அன்றைய தினம் இரண்டாம் உலகப்போரில் ஜப்பானியர்கள் நேசநாடுகளிடம் சரணடைந்த இரண்டாவது ஆண்டு நினைவுநாளுக்கு முந்தைய நாள். பிரிட்டிஷ் இந்திய அரசாங்கத்தின் முன்னாள் சட்ட ஆலோசனை மன்றத்தின் உயர்ந்த விதானம் கொண்ட அவ்வரங்கு விழாவுக்கான அலங்கரிப்பில் சிறப்பாக ஒளியூட்டப்பட்டிருந்தது. பிரிட்டிஷ் வைஸ்ராய்களின் படங்கள் இருந்த சட்டகங்களிலெல்லாம் தேசியக்கொடிகள் இடம் பெற்றிருந்தன. இந்திய பிரதிநிதிகள் அடங்கிய அரசியலமைப்புச் சபையின் விசேஷக்கூட்டத்திற்கு முன்னதாக இரவு பதினோரு மணிக்கு வந்தேமாதரம் பாடலுடன், சுதந்திரப்போரில் உயிர் தியாகம் செய்தவர்களுக்கு செலுத்தப்பட்ட இரண்டு நிமிட அஞ்சலிக்கு பிறகு விழா தொடங்கியிருந்தது. பாடலுக்கும் கொடி வழங்கலுக்குமிடையே நடந்த சொற்பொழிவுகளின் இறுதியில் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு உணா்ச்சிப்பூர்வமாகவும் சொல்நயம் மிக்கதாகவுமான உரையாற்றினார்.
பதினேழு ஆண்டுகளுக்கு முன்பும் இம்மாதிரியான கொண்டாட்ட நிகழ்வு நடந்திருந்தது. அது தேசியவாதிகளின் கனவுகளுக்கு தீவிர வேகம் கொடுப்பதோடு பிரிட்டிஷாரை அதிகாரத்தை கைவிட வற்புறுத்தும் நோக்கில் சுயராஜ்ஜியம் அல்லது முழுமையான சுதந்திரம் என்ற கோரிக்கையை முன் வைத்து லாகூரில் நடைப்பெற்ற காங்கிரஸ் வருடாந்திர மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டிருந்தது. அம்மாநாட்டில்தான் நேரு, காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். அறிவுத்திறனும் நாவன்மையும் அந்நிய விவகாரங்கள் குறித்த ஞானமும் இளைஞர்களை கவர்ந்திழுக்கும் ஆற்றலும் அவருக்கிருந்தன.
“நள்ளிரவை குறிக்கும் மணியடிக்கும்போது,
உலகம் உறங்கும்போது, இந்தியா வாழ்வுக்கும் விடுதலைக்குமாக
விழித்து உயிர்த்தெழும். இது வரலாற்றில் அபூர்வமாக மட்டுமே வரும்
நேரம். பழமையிலிருந்து புதுமைக்கு அடியெடுத்து வைக்கும் நேரம்,
ஒரு யுகம் முடிந்த நேரம், நீண்டகாலமாக ஒடுக்கி
வைக்கப்பட்டிருந்த தேசத்தின் ஆன்மா வாயைத் திறக்க, வாய் திறக்கும்
வாய்ப்பைக் கண்ட நேரம்” உள்ளரங்கில் இவை நேருவால் பேசப்பட்டபோது
வெளியே மக்கள் கட்டுக்கடங்காத உற்சாகத்திலிருந்தனர். அவர்கள் காவலை மீறி
நாடாளுமன்றக்கட்டடத்தின் கதவுகளில் முற்றுகையிட, அந்த கனமான கதவுகள் வேறு
வழியின்றி இழுத்து மூடப்பட்டன. நேரம் நகர்ந்து ஆகஸ்ட் மாதத்தின் பதினைந்தாம்
தேதிக்குள் நுழைந்திருந்தது. அது 1947 ஆம் வருடம்.
காந்தி தனது “யங் இந்தியா“ பத்திரிக்கையில் அந்த நாள்
எவ்வாறு அனுசரிக்கப்பட வேண்டும் என்பதை பற்றி விரிவாகவே எழுதியிருந்தார். தேசியக்கொடியேற்றத்துடன்
தொடங்கும் அந்நாளின் பிற நேரத்தை நுால் நுாற்பது, தீண்டாதாருக்கு
சேவை செய்தல், இந்து முஸ்லிம் ஒற்றுமை, மது விலக்குப்பணி என வகுத்துக் கொண்டு அவற்றை தனித்தனியாகவோ சேர்ந்தோ செய்ய
வேண்டும். சுதந்திரமும், அவரவர் உழைப்பின் பலனை அவரவரே அனுபவிப்பதும்
மக்களுடைய மாற்றமுடியாத உரிமை என்று உறுதி செய்து கொள்ளும் சபதத்தை அனைவரும் ஏற்க வேண்டுமென்றும்
கூறியிருந்தார். அன்றைய தினம் பேரூரைகளோ உபதேசங்களோ
தேவைப்படவில்லை. மக்கள் பெருந்திரளாக சுதந்திர உறுதிமொழியை அமைதியாகவும்
புனிதமாகவும் ஏற்றது பெரிதும் கிளர்ச்சியூட்டுவதாக இருந்தது. ஆனால் அது
ஆகஸ்ட் 15ஆம் தேதிக்கு
பதிலாக 1930 சனவரியின் கடைசி
ஞாயிற்றுக்கிழமையான 26 ஆம்தேதி நடந்திருந்தது.
அப்போதுதான் முன்ஷி புத்தி பேதலித்து எங்கோ கிளம்பி விட்டதாக சொல்லிக் கொண்டனர் விப்திவாட் கிராமத்தார். மயோதி, புட்லி என்ற இரண்டு மனைவிகளும், ஆனந்தா என்ற ஒற்றை மகனும் அவனுக்குண்டு. தகப்பனை தேடுமளவுக்கு வளர்ந்திராத இளம் குழந்தை அவன். பம்பாய் மாகாணத்திலிருந்த அந்த சிறிய இடையர் கிராமத்திலிருந்து எதற்கோ அஞ்சி கிளம்பியிருக்க வேண்டும். அதற்கு முன்பாக அவன் அதிகப்பட்சமாக பயணித்திருந்தது நுாறுமைல் தொலைவுக்குள்ளிருந்த ஆட்டுச்சந்தைக்குதான். கல்லும் கரளையுமாக நீண்டிருக்கும் சந்தைக்கான பாதையில் குத்துகுத்தாக முளைத்திருந்த புதர்களையும் சூரிய ஒளியில் தகிக்கும் வெட்டவெளியான நிலத்தையும் கடந்துச் செல்ல வேண்டியிருக்கும். அகன்றும் குறுகியும் செல்லும் பழக்கமில்லாத பாதைகளில் ஆடுகள் தவறி விட வாய்ப்புண்டு. அவற்றை மந்தையாக இடையில் விட்டுவிட்டு இடையர்களும் வளர்ப்பு நாயும் முன்னும் பின்னுமாக பயணிக்க வேண்டும். நிலம் கீழிருந்து மேடாகி எழும்போது தொலைவுப்பார்வைக்கு ஆடுகள் திடீரென முளைத்தவை போல தோன்றும். மேட்டுநிலத்தில் இருந்த குட்டை மரமொன்றின் நிழலில் உணவு முடித்து இளைப்பாறிய சமயத்தில்தான் அவன் காந்தியை முதன்முதலாக பார்த்திருந்தான். அப்போது அவர் அந்த பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். மோட்டாரிலிருந்து இறங்கி கிராமத்திற்குள் நடந்து சென்ற அவரை மக்கள் சூழ்ந்துக் கொண்டனர். மகாத்மாவுக்கு ஜே! என்ற கோஷங்கள் மேட்டில் எதிரொலித்தன.
பின்னாளில் அவரின் கூட்டமொன்றுக்கு சென்றிருக்கிறான். அப்போது அவர் இப்போதிருப்பதை போலன்றி இடையில் வேட்டியும் மேலே ஒரு சட்டையும் தலையில் குல்லாயும் அணிந்திருந்தார். அவரை காணும்வரை மகாத்மா காந்திக்கு ஜே! என்று ஆராதித்த சப்தங்கள் அவரைக் கண்டதும் நின்றிருந்தன. மக்களை நன்றாக பார்க்கும்படியாக, மேடையில் போடப்பட்டிருந்த மேசையின் மீது போடப்பட்டிருந்த நாற்காலியின் மீது காந்தி அமர்ந்திருந்தார். கூட்டத்தில் எங்கிருந்தாவது சப்தம் எழும்பினால் அப்பக்கத்தை நோக்கி அமைதியாக இருக்கும்படி சைகை காட்டுவார். ஒத்துழையாமை குறித்து அவர் பிரச்சாரம் செய்த அந்த தருணத்தில் முன்ஷி தன் மனைவி மயோதியையும் அழைத்துச் சென்றிருந்தான். காந்தியின் கூட்டத்துக்கு பெண்கள் வரத்தொடங்கியது ஒரு காரணமென்றாலும் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்லும் அன்றாட பயணங்களுக்கு மத்தியில் இளம் மனைவியுடன் தனியாக இருபது மைல் தொலைவுக்கு பயணம் செய்யும் வாய்ப்பை அவன் தவற விட விரும்பவில்லை. கூட்ட நெரிசலில் காந்தியிடமிருந்து நெடுந்தொலைவுக்கு வந்து விட்டதால் அவர் பேசுவதை கேட்க இயலவில்லை. ஆனால் அதன்பிறகு ஊரே அதை பற்றிய பேச்சாகதானிருந்தது. பிரிட்டிஷ்காரனுடைய தொல்லையிலிருந்து இந்த மனிதர் நம்மை காப்பாற்றி விடுவார் என்று கூறிக் கொண்டார்கள். தடித்த கதர் துணியை உடுத்திக் கொள்வதால் சுயராஜ்ஜியம் கிடைத்து விடுமா என்று கூட்டத்தின்போது வக்கீலொருவர் காந்தியிடம் கேட்டாராம்.
“ஒவ்வொரு தனிமனிதனும் பொருளாதார சுதந்திரம் பெற வேண்டும். அதுவே அவர்களை தைரியத்துடனும் சுயமரியாதையுடனும் வாழ செய்யும். அதற்கு முதலில் கிராமப்பொருளாதாரம் உயர வேண்டும். அதே நேரம் சக்திக்கு மீறி முதலீடும் செய்து விடக்கூடாது. கூடவே பெண்கள் வீட்டிலிருந்தே அவ்வேலையை செய்ய வேண்டும். மேலும் எவ்வளவு நூல் உற்பத்தி செய்தாலும் அவற்றை செலவு செய்து விட முடியும். இதை விட கதர் துணியை உடுத்திக் கொள்ள வேறு காரணங்கள் வேண்டுமா என்ன..?” என்றாராம்.
அவர் சுயநலத்திற்காகவும் வேறெந்த காரணத்திற்காகவும் மக்களையும் நாட்டையும் விட்டு கொடுக்க மாட்டார் என்றார்கள். அவரது பேச்சு கடுமையாகவும் உறுதியாகவும் மறுதலிக்க முடியாததாகவும் இருந்தது. அவனுடைய பேச்சும் மயோதியால் மறுதலிக்க முடியாமல்தானிருந்தது. சமீபகாலமாகதான் அவன் அப்படி நடந்துக் கொள்வதாக அவளுக்கு தோன்றியது. முன்பெல்லாம் உறக்கத்துக்கு முன்பாக ஆண்கள், சாவடியில் கூடி வம்பளக்கும் நேரம் வரை கூட அவனால் பொறுமை காக்க முடியாது. ஆட்டுப்பட்டிக்கருகே ஒப்புக்கு படுத்து விட்டு மயோதியிடம் வந்து விடுவான். முன்ஷியின் வயதான தாய்க்கு இவையெல்லாம் கேட்பதேயில்லை. அவள் பாயோடும் படுக்கையோடும் தொந்தரவின்றி ஒதுங்கிக் கொண்டு விட்டாள். அந்த அன்பெல்லாம் கனவோ என்று தோன்றியது அவளுக்கு. அதிகாலையில் மேய்ச்சலுக்கு துடிக்கும் ஆடுகளை கணவனோடு அனுப்பி விட்டு வயிறு நிறைந்த திருப்தியில் வாலை ஆட்டிக் கொண்டு திரியும் கம்பளிப்பந்து போன்ற குட்டிகளை வளைத்து மடக்கி பட்டிக்குள் போடுவதற்குள் மனம் தடுமாறி போகிறது. ஆடுகள் கிளம்பியதும் புழுக்கைகளை அள்ளி கொட்டி விட்டு தக்ளியில் அமரும்போது மயோதியின்தாய் மகளை பார்க்க ஒரு எட்டு வந்து விடுவாள். மயோதி அவளுக்கு ஒரே மகள். மயோதிக்கோ அதுவும் வாய்க்கவில்லை. தக்ளியிலும் உட்காரவும் மனம் செல்வதில்லை. படுத்துக் கிடக்கும் மாமியார் கூட, பொம்பளைக்கு இத்தனை ஆங்காரம் ஆகாது என்பாள். ஆனால் அவளால் எதையும் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. கணவன் யாரோ புட்லி என்ற பெண்ணோடு பழக்கம் வைத்திருப்பதாக கொள்வதாக பேசிக்கொள்கிறார்கள். சந்தைக்கு போன வகையில் பழக்கம் வந்து விட்டதாம்.
முன்பெல்லாம் மயோதி மேய்ச்சல்காட்டுக்கு சென்று திரும்பும் கணவனின் வருகைச் சத்தம் கேட்டதும் பரபரவென்று எழுந்து வந்து பட்டியில் அடைத்துக்கிடக்கும் ஆட்டுக்குட்டிகளை அவிழ்த்து விடுவாள். நாலைந்து சுள்ளிகளை அடுப்பில் சொருகி விட்டு அகல் விளக்கை எடுத்துச்சென்று அண்டை வீட்டு அகலில் ஏற்றி எடுத்து வந்து அடுப்பு மூட்டுவாள். மேய்ச்சலிலிருந்து திரும்பி வந்த தாய் ஆடுகள், தன்னை கடந்துச் செல்லும் ஆயிரம் காலடிகளில் தனக்கான காலடியை கண்டுக் கொள்ள முடியாமல் தவித்து முட்டி மோதி மல்லாந்து விழும் குட்டிகளை மிதித்துக் கொண்டு தன் குட்டிகளை தேடியோடும். பசித்திருக்கும் குட்டிகள் ஏதேனுமொரு மடியை நாடும்போது தாய் அந்த புதிய ஸ்பரிசத்தை உணர்ந்து துள்ளியோடும். சிறுநீரும் புழுக்கைகளும் நாற்றம் கிளப்பும். வீடும் தெருவும் ஊரும் மே மே என்று ஆடுகளின் மொழியால் நிரம்பி வழியும். மேய்ப்பவர்களும் மனைவிகளும் கூச்சல் போட்டுதான் பேச வேண்டியிருக்கும்.
மயோதியின் அம்மா தன்னுடைய ஆடுகளை ஏற்கனவே மகளிடம் அளித்து விட்டிருந்தாள். கணவனோ மகனோ இல்லாமல் அவளால் ஆடுகளை தனித்து காப்பாற்ற முடியாது. ஒருவேளை ஆடுகளை தன்னிடமே வைத்துக் கொண்டால் அவை தன் ஒற்றை மகளிடம் சேராமல் கணவனின் சகோதரர்களிடம் சேர்ந்து விடும் என்று அஞ்சியிருக்கலாம். சுயமான சம்பாத்தியம் நின்றவுடன் அவளுடைய கம்பீரமெல்லாம் குறைந்துப்போனது போல முதுகில் கூன் விழ தொடங்கியிருந்தது. கிராமத்தில் தங்கியிருந்த கசாப்புக்காரனான பாவல் தன் மகளை நோட்டம் விடுவது தெரிந்ததும் மயோதியை கணவன் வழி சொந்தமான முன்ஷியை கட்டிக் கொடுத்து விடுவது என்று முடிவுக்கு வந்திருந்தாள். பிறந்தவீட்டு சொந்தத்தில் பெண் கொடுப்பதை விட கணவனுடைய சொந்தத்தில் கொடுத்து விட்டால் சொத்தை மகளிடம் ஒப்படைக்கும்போது கணவன் வீட்டாரின் பகைமை குறைந்துப் போகும் என்ற கணக்கும் அவளிடமிருந்தது. முன்ஷிக்கும் மயோதியை பிடித்திருந்த்து. மயோதி வீட்டிலிருந்து மாப்பிள்ளை வீட்டுக்கு சர்க்கரைப்பொங்கல் சாப்பிட வந்தபோது இரண்டு வீசை நெய் வாங்கி காய்ச்சி வைத்திருந்தான். கோதுமையை தானே மாவரைத்துக் கொடுத்தான். பொங்கலுக்கு ஐந்து வீசை வெல்லம் ஏற்பாடு செய்திருந்தான்.
பிறகெல்லாமே கனவாகிப் போனது. மயோதி வேண்டுமென்றே தனிமையை வரவழைத்துக் கொள்பவள் போல மஞ்சளும் வெண்மையுமான பரம்பு வெளியில் வெயிலின் கடுமையில் பொரிந்து பொலபொலத்திருந்த உழுப்படாத தரிசு நிலத்திற்கு சென்ற அமர்ந்து விடுவாள். புதரடியில் அப்பிக்கிடந்த பளபளப்பான பச்சை நிற வண்டுகள் புதரின் துவர்ப்பான இலைகளை உண்பதற்காக மேலெழும்பி வந்தன. உடும்புகள் வலைகளுக்குள்ளிருந்தபடியே தலையை நீட்டின. பிசின் மரத்தின் கிளைகளில் ஈக்கள் கூட்டம் மொய்த்துக் கிடந்தது. பரம்புக்குருவிகள் உயர பறந்து, பின் சட்டென்று அம்பு போல வேகமாக கீழே பாய்ந்தன. இறங்கும்போது அவை எழுப்பும் கீச்சொலிகள் மட்டுமே அவளுக்கு ஆறுதலாக இருந்தது. மழை தொடங்கிய பிறகு மழைப்பூச்சிகள் எங்கிருந்தோ வந்து சேர்ந்து விடும். பூச்சிக்கடிகளை தாங்காமல் செம்மறியாடுகள் உடலை உதறிக் கொள்ளும். நனைந்த ஆட்டு உரோமம் மெல்லிய வாடையாக கிராமத்தின் மீது கவிழும். மேய்ப்பவர்களின் கோடாரிகள் சோர்ந்துக் கிடக்கும். மேய்ச்சலுக்கு துணையாக வரும் மோப்பநாய்கள் வாலை பின்னங்கால்களுக்குள் நுழைத்துக் கொண்டு அசைவத்துக்காக அலையும். காற்றுக் குளிர்ந்து, புல்லால் வேயப்பட்ட கூரைகளின் இடுக்குகளில் குளிராக நுழையும். அடுத்த பத்தாவது மாதங்களில் சொல்லி வைத்தாற்போல கிராமத்தின் ஜனத்தொகையில் ஏழெட்டாவது கூடி விடும். ஆனால் மயோதிக்கு அப்படியொரு யோகம் கிட்டவேயில்லை. மழைக்கான இருட்டு தொடங்கியதுமே ஓலைப்பாயை தலையில் போட்டுக் கொண்டு பட்டியிலிருக்கும் ஆடுகளை அவளும் முன்ஷியுமாக அழைத்து வந்து முற்றத்துக்குள் கட்டி போடுவதும் புதிய இடத்தில் வழித்தெரியாமல் விழிக்கும் குட்டியின் பின்னங்கால்களை பிடித்து இழுத்து வந்து தாயின் மடிக்குள் சேர்த்து விடுவதுமாக இருப்பர். வெயில் நாளில் இடித்து சேர்த்து வைத்திருந்த மாவைக் கொண்டு சுடசுட ரொட்டிகளை சுட்டு கீரை மசியலோடு வைத்து நீட்டும்போது கணவன் உண்ணும் ரொட்டிகளை அவள் கணக்கு வைத்துக் கொண்டதில்லை.
தாய்மடித்தேடும் ஆட்டுக்குட்டிகளை போல இப்போது அவளும் வழித்தெரியாமல்தானிருக்கிறாள். முன்ஷி, புட்லியை வீட்டுக்கே அழைத்து வந்து விட்டான். அவர்கள் இருவரும் கிசுகிசுப்பான குரலில் பேசிக்கொள்வதும் முற்றத்து இருட்டில் கட்டிக் கொள்வதும் பட்டியில் தொட்டுக் கொள்வதும் மலைப்போல குவிந்துக் கிடக்கும் புழுக்கைக்குழிக்கு பின்பாக முத்தமிட்டுக் கொள்வதும் அவளால் தாள முடியவில்லை. இத்தனைக்கும் இது நடைமுறையில் இல்லாத புதிது ஒன்றுமில்லை. அவளது அம்மா கூட அப்பாவுக்கு இரண்டாம் மனைவியாக வந்தவள்தான். அவளுக்கு எல்லாமே தப்பி தப்பி போகிறது. தாய் ஆடொன்றை குட்டியிடம் விட்டுவிட்டு தவறுதலாக பட்டியை அடைத்து விட, மற்ற ஆடுகள் மேய்ச்சலுக்கு கிளம்பி விட்டன. பட்டியில் சப்புக்கொட்டிக் கொண்டிருந்த குட்டியின் புழுதிப்படிந்த உடலை தாய் நக்கிக் கொடுத்துக் கொண்டிருந்தது. மயோதியை கண்டதும் தலையை நிமிர்த்திய குட்டியின் வாயில் கெட்டியான வெண்மையான பால் நுரைத்திருந்த்து.
காந்தி கூட ஆட்டுப்பாலைதான் பருகுவார் என்பதால் அவரது சுற்றுப்பயணத்தின்போது விப்திவாட் கிராமத்திலிருந்து ஆடுகள் இரண்டை அழைத்துக் கொண்டு போனது முன்ஷிக்கு நினைவுக்கு வந்தது. இப்போது அவனுக்கு கிராமம் என்று ஏதுமில்லை. மனம் போன போக்கில் அலைந்தாலும் தனது நடமாட்டத்தை வார்தாவை சுற்றி அமைத்துக் கொண்டது தற்செயலானதல்ல என்பதை அவனும் அறிந்திருந்தான். உப்பு யாத்திரையின்போது காரக்பகதூர் சிங்கும் உடன் வருவதாக சொல்லிக் கொண்டார்கள். நேபாளத்தை சேர்ந்த அந்த மனிதர் கொலைக்குற்றத்துக்காக சிறைக்கு சென்றவர். அவருக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்தபோது காந்தி ‘எந்த மன்னிப்பை பகதூர்சிங் சமூகத்திடம் எதிர்பார்க்கிறாரோ அதை சமூகம் அவருக்கு அளிக்க வேண்டும்’ என்றார். ஆனால் மன்னித்து விட்டால் குற்றம் சரியாகி விடுமா? அல்லது அதற்கான தண்டனையும் கிடைக்க வேண்டுமா? காரக்பகதூர்சிங் சர்க்கார் அளித்த தண்டனையை அனுபவித்தபிறகும் ஏன் மன்னிப்புக் கோரி நிற்க வேண்டும்? குற்றமும் தண்டனையும் பிரிக்க முடியாததுபோல கனத்த மனமும் அவன் சரீரத்துடன் சேர்ந்தலைந்தது.
மகாத்மா… நீங்கள் வெறும் நாற்பத்தைந்து கிலோ உடல் எடையுடனும் மிகச்சில அத்தியாவசியங்களோடும் யாத்திரைக்கு தயாரானீர்கள். நான் துாக்கவியலாத மனதுடன் உங்களை பின்தொடர முடிவு செய்துக் கொண்டேன்.
நீங்கள் கிராமங்களையெல்லாம் போராட்டங்களில் ஒருங்கிணைத்திருந்ததால் விடுதலை பெற்றதன் மகிழ்ச்சி கிராமங்களில் கூட பிரதிபலித்தது. இது பூரண சுயராஜ்ஜியம். நாடெங்கும் உற்சாகம் கரைப்புரள்கிறது. வீடுகளும் வீதிகளும் கொடிகளாலும் தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருக்கின்றன. திரும்புமிடமெங்கும் பரவச முகங்களுடன் மக்கள் தேசியக்கொடியேற்றி விடுதலை நாளைக் கொண்டாடுகின்றனர். முந்தைய இரவு வரை வைஸ்ராயாக இருந்த மௌண்ட்பேட்டன் இன்று கவர்னர் ஜெனரலாக பதவியேற்றுக் கொண்டபோது, அரசியலமைப்புச் சபைக்கு அமைச்சர்கள் ஊர்வலமாக சென்று தேசியக்கொடியை ஏற்றியபோது, மகாத்மாவுக்கு ஜே என்று நாடெங்கும் மக்கள் உணர்ச்சி வயப்படும் போதான இச்சமயத்தில் நீங்கள் எங்கிருக்கிறீர்கள் மகாத்மா?
அன்று உப்பு சத்தியாகிரகம் தொடங்கிய நாளில் கூட இந்தியா உணர்ச்சி வயப்பட்டிருந்தது. சபர்மதி ஆற்றின் கரை மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. உள்நாட்டு வெளிநாட்டு பத்திரிக்கையாளர்கள் ஆசிரமத்தில் உங்களை விடாது பின்தொடர்ந்தனர். ஆசிரமத்தை சுற்றிலும் ஆயிரங்கணக்கானோர் தங்கியிருந்தனர். உலகின் பல பாகங்களிலிருந்தும் தந்திகளும் செய்திகளும் அகமதாபாத் தபால் நிலையத்தில் குவிந்துக் கொண்டிருந்தன. ஆனால் ஆசிரமத்தின் உள்ளே எந்த கொந்தளிப்பும் இல்லை. நீங்கள் நிதானமாகவே இருந்தீர்கள். இந்த நாளை நீங்கள் முன்கூட்டியே வடிவமைத்திருந்தீர்கள். சத்தியாகிரகிகளாக பங்குக்கொள்ள நாடு முழுவதும் ஆர்வம் கொண்டோரிடமிருந்து ஆயிரங்கணக்கான கடிதங்கள் வந்த போதிலும் நீங்கள் நன்கு பயிற்சி பெற்ற ஆசிரமவாசிகளையே தேர்ந்தெடுத்தீர்கள். இந்த ஆசிரமம் பிறரின் உதவியால் நடப்பது. எனவே, இங்கு பயிற்சி பெற்றவர்கள் நாட்டுக்காக தம் உயிரையும் தரக்கூடிய கடப்பாடு உடையவர்கள். அவர்கள் அதற்கு எத்துணை துாரம் தகுதி பெற்றிருக்கிறார்கள் என்பதை உலகம் புரிந்துக் கொள்ள இது ஒரு வாய்ப்பு. போராட்டத்தின் போக்கு மற்றவர்களையும் ஈடுபடுத்துவதாக அமையும்போது பிறரும் அதில் பங்கு கொள்ளலாம் என்றீர்கள்.
இரும்புபூண் பதித்த நீண்ட மூங்கில் கழியை காகா காலேல்கர் உங்களிடம் வழங்க பா எல்லோரையும் வாழ்த்தி வழியனுப்பியபோது என்னுடைய கடப்பாடு நிறைவேறாமல் சபர்மதி திரும்ப மாட்டேன் என்றீர்கள். இன்று நீங்கள் எண்ணியது நிறைவேறி விட்டது மகாத்மா. இந்தியா பூரண சுதந்திரம் பெற்று விட்டது. பின்னும் ஏன் ஓடி மறைகிறீர்கள்? நாடெங்கும் ஏற்றப்பட்ட தேசியக்கொடிகள் சுதந்திரக்காற்றில் படபடக்கின்றன. அன்று நீங்கள் புறப்பட்டபோது கொடிகளோ தட்டிகளோ ஏதுமில்லை. எளிய கதராடையுடன் சத்யாகிரகிகள் உங்களுடன் புறப்பட்டனர். உங்கள் தோள்களில் தொங்கிய பைகளில் மாற்றுடை ஒன்றும் நாட்குறிப்பு, ராட்டை, தண்ணீர் குவளை மட்டுமேயிருந்தன. இவற்றோடு உங்களிடம் வாய் கொள்ளாத புன்னகையும் இருந்தது.
உங்களை முதன்முதலாக நெருக்கத்தில் சந்தித்தபோதும் அதே வாய்கொள்ளாத புன்னகையுடன்தான் இருந்தீர்கள். இத்தனைக்கும் அப்போது போராட்ட திட்டம் குறித்தும் அது தேசம் முழுவதும் வன்முறை பரவாத சட்டமறுப்பாக இருக்க வேண்டும் என்பது குறித்தும் நீஙகள் தீவிர சிந்தனையிலிருந்தீர்கள். இந்தியாவின் கண்கள் உங்கள் குடிசையை நோக்கிக் கொண்டிருந்த சமயத்தில் எது என்னை சபர்மதியை நோக்கி இழுத்தது என்பதை நான் அறிந்திருக்கவில்லை மகாத்மா. இங்கு எல்லாமே எனக்கு வியப்பாக தோன்றுகிறது. நான்குமணிக்கு விழிப்பதும் பிரார்த்தனைக்கூடத்தில் அமர்வதும் ஐந்து மணிக்கு குளியலும் உடற்பயிற்சியும் முடித்து விட்டு காலை உணவு எடுத்துக் கொள்ளும்போது மணி ஆறரையில் மட்டுமே இருந்த்து. நாட்டிலும் உப்பு வரியை எதிர்த்து போர் தொடங்கலாம் என்ற உங்களது யோசனை பலருக்கும் வியப்பையே தந்திருக்க வேண்டும். உப்பு வரியில் ஆங்கில ஆட்சிக்கு கிடைக்கும் வெறும் ஆறுகோடி ரூபாய் வருமானத்தை நட்டப்படுத்துவதால் பிரி்ட்டிஷ் அரசு நடுங்கிப்போய் சுதந்திரம் தந்து விடுமா என்று காங்கிரஸின் காரியகமிட்டி உறுப்பினர்கள் கூட கேள்வி எழும்பினார்களாம். ஆனால் நீங்கள், இயற்கையின் தயவால் கிடைக்கும் உப்பை இலவசமாக பெற மக்களுக்கு எல்லா உரிமையுமுண்டு என்றீர்கள். உப்பின் மீதான வரி அநீதியானதென்பதிலும் அதனை எதிர்த்து போராடுவது பாரத மக்களின் தார்மிக கடமை என்பதிலும் நீங்கள் முடிவாக இருந்தீர்கள். இது குறித்து வைஸ்ராய்க்கு நீங்கள் எழுதிய கடிதத்தை கொடுப்பதற்கு ரெஜினால்ட் ரெயினால்ட்ஸ் என்ற ஆங்கில இளைஞரை தெரிவு செய்தீர்கள். இதுவே நீங்கள் ஆங்கிலேயருக்கு விடுக்கும் செய்திதான். இந்தியர்கள் லட்சியத்திற்காக போராடுகிறார்களே தவிர பிரிட்டிஷாருக்கு எதிராக அல்ல என்ற செய்தியை அவர்களுக்கு சொல்லிக் கொள்வதற்காகதான். நீங்கள் எதிரிகளை உருவாக்காத போராட்டக்காரர். விடுதலை என்பது எதிர்த்தரப்பையும் உள்ளடக்கியது என்றீர்கள்.
அன்று நீங்கள் கூறியவற்றை மகாதேவ்தேசாய் குறிப்பெடுத்துக் கொண்டிருந்தபோது அட்டையில் சொருகாமல் தனித்திருந்த காகிதமொன்று காற்றில் பறந்தோட நீங்கள் பேச்சை நிறுத்தி விட்டு அதை பிடிக்க முயன்றீர்கள். அது உங்களுக்கு தப்பி தேசாயிடம் அகப்பட்டுக் கொண்டது. “அந்த தாளை நீ சரியாக சொருகி வைத்திருந்தால் இந்த நேரத்தை மிச்சப்படுத்தியிருக்கலாம் அல்லவா…?” உங்களின் முகம் சற்று கடுமையாக இருந்தது. ஆனால் உங்கள் கண்கள் அங்கு வெட்டி வைத்திருந்த மாம்பழங்களை போன்று கனிந்திருந்தன. தேசாய் பதிலொன்றும் கூறாது எழுதுவதில் தம்மை ஆழ்த்திக் கொள்பவர் போலிருந்தார். வைசிராய், நாம் மேற்கொண்டுள்ள செயலானது நிச்சயமாக சட்டத்திற்கு விரோதமானது என்றும் பொதுஜன அமைதியை கெடுப்பது என்றும் உங்கள் கடிதத்துககு பதில் எழுதியிருப்பதாக கூறினீர்கள். சற்றுநேரம் கழித்து, வைஸ்ராயின் முன்பு நான் மண்டியிட்டு வணங்கி ரொட்டி வேண்டுமென்றேன். ஆனால் கல் தான் கிடைத்தது என்றீர்கள்.
யாத்திரையின்போது, இருப்பவர்களிலே மூத்தவரான நீங்கள் இரும்பு முனையும் ஒரங்குலச் சுற்றளவும் ஐம்பத்து நான்கு அங்குல நீளமுமுள்ள மூங்கில் தடியை ஊன்றிக் கொண்டு முன்னே நடந்தபோது மற்றவர்கள் குறுஓட்டமாகதான் உங்களை தொடர முடிந்தது. மயோதி மீது நான் காமம் கொண்டிருந்த நாட்களில் சாவடி மேடையில் ஆட்டுக்குட்டிகளும் தாயும் இணைந்தனவா என்ற வழக்கமான விசாரிப்புகளுக்கு கூட இடம் தருவதில்லை. என் பொழுதுகளையெல்லாம் அவளோடு கழிக்கவே விருப்பம் கொண்டிருந்தேன். இரவுகளையும்தான். கட்டுறுதியான அவள் அங்கங்களும் என் மீது அவள் கொண்டிருந்த கட்டற்ற அன்பும் எங்களை மேலும் மேலும் நெருக்கமாக்கின. நீங்கள் நகர்புற சாலைகளை தவிர்த்து கிராமச்சாலைகள் வழியாக யாத்திரையை அமைத்துக் கொண்டீர்கள். அப்பாதைகளில் பெரும்பாலானவை ஒழுங்கற்றும் முற்கள் கற்கள் நிறைந்தும் அசுத்தமானவையாகவும் இருந்தன. மேய்ச்சலுக்கு போகும் வழிகள் கூட கடினமானவைதான். ஆனால் நாங்கள் நாலைந்து குழுக்களாக ஒன்று சேர்ந்துக் கொள்வதும் ஆடுகளை ஒரே பக்கமாக மேய்ச்சலுக்கு அனுப்பி விட்டு ஆளுக்கொருவராக ஓய்வெடுத்துக் கொள்வதுமாக அதை ஈடுசெய்துக் கொள்வோம். நாங்கள் அழைத்துச் செல்லும் நாய்கள், ஓணான்களை வேட்டையாடுவதும் பெருச்சாளிகளை தேடியலைவதுமாக இருந்தாலும் ஆடுகளின் பாதுகாப்பில் கண்ணும் கருத்துமாக இருப்பவை. சபர்மதியில் தொடங்கிய யாத்திரை அஸ்லலி கிராமத்தில் இளைப்பாறியபோது பாதையின் ஒழுங்கின்மை, வெப்பம் எல்லாமுமாக சேர்ந்து பலரது பாதங்களும் புண்ணாகி விட்டன. இந்த காந்தி பைத்தியக்கார பணியை முன்னெடுக்கிறார் என்று அரசுசார்பு பத்திரிக்கைகள் எழுதியதாக தகவல் வந்தபோது நீங்கள் மென்மையாக புன்னகைத்தீர்கள். மேய்ச்சல் ஆடுகள், தம்முடலில் ஒட்டிக் கொள்ளும் புற்களின் விதைகளை செல்லும் வழிகளில் உதற விட்டு அடுத்த மேய்ச்சலுக்கான புற்களை உற்பத்தி செய்வதை போல நீங்களும் யாத்திரையின் பாதைகளில் விடுதலைக்கான வேட்கையை விதைத்துக் கொண்டே சென்றீர்கள்.
சபர்மதி ஆசிரமத்தில் அதிகாலை பஜனைக்குள் அமரும்போது எனது மூடிய கண்களுக்குள் இயல்பாகவே ஆடுகள் நடமாட தொடங்கி விடும். பிறகு மயோதியும் வந்து விடுவாள். அவளுடைய கண்கள் கூட ஆட்டின் கண்களை போல சற்று கலங்கலாகவும் நீண்டுமிருக்கும். அன்று மயோதி, புட்லி எனக்கு எடுத்து வந்த ரொட்டிகளை பிடுங்கி தெருவில் நின்ற நாயிடம் எறிந்தபோது என் கோபம் கட்டுக்குள் அடங்கவில்லை. அவளோ புட்லியை வீட்டை விட்டு அனுப்பி விடுமாறு ஆர்ப்பாட்டம் செய்தாள். “புட்லியை உள்ளே வரக்கூடாது என்று சொல்ல உனக்கென்ன அருகதை இருக்கிறது. ஒருவேளை நீ பெற்ற பிள்ளைகள் வீடு முழுவதும் அலைந்துக் கொண்டிருப்பதால் இவளுக்கு இடமில்லாமல் போய் விட்டதோ?“ என் அடாவடியான பேச்சு அவள் கண்களை வெளிற வைத்தது. இது அவளது தோல்விக்கான சந்தர்ப்பம். அதை பலமாக்கிக் கொண்டு அவளை அடித்து வெளியே துரத்தியபோது புட்லி கர்ப்பமாக இருந்தாள்.
வைஷ்ணவ ஜனதோ தேனே கஹியே ஜே
பீடு பராயே ஜானெரெ
பரதுக்கே உபகார் கரே தொயெ
மன் அபிமான் ந ஆனெ ரெ
பிரார்த்தனை பாடல் ஓடிக் கொண்டிருக்கும்போதே முழுதாக எனக்கு முன்னே எழுந்து நின்ற மயோதியின் கண்களை சந்தித்தேன். அது தெளிவாக, மிகத்தெளிவாக இருந்தது. நான் விதிர்விதிர்த்து கண்களை திறந்துக் கொண்டேன். அது உங்கள் மூடிய விழிகளில் நிலைத்தது. அவ்விழிகள் என்னையே நோக்கிக் கொண்டிருந்தன. ஆம். நீங்கள் மூடிய விழிகளால் என்னையே பார்த்துக் கொண்டிருந்தீர்கள். அன்று நீங்கள் உங்கள் யாத்திரைக்கான ஆட்களை முடிவு செய்திருந்தீர்கள். உங்களை யாத்திரையில் பின்தொடர்வது என்ற எண்ணம் அப்போது விழைந்ததுதான்.
புட்லி கருவுற்றதை கேள்விப்பட்ட அவள் வீட்டார் பட்சணங்களோடு மகளை பார்த்துவிட்டு சென்றிருந்தனர். அவள் இடையர் சாதியை சேர்ந்தவள் அல்ல என்பதால் ஆடுகள் குறித்து எதையும் அறிந்திருக்கவில்லை. வெறுமனே ரொட்டிகளை சுடுவதும் பெரும்பயிரும் சிறுபயிரும் கலந்த குழம்பு வைப்பதும் மட்டுமே அறிந்திருந்தாள். மயோதி இருக்கும்வரையில் மேய்ச்சல் கழியை சுவரோரம் சார்த்தி விட்டு வட்டிலில் அமர்ந்து விட்டால் மீத வேலைகளை அவளே பார்த்துக் கொள்வாள். ஆட்டுக்குட்டிகளை அவிழ்த்து விடுவதும் பாலறுந்திய குட்டிகளை பிரித்து கட்டுவதும் உறங்கிப்போன குட்டிகளை தாயின் மடியில் சேர்ப்பதும் பட்டியை அடைப்பதுமாக வேலைகள் மளமளவென்று ஆகி விடும். எனக்கு கண்வலி வந்திருந்த சமயத்தில் மாவலி அம்மனுக்கு வேண்டிக்கொண்டு பஞ்சுச்சுருளை பாலில் நனைத்து என் கண்களில் வைத்து விட்டு மேய்ச்சல் கழியை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டாள். என்னை மேய்ச்சலுக்கு கிளப்பி விடும்போது கையோடு ரொட்டியும் துகையலும் கொடுப்பதோடு கூடவே வெங்காயமும் சேர்த்து கொடுத்தனுப்புவாள்.
நீங்கள் தங்கவிருக்கும் கிராமங்களில் அரிசி கஞ்சி, வேக வைத்த தானியங்கள், காய்கறி, மோர், பால், தயிர் போன்ற எளிய உணவுகளையே கோரியிருந்தீர்கள். சில இடங்களில் அதற்கே தட்டுப்பாடாக போனதும் உண்டு. மேய்ச்சலின்போது துடியான ஆட்டை தேர்ந்தெடுத்து அதன் கழுத்தில் சலங்கையை கட்டி விடுவோம். சோளப்பயிர்களின் பால்மாறா இளங்குருத்தை ஒடித்துக் கொடுப்பதும் பகலுணவு உண்ணும்போது அருகே அழைத்துக்கொள்வதும் அன்பாக கழுத்தை நீவி விடுவதுமாக அதனை எங்கள் கட்டுக்குள் வைத்திருக்கும்போது அவை எங்களின் கட்டளையை புரிந்தும் கீழ்ப்படிந்தும் நடக்க கற்றுக் கொள்ளும். அந்த ஆட்டை மீறி மந்தைக்குள் சிறு சலனமோ சத்தமோ வந்து விடாது என்ற நம்பிக்கையில் நாங்கள் வலையை விரித்து புறாக்கள் பிடிப்போம். வெட்டுக்கிளைகளை விரட்டுவோம். ஆனால் நீங்கள் யாத்திரை முழுவதும் உங்கள் கருத்திலிருந்தும், கொண்டிருந்த கொள்கையிலிருந்தும் கவனத்தை சிதறவிடவேயில்லை.
நாடு முழுக்க அதிர்வுகளை கிளப்பிய யாத்திரை அமைதியாகவும் சில இடங்களில் கம்பீரமற்றும் இருந்தது. யாத்திரையில் மகிழ்ச்சியோ சந்தோஷ ஆரவாரமோ ஏதுமில்லை. செல்லும் வழிகளில் சில கிராமங்களில் ஆண்களும் பெண்களும் கூடி நின்று புழுதியடங்க நீர் தெளித்து உற்சாகமாக வரவேற்பு அளித்தாலும், சில கிராமங்களில் தண்டோரா போட்டுதான் மக்களை அழைக்க வேண்டியிருந்தது. சிலர் நம்மை ஏதொன்றும் நடவாததுபோல கடந்து சென்றனர். பருத்தி அதிகமாக விளையும் இடங்களில் கூட மக்கள் கதர் அணிய விருப்பம் கொள்ளவில்லை. இதுபோன்ற உற்சாகமின்மை நம் விடுதலையை தாமதப்படுத்தும் என்றீர்கள். ஆனாலும் இந்த விந்தைமிகு கூட்டம் புதிய வரலாறு படைக்கப்போவதை நீங்கள் அறிந்திருந்தீர்கள். குழுவினரின் உடல்நிலை குறைவுகளோடு மாறுப்பட்ட உணர்வுகளையும் சமாளிக்க வேண்டி வந்தபோது “விருப்பமில்லாதவர்கள் திரும்ப போய் விடுங்கள். யாருமில்லையெனினும் ஒற்றையாளாக நான் தண்டி சென்றடைவேன்…” என்றீர்கள். நீங்கள் கண்டிப்பானவர். உடனிருந்த பத்திரிக்கையாளர்களிடம், “நீங்கள் என்னை முட்டாள் என்று விமர்சித்தால் அதற்காக நானும் உங்களுடன் சேர்ந்து நகைப்பேன்“ என்றீர்கள். முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் கிராமங்கள் வழியாக அதிகம் பயணிக்கவில்லையே என்று அவர்கள் கேள்வி எழுப்பினர். அழைக்கப்படாத கிராமங்களுக்கு செல்வதற்கான தயக்கம் உங்களுக்கு இருந்திருக்க வேண்டும்.
உங்களிடம் அரசுக்கும் மக்களுக்குமான புரிதல் தெளிவாகவே இருந்தது. சௌரிசௌரா அனுபவம் அதை உங்களுக்கு உணர்த்தியிருக்க வேண்டும். மக்கள் கூட்டத்தை கும்பலாக்கி அரசதிகாரத்தை உள்ளிறக்கி, நோக்கத்தின் தீவிரத்தை நீர்க்க செய்வதோடு போராட்டத்தின் தார்மீகத்தையும் கேள்விக்குள்ளாக்கி விடும். அதனால்தான் நீங்கள் அனுப்பும் செய்திகளில் கூட மிகுந்த கவனம் காட்டி வந்தீர்கள். உங்கள் வார்த்தைகளில் திருத்தம் செய்யும் உரிமையை யாருக்கும் வழங்க மறுத்தீர்கள்.
பயணம் முழுவதும் பத்திரிக்கையாளர் சந்திப்பு, யங் இந்தியாவுக்கு கட்டுரைகள், கடிதங்களுக்கு பதில்கள் என உங்களின் இரவு நேரங்களை வரையறுத்துக் கொண்டீர்கள். கூட்டங்களை நடத்தினீர்கள். உங்களோடு, நடமாடும் கதர் விற்பனைக்கூடமும் உடன் வந்தது. நீங்கள் செல்லுமிடமெங்கும் கதரின் அவசியத்தை வலியுறுத்தினீர்கள். பாதையின் இருபுறமும் மலர்துாவி வரவேற்பளிக்கப்படும்போது “கூட்டம் கூடினால் மட்டும் போதாது. சுயராஜ்ஜிய படையில் மக்கள் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும்“ என்றீர்கள். ஆனாலும் மக்கள் புடைச்சூழ இருந்த நாட்களில் உங்கள் உதடுகளில் விரிந்த குழந்தைத்தனமான சிரிப்பு கண்கள் வரை வழிந்தது. வஸனா கிராமத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டாலும் தீண்டாதோரை கிராமத்துக்கு வெளியே நிறுத்தி வைத்திருப்பதை அறிந்த நீங்கள், தேச நிர்மாணத்தை கட்டமைக்கும் பணிக்கு தீண்டாதோரை ஒதுக்கி வைக்கும் உங்களைப் போன்றவர்கள் தேவையில்லை என்று கடுமை காட்டினீர்கள். டபான் கிராமத்தில் தீண்டாதோர் குடியிருப்பிலிருந்த கிணற்றில் நீர் சேந்தி குளித்தீர்கள். கரேலி கிராமத்தில் தீண்டாதோர் தனித்து அமர்ந்திருப்பதைக் கண்ட நீங்கள், நம் தொண்டர்களை அவர்களோடு சென்று அமரும்படி கூறியபோது நானும் சென்று அவர்களோடு அமர்ந்துக் கொண்டேன். அன்றையக்கூட்டத்தில் தீண்டாமையை ஒழிக்காமல் சுயராஜ்ஜியம் பெற்று என்ன பயன் என்றீர்கள்.
எங்கள் பிரிவுக்கு பிறகு மயோதி தன்னுடைய ஆடுகளையும் பிரித்து எடுத்துக் கொண்டிருந்தாள். அன்று சாவடியில் கூடியிருந்த ஆண்கள் கள்ளுண்ட போதையில் பிதற்றியதில் மயோதியின் பேச்சும் அடிபட, என் போதை தெளிந்திருந்தது. ஓடையில போற தண்ணீய ஆளுக்கொரு கையா மோண்டு குடிக்க வேண்டியதுதான் என்று கானு கிண்டலாக சொன்னபோது இன்னும் மோளாமையா இருப்பானுங்க என்றான் சில்லு. பேச்சு சுற்றி சுற்றி இதிலேயே நின்றபோது நான் மயோதியின் குடிசையை நோக்கி நடந்தேன். அவளுடைய மதர்த்த உடலும் அதன் சுகமும் இறங்கிய போதையை மேலேற்றியது. ஓடையில் நீர் பெருகியோடிக் கொண்டிருந்தது.
சத்யாகிரகக்குழு மஹி ஆற்றை கடக்க திணறியபோது ரக்நாத்ஜி என்பவர் தனது சொந்த செலவில் படகு வாங்கித் தந்தார். அப்படகில் உங்களுடன் பயணிக்க பொதுமக்களும் ஆர்வப்பட, கூடிய கூட்டத்தில் படகு பாதியிலேயே நின்று விட்டது. பயணத்தில் உங்களுடன் பின் தங்கியிருந்த நான் இதையே சந்தர்ப்பமாக்கி உங்களுடன் இணைந்துக் கொண்டேன். அப்போது நீங்கள் முட்டியளவு சேற்றில் கால்கள் புதைய புதைய நடந்துக் கொண்டிருந்தீர்கள். நேருவும் கூட அகமதாபாத்தில் கூடவிருந்த காங்கிரஸ் காரியக்கமிட்டிக் கூட்டத்தில் விவாதிக்க வேண்டியவை குறித்து உங்களிடம் ஆலோசிக்க சேற்றில் புதைந்து புதைந்து வந்தார். நீங்கள் எழுதிக் கொண்டேயிருந்தீர்கள். இந்த சக்தியை நீங்கள் உங்கள் மனதிலிருந்துதான் பெற்றுக் கொண்டிருக்க வேண்டும். யாத்திரை தண்டியை அடையும் முன்பாக பதான் படைவீரர்களால் ஆபத்து வரலாம் என்றும் பாதுகாப்புக்காக தனது பதான் நண்பர்களை அனுப்புவதாகவும் நேரு கேட்டுக்கொண்டபோது நீங்கள், அப்படியேதும் நடக்காது என்று உள்ளுர்ணர்வு கூறுவதாக பதில் எழுதினீர்கள். இறப்பு உறுதி என்ற நம்பிக்கையுடன்தான் சபர்மதியிலிருந்து புறப்பட்டதாக சொன்னீர்கள்.
இப்போது நீங்கள் கல்கத்தாவிலிருப்பதை நான் அறிவேன். சுதந்திரத்திற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பே நீங்கள் டெல்லியிலிருந்து கிளம்பியிருந்தீர்கள். டெல்லியில் அரசியலமைப்புக் கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக உங்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டபோது எழுந்த கைத்தட்டல் அடங்கவே நீண்ட நேரமாயிற்று. வெளியில் மக்கள் கூட்டம் உங்களுக்கு வாழ்த்துக் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கிறது. மகாத்மா… இந்திய மக்களுக்கு ரொட்டியை பெற்று தந்து விட்டீர்கள். ஆனால் நீங்களோ கல்கத்தாவில், பெலியகட்டாவில் எல்லா பக்கமும் திறந்திருந்த சிதிலமடைந்த கட்ட்டத்தில் உங்கள் இருப்பிடத்தை அமைத்துக் கொண்டிருந்தீர்கள். நீங்கள் போராடி பெற்றுத் தந்த சுதந்திரம், பதிலாக கோரியிருந்த மிகப்பெரிய விலை உங்கள் மனநிலையை வெறுமைக்குள்ளாக்கியிருக்க வேண்டும். உங்களை பொறுத்தவரை எதுவுமே எங்கோ எவருக்கோ நிகழ்பவை அல்ல. சௌரிசௌரா சம்பவத்தின்போது தேசமெங்கும் பொங்கிய விடுதலை உணர்வை பொருட்படுத்தாமல் நடந்த வன்முறைக்கு பொறுப்பேற்று ஒத்துழையாமை போராட்டத்தை உடனே நிறுத்துமாறு அறிவித்தீர்கள். இப்போது நிகழ்ந்துக் கொண்டிருக்கும் வன்முறைகளுக்கும் நீங்களே பொறுப்பேற்றுக் கொள்கிறீர்கள். கல்கத்தாவின் வீதியொன்றில் உங்கள் மீது களிமண் உருண்டைகளை கல்லாக்கி எறிந்தார்களாம். மக்களை தவறாக வழிநடத்தி விட்டதாக மருகுகிறீர்களோ? அதனால்தான் கொண்டாட்டங்களிலிருந்து எங்கோ விலகிச் செல்கிறீர்கள் போலும். இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்குமிடையே மோதல்கள் குறைவதாக இல்லை. கல்கத்தாவில் சென்ற ஆண்டு ஆகஸ்ட் 16ல் தொடங்கிய வன்முறை வங்காள கிராமங்களுக்கு பரவி அங்கிருந்து பீகாருக்கும் பரவியது. இறுதியாக பஞ்சாப் வந்து சேர்ந்து, ஐக்கிய மாகாணத்துக்கும் பரவியதில் நடந்துக் கொண்டிருக்கும் பேரழிவுகளுக்கிடையே விழா நிகழ்ச்சிகள் நடைபெறுவதையோ அதில் கலந்துக் கொள்வதையோ நீங்கள் விரும்பவில்லை..
விரும்புவதெல்லாம் நடந்து விடுவதும் இல்லையே. அன்று மயோதியின் மீது எனக்கிருந்த உணர்வை வெறும் காமம் என்ற உணர்வுக்குள் அடக்கவியலாது. கள்ளுண்ட போதையில் சாவடியிலேயே ஆண்கள் கம்பளியை விரித்து படுத்துக் கொண்டனர். நடுவிலிருந்த தெருவிற்கு அப்பால் கல்லால் வரம்புக் கட்டப்பட்ட ஓடை இருந்தது. அதற்கப்பால் காடு நெடுந்துாரம் பரவியிருந்தது. நான் மயோதியின் குடிசையை நோக்கி நடக்கத் தொடங்கினேன். இருளில் புதர்கள் பேய்களாய் விரிந்திருந்தன. இத்தனை தனிமையும் இருளும் கூட உன் தினவெடுத்த மனதை அடக்கவில்லையே? என் காலில் விழுந்து வணங்கி மன்னிப்பு கோரிவிட்டு வீட்டுக்கு வந்து விழுந்து விடுவாய் என்றுதான் நான் நினைத்திருந்தேன். பி்ள்ளை பெற்றுக் கிடக்கும் புட்லியை கவனிப்பேனா? மேய்ச்சலை கவனிப்பேனா? ஊரும் மக்களும் உன்னை அதைதானே வற்புறுத்தினார்கள். ஆனால் நீயோ மேய்ச்சலுக்கு வந்த இடத்தில் உன் ஆடுகளை பிரித்துக் கொண்டு போனாய்.. எத்தனை தன்னங்காரம் உனக்கு?“ என்னெதிரில் நிற்பதை போலவே அவளுடன் பேசினேன். சட்டைப்பையிலிருந்த உக்கா குழாயை எடுத்து அதில் புகையிலையை திணித்துக் கொண்டேன். பிறகு அது விழுந்து விடாமல் கால் கட்டைவிரலுக்கும் அடுத்த விரலுக்கும் நடுவே வைத்து பிடித்துக் கொண்டு கைகளால் சிக்கிமுக்கி கல்லை உராய்ந்து உக்காவை பற்ற வைத்தேன். காட்டமான புகை உள்ளுக்குள் இறங்கி, கோபமாக பொங்கி வெளியே வந்தது.
தண்டியை
அடையும் முன்பாக சனாபூர் கிராமத்திலேயே மக்கள் சதுப்பில் கால்கள் புதைய நடந்து வந்து
உங்களோடு இணைந்துக் கொண்டார்கள். நீங்கள் இப்போது தொடுவானம் வரை பரந்து
விரிந்த ஆழ்கடலின் முகட்டில் நின்றுக்கொண்டு குழுமியிருந்த மக்கள் திரளை
நோக்குகிறீர்கள். உங்கள் முகத்தில் உலகம் முழுவதும் கவனித்த
செயலொன்றை செய்த பெருமிதம் ஏதுமில்லை. ஆசிரமம் மட்டுமே வாழ்க்கை,
உங்கள் சொற்களை மட்டுமே செய்கை என வாழ்ந்த சத்தியாகிரகிகள் வெளியுலகில் தெரியும் உங்கள்
ஆளுமையின் மீது பெருகிய அபீரிதமான உணர்வோடு
காத்திருந்தனர். உங்கள் உள்ளத்தில் ஆழ்கடலின் அமைதி இருந்திருக்க வேண்டும்.
கதிரின் பொன்னொளி வீசிய அந்த காலை நேரத்தில் அலையோசையாய் எழுந்த
மனிதத்திரளின் ஆர்ப்பரிப்புகளுக்கிடையே குனிந்து உப்புக்கலந்த கடற்கரை மணலை உங்கள்
கையால் அள்ளியெடுத்தீர்கள்.
“ஒரு சத்தியாகிரகியின் கையில் இருக்கிற உபபு இந்த தேசத்தின் கௌரவம். நம் உயிரே போனாலும் அதை கை விட்டு விடாதீர்கள்…”
“அய்யோ… என்னை விட்டுடுங்க…” என்று அலறினாள் மயோதி. அந்த இரவில்
எதிர்பாராத என் வருகையும் கோபவெறியும் அவளை தடுமாற வைத்திருக்க வேண்டும். ஒரே அடியில் எகிறி விழுந்த அவளை அள்ளியெடுத்தபோது என் நரம்புகளுள் காமமும்
முறுக்கேறியிருந்தது. அடக்க அடக்க எழுந்துக் கொள்ளும் அவளின்
தன்னகங்காரத்தை வெறும் உடல்பலம் கொண்டு அடக்க எத்தனித்ததில் அவள் இறந்து விட்டதாக என்னை
நான் ஏமாற்றிக் கொண்டாலும் அந்த செயலை செய்ய எண்ணியே நான் அங்கு சென்றிருக்க
வேண்டும்.
ஆம்... அதைதான் என் உள்ளுணர்வு சொல்கிறது
மகாத்மா.
போதிசத்வன்
ஞானமடைந்த பிறகு மனிதர்களின் மீது கருணைக்கொண்டு அவர்களையும் ஞானத்தின் பாதையில்
இட்டு செல்ல விழைகிறான்.
அவனுடைய பார்வையில் தனி மனிதனின் விடுதலைக்கு எந்த பொருளுமில்லை.
மொத்த மானுடமும் விடுதலையடைவதையே முழு விடுதலை. நீங்கள் அரசியல் விடுதலை மட்டும் கோரவில்லை. சமூக
விடுதலையும் மத நல்லிணக்கமும் கூட உங்கள் இலக்குதான். அதனால்தான்
நிகழ்த்தியவைக்கும் நிகழ்ந்தவைக்குமிடையே உங்கள் தவறுகளை நீங்கள் கல்கத்தாவின்
வீதிகளில் தேடியலைகிறீர்கள்.
நான் உங்களை தேடி வந்துக் கொண்டிருக்கிறேன் மகாத்மா. நீங்கள் என்னை நினைவில் கொண்டுள்ளீர்களா? நினைவில் கொள்வீர்கள் என்றே நான் நம்பிக் கொள்கிறேன். நாம் நம்மை சார்ந்த நியாயங்களை மட்டும்தானே பெரிதாக நம்பிக்கொள்கிறோம். மயோதியின் அசைவற்ற உடலை நான் உணரத்தொடங்கியபோது என்னுள் சூழ்ந்துக் கொண்ட உணர்வுகள் என் நியாயங்களையெல்லாம் எங்கேயோ நகர்த்தி வைத்து விட்டன. பெருகியோடிய ஓடை நீரில் மயோதியின் உடல் இழுத்துச் செல்லப்படுவதை இருள் தன் கைகளால் மறைத்திருந்தது. கால்கள் போன பக்கம் நடக்கத் தொடங்கினேன். எங்கே என்றெல்லாம் முடிவு செய்யாத பயணம் அது. அன்று கூட இன்றைய நாள் போல மக்கள் திரளாக குழுமி சுதந்திர தினத்தை கொண்டாடினார்கள். வழியெங்கும் தெருக்களிலும் வீடுகளிலும் கொடிகளும் தோரணங்களும் கட்டப்பட்டிருந்தன. நான் அங்கு கூடியிருந்த கூட்டம் ஒன்றுடன் இணைந்துக் கொண்டேன். அதிலொருவர் சுதந்திர பிரதிக்னையை படிக்க அவரை பின்பற்றி மற்றவர்கள் பிரதிக்ஞை எடுத்துக் கொண்டனர். நானும் அவர்களோடு ஊர்வலத்தில் பயயணிக்கத் தொடங்கி விட்டேன்.
கல்கத்தாவின் தெருக்களில் வெற்றி வளைவுகள் அமைத்தும் பனங்குறுத்துகள் படுதாக்கள் கொடிகள் தோரணங்களைக் கொண்டு அலங்கரித்துமாக பிரிட்டிஷார் நீங்கிய பூரண சுதந்திரநாள் கொண்டாடப்பட்டுக் கொண்டிருந்தபோது நீங்கள் உண்ணாவிரதம் இருந்து பிரார்த்தனை செய்து கொண்டிருந்தீர்கள். நீங்கள் விழித்ததும் சொல்லப்படுவதற்காக, மிக மோசமாக பாதிக்கப்பட்ட சில பகுதிகளில் மக்கள் சகோதர உணர்வுடன் கொண்டாட்டங்களில் ஈடுப்பட்ட நல்ல செய்திகள் காத்திருந்தன. முஸ்லிம்கள் தங்கள் கடைகளையும் வீடுகளையும் இந்தியக்கொடிகளை கொண்டு அலங்கரி்த்திருந்ததைக் கண்டேன். நான் பார்த்தவற்றில் மிக சிறந்தக்காட்சியாக இந்துக்களும் முஸ்லி்களும் திறந்த கார்கள் மற்றும் லாரிகளில் ஜெய்ஹிந்த் என்று முழங்கியவாறு செல்ல அதை தெருவில் கூடியிருந்த இரு மதத்தவரும் உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் “ஹிந்து முஸல்மான் ஏக்ஹோ ஹிந்து முஸல்மான் ஏக்ஹோ” என்று எதிரொலித்ததை கூறலாம். அதை விட முக்கியமான நல்ல காட்சி நீண்ட வருடங்களுக்கு பிறகு நான் உங்களை கண்டுக் கொண்டதுதான். நீங்கள் அப்போது பிபிசி செய்தியாளரிடம் பேசிக் கொண்டிருந்தீர்கள். ஒல்லியான உங்கள் தேகம் அலைச்சலில் மேலும் கருத்திருந்தது. முதுகு சற்றே கூனலாகியிருந்தது. முகம் மேலும் சுருக்கங்கள் அடைந்திருக்குமோ..? அதை உங்களை நேராக நோக்கும்போது அறிந்துக் கொள்வேன். அச்சமயத்தில் உங்களிடம் கூறிக்கொள்ள எனக்கு விஷயங்கள் இருந்தன மகாத்மா. மேலும் உங்களிடம் கேட்டு தெரிந்துக் கொள்ள ஒரு கேள்வியுமிருந்தது. நான் நாட்டுப்பற்றோடு விடுதலைப்போரில் கலந்துக் கொண்டேன் என்பதையும் அதற்கு பரிசாக இரண்டு சிறைவாசங்களை கடந்து வந்திருக்கிறேன் என்பதையும் உங்களிடம் சொல்லிக்கொள்ள வேண்டும். பிறகு, நான் மன்னிக்கப்பட்டிருப்பேனா என்பதை தெரிந்துக் கொள்ள வேண்டும். அப்போது எங்கிருந்தோ ஒரு குரல் “செத்து ஒழியுங்கள் காந்தி” என்று கூட்டத்திலிருந்து கூச்சலாய் எழுந்தது.
நான் கூறிக் கொண்டேன், நீங்கள் எதையுமே பெற முடியாது மகாத்மா. ஏனென்றால் நீங்கள்தான் எதையுமே இழக்கவில்லையே… என்று.
நீங்கள் உங்கள் கருத்தை பிபிசியில் அல்லாமல், பிரார்த்தனைக் கூட்டத்தில் அறிவிக்க தீர்மானித்திருந்தீர்கள். உங்கள் பேச்சை கேட்பதற்காக மக்கள் ஆயிரங்கணக்கில் கூடத் தொடங்க நீங்கள் பெலியகட்டாவில் ராஷ்பகன் மைதானத்தை நோக்கி கைத்தடியோடு நடந்துக் கொண்டிருந்தீர்கள். உங்களை பின்தொடர்வதே எனக்கு பிடித்தமானதாக இருந்தது.
மகாத்மா… நீங்கள் உங்கள் கைத்தடியை
தாங்கிக் கொண்டு நடந்துக் கொண்டிருந்தீர்கள்.
***
15 April 2021 Kanali
No comments:
Post a Comment