வலிமையான சிறைக்கம்பிகளுக்கு பின்
அவன் பகுதிபகுதியாக நின்றிருந்தான். பின்புறம் நீண்டிருந்த வாராண்டாவில் ஒளியின்மை
அழுக்கு போல சூழ்ந்திருந்தது. உடலை ஒருக்களித்து வலதுக்கையின் விரல்களால் மிக லேசாக
கம்பியை பற்றிக் கொண்டிருந்தான். அவன் கூரான மூக்கும் சிறிய கண்களும் முகம் முழுக்க
தாடியுமாக இருந்தான். தாடை முன்புறம் சற்றே நின்றிருந்தது. அவனுடைய முப்பத்தேழு வயதை
மீறி மயிர் நரைத்திருந்தது.
“ஒரு பிள்ளையை உன்னால் ஒழுங்காக
பார்த்துக் கொள்ள முடியவில்லை.. அப்படிதானே..?” கோபமும் இயலாமையும் வெளிப்படாத வறண்டக்
குரலில் பேசினான். அவளை பார்த்தபடியே வார்த்தைகளை ஆரம்பித்தவன் முடித்த கணத்தில் பார்வையை
நகர்த்தியிருந்தான். கண்களைப் போலவே அவனும் ஓரிடத்தில் நிலைக்காதவன். அவனை பார்த்தேயாக
வேண்டிய சூழலை கோரி மனு மனு அளித்திருந்தாள்.
”நானென்ன செய்வது.. எதற்கு என்னை
மட்டும் பொறுப்பாக்குகிறாய்..?” வழக்கமாக அவளது இந்த வார்த்தைகள் வெகு கூர்மையாக வந்து
விழும். இன்று எலும்புகளற்று தொய்ந்து விழும் உடலை போல வாயிலிருந்து நழுவி விழுந்தது.
கம்பியைப் பிடித்திருந்த இடதுக்கை லேசாக நடுங்கியது. சுடிதார் துப்பட்டாவை அப்படியே
அள்ளி மாரில் போட்டிருந்தாள். முகம் அளவுக்கு
மீறி வாடியிருந்தாலும் கண்களை ஈரப்படுத்திக் கொள்ளாமல் நின்றிருந்தாள்.
வறண்டு நிலவிய அடைப்பட்ட வெளிகளும்
உலர் நாற்றமுமான அந்த சூழல் ஆரோக்கியமான மனநிலையை கூட வெகு சுலபமாக சன்னதத்தில் ஆழ்த்தி
விடும் என்பாள். அவனுக்காக இங்கு வந்துபோக வேண்டியிருந்தாலும் அவளால் எதையும் பழக்கப்படுத்திக்
கொள்ள முடியவில்லை. அவனுக்கு இது பழகியிருந்ததால்
அவன் ஆரோக்கியமாகவே இருந்தான். அவளும் ஆரோக்கியமானவள்தான். இருவருக்கும் ஆரோக்கியமான
பத்து வயது மகன் இருந்தான்.
”பிறகு யாரை நொந்துக் கொள்வேன்..?”
அவன் வார்த்தைகளிலிருந்த கனிவு அவன் நிலையற்று இருப்பதை உணர்த்தியது. அவனுக்கு நண்பர்கள்
அதிகம். அதுவும் இம்மாதிரியான நிலைக்கொள்ளாத தவிப்பிலிருக்கும்போது நண்பர்கள் சூழ இருப்பதையே
விரும்புவான். அது கைக்கூடாதாலோ என்னவோ கால்களை மாற்றி மாற்றிக் வைத்துக் கொண்டிருந்தான்.
சமீபமாக அவளுக்கு நொந்துக் கொள்ள
ஆளிருந்தது. தனது நீரப்பிய கண்களை செல்வக்குமார் தனது பரிவான கண்களால் ஒற்றிக் கொள்வது
அவளுக்கு தேவையாக இருந்தது. அவனை தனக்குள் நிரப்பிக் கொண்டபோது ஏதோ நிறைவடைவதை உணர்ந்திருக்கிறாள்.
செல்வகுமார் மருந்து கம்பெனியொன்றின் விற்பனை பிரதிநிதி. அந்த நிறுவனத்தின் மாதாந்திரக்
கூட்டம் அவள் வரவேற்பளாராக பணிப்புரியும் அந்த பெரிய ஹோட்டலில் நடப்பது வாடிக்கை. சமீபத்து
மாதங்களொன்றில்தான் அவள் அங்கு பணியில் சேர்ந்திருந்தாள். அது அவன் தலைமறைவாகயிருந்த
நேரம். அதிகம் படித்தவளில்லை அவள். படிக்க வைக்க ஆளும் இல்லை. இளமையும் சிவந்த தோலும்,
தேவைப்படும் அளவுக்கு படிப்புத் தகுதிகள் இந்த பணிக்கு தேவைப்படாதது அவளுக்கு சாதகமாக
போனது. மகனை தொலைத்து நின்ற இந்த நான்கு நாட்களில்
செல்வக்குமாரும் டீயும்தான் அவளுக்கு ஆறுதல்.
ஒதுக்கப்பட்ட குறைவான நேரமும்
மௌனத்தில் கழிந்து விடப் போகிறதே என்ற பதற்றம் இருந்தாலும் இருவருமே அதை கலைக்க விரும்பாதது
போல சிறிது நேரம் பேச்சற்றிருந்தனர். சேர்ந்தாற்போல வாயடல்கள் இன்றி இருப்பது இருவருக்குமே
புதிதுதான். இன்புற்று இருந்த நாட்களை விட வாக்குவாதங்களில் கழிந்த நாட்களே அவர்களுக்குள்
அதிகம். அவளுக்கென்று யாருமில்லாததை சற்று அனுசரித்திருக்கலாம் என்று எப்போதாவது எழும்
எண்ணத்தை அவன் வேண்டுமென்றே அவளிடம் வெளிப்படுத்தியதில்லை.
”என்னிடம் அவனை ஒப்படைத்து விட்டு
இங்கு வந்திருந்தாயோ..?” மௌனத்தை கலைத்து விட்டு கூர்மையாக அவனை பார்த்தாள்.
”நானென்ன ஒப்படைப்பது..? மண்ணில்
பிறக்கும் குழந்தைகளுக்கு தாயும் தகப்பனும்தானே பொறுப்பு. நான் சிறையிலிருக்கிறேன்.
வெளியிலிருக்கும் நீதானே இந்த பொறுப்பை ஏற்றிருக்க வேண்டும்..?” பதிலாலடிப்பது அவன்
இயல்பு என்றாலும் நிதானம் பெற்றிருந்தான்.
அவனை நிமிர்ந்துப் பார்த்தாள்.
இம்மாதிரியான ஒரு சிறைவாசத்துக்கு பிறகு அன்று அவன் வீடு திரும்பியிருந்தான்.. கூடவே
நண்பர்களும். எப்போதும் அருகருகிலேயே இருந்துக் கொள்வதை அவனும் அவனுடைய நண்பர்களும்
விரும்பிக் கொள்வதை அவள் ஒருபோதும் விரும்புவதில்லை. ஆனாலும் அவன் வந்து விட்ட பூரிப்பு
அவளிடம் துடிப்பாக ஒட்டிக் கொண்டது.
அவன் உடலின் அநாவசிய முடிகளை நீக்கிய
பிறகு செய்துக் கொள்ளும் சுதந்திரக்குளியலை அனுபவித்துக் கொண்டிருந்தான்.
”கதவ்ல டவல் போட்டுருக்கேன் பாருங்க..”
அவளுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
அப்போது சிறுவன் இன்னும் சிறுவனாக
இருந்தான். அந்த சிறிய வீட்டின் முன்னறையில் குனிந்தவாறு அமர்ந்து எதையோ வரைந்துக்
கொண்டிருந்தான்.
உள்ளே அசைவக்குழம்பு கொதித்துக்
கொண்டிருந்தது.
”இன்னமா குளிக்கல..?” வேண்டுமென்றே
கொஞ்சலும் அதிகாரமுமானதொனியில் கேட்டாள்.
”சீக்கிரமா ஹோம்வொர்க்க முடி..
சாப்டுலாம்..” என்றாள்.
அவன் குளியல் முடித்து விட்டு
வெளியே வருவதற்குள் நண்பர்கள் கூடி விட்டனர். அதேநேரம் சிறுவனும் வீட்டுப்பாடத்தை முடித்திருந்தான்.
நண்பர்களை கண்டதும் அவனுக்கு ஆர்வம் தொத்திக் கொண்டது. ஈரத்தலையை ஒருகையால் கோதி விட்டுக்
கொண்டான். மறு கையால் அங்கு தொங்கிக் கொண்டிருந்த சட்டையை எடுத்து அணிந்துக் கொண்டான்.
அன்று அவன் வீடு திரும்பியபோது இரவு பதினொன்றை தாண்டிவிட்டது.
”ஒரு அநிச்சயமானவனின் மனைவியாக
வாழ்வது எத்தனை கஷ்டம் என்பதை உணர்வாயா நீ..?” அவள்தான் வாக்குவாதத்தை துவக்கினாள்.
சத்தம் கேட்டு சிறுவன் விழித்துக்
கொண்டான்.
”வாழ்வே அநிச்சயம்தான்.. இதில்
நான் மட்டும் விலக்கா என்ன..?”
”இம்மாதிரியான வசனங்களுக்கு மளிகையும்
அரிசியும் யாரும் விற்பதில்லை. வீட்டுக்காரர் கூட வாடகைக்கு மாற்றாக இவற்றை ஒருநாளும்
ஏற்றுக் கொண்டதில்லை..”
மௌனம் கூட கூரான பதில்களையொத்ததே.
அவளுக்கு அழுகை வந்தது. ”தகுதியற்ற
நீயெல்லாம் ஏன் உனக்கென்று ஒரு குடும்பத்தை ஏற்படுத்திக் கொள்கிறாய்..?”
பராமரிப்பின்றி கிடந்த மூக்குக்கண்ணாடியை
துடைத்துக் கொண்டிருந்தான்.
”உன்னை சுற்றி எப்போதும் நண்பர்கள்
கூட்டம்..”
பால் காய்ச்சப்படாமல் அப்படியே
கிடந்தது. சமைத்த உணவு உண்ணவும்படாமல், பத்திரப்படுத்தவும்படாமல் இருந்தது.
”என் நண்பர்களை, என்னை நம்பி வருபவர்களை
நான் எப்படி விலக்க முடியும்..?”
”இது நீ போட்டுக் கொள்ளும் வேடம்..
எல்லோரின் கவனத்துக்குள்ளும் இருந்துக் கொண்டேயிருக்க வேண்டும் என்ற உன் ஆழ்மனதின்
விருப்பம்… நமது திருமணம் கூட ஏழைத்தாயின் மகளுக்கு வாழ்வுக் கொடுக்கிறேன் என்ற உன்
சுயதம்பட்ட முயற்சி என்றுதான் சொல்வேன்.. அதனால்தான் அது நம் கைகளிலிருந்து நழுவிக்
கொண்டே இருக்கிறது..”
உன் காதல்தான் என் பலம் என இருவரும்
பரஸ்பரம் பரிமாறிக் கொண்ட வார்த்தைகள் கூடம் முழுதும் பரவிக் கிடந்தது.
”நான் வாழ்வதற்கென்று ஏதேனும்
நீதி இருக்கிறதா..?” அழுதாள்.
”ஒப்புக் கொள்கிறேன்.. நீ விரும்புவதை
செயல்படுத்திக் கொள்ள நான் உன்னை தடை செய்ய முடியாது தான்..”
வாதம் பெரிதாகி அவன் அவளை தொலையும்படி
சபிக்க, அவளோ நீ பெற்ற சனியனையும் எடுத்துக் கொண்டு கண்காணாது ஒழி என்று எகிறினாள்.
சிறுவனின் போர்வைக்குள் அசைவு தெரிந்தது.
”அவன் செல்லுமிடங்கள் அனைத்திலும்
தேடி பார்த்தாயா..?” நிலவிய மௌனத்தை கலைத்தான். குரல் களைத்திருந்தது.
மகனின் போக்கிடங்கள் அவளுக்கு
அவ்வளவாக தெரிந்திருக்கவில்லை. அவளுடையதை போல சிறுவனுக்கும் நெஞ்சில் குத்திக் கொள்ள
பேட்ஜ் உண்டு. இவளுடையது பெயரும் பதவியும் மட்டும் கொண்டதாக இருக்கும். ஆனால் சிறுவனுடையதில்
பெயரோடு, முகவரி, அலைபேசி எண், இரத்தவகை கூட இடம் பெற்றிருக்கும். இரத்தவகை தெரிந்துக்
கொள்ளும் சோதனைக்கு மகனை அழைத்துக் கொண்டு கணவனும் மனைவியுமாக சென்றிருந்தனர். பரிசோதனை
முடிவு வரும்வரை அந்த தெருவிலிருந்த ஓட்டல் கடையொன்றில் மகனும், அவளும் அவனுமாக ஆனியன்
ரோஸ்ட் சாப்பிட்டனர். பி பாசிட்டிவ் என்றது பரிசோதனை. நானும் அதேதான் என்று அவன் மகிழ்ந்தான்.
எனக்குதான் என் ரத்த வகை தெரியவில்லை என்று அவள் அவன் தோளை இடிக்க, “பண்ணீடுவோம்..“
உற்சாகமாக பதில் சொன்ன அதே நேரத்தில் அவனுடைய அலைபேசி அழைத்தது. இவளிடம் திரும்பி,
”நீ வீட்டுக்கு போ.. நா வர லேட்டாவும்..” என்றான்.
அன்றைய தினத்தின் மீதப்பொழுதை
அவள் அழுதப்படியே கழிக்க, சிறுவனும் அழுதான்.
”தேடிப் பார்த்தாயா..?” மீண்டும்
கேட்டான் அவன்.
இதே போன்று அவளும் அவனை கேள்விகளால்
உசுப்பியிருக்கிறாள்.
”சொல்.. நீ ஏன் எங்களை விட்டு
விலகிக் கொண்டே இருக்கிறாய்..? நீ விடுதலையாகி வந்தாயா.. பிணையில் வந்தாயா என்பது கூட
எனக்கு தெரியாது..”
”சரி.. இப்போது சொல்கிறேன்.. நான்
எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம்..” என்றான்.
”இப்போது என்ன தவறு செய்தாய்..?”
என்றாள் ஆற்றாமையாய்.
”அதை அவர்கள்தானே தீர்மானிக்கிறார்கள்…”
என்றான்.
செல்வகுமார் வண்டியின் பின்னிருக்கையில்
கோழிக்குஞ்சாய் ஒட்டிக் கொண்டு நான்கு நாட்களாக தேடிக் கொண்டுதானிருக்கிறாள். மழை கசகசத்திருந்த
ஈரநைப்பான அப்பொழுதுகளில் டீக்கடைகளின் கதகதப்பான வெப்பம் அவளின் சுயஇரக்கத்தை துாண்டி
கண்ணீரை சுரக்கச் செய்துக் கொண்டேயிருந்தது. அவை இப்போது வற்றியிருப்பதாக தோன்றியது
அவளுக்கு. உடல் கனத்தது போல கால்களுக்குள் நிற்க முடியாத வலி ஏற்பட்டது. இந்த வலி இதற்கு
முன் வேலை பார்த்த நகைக்கடையொன்றில் பத்து மணிநேரங்கள் நின்றுக் கொண்டிருந்ததில் தொற்றிக்
கொண்ட ஒன்று. டீயின் தெம்பு ஊறும் வரைக்கும் தம் பிடிக்கலாம்.
”பள்ளிக்கு தெரியப்படுத்தி விட்டாய்
அல்லவா..?”
பள்ளிதான் அவளுக்கு தகவல் சொன்னது.
அன்று அவளுக்கு இரவு நேர பணி அவளுக்கு வாய்த்திருந்தது. பகல் நேர பணியென்றாலும் வரவேற்பாளர்
நாற்காலியில் எட்டு மணிக்குள் அமர்ந்தாக வேண்டிய நேர நெருக்கடி எப்போதும் அவளுக்குண்டு. அன்று அந்த விசாலமான ஹோட்டலின் அத்தனை கூட்ட அறைகளும்
நிரம்பியிருந்தன. விருந்தினர்கள் செக்-இன் செய்வதும் செக்-அவுட் செய்வதுமாக இருக்க,
இரவு தங்கும்படி நேரிட்டது. இம்மாதிரியான நேரங்களில் இரட்டை சம்பளம் கிடைத்து விடும்.
அவள் பக்கத்து வீட்டில் பொறுப்பை ஒப்படைத்திருந்தாள். ஆனால் மகன் பள்ளிக்கு வரவில்லை
என்றார்கள் பள்ளியில்.
”அவன் வெகு சிறியவன். அவனை இரவுகளில்
பிரிந்திருக்க வேண்டுமளவுக்கு பணி என்ன அத்தனை முக்கியமானதொன்றா..?” என்று கண்டித்திருக்கிறான்.
”அதுசரி.. ஏதேனும் ஒரு அசம்பாவிதம்
நடந்து ஒட்டுமொத்தமாக அனைவரும் சென்று சேர்ந்து விடும் கரிய அதிர்ஷ்டம் நடந்து விட
வேண்டும் என்ற பிரார்த்தனையில் நான் எந்நேரமும் ஈடுப்பட்டுக் கொண்டிருக்க முடியாதல்லவா..?“
என்று அவளும் குத்தலாக பதில் சொல்லியிருக்கிறாள்.
ஏதோ கேட்க நினைத்து நிமிர்ந்தவன்,
பிறகு கண்களை தொலைவில் வைத்து எங்கோ வெறித்தான். பொதுவாக அவனுடைய நண்பர்கள் யாரையும்
அவள் அண்ட விட்டதில்லை.
”அக்கம்பக்கம் கடைத்தெருவெல்லாம்
விசாரித்து பார்த்தாயா.?”
அன்றிரவு அவள் வீடு திறக்கப்படவேயில்லை.
இரவு வீட்டுப்பாடம் செய்ததாகவும், பிறகு இரவு உணவை முடித்துக் கொண்டு படுத்துறங்கி
விட்டதாகவும் பக்கத்து வீடு தகவல் சொன்னது. பக்கத்து வீட்டு சிறுவனும் இவள் மகனுமாக
பள்ளிக்கு கிளம்பியது வரை தெருவில் எல்லோருக்கும் தெரிந்திருந்தது.
”ஏதேனும் நம்பிக்கையான தகவல்கள்
கிடைத்ததா..?” தாடையை தடவிக் கொண்டான்.
தண்ணீர் நிரப்பி விட்டு வருவதாக
கூறி விட்டு தன்னிடம் புத்தகப்பையை கொடுத்து விட்டு ஓடியதாகவும், நேரமாகி விட்டதால்
பையை அங்கேயே வைத்து விட்டு தான் மட்டும் பள்ளிக்கு சென்று விட்டதாகவும் பக்கத்து வீட்டு
சிறுவன் சொன்னான். பிறகு நாடார்கடை கோவில்ராஜ் சிறுவன் தண்ணீர் பாட்டிலோடு சென்றதை
பார்த்ததாக சொன்னார். பிறகு யாரும் எதுவும் சொல்லவில்லை.
காவல் நிலையத்தில் புகார் அளிப்பது
குறித்து அவனும் கேட்கவில்லை. அவளும் சொல்லவில்லை.
நேரம் முடிந்து விட்டதாக வந்த
அதட்டலையடுத்து அவன் மௌனமாக உள் நகர்ந்தான். அவனுடைய தளர்ந்த நடை அவளுக்கு மகனை நினைவுப்படுத்தியது.
தகப்பனின் சாயலையொட்டிப் பிறந்தவன். வளர்ந்து கிடக்கும் மயிறும் கடந்து போன வருடங்களுமே
இருவருக்குமான வித்தியாசங்களாக தோன்றியது அவளுக்கு.
“ம்ம்… மணியாச்சு.. கௌம்புங்க..
கௌம்புங்க..” அவளையும் துரிதப்படுத்தினார்கள்.
அவள் திரும்பிப் பார்த்தபோது நீண்டு
மடிந்த வராண்டாவின் இருளுக்குள் அவன் மறைந்துக் கொண்டிருந்தான்.
அவள் பேருந்து நிறுத்த ஷெல்டரில்
அமர்ந்துக் கொண்டாள். மழை நசநசப்பிற்கு பிறகான வெயில் என்றாலும் சுள்ளென்றிருந்தது.
கைப்பையை திறந்து அலைபேசியை வெளியே எடுத்தாள். அதிலிருந்த நாலைந்து தவறிய அழைப்புகளில்
எஸ்கே என்று செல்வக்குமாரை அடையாளம் காட்டிய எழுத்துகளை வெற்றுப் பார்வையாக பார்த்துக்
கொண்டிருந்த போது பேருந்து வரும் சத்தம் கேட்டது.
***
No comments:
Post a Comment