அடிச்சிட்டா.. இனிமகாட்டி வெளில போற வேல வச்சுக்கீட்டீன்னா வௌக்கமாறு பிஞ்சுடும்..” கோபத்தில் உடல் நடுங்க கத்தினாள் அம்மா.

விளக்குமாற்றின் வீசலில் கண்ணாடியில் வீறல் ஏற்பட்டது.

”ஆமாங்க.. தினேஷ் என்னோட கணவன்தான்..” நீதிபதியைப் பார்த்து சொன்னேன். அவரது பார்வையில் கனிவிருந்தது போல தோன்றியது.

”உங்களுக்கு திருமணம் நடந்தது எப்போது..?”

அன்றிலிருந்து சரியாக நான்கு மாதங்களாகி இருந்தது. திருமணத்தன்று எல்லோரும் எப்படி உணர்வார்களோ தெரியவில்லை.. நாங்கள் இருவருமே பயந்திருந்தோம். கோவில் வாசலில் எழும் சிறு சரசரப்புக்கு கூட நடுங்கி ஒடுங்கினோம். இத்தனைக்கும் அந்த மதிய நேரத்தில் அங்கு யாருமேயில்லை.. அர்ச்சகர் உட்பட. சாமி கூட பூட்டியக் கதவுக்குள்தான் இருந்தது. கோவில் வாசலுக்கு வந்ததும் மஞ்சள் கிழங்கு சுற்றிய தாலிக்கயிற்றைக் கழற்றி அவனிடம் கொடுத்து விட்டு, காலேஜ் டைம் முடிஞ்சிடுச்சு.. நா கௌம்பறன்..” என்றேன்.

திருமணம் பதிவாகி இருந்ததால் அதை ரத்து செய்வதற்கு முன் தினேஷ் மீது அப்பா காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

”ஏன்டா.. பன்னி மேய்க்கற பயலுக்கு மேசாதி பொண்ணு கேக்குதா.. ஒங்காளுல எவளுக்கும் எதும் இல்லேன்னு இங்க படுத்து எந்திரிக்க வந்தியாடா..”

அங்கிருந்த இரு கான்ஸ்டபிள்களும் அந்த அதிகாரிக்கு கோபம் வரும்போது துாபம் போட்டார்கள்.. ஜோக் என்பதாக கருதிக் கொண்டு எதையோ சொல்லும் போது சிரித்து வைத்தார்கள். சத்தம் போடும் போது முகத்தை அதட்டலாக்கினார்கள் இப்போது சிரிக்க வேண்டியிருந்தது அவர்களுக்கு.

”ஏம்மா.. ஒனக்கு இந்த கட்டாயக் கல்யாணத்தில சம்மதம் கெடயாதுதானே.. பேசி முடிச்சப் பொறவு மாத்தக்குடாது..” என்றார் என்னைப் பார்த்து.

”இல்லேன்னு சொல்லு..” அம்மா என் தொடைசதையை கொத்தாக அள்ளி திருகினாள்.

கண்ணாடியில் வீறல் அதிகமானது.

”ஏன்டா.. ஏன்டா.. ஆயிரம் வேல கெடக்கு.. அத வுட்டுட்டு ஒங்க எழவே எடுக்க சொல்றீங்க..” லத்தியால் மேசையைத் தட்டினார். ”காதல்.. கல்யாணம்னு இனிம ஒன்ன இந்த பக்கம் பாத்தேன் ஊட்டிய முறிச்சுடுவன் ஜாக்ரத..”  என்றார்.

அம்மா என்னை கைப்பிடியிலிருந்து விலக்கவேயில்லை.

பிறகுதான் அவன் என் மனைவியை மீட்டுத் தாருங்கள் என்று நீதிமன்றம் சென்றிருந்தான்.

அப்பா சிலிண்டரை திறந்து விட்டதில் வீடெங்கும் சமையல் வாயுவின் நாற்றம்.
வீறல் ஆழமாகி கண்ணாடி துண்டானது அன்றுதான்.

பெற்றோருடன் செல்லவே விருப்பம் என்றேன் நீதிபதியிடம். எனக்கு முன் நீண்ட மைக்குகளை அப்பா தடுத்துக் கொண்டே வந்தார். என் முகத்தை துப்பாட்டாவால் மூடி வைத்தாள் அம்மா. விறுவிறுவென்று நடக்க வைத்து காரில் ஏற்றினர். என்னருகில் அப்பா வியர்த்து நாறி உட்கார்ந்திருந்தார். அம்மா உட்பட யாருமே பேசிக் கொள்ளவில்லை. அன்று மட்டுமல்ல.. அம்மா மருத்துவ விடுப்பு எடுத்து வீட்டிலேயே இருக்க ஆரம்பித்த பிறகு என்னுடன் பேசுவதையே நிறுத்தியிருந்தாள்.

”உங்க கணவர் வீட்டுக்கு எப்போ போனீங்க..?”

அம்மாவுக்கு அன்று மெடிக்கல் போர்டிலிருந்து பதிவுத்தபால் வந்திருந்தது. நீண்ட விடுப்பு எடுத்திருந்ததால் அம்மாவின் பணியிடத்துக்கு வேறு யாரோ முயற்சி செய்வது குறித்த பிரச்சனை மும்முரமாக ஓடிக் கொண்டிருந்த நேரத்தை எனக்கு சாதகமாக்கிக் கொண்டேன்.

தினேஷின் வீடு சிறிய குடிசையாக இருந்தது. எங்களைக் கண்டதும் எல்லோருமே பதறிப் போனார்கள். ஆனால் தினேஷின் வார்த்தைகளுக்கு அங்கு பூர்ண கும்ப மரியாதையிருந்தது. வயதை விட.. வருடங்களை விட அவன் நிதானமானவன். என் பெரியப்பாவின் மருமகளை போல எனக்கும் கணவன் வீட்டில் விளக்கேற்ற வேண்டும் என்று தோன்றியது. பூஜையறை என்று ஏதுமில்லை. குடிசையின் கிழக்கு மூலையில் தகரப்பெட்டியை இரண்டாக திறந்து குறுக்கே சிறு கழியை நிறுத்தி, உள்ளே இரண்டொரு சாமி படங்கள் வைத்து பூஜையறையாக்கியிருந்தனர். விளக்கை தேடினேன். கூரையில் சொருகியிருந்த சிறு பித்தளை விளக்கை நீட்டினான். திரி, எண்ணெய் என்று நான் ஏதேதோ கேட்க, “வேணும்னா மெழுகுவர்த்தி வாங்கியாரவா..” என்றான்.

”ஏய்.. அதெல்லாம் வேதக்காரங்க வீட்ல தான் ஏத்துவாங்க…” என்றேன் கிசுகிசுப்பாய். அவனிடம் நெருங்கி நின்றுக் கொண்டேன். இனி ஆயுசு முழுக்க இவனுடன்தான். திருட்டுத்தனமெல்லாம் தேவையில்லை. தினேஷிடம் வந்து விட்டேன்.. இனி என்ன செய்து விட முடியும் என்ற தைரியம் வேறு.

ஆனால் “கொஞ்ச நாளைக்கு வெளியூருக்கு போயிடுங்க..” அவசரப்படுத்தினார்கள் தினேஷின் நண்பர்கள்.

”இதெல்லாம் ஒங்க வீட்டு ஆளுங்களுக்காக டெம்பரவரியா செய்ற ஏற்பாடுதான்.. திரும்பி வந்ததும் காலேஜ்ல சேந்துக்க.. நா வேணும்னா வேலக்கு போறேன்..” என்றான் தினேஷ்.

”அப்டீன்னா என் புள்ளைங்களுக்கு ஒன்ன பத்தி என்னான்னு சொல்லுட்டும்.. உங்கப்பா அரைகொறை என்ஜினியருன்னா..?”

அந்த நேரத்தில்தான் வெளியில் கட்டியிருந்த ஆடு கர்ணக்கொடுரமாக அலறியது. குடிசை வாசலில் தொங்கிக் கொண்டிருந்த சேலைத் தடுப்பை விலக்கியதும் என் தைரியமெல்லாம் வழிந்தோட, தினேஷின் கைகளை பிடித்துக் கொண்டேன். ஆனால் சுதாரிக்கும் முன் என்னை சேர்ந்த மனிதர்களின் ரௌத்திரத்தில் நானும் அவனும் பிரிக்கப்பட்டிருந்தோம்.



அதை தொடர்ந்த நாட்களில் கிடைத்த இடைவிடாத வசவுகளும் அடிகளும் எனக்கு உறைக்கவேயில்லை.

தினேஷுக்கு என்னாச்சு..?

”கடைசியாக தினேஷை எப்போது பார்த்தீர்கள்..?” என்றார் வழக்கறிஞர்.

சாதித் தலைவர் என்னை அசிங்கமாக திட்டியபோது அப்பாவும் கூடவேதான் இருந்தார் பிறகு அவர் அப்பாவையும் திட்டினார்.

”பொட்டப்புள்ளங்கள என்னா மயித்துக்கு படிக்க அனுப்புன..”

”அது ஒரே பொட்டைதாண்ணே அவருக்கு..” சொன்னது யார் என தெரியவில்லை.

”பொட்டப்புள்ளயெல்லாம் ஒரு புள்ளைன்னு ஒண்ணோட நிறுத்திக்கிட்டியாக்கும்.. இந்த சிறுக்கியால இன்னைக்கு சாதி மானமேல்ல எடுப்பட்டு நிக்குது.. வூட்டம்மா என்னா பண்ணுது..”

”எலிமெண்ட்ரி ஸ்கூல்ல ஹெச்செம்மா இருக்காங்க..”

“அரசாங்க பள்ளியொடமா..”

”ஆமா..”

”அப்ப பொட்டச்சீங்க வெளிய அனுப்பீட்டு நீ ஊ..   கெடந்தியா..” அசிங்கமாக சைகைக் காட்டினார். இத்தனை கூட்டம் எதற்கு..? அப்பா ஏன் இப்படி பம்முகிறார்..? பெரியப்பா, சித்தப்பா, அண்ணன்கள், மாமா எல்லோருமே கூட பவ்யமாகதான் இருந்தார்கள்.

”அவுசாரியா போய்ட்ட.. ஆனா கூட உங்கப்பன் மூஞ்சிக்காக நல்லப்பயல கைக்காட்டீ வுடுறன்.. கட்டிக்க..” என்றார் அந்த ஆள் என்னிடம்.

”சரீன்னு சொல்லு சனியனே..” அப்பா வாய்க்குள்ளேயே பேசினார்.

”அந்த மயித்துக்கிட்ட என்ன பேச்சு.. வீட்டுக்கு கூட்டீட்டு போங்க.. ஆளுங்கள அனுப்பி வக்கிறேன்.. எல்லாம் சரியாயிடும்.. ஒண்ணும் மனசில வச்சுக்க வேணாம்..”  

அப்பாவிடம் சமாதானமாக பேசி எங்களை அனுப்பி வைத்தார் அந்த ஆள். 

”பெத்தவங்களை காயப்படுத்தினோம்னு உங்களுக்கு தோணவேயில்லையா..” இதற்கு என்ன பதில் சொல்வது என்பது போல வழக்கறிஞரை பார்த்தேன்.

”இந்த கேள்வி தேவையில்லாதது. பதில் சொல்லும் அவசியமற்றது..” என்றார் நீதிபதி எனக்கு ஆதரவாக.

எதுதான் அவசியமானது..? தினேஷிற்கு உயிர் அநாவசியம் என்று என் பெற்றோரால் முடிவு செய்யப்பட்ட பிறகு எதுதான் அவசியம்..?

கேள்விகள் சூழ்ந்த உலகமிது..

”இதை தவறு என்று உணர்கிறீர்களா..? அல்லது சற்று நிதானித்திருக்கலாம் என்று யோசிக்கிறீர்களா..? இப்போது உங்கள் மனநிலை என்ன..? இந்த மனநிலையை என்னவாக உணர்கிறீர்கள்..? எனக்கு முன் நீளும் ஒலிப்பெருக்கிகள் ஆன் ரெகார்ட்.. ஆஃப் ரெகார்ட் என்று கேள்விகளை பிரித்து விட்டு, பிறகு ஆஃப் ரெகார்ட்டை ஒலிப்பரப்பியது. எங்கோ நடந்து செல்லும்போது கூட தோ.. அவதான்.. என்று விரல் சுட்டினார்கள்.  “கொஞ்சமாது கவலை இருக்கா.. என்றார்கள். யார் யாரோ ப்ராஜெக்ட் பண்ண போறோம்.. உங்க கிட்ட பேசுணும். என்ன நடந்துச்சுன்னு சொல்லுங்க.. என்றார்கள்.

அன்றைக்கு விவாதம் முடிந்த தருணத்தில் ”நீங்க எதும் சொல்ல விரும்புறீங்களா..” என்றார் நீதிபதி என்னிடம்.

குழப்பமாக தோன்றினாலும் வழக்கம்போல மௌனமாகவே நின்றிருந்தேன்.

ஆனால் மூன்று வருடங்களை கடந்த பிறகும் அதே குழப்பம் அப்படியே நீடிக்கிறது.
நீதிபதி எதிரில் இருப்பதை போல நினைத்துக் கொண்டு வாய் விட்டு சொன்னேன்..

”நான் என்ன தப்பு செஞ்சேன்னு சொல்லுங்களேன்..”

அப்போது அறுநுாற்று ஒன்றாவது தோசையை திருப்பி போட்டுக் கொண்டிருந்தேன்.
பிறகும் பிறிதொரு கேள்வியிருந்தது.

”தினேஷ் என்ன தப்பு பண்ணுனான்..?”

***




No comments:

Post a Comment