Search This Blog

Friday, 31 May 2019

குமுதம் தீராநதி நேர்காணல் ஜுன் 2019

1)         கலைச்செல்வியைப் பற்றிய அறிமுகம் குமுதம் தீராநதி வாசகர்களுக்காக..?


வாசிப்பின் வழியாகவே எழுத்துக்கு வந்தேன். மௌனித்திருப்பதையும், தனிமை நாடுவதையும் நான் விருப்பமாக கொண்டிருப்பதால், ஒருவேளை எழுதுவதை விரும்பியிருக்கலாம். எழுத தோன்றும் நேரங்களிலெல்லாம் எதையாவது எழுதுவதற்கு எனக்கென நோட்டுகளையும் காகிதங்களையும் மட்டுமே அப்போது கைக்கொண்டிருந்தேன். பிறகொரு சமயம், தினமணியில் சிறுகதை போட்டி அறிவிப்பு வெளியாகியிருந்தது.  அது 2012ஆம் வருடம். சம்பிரதாயமாக கரு, சம்பிரதாயமான தலைப்பையிட்டு அனுப்பி வைத்தபோது, அது இரண்டாம் பரிசுக்குரிய கதையாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது.  முதல் கதையே பரிசு பெற்றதும், நான் பிறந்து வளர்ந்த நெய்வேலி நகரில், எனக்கு அதற்கான பரிசு வழங்கப்பட்டதும் கொஞ்சம் நெகிழ்வுதான்.    பின்பு தொடர்ச்சியாக இதுவரை 104 சிறுகதைகள் பிரசுரமாகியுள்ளன.

நாவலை பொறுத்தவரை கல்லுடைக்கும் தொழிலாளிகளின் பிரச்சனைகளை மையப்படுத்திய “சக்கை“ என்பதுதான் என்னுடைய முதல் படைப்பு. அந்நேரம் ஆறேழு சிறுகதைகள் மட்டுமே எழுதியிருந்தேன். நாவல் எழுத தொடங்கியபோது கூட அதன் பிரசுரிப்பு சாத்தியம் குறித்து என்னிடம் எந்த முன்முடிவும் இருந்ததில்லை.  கணினிப்பிரதியாக திரு.வி.நா.சோமசுந்தரம் அவர்களிடம் இதை அளித்திருந்தேன். அவர் அதனை உடனடியாக இரா.காமராசு அவர்களுடன் பகிர்ந்துக் கொள்ள, என்னஏதென்று புரிவதற்கு முன்பே, இந்நாவலை நியூ செஞ்சுரி புத்தக நிலையம் நாவலாக்கிக் கொடுக்க, இவ்வாறாகதான் நான் இலக்கியஉலகிற்குள் அறிமுகமானேன்.

தேடல்களில் தீராதவெளியில், இலக்கியத்தை நிரப்பிக் கொள்ள பிடித்திருக்கிறது.  இயல்பாக எழும் எண்ணங்களின் மீது என் எழுத்தை கட்டமைத்துக் கொள்கிறேன். அதை “இசங்களுக்குள்“ அடக்கி விடவோ, அடங்கி விடவோ விரும்புவதில்லை.  அதேசமயம், எப்படியானவற்றுள் என்னை அடக்கிக் கொள்வது என்ற திட்டமும் என்னிடமில்லை.

2)         தீராநதி: இது வரைவெளி வந்த நாவல்கள்?சிறுகதைகள்..?

சக்கை என்ற எனது முதல் நாவலைத் தொடர்ந்து புனிதம், அற்றைத்திங்கள் என்ற இரு நாவல்களும், வலி, இரவு, சித்ராவுக்கு ஆங்கிலம் தெரியாது, மாயநதி என்ற நான்கு சிறுகதைத் தொகுப்புகளும் இதுவரை வெளியாகியுள்ளன.  பத்திரிக்கைகளிலும், இணைய இதழ்களிலும் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன். தற்போது நாவல் ஒன்றும்  எழுதிக் கொண்டிருக்கிறேன்.

3)         தீராநதி: சக்கை என்கிற முதல் நாவல் வழியே அடிமட்ட தொழிலான கல் தொழிலை மையப்படுத்தி எழுதியிருக்கிறிங்க. நம் சமூக சூழலில் இத்தகு அடிநிலை தொழிலாளர்களின் நிலை மாறியுள்ளது என சொல்ல முடியுமா?

நம் சமூகம் சாதிகளால் ஆனது. மதம் இனம் என எல்லாவற்றிலும் பிளவுப்பட்டுக் கொண்டு போவதே, இந்நாளில், அதற்கான விருப்பமாக இருக்கிறது.  இதனடிப்படையில், இங்கு திட்டமிட்டும் எதேச்சையாகவும் கட்டமைக்கப்படும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அடிநிலை தொழிலாளர்களின் நிலையை மாற்றி விடாமல், அந்நிலைப்பாட்டில் தொடர்ந்து இருத்தி வைக்கவே விரும்புகின்றன.

4)         தீராநதி: எந்த வகை இலக்கியங்கள் மீது ஆர்வம் அதிகம்?

வாசிப்பை பொழுதைபோக்கும் பாணியில் என்னால் அணுக முடிவதில்லை. அது ஒருவித தேடல். தீராத்தவிப்பின் மாறா வெளிப்பாடு. தீவிர இலக்கியங்களையே வாசிக்க பிடித்திருக்கிறது.

5)         தீராநதி: பிரசவவெளி சிறுகதையில், பெண் மொழி வெளிப்பட்டுள்ளதாக பலரும் விமர்சனம் வைத்துள்ள நிலையில் அந்த பிரசவவெளி கதையில் கதையாசிரியர் வெளிப்படுத்திய பெண்ணியம் என்ன?

பிரசவவெளி சிறுகதையில் பெண் மொழி வெளிப்பட்டுள்ளதாக பலரும் விமர்சனம் வைத்துள்ளனர்.. என்று நீங்கள் கூறுவதே எனக்கு செய்திதான். இச்செய்யுளில் பயின்று வரும் கருத்து யாது என்பது போன்ற கருத்துகள் உள்ளபடியே சோர்வளிக்கிறது.

இச்சமுதாயம் முழுக்கவும் ஆண்வயமானது. அது நிறைய இனங்களில், சுலபமானவற்றை தனக்கும், சுலபமல்லாதவற்றை பெண்களுக்குமாக பிரித்து வைத்து “சுமூகத்தீர்ப்பு“ வழங்கியுள்ளது. அவ்வாறான ஒதுக்கீடுகளை, அது மிகவும் தந்திரமாக செயல்படுத்துகிறது. சிலவற்றை அடக்குமுறையாலும், சிலவற்றை அதிகாரத்தாலும், சிலவற்றை அன்பாலும், சிலவற்றில் புனிதமேற்றியும் தம் ஒதுக்கீடுகளுக்கு நியாயம் கற்பிக்கிறது. அப்படியான ஒரு தீர்ப்புதான் தாய்மையின் மீது ஏற்றப்பட்ட புனிதமும். ‘தாய்மையடையாத பெண் முழுமையானவள் அல்ல. தாய்மை பெண்களுக்கு இயற்கை வழங்கியிருக்கும் கொடை, தாய்மை தியாகவடிவானது’ என்றெல்லாம் அதன்மீது செய்யப்படும் செயற்கை ஜாலங்களை கடந்து பிரசவத்துக்கு பின்னிருக்கும் உடல் மற்றும் மனத்தின்பாடுகளை அக்கதை வெளிப்படுத்துகிறது.

6)         தீராநதி: அந்த கதையைப் பொறுத்தவரை பிரசவத்திற்கு பின்பான உறவுகளின் விசாரிப்புகளை பாசம் என நினைத்த சூழலை அப்படியே மாற்றி, அதுவும் பெண்களுக்கான உளவியலை சோதிக்கிறது என்ற நுட்பம் மிகவும் அருமை. குழந்தை கொடுக்க பால் இருக்கு இல்ல. இது வெறும் கரிசனையின் குரலாக மட்டும் இல்லாமல் பெண்ணின் மாண்பை குலைக்கும் கூறாக எப்படி வெளிப்படுத்தினிங்க?

பெண்ணின் மாண்பு என்ற பதமே பொய்யான கற்பிதம் என்கிறேன் நான். குழந்தை பெற்ற பெண், உடல்ரீதியாக கசங்கி போயிருப்பாள். மனரீதியாகவும் அவள் குழம்பிப் போக வாய்ப்புள்ளதாக மருத்துவம் கூறுகிறது. குழந்தை ஈன்றவுடன், அவளின் உடல் உபாதைகள் நின்று விடுவதில்லை. பிரசவவலி என்பது அந்த நேர வலியை மட்டுமல்ல.. பின்தொடரும் வலிகளையும் உட்படுத்தியதுதான். இவ்வுடலையும், சோர்ந்திருக்கும் மனதையும் சுமந்துக் கொண்டு, விருந்தினர்களுக்கு, குறிப்பாக கணவன் வீட்டை சேர்ந்தோருக்கு, புன்னகையாலாவது அவள் பதிலளிக்க வேண்டும். வழுக்கிக் கொண்டோடும் புத்தம்புது சிசுவுக்கு பாலுாட்ட வேண்டும். சொல்லப்போனால், யாதொன்றுமற்று, நம்மை மட்டுமே நம்பிக் கொண்டு வரும் அக்குழந்தையின் மீது  பாசத்தை விட அக்கறையும் பொறுப்புமே முதலில் தோன்றும். உறவுகள் சூழ்ந்திருக்கலாம். ஆனால், அசத்திப்போடும் உடலின் வலியை யாரும் வாங்கி விடுவதில்லை. பலவீனப்பட்ட இந்நிலையை “தாய்மை“ என்ற கட்டுக்குள் அடைக்கும்போது, இந்நோய்மைகளை மறுக்க  பெண்களுக்கென்று ஏதேனும் உரிமை இருப்பதாக எனக்கு தோன்றவில்லை. தாய்மையை சினிமாக்கள் போல வேறேதும் இத்தனை கொச்சைப்படுத்தியதுமில்லை.

7)         தீராநதி: பிரசவம்   பெண்களை குடும்ப அடிமைத்தனத்தில் முடக்கி போடுகிறது என்கிற கூற்றை எழுத்தாளராக எப்படி பார்க்கிறிங்க கலைச்செல்வி?

இயற்கை அப்படியான ஒரு அமைப்பை பெண்களுக்கு அளித்திருப்பது பெரும் பிழையுமல்ல. அதே நேரம் கொண்டாட்டமுமல்ல. ஆனால், தாய்மையின் பொறுப்புகள் பெண்களை முடக்கிப்போடுவதென்னவோ உண்மைதான்.

8)         தீராநதி: பெண்களின் வாழ்க்கை வலிகளை, போராட்டங்களை ஆண் எழுத்தாளர்களால் பெண் மன நிலையோடு எழுதி விட முடியுமா?

இந்த கேள்வி நான் பெண் என்பதால் எழுப்பப்பட்டிருக்கலாம்.  சட்டென்று நிகழ்ந்து முடிந்து விடும் நிலையற்ற வாழ்வில் வலி என்பதை பெண்களோடு மட்டும் சம்பந்தப்படுத்தி பார்க்க வேண்டியதில்லை. உலகம் பெண்களை சுற்றி மட்டுமே சுழலுவதுமில்லை. சொல்லப்போனால், வலி, போராட்டம் என்பது அவரவர் கொள்ளும் மனோபாவத்தை பொறுத்ததே.
என்னை பொறுத்தவரை எழுதுவதற்கான எத்தனையோ வெளிகள் இன்னும் தொடப்படாமலேயே காத்துக்கிடக்கின்றன. பெண் எழுதுகிறார் என்றால், அவர் பெண்களை குறித்தே எழுத வேண்டும் என்ற சமுதாயத்தின் பொதுபுத்தியை கடந்து விடவே விரும்புகிறேன். 
இலக்கியத்தை பொறுத்தவரை, உணர்வுரீதியாக உள்வாங்க முடிந்த எவரும் எதையும் எழுதலாம் என்றாலும், அனுபவரீதியாக, நீங்கள் குறிப்பிடும் வலிகளை குறித்து, பெண்கள் எழுதுவது ஒரு நுாலிழையளவுக்கு நுணுக்கமானதாக இருக்கலாம்.

9)         தீராநதி: ஆண் எழுத்து, பெண் எழுத்து என்கிற வேறுபாடு தேவை தானா?

நிச்சயமாக தேவையில்லை. ஆனால், ஆண்கள் இதை துாக்கி சுமப்பது எரிச்சலுாட்டுகிறது. அவர்கள் யார் சட்டாம்பிள்ளைகள் என்றாலும், சமுதாயம் அவர்களையும் உள்ளடக்கியதுதானே? இலக்கியத்தை அவர்கள் பொதுமைப்படுத்துவதில்லை. படித்த நுால்களின் பட்டியல், எழுத்தாளர்களின் பட்டியல் என்று ஆளுக்காள் சமுதாய வலைத்தளங்கள் உட்பட கிடைக்குமிடமெங்கும் பட்டியலிட்டு பகிர்ந்து விடுகிறார்கள். தீவிரமாக எழுதித்தள்ளும் ஒருவர், என்னுடைய சிறுகதைத்தொகுப்பொன்றை தான் வாங்கியிருப்பதாகவும், அதை அவரது மனைவி வாசித்து விட்டு அது குறித்து என்னிடம் பகிர்ந்துக் கொள்வார் என்றும் சொன்னார். அதாவது பெண்ணெழுத்து, ஆண்கள் வாசிக்க தகுதியற்றது என்ற முன்முடிவிலேயே அவர் இயக்கப்பட்டிருக்கிறார். தமிழ்ச்சூழலில், எழுத்தாளர்கள், விமர்சகர்களாகவும் ஆகி விடுவதுண்டு. இவர்கள் சுட்டும் எழுத்துக்காரர்கள், எவ்வகையிலாவது அவர் குழுவைச் சார்ந்தவராகவோ அல்லது அவருக்கு வேண்டப்பட்டவராகவோ இருந்து விடவே அதிகம் வாய்ப்புள்ளது.  பெண் எழுத்து என்றாலும், பெண்ணாக இருப்பினும்.. இப்படியான அடைமொழிகளோடு அவர்களிடமிருந்து எழும் குரல்களை நான் வெறுக்கவே செய்கிறேன். இலக்கியம் ஒரு சார்புடையதன்று. அது எல்லா தளங்களிலும் இயங்க வேண்டியுள்ளது. அனாவசியமான கூச்சலும் அவசியமற்ற ஆரவாரமுமாக படைப்பாளிகள் இட்டுக் கொள்ளும் சண்டைகள் அவர்களின் படைப்பின் மீதான மதிப்பை குறைத்து விடுகிறது.

10)      தீராநதி: உடல்மொழியை தான் பெண்கள் தூக்கி எழுதுகிறார்கள் என்கிற விமர்சனத்தை என்ன சொல்லுறிங்க?

ஓரளவுக்கு ஒப்புக் கொள்கிறேன். அதேநேரம் தேவைதான் அளிப்பை நிர்ணயம் செய்கிறது என்பதையும் மறந்து விடக்கூடாது. பெண் தன் உடலை துறப்பது என்பது அவளுக்கு முன்னிறுக்கும் சவால். அதை எழுதி கடக்க எண்ணியதிலும் பிழையில்லை. அதேநேரம் இவை குறைந்து வருவதும் ஆறுதல்தான்.

11)      தீராநதி: கல்வித்தரத்திலும், பொருளாதார நிலையிலும் மேம்பட்ட பெண்கள் தற்கொலை முயற்சிக்கு போவதற்கான காரணம்?

தற்கொலை என்பதை பால்பேதத்தில் அணுக முடியாது. படித்த பெண்கள் தற்கொலை செய்துக்கொள்ள சமுதாயமும் முக்கிய காரணமே. கல்வியில் ஆணை விட உயர உயர செல்லும் பெண், திருமணம் என்ற அமைப்பின் மூலம் பலவீனப்பட்டுப் போகிறாள். பணிச்சூழலில், துடிப்பும் அறிவுமான பெண்களை, ஒழுக்க வளையத்துக்குள் அளவீடு செய்து பலவீனப்படுத்தும் நிகழ்வுகள் நிகழாத இடம் ஏதுமில்லை. நுாற்றாண்டுகளாக அடைப்பட்டிருந்த வெளி, சட்டென்று நுழையும் காற்றிலும் வெளிச்சத்திலும் தடுமாறி போவது இயல்பே. அத்தடுமாற்றத்தை தங்களின் பலவீனமாக உணரும் பெண்கள் தற்கொலையை தீர்வாக எண்ணிக் கொள்கிறார்கள் என்று கருதுகிறேன். அதேநேரம் இத்தடுமாற்றத்தின் இடைவெளிக்குள் அடிப்படைவாதம் புகுந்து விடும் என்பதை பெண்கள் மறந்து விடக்கூடாது.

12)      தீராநதி:விழிப்புணர்வுகளும், பகுத்தறிவுகளும் அதிகமாக வெளிப்படும் இக்கால சூழலில் தான் பெண்களுக்கான வன்முறைகளும் அதிகமாக நடந்தேறிக் கொண்டிருக்கிறது. இதற்கான காரணம் என்னவென தோன்றுகிறது?

மீண்டும் அந்த கற்பிதத்திற்கே வருகிறேன். விழிப்புணர்வு என்பது குறித்து சமுதாயத்தில் நிலவும் கருத்து சரியான புரிதலுடன் இருப்பதாக நான் கருதவில்லை. இது மிகவும் பிற்போக்கான, அடிப்படைவாதத்தையே முன்னெடுக்கிறது. உடல் குறித்த விழிப்பு, கற்பை பேணுவதில்தான் கரை சேருகிறது. ஆண் பிள்ளைகளை மதர்த்தப்போக்குடன் வளர்த்தெடுப்பதில், பெண்களின் பங்களிப்பு ஆண்களை விட அதிகமே. தாயோ, தமக்கையோ, தங்கையோ, காதலியோ, மனைவியோ, மகளோ யாராக இருப்பினும், பெண் உறவுகள் மீது ஆண் கொள்ளும் “பாதுகாத்தருளும்“ உணர்வின் நீட்சியே வன்முறைக்கானதும் கூட.  அறம்சார்ந்த விழுமியங்கள் சரிந்து வருவதில், பெண்களை மீண்டும் இருளறைக்கு அனுப்பி விடும் அபாயமும் கலந்திருக்கிறது.

13)      தீராநதி: திருவண்ணாமலையில் என் சிறகுகள் என்கிற பெண் எழுத்தாளர்களர்களின் கூட்டமைப்பு நிகழ்வு நடந்த போது, எழுத்தாளர் பரமேஸ்வரியோடு எழுத்தாளர் ஜெயமோகனின் படைப்புகள் பற்றி விமர்சனம் நிகழ்த்திய போதே ஜெயமோகனின் எழுத்து ப்ரியை என்பது உணர முடிந்தது. ஜெயமோகனின் எந்த படைப்பு கலைச்செல்வியை தொட்டது?

இலக்கியம் என்பது ஒரு அறிவார்ந்த தேடலும்தான். நம் தேடலோடு ஒத்திருக்கும் படைப்புகள் நம் மனதை நிறைப்பது ஒன்றும் புதிதல்ல. அவரின் “காடு“ வழியாகவே அவரை கண்டடைந்தேன். விரிந்து பரந்திருக்கும் அவரின் படைப்புவெளியில் நிறையவே என்னை கவர்ந்திருக்கின்றன.

தீராநதி: பெண் எழுத்தாளர்களின் படைப்புகளை கண்டமேனிக்கு விமர்சிக்கும் படைப்பாளர், பெண் எழுத்தாளர்களை ஜெயமோகன் மதிப்பதேயில்லை என்கிற விமர்சனம் குறித்து உங்கள் கருத்து?

ஆழமான நுட்பமான பெண் படைப்பாளுமைகளை பாராட்டவும் அவர் தயங்கியதில்லை.  ஆஷாபூர்ணாதேவியையும் குர்ரதுலைன்ஹைதரையும் அவர் வழியாகவே நான் கண்டடைந்தேன். மஹாசுவேதாதேவி மற்றும் நம் அம்பையின் சில படைப்புகளிலும் பெண்ணெழுத்துகளிலும் பிரச்சாரத்தொனி தென்படுவதாக அவர் விமர்சித்துள்ளார்.  ஒடுக்கப்படும் வெளிகளை, வெளிச்சத்திலிடுவது என்பது காலத்தின் தேவை என்பதை யாரும் மறுக்கவியலாது.

14)      தீராநதி: சுதந்திரமான எழுத்தை வெளிப்படுத்துகிறேன் என சொல்ல முடியுமா?

தடைகள் இல்லாமலில்லை. ஆனால் இப்போதைக்கு, ஒரளவு சுதந்திரமாக செயல்படுகிறேன் என்றே கருதுகிறேன். 

15)      தீராநதி: இலக்கிய உலகில் பெண்களுக்கான பங்களிப்பு எப்படி இருக்கிறது என்பதை கலந்துக்கொண்ட நிகழ்வுகளிலிருந்து சொல்ல முடியுமா?

வாசிப்புப் போதாமை. அதிலிருந்துதான் எழுத்திற்கான போதாமை ஏற்படுவதாக தோன்றுகிறது. இங்கு இலக்கியம் என்பது குறுங்குழுக்களுக்குள் குறுகிக்கிடக்கிறது. குறுங்குழுவாசிகள் ஒருவரையொருவர் புகழ்ந்துத் தள்ளிக் கொள்கின்றனர்.  தெளிவான தீர்க்கமான விமர்சனம் என்ற ஏதொன்றும் பெரும்பாலும் இங்கிருப்பதாக தோன்றவில்லை. வேண்டப்பட்டவரின் படைப்பு, வேண்டப்படாத குழுவினை சேர்ந்த படைப்பு என்பதாகவே பெரும்பாலும் இங்குள்ள விமர்சனப்போக்கு அமைந்துள்ளது. சுயதம்பட்டங்கள், சுய விளம்பரங்கள் இவற்றின் வழியே தங்களை முன்னிறுத்துவதை விட, படைப்பின் வழியே முன்னிறுத்திக் கொள்ளலாம். இது பெண்களுக்கும் பொருந்தும்.

தீராநதி: கலைச்செல்வியின் படைப்புகள் எவையெல்லாம் கல்லூரித்தளங்களில் பாடப்புத்தகமாக அமைந்திருக்கிறது?

நேரு மெமோரியல் கல்லுாரி மற்றும் பிஷப்ஹீபர் கல்லுாரி, திருச்சியில் என் நாவல்கள் பொதுத்தமிழ் பிரிவில் பாடமாக்கப்பட்டுள்ளது.

தீராநதி: தற்போது வெளியான அற்றைத்திங்கள் நாவலின் மையம்?

வளரும் நாடுகளில் எதேச்சையாகவும், திட்டமிட்டும் அழிக்கப்படும் காட்டு வளங்களின் மீதிருக்கும் குறைந்தப்பட்ச அக்கறை கூட அங்கு வாழும் பழங்குடியினரின் மீது காட்டாத அதிகாரத்தின் அலட்சியத்தை மையப்படுத்துகிறது “அற்றைத்திங்கள்“.

தீராநதி: இலக்கியம் கொடுத்த விருதுகள்?

எனது “சக்கை“ நாவலுக்கு ‘தமிழ்நாடு கலைஇலக்கிய பெருமன்ற விருதும்’, ‘திருப்பூர் தமிழ்ச்சங்க விருதும்’ கிடைத்தது. வலி சிறுகதைத்தொகுப்புக்கு ‘கவிதை உறவு’ பரிசும், இரவு சிறுகதைத்தொகுப்புக்கு ‘பாரதி கலை இலக்கிய பேரவை’ பரிசும், ‘நாங்கள் இலக்கியகம் அமைப்பின்’ பரிசும் கிடைத்தது. புனிதம் நாவலுக்கு ‘புதுக்கோட்டை புத்தகக்கண்காட்சி விருது’ கிடைக்கப்பெற்றது. தற்போது வெளியான மாயநதி தொகுப்புக்கு “தாழ்வாரம்“ அமைப்பு சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கான விருதளித்தது. கணையாழியில் சிறந்த சிறுகதைக்கான விருது, திருப்பூர் அரிமா சங்க விருது போன்ற விருதுகளோடு 2017 ஆண்டுக்கான இலக்கிய சிந்தனை விருதை கணையாழியில் வெளியான எனது சிறுகதை “அலங்காரம்“ பெற்றது. போடிமாலன் பரிசுப்போட்டியில் தொடர்ந்து மூன்றாண்டுகள் என் சிறுகதை முதல் மற்றும் இரண்டாவது பரிசுகளை வென்றது. கிழக்கு பதிப்பகம் நடத்திய சிறுகதைப் போட்டியில் இரண்டாம் பரிசு, தினமணி நெய்வேலி புத்தகக்கண்காட்சி 2012 இரண்டாம் பரிசு, தினமணி நெய்வேலி புத்தகக்கண்காட்சி 2013ல் முதல் பரிசு, சிகரம் பரிசுப்போட்டியில் முதல் பரிசு மற்றும் பற்பல சிறுகதைக்களுக்காக பல பரிசுகளையும் பெற்றிருக்கிறேன்.

***

No comments:

Post a Comment