Search This Blog

Tuesday 8 January 2019

கும்கி

“இடைவெளி“ ஜனவரி 2019 இதழில் வெளியானது



அவற்றின் இலைகள் விரல்களை விரித்தது போன்ற தோற்றத்திலிருந்தன. அதிலும் அழகான விரல்கள். காற்று இலைகளுக்குள் புகுந்தலையும்போது அவை இளம்பெண்ணின் விரலசைவுகளாய் போதையேற்றின. வெளிர்பச்சை நிறத்தண்டுகள் ஊட்டத்தில் கம்பீரமாக நிமிர்ந்து வனமெங்கும் பசுமையாய் அடர்ந்திருந்தன. பசுமை கூட ஒரு போதைதான். தன் அழகில் லயித்துப் போகும் மனங்களை அது அத்தனை சுலபமாக நழுவ விடுவதில்லை. சூழ்ந்திருந்த மலைகள் அந்நிலப்பரப்பை வனத்தீவாக மாற்றியிருந்தன.

அவன் மிகுந்த பசியோடு ஓடைக்கரையில் அமர்ந்திருந்தான்.

அந்த வாத்து தன் சவ்வுக்கால்களை பரத்தி பரத்தி நடந்தது. அதன் முதுகில் பம்மிக் கொண்டு அமர்ந்திருந்த அதன் குஞ்சுகள் தாயின் அதிர்வுகளுக்கேற்ப ஒவ்வொன்றாக நீருக்குள் விழ, தாயோ எதையும் பொருட்படுத்தாது நீலமாக விரிந்திருந்த கடலின் மீது ஒயிலாக நடந்தது. வினோதமான இறக்கைகள் பொருத்திய காட்டுப்பன்றியொன்று அதன் மீது பாய எத்தனிக்க, வாத்து லாவகமாக நகர்ந்துக் கொண்டது. ஒய்யாரமான அதன் நடைக்கேற்ப அதன் தலை பெருத்துக் கொண்டே வந்தது. பாரம் தாங்காமல் தலையை ஒருக்களிப்பாக சாய்த்துக் கொண்டே வாத்து நகர்ந்து மறைய, அதன் பின்புறம் பெரிதாகி, அதனுள்ளிருந்து கரிய மயில்கள் இரண்டு, தோகையோடு வெளிப்பட்டன.  வெளிப்பட்ட அதே வேகத்தில், பசிய முக்கோணமாய் படர்ந்திருந்த மலைத்தொடருக்குள் கருமேகங்களாய் கலைந்து நகர்ந்துப் போயின. பிலுக்குருவிகள் கருமேகம் சூழ்வதை கட்டியம் சொன்னபடி இங்குமங்குமாக பறந்தலைந்தன.


மொட்டுகள் அவிழ்ந்து வாசம் பரவிக்கிடந்த இளங்காலை நேரமது. நீரில் கனத்திருந்த கொடாலி மரங்களையும்  பரளிப் புதர்களையும் கள்ளி மரங்களையும் அதிகாலை மேலும் அழகாக்கிக் காட்டியது. சொடலிப் புதருக்குள்ளிருந்து செம்போத்துகள் குரலெழுப்பிக் கொண்டிருந்தன. ஆண்காடை, கள்ளியில் அமர்ந்திருந்த அதன் பெண்டுக்கு குட்டுருக்.. குட்டுருக்.. என குரல் அனுப்பிக் கொண்டிருந்தது. கழஞ்சிப்புதரில் வண்டாரிக் குருவி அலறிக் கொண்டிருந்தது. குகைப் போன்றிருந்த மரச்சந்துகளில் ஈரம் கசிந்தது. கனிந்த பூமியில், இரவு பெய்த மழை லேசான சொதசொதப்பை ஏற்றியிருந்தது.


அவன் தன் கரிய கால்களை ஓடை நீரில் நட்டு, நீளமான முதுகை வளைத்து, கைகளை குவித்து நீரையள்ளிப் பருகினான்.

காற்று குளிர்ந்திருந்தது. பூஞ்சாரலை உள்வாங்கிய ஓடை கொலுசுக் கட்டிய கால்களாய் சலசலத்து நகர்ந்துக் கொண்டிருந்தது.  கரையெங்கும் மரங்கள் கிளைகளை விரித்து பரவியிருந்தன. மரங்களை அப்பிக் கிடந்த கொடிகள் வழக்கத்தை விட வாளிப்பமாயிருந்தன. அதிகாலைக்கு மயங்கிய பறவைகளின் கீச்சொலிகளால் ஓடை நிறைந்திருந்தது. கிளையொன்றில் பம்மலாக அமர்ந்திருந்த ஆத்திப்பறவை தன் மஞ்சள்நிற சிறகையசைத்து பெரிய குடைபோல விரிந்திருந்த கரும்பாறையில் அமர்ந்து நீர் பருகியது. தணக்க மரக்கிளையில் அமர்ந்திருந்த சூதாரிக்குருவி சிறகுகளை படபடத்துக்கொண்டு பரளிப்புதரில் அமர்ந்துக் கொண்டது.

ஓடைக்கு கிழக்கே குடிசைகள் நிரவலாக பரவியிருந்தன. கால்நடைக்கான பட்டிகள் தடித்த வேலிகளால் மூடப்பட்டிருந்தன. பட்டிமாடுகள் செரித்த உணவை அசைத்துக் கொண்டிருக்க, அதன் சாணத்தை வண்டுகள் கடத்திக் கொண்டிருந்தன. ஆடுகளுக்கு இடைவிடாமல் பேசிக்கொள்ள வார்த்தைகளிருந்தன. வளமையில் பூமி மினுமினுத்தது. வளர்ப்பு தாவரங்களின் மணம் காற்றில் மென்மையாய் பரவியிருந்தது. மங்கலான மஞ்சள் நிறத்திலிருந்த தேன் சிட்டுகள், பூரிப்பாய் வளைந்திருந்த வாழைப்பூவின் மடல்களிலிருந்த இளந்தேனை உறிஞ்சிக் கொண்டிருந்தன.  பைகள் போன்று தொங்கிக் கொண்டிருக்கும் அதன் கூடுகளில் குஞ்சுகள் தேனுக்காக வாய் பிளந்து காத்திருக்கக்கூடும்.

வாழையின் சருகுகளை நோகாமல் கழித்துக் கொண்டிருந்த கானன், திடுக்கென எழுந்த எச்சரிக்கை உணர்வில் வேகமாக திரும்பினான். நீரை பருகிக் கொண்டிருந்தவனுக்கும் அதே திடுக்கிடலிருந்தது. கைகளில் அள்ளிய நீரை ஓடையில் சரித்து விட்டு, கைகளை கட்டி, உடலை குறுக்கிக் கொண்டு நின்றான். அவனது உருண்டையான கண்களில் அச்சமிருந்தது. சாரல் அவனை நனைத்திருந்தது.

அந்நிய வாசனையற்ற பூமியில் இவன் புதிது. மிகவும் புதிது.  கானனில் குரலுக்கு மூப்பனின் தலைமையில் குடிசைகள் கூட்டமாயின. அவர்கள் கரிய நிறத்தில் படர்ந்த நாசியும் தடித்த உதடுகளும் கோடு போன்ற கண்களும் கொண்டவர்களாக இருந்தனர். அவர்களின் கைகள் வலிமையானவை.  உடல்கள் வைரம்பாய்ந்த மரங்களை போன்றிருந்தன. ஆயினும், ஒற்றை ஆளை எதிர்ப்பதில் சம்மதம் இல்லாதவர்களாக அவனை சூழ்ந்துக் கொண்டனர்.

பார்வையில் கெஞ்சலை நிறைத்து கண்களை தாழ்த்தி அவர்களை நோக்கினான். பிறகு மெல்லிய வாயைக் குவித்து பேசத் தொடங்கினான். அவன் உதட்டிலிருந்து எழுப்பிய ஓசைகள் ஒன்று சேர்ந்து வார்த்தைகளை உருவாக்கின.                                                                                             
”நான் வழித்தவறிய மூடன்.. என் கூட்டத்தாரை எங்கோ தவற விட்டு விட்டேன்..”

கூட்டம் சில வினாடிகள் அதிர்ந்துப் போனது. ”ஹா.. நீ பேசுவது எங்களின் மொழி..  இதை நீ எங்ஙனம் அறிவாய்..?”.

ஆனாலும் அவன் சொன்னான்.. ”இது எங்களின் மொழி..”

ஒருவேளை தங்கள் கூட்டத்திலிருந்து தவறியவனோ..? நம் கூட்டத்தை சேர்ந்தவர்கள் என்றேனும் எப்போதேனும் வெளியேறி இச்சமூகத்தின் தொடர்ச்சியை வளர்த்தெடுத்திருக்கிறார்களா..? அல்லது உலகம் முழுக்க இதே மொழியைதான் பேசிக் கொள்கிறார்களா..? அப்படியாயின் சேகரித்த தேனையும் மூலிகைகளையும் வாங்க சந்தையில் கூடும் மக்கள் ஏன் இந்த மொழியை அறிந்திருக்கவில்லை..? நிமிட நேரத்தில் குழம்பிப் போனாலும் கேள்வியை தொடர்ந்தனர்.

”எப்படி தவற விட்டாய் உன் கூட்டத்தாரை..?” குரல்கள் தணிந்திருந்தன.
           
”ஒருமுறை வேட்டைக்காக கானகத்துக்குள் நுழைந்து சென்றுக் கொண்டிருந்தோம். அடர்கானகத்தின் அழகு என்னை கவர்ந்திழுக்க, வந்த நோக்கம் மறந்து அங்கேயே தங்கி விட்டேன். என் கூட்டத்தார் என்னை தேடி தவிக்க, நானோ அவர்கள் எழுப்பிய ஒலிகளுக்கு பதிலெழுப்ப தவறி தவறிழைத்து விட்டேன்..”

வாழைக்கனிகளை ஆர்வமாக உண்டவாறே பேசினான் அவன்.

அவன் கானகத்தில் தனித்திருந்த வேளையில் மூர்க்கமான கரடியை பின்புறமாக சந்திக்கும்படி நேர்ந்தததாக சொன்னான். தன் முதுகில் சுமந்திருந்த  சிறிதளவு உணவையும் அதனிடன் இழக்க நேரிட்டதாம். உண்ணத் தகுதியற்ற பழங்களை கொண்ட மரங்கள் அடர்ந்திருந்ததால் அவனால் எதையும் உண்ண முடியவில்லை. பரிச்சயமற்ற காட்டுப் பாதையால் இத்தனை நாள் நேசித்து வந்த ஒளிரும் சூரியனையும் நீல வானத்தையும் கூட வெறுக்க நேரிட்டதாம். அவற்றால் கூட அவனுக்கு வழிக்காட்ட இயவி்ல்லை. பொங்கி வரும் நீர்வீழ்ச்சியில் சிக்கிக் கொண்டு நீரின் சூழற்சியில் இழுத்துச் செல்லப்படவிருந்த தருணத்தி்ல் சட்டென்று அகப்பட்ட மரத்தின் வேரை கட்டிக் கொள்ள, அது தன்னை இழுத்து வந்து வேகம் தணிந்த காட்டாற்றில் தள்ளி விட்டதாகவும், பிறகு தான் இங்கு கரைசேர்ந்ததாகவும் தெரிவித்தான்.

களியும், முருங்கையிலைக் கூட்டும் அன்று அவனுக்கு அதிகமாகவே தேவைப்பட்டன. கூடவே ஓய்வும்.

அறுவடை நெருங்கிக் கொண்டிருந்தது. கதிர்கள் பழுப்படைய துவங்கும் நேரத்தில் யானைகளின் நடமாட்டம் அதிகமிருக்கும். இம்முறை அதன் வரத்து குறைந்திருந்தது. உள்காட்டில் மூங்கில் பெருத்திருக்கலாம். ஆனாலும் முற்றிய கதிர்களின் வாசம் அவற்றை எப்போது வேண்டுமானாலும் இழுத்து வந்து விடும். இரவு முழுக்க காவலிருக்க வேண்டும். இரண்டு நாட்களில் சந்தை கூடி விடும். அதற்குள் தேன் சேகரிக்க வேண்டும். கிராமம் மொத்தமும் பரபரப்பிலிருந்தது. பலகுப்பூக்களில் ஈக்கள் மொய்த்துக் கிடந்தன. பயிரப்பூக்களின் தேனை உறிஞ்சிக் கொண்டு பறக்கும் ஈக்களை தொடர்ந்தால், தேன்கூடு இருக்கும் திசையை கண்டுப்பிடித்து விட முடியும். எயிரம்மன் துணை வாய்த்ததில் நான்கு தேன் ராட்டுகளை கண்டுப்பிடித்து வைத்திருந்தனர்.

எயிரம்மன் கோவிலுக்கு செல்லும் பாதை ஆளுயர செடிகளாலும் உயர்ந்திருந்த மரங்களாலும் அடர்ந்திருந்தன. பச்சிலைகள் காடாய் முளைத்துக் கிடந்தன. கோயிலையொட்டி வளர்ந்திருந்த வேங்கை மரத்தில் வடிந்திருக்கும் பாலைத் ஒத்தியெடுத்து கொடுவாளுக்கு பொட்டிட்டு, எயிரம்மனை வணங்கிய நேரத்தில்  சகுனா குருவி எங்கிருந்தோ கத்தியது.

தேன் சேகரிக்க தானும் வருவதாகக் கூறியிருந்தான் அவன். புதியவன் ஒருவனுடன் கைசாடைகளை உபயோகிக்காமல் பேசிக் கொள்வது அவர்களுக்கும் பிடித்துதானிருந்தது. நீள்பயணத்தில் பாறைகள் செறிந்த பொட்டல் பூமியையும் கடக்க வேண்டியிருந்தது. பாறைகளில் அமர்ந்து ஆசுவாசித்துக் கொண்டனர். பார்க்கும் தொலைவுகளில் பாறைக்குகைகள் நிறைய காணப்பட்டன.



“எங்கள் மூதாதையர்கள் உறங்கும் கல்பதுகைகள் இவை” அவன் கேட்காமலேயே அவர்கள் சொன்னார்கள்.  

இரண்டு பெரும்பாறைகளை நெட்டுக்குத்தாக நிறுத்தி, அதன் மேற்பரப்பை மற்றொரு பெரும்பாறை கொண்டு இணைத்து உருவாக்கிய குகை போன்ற தோற்றத்திலிருந்தன கல்பதுகைகள். வழியெங்குமிருந்த கல்பதுகைகளை தங்கள் மூதாதையரின் உடற்பலம் குறித்த பெருமிதத்தோடு அவனுக்கு சுட்டிக் காட்டினார்கள்.

”அதனுள் ஓவியங்கள் கூட வரையப்பட்டுள்ளன..” என்றார்கள்.

அவன் முகத்தில் தெரிந்த அசதி அவர்களுக்கு ஆச்சர்யமளித்தது. வனமனிதன் காட்டுப்பயணத்திற்கெல்லாம் அசரக் கூடியவனா என்று எண்ணிக் கொண்டாலும், பசியாக இருந்திருக்கும் என்று ஆற்றிக் கொண்டார்கள்.

பால மரத்துக்கருகே புடைப்பாக தெரிந்த மண்ணை இடதுகாலால் தட்டினான் கூனன். மண் பொலபொலத்திருந்தது. கிழங்குகள் இருக்க வாய்ப்பதிகம். கூராக்கப்பட்ட வதியைக் கொண்டு ஊஞ்சன் மண்ணை கொத்திப் போட, கூட்டாளிகள் அதனை செரட்டையால் அள்ளி வீசினர். மண் நெகிழ்ந்துக் கொடுக்க, அகப்பட்ட கிழங்குகளை பிடுங்கிக் குவித்தனர். காய்ந்த சருகுகளை குவித்து சக்கிமுக்கி உரசி தீ வைத்தனர். கிழங்குகளை முன்னும்பின்னுமாக நகர்த்தி தீயில் வாட்டினர். வெந்த கிழங்கு வாசத்துக்கு எல்லோருக்குமே பசி வந்தது. தீயில் கருகிய தோலை சிறுதடியால் அடித்து உரித்து வீசி விட்டு ஆளுக்கொன்றாய் எடுக்க, கிழங்குகள் நொடிநேரத்தில் தீர்ந்துப் போயின.

”இன்னும் தொலைவு நடக்க வேண்டியிருக்கும்.. உன்னால் இயலுமா..?”

மூப்பனின் கேள்விக்கு உற்சாகமாக தலையாட்டினான். அன்றுதான் அவன் பாடத் தொடங்கியிருந்தான்..

வள்ளி வள்ளி வள்ளி வனந்திலே
வள்ளி வனந்தனிலே
கிள்ளி கிள்ளி வள்ளி கிழங்கெடுப்போம்
வள்ளி கிழங்கெடுப்பொம்.
காடு வெட்டி வள்ளி கல்பொறுக்கி
வள்ளி கல்பொருக்கி
மூங்கில் வெட்டி வள்ளி முள்பொருக்கி
வள்ளி முள்பொருக்கி
கழக்கே மேக்கே சாலோட்டி வள்ளி சாலோட்டி
வள்ளி சாலோட்டி
தெக்கே வடாக்கே வள்ளி வழுதரக்கி
வள்ளி வழுதரக்கி

கூட்டம் அவனோடு சேர்ந்துக் கொண்டது.

லாலலெ லலே லாலலெ லலல லலலிலெ
லாலலெ லலெ லாலலெ லலல லலலிலெ

மூப்பன் அப்புதியவனுக்கு மாயன் என்று பெயர் சூட்டினான்.

அவர்கள் புற்றுமண் கொண்டு சுவரெழுப்பி, அதன் உட்பகுதியை சாணத்தால் மெழுகினர். வெளிப்புறச்சுவரை சாம்பல் நீரால் பூசி, காராச்சி மரத்தையும் பைர மரக்கட்டைகளையும் ஜவுனக்கொடிகளால் இணைத்து விட்டம் அமைத்தனர். வாலைப்புல்லால் கூரை வேய, மாயனுக்கு கூடு போன்ற வீடு உருவானது.

எயிரம்மனின் கருணையில் கேழ்வரகு நல்ல மகசூல் காட்டியது. அதில் மாயனுக்கும் மகிழ்ச்சியே. அவன் தங்களோடு சேர்ந்ததும் நல்ல நேரம்தான் என அவர்களும் கொண்டாடினர். மான்கறி வாசத்துக்கு தான்தோன்றியாய் திரிந்த செவலைநாய்க்குட்டி சுற்றி சுற்றி வந்தது. நல்ல தாட்டியமாக வளரக்கூடிய உடல்கட்டு அதற்கு. ஊஞ்சன் ராகிப்பிட்டை உருண்டையாக்கி அதற்குள் மானின் குடலை திணித்து வீச, பாய்ந்துக் கவ்விக் கொண்டது. அதன் பார்வை முழுக்க அவன் கையிலிருந்த உருண்டைகளின் மீதே இருந்தது. வாலையும் உடலையும் குழைத்துக் கொண்டு அவனருகே வந்து உரச, ஊஞ்சனும் கானனும் அதை நகரவிடாமல் அமுக்கிப் பிடித்தனர். குருவன் அதன் தலையை நிமிர்த்த கூகன், குண்டுமசார் செடியின் இலையை கசக்கி அதன் மூக்கில் சொட்டுசொட்டாக பிழிந்தான். திமிறி குரைத்தது. கையாலாகாதுபோக, ஈனஸ்வரத்தில் அழுது அடங்கிய செவலையின் மீதான பிடியை தளர்த்த அது மலங்க மலங்க விழித்து தும்மத் தொடங்கியது. பிறகு இடைவெளியின்றி மூக்கு உடையும்வரை தும்மிக் கொண்டேயிருந்தது. இனி இரை எங்கிருந்தாலும் மோப்பம் பிடித்து விட முடியும். மானை வளைத்து பிடிக்கும். விருகனை கவ்விக் கொண்டு வந்து சேர்க்கும். தேன்வேட்டைக்கு கிளம்பும். அவர்கள் கைக்காட்டும் வேலையை வாலாட்டிக் கொண்டு செய்து முடிக்க பழகிக் கொண்டது செவலை.



மாயன் நாயை தடவிக் கொடுத்தான்.

கற்பாறைகள் மழைநீரை தேக்கி திடீர் ஓடையை உருவாக்கியிருந்தது. மாயன் குறுந்தொட்டி இலையை கல்லில் உரசி புற்றுமண்ணோடு வழித்து உடலில் தேய்த்துக் கொண்டான். தலையில் தேய்த்திருந்த பூச்சைக்கொட்டையின்  நுரை ஓடையில் வழிந்தோடியது. உடலை கழுவிக் கொண்டு மேலேறியவனின் காலில் ஜொடலி முள் தைக்க, வலியில் அலறினான். இழுப்பக்கொட்டை பொறுக்கிக் கொண்டிருந்த பெண்கள் உதவிக்கு ஓடி வந்தனர். முள்ளை உருவி, குத்துவாயில் குத்திரிக்கா எண்ணெய் தடவியதில் வலி நீங்கியிருந்தது. அவன் மெல்ல குரலெடுத்து பாடத் தொடங்கினான்.

பாதயிலே ஜொடலி முள்ளு துாகேக்கொடி பொன்னம்மா
தொட்டதெல்லா மரிக்கொழுந்து துாகேக்கொடி பொன்னம்மா

பாதயிலே ஜீல்லி முள்ளு துாகேக்கொடி பொன்னம்மா
தொட்டதெல்லா மரிக்கொழுந்து துாகேக்கொடி பொன்னம்மா

மாயனுக்கு பாடுவதற்கு பிடித்திருந்தது. மரங்களையொட்டி உருவாக்கிக் கொள்ளும் வசிப்பிடங்களை குறித்து பாடினான். ஆளண்டாபகுதியை கண்டறிந்து குடியேறிய அவர்களின் தீர்க்கமான அறிவைக் குறித்துப் பாடினான். அவர்களின் பலத்தைக் குறித்துப் பாடினான். ஆங்கிலேயர்களுடன் போரிட்ட அவர்களின் வீரம் குறித்துப் பாடினான்.

வாராண்டா வாராண்டா வெள்ளாக்காரெ
பாரஸ்டு தாயோலி தொப்பிக்காரெ
சோ ஆலொலம் ஆலொலம் ஆலொலமெ கூட்டம் கைக்கொட்டியது
தெக்கயும் வடக்கயும் திரும்பிப்பாரு
சித்தாடே சண்டைக நாடாக்கூம் பாரு
பட்டத்து ஆனேகா ஆங்கெ
பரலாக்கண்டென் நம்து
விடாத்து கவுளிகா சொல்லக் கண்டென்
சோ ஆலொலம் ஆலொலம் ஆலொலமெ

உச்சந்தொனியில் எழும் அவனது பாடல்களுக்காக மாலை நேரங்களை அவர்கள் ஒதுக்கத் தொடங்கினர். பதிலாக வள்ளிக்கிழங்கை பக்குவமாக்கி கொடுத்தனர். கேப்பை பிட்டும் முருங்கையிலைக் கூட்டும் அவனுக்கு பிடித்திருப்பதை அறிந்திருந்தனர். கல்லுள்ளியை அவன் விருப்பமாக உண்பதை காண பிடித்திருந்தது அவர்களுக்கு. அவர்களின் அன்பைக் குறித்துப் பாட பிடித்திருந்தது அவனுக்கு. மாயனை மகனாகவே வரித்துக் கொண்டான் மூப்பன்.



கங்காலு சீமேக்கெ பதிரப்ப
ஓடிதனெ போகமோ முனக்கபொண்ணு
ஓடிதன போகாக்கி பதிரப்ப
காலும் கையும் நோகுமொ மினுக்கபொண்ணு
காலும் கையும் நோந்தாக்கி பதிரப்ப
குக்கிதனெ போகமோ மினுக்க பொண்ணு

கூட்டம் கோரஸ் வைத்தது.

லல்லாலெ லாலாலெ லாலாலெ
லல்லாலெ லாலாலெ லாலாலெ

கீரையும் தேனும் கேழ்வரகும் அலுக்கவில்லையா..? என்றான் மாயன் ஒருநாள், எப்போதோ கிடைக்கும் உடும்புக்கறியும் அணிலும் கடமானும் கனவில் மட்டுமே கிடைக்கும் கரடியும் அடிக்கடி உண்பதற்கு ஆசையில்லையா என்றபோது அவர்கள் நாவில் நீரூரியது. இதை தவிர நிறைய ருசியான உணவு வகைகள் உலகில் உண்டு என்றான்.

”அவை ஈச்சம்பழம், காளப்பழத்தை விட ருசியாக இருக்குமோ..?

”அதை விடவும்..”

”விளைவிப்பது எங்ஙனம்..”

”நான் அறிவேன் அந்த வித்தையை..”

”விதை..?”

மாயன் கையை பிரித்துக் காட்டினான்.

செடிகள் தெப்பமாய் வளர்ந்தன.
அவற்றின் இலைகள் விரல்களை விரித்தது போன்ற தோற்றத்திலிருந்தன. அதிலும் அழகான விரல்கள். காற்று இலைகளுக்குள் புகுந்தலையும்போது அவை இளம்பெண்ணின் விரலசைவுகளாய் போதையேற்றியது. வெளிர்பச்சை நிறத்தண்டுகள் ஊட்டத்தில் கம்பீரமாக நிமிர்ந்து வனமெங்கும் பசுமையாய் அடர்ந்திருந்தன.
அன்று பால் முசுறுகளை சேகரிக்க சென்ற போதுதான் அவர்களை பார்த்தனர். அவர்கள் உருண்டையான கண்களில் அன்பை தேக்கியவர்கள். உயரஞ்சாரமாக இருந்தாலும் பணிவானவர்கள். புதிய ருசியான உணவுகளை அளிக்க வல்லவர்கள். சில சமயங்களில் மான்களையும்.. சில சமயங்களில் கரடிகளையும். மாயன் அளித்த விதைகளிருந்து ருசியான உணவு அவர்களுக்கு கிடைக்கவில்லை என்றாலும் அதற்கு மாற்றாக, பரோட்டா, ரொட்டி என்றழைக்கப்படும் புதிய ருசி மிகுந்த உணவுகளை அவர்களால் தர முடிந்தது. கூடவே இப்புதிய தாவரங்களை மேலும் மேலும் விதைக்க, அறுக்க, சுமக்க, மலையிலிருந்து இறக்க, காட்டு மரங்களை வெட்டி வீழ்த்தி அடுக்க, இப்புதிய தாவரங்களுக்கான விவசாய நிலங்களை உருவாக்க என அவர்களுக்கு நிறைய வேலைகள் இருந்தன. அதற்கு நீண்டநேரம் தாக்கு பிடிக்கத் தோதாக இருந்தன அந்த ருசியான உணவுகள்.
செவலை நாய்கள் வாலையும் உடலையும் குழைத்தப்படி உடல்களை உரசின.
***

1 comment:

  1. வர்ணனைகள் மிகவும் அழகு

    ReplyDelete