டெல்லி நகரின் அந்த மாலைநேரம், பகல் நேரத்தில் தலைக்காட்டிய வெதுவெதுப்பு மறைந்து குளிருக்குள் நுழைந்துக் கொண்டிருந்தது. யமுனை நதியை தொட்டு மேலெழுந்தக்காற்று நகரை மேலும் குளிர்வித்துக் கொண்டிருந்தது. சற்றுமுன்பு வரையிலும் தெய்வீகத்தை உணர வைத்துக் கொண்டிருந்த பிரார்த்தனைக்கான மேடை தன் புனிதத்தைத் தொலைத்திருந்தது. இசைக்கருவிகள் இசைப்பாரும் கேட்போருமின்றி கிடக்க, ஒலித்தக்குரல்களில் பதற்றமும் அழுகையும் தொற்றியிருந்தன. நடைப்பாதையை அடுத்திருந்த புல்வெளிகள் நடந்த துயரை ஏந்திக் கொள்ளவியலாமலும் நகரும் வழியின்றியும் திகைத்திருந்தன. தலைக்கு மேலாக கவிழ்ந்திருந்த நீலவானத்தில் சிறு மேகக்கூட்டமொன்று திட்டாகக் குவிந்திருந்தது.
“மோகன்.. உங்களால எழுந்திரிக்க முடியும். முயற்சி செஞ்சுப்பாருங்க”
“நிச்சயமா… நிச்சயமா முயற்சி செய்வேன் கஸ்துார். எல்லோரும் என்னை சுத்தி நிற்பதையும் பதறுவதையும் உணர்றேன். நான் இப்பவே பிரார்த்தனை மேடைக்கு போயாகணும். இல்லேன்னா அவங்க எல்லோரோட நேரமும் வீணாப்போயிடும்”
“அதிருக்கட்டும். இப்போ நீங்க எழுந்திரிக்கறதுதான் முக்கியம்“
“ஆனா… ஆனா என்னால கைக்கால்களை அசைக்க கூட முடியிலயே. கண்களை சிமிட்ட முடியில. எனக்கு ரொம்ப பதற்றமா இருக்கு கஸ்துார். படேலும் நேருவும் ஒற்றுமையா இருக்கறது நாட்டுக்கு ரொம்ப அவசியம். அவங்கள சமாதானப்படுத்த வேண்டிய இந்த நேரத்தில நான் இப்படி விழுந்துக் கிடக்கறது நியாயமேயில்ல”
“சரி… அதை பத்தியெல்லாம் இப்ப சிந்திக்காதீங்க. நீங்க இப்போ எழுந்திரிக்கறதுதான் முக்கியம்”
“எனக்கு ஆசுவாசப்படுத்திக்க கொஞ்சநேரம் கொடு கஸ்துார்…”
“ஆனா நீங்க ரொம்பநேரம் இப்டியே கிடந்தீங்கன்னா உடம்பு அழுக்கும் துாசும் பட்டு அசுத்தமாயிடும். நேத்திலேர்ந்த விடாத இருமல் வேற”
“ராமா… ராமா… உடல்நோவுல எல்லாமே மறந்து போச்சு. அதுசரி… இதெல்லாம் உனக்கெப்படி தெரியும். நீ எங்கருக்கே?”
“அப்படியே மல்லாந்தவாக்கில கண்ணை திறந்துப் பாருங்க”
“என்ன பேசுறே நீ? நாந்தான் திறக்க முடியிலேன்னு சொல்றேன்ல்ல”
மோகனின் கோபத்தை கண்டதும் “சரி சரி.. நானே சொல்றேன். நான் உங்களுக்கு நேர் மேலே வெண்மேகமா திரண்டு நிற்கிறேன் மோகன். உங்களை பார்க்கறதுக்காகதான் இங்க வந்தேன்”
“எனக்காக வந்தியா? இதற்கான முறையான அனுமதிய வாங்க வேண்டியவங்ககிட்டே வாங்கீட்டீயா..?”
மோகனின் பேச்சு சிடுசிடுப்பானதையடுத்து கஸ்துார் முகத்தை இறுக்கமாக்கிக் கொண்டாள்.
“என்னை எப்போதான் நம்ப போறீங்கன்னு தெரியில. ஆகாகான் சிறைக்கு நானும் சுசீலாவும் கைதாகி வந்தப்பவும் இதையேதானே கேட்டீங்க. நாங்க ரெண்டுபேரும் குறுக்கு வழியில சிறப்பு அனுமதி வாங்கீட்டு நீங்க இருக்கற ஆகாகான் சிறைக்கு வந்துட்டதா நெனச்சிட்டீங்க இல்லியா?
சற்று இளக்கமான குரலில் “கஸ்துார்… என்ன நடந்ததுன்னு சிறையில இருக்கற எனக்கெப்படி தெரியும்? என்றவர் உடனே “நீ அங்க வரும்போது காய்ச்சல்லயும் வயித்துப்போக்கிலயும் கஷ்டப்பட்டியாமே?” என்றபோது கஸ்துார் சட்டென்று நெகிழ்ந்தவளாக “அதை விடுங்க… எங்களை அங்கே அழைச்சுட்டு வரும்போது ரயில் நிலையத்தில காத்திருப்புக் கூடத்தில உட்கார்ந்திருந்தோம். நாட்டில பிரிட்டிஷ் அரசுக்கெதிரா செய் அல்லது செத்து விடுன்னு அவ்வளவு பெரிய போராட்டம் போயிட்டுருக்கப்ப அங்கே மக்கள் வழக்கம்போல வர்றதும் போறதுமா இருந்தாங்க. நிலைய அலுவலர்கள் புகை பிடிச்சிக்கிட்டு இயல்பா பேசிட்டிருந்தாங்க. கூலிக்காரங்க பிரயாணிகளோட பேரம் பேசிட்டிருந்தாங்க. சுசீலாவோ என்னோட உடம்பு ரொம்ப பலவீனமாவும் காய்ச்சலோடவும் இருக்குன்னு சொன்னா. ஆனா அப்போ என்னோட கவலையெல்லாம் சுயராஜ்ஜிய போரில் உங்களால் எப்படி வெற்றி பெற முடியும்ங்கிறது பத்திதான் இருந்துச்சு”
“நான் ஏன் உன் மேல கோவப்படுறேன்னு இப்ப புரியுதா கஸ்துார்… நாம் கைக்கொண்டிருக்கிறது ஒரு நாட்டோட விடுதலை… அதுவும் அகிம்சை முறையில. இது எத்தனை பெரிய விஷயம்? இதுல அவநம்பிக்கை ஏற்பட்டுச்சுன்னா தொடர்ந்து இயங்கியிருக்க முடியுமா?
“ஓஒ.. அவநம்பிக்கை ஏற்பட்டதாலதான் நான் உங்களோட மனைவிங்கிற ஜபர்தஸ்துல குறுக்குவழியை உபயோகிச்சு நீங்க அடைப்பட்டிருந்த ஆகாகான் சிறைக்கே வந்துட்டேன்னு நினைச்சிருக்கீங்க. அப்படிதானே”
“அதுக்குதான் அப்பவே மகாதேவ்ட்ட விளக்கம் கொடுத்திட்டியே கஸ்துார்ர்ர்ர்ர்ர்…” வார்த்தை தடுமாறியது.
உடலையே திருகிப்போட்டது சரேலென ஊடுருவிய வலியால் அவரால் மேற்கொண்டு பேச இயலவில்லை. அதையறியாமல் கஸ்துார், “நேத்து இருமலுக்காக செஞ்சு வச்ச கிராம்புப்பொடி தீர்ந்துப்போயிடுச்சு. மனுக்கிட்ட தயார் பண்ணச்சொல்லியாச்சா…”என்றாள்.
மோகனிடமிருந்து பதில் ஏதும் வரவில்லை. ஓட்டையாகிப்போன நெஞ்சிலிருந்து இரத்தம் கசிந்துக் கொண்டிருந்தது. மதியம் களிமண் சிகிட்சைக்கு பிறகு மனுவும் ஆபாவும் பிடித்து விட்ட கால்கள் கட்டை போல் கிடந்தன. குரல்கள்… குரல்கள்… எங்கும் குரல்கள். அழுகையில் தோய்ந்த ஓலங்கள். பாபூ… பாபூ… நாளைய நாளிதழ்களில் இச்சம்பவம்தான் பெருஞ்செய்தியோ? இன்றைய நாளிதழில் தாராசிங் என்பவர் காந்தி அரசியலை விட்டு இமயமலைக்கு சென்று ஓய்வெடுத்துக் கொள்ள வேண்டும். அவரால்தான் இத்தனை பிரச்சனையும் என்று கூறியிருந்தார். நேற்று கூட அகதியொருவன் இதேபோலவே அவரிடம் நேருக்கு நேராக நின்று கத்தியிருந்தான்.
துளிதுளியாக பிசிறிக்கிடந்த மேகத்துணுக்குகளை தன்னுள் இழுத்துக் கொண்டு தன் வடிவை ஒழுங்குப்படுத்திக் கொண்டது மேகம். இந்த நான்கு வருடங்களில் தன்னுடலை இழுத்துக் கொண்டு அது எங்கெல்லாமோ அலைந்திருந்தது. “இங்கேர்ந்து பாக்கறப்பதான் போர்பந்தரோட வெப்பமில்லா பகற்பொழுதுகளையும் கடற்காற்றால் குளிர்விக்கப்படும் இரவுப்பொழுதுகளையும் நல்லா உணர முடியுது. கடலின் பிரம்மாண்ட விரிவையும் அது வெண்ணலைகளாக நிலத்தில் மோதி உப்பு நுரைகளாக உடைவதை கொஞ்சமும் அலுப்பில்லாமல் பார்க்கும் நெற்கதிர்கள்போல கத்தியவார் மக்களுக்கு இந்த இயற்கையும் அதோட அழகும் எப்பவுமே அலுக்காது” எண்ணங்கள் எழுப்பிய பெருமூச்சில் சிதறிய மேகப்பிசிறுகள், மோகனின் முகத்தில் வலியை மீறி எழுந்த புன்முறுவலைக்கண்டதும் மீண்டும் ஒன்றுக்குவிந்தன.
”கஸ்துார்… நல்ல ரசிகைதான் நீ”
“ஆ.. நான் என்ன நெனக்கிறேன்னு உங்களால சொல்ல முடியுமா? ஆச்சர்யமா இருக்கு?”
“பதிமூணு வயசிலேர்ந்து உன்னோட சேர்ந்து வாழற எனக்கு நீ என்ன நினைக்கிறேன்னு தெரியாதா?“
அடக்கவியலாமல் எழுந்த சிரிப்பை முடிந்தவரை ஓசைப்படாது காட்டிக் கொண்டாள் கஸ்துார்.
“ஏன் சிரிக்கிற கஸ்துார். உன் தந்தை மகன்ஜி கபாடியா மாதிரி செல்வ செழிப்போ இருபது அறைகளும் இரண்டு தளங்களும் கொண்ட வீடோ என்னிடம் இல்லைன்னு சிரிக்கிறியா? நீ கேட்டாலும் அப்படி அமைச்சுக் கொடுக்கிற எண்ணமெல்லாம் எனக்கிருந்ததில்ல”
“ஏன்.. டர்பன்ல முதன்முதல்ல நாம குடும்பம் நடத்திய வீடு இரண்டு தளங்கள் கொண்ட வீடுதானே?” மீண்டும் சிரித்தாள் கஸ்துார். “என்னோட மரணத்துக்கு பிறகு என்மேலே போர்த்தறதுக்காக நீங்க நுாற்ற நுாலால் நெய்த புடவையை எங்கே பத்திரப்படுத்தி வைக்கறதுன்னு தெரியாம நான் பட்டபாடிருக்கே..”
“எதுக்கு திரும்பவும் சிரிக்கிற?“ எரிச்சலாக ஒலித்தது மோகனின் குரல்.
“ஆகாகான் சிறையிலிருக்கும்போது மகரசங்கராந்திக்கு லட்டு செய்றதுக்காக எள் வரவழைச்சு தர சொல்லி கேட்டப்போ நீங்க என்ன சொன்னீங்கன்னு நினைவிருக்கா மோகன்?”
“ம்.. நாம இப்போ சிறையில இருக்கோம்ங்கிறதை மறந்திடாதே. வீட்ல செய்ய வேண்டியதெல்லாம் இங்க வந்து செய்ய நினைக்காதேன்னு சொன்னேன். அதுக்கு நீ…”
“பொறுங்க.. பொறுங்க.. நமக்கு வீடுன்னு ஒண்ணு இருந்ததா மோகன்? அய்யோ என்னாச்சு மோகன்… ஏன் உங்க முகம் இப்டி வெளிறியிருக்கு? ரொம்ப வலிக்குதா? இனிமே உங்களால எழுந்திரிக்க முடியாது போலருக்கே”
“ஆமா… தோட்டா உள்ளுருப்புகளை துளைக்கிதுன்னு நினைக்கிறேன்”
“ஆ… அதை நீங்க உணர்கிறீர்களா மோகன்”
“ஆமா…” மேற்கொண்டு பேச விடாமல் எண்ணங்கள் ஒன்றுக் குவிந்தன. நான் அவன் கண்களை பார்த்தேன். அவை சலனமற்ற கண்கள். அவன் மனுவை தள்ளி விடுகிறான். அவளுக்கு கூட ஏதோ நடக்கப்போகிறது என்று தெரிந்திருக்கலாம். நான் எதிர்பார்த்து கணித்திருந்த முடிவு வந்து விட்டதோ? ஆம். அப்படியாகதானிருக்க வேண்டும். அந்த இளைஞனின் வலதுக்கையில் துப்பாக்கி இருக்கிறது. இதோ… இதோ… அவன் அதை இயக்கப் போகிறான்.
“மோகன்… மோகன்…” கஸ்துாரின் குரலில் பதற்றமிருந்தது. “கொஞ்சம் பொறுத்துகோங்க… மரணம் வலி நிரம்பியதுதான். நான் என் கடைசி நாட்களில் ரொம்ப கஷ்டப்பட்டிருக்கிறேன். படுக்கவும் முடியாது. உட்காரவும் முடியில. விளக்கெண்ணெய் குடிச்சா எல்லாம் சரியாகிடும் ஒரு நினைப்பு. நம்ப பிள்ளைகளை பார்க்கணும் ஆசை. உங்களோடயே என் மொத்த நேரத்தையும் செலவழிக்கணும் ஒரு ஆவேசம்…”
“ஒரு நிமிஷம் கஸ்துார்… உன்னோட மரணதறுவாயில பென்சிலின் மருந்து போட அனுமதிக்கலேன்னு உனக்கு வருத்தமா?”
“நிச்சயமா இல்லை. அதெல்லாம் முடிஞ்ச கதை. என்னோட மரணம் போல நாள்கணக்கில கஷ்டப்படாம உங்களுக்கு எல்லாமே வெகுசீக்கிரத்தில முடிஞ்சுடும். அதுவரை பேசிக்கிட்டிருப்போம்”
“நல்லது. நீ எதாவது எங்கிட்டே தெரிஞ்சுக்க விரும்புனா கேளு. நான் இந்த வலியை மறக்கணும்”
ஆனாலும் பதற்றமான குரல்கள் வலியை அதிகப்படுத்திக் கொண்டேயிருந்தன. “விடாதீங்க… பிடிங்க… அவன்தான். அய்யோ பாவீ… எங்க பாபூவ கொன்னுட்டீயேடா… பாபூ… பாபூ… அய்யோ… அகிம்சைய போதிச்சவருக்கு இப்படி வன்முறையான முடிவா?
“மோகன்… மோகன்… ஏன் பதிலையே காணோம்? நா பேசுறது கேக்குதா?”
“மன்னிச்சுக்கோ கஸ்துார்… நினைவுகள் தாறுமாறா போவுது. சரி… திரும்பவும் கேளு”
“இத்தனை வலிமையான அரசாங்கத்தை எதிர்த்து நிக்கணும்னு ஏன் முடிவெடுத்தீங்க மோகன்? எதை வேணும்னாலும் செய்யக்கூடிய ஆற்றல் அதிகாரத்துக்கு இருக்கும்போது உங்களுடைய முடிவு தவறுன்னு நீங்க எப்பவாவது நினைச்சிருக்கீங்களா?”
“ஓ.. இதைதானே நீ ஆகாகான் சிறையிலயும் கேட்டுக்கிட்டே இருந்தே”
“ரயில்நிலையத்தில அன்னைக்கு மக்களோட நடப்பை பார்க்கும்போது எனக்கு உங்களோட செயல்பாடுகள் தப்போன்னு தோணுச்சு. அதேசமயம் போராட்டத்தின் விளைவுகளை மக்கள் எத்தனை நாள்தான் தாங்கீட்டு இருப்பாங்களோன்னு பதற்றம் வேற”
“அதுக்கு நான் விளக்கம் கொடுக்க வந்தப்போ நீ என்னோட வார்த்தைகளை காதுல வாங்கிக்கக்கூட தயாரா இல்லையே. அதனாலதான் எனக்கு கோபம் வந்துச்சு. இப்ப என்ன செய்யணும் எதிர்பார்க்கிறே? நீயும் நானும் அரசாங்கத்துக்கிட்டே மன்னிப்புக்கடிதம் கொடுத்துடலாமான்னு கேட்டேன். நான் எதுக்காக மத்தவங்கள்ட்ட மன்னிப்பு கேட்கணும்னு அதுக்கும் கத்துனே.. நீங்களும் எப்படி மன்னிப்பு கேட்க முடியும்னு கோபப்பட்டே… நீங்க செஞ்சதெல்லாம் தொகுத்துப்பாருங்க. உங்களால சின்னப்பொண்ணுங்கள்ளாம் சிறையில அகப்பட்டிருக்காங்க. மகாதேவ் போயேபோயிட்டான். அடுத்தது நான்தான்னு கத்துனே. மரணம் வலிதான். ஆனா விடுதலை”
“போதும். நீங்க விடுதலை விடுதலைன்னு கூப்பாடு போட்டதெல்லாம் போதும். நீங்க ஏன் அவங்கள வெளியேறணும்னு சொன்னீங்க. நம்ப நாடு அளவில பெருசு. அவங்க விரும்பினா இங்கேயே தாரளமா தங்கிக்கலாம்னு சொல்லியிருக்கலாம்ல”
“கஸ்துார்… நானும் அதைதானே சொன்னேன். ஆட்சிப்பொறுப்பிலேர்ந்து அவங்க விலகிட்டா நமக்கும் அவங்களுக்கும் என்ன பிரச்சனை இருந்துடப்போவுது. விருப்பமிருந்தா அவங்க சகோதரர்களா இங்கேயே தங்கிக்கலாம்னு சொல்லலையா நான்?”
பிறகு எழுந்த அர்த்தமான மௌனத்துக்கு பிறகு “சகோதரர்கள்ங்கிற வார்த்தை அர்த்தமிழந்து… அர்த்தமிழந்து..”
“மோகன்… மோகன்… என்னாச்சு உங்களுக்கு? எதையோ முணுமுணுக்கிறீங்க. எனக்கு எதுவுமே காதில விழல”
“சகோதரர்கள்ங்கிற வார்த்தைக்கு என்ன அர்த்தம்னு தெரியில கஸ்துார்” குரல் சற்று விம்மலாக வெளிப்பட்டது.
“மோகன்… அதோட இப்போதைய அர்த்தம்தான் உங்களை சாய்ச்சு கட்டையாக்கி போட்டுருக்கு புரியுதா”
“எனக்கு எதையும் ஞாபகப்படுத்தாதே கஸ்துார். வலி என் உணர்வுகளை ஆக்கிரமித்து விடும். நாம கொஞ்ச நேரம் இப்படியே பேசிக்கிட்டிருப்போம். இது உனக்கான நேரம்னு நினைச்சுக்கோ”
“இல்ல.. உங்க முகம் ரொம்ப வாடிப்போயிடுச்சு. கொஞ்சநேரம் ஆசுவாசப்படுத்திக்கோங்க”
“உண்மைதான் கஸ்துார்…“ வார்த்தைகளாக வெளிப்பட்டவை ஒலியாக மாறவியலாது தடுமாறின. செய்து முடிக்க வேண்டிய வேலைகள் திரையில் தெரியும் படம் போல ஓடிக்கொண்டிருந்தன. காங்கிரஸ் கமிட்டிக்கான புதிய தீர்மானங்களில் இன்னும் திருத்தம் செய்ய வேண்டியிருக்கறதா என்று பார்க்க வேண்டும். டெல்லியில் அமைதி திரும்ப செய்வது குறித்து மதத்தலைவர்களிடம் பேச வேண்டும். கற்றுக்கொண்டிருக்கும் பெங்காலி மொழியில் சகோதரத்துவம் என்பது குறித்து நானே சொந்தமாக ஓரரு வரிகள் எழுத வேண்டும். நேரு, பட்டேல் இருவருக்குமிடையே ஏற்பட்டுள்ள மன விரிசலை போக்க வேண்டும்.
இன்று ஏன் பட்டேலுடன் இத்தனை நேரம் பேசினேன்? சரியாக ஐந்து மணிக்கு பிரார்த்தனை நேரம் கடந்ததை மனுவும் ஆபாவும் கூட உணர்த்தவில்லையே. புல்வெளியை கடந்து பிரார்த்தனை மேடையை அடைந்து விட்டிருந்தேனானால் எல்லாம் மாறியிருக்குமோ? ஆனால் இன்று, தி லைஃப் பத்திரிக்கைக்கான பேட்டியில், நீங்கள் 125 வயது வரை வாழ விரும்புவதாக எப்போதும் சொல்லி வந்துள்ளீர்கள். எந்த நம்பிக்கையில் அப்படி கூறினீர்கள் என்று கேட்டபோது, இனிமேலும் அந்த நம்பிக்கையில் இருக்கவில்லை என்றேன். ஏன் அப்படி சொல்கிறீர்கள்? என்றார் அவர். அதற்கு நான், உலகில் நடக்கும் பயங்கர நடவடிக்கைகளே அதற்கு காரணம். நான் இருட்டில் வாழ விரும்பவில்லை என்று கூறியிருந்தேன். ஆமாம்… நான் உண்மை என்று எதை நம்புகிறேனோ அதைதான் சொல்கிறேன். நான் காலாவதி ஆகி விட்டேன். எனது கண்ணாடியும் செருப்புகளும் கடிகாரமும் சிதறிக் கிடக்கின்றன. என் மார்பில் வெதுவெதுப்பானவும் ஈரமாகவும் எதுவோ பரவுகிறது. அடிவயிறு இருப்பதுபோலவே தெரியவில்லை. ஆம்… நான் சுடப்பட்டு விட்டேன். துப்பாக்கி ஏந்திய அந்த இளைஞனால் நான் சுடப்பட்டிருக்கிறேன். ஆனால் அந்த இளைஞன் குற்றமற்றவன். என்னால் இரைந்து பேசவியலும் என்றால் இதை நான் சொல்லியிருப்பேன். இறுதியாக இந்த உலகை காண்கிறேன். என் கண்கள் இருள்கின்றன. என்னை சுற்றி கூச்சல்களும் அழுக்குரல்களும் ஒலிக்கின்றன. நான் சாவின்சாலையில் அடியெடுத்து வைத்தபோது நேரு தன் அலுவலகத்திலிருக்கிறார். பட்டேல் வீடு திரும்பிக் கொண்டிருக்கிறார். மவுண்ட்பேட்டன் தன் வீட்டில் உரையாடிக் கொண்டிருக்கிறார்.மீராபென் இமயமலையிலுள்ள ஆசிரமத்திலிருக்கிறார்.
“நீ எங்க இருக்கே கஸ்துார்?”
“வானத்தில் மேகமாக குவிந்திருக்கிறேன்… இல்லையில்ல… உறைந்திருக்கிறேன் மோகன்” அவள் மனம் கனிந்திருந்தது.
“உங்களால யாரையும் வெறுக்க முடியாது மோகன். நீங்க தென்னாப்பிரிக்காவில இருந்தபோதே இதையெல்லாம் கத்துக்கிட்டீங்க. போயர்களுக்கு எதிரான போரில் பிரிட்டிஷ்காரங்களுக்கு ஆதரவா தன்னார்வலர்களை ஈடுபடுத்தி ஆம்புலன்ஸ் படையை உருவாக்குனீங்க. தன்னார்வலர்கள் முன் வந்தது உங்க மேல வச்சிருந்த மரியாதையால. நீங்க அவங்களை அழைச்சது பிரிட்டிஷ் பேரரசு மேல கொண்டிருந்த மரியாதையால. இல்லையா மோகன்?”
”அவங்களுக்கு வெற்றிக்கிடைச்சா அரசியல், கல்வி, வணிகம்னு எல்லாத்துறைகளில் நம்ப மக்களுக்கு கூடுதல் வாய்ப்பு கிடைக்குங்கிற சுயநலமும்தான்” சொல்லி முடிப்பதற்கு முன்பே தோட்டாக்கள் திசைக்கொன்றாக நகர்ந்து உடலை வலிகளால் மூடிக் கொண்டன. இது மரணம்தான். மரணம்தான். நான் இந்த பூமியை விட்டு சென்றுக் கொண்டிருக்கிறேன். விரைவில் வேறொங்கோ சென்று விடுவேன். அதுதான் எங்கே?
கஸ்துார் தனக்களிக்கப்பட்ட நேரத்தை நழுவ விட விரும்பவில்லை.
“முதன்முதலாக நான் உங்களோட தென்னாப்பிரிக்காவுக்கு வந்தப்போ நீங்க எனக்காக நேரம் ஒதுக்கணும்ங்கிற ஆசையெல்லாம் இருந்துச்சு. ஆனா முதல் பயணத்தின்போதே நானும் பசங்களும் பிரி்க்கப்பட்டு தனியா போய்ட்டோம். பாஷையும் புரியில. மனுஷரும் புரியில. உங்க நிலைமை வேற என்னாச்சுன்னு தெரியில. அப்றம் வந்த தகவல்ல உங்களை அடிச்சு போட்டுட்டாங்கன்னு சொன்னாங்க”
இடையில் புகும் நோக்கத்தோடு மோகன் மென்மையாக சிரித்தார்.
“நானும் அதை யோசிச்சேன் கஸ்துார். கப்பலேர்ந்து இறங்கி படகில நானும் லாஃப்டனும் பயணம் செய்தப்ப…”
“ரொம்ப பயந்துட்டீங்களா?”
“என்னன்னு சொல்ல தெரியில. படகு மணல்திட்டை கடந்தபோது வலப்பக்கத்தில என்னுடன் விரோதம் பாராட்டும் டர்பன் நகரம். இடப்பக்கம் காடு அடர்ந்த குன்று. அதை தாண்டி பெருங்கடல். தாய்நாட்டை விட்டுட்டும் உங்களை விட்டும் நான் எங்கோ தனியா இருந்தேன். அது எந்தமாதிரியான மனநிலைன்னு சொல்லத்தெரியில கஸ்துார். கரையில இறங்கியதும் அவங்க என்னை அடிச்சபோது கூட அதே மனநிலைதான்”
“கூட்டத்தில யாராவது டாக்டர் இருக்கீங்களா? யாராவது இருந்தா தயவுசெஞ்சு வாங்களேன். பாபூ சுடப்பட்டிருக்கிறாரு. அவருக்கு முதலுதவி கொடுக்கணும். ப்ளீஸ் வாங்களேன்…“ பரபரப்பும் பரிதவிப்புமாக அங்குமிங்கும் அலைமோதும் குரல்கள் மோகனின் பேச்சை நிறுத்தின. கூடவே உடலை பிடுங்கியெடுக்கும் வலி வேறு. பாபூ… பாபூ… அடிவயிற்றிலிருந்து எழுந்த உணர்வுப்பூர்வமான ஓலங்களும், தாங்கவே முடியாது என்று வெடித்து சிதறிய மனதோடு கண்ணீர் வழிய திகைத்து நின்ற கூட்டமுமாக மைதானம் நிதானமிழந்திருந்தது. பிர்லாமந்திரின் முன் முண்டியடித்த கூட்டத்தை சமாளிக்கவியலாமல் நுழைவாயில் மூடப்பட்டது.
“மோகன்… உணர்விழக்காதீங்க. இந்த மக்களை பாருங்க. இது உங்களுக்காக சேர்ந்தக் கூட்டம். அவங்கள ஏமாத்திடாதீங்க. எழுந்திரிக்க முடியுமான்னு கடைசியா ஒரு முயற்சி பண்ணிப்பாருங்களேன்”
“சரி… நிச்சயமா முயற்சி பண்றேன். அதுவரைக்கும் நீ எங்கிட்ட பேசிக்கிட்டே இரு கஸ்துார்… அது உன் கடமையும் கூட. ஏன்னா நீ என் மனைவி”
“அந்த மனைவிங்கிற ஸ்தானத்துக்கு கூட இரண்டு தடவை பிரச்சனை ஏற்பட்டுருக்கில்லையா மோகன்?”
“அப்டியா…? நான் எதையும் யோசிக்கக்கூடிய நிலையில இல்ல. அதிகமா பேசவும் முடியில”
“தென்னாப்பிரிக்காவில நாம பீனிக்ஸ் குடியிருப்பில இருந்தப்ப நீங்க, இன்னும் கொஞ்சம் நாள்ல நான் மனைவிங்கிற அந்தஸ்தை இழக்கப்போறேன்னு சொன்னவுடனே நான் பயந்தே போயிட்டேன். கிறிஸ்துவ முறைப்படி பண்ற கல்யாணம்தான் செல்லும்னு அரசாங்கம் சொல்லிடுச்சாம். அய்யோ.. இதென்ன கூத்து. சட்டத்துக்கு முன்னாடி வைப்பாட்டின்னு பேர் வாங்கறதை விட போராட்டத்தில கலந்துக்கிட்டு சிறைக்கு போனாலும் தப்பில்லேன்னு தோணுச்சு எனக்கு. நான் சிறையிலயே செத்துப் போயிட்டா எனக்கு சிலை வச்சு வழிப்படறதா சொல்லி சிரிச்சீங்க நீங்க”
“ம்… நீ முதன்முதல்ல சிறைக்கு போனது அப்போதானே?”
“ஆமா… ஒரே இடத்தில பார்த்த முகங்களையே பார்த்துக்கிட்டு அடைப்பட்டு கிடக்கிறது ரொம்ப கொடுமை. அதுவும் சிறையில இருக்கோம்ங்கிற நினைப்பே பயத்தை உண்டாக்கிடும். சின்ன சின்ன விஷயங்கள் கூட ரொம்ப பெருசா தெரியும். யாரையும் மன்னிக்க பிடிக்காது. அற்பமான விஷயத்துக்கெல்லாம் சண்டை போடுவோம்”
“நீ சண்டைக்காரி கஸ்துார். அதுசரி கனவான் வீட்ல பிறந்த பெண்ணில்லையா? அதிகாரம் செய்ய கேக்கவா வேணும்”
“அப்டீன்னா நீங்க சொல்றதை கேட்காம நான் தான்தோன்றியா நடந்துக்கிட்டேன்னு சொல்றீங்களோ?”
“அப்டீன்னும் சொல்லல. ஆனா ஹரிஜர்களுக்கு திறந்து விடாத கோயில்களுக்கு போகக்கூடாதுன்னு சொல்லியும் பூரி ஜெகந்நாதர் ஆலயத்துக்கு போயிட்டு வந்தீல்ல?”
“நீங்க அனாவசியமா பேசறீங்க மோகன்.. அதுக்குதான் அப்பவே மன்னிப்பு கேட்டுட்டேன் இல்லையா?”
“ஆனா அதுக்கு நான்தான் உங்கிட்டே மன்னிப்பு கேட்டுருக்கணும். ஏன்னா நான்தான் உன்னோட ஆசிரியர். உன்மேல கவனம் செலுத்தாம விட்டது என் தப்புதான்…”
“நீங்கள் புகட்டறதையெல்லாம என்னால அப்படியே ஏந்திக்க முடியாது மோகன்”
“அப்டீன்னா நீ என்னோட பேச்சை கேட்டுக்கறதுமாதிரி நடந்துக்கறது… அன்னைக்கு மன்னிப்புக் கேட்டதெல்லாம் கூட வெறும் பாவனைகள் தானா?“
“என்னை பத்தி நீங்களே ஒரு முடிவுக்கு வர வேணாம். நீங்க சொல்ற விஷயம் எனக்கு சரின்னு தோணினா நான் அதன்படி நடப்பேன். தென்னாப்பிரிக்காவில மலச்சட்டிய கையிலெடுக்கும்போது என் முகம் மாறினதுக்காக நீங்க ரொம்பவும் கோவப்பட்டீங்க. உங்களோட பேச்சுக்கு என் செயல் கட்டுப்படலாம். ஆனா நான்? அதுவும் இந்த விஷயத்தில, ஆயிரமாயிரம் தலைமுறைகளா இந்துமதத்தலைவர்கள் என்ன போதிச்சாங்களோ அதை நான் புறக்கணிக்கணும். அதுவும் மகிழ்ச்சியோட புறக்கணிக்கணும்னு எதிர்பார்த்தீங்க. இது வன்முறை இல்லையா? இது கூட அகிம்சைக்கு புறம்பானதுதான். ஆனா உங்களோட அதிர்ஷ்டமோ என்னமோ பிறகு நீங்க சொல்ற நிறைய விஷயம் எனக்கு சரின்னு தோண ஆரம்பிச்சிடுச்சு. ஏன்னா நீங்க என் மேல அக்கறையாவும் இருந்தீங்க”
“நல்லது. அதையாவது உணர்ந்திருக்கியே. நிமோனியா காய்ச்சல் வந்து நீ டெல்லியில படுத்துக்கிட்டப்போ தந்தி மேல தந்தி அடிச்சேன் நினைவிருக்கா? தேவதாஸ் வீட்ல வச்சு சுசீலா உன்னை பாத்துக்கிட்டா. நீ என்னோட கடிதங்களையெல்லாம் தலையணைக்கு கீழே வச்சு படிச்சிட்டே இருப்பியாமே”
“நம்ம பிள்ளைங்கள்ளாம் நல்லாயிருக்காங்களா..?” சட்டென்று ஏற்பட்ட நெகிழ்வில் குரல் கரகரத்தது. பிறகு அது உடனே கோபமென எழுந்து “ஹரிலால் நமக்கு பிறந்திருக்கவே கூடாது” என்றது.
“ஆமா. அவனால் நிறைய சங்கடம். நிறைய நிறைய சங்கடமெல்லாம் அனுபவிச்சாச்சு”
“அவனும் உங்களால நிறைய அனுபவிச்சிட்டான். அவன் உங்களோட மறுபாதி மோகன். இருண்ட காந்தி அவன். நீங்க ஒளிரும் ஹரிலால். அவனோட ஏக்கங்களையும் ஆசைகளையும் திமிற முடியாதபடி உங்க கொள்கையால மூடி வச்சிட்டீங்க. அது ஒருகட்டத்தில வெடிக்கதானே வேணும். அவன் அப்படிதான் இருக்க முடியும். அவனால அப்படிதான் இருக்க முடியும்.” அழுத்தம்திருத்தமாக சொல்லி விட்டு கஸ்துார் அழத் தொடங்கினாள்.
“கஸ்துார்… தயவு செஞ்சு புரிஞ்சுக்கோ… நான்..”
“போதும். நீங்க பேச வேண்டாம். புரிதல்ன்னா என்னன்னு தெரியுமா உங்களுக்கு? உங்களை சுற்றிலும் பெண்கள். பெண்கள். பெண்கள். அதும் சரளாதேவிகோசலுக்கு நீங்க ஆன்மிக கணவர் வேற”
“ஓஒ.. இதைதான் உன்னோட மனைவி அந்தஸ்துக்கு வந்த ரெண்டாவது சோதனைன்னு சொன்னியா?”
“ஆமா… ஆமா… ஆமா…”
“கோவப்படாதே கஸ்துார். இது எனக்கு முக்கியமான தருணம். இந்த நேரம் நீ என்னோட சேர்ந்திருக்கறதே பெரும்பாக்கியம்”
மனம் இரங்கியவளாக “என்னோட கடைசிக்காலத்தில நீங்க எங்கிட்ட காட்டிய நேசமும் பொறுப்பும்தான் என்னை இங்க வரவழைச்சிருக்கணும் மோகன்”
வலியை நோக்கி சிந்தையை குவித்து அதை உள்வாங்கிக் கொண்டபோது வலி நின்றிருந்தது. “கஸ்துார்… கஸ்துார்… நமக்குள்ளே சண்டை வேண்டாம். நீ சொல்ல வந்ததை சொல்லு. வலியோட போராடிக்கிட்டே போய் சேர்ந்திட்டேன்னா இனி நாம பேச முடியாமலே போயிடலாம்”
“மோகன்… உங்க வாழ்க்கையே சோதனையும் போராட்டமும்தானே. உங்களோட மகிழ்ச்சின்னா அந்த சோதனையிலிருந்து கிடைக்கும் வெற்றி மட்டுமே. இதுக்கு மத்தியில உங்க வாழ்க்கையை பங்குப்போட நான் வந்துட்டேன். வாழ்க்கையோட கொண்டாட்டங்களை நீங்க வாழ்வியலுக்கு எதிரானதா நினைச்சிட்டீங்க. எங்களையும் நினைக்க வச்சீங்க. மோகன்… ஒண்ணு சொல்லட்டுமா… உங்க வாழ்க்கைக் காலத்தில் விடுதலைக்கான அவசியம் இல்லாம போயிருந்தா கூட நீங்க சுதந்திர போராட்டம் மாதிரி வேற ஒண்ணை தேர்ந்தெடுத்திருப்பீ்ங்க. நல்ல உணவு, இசை, காதல், காமம் இதெல்லாம் அடிப்படை இச்சை. அது வாழ்க்கையை சுவையானதா மாத்தும். இதெல்லாம் உங்களுக்கு புரியப்போறதே இல்லை”
‘கஸ்துார்.. தயவு செஞ்சு கோபப்படாம பேசு. அதை தாங்கற மனநிலை எனக்கிப்போ இல்ல. வீட்டு வேலைகள், ஆசிரமப்பணி, நோயாளிகளை கவனிக்கிறது, தொண்டர்களை சந்திக்கறதுன்னு நீயும் உன் சுமையை பெருக்கிட்டேதான் போனே…”
“ஆமா… உங்க அன்பையும் பொழுதையும் நான் மட்டுமே பகிர்ந்துக்கணும்னு என்னைக்கும் நினைச்சதில்லை. உப்பு சத்தியாகிரகத்தில நீங்க கைதான பிறகு…“
“தெரியும். நீ சொல்ல வேணாம். காவலர்களால தாக்கப்பட்ட தொண்டர்கள் இருக்கிற கிராமங்களுக்கு கால்நடையாவும் மாட்டுவண்டியிலும் பயணம் செஞ்சு அவங்களுக்கு தைரியம் சொல்றதும் சபர்மதி ஆசிரமத்துக்கு வர்றவங்கள தொடர்ந்து சந்திக்கறதுமா இருந்துருக்கே. மணிலாலையும் ராமதாஸையும் சபர்மதி சிறையில வச்சி சந்திச்சப்போ கூட நீ மனம் கலங்கல. இத்தனைக்கும் அவங்க காவலர்களோட கடும் கவனிப்பில நிறைய அனுபவிச்சதை அவங்க முகமே காட்டிக் கொடுத்திருக்கும். இதைதானே சொல்ல வர்றே. இதைதான் நான் நிறைய தடவை கேட்டாச்சே. உன்னோட மனசில அவங்க அனுபவிச்ச வேதனை நிழலா படிஞ்சிருக்கு. அதனாலதான் அது தியாகமா படுது”
இருவருக்குமிடையே மௌனம் சுமையாக கிடந்ததை களைந்து விட முனைந்தாள் கஸ்துார்.
“மோகன்… உங்கள் உடலேர்ந்து கசியும் இரத்தவாடைக்கு ஈக்கள் மொய்க்குது பாருங்க. என் கையெல்லாம் பரபரங்குது மோகன். நான் பக்கத்திலிருந்தா விசிறியால வீசி விடுவேன். நீங்க எழுந்திரி்க்கறதுதான் நல்லது”
“உன் சுத்தக்கார புத்தி இன்னும் போகலயா?“ வலியோடு சிரிக்க முயன்றபோது எதுவுமே முடியாமல் ஆகியிருந்தது புரிந்தது.
“நீங்க உங்க கையால குண்டுகளை வெளிய எடுத்துப் போட்டுடுங்க. நெஞ்சுப்பகுதியில இரத்தம் வர்ற இடத்தில கைய வச்சு தேக்கிக்கங்க. அது போதும். எழுந்திரிச்சிடலாம்”
“இல்ல… நான் எழுந்துக் கொள்ள முடியாதுன்னு முடிவு பண்ணீட்டேன். இனி என்னால் நடக்க முடியாது. பேச முடியாது. பயணம் செய்ய முடியாது. மனு கையில வச்சிருந்த கண்ணாடி கூடுக்கும் குறிப்பேடுக்கும் இனிமே வேலை இருக்காது. என்னோட வெண்ணிற சால்வை இப்ப சிவப்பு நிறமா மாறியிருக்கும். புல்தரையில படுக்கையை விரிச்சு சூரிய ஒளியில் குளிர் காய வேண்டிய அவசியம் இருக்காது. பிப்ரவரி மாதம் வார்தா போறதுக்கு ஏற்பாடு செய்ய சொல்லியிருந்தேன். இனிமே எதற்குமே வாய்ப்பில்லை. உணவு உண்ண வேண்டாம். புன்னகை புரிய தேவையில்லை. எண்ணமோ ஞாபகமோ கூட வேணாம். கடைசியா என் காதுல ஒலிக்கிற உன்னோட குரல் நின்னுடுச்சுன்னா என் மூச்சு மேலெழும்பி மேகத்தில கலந்திடும் கஸ்துார்.”
குளிர்கால சூரியன் ஒடுங்கி மேற்கே சென்றபோது லேசாக எழுந்த காற்று உடலை சிலிர்க்க வைத்தது. அது கஸ்துாரின் ஆடையை படபடக்க வைத்தபோது, மோகன், “கஸ்துார்…. உன் முக்காடை இழுத்து விட்டுக் கொள். விலகுது பார்” என்றார்.
கஸ்துார் கலகலவென்று சிரித்தபடி “நீங்க மகாத்மாவாக இருந்தாலும் ஆண்தாங்கிறதை உணர்த்திட்டீங்க” என்றாள். பிறகு, ”வாழ்க்கை மொத்தத்தையும் அசாதாரணங்களால நிரப்பிக் கொண்ட நீங்க சாதாரணமான வாழ்க்கை எப்படியிருக்கும்ங்கிறத அனுபவத்தில உணரணும். அது அடுத்தப்பிறவியிலாவது உங்களுக்கு வாய்க்கட்டும்”
“சரி… அதிருக்கட்டும். நீ அப்பவும் எங்கூட இருக்க விரும்புறியா?”
“ம்… விரும்பறேன்“ என்றாள் கஸ்துார்.
கேள்விக்கும் பதிலுக்குமிடையே வினாடி நேர இடைவெளி இருந்ததாக இருவருமே நினைத்துக் கொண்டனர்.
***
April 10, 2021 Solvanam
No comments:
Post a Comment