அன்பின் கலை நலமா!
நேற்று இரவு இறங்கியது மாய நதியில், இப்பொழுதுதான் மனதும் உடலும் ஈரமாக குளிர்ந்து கரையேறி இருக்கிறேன் அருமையான கதைகள் அம்பையின் முன்னுரையை விட உங்களின் தன்னுரை மிகவும் அருமையாக இருந்தது. இந்த புத்தகத்தில் உள்ள அனைத்து கதைகளிலும் ஒன்றே ஒன்றை மட்டும் நான் அகநாழிகையில் முன்பே வாசித்திருக்கிறேன்.
ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தரம்.அருமணிகள் நிறைந்த ஒரு அபூர்வ ஆபரணம் போலிருந்தது தொகுப்பு முழுவதும் கதைகள் அனைத்துமே, விளிம்பு நிலை மனிதர்களைப் பற்றியே பேசுகிறது கம்பராமாயணக்கதையையும் மாயநதியில் மூழ்கி இருக்கும் ஒருவ்னயும் தவிர.வயக்காட்டு மனிதர்களை சிமெண்ட் பாலூற்றி பளபளக்கும் திண்ணையை தன்னந்தனியே முதுமையை நகர்த்தி நகர்த்தி சாவிற்கு காத்திருக்கும் பெருசுகளை பணி ஓய்வு பெறும் நடுத்தர மக்களை, கடைசி ஆட்டுக்குட்டிகளையும் பாய் கடைக்கு விற்றுவிட்டு கட்டுவிரியன் தீண்டி இறந்து போகும் பெண்ணை ,கருஞ் சாந்தாய் வழியும் ஆலைக் கழிவு நீரை குடிக்கும் மனம் பிசகியவளை, அகதிமுகாம்களில் இருப்பவர்களை உடலுக்கும் மனதிற்கும் இடையே நடக்கும் போராட்டத்தில் இருக்கும் ஒரு அருட்தந்தையை, கௌரவக் கொலைகளை, தண்டவாள ஜல்லிகள் குருதி சிதறடித்தபடி காதலினால் இறந்த இளவரசனை, கௌசல்யாவை, சங்கரை, குளிக்காமல் கொள்ளாமல் சாய்பாபாவோடு சம்பாதிக்க கிளம்பும் குடும்பத்தை, கையேந்தி பவனை, மாநகராட்சி குளியலறையில் காத்திருந்து குளிப்பவர்களை, பலவருட பகையை பசியில் மறந்தவளை இப்படி அன்றாடம் நாம் அனைவரும் சந்திக்கும் எளிய தளத்தில் இயங்கும் மனிதர்களை கண்முன்னே கொண்டுவந்து நிறுத்துகறீர்கள் ஒவ்வொரு கதையிலும் ஒவ்வொரு பக்கத்திலும்
பல இடங்களில் நுண் விவரிப்புகள் ஆச்சரியம் ஊட்டுகின்றன கட்டுக்கழுத்திஅம்மன் சிலையில் மடிப்புகளில் இருக்கும் குளவிக்கூடுகளைப்போல கூட்டிக்கொண்டு சுத்தம் செய்துகொண்டு, தேவாலயத்தில் அந்த பெண் பேசிக் கொண்டிருப்பது ,சோற்றுக்கும்பா அதுகுட்டி போட்டது போல இருக்கும் கடிச்சுக்க கும்பா, அழகு அழகு முகத்தின் வரிகளுக்கிடையே சிரிக்கும் அம்சம் பாட்டி இப்படி சொல்லி கொண்டேபோகலாம் கலை
பெண் படைப்பாளிகள் பெண்மையை பெண் எனும் வட்டத்தை தாண்டி எழுதுவது அரிதாகிக் கொண்டே வருகிறது ஏன் உங்களை ஜெ முதன்முதலாக தளத்தில் அறிமுகப்படுத்திய போது கூட பெண் எழுத்து என்னும் புள்ளியைத் தாண்டி எழுதும் ஒரு படைப்பாளி என்றுதான் அறிமுகப்படுத்தி இருந்தார் அது எத்தனை சரி என்பதை மாய நதி எங்களுக்கு காட்டிக்கொண்டிருக்கிறது கலை
எனக்கு வயக்காடு மிகவும் பிடித்திருந்தது அனைத்தையும் விட!
இன்னும் கூட சுமதி கத்தரிக்காய் நறுக்கிக் கொண்டிருந்தாள் தோள் பையை மாட்டிக்கொண்டு பஸ்ஸில் பிரயாணம்செய்து கொண்டிருந்தாள் மேனேஜர் இடுப்பை கிள்ளினார் இப்படியேதான் தொடங்குகிறார்கள்.பெண்கள் எழுதத்துவங்கினால் சமீபத்தில் நடந்த ஒரு சிறுகதைப் பட்டறையில் கூட நான் மாணவிகளிடம் இதைச் சொன்னேன் அனைவரும் பெண் என்னும் வட்டத்தைத்தாண்டி எழுத முன்வரவேண்டும் என்று. நீங்கள் குறிப்பிட்டதைப் போல’ நீங்க எழுதிய கதைகளை அனுப்புங்கள் மிஸஸ் படிப்பாங்க ‘என்றுசொன்னாரில்லையா? அதையெல்லாம் பொய்யாக இன்னும் நூறு நூறு கலைச்செல்விகள் பிறந்து இதுபோல பலபடைப்புகளை படைக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
இரண்டு மகள்களுக்கும் எனது அன்பு
லோகமாதேவி
No comments:
Post a Comment