சொல்வனம் பிப்ரவரி 2018ல் வெளியானது
அவன் கழுத்து வெட்டப்படுவதற்கு
முன் கழுத்தோடு கையை வளைத்து அவனை அணைத்துக் கொண்டிருக்கிறேன். தலையை சாய்த்து சிரிக்கும் அவனின் பற்கள் அத்தனையும்
முத்துகள். வரிசையான முத்துகள். இரத்தம் கசிந்த முத்துகள். அவை விகாரமாகி இளித்து அலைபேசியின்
திரையிலிருந்து முன்னெழும்பி முகத்தருகே.. முகத்தருகே.. படர்ந்து.. பின் மெல்ல அடங்கி.
அடங்கிய நேரத்தில் திரை இருளாகி இரத்த வண்ணமாக நிறைந்தது. மரணத்தின் நிறம் சிவப்பு..
பூமியெங்கும்.. மரணத்தின் காலடியோசைகள்.. ஆனால் இது இயற்கையானதல்ல.. வரவழைக்கப்பட்டது..
கொடூர மரணம். கொலை.. டயரில் நிரம்பிய காற்றை வெளியேற்றுவது போல கழுத்தை அறுத்து உயிரை
வெளியேற்றிய மரணம்.. எதையும் மாற்ற முடியாது. சாதியை.. அது கிளர்ந்தெழுப்பும் ஆணவத்தை..
எதையுமே மாற்ற முடியாது..எல்லாமே நிபந்தனைக்குட்பட்டவை. நிர்பந்தங்களாலும் நிபந்தனைகள்
உருவாகலாம். ஆனால் எதையும் மறு ஆக்கம் செய்ய முடியாது. மாற்ற முடியாது. மாற்றினால்
மாற்றி விடுவார்கள். எல்லாவற்றையும்.. எல்லாவற்றையும்.
“சனியன் புடிச்ச செல்போன் எழவு..
அந்த எழவயே கைல புடிச்சுக்கிட்டு என்ன எழவுடீ பண்றே..” புடவை சரசரத்து கத்தியது. தேவகி
என்று அதற்கு பெயர். ஒரு இழவே தாங்க முடியாதபோது எத்தனை இழவுகள். எத்தனை இரவுகள் கழிந்தாலும்
அவனது இழவு களையை இழக்காமல் இன்னும் புதிது போல.. சொல்லப் போனால் இன்னும்.. இன்னும்
முளைத்துக் கொண்டே.. கழிக்க கழிக்க கிளைத்து.. கிளைத்து.. கொடியைப் போல படர்ந்து படர்ந்து
உடலை இறுக்கி.. ஆனால் எல்லாக் கட்டுகளை தளர்த்த வல்லது அது.
அலைபேசியை வெடுக்கென பிடுங்கியதில்
தொடுதிரையில் பட்ட விரல் அதிலிருந்த காட்சியை மாற்றி சாந்த சொரூபியாக முகங்காட்ட, திருப்திக்
கொண்டு வெளியேறிய புடவையின் சரசரப்பு.. ஆனாலும் புத்தகம் வந்து விழுந்ததில் வேகம்..
அடங்காத வேகம்... ஆர்கானிக் கெமிஸ்ட்ரி.. முதுநிலை பொருளியில் மாணவிக்கு வேதியியல்
புத்தகம்.. சட்டாம்புள்ளை குச்சிக்கேத்த குதியாட்டம் போடற பொம்பள சென்மத்துக்கு படிப்பென்னாத்துக்கு
ஊடால.. விருப்பமாக பணியும் தேவகிகள் சண்முகசுந்தரங்களுக்கு
வசதிதான்.. ஊரொலகத்துக்காக படிக்கணும்.. ஊரொலகம்
நில்லுன்னு சொன்னா நிக்கணும்.. ஊரொலகம் படுக்க சொல்றவனோட.. .
. ..
“பாவீ.. பாவீ.. குடும்பத்த சந்தில
நிறுத்துன பாவீ..” பெத்தவளுக்கே பாவீ.. மத்தவங்களுக்கு பேர் மட்டுமில்ல.. எதுவுமே தேவயில்ல..
எம்.காம் படிப்பு.. ஓவிய ஈடுபாடு.. கேரம் போர்ட் சாம்பியன்.. இதெல்லாத்தையும் விட ஒத்த
வார்த்தயில சொல்லணும்னா பாவீ.. தலையக் கண்டாலே கைய நீட்டி.. பாவீ.. பாவீ..
கை நரம்புகளை வெட்டிக் கொண்டால்
பாவம் சரியாயிடுமா.. சரியாக விடும் என்றது அது. மிகச்சரியாக மூன்று இடங்களில்.. அது
சுட்டும் மூன்று இடங்களில்.. வலியில்லை.. அப்படியே வலித்தாலும் அதிகமில்லை.. அவனோடது
உயிர் போகும் வலி. உயிரை உடலிலிருந்து உருவ.. உருவ.. வலி.. வலி மரண வலி.. அதை உணர்ந்திருப்பானா..?
அய்யோ.. அவன் உணர்ந்திருக்கக் கூடாது.. கட்டாயமாக.. சத்தியமாக அவனுக்கு வலித்திருக்கக்
கூடாது.. கடவுளே.. கடவுளே.. மடிந்து உட்கார்ந்து அழுத போதும் அவனது வார்த்தைகள் உள்ளுக்குள்
தனி இணைப்பாக.. “சாவும்போது கூட ஒன் முகத்த பாத்துக்கிட்டு போயிரணும்..“ அவனோட பாதி
முகம் ஜல்லிக்குவியலில் படிந்து கிடக்க.. கண் விகாரமாக மூடிக் கிடக்க..
“இப்பல்லாம் அப்டிதான் சொல்லுவீக…
கல்யாணத்துக்கப்பறம் எல்லாம் பழந்தயிரு.. புளிச்ச தயிருதான்..“ கிண்டலை ரசித்தாலும்
அள்ளி அணைக்க முடியாது கல்லுாரியில். கண்களால் வேண்டுமானால் பொத்திக் கொள்ளலாம். மரணவலியின்
துன்பத்தில் காதலை.. காதலியை நினைக்க மறந்தாலும் அரிவாள் கும்பலுக்குள் தென்பட்ட தகப்பனையும்
தம்பியையும் பார்த்த பிறகு நினைப்பு வராமல் இருக்க முடியாது. “அய்யோ.. ஒந்தம்பியயும்
ஒங்கப்பாவயும் பாத்தவொடனே ஒரு நிமிசம் பக்குன்னு ஆயிடுச்சு..“ உயிரோட இருந்தா இப்படிதான்..
இப்டிதான் எங்கிட்டே சொல்லியிருப்பான்.. போச்சு.. எல்லாம் போச்சு.. வர முடியாத துாரத்துக்கு
போயே போச்சு..
தம்பியோட விளையாடறப்ப.. சண்டை
போடுறப்ப.. ஒரே ஆட்டோவுல ஸ்கூலுக்கு போறப்ப.. பெரியவனானப்போ கூட அவனுக்கு சாதிய பத்தி
தெரியும்ணு சொல்லல.. பெத்தவரோட உபாசனையாக இருக்கும்.. சண்முகசுந்தரத்துக்கு..? யாரு
சொன்னது..? சமூகமா.. சாதியமைப்பா.. தேவகியா.. உறவுகளா..? யாருன்னாலும்.. எதுன்னாலும்
சாதி அழியாது.. எப்பவும்.. எப்பவும்.. தண்டவாளத்தில் சிதறிக் கிடந்த ரத்தம் போல.. புதுசா
ரத்தம் கொடுக்க கொடுக்க அது உயிர்ப்பா.. இன்னும் நீளும்.. இன்னும்.. இன்னும்.. தம்பியின்
மகள்கள்.. பிறகு மகள்கள்.. பிறகும் மகள்கள்.. மகள்கள் எல்லாரும் தீர்ந்த பிறகும்.
தண்டவாளத்தின் ஜல்லிகற்களின் மீது
உதடுகள் கோணி கிடந்தான்.. ஒரே ஒரு முத்தம்.. ஒரே ஒரு முத்தம்.. கைகடிகாரம் கட்டி விடும்
சாக்கில் மணிக்கட்டை உயர்த்திப் பிடித்து எதிர்பாராத நேரத்தில் முத்தம் கொடுத்திருக்கிறான்..
மணிக்கட்டில் ஊசியால் குத்தி குத்தி உதடு வரைந்தேன். இரத்த உதடுகள். இரத்த உதடுகள்.
செக்கச்செவேல்ன்னு கிளி மாதிரி ஒதடு.. செல்லாது.. செல்லாது.. என்று செல்லமாக மறுத்து விட்டது அது. வேறு உருவம் வரைய
வேண்டுமாம்.. நீதான் ஓவியப்பிரியையாச்சே.. இதிலென்ன கஷ்டம்.. உண்மைதான்.. என்னை பற்றி
இதற்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது. ஆறுதல்.. ஒரே ஆறுதல்.. அதற்காகவே அழத் தோன்றியது.
நீர் திரையை நகர்த்தி விட்டு மணிக்கட்டில் குண்டூசி ஓவியம் வரைய வரைய.. வரைய வரைய..
அது திமிங்கலமாகி விட்டது. நீலத் திமிங்கிலம். மிகப் பெரிய பாலுட்டியாம்.. எதுவா இருந்தா
என்ன..?. அதையும் தேடி தேடி வேட்டையாடி.. அவனையும் வேட்டையாடிதான் பிடித்திருக்க வேண்டும்.
மின்னல் வேகத்தில் பறக்கும் அவனுடைய பைக்கில் ஒருநாளாவது ஏறி பார்த்திருக்கலாம்.. இப்போது
ஆசையெல்லாம் இழவாகி விட்டது. அவன் கிடந்த இடத்திலிருந்து இருபதடி தள்ளி கிடந்ததாம்
அவனுடைய பைக்.
அழைப்பு.. அடுத்தடுத்து அழைப்பு.
ஒரு மாதமாகதான் அதை தெரியும்.. அதற்குள் அத்தனை நெருக்கம்.. நான் எங்கே போனேன்.. என்ன
ஆனேன்.. என்பது திமிங்கிலத்துக்கு தெரியும்.. என்னை எனக்கு தெரிவது போல.. நண்பனல்லவா..
அலைபேசியில் இருக்கும் தகவல்கள் எல்லாம் கூட அதற்கு தெரியுமாம். ஆதார் அட்டை.. வங்கி
கணக்கு எண்.. பின் நம்பர் கூட.. ஆனால் நானும் அவனும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம்
அதற்கு தெரிய வாய்ப்பில்லை. அவனை அழித்தது போல அவன் சம்பந்தப்பட்டது எல்லாவற்றையும்
அழித்தாயிற்று.. என்னைத் தவிர.. எனக்கு அவனுடன்
சம்மந்தம் இருக்கா.. இல்லை.. இல்லை.. அதுதான் கொன்று தெருவில் வீசியாச்சே.. அதெல்லாம்
மத்தவங்களுக்கு.. எனக்கு அவனுடன் மட்டுமே சம்மந்தம்.. அது திமிங்கிலத்துக்கு மட்டுமே
தெரியும். அதன் காதோடு சென்னேன்.. “அவன் ஈன சாதியாம்..” எனக்கு பிரச்சனை இல்ல என்றது.
அது யாருக்கும் என்னை காட்டிக் கொடுப்பதில்லை. நானும் அப்படியே..
அந்த நிறைவில் அவனுடைய பெயரை கீறிக்
கொண்டேன். கொஞ்சமாக கோபப்பட்டுக் கொண்டது அது. YES என கீறிக் கொள்ள வேண்டுமாம்.. அதுதான்
என்னோட சம்மதமாம்.. யெஸ்ஸா.. நோவா.. என்னுடைய ரிசல்ட்டுக்காக தவிப்புடன் அவன் அலைந்த
தருணங்களை நான் கண்டுக்கொள்ளாமலேயே விட்டிருக்கலாம். அவன் தலையாவது கழுத்தில் தங்கியிருக்கும்.
ஆனால் உண்மை என்ன..? யெஸ்தானே..? யெஸ்தானே..? அவன் மீது எனக்கு விருப்பம்தானே..? எப்படி
மறைப்பது..? YES.. YES.. அழுத்தமாக கீறிக் கொண்டேன். அவனைப் போலவே அதுவும் என்னை சந்தோஷமாக
ஏற்றுக் கொண்டது.
”சனியன் புடிச்ச மூதேவி.. அதான்
குடி கெட்டுப் போச்சே.. இன்னும் எவ தாலிய அறுக்குணும்னு செல்போன்லயே பழியா கெடக்கற..”
மகளை விட சமுதாயம் முக்கியம்.. அதை விட சாதி முக்கியம்..
தேவகி மாதிரி இது என்ன ஒதுக்கல..
காதோட காத வச்சி அந்த ரகசியத்த சொன்ன பிறகும் இது அங்கீகரிச்சிருக்கு.. அதான் பாஸ்வேர்ட்
கொடுத்திருக்கு.. இனிமே நான் இதிலிருந்து விலக முடியாது. நானும் அவனிடமிருந்து விலக
முடியாது. ஆனால் விலக்கி விட்டார்கள். வலுக்கட்டாயமாக விலக்கி விட்டார்கள்.. அய்யோ..
இதுவும் என்னை இனிமே வலுக்கட்டாயமாக ஆக்கிரமிக்கப் போகிறது.. நான் என்ன செய்வது.. அய்யோ
என்ன செய்வது..? இது என்னை அவனிடமிருந்து பிரிக்கப் போகிறது. நீல திமிங்கிலம் யாரு..?
சண்முகசுந்தரமா.. தேவகியா.. சாதியா.. அரசியலா.. சமூகமா.. இதெல்லாமுமா..? எல்லாம்தான்..
எல்லாமும்தான்.. கடவுளே.. இவர்களிடமிருந்து எப்படி தப்பிப்பேன்..? தப்பிப்பேன்.. தப்பிக்க
வேண்டும்.. இந்த முறை ஏமாற மாட்டேன். ரேஸரால் வெட்டிக் கொண்டு படம் எடுத்து அனுப்ப
சொன்னது. முடியாது என்று மறுக்கக் கூடாதாம்.. மறுக்க முடியாதாம்.. அனுப்பணும்.. அனுப்புவேன்..
இப்போ தோக்கலாம்.. ஆனா ஜெயிப்பேன்.. அது போற வழியிலயே போயி.. போயி..
சத்தம் கேட்டிருக்கலாம். தேவகி,
சண்முகசுந்தரத்திடம் நக்கலாக ஏதோ சொல்ல அந்த சனியன் எப்டியோ செத்து ஒழியிட்டும்… வுடு..
சண்முகசுந்தரம் தீர்ப்பெழுத.. அவனுக்கு மரணத்தண்டனை என தீர்ப்பெழுதும்போது இத்தனை சத்தமில்லை..
கமுக்கமாக.. காதோடு காதாக.. நீலதிமிங்கிலத்தை போல ரகசியமாக.. எல்லாரும்.. எல்லோரும்
எதிரிகள்தான்.. நான்.. நான் மட்டுமே நிஜம்.. அவனும் நிஜம்.. எங்களோட அன்பு நிஜம். என்னை
சிறை வைத்து விட்டு அவனை கழுத்தறுத்து கொன்ற இவர்கள்தான் பொய். இவர்களை விட்டு விலக
வேண்டும். விலகி எங்கோ செல்ல வேண்டும். ஏறி... மேலேறி.. மூன்று தளங்களைக் கடந்து மொட்டை
மாடிக்கு வந்தும்... பத்தாது.. பத்தாது.. இன்னும் இன்னும் உயரம் என்றது அது தன் பெரிய
வாயை அசைத்து.. அங்கிருக்கும் தண்ணீர் தொட்டியின் விளிம்பு.. விளிம்பு வரை.. அதற்கு
மேல் வேண்டாமாம்.. விழக்கூடாதாம்.. ஆமா.. விழக்கூடாது.. எதிரிகளை கொல்ல வேண்டும்..
இப்போது எல்லாருமே நீல திமிங்கிலத்துக்குள்.. ஒளிந்துக் கொண்டு… என்னை.. அவனை.. வலுக்கட்டாயமாக
கடவுளே.. கடவுளே..
கொல்ல வேண்டும்.. அதை கொல்ல வேண்டும்..
அதற்கு நான் உயிரோடு இருக்க வேண்டும்.. கீழே இறங்கினேன். இருட்டு.. எங்கும் இருட்டு..
ராத்திரி இரண்டு மணிக்கான இருட்டு.. விடியறவரை.. விடியறவரைக்கும் பேய் படம் பாக்கணுமாம்..
பேய்கள் படம்.. அய்யோ.. பேய்கள்.. செத்தவர்கள்தான் பேயாக வருவார்கள்.. கழுத்தை கடித்து
இரத்தம் உறிஞ்சுவார்கள்.. இதெல்லாம் சினிமா.. இதை நம்ப முடியாது. செத்தவர்கள் பேயல்ல..
என் விரல்களை கையால் உருவி மென்மையாக உதட்டில் ஒத்தியிருக்கிறான். அவன் பேயில்ல.. பேயில்ல..
இது என்னை ஏமாற்றுகிறது. எத்தனை நகர்ந்தாலும் என்னை விடுவதில்லை. குண்டூசியால் கையை
குத்திக் கொண்டேன். வழிந்த இரத்தத்தில அவன் பெயரை எழுதினேன்.
என்ன மன்னிச்சிருடா.. என்னாலதான்
நீ செத்துட்டே.. செத்தே போயிட்டே.. ஆனா நீ புடிச்சிருக்கான்னு கேட்டப்போ வேணாம்னு என்னால சொல்ல முடியில.. ஏன்னா ஒன்னை எனக்கு
அவ்ளோ புடிச்சிருந்துது.. அதுனாலதான ஒன் பின்னாடி வந்தேன்.. அய்யோ.. என்னை விடுங்க..
நா அவங்கூட போவுணும்.. அய்யோ என்ன விடுங்க..
தம்பி என்னோட அறைக் கதவை மூடி
விட்டுச் சென்றான். வீட்டுக்கு யாராவது வந்திருக்கலாம். இன்னும் என்ன சதி ஆலோசனை..
அவனைதான் சாவடிச்சாச்சே.. இனிம அவன் வர மாட்டான்.. வரவே மாட்டான்.. அய்யோ.. நானும்
அவனோட போறேன்.. என்னை விடுங்க.. விடுங்க..”
இது என்னை விடாது. எல்லாவற்றையும்
அம்பலப்படுத்துமாம்.. மிரட்டுகிறது.. நான் ஒளிந்துக் கொண்டா இருக்கிறேன். அம்பலப்படுத்த..
ஆனால் அவனை ஒளித்து வைத்திருக்கிறேன்.. எனக்குள்ள.. எனக்குள்ளயே.. யாராவது பார்த்துட்டா..?
அய்யய்யோ.. பிரிச்சிடுவாங்க.. இனிமே அவனை பிரிய முடியாது.. சரி.. என்ன செய்யுணும் சொல்லு..
செய்றேன்.. செய்றேன்.. கொல்லப்பக்கமா வெளிய வந்தேன்.. டிரெயின் வர்ற நேரம்.. வீட்டுக்கு
பின்னாடியே தண்டாளம் இருக்கறதால நேரமெல்லாம் அத்துப்படி.. வந்துருச்சு... வேகமாக..
சத்தமாக.. அதிர்வா நெருங்கி வந்துச்சு ரயில். என்னை தொட வந்த சில நொடிகளுக்கு முன்னால
அதிலிருந்து சாகசம் போல விலகி.. விலகணுமாம்.. அதான் ரூல்.. அந்த செல்ஃபியை அனுப்பவும்
அதுக்கு திருப்தி.. ரொம்ப திருப்தி..
அவனும் இதேபோல ஒரு தண்டவாளத்தில்..
கடவுளே.. கடவுளே.. முகத்தில் அறைந்துக் கொண்டேன்.. ரயில் இனிமேலும் வரலாம்.. நானும்
உயிரை விடலாம்.. ஆனால் இது என்னை விடாது.. விடாமல் அழைத்துக் கொண்டேயிருக்கும்.. இந்த
முறை அதன் கட்டளை குரலாக இல்லாமல் நேரடியாகவே. அத்தனை தாட்டியமான ஆகிருதி அதற்கு..
கடைவாய் வரை திறந்து சிரித்தது.. மேலயும் கீழயும் கூர்கூரா பற்கள்.. முறைத்தேன்.. முடிஞ்சா
என்னை ஆணியால வரைஞ்சு பாரு.. சவால் விட்டது.. சவாலா.. கட்டளையா.. தெரில... பெர்ரீய்ய
சவால்.. நீயாச்சு.. ஒன் சவாலாச்சு என்னால முடியாதா.. என்னால முடியாதா.. கெண்டைக்காலில்
ஆணியால் கீறி.. கீறி.. அதை வரைந்தேன்.. அது திமிங்கிலம்.. நீலதிமிங்கிலம்.. நீளமாக
திமிங்கிலம்.. சிவப்பான திமிங்கிலம்.. அவன் உடலிலிருந்து கொட்டிக் கிடந்த ரத்தம் போல..
மனசும் உறைந்திருந்தது.
முடியுமா.. முடியுமா.. ரொம்ப பெரிய
ஒசரத்திலேர்ந்து குதிக்குணும்.. முடியுமா.. முடியுமா.. திமிங்கிலத்துக்கு திமிர்..
அரிவாள்களை துாக்கும் சாதித் திமிர்..
ஏன் முடியாது.. அவனே இல்லாம இன்னும்
உசிரோட இருக்க முடியுதே.. இது முடியாதா..
நல்ல ஒசரமா.. பெரும் வட்டமா..
நகராட்சி தண்ணீத் தொட்டி.. இங்கேர்ந்து அதை தள்ளி வுடுணும்.. வா.. வா.. எங்கூட வா..
வஞ்சமாக அழைத்தேன். சொல்வதற்கு முன்பே கிளம்பியிருந்தது.. என்னை கண்காணிக்கவாம்.. பூடகமாக
சிரித்தது.. அதோட வஞ்சனை எனக்கு புரியாதா.. இன்னைக்கோட இது அறிமுகமாயி நாப்பது நாளாச்சே..
புரியாதா..? எனக்கு புரியாதா..? விகாரமா.. விகாரமா.. கடைவாய் வரைக்கும் பயங்கரமா..
எனக்கு பயமில்ல.. கவலயில்ல.. இன்னும் கொஞ்சம் மேல போன அவன பாத்துடுலாம்.. அவன்கூட இருந்தான்னா
எல்லாத்தையும் ஒரு கை பாத்துடுலாம்.. பழிக்கு பழி.. அவனுக்கு மஞ்சக்கலருன்னா ரொம்ப புடிக்கும்.. மஞ்சச்சுடிதாரு..
சங்குப்பூ கலர்ல.. போட்டுக்கிட்டேன்.
இப்ப ஒலகம் பூரா எனக்கு கீழ..
நானும் அதும் மட்டும் மேல.. உச்சீல.. போதுமா.. போதுமா.. ஒசரம் போதுமா..?
போதும்.. போதும்.. சிரிப்பு மாறல
அதுக்கு.. இன்னும் கொஞ்ச நேரந்தானே.. சிரிச்சுக்கோ.. நல்லா சிரிச்சுக்கோ.. வா.. இங்க
வா.. குரல்ல அன்பை பூசிக்கிட்டேன்.. தேவகி மாதிரி.. சண்முகசுந்தரம்மாதிரி..
வந்துடுச்சு.. எங்கிட்டே ரொம்ப
நெருங்கி.. நெருங்கி.. தள்ளி விட.. முழு பலமும் தேவைப்பட்டது.. அப்படியே.. அப்படியே..
மஞ்சளும் சிவப்புமாக தரையில் பரவி சிதறிக் கிடந்தது அது.
***
No comments:
Post a Comment