Search This Blog

Friday, 18 January 2019

கவிஞர் மஞ்சுளாதேவியின் பார்வையில்..

எழுத்தாளர் கலைச்செல்வியின் கதைகள் குறித்து..

பிரசவ வெளி கதையை முன்வைத்து....

ஆண் பெண் பேதம் எழுத்திற்கு இல்லை,தான் ஒரு பெண் என்பதற்கான எந்தச் சலுகையையும்,எழுத்துலகம் தனக்குத் தரவேண்டியதில்லை..என்று திடமாக நம்புபவர் கலைச்செல்வி.ஆனால் இங்கு நான் சொல்ல விரும்புகிறேன்இவர் எழுதிய பிரசவவெளி ...என்ற கதை,எல்லா ஆண் எழுத்தாளர்களும் சேர்ந்து எழுதினாலும் எழுத முடியாத கதைபொதுவாக ஜனனத்தையும்,மரணத்தையும் எழுதும் படைப்புகளில்ஒருவிதமான நேர்பொருளற்ற வாக்கியங்களின் உலவலை,நவீனத்துவம் என்ற பெயரில் சந்தித்துத்தான் ஆகவேண்டும்இதற்கு புதுமைப் பித்தனின் சென்னை நகரத் தெருவில் இறந்து கொண்டிருந்தவனின் கதை கூட விலக்கல்ல..ஆனால் சிறு குழந்தையைக் குறியீடாக்கியதன் மூலம் அந்த பூடகத்தை வென்றுவிடுகிறார் பு.பிஆனால் கலைச்செல்வி இத்தகு இடத்தை அனாயாசமாகக் கையாள்கிறார்..செவ்வியல் போக்கின் பலத்தையும்,நவீனப் போக்கின் பலத்தையும் எடுத்து தனதாக்கிக் கொள்ளும் ஒரு தனி நடையைக் கட்டமைக்கிறார்ஒரு பெண் பிரசவத்திற்காக மருத்துவமனையில் நுழைவது முதல் ,குழந்தையோடு வீட்டில் ஆயாசமாகப் படுப்பது வரை எந்த தருணத்தின் துளியும் விடுபடாமல் வடித்து எடுக்கிறார்...பெண்கள் தங்கள் உடல்மொழியின் அப்பட்டத்தால் படைப்பை ஆபாசமாக்குகிறார்கள் என்று குட்டி ரேவதி யிலிருந்து எதிர்கொண்டுவரும் கருத்தியலுக்கான நேர்மைத்திற பதிலாக இக்கதையை எடுத்துக்கொள்ளலாம்.

Wednesday, 16 January 2019

விஷ்ணுபுரம் இலக்கிய விழாக்கள்



கடந்த (2018) டிசம்பர் 21,22 தேதிகளில் கோவையில் நடந்த விஷ்ணுபுரம் விழாவிற்கு சென்றிருந்தேன். கடந்த நான்காண்டுகளாக சென்று வருகிறேன். தமிழகமெங்கும் இலக்கிய முன்னெடுப்புகள்,  அமைப்புகள், விருதுகள், அதை வழங்கும் விழாக்கள் என இலக்கியம் தன்னளவில் கொண்டாடப்பட்டு வருகிறது. இம்மாதிரியான விழாக்களுக்கும் விஷ்ணுபுரம் விழாவுக்கும் நிறைய வித்தியாசங்களை உணர முடிகிறது.


Sunday, 13 January 2019

எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் தளத்திலிருந்து..

இன்று எழுதவரும் பெண்களுக்கு இருக்கும் மிகப்பெரிய சவால் என்பது பெண்ணின் எழுத்துமுறையும் களங்களும் முன்னரே வகுக்கப்பட்டுள்ளன என்பதுதான். எப்படி மரபான குடும்பச்சூழலில் பெண்ணின் இடமும் புழங்குமுறையும் அறுதியாக வரையறை செய்யப்பட்டுள்ளனவோ அப்படி.இன்று ஒரு பெண்ணெழுத்தாளர் வேறுவழியில்லாமல் இரண்டு முகங்களையெ சூடிக்கொள்ள வேண்டியிருக்கிறது. குடும்பச்சூழலை எழுதுபவர். அல்லது பெண்ணியர். முன்னவர் பழைமைவாதி, பின்னவர் புரட்சிக்காரர் அல்லது கலகக்காரர். முன்னவருக்கு பின்னவர் நேர் எதிரி என்பதனால் உண்மையில் முன்னவரே பின்னவரை வரையறைசெய்கிறார். பெண்ணியம் என்றால் என்ன என்றால் அந்தக் குடும்பப்பெண் என்ன சொல்கிறாளோ, எதை நம்புகிறாளோ, எப்படி இருக்கிறாளோ அதற்கு நேர் எதிரானவர், அவ்வளவுதான்.

Friday, 11 January 2019

ரயிலடி

பிப்ரவரி 2019 காக்கைச்சிறகினிலே இதழில் வெளியானது.


அதிவேகரயில் பேரிரைச்சலோடு அந்த சிறிய இரயில்நிலையத்தை கடந்துச் சென்றது. கரங்களால் தாங்கிப்பிடிக்கப்பட்ட அதன் ஜன்னல்களின் மின்னல் வேக நகர்தல் கூட அவனை சலனப்படுத்தவில்லை. நடைமேடையிலிருந்த நீள்இருக்கையில் மல்லாந்து படுத்து, இடதுகையை முகத்துக்கு குறுக்காக நீட்டி கண்களை மறைத்திருந்தான். பயணிகள் ரயில் வரும்போது மட்டுமே இங்கு மனிததலைகள் தென்படும். அதுவரை இப்படியே கிடப்பதில் அவனுக்கு ஆட்சேபணையில்லை.

Tuesday, 8 January 2019

கும்கி

“இடைவெளி“ ஜனவரி 2019 இதழில் வெளியானது



அவற்றின் இலைகள் விரல்களை விரித்தது போன்ற தோற்றத்திலிருந்தன. அதிலும் அழகான விரல்கள். காற்று இலைகளுக்குள் புகுந்தலையும்போது அவை இளம்பெண்ணின் விரலசைவுகளாய் போதையேற்றின. வெளிர்பச்சை நிறத்தண்டுகள் ஊட்டத்தில் கம்பீரமாக நிமிர்ந்து வனமெங்கும் பசுமையாய் அடர்ந்திருந்தன. பசுமை கூட ஒரு போதைதான். தன் அழகில் லயித்துப் போகும் மனங்களை அது அத்தனை சுலபமாக நழுவ விடுவதில்லை. சூழ்ந்திருந்த மலைகள் அந்நிலப்பரப்பை வனத்தீவாக மாற்றியிருந்தன.

அவன் மிகுந்த பசியோடு ஓடைக்கரையில் அமர்ந்திருந்தான்.

அந்த வாத்து தன் சவ்வுக்கால்களை பரத்தி பரத்தி நடந்தது. அதன் முதுகில் பம்மிக் கொண்டு அமர்ந்திருந்த அதன் குஞ்சுகள் தாயின் அதிர்வுகளுக்கேற்ப ஒவ்வொன்றாக நீருக்குள் விழ, தாயோ எதையும் பொருட்படுத்தாது நீலமாக விரிந்திருந்த கடலின் மீது ஒயிலாக நடந்தது. வினோதமான இறக்கைகள் பொருத்திய காட்டுப்பன்றியொன்று அதன் மீது பாய எத்தனிக்க, வாத்து லாவகமாக நகர்ந்துக் கொண்டது. ஒய்யாரமான அதன் நடைக்கேற்ப அதன் தலை பெருத்துக் கொண்டே வந்தது. பாரம் தாங்காமல் தலையை ஒருக்களிப்பாக சாய்த்துக் கொண்டே வாத்து நகர்ந்து மறைய, அதன் பின்புறம் பெரிதாகி, அதனுள்ளிருந்து கரிய மயில்கள் இரண்டு, தோகையோடு வெளிப்பட்டன.  வெளிப்பட்ட அதே வேகத்தில், பசிய முக்கோணமாய் படர்ந்திருந்த மலைத்தொடருக்குள் கருமேகங்களாய் கலைந்து நகர்ந்துப் போயின. பிலுக்குருவிகள் கருமேகம் சூழ்வதை கட்டியம் சொன்னபடி இங்குமங்குமாக பறந்தலைந்தன.