பிப்ரவரி 2019 காக்கைச்சிறகினிலே இதழில் வெளியானது.
அதிவேகரயில் பேரிரைச்சலோடு அந்த
சிறிய இரயில்நிலையத்தை கடந்துச் சென்றது. கரங்களால் தாங்கிப்பிடிக்கப்பட்ட அதன் ஜன்னல்களின்
மின்னல் வேக நகர்தல் கூட அவனை சலனப்படுத்தவில்லை. நடைமேடையிலிருந்த நீள்இருக்கையில்
மல்லாந்து படுத்து, இடதுகையை முகத்துக்கு குறுக்காக நீட்டி கண்களை மறைத்திருந்தான்.
பயணிகள் ரயில் வரும்போது மட்டுமே இங்கு மனிததலைகள் தென்படும். அதுவரை இப்படியே கிடப்பதில்
அவனுக்கு ஆட்சேபணையில்லை.
வெறுப்புணர்வு இயற்கையானது. சொல்லப்போனால்
அதுதான் இயல்பானது. விருப்பத்திற்கான உணர்வை
கூட அதனுள்ளிருந்துதான் உருவி எடுக்க வேண்டும். உண்மையில், ஒருவரோடொவர் புழங்கிக் கொள்ளும்
மொழியே வெறுப்புதான். வேண்டுமானால், அதன் அளவு மாறுபடலாம். வெறுப்பின் அளவு குறையும்போது
விருப்பத்திற்கான உணர்வு வருகிறது. ஆனால் அது அரிதானது. காதல் போன்ற உணர்வுநிலைகளில்
மட்டுமே சாத்தியப்படுவது. அவனது எண்ணவோட்டத்தை ஆமோதிப்பதுபோல இடைவிடாது கரைந்துக் கொண்டிருந்த
காகத்தை கையை லேசாக நகர்த்தி அரைபார்வை பார்த்து விட்டு கண்களை மூடிக் கொண்டான். நடைமேடையில்
கிளை விரித்திருந்த மரத்தின் நிழல் அவனுக்கு எரிச்சலுாட்டியது. பழுப்புநிற நாயொன்று தொங்கும் மடிகளை சரித்துக்
கொண்டு நீள்இருக்கைக்கருகே அமர்ந்துக் கொண்டது. தன்னைவிட அறிவில் குறைந்த ஜீவன்களிடம்
அவனுக்கு வெறுப்பு தோன்றுவதில்லை. அவை சகபோட்டியாளர் அல்ல என்பது காரணமாக இருக்கலாம்.
இப்போது மாலையிடப்பட்ட புகைப்படத்துக்குள்
அவனிருந்தான். முகம் வழக்கம்போல இறுகலாக தோற்றத்திலிருக்க, அடர்ந்த புருவங்களுக்கு
மத்தியில் பெரிதாக பொட்டிடப்பட்டிருந்தது. அதன் முன்பாக விரிக்கப்பட்ட தலைவாழையிலையில்
சால்னா ஊற்றப்பட்ட பரோட்டாவும், பிசுபிசுப்பான கேசரியும், தள்ளுவண்டி மிக்சரும், சேவு
போல இரண்டொரு பலகாரங்களும் பூந்தியும் வைக்கப்பட்டிருந்தன. தனக்கு பிடித்தமானவைகள்
படையலாக்கப்பட்டிருப்பதை கவனிக்கும் நோக்கின்றி எங்கோ பார்த்தபடி இருந்தான் அவன். அப்போதுதான்
துக்கம் நடந்ததுபோல சரோஜா அழுதுக் கொண்டிருந்தாள். இரண்டு பெண் குழந்தைகளுக்கு பிறகு
பிறந்த மகனை பறிக்கொடுத்த சோகம் கண்களிலிருந்து தாரையாய் வழிந்துக் கொண்டிருந்தது.
“பொட்டச்சிங்களா கெடக்கறாளுங்களே..
இவளுங்க என்ன பண்ணீடுவாளுங்கனு எங்கள நம்பாம போயிட்டீயாய்யா..” தலையிலடித்துக் கொண்டு
அழுதாள் சரோஜாவின் தாய். மகளின் நற்காலத்தின் மீதான நம்பிக்கைக்கு பேரனைதான் மையமாக்குவாள்.
“ஒன் மவேன்தான் கொள்ளயா படிக்கிறானுல்ல.. அப்றமும் ஏன் கசக்கீட்டே நிக்கற..” என்பாள்
மகளிடம். அவன் மருத்துவராகி விட முடியும் என்று பள்ளியும் நம்பியது. அவன் நம்பிக்கையை
குலைப்பவனல்ல. சொல்லப்போனால், படிப்பு எவ்வித முன்திட்டமுமின்றி அவனுக்குள் இறங்கியது.
பிறகு, அவன் தன் இலட்சியத்தை அதிலிருந்து உருவாக்கிக் கொண்டான்.
”நாளக்கு அண்ணனுக்கு தீவாளி படயலு
போடுறோம்.. பலவாரம் வாங்கீட்டு போவீயளாம்..” சரோஜா, கந்தன் இட்லிக்கடையில் பாத்திரங்களை
கழுவி அடுக்கி விட்டு மறுநாளுக்கு விடுப்புச் சொல்லி விட்டு வரும் வழியில் தெருச்சிறுவர்களுக்கு
அழைப்பு விடுத்திருந்தாள். சிறுவர்கள் பட்டாசு பொறுக்குவதில் ஆர்வம் கொண்டவர்களாக அலைந்தாலும்,
பலகாரங்களுக்கு ஏங்குபவர்களாகதான் இருந்தனர்.
அவனுடைய சகோதரிகள் இருவருக்கும்
இப்போது திருமணமாகியிருந்தது. சகோதரன் கலகலப்பான பேச்சுக்காரனில்லை என்றாலும், தங்கள்
மீது வாஞ்சையோடு இருப்பவன் என்பதை நினைத்துக் கொண்டபோது, அவர்களுக்கும் கதறலாக அழுகை
வந்தது. சீராக உடைந்த தேங்காயும், அழைத்தவுடனேயே
வந்து லாவகமாக பரோட்டாவை கவ்விக் கொண்ட காகமும் அவர்களின் அப்போதைய நிம்மதியாக
இருந்தது.
சிறுவர்கள் பட்டாசுத் துண்டுகள்
அடங்கிய பையை வெகு பத்திரமாகவும் விருப்பமாகவும் பிடித்திருந்தனர். சரவெடியிலிருந்து
சிதறி விழுந்தவைகளும், ஈரநைப்பில் வெடிக்காது விட்டுப் போனவைகளுமாக சேகரித்த பட்டாசுகள்.
அவனுடைய நண்பர்களும் இதுபோல பட்டாசு பொறுக்க இவனை அழைத்துச் சென்றிருக்கிறார்கள். பாரதி
பூங்காவுக்கெதிரே அழகழகாய் கட்டப்பட்ட வீடுகளின் வாசல்களில், அழகழகாக துணியுடுத்திய
சிறுவர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டிருப்பார்கள். பட்டாசு வெடிக்கும்போது இவர்களுடையதுபோலவே
அவர்களின் முகங்களும் பிரகாசமாக இருக்கும்.
அதீத மகிழ்ச்சியில் இவர்களை நோக்கி சிலசமயங்களில் பட்டாசுகளை வீசுவார்கள். அவற்றை எச்சரிக்கையாகதான்
பொறுக்க வேண்டும். திரியில் நெருப்பு வைத்து விட்டு எரிவதுமுண்டு. அசட்டையாக இருந்து
விட்டால் சில நல்ல வெடிகளை இழக்கவும் நேரிடும்.
”வயசுப்பயலாட்டமா இருக்கே.. நாலஞ்சு
கப்பலு வுட்டு அம்புட்டும் கவுந்துப் போனாப்ல எப்போ பாத்தாலும் நட்டுக்கிட்டு..?” சரோஜாவுக்கு
மகன் கலகலப்பாக இல்லாதது கடைசிவரைக்கும் குறைதான்.
வெறுப்பு நல்லுணர்வு மட்டுமல்ல.
தனிமைக்கும் அமைதிக்கும் உகந்ததும்கூட. கூடவே, தனக்கான ஆட்களை அடையாளங்கண்டு ஒன்றாக்கி
கொள்ளும் வல்லமையும் அதற்கிருந்ததை அவன் கண்டுக் கொண்டான். ஒருவேளை வெறுப்பின் மீது
வெறுப்பு ஏற்பட்டிருப்பின், தனக்கான ஆட்களை அவனால் கண்டுக்கொள்ள முடியாமல் போயிருக்கும்.
அவர்கள் எல்லோருமே வெறுப்பின்வயப்பட்டவர்கள். விரும்பியே வெறுப்பை அடைக்காக்கும் எழுவர்
கூட்டணி அது.
பட்டாசு மருந்துப்படிந்த கைகளை
நீட்டி நீட்டி பலகாரங்களைப் பெற்றுக் கொண்டனர் அந்த சிறுவர்கள். சரோஜா மகனின் நினைவிலிருந்து
மனம் மீள மறுக்க துவண்டு அமர்ந்திருந்தாள்.
”அழகேசு வீடு இதான்னே..?” ஒரு
வெயிற்கால அந்தியில் அந்த காவலர் வந்திருந்தார். எல்லாமே இப்போதுதான் நடந்தது போலிருக்கிறது.
அவளுடைய காலம் சிலநேரங்களில் இப்படிதான் ஸ்தம்பித்து நின்று விடுகிறது. அதேநேரம், செரித்து
தள்ளியவற்றை மீண்டும் வாய்க்கு எடுத்து வந்து அசை போடவும் வைத்து விடுகிறது.
நெருக்கமான வீடுகள் ஒன்றின் மீது
ஒன்று ஏறாமல் இருப்பதே பெரிது. தட்டியோ, சுவரோ, குறைந்தபட்சம் சேலைத்தடுப்பாலோ பிரிந்திருந்த
வீடுகளின் நடுவே, வாசல் எது, உள் எது என்றறியாததுபோல பொத்தாம்பொதுவாக விசாரித்தார்
அந்தக் காவலர். குரலில் அதிகாரம் இல்லாதிருப்பது நல்ல விஷயம். ஆனால் அவர் சொல்ல வந்தது
நல்ல விஷயமல்ல.
கதறலுடன் ரயிலடிக்கு ஓடினாள் சரோஜா.
கூடவே மகள்களும்.
பாரதி பூங்காவின் காவற்காரர் கூட
அவ்வப்போது அவனைப்பற்றிய தகவல்களுடன் வந்திருக்கிறார். வெறுப்பு மனிதர்களுக்கு இயல்பானது
என்பதால் வெறுப்போடுதான் அதை சொல்வார்.. “பொழுதன்னைக்கும் ஒங்க பையன் பூங்காவுலதான்
இருக்காப்பல.. எளவட்டப்பய.. பாத்துக்கங்க.. சொல்லிட்டன் ஆமா..” எச்சரிக்கும் தொனியில்
பேசுவார்.
வெறுப்பு மட்டுமே இயல்பானது. விரும்புவது
என்பது கல்லிலிருந்து நாரை உரித்தெடுப்பதுப் போன்றது என்பதை அவன் உணர்ந்திருந்தாலும்,
வெறுப்பை தக்கவைத்துக் கொள்ள அவனை வீடு அனுமதிப்பதில்லை. ஒற்றையறை வீட்டுக்குள் அது
சாத்தியமும் இல்லை. பூங்காவிற்கெதிரிலுள்ள வீடுகள் இவனுடையதைபோல ஒன்றோடொன்று ஏறிக்
கிடப்பதில்லை. ஐந்நுாறு வீடுகளை அங்கிருக்கும் ஒற்றை வீட்டிற்குள் அடைத்து விடலாம்.
உள்ளுக்குள் தோட்டம் அமைந்த வீடுகள்.. அதில் ஊஞ்சல்கள் கூட இருந்தன. அந்த வீடுகளின்
மனிதர்கள் பஞ்சுபஞ்சான கால்களால் நடமாடுவார்கள். வெளியே வரும்போது கார்கள் அவர்களின்
கால்களாகி விடும்.
”எஞ்சாமீ காவக்காரன் வாயில வுளுவுற..?”
மகனிடம் அழுதாலும், காவலாளியிடம் வம்புக்கு நிற்பாள். “நாக்கிருக்குன்னா என்னமின்னாலும்
பேசிருவியா.. நாளபின்ன அவன் டாக்டருக்கு படிச்சிட்டு வாரப்பில்ல இருக்கு ஒனக்கு..”
ஆனால் அதற்குண்டான குறைந்தளவு
பணத்தை கூட அவளால் புரட்ட இயலாமல் போனது. தேவையான
மதிப்பெண்களோடு நின்ற மகனை அவளால் ஏறெடுத்தும்
பார்க்க இயலவில்லை.
கால்போனபோக்கில் கிளம்பியவன் வீடு
திரும்பியபோது, சரோஜா சத்தெல்லாம் வடிந்தவளாக இருந்தாள்.
”இம்புட்டுநாளு எங்க சாமீ போனே..?”
அழுது மாய்ந்தாள்.
இப்போதும் அவன் திரும்பி வந்திருக்கலாம்.
கந்தன் இட்லிக்கடையில் வேலை தருவதாக
அன்று அவனை வரச் சொல்லியிருந்தார்கள். அங்கிருந்த கண்ணாடி அறையில் நாற்காலியில் சுழன்றபடி
கட்டளை பிறப்பிக்கும் மேலாளரின் திறன் அவனுக்குமுண்டு. அதை அவனை போலவே சரோஜாவும் அறிந்திருந்தாள்.
அவர்கள் இதை அறியாதவர்கள் என்றாலும் அவசரத்துக்கு உதவுபவர்கள். தீபாவளிக்கு துணி எடுத்துத்
தருபவர்கள். இந்தமுறை தனக்கு புடவை வேண்டாம் என்று கூறியிருந்தாள். பதிலாக, பணமாகக்
கொடுத்தால் மகனுக்கு சட்டை எடுத்துக் கொள்வதாக கூற, அவர்கள் சட்டையாகவே எடுத்திருந்தார்கள்.
நீலநிறத்தில் ஒன்றும், பச்சை நிறத்திலொன்றுமாக இரண்டு சட்டைகள். அவனுடைய அளவை விட இரண்டுமே
கொஞ்சம் பெரியவையாக இருந்தன. அவைகளை பணிவோடு வாங்கிக் கொண்டான். கடல் நீர் உள்வாங்குவதால்
அது அடங்கிவிட்டதாக அர்த்தமில்லை. விசும்பியெழும் பேரலைகள் பூமியை சுருட்டிக் கொள்ள
தயங்கவா செய்கிறது?
கதறித் துடித்தது குடும்பம். தண்டவாளத்தின்
ஒன்றரை ஜல்லிக்குவியிலில் அவனுடல் கிடந்தது. முகம் நிறையவே சிதைந்திருந்தது. ஓங்குதாங்கான
உருவமும், நீலநிற சட்டையும் உடலை அடையாளம் காட்டின. உடல் முழுக்க இரத்தக்காயங்கள் வேறு.
பதறி, கதறிய குடும்பத்திடம், பிரேத பரிசோதனைக்குப் பிறகு உடலை ஒப்படைத்தது காவல்துறை.
அவர்கள் வெறுப்பை விரும்பமாக ஏற்றுக்
கொள்பவர்கள் என்ற வகையில், அவர்களை இயல்பை மீறாதவர்கள் என்றும் சொல்லலாம். அதேசமயம்
எல்லா உணர்வுகளும் ஒரு புள்ளியில் மாறத் தொடங்கி விடும் என்பது அவர்களுக்கு தெரிந்திருந்தது,
மாற்றி விடும் வழிமுறைகளையும்தான். அந்த புள்ளியை நோக்கி துல்லியமாக நகர்ந்துக் கொண்டிருந்தனர்.
பிறகெல்லாம் வசந்தம்தான். அப்போது அவர்களின் கால்கள் பஞ்சுப்போல மென்மையாக மாறிவிடும்.
உலகம் இன்பமயமானது.
ரயில் தடதடப்பாக நகர்ந்து, பொழுதை
சாயங்காலத்துக்குள் நுழைத்திருந்தது. சந்தடிகளை கரைத்துக் கொண்டு பொட்டல்வெளிக்குள்
நுழைந்தபோது சூரியன் கொஞ்சமே மீதமிருந்தது. வண்டியின் அதிர்வுகள் கருவேலஞ்செடிகளை பேய்களாய்
அடையாளங்காட்டின. வண்டி நகர்ந்தபிறகு அதன் பேயாட்டம் குறையலாம். ஆனால் அதற்குள் இருள்
கட்டிக்கொண்டு விடும். தடக்.. தடக்.. என்ற அதனொலியில் இறுமாப்பு தொனிக்கவில்லை. பணம்
இறுமாப்பு அளிப்பது. நிகரற்ற நிலையை உணர வைப்பது. தனது பெட்டிகளில் ரிசர்வ் வங்கியில்
சேர்ப்பிப்பதற்கான பணக்கிடங்கு இருப்பதன் உணர்வு ஏதுமின்றி அது நிதானமாக நகர்ந்துக்
கொண்டிருந்தபோதுதான் அந்த பெட்டிகளின் மேற்கூரைகள் நுாதனமாக திறக்கப்பட்டது.
குளிரூட்டியின் குளிர் தலைவலியை
உண்டாக்கியது. எழுந்து அமர்ந்துக் கொண்டான். அருகருகே படுத்துக் கிடந்த அந்த எழுவரின்
வயதை சராசரியாக இருபத்தைந்துக்குள் அடங்கலாம். வெளியே, முற்றம் போல விரிந்திருந்த பகுதியில்
அமர்ந்துக் கொண்டான். இது எந்த ஊர், எந்த மாநிலம் என்பதெதுவும் அவனுக்கு தெரியாது.
சொல்லப்போனால் உள்ளே உறங்கிக் கொண்டிருப்பவர்களை கூட ஆறேழு மாதங்களாகதான் அறிந்திருந்தான்.
ஆனாலும் நம்பிக்கையானவர்கள். அவர்களுக்கு அவனுடைய மூளை தேவைப்பட்டது. அவனுக்கு அவர்களின்
திறமையும் துணிச்சலும் தேவைப்பட்டது.
வெறுப்பின் உச்சத்தை தொட்டுவிடும்போது
அது நெகிழ்ந்து வழியத் தொடங்குகிறது. துல்லியமான திட்டமிடலுக்கு பிறகு அவர்கள் உச்சம்
நோக்கி பயணிக்கும் நோக்கோடு ஓரிடமாக சேர்ந்துக் கொள்ள முடிவு செய்தார்கள். இரண்டொரு
துணிமணிகளை முதுகுப்பையில் அடைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறுவதை மட்டுமே அவன்
நினைத்திருந்தான். யாரோ தண்டவாளத்தில் தலை நசுங்கி இறந்துக் கிடந்ததை பார்க்கும் எண்ணமேதும்
அந்த திட்டத்திலில்லை. இவன்தான் அதை முதலில் பார்த்திருக்க வேண்டும். தற்கொலையோ, விபத்தோ
பிரித்தறிய ஏதின்றி இருள் கவிழ்ந்துக் கிடந்தாலும், குப்புறக்கிடந்த ஓங்குதாங்கான உருவம்
தன்னையொத்திருந்தது அவனுக்குள் சுயபச்சாதாபத்தை கிளர்தெழுப்பியது. நிச்சயம் தற்கொலையாகதானிருக்க
வேண்டும். இறந்துக் கிடப்பவனுக்கும் பஞ்சுப்போன்ற கால்களைக் குறித்த ஏக்கம் இருந்திருக்கலாம்.
அம்மாதிரியான கால்களை கொண்டவர்கள் விட்டெறியும் பட்டாசுகள் வெறியை ஏற்படுத்தியிருக்கலாம்.
விரும்பியதை அடைய முடியாமல் போவது நரகத்தில் நாட்களை கழிப்பதைப் போன்றது. பிறகெல்லா
நாட்களும் அடிமைகளாக, கூலிகளாக மாறி, மணம் புரிந்து, குழந்தைகள் பெற்று, அவற்றை பட்டாசுப்
பொறுக்க அனுப்பி..
இருள் பழகிப்போனதில் அதன் அடர்த்தி
நெகிழ்ந்து உதிர்ந்திருந்தது. இறந்துக் கிடந்தவனின் உடலிலிருந்து சூடான ரத்தம் பொங்கி
வழிந்தும் சிறிது உறைந்துமாகவும் கிடந்தது. அவனுக்கும் யாரோ சட்டையை தானமாக அளித்திருக்க
வேண்டும். அணிய விருப்பமின்றி போனதால் அது இறந்தவனின் உடலிலிருந்து விலகிக் கிடந்தது.
மற்றவர் பார்வையில்படும்வரை உடல் குளிரில் கிடக்க வேண்டியிருக்கும். முதுகுப்பையிலிருந்த
நீலநிறச்சட்டையை தொய்ந்துக் கிடந்த அதன் கைகளின் வழியே ஏனோதானோவென்று நுழைத்தபோது கூட
யாரும் வந்திருக்கவில்லை. பாவப்பட்டவன். எல்லோருக்கும் தனக்கு வாய்த்ததை போல நல்ல நண்பர்கள்
வாய்த்து விட முடியாது. அந்த துரதிர்ஷடத்தில்தான் இவன் ரயிலின் முன் விழுந்திருக்க
வேண்டும்.
இருளின் வழியாக மிதந்து வந்தபோது
தெரியாத அயற்சி இருப்புப்பாதை வெளிச்சம் கண்களில் பட்டபோது ஏற்பட்டதாக உணர்ந்தான்.
நல்லவேளையாக அவனுக்கான ரயில் அங்கு காத்திருந்தது.
நண்பர்கள் ஒவ்வொருவராக அழகேசனை
தேடி முற்றத்திற்கு வந்திருந்தனர். உறக்கத்தை அனுபவிக்க விடாத வசந்த அழைப்புகள் கனவுகளாக
தோன்றியிருக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டான். கட்டுக்கட்டாக நோட்டுக்கட்டுகள். பத்து,
இருபது, ஐம்பது, நுாறு என்ற சில்லறை நோட்டுக்கட்டுகள் அல்ல அவை. எல்லாமே பெரிய நோட்டுகள்.
கட்டுக்கட்டான நோட்டுகள். ஒரு கட்டிலிருக்கும் நோட்டுகள் மட்டுமே கூட ஒருவனை லட்சாதிபதியாக்கி
விடும். அல்லது அரை லட்சாதிபதியாகவாவது ஆக்கி விடும். அதைபோன்ற ஆயிரங்கணக்கான கட்டுகள்
அவர்களிடமுண்டு. மிதப்பதுபோல நடந்து சென்று உறங்கி, மீண்டும் கனவுகளில் அதையே கண்டு
மிதந்தனர்.
பொழுது பொலபொலத்து விடிந்துக்
கொண்டிருந்தது.. அது நவம்பர் மாதத்தின் 8 ஆம் நாள், ஆண்டு 2016.
சரோஜா இன்னமும் அழுதுக் கொண்டிருந்தாள்.
***
No comments:
Post a Comment