Search This Blog

Friday 15 June 2018

மீட்சி


”இந்த இடத்தில நம்பளமாதிரி மனுசங்க ஒரு காலத்தில வாழ்ந்தாங்கன்னா நம்ப முடியில ஹெஃபி...” என்றேன்.. வானுார்தியின் வேகத்தை பொத்தான் வழியே குறைத்தப்படியே.
என்னை பற்றி சொல்வதென்றால் மினுாட் என்பது என் பெயர். அநீதிகளின் உச்சத்தை எட்டிய பின் வேறு வழியின்றி அற உணர்விற்குள் ஆற்றுப்படுத்திக் கொண்ட நவீன உலகத்தின் பிரஜை நான். மற்றபடி உலகம் சுற்றுவதில் ஹெஃபிஸை விட ஆர்வமானவள். தேடல்களுக்குள் வாழ்க்கையை நுழைத்துக் கொண்டு அதன் அர்த்தங்களில் ஜீவிக்கிறவர்கள் என்று எங்களை பற்றி மற்றவர்கள் கணிக்கலாம். அது உண்மையாகவும் இருக்கலாம்.
”அதுக்குதான் இத்தன கட்டுமானங்களும் சாட்சியா நிக்குதே.. நம்பித்தானே ஆகணும்..” என்றான் ஹெஃபிஸ். என் நண்பன். இருவரும் இருபதுகளின் இறுதியிருக்கிறோம். அதற்குள்ளாகவே நிறைய நாடுகளை பார்த்து விட்டோம். உலகம் சுற்றுவதற்காகவே உயிர் வாழ்வது போல ஞாயிறுகளை கூட உழைப்பாக்கி பணத்தை பத்திரப்படுத்திக் கொள்வோம். சுற்றுப்பயணத்துக்கான இடத்தை வெகு முன்பாகவே தீர்மானித்து விடுவோம். அது சம்பந்தமாக திரட்டும் தகவல்களும் எண்ண அலைகளும் பயணத்தை வெகுவாக சுவாரஸ்யப்படுத்தும். இந்தியாவுக்கான பயணத்திட்டம் வகுத்தும் நான்காண்டுகளாக ஏனோ தள்ளிக் கொண்டே போகிறது.
அப்பா “உனக்கும் இந்தியாவுக்கும் சம்பந்தமிருக்கில்ல.. அவ்ளோ சீக்ரம் வாய்ச்சுடுமா..” என்று சிரித்தார்.
பிறகு கேட்டார்.. “இந்தியாவுல எங்க..”
”தமிழ்நாடு..” என்றேன். மீண்டும் அதையே சொல்லி சிரித்தார். “உனக்கும் தமிழ்நாட்டுக்கும் சம்பந்தமிருக்கில்லே..” எதற்கெடுத்தாலும் சிரிப்புதான். அம்மாவுக்கும் அவருக்குமிடையே விடாது நடக்கும் சண்டைகளில் இந்த சிரிப்புதான் அம்மாவை வெறிக் கொள்ள வைக்கும். வேலை.. சம்பாத்தியம் என்ற மெனக்கெடல் கிடையாது அவருக்கு.. ஆனாலும் தன்னுடைய செலவுகளுக்கு அம்மாவிடம் பணம் கேட்பதில்லை. கேட்டாலும் அவர் வார்த்தைகளை அம்மா பொருட்படுத்துவதேயில்லை. என்னையும் அப்படியே வளர்த்திருந்தாள்.
”நம்ப முடியிலேன்னு ஒரு பேச்சுக்கு சொன்னேன்.. அதுக்கு இவ்ளோ சீரியஸா விளக்கம் கொடுக்கிறியே.. ஹெஃபி..” என்றேன். அவன் அப்படிதான். எதையுமே  தீவிரமாக சிந்திப்பான்.
வானுர்தி, இறங்க தோதான இடம் என்றது.. என் கவனத்தை திருப்பி. ஆமோதிப்பாக பொத்தானை இயக்கினேன்.
பூமியை நெருங்க நெருங்க பொட்டல்வெளி வெப்பக்காற்றை அள்ளி வீசியது. ஏற்கனவே விஞ்ஞான கண்களால் பார்த்ததுதான்.. இருந்தாலும் பெருவளர்ச்சி பெற்ற மாபெரும் நிலப்பரப்பின் அழிந்த கூறுகளை நேரில் பார்க்கும் போது என்னையுமறியாமல் கண்கள் கலங்கிப் போயின. சமீபத்தில் ஏற்பட்ட சுனாமியின் பேரலைகள் தமிழ்நாட்டின் பெரும்பாலான நிலப்பரப்பை கீழிருந்து மேலாக கலைத்துப் போட்டிருந்தது. இதனை இயற்கையான சுத்திகரிப்பு என்று வர்ணித்தது உலகம்.

“இறங்கிக் கொண்டிருக்கிறோம்.. அசையாதே..“ என்றது வானுார்தி. நமது மௌனமான ஆமோதிப்பெல்லாம் இயந்திரத்துக்கு புரிய வாய்ப்பில்லை. உணர்வுகளை உணர முடிந்தால் எங்களின் ஆர்வத்தை புரிந்து எச்சரிக்கை கொடுக்காமல் இருந்திருக்கும். சரி என்ற பொத்தானை அழுத்தினேன்.
பெல்ட்டை இறுக்கிக் கொண்டேன். உடலை அசைக்காது கண்களை முடிந்தவரை தாழ்த்தினேன் கீழே நிலவும் சப்தங்களை வானுார்தி டிஜிட்டலில் மினுக்க, ஒலியை கூட்டினேன். காற்றின் ஓசை அது.. உயிராதார சத்தமேதும் அதிலில்லை. மனிதர்களற்ற வெற்று மா நிலத்தை புதையுண்ட கட்டடங்கள்.. சரிந்த கட்டுமானங்கள்.. பள்ளங்கள்.. மேடுகள்.. சரிவுகள்.. நெளிவுகள்.. பாதைகள்.. கதிரியக்கத்தை தாக்கு பிடித்த நோய் பீடித்த தாவரங்கள்.. சுனாமி அள்ளி வீசிய மண் குவியல்கள் என ஒலியில் கூட அமானுஷ்யம் படர்ந்திருப்பதாக தோன்றியது.
”மினுா.. பாக்கறதுக்கே ரொம்ப கொடுமையாயிருக்கில்ல..” என்றான் ஹெஃபிஸ்.
தமிழினம் மிக பழமையானது என்பதை அறிவேன்.. இவர்களின் நாகரீக காலத்தை புதைநிலத்திலிருந்து மீட்டெடுத்து காட்டிய போது உலகமே வியந்ததை படித்திருக்கிறேன்.
”நாமளும் ஒரு நாளு இப்படி பொதைஞ்சு.. சிதைஞ்சு போவோம்னு அவங்க கற்பனை கூட பண்ணியிருக்க மாட்டாங்க பாவம்..” என்றேன்.
”ம்ம்ம்..” அவனும் நெகிழ்ந்திருந்தான்.
தொட்டிலிலிருந்து குழந்தை இறக்கி விடப்படுவதைப் போல மெல்ல மெல்ல இறக்கப்பட்டோம். எங்களின் உருவ அளவிற்கேற்ப கதவு திறந்துக் கொண்டது. திசை வழிக்காட்டியோடு நீர்க்குப்பிகளை இணைத்துக் கொண்டோம். எங்களை இறக்கி விட்ட பிறகு வானுார்தி தன் உருவை மடித்து மடித்து சிறிதாக்கி முயல்குட்டியாய் பம்மிக் கொண்டது.
இயேசு பிறந்து இரண்டாயிரத்து எழுபது ஆண்டுகள் கடந்திருந்தன. ஐம்பத்துமூன்று ஆண்டுகளுக்கு முன் இங்கு நடந்த அணுஉலை விபத்துதான் உலகிலேயே இன்று வரை பெரிய விபத்தாக சொல்லப்படுகிறது. தமிழ்நாடு என்பது இதன் பெயர். இப்போதும் அதே பெயர்தான்.. ஆனால் நாடு இப்போது சுடுகாடாகி கிடந்தது. ஒரே இரவில் எல்லா அழிவுகளும் நிகழ்ந்து விடவில்லை. சுனாமி என்றுதான் முதலில் நினைத்திருந்தார்கள். சுனாமி அனுபவமும் அவர்களுக்கிருந்தது. ஆனால் சென்ற முறையை விட, மிக பலமாக மிக அதிகமான பரப்பை சுனாமி தாக்கியிருந்தது. அலையடித்து ஓய்ந்த பகுதிகளுக்கு உதவும் நோக்கில் முதலில் தனியாரும் பின்னர் அரசாங்கமும் குவியத் தொடங்கின. கணக்கிலடங்கா காவுகள். அதை பேசி மாய்வதற்குள் மக்கள் ஏதோ வித்யாசமாக உணரத் தொடங்கினர். மயங்கி சரிந்ததும் இறந்து விழுந்ததும் அதிர்ச்சியால் அல்ல.. அதை விட வேறு ஏதோ ஒன்று என்று புரிந்துக் கொண்ட தருணத்தில் ஏராளமான உயிர்கள் காவு வாங்கப்பட்டிருந்தன.
அதேநேரம் அணு மின் கழகத்திற்கும் அரசாங்கத்திற்கும் சுனாமி அலைகள் அணுஉலைகளை நாசப்படுத்தியது தெரிந்திருக்கிறது. நிர்வாகம் எத்தனைகெத்தனை மூடியதோ அத்தனைக்கத்தனை கோரங்கள் தொடர்ந்து நிகழ்ந்துக் கொண்டேயிருந்தன. மறைக்க வழியில்லாத நிலையில், பெரிய பாதிப்பில்லை.. ஆனாலும் பாதுகாப்பு கருதி அங்கிருந்து அகலுமாறு மக்களை கேட்டுக் கொள்வதாக அரசு கூறியது. செர்னோஃபில் விபத்தை விட பல மடங்கு அபாயகரமான விபத்து என்பது மக்களுக்கு அப்போதும் புரியவில்லை. பாதுகாப்பான இடங்களை நாடி ஓடிய அதிகார வர்க்கத்தினரின் மீது பொதுமக்களுக்கு எழுந்த சந்தேகம், அரசு கால்நடைகளை கொன்று விடுமாறு கோரிய போது நிவர்த்தியானது. அங்கிருந்த விவசாய நிலங்களில் விளைந்த பயிர்களில் கதிரியக்கம் பரவியதாக ஆய்வுகள் சொன்னது. புரளிகளும் யூகங்களும் நிரம்பி வழிந்தன. அரசு தரப்பிலோ எவ்வித வழிக்காட்டலும் இல்லாமல் போனது.
அணு உலைகளை நிறுவிய நாடு கதிரியக்க கசிவில் தன் பங்கு ஏதுமில்லை என்று நழுவ, அந்த நிலைப்பாட்டுக்கு மத்திய.. மாநில அரசுகள் முழு ஒத்துழைப்பு கொடுத்தபோதுதான் ஆவேசம் தொற்றியது மக்களிடம். ஆனால் அரசுகளோ, புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கதிரியக்கக் கசிவு குறித்தோ.. அணுஉலை விபத்து குறித்தோ.. அணுக்கழிவு அகற்றம் குறித்தோ அதிகாரபூர்வமாக அந்த நாட்டுக்கு எவ்வித தொடர்பும் இல்லை என சொந்த நாட்டு மக்களிடம் நியாயம் பேசியது. ஆவேசமானது ஜனக்கூட்டம்.. அடங்க மறுத்த ஆவேசம் சக மனிதர்களை தொலைத்த ஆவேசம். தங்களுக்கும் தொலைய நாள் குறித்துக் கொடுத்த அரசுகளின் மீது யுகபுரட்சியாக எழுந்தது.
புரட்சி ஒருபுறமிருக்க தற்கொலைகள் பெருகின. தாங்க முடியாத உடல் நோய்களை மக்கள் அனுபவித்தனர். வினோத உருக்களை கொண்ட குழந்தைகள் பிறந்தன.  டிஜிட்டல் இந்தியா என்ற வாக்கு பொறுக்கும் வாக்கியங்கள் பிசுபிசுக்க தொடங்க.. அது நாடெங்கும்.. பிறகு உலகெங்கும் பற்றிக் கொண்டது.  உலகப் போரை போன்று உலக புரட்சி உருவானது. அரசுகளுக்கு பணிவதை தவிர வேறு வழியில்லை. கடந்த அரை நுாற்றாண்டுக்கும் மேற்பட்ட காலத்தில் நவீனங்களில் விண்ணை தொட்டிருக்க வேண்டிய உலகம் வேறு வழியின்றி நிதானத்தை கடைப்பிடிக்க தொடங்கியது அப்போதிலிருந்துதான்.
வானுார்தியிலிருந்து இறங்கி பூமியில் கால் வைத்த போது ஏனோ உடல் நடுங்கியது. கதிரியக்கத்தின் வீரியத்துக்கு காற்றையும் மண்ணையும்.. பிறகு தன்னையும் விலைக்கொடுத்து வரலாறாகி போன மண். கைகளால் தொட்டு எடுத்து, பின் விரல்களுக்கிடையே நழுவ விட்டேன். எங்கும் நிலவிக் கிடக்கும் தனிமை திகிலுாட்டியது. தனிமையில் விரும்பி தொலைபவள்தான் நான். ஏகாந்த வெளிக்குள் அகம் உறையும்போது காற்றும் வெளியும் சுகங்களாக தோன்றும். வெளிகளின் வழியே, மனம் தொட்டு விடா தொலைவை எட்டிப் பிடிக்க விழையும். கண்காணாத இடைவெளி என்றாலும் எட்டி பிடித்து விடும் நம்பிக்கையின் அரும்புகள் மனமெங்கும் வாசமாய் நிரம்பி வழியும். அது இதுவன்று. இது அச்சமூட்டும் தனிமை. மனதை சூனியப்படுத்தும் தனிமை. யாதொன்றுமில்லா வெளியும் சூனியப்படும் மனமும் நேரெதிர் துருவங்கள்.
தாகமெடுத்தது. நீரை அருந்திப் பார்க்காத தலைமுறையை சேர்ந்தவர்கள் நாங்கள். அதற்கான மாற்று, நீர்த்தேவையை பூர்த்தி செய்திருந்தாலும் மாற்று நீரால் புதுவிதமான நோய்கள் ஏற்பட்டு கொண்டிருந்தன. இயற்கை நீரை ஓரளவுக்கு அனுபவித்திருந்த எங்களின் முந்தைய தலைமுறையினருக்கு இயற்கை நீர் மீதான ஏக்கம் குறையவில்லை. ஆனால் உலகின் மொத்த நன்னீர் இருப்பும் தீர்ந்து போன பிறகு வேறென்ன செய்வது..?
கட்டட சுடுகாடுகள்.. மணல் குன்றுகள்.. பொட்டல் வெளிகளென மாறி போன மண்ணில் நடந்து அலைந்தோம். சுனாமி அலைகள் கதிரியக்க மண்ணை முடிந்தவரை தனக்குள் இழுந்துக் கொண்டு, பெரு உயரத்திற்கு மணலை வீசி விட்டு சென்றிருந்தது.  வாழ தகுதியற்ற நிலம் என இப்பகுதியை அறிவித்திருந்த ஐநா இப்போது வாழும் தகுதி பெற்று விட்டதாக அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
”சுனாமி தன்னோட தவறுக்கு பிரயாசித்தம் செஞ்சுடுச்சு..”
”அப்டீன்னா இத்தனை அணுஉலைகளை கடலோரம் நிறுவி வச்சவங்க பிரயாசித்தம் செய்ய தேவயில்லையா..?”
”அவங்கள்ளாம் செத்து மண்ணாயிட்டாங்களே..”
”சாவறது ஒரு தீர்வா.. பிராயச்சித்தமா.. பொறந்தவங்க எல்லாருந்தான் சாவறோம்.. ஒட்டுமொத்த இன அழிப்புக்கு இயற்கையா வர்ற சாவு தான் தண்டனையா..?”
கோபம் வந்தது எனக்கு.
”சாவுங்கறது தண்டனையில்ல.. ஒரு வகையில விடுதலை..”
”எதிலேர்ந்து..?” எகிறினேன்.
”அவங்க தங்களோட தப்பை ஒரு நொடி கூடவா உணர்ந்திருக்க மாட்டாங்க.. அந்த நொடியிலேர்ந்து கௌம்பற குற்றவுணர்லேர்ந்து விடுதலை..”
”நீ பேசாதே ஹெஃபிஸ்.. கோவமா வருது.. ஒரு இனத்தையே அழிச்சு துாக்கி போட்டாச்சு.. குற்றவுணர்வாம்.. குற்றவுணர்வு..” .
”ஏன்.. தமிழர்கள்தான் உலகம் முழுசும் பரவியிருக்காங்களே.. அவங்கள்ளாம் தமிழினம் இல்லையா..?”
”இந்த அம்பத்துமூணு வருஷத்தில நாலு தலைமுறை கடந்து போயிடுச்சு.. அவங்கவங்க அந்தந்த நாட்டோட இணைஞ்சாச்சு.. தாய் நிலமில்லாத மக்களுக்கு வேற வழியுமில்ல.. நாதியுமில்ல.. தமிழ் வம்சாவளின்னு வேணும்னா சொல்லிக்கலாம்..”
“சரி.. சரி.. சரி.. அதுக்கு நீயேன் இவ்ளோ டென்ஷனாவுறே.. வா போலாம்..” அவனொரு சமாதான விரும்பி.
வானுார்தியின் சிக்னல்கள் வழிக்காட்ட நடந்தோம். இடையே குறுக்கிட்ட கட்டடம் ஒன்று அதிக சேதமின்றி வீடு போன்ற அமைப்பைக் காட்டியது. உள்ளே நுழைந்தோம். பெரிய வீடாக இருந்திருக்கலாம். சுவர்கள் விழுந்து கிடந்தன. காரைகள் பெயர்ந்து.. ஏதேதோ பொருள்கள் கூடுகளாகி.. உயிர்ப்பின்றி இருந்தது.
”நா கொஞ்ச நேரம் இங்க இருக்கேனே..” என்றேன்.
ஹெஃபி என்னை தொந்தரவுப்படுத்தவில்லை.
அப்படியே மடிந்து அமர்ந்தேன். வருடம் முழுவதுமான கடின உழைப்பிற்கான சக்தியை சுற்றுலா மூலமாகதான் பெற்றுக் கொள்ள முடியும் என்று நம்பிக்கை எங்களுக்குண்டு. ஆனால் இந்த முறை இருப்பதையும் தொலைத்து விடுவோமா என்ற பயம் ஏற்பட்டது. மிக மிக பலவீனமாக என்னை உணர்ந்தேன். வினோத வடிவங்களிலிருந்த தாவரங்களின் வழியே எழுந்த காற்று கூட அச்சமூட்டுவதாக இருந்தது. மனம் தமிழ் மக்களின் மீதே கவிழ்ந்திருந்தது. இவர்களின் மொழிக்கான இலக்கணம் கிமு நானுாறுக்கு முன்பே எழுதப்பட்டதை அறிவேன்.  அவ்வாறெனில், அதற்கு முந்தியே இந்த மொழி உருவாகி.. ஹா.. எத்தனை பழமையானதாக இருக்க வேண்டும்..? அதை பேசி வாழ்ந்தவர்களே உலகின் ஆதிக்குடிகளாக இருக்க வேண்டும். அத்தனை சிறப்பையும், அணுஉலையும் ஆபத்தான அரசியலும் வென்று விட்டிருந்தது.
காதில் சொருகியிருந்த ஒலிப்பானில் ஹெஃபிஸின் குரல் கேட்டது.
”எங்கருக்க மினுா..” திசைக்காட்டி என்னை காட்டியிருக்கும். ஆனால் உரையாடுவதுதான் அவனுக்கு பிடிக்கும்.
”தோ.. வந்துட்டேன்..” எழுந்து நடந்தேன். காத்திருந்தான் அவன்.
இறுகிய மண் மேட்டில் அமர்ந்து கொண்டோம்.
”எனக்கொரு துருக்கிய கவிதை ஞாபகத்துக்கு வருது.. சொல்லுட்டுமா..” என்றான் கிசுகிசுப்பாக. அந்த கிசுகிசுப்பும் கவிதை என்ற சொல்லாடலும் எனக்குள் கோபத்தை இறைத்தது. .இதுவா நேரம்.. முறைத்தேன் அவனை.
”ஏய்.. அதில்ல.. ஹிரோஷிமாவில நடந்த அணுகுண்டு வீச்சு பத்தி நஸீம்ஹிக்மத் எழுதின கவிதை..” அவனது பளீரிட்ட சிரிப்பு என்னை சற்று உற்சாகப்படுத்தியது.
”சொல்லு.. ஆனா நான் முன்னாடியே படிச்சிருந்தேன்னு வையி.. ஒன்ன கொல்லாம வுட மாட்டேன்..”
”அவ்ளோல்லாம் நீ வொர்த் இல்ல.. நிச்யமா படிச்சிருக்க மாட்டே..”
”செரி.. நீ பெர்ர்ரிய ஆளுதான்.. சொல்லு..”
உங்கள் கதவை தட்டுவது நான்தான்
பல கதவுகளை நான் தட்டியுள்ளது போல் தான் இதுவும்
ஆனால் யாரும் என்னை பார்க்க இயலாது
ஏனெனில் இறந்தவர்கள் யார் கண்ணுக்கும் பட மாட்டார்கள்
நான் ஹிரோஷிமாவில் இறந்தேன்
அது பத்தாண்டுகளுக்கு முன்
நான் அப்போது ஏழு வயது சிறுமி
இறந்துப் போன குழந்தைகள் வளர மாட்டார்கள்
முதலில் தீ என் தலைமுடியை கவ்வியது
பிறகு எனது கண்கள் எரிந்தொழிந்தன
நான் கைப்பிடியளவு சாம்பலாகி
காற்றில் அடித்துச் செல்லப்பட்டேன்
எனக்காக எதையும் நான் விரும்புவதில்லை
ஏனெனில் மரக்கட்டையாக எரிந்து போன
ஒரு குழந்தையால்
மிட்டாய்களை கூடச் சாப்பிட முடியாது
உங்கள் கதவுகளை நான் தட்டுகிறேன்
என் உற்றார் உறவினர்களே
உங்கள் கையொப்பங்களுக்காக
குழந்தைகள் மீண்டும் ஒருபோதும்
எரிந்து போகாமல் இருப்பதற்காக
மிட்டாய்களை அவர்கள் சாப்பிட வேண்டும் என்பதற்காக..’
பெருவனத்தை அசைக்கும் சிறு பூ .இந்த கவிதை. உண்மையில் படித்திருந்தேன்.. எஸ்.வி.இராஜதுரை இக்கவிதையை தமிழ் மொழிக்கு மாற்றியிருந்தார் என்றும் தெரியும்.
ஆனாலும் சொன்னேன்.. “படிக்கல ஹெஃபி..”
”அப்பாடா..” என்றான். 
திரும்பி நடந்தோம். சென்சார் எங்களின் வருகையை உணர்த்த வானுார்தி மளமளவென்று விரிந்தது. மேன்வல் மோடை அழுத்தி நானே கதவை திறந்துக் கொண்டேன். அனுபவங்கள் மனதின் சுமையை கூட்டியிருந்தன. தீவிரவாதத்திற்கு பலியான நாடுகள்.. கனிமவள சுரண்டலால் வறுமையில் ஒதுங்கிய நாடுகள்.. என நிறைய நாடுகளுக்கு சென்றிருக்கிறோம். அப்போது கூட மனம் இத்தனை சோர்வுக்குள்ளும்.. விரக்திக்குள்ளும் சென்றதில்லை.  உள்ளறையில் சோபாவை விரித்து அதில் மல்லாந்து படுத்தேன். தீவிரவாதம்.. மத அடிப்படைவாதம்.. வளர்ச்சி.. முன்னேற்றம்.. என்றெல்லாம் பெயரிட்டுக் கொண்டு கோடிக்கணக்கான குழந்தைகளின் மிட்டாய்களை உலகம் பலவந்தமாக பிடுங்கிக் கொண்டு அவர்களை அனாதைகளாக.. குழந்தைமை நீக்கப்பட்டவர்களாக.. நாடிழந்தவர்களாக.. அடுத்த வேளை உணவிற்கும் சம்பாதிப்பவர்களாக.. சமூக விரோதிகளின் உயிர் பொம்மைகளாக.. எப்படியெல்லாம் சிதைக்கிறது..? ச்சே.. மனிதர்கள் அதிகாரத்துக்காகவும் பணத்துக்காகவும் எதையும் பலிக் கொடுக்க தயாராக இருக்கிறார்கள்.
ஹெஃபிஸ் உள்ளே வந்தான். கண்ணிமைக்காது என்னை பார்த்தான். எனக்கு தனிமை தேவைப்பட்டது. அவனுக்கு அருகாமை தேவைப்படுகிறது. அதை கெடுக்க விரும்பவில்லை. அன்பு கொடுக்க கொடுக்க கூடி விடும். அவனை பார்த்து மென்மையாக சிரித்தேன். எழுந்துக் கொண்டு அவன் உட்கார இடமளித்தேன். ஆதரவாக என் கைகயை தன்னுடன் பிணைத்துக் கொண்டான். 
”எல்லாத்தையும் தன்னால தீர்மானிக்க முடியுங்கிற மனித வெறியோட உச்சக்கட்டந்தான் இந்த அழிவு.. செர்னோபில் விபத்துக்கு பிறகு நடந்த மிக பெரிய விபத்தில்லையா. இது..” என்றான். 
“அந்த விபத்தோட இதை ஒப்பிடவே முடியாது ஹெஃபி.. சுனாமி எட்டு உலைகளையும் விட்டு வைக்கல.. என்ன செய்யணும்னு தெரியாம மக்கள் தவிச்சு செத்தப்பிறகும் அரசாங்கம் எந்த நிலையான அறிவிப்பும் வெளியிடாம தங்களோட உயிரை.. உறவை.. உடமைய காப்பத்திக்கறதில ரொம்ப உன்னிப்பா இருந்துருக்கு.. எத்தனை பெரிய துரோகம் இது..” 
”இந்த அழிவு நடக்காம இருந்தா என்ன ஆகியிருக்கும்னு நீ நெனக்கிற..?”

”உலகம் படு வேகமா அழிவ நோக்கி போயிருக்கும்.. தமிழ்நாட்டோட அழிவு உலக அளவில விஞ்ஞான வளர்ச்சிக்கு ஒரு சடன் பிரேக்தான்..”

”உலகத்தை விடு.. தமிழ்நாடு என்ன ஆயிருக்கும்னு கேக்கறன்..”

”நிச்சயம் எத்தியோப்பியாவா மாறியிருக்கும்..”

கேள்வியோடு என்னை நிமிர்ந்து பார்த்தான் ஹெஃபிஸ்.


”தமிழ்நாடு அழிவோட நெருக்கத்தில இருந்த காலக்கட்டத்தில.. அரசியல் அந்த பூமிய கொஞ்சகொஞ்சமா திங்க தொடங்கியிருந்துச்சு.. முதலாளித்துவ சிந்தனை கொண்ட ஆட்சியாளர்கள் கையில இந்தியா மாட்டிக்கிச்சு.... முன்னேற்றங்கிற பேர்ல இயற்கை வளங்களை அழிக்கறது.. பெருநிறுவனங்கள் சார்ந்த அரசியலை முன்னெடுக்கறது.. அவங்களுக்கேத்தமாதிரி பொருளாதாரக் கொள்கைகள வடிவமைச்சுக்கிறது.. எல்லோருக்குமானதை ஒரு சிலருக்கானதாக்கறது இதுலதான் தீவிரமாயிருந்துருக்கு..” 
”தொழில் செய்ய நிலமும்.. உழைக்கறதுக்கு அடிமை மக்களையும் உருவாக்கி தர்ற ஏஜெண்டா அரசோட செயல்பாடு இருந்துருக்கு அப்டீங்கிற..” 
”ஆமா.. நிலத்தை கையகப்படுத்தறதுக்காக விவசாயத்தை எவ்வளவு சீரழிக்க முடியுமோ அவ்ளோ சீரழிச்சிட்டாங்க.. அணு உலை வேணாம்.. ஹைட்ரோகார்பன் திட்டம் வேணாம்.. மீத்தேன் திட்டம் வேணாம்.. நியூட்ரினோ திட்டம் வேணாம்னு மக்கள் இந்த பக்கம் கதறிக்கிட்டு இருக்க.. புதுசா நாலு அணு உலைகளை கொண்டுட்டு வர்ற புரிந்துணர்வு திட்டத்தில இந்தியா கையெழுத்து போட்டுட்டு வருதுன்னா இது என்னமாதிரியான மனநிலைன்னு பாரேன்.. போராட்டம்னு ஒக்காந்தாலே அடக்குமுறைதான்.. நிறைய போராடி பாத்துட்டாங்க.. கைது.. சாவுன்னு நெறைய மக்களை அரசாங்கம் காவு வாங்கீட்டு கடைசில, தான் நினைச்சத சாதிச்சிடுச்சு.. அத்தனை ஆபத்தையும் மக்களோட மக்களா கொண்டாந்து வச்சிட்டாங்க.. அதுக்கு தகுந்தமாதிரி அப்போ தமிழ்நாட்ல நிலைமை சரியில்ல.. தலைமை சரியில்ல… மடி நிறைய கனம்.. அதிகாரத்து மேல தீராத ஆசை.. அதுக்காக எந்த லெவலுக்கும் எறங்கலாம்.. ஏன்.. சொந்த மாநிலத்தையே அடகு வைக்கலாம்னு துணிஞ்ச நேரந்தான் அந்த நேரம்..” 
மக்களோட குமுறலெல்லாம் சேர்த்துதான் சுனாமி வந்துருக்குமோ.. அணு உலை வெடிச்சு செதறியிருக்குமோ..” 
மௌனமாக இருந்தேன். மனம் சொல்ல முடியாத சோர்வுக்குள் சென்று விட்டதை உணர்ந்தேன். அப்பாவை பொருட்படுத்தியிருக்கலாம். அவருடன் பேச வேண்டும் போல தோன்றியது. 
”ஏய்.. என்னாச்சு மினுா.. திடீர்ன்னு ஆஃப் ஆயிட்டே..”
“திரும்ப திரும்ப இதையே பேச வேணாம் ஹெஃபி.. கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்குவோமே..”
”சரி.. அப்டீன்னா சாப்டுலாமா..”
“ம்ம்ம்..”
'நீ இங்கயே இரு.. நா ரெடி பண்ணீட்டு கூப்டுறேன்..” என்றான். அதற்குள் குட்டித் துாக்கம் போட நினைத்தேன்.  அனால் அவனிடமிருந்து ஒரு நிமிடத்திற்குள் அழைப்பு வந்தது. உணவு மேசையில் உணவை சூடாக்கி பரப்பி வைத்திருந்தான்.
”ரொம்ப ஹெவியா இருக்கு ஹெஃபி.. சாப்டுற மூடில்ல.. லைட்டா எடுத்துக்கலாமா..” என்றேன். மறுபேச்சின்றி சோள உணவை தவிர்த்து மீத உணவுகளை உணவு அலமாரிக்குள் தள்ளினான். காகிதக்கூழ் தட்டுகளில் உணவை சரிபாதியாக பங்கிட்டு என்னிடம் ஒன்றை நீட்டினான். நான் சாப்பிடும் வரை காத்திருந்து விட்டு, என் கையிலிருந்த தட்டையும் வாங்கி தானியங்கி அழிப்பானில் போட்டான். தேவையான போது அதை புதிய கோப்பைகளாகவோ தட்டுகளாகவோ உருமாற்றிக் கொள்ளலாம்.
அந்தி கவிழ்ந்திருந்தது. பகல் நேரத்து அமானுஷ்யங்கள் இருட்டில் கலைந்து போனது போலிருந்தது. ஹெஃபிசும் இருட்டை விரும்பியவன் போல ஊர்தியின் பின்பகுதியிலிருக்கும் படுக்கையை தயார் செய்ய தொடங்கினான். ”துாக்கமா..?” என்றேன்.
”துக்கம்..” என்றான். அப்படி சொன்னபோது அவனை நிரம்ப பிடித்திருந்தது.
”நான் ஒரு கவிதை சொல்லுட்டுமா.. ஆனா இது என்னோடது..” என்றேன்.
”சொல்லு..” என்றான்.
சுற்றுச்சூழல் அனுமதி என்கிறீர்கள்
அணுசக்தி கழகம் ஒப்புதல் என்கிறீர்கள்
மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் என்கிறீர்கள்
மின்சாரம் கிடைக்கும் என்கிறீர்கள்
யாரோ குவித்துக் கொள்ளும்
பணத்துக்கு..
பதவிக்கு..
அதிகாரத்துக்கு..
நாங்கள் பிணங்களாய் குவிந்துப் போனோம்..
நிலநடுக்கம் வராது என்றீர்கள்..
உயரடுக்கு பாதுகாப்பு என்றீர்கள்
கழிவை கொட்டினீர்கள்
கடல்நீரை மாசாக்கி போனீர்கள்
மனித குழந்தைகள் வினோத உருவங்களாயின
வியாதி பேரும் தெரியவில்லை
மருந்தும் எங்குமில்லை
மருத்துவம் பார்க்க ஆளில்லை..
வயிறு வளர்க்க தொழிலில்லை..
கைக்குழந்தைகளும் இல்லை..
மீன்களும் இல்லை.. மான்களும் இல்லை..
மாடுகளும் இல்லை.. ஆடுகளும் இல்லை..
சட்டம் போட்டவர்களும் இல்லை..
திட்டம் போட்டவர்களும் இங்கில்லை
எங்கோ வசதியாக..
உயர்ரக மது மயக்கத்தில்..
காட்டழிப்புக்கும் நாட்டழிப்புக்கும்
மதிமயக்கும் திட்டங்களையும்
அதை செயல்படுத்தும் பணந்தின்னி நாய்களையும்
உருவாக்கிக் கொண்டே.. உருவாக்கிக் கொண்டே..
எங்கோ.. எங்கெங்கோ உயர் சுகங்களில் நீங்கள்..
உயிர் பிணங்களாய்
நாங்களும்..
ஓயாத இயக்கத்தில் ஆறேழு அணு உலைகளும்..
தனித்து..
எழுந்து நின்று என் கைகளை பிடித்துக் கொண்டான்.
”இது உன்னோட கவிதையா மினுா..”
"என்னோட கவிதைதான்.. ஆனா இதுல நா பேசல.. தமிழ் மக்களோட உணர்வா.. அவங்க சொல்ற மாதிரி.. அவங்க. உணர்வில..” பேச்சை தொடர முடியாமல் என் கைகளை விடுவித்துக் கொண்டு அவன் பின்னந்தோளில் என் முகத்தை சாய்த்துக் கொண்டேன். கண்களிலிருந்து வழிந்த நீரை அவன் உணர்ந்திருக்க கூடும். திரும்பி நின்று என்னை அணைத்துக் கொண்டான்.
”இந்த டூர்ல நீ ரொம்பவே உணர்ச்சிவசப்படுறே..”
”ஆமா.. ஏன்னு தெரில..” என்றேன். ஆனால் அப்பா கூறியது போல எனக்கு இந்த பகுதியோடு தொடர்பு இருக்கிறது என்பதை உணரத் தொடங்கியிருந்தேன்.
என்னிடமிருந்து நகர்ந்து காகிதக்கூழ் தொட்டியிலிருந்த கூழில் இரண்டு கோப்பைகள் செய்து அதில் உடனடி பானத்தை நிறைத்து என்னிடம் நீட்டினான். பிறகு படுக்கையறையின் சில்லிப்பை கூட்டி, துாங்குவதற்கு தோதாக புற ஒலிகளை அமைதிப்படுத்தினான்.
நான் திரும்பி பார்த்த போது ”அன்மியூட் பண்ணுட்டுமா..” என்றான்.
”இல்ல.. வேணாம்..” என்றேன்.

உயிரின் ஓசைகள் எதுவும் எழ போவதில்லை. அமைதியை தேடி வனங்களுக்கு ஓடும் மனிதர்கள் இம்மாதிரியான இடத்தை நிச்சயம் தேர்வு செய்ய மாட்டார்கள். வனங்கள் ஜீவனை சுமந்திருப்பவை. ஜீவ ஒளிக்குள்ளும் ஒலிக்குள்ளும் ஆற்றலை பொதித்து வைத்திருப்பவை. அது மூச்சு போல சுற்றிலும் இயங்கிக் கொண்டிருக்கும்போதுதான் சிந்தையை அமைதிப்படுத்த இயலும். இது உண்டாக்கப்பட்ட செயற்கையான அமைதி. உயிரின் ஒலிகள் எழும்பாத இவ்விடத்தில் ஞானிகளுக்கு கூட இடமில்லை. எத்தனை சீக்கிரம் இங்கிருந்து கிளம்ப முடியுமோ அத்தனை விரைவாக கிளம்பி விட வேண்டும். ஞானியை போல..ஒலிகளுக்குள் அமைதியை தேட வேண்டும். அது ஞானமாகவும் இருக்கலாம்.

திட்டத்தில் அடுத்திருந்த வனப்பயணம் குறித்த எண்ணம் சற்று ஆசுவாசம் அளித்தது. ஹெஃபியை நெருங்கி ஆதரவாக அணைத்துக் கொண்டேன்.. அவனும். அசந்திருந்த உடல் மனச்சோர்வை வென்று துாக்கத்தில் ஆழ்த்தியது.
மலைப்பயணத்துக்கான எனது ஆவலை, நான் வானுர்தியை கிளப்பும் உற்சாகத்திலேயே கண்டுக் கொண்டு வலது கையை சிறியதாக அழுத்தம் கொடுத்து தன் மகிழ்ச்சியை பகிர்ந்துக் கொண்டான் ஹெஃபி. திசை இன்டிகேட்டரில் இலக்கை பதிந்தேன். உயரம்..? என்று கேட்டது.. சாம்பல் பூத்த மலைத்தொடர்களை பார்வையால் அனுமானிக்க முடியாது. மலைத்தொடரின் உச்சி வெண்மேகத்துக்குள்  மறைந்திருக்கலாம். நெருங்கி வர வர சிறு குன்றுகள் வளர்ந்து விட்டது போல தோன்றலாம். ஆட்டோமேடிக் என்ற பட்டனை அமுத்தினேன். காலம் என்ற பொத்தானில் “நிதானம்“ என நிறுவினேன். ஊர்தி மேலெழும்பத் தொடங்கியது.
வழுக்கை விழுந்த தலையில் முளைத்த மயிர்கள் போல அடம்பலற்றிருந்திருந்தது காடு. ஒருகாலத்தில் உயிர்க்கோள காப்பகமாக யூனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்ட வனம் இது.. இன்று அணு உலை விபத்தின் வீச்சை தாள முடியாமல் படிபடியாக வீழ்ந்து போயிருந்தது. விலங்குகள் அற்ற.. பூச்சிகள் அற்ற.. நுண்ணுயிர்கள் அற்ற வனம்.. அரை நுாற்றாண்டுக்கு முன் இங்கு 127 வகையான பாலுாட்டிகள்.. 176 வகை ஊர்வன.. 210 வகை இருவாழ் உயிரிகள்.. 218 வகை மீன்கள்.. 336 வகை வண்ணாத்திப்பூச்சிகள்.. 200 வகை சிலந்திகள்.. 840000 வகையான தாவரங்கள்.. என உயிர்ச்சூழல் நிறைந்திருந்ததாம்.

குன்றுகளை கடந்து மலைத்தொடரின் சமவெளியை மோப்பம் பிடித்து “இறங்கவா..“ என்றது ஊர்தி. “சரி..“ என்றான் ஹெஃபிஸ். அதை நான் பொத்தானில் சொன்னேன். ஊர்தி தனது நான்கு கால்களையும் நிலத்தில் நிறுத்திக் கொண்டு கதவை திறந்து இறங்குவதற்கு வழி ஏற்படுத்திக் கொடுத்தது. 
வெளிக்காற்று சில்லென்று ஊடுருவியது. ஹெஃபிஸ் என் கையை பற்றிக் கொண்டான். அவனுக்கு காட்டின் கதை நிறையவே தெரிந்திருந்தது. எனக்கோ எங்கோ எப்போதோ பார்த்த ஞாபகம் போல வெகு இயல்பாக.. பிடிப்பாக.. தெரிந்தது. அதை மானசீகமாக உணரவும் தொடங்கினேன். 
”மினுா.. காடு இலைகளால் ஆனதா.. மரங்களால் ஆனதா.. மிருகங்களால் ஆனதா.. பறவைகளால் ஆனதா.. வேர்களால் ஆனதா.. இல்லேன்னா அங்க இருக்கற மனிதர்களால் ஆனதா.. நீ என்ன நெனக்கிறே..” என்றான் வினாடிவினா நிகழ்ச்சியை போல. 
”எல்லாமே ஒண்ணோட ஒண்ணு இன்டர்லிங்க் ஆயிருக்கு.. எதுலேர்ந்து எதை பிரிச்சாலும் தொடர்ச்சியா ஒவ்வொண்ணா அழிஞ்சுடும் ஹெஃபி.. பழங்குடி மக்களையும் சேர்த்துதான் சொல்றேன்.. ஆனா இங்க வாழணும்னு ஆதிமனுசனுக்கு எப்படி தோணுச்சோ தெரியில..”


”தண்ணியும் இயற்கையும் சேர்ந்தமாதிரி இருக்கற அடர்வனம்.. ஆற்றுப்படுகை.. வண்டல் பூமி.. கடலோரம்.. மலை முகடு இதெல்லாம் வாழறதுக்கு தோதான இடமா இயல்பாவே தோணியிருக்கலாம்.. அங்கங்க தனித்தனி இனக்குழுவா வாழ ஆரம்பிச்சிருக்காங்க.. வனத்தை பொறுத்தவரைக்கும் நாடுங்கிறது அரசனற்ற ஆதி நிலம்.. அதிகாரமில்லாத அன்பு..  இயற்கையான குணங்களை அவங்க மீறவேயில்ல.. உழைப்பும்.. விளைச்சலும் இனம் மொத்தத்துக்கும் பொது.. எல்லாமே சமந்தான்.. கொண்டாட்டமும் குதுாகலமும்தான் அவங்களோட இயல்பா இருந்திருக்கலாம்.. மழையில தழைச்சு.. வெயில்ல வதங்கி.. மலரும் போது நறுமணம் உணர்ந்து.. கனியும் போது பகிர்ந்துக்கிட்டு.. உதிரும் போது பூமிக்கு உரமா மாறி போற வாழ்க்கைய வாழ்ந்திருக்காங்க..” 
ஆதிநிலம் என்ற ஹெஃபிஸின் வார்த்தையை என்னோடு பொருத்தி பார்த்துக் கொண்டேன். இனந்தெரியாத ஏக்கம் தோன்றியது. அதை அவனிடம் வெளிப்படுத்தி கொள்ளவில்லை. அவனும் பேசும் மும்மரிப்பிலிருந்தான்.
”ஒவ்வோரு குலத்துக்கும் ஒவ்வொரு. கடவுள்.. இசைக்கருவி.. பாட்டு.. வழிபாடு.. பாரம்பரியம்னு இருந்துருக்கு.. ஒரு இனக்குழுவ சேர்ந்த பறவை ஒண்ணு யாழிழைக்கு மயங்கிப் போயிடுமாம்.. இசைக்கறவங்கள சுத்திக்குமாம்.. இசை போதையில தள்ளாடி அந்த யாழ் மேலேயே மயங்கி விழுமாம்.. ஒருநாளு அந்த இனக்குழு மொத்தமும் அழிஞ்சு போயிருக்கு.. அப்போ அந்த பறவையினமும் யாழோட நரம்பில மோதி தன்னோட கழுத்தை அறுத்துக்கிட்டு செத்து போயிடுச்சாம்..”
அவன் சொல்ல சொல்ல மனதை என்னவோ செய்தது.
“ஹெஃபி.. இது வாழ தகுதியான பூமின்னு சர்ட்டிஃபை பண்ணிட்டாங்கள்ள.. இங்க வந்து குடியேற போறது யாரு..”
திடீரென்று பேச்சை விட்டு விலகவும் என்னை திரும்பி பார்த்தான் ஹெஃப்ஸி.
”சொல்லு.. ஹெஃபி.. இங்க யாரு வந்து குடியேறப் போறா..?”
”ஏய்.. இதெல்லாம் நிர்ணயம் பண்ண நாம யாரு.. அது இந்தியாவோட பாடு..” அங்கிருந்த பாறையில் வலது காலை துாக்கி வைத்துக்கொண்டு சமமற்ற பகுதியில் உடலை அனுசரித்துக் கொண்டு நின்றான்.
பருந்து பார்வைக்கு, வனமெங்கும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் காயங்கள் வடுக்களாக தெரிந்தன.
ஊர்தியின் இன்டிகேட்டர் ஒளி எங்களை நோக்கி வீசியது. எதற்கோ அழைக்கிறது.. திசை தப்பியிருப்பதை அறிவுறுத்துவதற்காக இருக்கலாம். அலட்சியப்படுத்திவிட்டு தொடர்ந்தோம்.
”இனிமே இங்க மனுசனையோ.. விலங்குகளையோ அனுமதிப்பாங்கன்னு எனக்கு தோணல..”
”இவங்க யாரு அனுமதிக்க.. அவங்கவங்க பூர்வீக நெலத்தில வாழ்ற உரிமை அவங்கவங்களுக்கு இருக்கில்ல..” எனக்கு கோபம் வந்தது.
”இருக்குதான்.. ஆனா உரிமை கொண்டாட இந்த மக்கள் இருக்காங்களா என்ன..?”
”ஒவ்வொரு இனமா அழிஞ்சு போச்சுன்னு சொன்னீல்ல.. அவங்கள்ளாம் திரும்ப மீளவேயில்லையா..?”
”இனத்தில யாராவது ஒருத்தர் எங்கேயாவது உயிர்பிழைச்சிருக்கலாம்.. அந்த நம்பிக்கையிலதான் கதையிலயும் பாட்டுலயும் அதை மீட்டெடுத்துக்கிட்டே இருந்திருக்காங்க..”
”அப்டீன்னா திரும்பவும் மீள வாய்ப்பிருக்குதானே..?”
”இருக்கலாம்..” என்றான்.
”ரெண்டாயிரத்து எழுவதுல ஒரு சுனாமி வரும்.. அப்போ இந்த கடல் மேல எழுந்திரிச்சு கதிரியக்க கழிவுகளை உள்வாங்கி வாழக் கூடிய நிலப்பரப்பை கொண்டாந்து தரும்னு யாராவது நெனச்சு பாத்துருப்பாங்களா..?”

“நிச்சயமா இல்ல..”

”அப்டீன்னா இயற்கை மீண்டு வந்து அவங்கவங்க நெலத்தை திருப்பி அவங்கள்ட்டயே ஒப்படைச்சுடுச்சுன்னு சொல்லலாம்தானே..”

”ஒப்படைச்சதெல்லாம் ஒகேதான்.. அதை வாங்கிக்க இந்த மக்கள் யாருமில்லயே..”

”ஆளில்லேன்னா உருவாக்குவோம்..”

”உருவாக்குவோம்னா.?. புரியில.. வெளிநாட்டுல வாழ்ற தமிழர்களை இங்க அழைச்சிட்டு வர போறியா..?”

”இல்ல.. நான் அதை சொல்லல.. இங்க இருந்தவங்கள மீட்டுக் கொண்டாருவோம்..”

”அதுக்கு தண்ணீ வேணும்.. ஆறு வேணும்.. மலை வேணும்.. காடு வேணும்.. அதை பாதுகாக்கற மனிதன் வேணும்.. மனிதம் வேணும்..”

”மொத்தத்துக்கு ஒரு மலை அரசன் வேணுங்கிறே..”

”ஏன் அரசன்னு சொல்றே.. ஒரு மனிதன்.. ஒரு இனம்.. இனக்குழு.. குழுவுக்கான நடத்துனன்.. இதை உருவாக்கீட்டா மீதிய அவன் பாத்துக்குவான்..”

மீண்டும் ஊர்தியிடமிருந்து அழைப்பு. இம்முறை ஒலியால். இதற்கு மேலும் தாமதப்படுத்தினால் சென்சாரை இயக்கி எங்களை அழைத்துக் கொள்ளும். சென்ற பின்புதான் தெரிந்தது. நீரும் உணவும் இருப்பில் இல்லாதது. ஊர்தியின் அறிவுறுத்தல்களை அலட்சியப்படுத்தியதன் விளைவு. உணவு நிரப்பும் நிலையத்தை அடையாளம் காட்டி கிளம்பச் சொன்னது ஊர்தி. “சரி“ என்ற பொத்தானை அமுக்கி ஊர்தியை உசுப்பினேன். நெடுநேர பயணம் அலுப்பூட்டியது. உணவு நிரப்பும் இயந்திரத்தில் எங்களுக்கு வழங்கப்பட்ட உலகளாவிய உணவு எண்ணை குறிப்பிட்டோம். மளமளவென உணவு அலமாரிகளில் உணவை நிரப்பி விட்டு பீப் என்ற ஓசையோடு அடங்கிப் போனது அந்த இயந்திரம். எங்களின் பண இருப்பு குறைந்ததை இன்டிகேட்டர் அடையாளங்காட்டியது. பழுப்பு நிற மாற்று நீர் குப்பிகளை பெற்றுக் கொண்டு திரும்பினோம்.

காடுகளில் அலைய பிடித்திருந்தது. மலைச்சரிவில் நடக்க பிடித்திருந்தது. ஓட பிடித்திருந்தது. ஆட பிடித்திருந்தது. சருகுகளில் சத்தம் மனதை கிளர்ந்தெழுப்புவதாக இருந்தது. அது செங்குத்தான சரிவு என்று தெரிந்திருந்தும் கால்களை துள்ளலாக வைத்து நகர்ந்தேன். புடைத்து நின்ற வேர்களில் காலை அங்கொன்றும் இங்கொன்றுமாக வைத்தேன். ஆதியினம் இங்கு விளையாடி களித்திருக்கலாம்.

அழுத்தமாக தெரிந்த வேரொன்று என் கால்களின் பலம் தாங்காமல் பொலபொலத்து சரிய.. என்ன ஏதென்று நிதானிக்கும்முன் நானும் அதனோடு சரிய தொடங்கினேன். சரிவிலிருக்கும் வேர்களில் எதாவதொன்று பிடித்துக் கொள்ளும் உத்வேகத்துடன் எதையெதையோ பற்றிக் கொண்டேன். பலனில்லை. சரிந்து சரிந்து விழுந்துக் கொண்டேயிருந்தேன்.  என் கைகளும் கால்களும் அனிச்சையாக எதையாவது பற்றுவதும்.. அது நழுவதுமாக ஜீவமரண போராட்டம்.  சரிவு.. சரிவு.. ஆபத்தான பாதையை நோக்கி சரித்துக் கொண்டிருந்த சரிவு.. திடீரென சரிந்துக் கொண்டே வந்த உடலை எதோ ஒன்று ஏந்திக் கொண்டது போல தோன்ற.. உயிர் பிழைத்தலின் ஆவல் என்னை முழுவதுமாக ஆக்கிரமிக்க, அதை இறுக்கமாக பற்றிக் கொண்டேன்.

வேர் முடிச்சின் பிடிமானத்தில் பலமனைத்தையும் கொண்டு உசும்பி எழுந்தேன். பதற்றமாகவே என்னை ஆசுவாசித்துக் கொண்டேன். மனம் சிறிதுசிறிதாக மரண பீதியிலிருந்து விடுவித்துக் கொள்வதை உணர்ந்தேன். வாழ்வு நிச்சயப்பட்ட இந்த தருணத்தில், மரணத்தின் முன் மற்றெல்லாமே கைக்கட்டி நிற்பதை ஆழ்ந்து அனுபவிக்க தோன்றியது.

”மினுா.. மினுா..” ஹெஃபிஸின் அலறல் மலை முகடுகளில் பட்டு எதிரொலித்தது. உட்கார்ந்தவாறே உடலை சரிவுகளில் சரித்துக் கொண்டு இறங்கினான். உடல் கவசம் அணிந்திருந்தான். எப்படியும் சொற்ப நிமிடங்களில் என்னை சமீபித்து விடுவான். அந்த தைரியத்தில் கீழிருக்கும் பள்ளத்தை பார்த்தேன்.. மீண்டும் பயநாளங்கள் சுரந்தன.. இந்த வேர் மட்டும் பிடித்துக் கொள்ளவில்லை எனில் இந்த பள்ளத்துக்குள் எங்கோ சரிந்து.. சரிந்து..

”ஹெஃபி.. ஹெஃபி…” பயத்தில் அலறலாக ஒலித்தது என் குரல்.

”மினுா.. கண்ணா.. தோ வந்துட்டேன்.. அசையாம ஒக்காந்துரு.. கண்ணம்மா.. மினுா.. அசையாதே..”

அன்பை வார்த்தைகளாக்கிக் கொண்டே என்னை சமீபித்தான்.


“ஹெஃபி.. ஹெஃபி..” உட்கார்ந்தவாறே அவனை கட்டிக் கொண்டேன். வேரில் அவனுக்கும் இடமிருந்தது. பைத்தியம் பிடித்தவனாய் என்னை இடைவெளியின்றி கட்டிக் கொண்டான். அவனது இதய படபடப்பை என்னால் உணர முடிந்தது. வாய் விட்டு அழுதேன். என்னை அழுத்தமாக முத்தமிட்டான். முத்தமிட்டுக் கொண்டே இருந்தான். இனி என்னை விழ அனுமதிக்க மாட்டேன் என்பது போல கைகளை அழுத்தமாக கோர்த்துக் கொண்டான். அன்பின் மிகுதியில் அவனுடல் நடுங்கியது.

எங்களை சுற்றி அடம்பியிருந்த வேர்க் கூட்டத்தைப் பார்த்தோம். அடம்பலான வேர்.. வேர்கள் முக்கியம்.. எல்லாவற்றிலும் வேர்கள் முக்கியம்.. கிளைகள் எங்கோ பரவியிருப்பினும் வேர்கள் முக்கியம்.. கண்ணீரோடு பார்த்தோம்.. அப்போதுதான் அதில் இலைகள் இருந்ததை கவனித்தோம்.. காய்களிருந்தன.. வடிவமற்ற காய்கள்..

“ஹெஃபி.. என்னதிது..?”

“ஹா.. இது வேரில்ல மினுா.. வேர்களோட முடிச்சில்ல.. இது மரத்தோட கிளை..”

“அப்டீன்னா வேர்..?” கீழே பார்வையை ஓட்டினோம். மரம் அங்கிருந்துதான் முளைத்திருந்தது.

எங்களுக்கு புரிந்தது. எங்களை தாங்கி நிற்பது மரத்தின் கிளைகள்.. இது ஊனமுற்ற மரம்.. எழுந்து நடக்கவியலாத மனிதனை போல ஓங்கி வளரவியலாத மரம்.. கதிரியத்தின் வீரியத்தில் தன்மையிழந்து போய் ஊனமுற்றிருக்கலாம்.. . நாங்கள் அமர்ந்திருப்பது.. என்னை தாங்கி பிடித்தது மரத்தின் உச்சி என புரிந்தது.
வானுார்தி சென்சார் வழியே எங்களை இனங்கண்டு சிறு சமவெளியை உண்டாக்கி எங்களை பத்திரப்படுத்தியது. வசதியாக அமர்ந்துக் கொண்டோம்.
உயிர் வாழ்தலின் நிச்சயத்தன்மை தேடலைக் கூட்டியது.

மண்ணிலேயே தொடங்கி அங்கேயே முடிந்திருந்த மரத்தை கட்டித் தழுவிக் கொண்டேன். விரல்களை இடைவெளிக்குள்ளிருந்த மண்பரப்பில் அளாவினேன். வேர் மண்.. வேர்கள் என்றாவது தனக்கான மரங்களை.. மனிதர்களை அடையாளம் கண்டு மீட்டுக் கொண்டு விடும். பொதுபொதுப்பான மண்.. கிளற கிளற உள்வாங்கிக் கொண்டேயிருந்தது.. விடாமல்  கிளறிறேன். நீளமாக ஏதோ ஒன்று தட்டுப்பட.. தொட்டு தடவினேன். நரம்பு போன்றிருந்தது. நீண்டிருந்தது. அறுபடாமல் சிரத்தையாக உருவி வெளியே இழுத்தேன். நீளமான நரம்பு. மண் படிந்திருந்தது. நுாற்றாண்டு மண்ணாக இருக்கலாம். வளைந்தது.. ஆனால் உடையவில்லை.. பருமனில்லை.. ஆனால் உறுதியாக இருந்தது.
”யாழோட நரம்பா இருக்குமோ..?” என்றேன்.
”யாழ்.. யாழ்ன்னா.. ஆதித்தமிழனோட இசைக்கருவிய சொல்றியா..?”
”ஆமா..”
”எம்மாடீ.. நீ ரொம்ப யோசிக்கிறே.. அதெல்லாம் சாத்தியமேயில்ல..”
”சுனாமி வந்து நிலத்தை மாத்தி போடுறதை ஒத்துக்குறீல்ல..”.
”மலைல சுனாமி வர்லையே..”
”சுனாமின்னு பேர்ல வந்தாதானா.? புலி பாதுகாப்பு.. கார்பன் காடுகள்.. வன விலங்கு சரணாலயம்.. வனக்கொள்கை.. இப்படி எத்தனையோ.. எல்லாமே இங்க இருக்கற மனுசனையும் விலங்குகளையும் அடிச்சு விரட்டுறதுக்கு.. வளங்களை அபகரிக்கதானே.. அவங்க திட்டமெல்லாம் நிறைவேறியாச்சு.. கனிமத்துக்காக காடு முழுக்க கொத்தி போட்டாச்சு... சூழலியல் மண்டலத்தை அழிச்சாச்சு.. ஆனா எல்லாமே இன்னும் முடியிலன்னு நம்பறேன்.. நீயும் நம்பு ஹெஃபி.. அத்தனை லட்சம் உயிருக்கும் இந்த நரம்பு மூலமா ஒரு அதிசயம் நடக்காலமில்ல..”
”உணர்ச்சி வசப்படாதே மினுா.. நீ சொல்றதுல எனக்கு நம்பிக்க வர்ல.. சாத்தியப்படாத எதையும் பைத்தியக்காரத்தனமா நம்பாத மினுா.. நீ ஏன் இப்டி ஆயிட்டே..”
”நீ என் வேணும்னாலும் சொல்லிக்கோ ஹெஃபி.. நா நம்பறேன்.. இதை உறுதியா நம்பறேன்.. நீ யாழ் பத்தின சொன்னதெல்லாம் கூட தற்செயல் இல்ல ஹெஃபி.. எல்லாத்துக்கும் பின்னால ஒரு அர்த்தமிருக்கு.. யாழ் எப்படியிருக்கும் நீ படிச்சதை சொல்லு..”
”சரி.. ஒகே.. உன்னோட நம்பிக்கைய கெடுக்கல.. யாழை பத்தி பெரும்பாணாற்றுப்படை சொன்னதை சொல்லுட்டுமா..”
”சொல்லு ஹெஃபி..”
அதற்குள் அவன் சொல்ல தொடங்கியிருந்தான்.
”பாதிரி பூவை இரண்டாக பிளந்தது போன்ற செந்நிறம் கொண்ட தோலால் ஆன யாழ்.. பாக்கு மரப்பாளையிலுள்ள கண்களை போன்ற துளை.. இணைத்த வேறுபாடு தெரியாதபடி உருக்கி ஒன்றாய் சேர்த்தது போன்ற போர்வை.. நீர் வற்றிய சுனையின் உள் இருண்டிருப்பது போன்ற உட்பாகம்.. நாவில்லாத வாய்பகுதி.. பிறை நிலவு போல பிளவுப்பட்ட பகுதி.. வளைசோர்ந்த பெண்களின் முன்கையை போன்ற வார்க்கட்டு.. நீலமணி போல நீண்ட தண்டு.. பொன்னுருக்கி செய்தது போன்ற நரம்புகள் கொண்ட யாழ்.. ஒகேவா.. அய்யாவோட இன்ஃபர்மேஷன் எப்பூடீ..?”
அவனை வெறித்தனமாக அணைத்து முத்தமிட்டேன். எத்தனை ஈடுபாட்டோடு படித்திருக்கிறான்.. ஹெஃபி.. ஹெஃபி.. ஹெஃபி..
“இப்பூடீ..” அழுகையோடு கைகளை கோர்த்துக் கொண்டேன்.
”சரி.. சரி.. ரொம்ப டெம்ட் ஆவுற நீ..” என்றான்.
அதற்காகவே பேச்சை மாற்றுவது போல நடப்புக்கு தாவினான்.
”மினுா.. யாழை தயார் செய்வோம்னே வச்சுக்குவோம்.. செத்துப் போனவங்கள்ளாம் வந்துருவாங்களா.?”
”ஏன் வராம..? வருவாங்க.. அழிஞ்சு போன குலங்களை கலைகள் வழியா மீட்டெடுக்க முடியும்னு நீ கூட சொன்னேல்ல..”.
“ம்ம்ம்.. அது வேற.. இது வேற மினுா..”
”கதையும் பாட்டும் எதை நம்புதோ அதையேதான் நானும் நம்பறேன் ஹெஃபி..” ஆவேசமிருந்தது என் குரலில்.
”ஆனா எப்டீ.. எப்டீ.. இது சாத்தியம்..?”
”தியரிபடி ஒரு குலம் அழிஞ்ச பிறகு அந்த பறவையும் அழிஞ்சு போவுது.. அதே மாதிரி யாழை மீட்டும்போது அந்த பறவையும் எழுந்திரிச்சு வந்துடாதா.. பூமியில ஒரு காலத்தில வாழ்ந்த இனம்தானே.. அதோட ஜீன்கள் இந்த காட்டுல.. மலை முகட்டுல.. சரிவில.. எங்கேயாவது இருக்கும்.. அழிஞ்சு போன அதோட ஆன்மா இந்த காத்திலதான் உலவிக்கிட்டு இருக்கும்..”
”நான் சொன்னது வேற.. இது வேற மினுா.. எனக்கு இது புரியில.. நா நம்பல..”
“இந்த பூமி உருவானப்போ இருந்தமாதிரியேவா இப்பவும் இருக்கு..? அப்போ இருந்த யாராவது உலகம் இப்டியெல்லாம் மாறும் கற்பனையாவது செஞ்சு பாத்திருப்பாங்களா..? அது மாதிரி இதுவும் கற்பனைக்கெட்டாததா இருக்கலாம்..”
”இருக்கலாம்..”

”இருக்கலாம் இல்ல.. இருக்கு..” என்றேன் அழுத்தமாக.

அவனும் ஆமோதிக்கலாம்.. ஆமோதிப்பான்.

***



No comments:

Post a Comment