Search This Blog

Wednesday, 19 December 2018

எழுத்தாளர் பாவண்ணன் - “மாயநதி“ குறித்து.

அன்புள்ள கலைச்செல்வி

வணக்கம். 


நேற்றும் முந்தாநாளுமாக இரு தினங்களில் ’மாயநதி’ தொகுதியை தொடர்ச்சியாக உட்கார்ந்து படித்துமுடித்தேன். மனிதர்களை மிக்நெருக்கத்திலிருந்து எடுத்த படங்களின் தொகுப்பைப் புரட்டிய உணர்வை அடைந்தேன். ஈரமில்லாமல் இரக்கமில்லாமல் கருணையில்லாமல் மாறி தன்னை நிறுவ முனையும் மனிதர்கள் ஒருபுறமாகவும் இயலாமையோடும் இல்லாமையோடும் வதைபட்டு வாழ்வின் விளிம்பில் மரணத்துக்கு அருகில் தவித்துப் புலம்பும் மனிதர்கள் மற்றொருபுறமாகவும் நிறைந்திருக்க, இரண்டுக்குமிடையே உங்கள் மாயநதி ஓடுவதாக ஒருகணம் தோன்றியது. பெரும்பாலான கதைகளில் வறுமைச்சித்திரங்கள் மிகமிக இயல்பாக இருக்கின்றன. நம்பகத்தன்மை மிக்க உரையாடல்கள் அத்தகு சித்திரங்களுக்கு வலிமையளிக்கின்றன.

அப்பாவிடமிருந்து வயலைப் பிடுங்கிக்கொள்ள விதம்விதமாகப் பொய்களை அடுக்கி பெற்றவர்கள் மீது ஒருவித அழுத்தத்தை அளிக்கும் மகள்களின் உரையாடல்கள் ஒவ்வொன்றும் கத்தியைச் செருகுவதுபோல உள்ளது. ஒரு சொத்துக்காக பாசத்தை மறந்துபோகும் பிள்ளைகளை என்னால் கடந்துபோகவே முடியவில்லை. ஒருவித நடுக்கத்தை என்னை அறியாமல் உணர்ந்தேன். வயக்காட்டுக்குச் செல்லும் அப்பா திரும்பிவருவாரா என்பதை என்னால் உணரமுடியவில்லை. அவர் தன் மனைவியையும் மகளையும் இறுதியாகப் பார்த்துவிட்டுச் செல்லும் பார்வையில் உள்ள அழுத்தம் உறையவைத்துவிடுகிறது.  இத்தொகுதியின் மிகச்சிறந்த கதையாக என் மனத்தில் தங்கிய கதை ‘வயக்காடு’தான்.

ராசாத்தியும் கலாராணியும் இன்னொரு சிறந்த கதை. பொய்த்துப்போன விவசாயத்துக்கிடையே நிலபுலன்களின் வருமானத்தை இழந்து, வயிற்றுப்பாட்டுக்காக ஆட்டை விற்று, குடிதண்ணீருக்காக ஊற்றைத் தோண்டிவிட்டு நீர் ஊறிவருவதற்காகக் காத்திருக்கும் வாழ்க்கையை அச்சிறுகதை அழுத்தமாக உணர்த்திவிடுகிறது.  குளிப்பதற்கு நீரில்லாமல் புலம்பும் புருஷனின் அவஸ்தையைப் பார்க்க முடியாமல் காலை வேளையில் ஊற்றில் நீரெடுத்துவர ஆற்றங்கரைக்குச் சென்று பாம்பு கடித்து இறந்துபோகும் மனைவியின் சித்திரத்தை கடந்துபோக முடியவில்லை. 

விவசாய சங்கக் கூட்டத்தில் டீ கிடைக்குமென நம்பி நடக்கமுடியாமல் நடந்து சென்று ஏமாற்றத்தோடு வீட்டுக்குத் திரும்பி பேத்தி வீட்டிலேயே மூடியிருக்கும் பானையிலிருந்து சோற்றை எடுத்துப் போட்டுக்கொண்டு சாப்பிடும் பெரியாயியின் சித்திரம், ஏறித் தாழும் அலைகளென வந்து வந்து மறையும் நினைவுகளுக்கிடையில் வாழ்க்கையின் கடந்துபோன கணங்களைத் தொகுத்தபடி வாழ்க்கையும் மரணத்துக்குமிடையில் தவிக்கும் அம்சம் பாட்டியின் சித்திரம், பிழையான முடிவால் அனைத்தையும் இழந்துவிட்டு படுக்கையில் விழுந்து தனக்கு உதவி செய்ய அமர்த்தப்பட்ட பெண்ணின் அருகாமையை விரும்பி ஏற்றுக்கொள்ளவும் முடியாமல் வெறுத்து ஒதுக்கவும் முடியாமல் மனம் சலித்து குற்ற உணர்வில் அமிழ்ந்திருக்கும் கீர்த்தியின் அப்பா சித்திரம், வியாழக்கிழமை தோறும் பாபாவின் படத்தை வண்டியில் வைத்து  ஊர் நடுவில் வலம்வந்து தன் வயிற்றுக்கு வழிதேடிக்கொள்ளும் குடும்பத்தின் சித்திரம் என இன்னும் சில சித்திரங்களையும் என் நெஞ்சில் பதியவைத்துக்கொண்டேன்.

தீராத வறுமைக்கிடையில் கூட மனம் முழுதும் பொறாமை நெருப்பை இந்த மனிதர்களால் எப்படி சுமந்தபடி இருக்கமுடிகிறது. இவர்களைப் பார்க்கும்போது வருத்தமாகத்தான் இருக்கிறது. நாக்கைக் கட்டுப்படுத்திக்கொண்டால் எல்லாரோடும் இனிதே பழகிவிடலாம். ஆனால் யாரும் எந்தக் காரணத்துக்காகவும் நாக்கைக் கட்டுப்படுத்திக்கொள்ள விரும்பவில்லை. நாக்கையும் தன் சொற்களையும் தன் பலமென நம்புகிறார்கள்.  கலவையான இந்த மன ஓட்டத்தை மிக எளிதாக நீங்கள் சொற்களில் வடித்திருக்கிறீர்கள். அது ஒரு அபூர்வமான திறமை என்றே எனக்குத் தோன்றுகிறது. 

சமீபத்தில் நான் வாசித்த நல்ல தொகுப்பு இது. 



வாழ்த்துகள்

No comments:

Post a Comment