Search This Blog

Thursday 13 December 2018

மாயநதி தொகுப்பு குறித்து சிவமணியன் அவர்களின் விமர்சனக்கட்டுரை

ஐந்திணை’ நிகழ்வி்ற்காக வாசித்த சிறுகதை தொகுப்புகளில் கலைச்செல்வியின் ‘மாயநதி’ ,  அதன் உள்ளடக்கம்,  வேறு வேறு கதைச்சூழல்கள் , கதைக்கருக்கள் போன்ற தன்மைகளால் பிறிதொன்றில்லாத வாசிப்பனுபவம் தந்தது.
இந்த தொகுப்பின் கதைகளை,   வேளாண் நிலத்தின் மண்துகள் வாசனையை நாசியில் நிரப்பியபடி,  கால்களை அழுத்தமாக நீர் குழைத்த செம்பழுப்பு  ஈர மண்ணில் ஊன்றச் செய்த,   கதைகள்  ஒரு வகையாகவும்,  எண்ணவோட்ட சித்தரிப்பு மட்டும் முதன்மையாக அமைந்த  பிற வகைகளாகவும்  பிரிக்கலாம். இந்த வகைமைகளுக்கு வெளியே மருங்கையம்மன் போன்ற இருள்மிகுபுனைவும்(dystopian), வியாழக்கிழமை, பெரியாயி போன்ற யதார்த்தவாத  முயற்சிகள் எனவும் ஒரே அமர்வில் வாசிக்க முடிந்த சிறுகதைத் தொகுப்பு இந்த ‘மாயநதி’. 




வாசிப்பின்போது  கதைக்களன்களும், பாத்திரங்களும் ஏற்கனவே வாசகன்  அறிந்தவைகளாகத் தோன்றினாலும், இந்தக் கதைகள்  தனித்துவமான நோக்கம், பார்வை, மொழிபுடன் புனையப்பட்டுள்ளன.   வறட்சியால் நீர்நிலைகள் அழிவது,  வேளாண் நிலங்கள் கைவிடப்படுவது,  குடும்ப அதிகாரப் படுகொலைகள், நோய்மையால்  முதுமையால் கைவிடப்பட்டு தனித்தவர்கள், பெண்கள் தாள நேரிடும் குடும்ப வன்முறை, புராண உச்ச தருண மீளுருவாக்க கதை, ஒடுக்கப்பட்ட பாலுணர்வு கொண்ட மனதின் சித்தரிப்பு எனப் பல வேறு களன்களில் இந்த தொகுப்பின் கதைகள் சோதனை செய்து பார்க்கப்பட்டுள்ளது. 

சிறுகதையின் வடிமான துவக்கம், விரிவாக்கம், உச்சம் என்கிற வரையறைக்குள்  பொருந்திய ‘பெரியாயி’ இந்த தொகுப்பின் சிறந்த கதைகளுள் ஒன்று. பெரியாயி என்கிற கைவிடப்பட்டு தனித்தவரின்  எளிய வாழ்க்கையின் முன்னெப்போதும் நிகழாத ஒரு  தருணத்தினை விவரிக்கிறார் ஆசிரியர்.  இந்தப் பாத்திரத்தினை அதுநாள் வரை உந்தித் தள்ளி இயக்கிய வன்மம் என்னும் ஆதி உணர்வினை ‘பசி’ என்கிற மற்றொரு ஆதி உணர்வு மல்லுக்கட்டி  வெல்லும் கணத்தில் கதையின் உச்சம் அமைகிறது. கதையின் அனைத்து அலகுகளும் இந்த மீறல் கணத்தை நோக்கி இயல்பாகச் சென்றிருப்பதே இந்தக் கதையை நல்ல சிறுகதையாக்குகிறது. ‘பெல்ஜியம் கண்ணாடி’ என்றொரு கதை, குறியீட்டு ரீதியாக குடும்ப அதிகாரக் கொலையால் உடைந்த ஒரு இளம் மனதின் எண்ணவோட்டத்தை விவரிக்கிறது. 

 ‘மையம்’ ஒரு ஆணின் நெகிழ்ந்த கணத்தில் அவன் மனத்துளை வழியாக விட்டு விட்டு வெளியாகும் ஒடுக்கப்பட்ட காமத்தினை விவரிக்கிறது. தாமஸ் பிலிப் பாதிரியாரின் கோணத்தில், தேவாலயச் சூழலில், பவானி என்கிற  பெண் மீதான காமம்தான் மையம். மற்ற பாத்திரங்களை ஒதுக்கிக் கடந்து மெல்ல மெல்ல பவானியை நோக்கி தாமஸ் பிலிப்பின் மனதினை இயக்குற விசையை, கடலலையினை குறியீடாகக் கொண்டு விவரிக்கிறது. ‘வியாழக்கிழமை’ கதை முதல் வாசிப்பில் எளிதாக நான் கடந்து விட்ட கதை. அதிர்ச்சி தருமாறு எந்த நிகழ்வும் நிகழவில்லையே என முதலில் தோன்றியது. விளிம்பு நிலை மனிதர்களிடமிருக்கும் நுண் அதிகார அடுக்கினை சில வரி உரையாடல் மூலம் காட்டியதும்,  அந்த உடைந்த இரும்பு மிதிப்பான் வண்டி, குறு ஆன்மீக வண்டியாக உருமாற்றம் கொள்வதன் நுண்சித்திரமும் நினைவில் வழுவாமல் பதிந்து  இந்தக் கதையை நேர்மையான படைப்பாக்குகிறது.  


‘மருங்கையம்மன்’ என்கிற கதை ஒரு துணிவான இருள்மிகுபுனைவு முயற்சி. கொஞ்சம் வழுவியிருந்தாலும் அப்பாவித்தனமாக இருக்கிறது எனத் தோன்ற வைத்திருக்கும்.  ஊர்ப் பொதுமண்டபங்களில் உழைப்பின்றி பொழுதினைக் கழிக்கும் மக்களை அங்கதத்துடன் விமர்சிக்கிறார் ஆசிரியர். இவர்களுடன் டாஸ்மாக் வாசலில் காத்திருந்து பூசலிடும் கூட்டத்தையும் சேர்த்துக் கொள்ளலாம். ஆட்டுப் பாலின் மோரும், அந்த ஆட்டுத்தலை மருங்கையம்மனும்  வலுவான சித்தரிப்புகள். ‘அவை ஊளையிடுகின்றன’ ஆலைக் கழிவுகள் ஓயாது குருதி கேட்கும் ஓநாயின் குரைப்பாக, அதனருகில் அமைந்திருக்கும் இல்லத்தின் கதவினை அலற்றித் தட்டுகிறது. 

இந்த தொகுப்பின் மீதான விமர்சனமாக நான் கருதுவது, ஆங்காங்கே கதையுனுள் எழும் ஆவணமொழி விவரிப்பு. உதாரணமாக ‘பெரியாயி’ கதையில் அவள் மனம் உணவிற்காக  படபடத்து அலைகழியும் போது, தெருவோர மேடைப்பேச்சு பின்புறமாக மொழிகிறது.  வேளாண்மையை கைவிடும் சமூகப்போக்கினை குறிப்புணர்த்துவதுதான் ஆசிரியரின் நோக்கம் என்றாலும், கதையின் போக்கிற்கு இது தடங்கலாக இருக்கிறது.  இன்னும் நுட்பமான முறையில் கதையுடன் ஒன்றுமாறு நிகழ்ந்திருந்தால் கதைக்கு வலிமையாகியிருக்கலாம். ‘ஆண்டைகளின் கோபம் அடிமைகளால் தாங்க முடியாது’ , எரியிரதை இழுத்தா கொளுத்துரத தானா அடங்கிடும்’ போன்ற பொதுவான சொலவடைகள் ஆங்காங்கே துருத்தலாக தெரிகிறது. இந்த புனைவு தருணங்களை உணர்த்த அனைவரும் அறிந்த பழமொழியாக இல்லாமல், ஆசிரியரின் பிறிதொன்றில்லாத மொழி வழியாக விவரிக்கப்பட்டிருந்தால், இன்னும் நுட்பமாக அமைந்திருக்கும். 


ரேமண்ட் கார்வரின் கதையான ‘அலாஸ்காவில் என்ன இருக்கிறது’  (What is in Alaska) நான் வாசித்த சிறந்த கதைகளுள் ஒன்று. கதைசொல்லியான ‘ஜாக்’ கிற்கு  ஒவ்வாத அலாஸ்காவில் பணி இடமாற்றம்  வருகிறது. அன்று காலையில் அவன் வாங்கிய பாதணி பொருந்தவில்லை. இருந்தாலும்  அணுக்க நண்பன் கார்ல் வீட்டிற்கு மனைவி மேரியை அழைத்து செல்கிறான். அங்கு ஒரு கொண்டாட்ட கணத்தில், பாதி திறந்த கதவு இடைவெளியில் மேரி , கார்லுடன்  நெருக்கமாக சீண்டி விளையாடுவதைப் பார்க்கிறான். அப்போது வீட்டிற்கு நடுவே, ஒரு பூனை இரத்தத்தில் தோய்ந்த ஒரு எலியை வாயில் கடித்து தரையில் போடுகிறது. அதன் நாக்கால் உயிருடன் இருக்கும் அந்த எலியின் உடல் முழுவதும் நக்கி எடுத்து ருசித்தபின் மறைகிறது. மொத்த வாசக கவனமும் குவியும் இந்த நிகழ்வில் ஜாக்கை எலியென்று பொருத்தினால், அவனை மொத்தமாக விழுங்கப்போவது என்ன? அலாஸ்கா பணியிட மாற்றமா? கார்ல் - மேரி உறவா? என்ற கேள்விகள் எழும். 


அவரின்  ‘சிறகுகள்’ (Feathers) என்னும் கதையும் பரவலான கவனத்தை பெற்றது. இதில் இரவுணவிற்காக  காதலர்கள் இருவர்,  ஒரு நண்பரின் வீட்டிற்கு செல்கிறார்கள்.  அங்கு  நண்பனின் மனைவி, கதைகூறியின் காதலிக்கு மயிலின் சிறகுகளை அன்பளிப்பாக அளிக்கிறாள். அதன்பின் காதலர்களின் வாழ்க்கை முன்னெப்போதுமில்லா வகையில் திசைமாறுகிறது. அந்த சிறகுகள்  என்ன அவளுக்களிக்கப்பட்ட வரமா இல்லை சாபமா என வாசகனை உள்ளிழுத்து கேள்வி எழுப்பும் அந்தக் கணம்தான் கதையின் மையம்.  இத்தகைய சிறந்த உலக, இந்தியச் சிறுகதைகள்  பெரும்பாலும் ஒரு நிகழ்வில் , ஒரு சில வரிகளில், அரிதாக ஒரே ஒரு சொல்லில் சென்று குவியும்.  வாசக கவனம் கூராக அங்கு குவிந்தபின் அந்த சொல், வரி, நிகழ்வு எழுப்பும் கேள்விகளுக்கு அந்தக் கதையிலேயே பல கோணத்திலான விடைகள் அமையலாம் அல்லது வாசகன் தன் கற்பனை மனதால் விரித்து  உணர்ந்தறியலாம் . ‘மாயநதி’ தொகுப்பின் பெரும்பாலான கதைகளில் ஒன்றிற்கு மேற்பட்ட மையங்கள் இருப்பதே , இவற்றை சிறுகதைகளுக்களான முயற்சி என எண்ண வைக்கிறது. 



இந்த தொகுப்பின் சிறந்த கதை வரிசைகள் என நான் கருதுவது, ‘ ராசாத்தியும் கலாராணியும்’ ,  ‘வயக்காடு’ , ‘கட்டுக்கழுத்தியம்மன்’’.  கதைக்கு வெளியே எதுவும் தேவையில்லாமல் நேரடியான கதை மொழிபின் மூலம் ஆசிரியர் தன் எண்ணத்தை வெற்றிகரமாக கடத்தியிருக்கிறார்.  ‘ ராசாத்தியும் கலாராணியும்’  கதையுடன் தமிழில்  ஒப்பிட்டு வாசித்து அதன் கருவை விரித்து உணரலாம் என எண்ண வைக்கிற கதைகள் கி.ராஜநாராயணனின் ‘குடும்பத்தில் ஒரு நபர்’ என்கிற கதையும், கந்தர்வனின் ‘தண்ணீர்’ என்கிற கதையும். நிலத்தில் தண்ணீர் உலர்வதன் தொடர்ச்சியாக, முன்பு நட்புடன் இருந்த,   மனித மனங்களும் உலர்ந்து வீழ்வதைக் காட்டுகிறது  . ‘வயக்காடு’ கதையில் அஞ்சலை, ராமசாமி வாழ்க்கையின் வாழ்வின் போக்கு மிகையில்லாமல் சித்தரிக்கப்பட்டுள்ளது.   சென்ற தலைமுறை பேணிய செல்வங்களின்  தொடர்ச்சிக்கு எந்த பொறுப்பும் ஏற்காமல்,  குற்றவுணர்வின்றி அள்ளி எடுத்து  அழிப்பதையே நோக்கமாக கொண்டிருக்கிறது இந்த தலைமுறை என விமர்சிக்கிறது. வாழும் வரை சுரண்டிய மனைவியை, தன் இயலாமையை மறைப்பதற்காக பலியிட்டு, பின் பூசை செய்வதை விவரிக்கும் கதை.   ‘கட்டுக்கழுத்தியம்மன்’ .  ஜெயகாந்தனின் கதைகளில் நாம் காண நேரும்  நேரடியான  காத்திரமான சமூகச் சாடலை நினைவூட்டும் கதை இது. 

‘மேதைகள் எழுதும் இலக்கியம்,  போதை தரும் ஒயின் போல. என் எழுத்துக்களோ வெறும் நீர். அனைவரும் அருந்தவது இந்த நீரைத்தான்’ - என்கிறார் மார்க் ட்வைன். நிறமில்லாத மாசில்லாத நீர்,  பிறவற்றுடன் பிணையும் போது, வேறு வறு  நிறத்தினை அடைகிறது.  பெருங்கடலாக விரிகையில் நீலமாகவும்,  திபெத் மலையின் உச்சியில் உறைந்து வெண்மையாகவும், காட்டின் நீர்த்தேங்கங்களில்  பச்சையாகவும் மாறுகிறது. ஒரு வாசகனாக,  நீரின்  இந்த நிறமாற்றத்தில் என் மனதிற்கு மிக்க உவகையானது,  செம்மண்காட்டில் விழுகையில் அது அடையும் செம்பழுப்பு நிறம்தான்.  உள்ளங்கையில்  குழித்து எடுத்த, அந்த செம்பழுப்பு ஈர நீரின், ஒரு கதுப்பாக  ‘மாயநதி’ தொகுப்பினை காண்கிறேன். 



சிவமணியன்

No comments:

Post a Comment