Search This Blog

Friday 24 February 2023

தென்னாப்பிரிக்கா பற்றி மகாத்மா காந்தியின் பேச்சுகள், கட்டுரைகள் – ஒரு பார்வை



அவர் 1893 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தின் ஒரு நாளில் தனிப்பட்ட நோக்கத்திற்காக அல்லது பொருளாதார தேவைக்காக தென்னாப்பிரிக்கா செல்கிறார். ஆனால் 1896 ஆம் ஆண்டின் மத்தியில் அவர் இந்தியாவுக்கு திரும்பி வந்தது அவருடைய சொந்த நோக்கத்திற்காக மட்டுமல்ல. இந்தியா வந்த அவரை தென்னாப்பிரிக்கா மீண்டும் அழைக்கிறது, அதுவும் அவசரமாக. அவரும் அதை சிரமேற்கொண்டு தென்னாப்பிரிக்கா புறப்படுகிறார். அவரின்றி ஏதும் இயங்காது என்று தென்னாப்பிரிக்க இந்தியர்கள் கருத, அவர்தான் எல்லாவற்றையும் துாண்டி விடுகிறார் என்று தென்னாப்பிரிக்க ஐரோப்பியர்கள் எண்ண, இவற்றை குறித்து பெரும்பாலும் ஏதுமறியாத சுமார் எண்ணுாறு இந்தியர்கள் கோர்லண்ட் மற்றும் நாடேரி என்ற பெயர்களைக் கொண்ட இரு கப்பல்களில் அவருடன் பயணித்து தென்னாப்பிரிக்காவின் நேட்டால் துறைமுகத்துக்கு சென்று சேர்கின்றனர். அவர்களுள் முதன்முதலாக தன் கணவனின் கரம் பற்றிக் கொண்டு கிளம்பிய இளம் மனைவி கஸ்துாரும் அடக்கம். அந்த இளம் தம்பதிகள் அவர்களது சொந்த மகன்கள் இருவரோடு அக்காள் மகனையும் உடன் அழைத்து வந்திருந்தனர்.

பிழைப்புக்காக தென்னாப்பிரிக்காவுக்கு சென்ற நம் இந்தியர்களின் கடின உழைப்பும் தொழிற்திறனும் அங்கு வந்தேறிகளாக இருந்து அதிகாரத்தை கைப்பற்றிய ஐரோப்பியருக்கு அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது. அவர்கள் அம்மண்ணை சார்ந்த பழங்குடியினர்களை அடக்கி ஒடுக்கி வைத்திருப்பதைப் போன்று இந்தியர்களையும் அடிமைகளாக்கி, அவர்களின் உரிமைகளை மறுத்து உழைப்பை மட்டும் உறிஞ்சிக் கொள்ளும் நோக்கோடு புதிய புதிய அடக்குமுறைகளை அமல்படுத்த எத்தனித்தனர்.

புகைவண்டிகளிலும் டிராம் வண்டிகளிலும் முன்னிருக்கையிலோ முதல் வகுப்புகளிலோ அமர இந்தியருக்கு அனுமதியில்லை. கோச்சு வண்டிகளில் உட்புறம் அமர முடியாதுஎப்படிப்பட்ட குளிர்க்காலம் என்றாலும் ஐரோப்பியரை போல கட்டணம் செலுத்தியிருந்தாலும் வண்டிகளின் வெளிப்புறம் தொற்றிக் கொண்டுதான் பயணிக்க வேண்டும். எத்தனை வசதிப் படைத்த ஆசியர் என்றாலும் உணவகங்களில்  அமர்ந்து உண்ண முடியாது.  ப்பல் உரிமையாளரேயாயினும் அவர் இந்தியர் என்றபட்சத்தில் கூலி முதலாளி என்றுதான் அழைக்கப்படுவார். நடைப்பாதைகளில் நடக்கையில் எந்நேரமும் அவமதிக்கப்படலாம். இம்மாதிரியான பராபட்ச நடவடிக்கைகளை மற்ற இந்தியர்களை போன்று இயல்பாக எடுத்துக் கொள்ளவியலாத அவரது மனபோக்கு அவரை அரசியலுக்கு இழுத்து வந்திருக்க வேண்டும். 1893க்கும் 1896க்கும் இடையிலான மூன்றாண்டுகளுக்குள் அவர் தென்னாப்பிரிக்க இந்தியர்களுக்கு நெருக்கமாக மாறியிருந்ததோடு அவர்களின் உரிமைகளை மீட்பதற்கென நேட்டால் இந்தியர் காங்கிரஸ் என்ற அமைப்பையும் ஏற்படுத்தியிருந்தார்.

அதன் தொடர்ச்சியாக அவர் 1893 ஏப்ரலில் இந்தியா திரும்பியதும் தென்னாப்பிரிக்காவில் இந்தியர்கள் நடத்தப்படும் விதம் குறித்தும் அவர்களின் மூன்றாந்தர நிலைக் குறித்தும் துண்டு பிரசுரங்களை எழுதி வெளியிட்டார். எல்லா பத்திரிக்கையாளர்களாலும் கவனிக்கப்பட்ட அப்பிரசுரங்கள் சில பத்திரிக்கைகளில் பிரசுரமுமாகின. அதன் பிரதிகள் இந்தியா முழுவதிலும் சுமார் ஐயாயிரம் வரை விற்பனையாகின. தவிரவும், அவர் பம்பாய், பூனா, சென்னை போன்ற முக்கிய நகரங்களுக்கு பயணம் செய்து பரப்புரை ஆற்றினார். தனது உரைகளில், நேட்டால் சட்டசபை, இந்திய குடியேற்ற திருத்த மசோதாவை கொண்டு வருவதால் இந்தியர்களின் வாக்குரிமை பறிக்கப்படும் அபாயத்தை எடுத்துக் கூறினார். அந்நேரம், பிழைப்புக்காக இந்தியர்கள் அதிலும் குறிப்பாக தமிழர்கள் அதிகளவில் தென்னாப்பிரிக்காவிற்கு சென்றிருந்தனர். ஏற்கனவே இருக்கும் அவமதிப்பு போதாதென, இனரீதியாக இயற்றப்படும் சட்ட மசோதாவுக்கு பிரிட்டிஷ் மன்னரின் அனுமதியும் கிடைத்துள்ளதை அவரது பரப்புரைகளின் மூலமும் துண்டு பிரசுரங்களின் மூலமும் கேள்விப்பட்ட உறவினர்கள் தென்னாப்பிரிக்காவிலிருக்கும் தத்தம் குடும்பத்தினரின் நிலைமைக் குறித்து பரிதவித்துப் போயினர். 

அவர் தென்னாப்பிரிக்க இந்தியர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு ஆதரவு வேண்டி இந்தியாவில் முக்கிய ஆளுமைகளை சந்திக்கத் தொடங்கினார். கோகலேயின் குருவான நீதிபதி ரானடே, தாயப்ஜி, ஸர் பிராஸ்ஷா மேத்தா, சுரேந்தர்நாத் பானர்ஜி என அவர் சந்தித்த மனிதர்களின் பட்டியல் நீண்டுக் கொண்டேயிருந்தது. முத்தாய்ப்பாக பாலகங்காதரத் திலகரையும் கோகலேயையும் சந்தித்தார். இடையிடையே தனது சொந்தக் குடும்பத்தையும் கவனித்து வந்திருப்பாராக இருக்கும். அவர் அதை மட்டுமே செய்திருந்தால் தென்னாப்பிரிக்க பிரிட்டிஷாருக்கு பிரச்சனை இருந்திருக்காது.  பொதுநல செயல்பாடுகளில் அவரின் மனோவேகமும் செயல் வேகமும் செறிவான திட்டமிடலும் குறுகிய காலக்கட்டத்திற்குள் அவர் இந்தியர்களிடம் பெற்றிருந்த செல்வாக்கும் ஆளும் வர்க்கத்தை அச்சுறுத்தியிருக்க வேண்டும்.

அவர் கல்கத்தாவில் இது சம்பந்தமாக பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடுகள் செய்துக் கொண்டிருந்த நேரத்தில், தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரிலிருந்து நவம்பர் மாத இறுதியில் அவருக்கு தந்தி வந்திருந்தது.

பார்லிமெண்ட் ஜனவரியில் ஆரம்பமாக உள்ளது. விரைவில் திரும்புக

தந்தியைக் கண்டதும் அவர் உடனடியாக தென்னாப்பிரிக்காவுக்கு கப்பல் ஏறி விட்டார். அது டிசம்பர் மாதத்தின் முதல் வாரம்.

ஆனால் அதே அவசரத்தோடு நேட்டால் துறைமுகத்தில் அவரால் கரையிறங்க முடியவில்லை. விடுமுறைக்கு தாய்நாடு வந்தவர்கள், டிரான்ஸ்வாலை சேர்ந்தவர்கள், தென்னாப்பிரிக்காவில் வியாபாரம் செய்பவர்கள் என பலதரப்பட்ட இந்தியர்களை நீரில் கட்டி இழுந்து வந்த கப்பல்களுக்கு அவர்களை கரையில் இறக்கி விட அரசாங்கத்திடமிருந்து ஆதரவு சமிக்ஞை கிடைக்கவில்லை. வந்து சேர்ந்து இருபது நாட்களுக்கு மேலாகியும் அவர்களால் நிலத்தில் கால் பதிக்க முடியவில்லை. இந்தியாவில் பிளேக் நோய் பரவிக் கொண்டிருக்கிறது என்பதால்தான் இந்தியர்களுக்கு அரசாங்கம் அனுமதி மறுக்கிறது என்று முதலில் பேசிக் கொண்டார்கள். பிறகு வேறேதோ காரணங்களையெல்லாம் சொல்லிக் கொண்டனர். கஸ்துார் கணவரின் அருகில் ஒடுங்கிக் கொண்டாள். அவள் கணவர், இங்கிலாந்தில் படித்து பாரிஸ்டர் பட்டம் பெற்றவரின் மனைவியான அவளை அதற்கேற்ப ஆடை, அணி அலங்காரங்களை செய்துக் கொள்ள சொல்லியிருந்தார். சிறுவர்கள் கூட நாகரீக உடைகளை அணிந்திருந்தனர்.

மோகன்லால் கரம்சந்த் காந்தி என்ற பயணிதான் இதற்கு காரணமாம்…’

கப்பலில் இருந்தவர்களுக்கு அவரை குறித்து பெரிதாக எதுவும் தெரியவில்லை.  

அவர் தென்னாப்பிரிக்க இந்தியர்களுக்கு சாதகமாக இந்தியாவிலிருந்து படைத் திரட்டிக் கொண்டு வந்திருக்கிறாராம்

மனைவிக்கு கூட அந்தளவுக்கு தெரியவில்லை. கணவர்தான் காரணமா…? உடல் நடுங்கியது. அணிந்திருந்த உடையின் அன்னியத்தன்மை, கடல் பயணம், புதிய தேசம், புதிய மொழி, புதிய மக்கள் என எவையெல்லாம் அவளை பரவசப்படுத்தியிருந்ததோ அவையெல்லாம் இப்போது அவளுக்கு முன்பாக பயமுறுத்திக் கொண்டு நின்றது. சிறுவர்களோ கடல் பயணத்தின் ஒவ்வாமையால் வாந்தி எடுத்தப்படியே வந்திருந்தனர். சூழ்ந்து நின்ற கடல் ஓயாது எழுந்து, அடங்கி, எழுந்து, அடங்கி அவள் மனமும்தான்.

எல்லோரும் கிளம்பலாமாம்

வீசுவது பெருங்காற்றென்றாலும் அது மென்மையான மல்லிகைத் தோட்டத்தை வருடிக் கொண்டு வருகையிலும் எழும் இனிய சுகந்தத்தை அனுபவிப்பது போன்று சட்டென்று எழுந்த நிம்மதியோடு அவள் மகன் ஹரிலாலை அருகில் அமர்த்திக் கொண்டாள். இனி எல்லாம் சுகமேஹரிலால் தாயாரின் விரல்களை தனது சின்னஞ்சிறு கைக்குள் பொத்தி வைத்துக் கொண்டான்.

ஆனால் அவள் கணவர் இப்போதைக்கு இறங்க வேண்டாமாம். அவர் குடும்பம் வேண்டுமானால் இறங்கிக் கொள்ளலாமாம் யாரோ எஸ்கோம்பு என்பவராம். அவர் செய்தி அனுப்பியிருந்தார்.

அந்த குஜராத்திக் கூட்டு குடும்பத்தின் இளைய மருமகள் திணறிதான் போனாள். மூன்றாண்டுகளுக்கு முன்பு கணவனை தென்னாப்பிரிக்காவுக்கு அனுப்பி வைத்தபோது அவள் கணவருக்கு வெறும் இருபத்துநான்கு வயது மட்டுமே. அவளுக்கும் அதே வயதுதான். தற்போது இருவரும் இருபத்தேழு வயதுகளிலிருந்தனர். மனைவிக்கு குடும்பமும் அதை சார்ந்த வேலைகளும் மட்டுமே பழக்கம். அதிலும் கூட்டுக்குடும்ப வாழ்வில் திணறடிக்கும் வேலைகளுக்கு மத்தியில் குழந்தைகளை கவனிப்பதற்கு கூட அவளுக்கு பொழுதிருக்காது. சொல்லிக் கொடுக்கவோ அள்ளி அணைக்கவோ கணவனும் அருகிலிலில்லை. கணவரோ இந்த வயதிற்குள் இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா என்று இரண்டு வெளிநாடுகளில் புழங்கி வந்திருக்கிறார். அங்கு என்ன செய்து தொலைத்தாரோ தெரியவில்லை

அவள் கணவரை நிமிர்ந்து நோக்கினாள். அவர் தைரியமாகதானிருந்தார்.

ஆனால் அவளுக்கு ஏதும் புரியவில்லை. கணவரை கைது செய்து விடுவார்களோ…? அடித்துப் போட்டு விடுவார்களோ…? இவர் எப்படி அத்தனை பேரையும் சமாளிப்பார்? இவரை சிறையிலடைத்து விட்டால் நான் எப்படி போராடி இவரை மீட்பேன். ஆனால் இங்கு அவருக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார். இப்போது கூட ருஸ்தம்ஜி என்ற நண்பரின் வீட்டிற்குதான் அழைத்துச் செல்வதாக  கூறியிருந்தார்.

கஸ்துார்நீ பிள்ளைகளை அழைத்துக் கொண்டு ருஸ்தம்ஜி வீட்டுக்கு சென்று விடுநான் வந்து விடுகிறேன்

சீக்கரம் வந்துடுங்க

ம்ம்

பத்திரம்….

ம்ம்நீ பார்த்து போஏற்கனவே பசங்க இருபத்து மூணு நாளா கரையில காத்திருந்து வாடி போயிட்டாங்கநீ அவங்களை பத்திரமா பார்த்துக்கோ

மனைவியின் தோளில் குடும்ப பாரத்தை ஏற்றி விட்டு அவர் தெருவில் இறங்கி நடந்தபோது அவர் மீது படபடவென்று அடிகள் விழுந்தன. நல்லவேளையாக அந்த கமிஷனரின் மனைவி அந்நேரம் பார்த்து அங்கு வந்துக் கொண்டிருந்தார்.

காந்தி, தான் எழுதிய தென்னாப்பிரிக்க சத்தியாகிரகம் என்ற நுாலில் தனது தென்னாப்பிரிக்க அரசியல் வாழ்வை பதிவாக்கியிருக்கிறார்பதினேழு தொகுப்புகளாக பகுக்கப்பட்டுள்ள காந்தியடிகளின் எழுத்துகளில் சத்தியாகிரக  நுால் முதலாவது தொகுதியின் முதல் பகுதியாக உள்ளது. அதன் இரண்டாவது பகுதியில் தென்னாப்பிரிக்காவில் இருந்த காலக்கட்டத்தில் அவர் ஆற்றிய உரைகள், ஆளுமைகளுக்கும் மற்றவர்களுக்கும் எழுதிய கடிதங்கள், பிரசங்கங்கள் ஆகியவை தொகுக்கப்பட்டுள்ளன.  இவை தென்னாப்பிரிக்க சத்தியாகிரகம்நுாலில் காந்தியடிகளால் கூறப்பட்ட நிகழ்வுகளுக்கு அத்தாட்சிகளென உரிய தேதிகளுடனும் சீரிய குறிப்புகளுடனும் இணைக்கப்பட்டுள்ளன.

1905 நவம்பர் 22 ஆம் தேதி பிரிட்டிஷ் இந்திய சங்கத்தலைவர் அப்துல்கனியும் காந்தியும் மற்ற மூவரும் அடங்கிய துாதுக்குழு ஒன்று ஹை கமிஷனர் லார்ட் செல்போர்ன் அவர்களை சந்திக்கிறது. இந்தியர்களுக்கெதிராக புதிதுபுதிதாக கொண்டு வரப்படும் அடக்குமுறை சட்டங்கள் குறித்து முறையீடு செய்வதே அக்குழுவின் நோக்கம். அதற்கென தயாரித்து எடுத்து வந்திருந்த அறிக்கையை அவரிடம் சமர்ப்பிப்பதற்கு முன்பாக காந்தி, கமிஷனரிடம் இரண்டு ஆட்சேபங்களை முன் வைக்கிறார். அதிலொன்று, ஹை கமிஷனர் செல்போர்ன் தனது சமீபத்திய டிரான்ஸ்வால் பயணத்தின்போது, அகதிகளல்லாத பிரிட்டிஷ் இந்தியர் எவரும், அடுத்தாண்டு பிரதிநிதிகளின் சபை இவ்விஷயத்தை பரிசீலனை செய்வதற்கு முன்னால், காலனிக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள், என்று கூறியது. மற்றொன்று,  “கூலிக்காரக் கடைக்கார்கள்“   என்று அவர் உபயோகித்த சொற்பிரயோகம்.  

பின்னாட்களில் அவர் உலகளாவிய தலைவர்களையும் வைஸ்ராய்களையும் நிர்சலனமாக சந்திப்பதும் தனது கருத்துகளை அச்சமின்றி முன் வைப்பதற்கும் இம்மாதிரியான  முன்னுதாரணங்களை அவரது தென்னாப்பிரிக்க அரசியல் வாழ்விலிருந்து எடுத்துக் கொள்ளலாம்.

ஆசியர்களை பாதிப்பதற்கென்றே டிரான்ஸ்வாலில் சட்டம் கொண்டு வரப்படுகிறது.  இச்சட்டத்திற்கு பிரிட்டிஷ் அரசின் அங்கீகாரம் கிடைத்து விடாதபடி காந்தியடிகள் செய்த முயற்சியெல்லாம் வீணாயின. 1907 டிசம்பர் 26-ல் அச்சட்டத்திற்கு பிரிட்டிஷ் மன்னரின் அங்கீகாரம் கிடைத்து விடுகிறது. அதன் விளைவாக, ஆசிய சமூகங்களை சேர்ந்த தலைவர்கள் பலருக்கும்  மாஜிஸ்டிரேட் முன் ஆஜராகும்படி சம்மன்கள் அனுப்பப்பட்டன. சட்டப்படி பதிவு செய்ய மனுப்போடாததால் அவர்கள் டிரான்ஸ்வாலை விட்டு குறிப்பிட்ட தேதிக்குள் வெளியேறி விட வேண்டும் என்றும் தவறினால் இரண்டுமாத வெறுங்காவல் தண்டனை என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்ததுஅதன்படி கைது செய்யப்பட்டு நீதிமன்றத்துக்கு கொண்டு வரப்பட்டவர்களில் காந்தியும் ஒருவர். இப்போது அவர் தென்னாப்பிரிக்க இந்தியர்களின் மனங்கவர்ந்த நாயகன். அவரை காண்பது கூட பெரும்பாக்கியம்தான். அந்த நற்பேற்றை பெற வேண்டி மக்கள நீதிமன்றத்தில் குவிந்தனர். தடுப்புகள் துாக்கியெறியப்படுமளவுக்கு அங்கு நெரிசல் ஏற்பட்டது. நீதிமன்றத்தில் அவர் தன் தரப்பு வாதத்தை முன் வைக்க அனுமதி கேட்டபோது மாஜிஸ்டிரேட் மறுத்து விடுவதோடு, நாற்பத்தெட்டு மணி நேரத்தில் காலனியை விட்டு வெளியேற வேண்டும் என்றும் உத்தரவிடுகிறார்.

அவர் அந்த உத்தரவை தெரிந்தே மீறுகிறார். மீண்டும் நீதிமன்றத்திலிருந்து அழைப்பாணை வருகிறது. அவர் 1908 ஜனவரி 11 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகிறார். உத்தரவுக்கு அடிபணியாமை குறித்த நீதிமன்றத்தின் கேள்விக்கு, தான் தவறை ஒப்புக் கொள்வதாக பதிலறிக்கிறார். மேலும் இது போன்ற குற்றங்களுக்கு என் சகாக்களுக்கு மூன்று மாத கடுங்காவல் தண்டனையுடன் கூடிய அபராதம் விதித்துள்ளீர்கள் எனவும் அதை கட்டத் தவறினால், மேலும்  மூன்று மாதங்கள் கடுங்காவல் தண்டனை நீட்டிக்கப்படும் எனவும் தீர்ப்பு வழங்கியதை நான் அறிவேன். அவர்கள் செய்தது குற்றமானால் அதை விட பெரிய குற்றம் செய்த எனக்கு கடுமையான தண்டனை தாருங்கள் என்கிறார்.

அவர் இந்தியாவுக்கு திரும்பி விட்ட பிறகு சம்பாரணில் அவுரி தோட்ட விவசாயிகளுக்கு ஆதரவான போராட்டத்தில் ஈடுபடுகிறார். சம்பாரண் மாவட்டத்திலிருந்து உடனடியாக வெளியேற நீதிமன்றம் அவருக்கு உத்தரவிடுகிறது. அவர் வெளியேற மறுத்து விடுகிறார். அப்போராட்டத்தின்போது அவர் நீதிமன்றம் நோக்கி எழுப்பிய இம்மாதிரியான அறரீதியான வாதங்கள் அவரை நோக்கி இந்திய மக்களை திரும்ப வைத்தன.

அவருடைய தென்னாப்பிரிக்க வாழ்க்கையில் நீதிமன்றங்கள், சிறை வாசம் என்பன பிரிக்க முடியாதவைகளாக மாறிக் கொண்டிருந்த காலக்கட்டம் அது. 1913 ஆம் ஆண்டு நவம்பர் 11 ஆம் தேதி அவருடைய வழக்கு டண்டீ மாஜிஸ்டிரேட் முன்பாக விசாரணைக்கு வருகிறது. இந்திய ஒப்பந்தக்கூலிகளை மாகாணத்தை விட்டு போய் விடும்படி துாண்டினார் என்பது அவர் மீதான முக்கிய குற்றச்சாட்டு.

காலனிக்கு வெளியே அம்மக்களை அழைத்துச் சென்றது சிறந்ததொரு நோக்கத்திற்கேமற்றபடி முதலாளிகள் மீது எனக்கு எந்தவித விரோதமும் கிடையாதுஇந்த போராட்டத்தால் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் நட்டத்திற்கு வருந்துகிறேன்ஆனால் விதிக்கப்பட்டிருக்கும் வரி என் நாட்டாரால் தாங்கமுடியாத பளுஅவை நீக்கப்படும் வரை பணிக்குச் செல்ல வேண்டாம் என்றும் தானமாக கிடைக்கும் உதவிகளை கொண்டு வாழுமாறும் அவர்களுக்கு மீண்டும் ஆலோசனை கூறியாக வேண்டியதும் என் கடமைசிரமப்படாமல் அவர்களுடைய குறைகளுக்கு பரிகாரம் கிடைத்து விடாது என்பதில் நிச்சயமாயிருக்கிறேன் என்று அவர் வாக்குமூலம் கொடுக்கிறார்.

இது போன்று அச்சமற்ற தலைமையை நாடு இதுவரை கண்டதில்லை. பிழைப்புக்காக தாய்நாட்டை விட்டு சென்றவர்கள் தங்களின் உரிமைக்காக இப்படியானதொரு ஒழுங்கோடு ஒன்று திரண்டதுமில்லை. மக்கள் திரள் அலைமோதிக் கொண்டிருந்தது. அதை போலிசார் உணராமலில்லை. இப்போது அவர்களின் நாயகன் ஒரு கைதி. தன்னிச்சையாக செயல்பட அனுமதிக்கப்படாதவர். அவர் தனது ரசிகர்களிடமிருந்து மறைக்கப்பட்டு சிறைச்சாலைக்கு கொண்டு போகப்படுகிறார். அங்கு தன்னை சந்திக்க வந்த வழக்கறிஞரின் மூலம் தன் மக்களுக்கு செய்தி அனுப்பி வைக்கிறார். அவரது வார்த்தைகள் ஒவ்வொன்றும் மக்களை முன்னகர்த்தும் விசைகள்.

நான் சந்தோஷமாகவும் உறுதியாகவும் இருக்கிறேன். மூன்று பவுன் வரியை ரத்து செய்தாலன்றி வேலைநிறுத்தத்தை கை விட வேண்டாம்“

பின்னாட்களில் முழுதாக வெளியாகவிருக்கும் அவரது ஆளுமையை இந்நாளில் நாம் அறிந்திருக்கிறோம் என்றாலும், இவற்றையெல்லாம் பிரமிப்போடுதான் வாசிக்க வேண்டியிருக்கிறது.

அவர், தான் சிறைப்பட்ட நாட்களை தன்னை செதுக்கும் அனுபவமாக்குகிறார்.

அவர் முதன்முதலில் கைது செய்யப்பட்டு 1908 ஆம் ஆண்டின் ஜனவரி பத்தாம் நாளன்று ஜோஹானஸ்பர்க்கின் ஃபோர்ட் சிறைக்கு கொண்டு செல்லப்படுகிறார். அங்கு அவரை உடைகளை களையச் செய்து உடல் எடை பார்க்கப்படுகிறது. விரல் ரேகைகள் பதியப்படுகிdன்றன. சம்பிரதாய நடைமுறைகள் முடிந்து  சிறைக்கான உடைகள் அவரிடம் அளிக்கப்பட்டபோது பொழுது நகர்ந்து மாலையாகியிருந்ததுஇரவு உணவுக்காக எட்டு அவுன்ஸ் ரொட்டி கொடுத்து அவரை சிறையறைக்கு அனுப்பியபோது இலண்டனில் சட்டம் பயின்ற அந்த பாரிஸ்டருக்கு அது முன்பின் அறியாத புதிய அனுபவமாகவே இருந்திருக்க வேண்டும். அவரது சிறையறையில் அவரை தவிர பனிரெண்டு கைதிகள் அடைப்பட்டிருந்தனர்அவர் தான் கையோடு எடுத்துச்சென்றிருந்த பகவத்கீதையையும் டால்ஸ்டாய்சாக்ரடீஸ், ரஸ்கின் ஆகியோரின் புத்தகங்களையும் தம்மருகே எடுத்து வைத்துக் கொள்கிறார்.  இரவுணவுக்கு பின் மரப்பலகை படுக்கையில் படுத்துக் கொள்கிறார்

சிறையில் ஐம்பது பேர் தங்குமிடத்தில்  நுாறு பேர் தங்க வைக்கப்பட்டனர்.  நிறைய கைதிகளுக்கு எச்சில் துப்பும் வழக்கமிருந்தது. கழிவறை சுத்தமும் போதவில்லை. அவர் அங்கு சுற்றுப்புற சுகாதாரம் கழிவறை பேணல் குறித்து சக கைதிகளுக்கு பயிற்சியளிக்கிறார். காலையில் கீதை, பகல் வேளையில் குர்ரான், சீன கிறித்துவர் ஒருவருக்கு பைபிள் போதனை மற்றும் ஆங்கிலம் கற்றுத் தருதல் என்று தனக்கு கிடைத்த நேரங்களை வகுத்துக் கொள்கிறார். பர்னஸ், ஜான்ஸன், ஸ்காட் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்று நுால்களை வாசிக்கிறார்.

எங்கு வாழ்கிறோமோ அந்த நாட்டின் உணவு வகைகளை ஏற்றுக் கொள்வது அந்நாட்டிற்கு மரியாதை செலுத்துவது போன்றது என்று அவருள்ளம் கருதினாலும், உணவுக் குறித்த பரிசோதனைகளில் ஈடுப்பட்டு வரும் அவருக்கு உண்டு பழக்கமில்லாத சோளக்கஞ்சி போன்ற உணவுகள் உடல்நலக் கேடு விளைவித்து விடும் என்ற அச்சம் ஏற்படுகிறது. மேலும் உணவு விஷயத்தில் ஆசியர்களுக்கும் ஐரோப்பியர்களுக்குமான சலுகை ஏற்றத்தாழ்வுகள் அவரை காயப்படுத்துகின்றன.    அவர் இது குறித்து மனு ஒன்றை தயாரித்து சிறை உயரதிகாரிக்கு அனுப்பி வைக்கிறார். பின்னாளில் அரசியல் ஞானியாக மாற போகுமவர், சிறிய காரியங்கள்தான் நம்மை உயர்த்தவோ தாழ்த்தவோ செய்கிறதுசுயமரியாதை இல்லாதவனுக்கு எம்மதமும் இல்லை என அரபுநுால் கூறுவதை தான் ஏற்றுக் கொள்வதாக குறிப்பிடுகிறார். .

சத்தியாகிரக கைதிகளுக்கு மண்ணை தோண்டும் பழக்கமில்லாத வேலை அளிக்கப்படுகிறதுகடுமையான வெயில் என்பதோடு சிறையிலிருந்து வேலை செய்யும் இடத்துக்கு கிட்டத்தட்ட ஒன்றரை மைல் துாரத்திற்கு நடக்க வேண்டும்வேலை செய்த களைப்போடு மீண்டும் நடந்து திரும்ப வேண்டும்வேலை சற்று மந்தப்பட்டால் காப்பாளர் அதட்டுவார்.  பகல் முழுவதும் அதீத வெயிலில் வேலை செய்ய நேரிட்டமையால் சிலருக்கு மயக்கத்தோடு கூடிய இழுப்பு நோய் வருகிறது. மற்ற கைதிகளை போல காந்திக்கும் இது பழக்கமில்லாத வேலைதான். அவர் கைகளில் கொப்பளங்கள் ஏற்படுகின்றனமண்வெட்டியை தூக்கிப் பிடித்து நிலத்தை கொத்த இயலவில்லைஎனினும் கடவுளிடம் பிரார்த்தனை செய்துக்கொண்டு மனதிற்கு நம்பிக்கை அளித்துக் கொள்கிறார்ஆனால் சக கைதிகளின்சத்தியாகிரகிகளின் துயரங்களை காணும்போது அவர் மனம் நம்பிக்கை இழந்துப்போகிறது

என்னை நம்பி இத்தனை பேர் தங்கள் துயரை பொறுத்துக் கொள்கிறார்களே...? நான் எடுத்து வைத்த அடி சரியானதுதானாநான் அவர்களுக்கு சொன்ன யோசனை தவறாக போகுமானால் கடவுள் முன்னிலையில்  எவ்வளவு பெரிய பாவம் செய்தவன் ஆகிறேன்? அவர் துயர் கொள்கிறார். கடவுளை சாட்சியாக வைத்து மீண்டும் இதை குறித்து நினைத்துப் பார்க்கிறார். எதிர்கால இன்பத்தை முன்னிட்டு நிகழ்காலத்தில் எல்லாவித துன்பங்களையும் சிரமங்களையும் அனுபவிப்பதில் தவறில்லைநிரந்தர அடிமையாக வாழ்வதை விட துன்பம் அனுபவிப்பது சாவதே மேல் என்று தோன்றுகிறது.  தான் செய்துக் கொண்டிருப்பது சரி என்ற உறுதி ஏற்படுகிறதுஅதுவே அவருக்கு சகிப்புத் தன்மையையும் அளித்திருக்க வேண்டும். ஏனெனில், சிறைக்காப்பாளர் அவருக்கு வேண்டுமென்றே துன்பம் இழைக்கிறார். அவரால் அதை பொறுமையாக சகித்துக் கொள்ள முடிகிறது. ஆனால் அந்த பொறுமையை காப்பாளாரால்தான் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஒரு கட்டத்தில் அவர் மனமிரங்கி காந்தியின் மீதான கடுமையை விலக்கிக் கொண்டு விடுகிறார்.

காந்தி அதற்கு கொடுக்கும் விளக்கம், அவர் கைக்கொண்டிருக்கும் சத்தியாகிரகமேதான். அவர் கூறுகிறார், ஒருவேளை நான் அந்த காப்பாளரை எதிர்த்திருந்தேனானால் எனது சக்தி அங்கேயே விரயமாகிப் போயிருக்கும். அவரும் என் விரோதியாகி இருப்பார். ஆனால் நான் பொறுமை காத்தது மூன்று லாபங்களை பெற்று தந்து விட்டது. முதலாவதாக நான் அவரை விரோதித்துக் கொள்ள தேவையில்லை. அடுத்தப்படியாக என்னுடைய துன்பம் அவரது மனச்சாட்சியை தட்டி விட்டு வந்து விட்டது. துன்பம் அனுபவிக்கும்போது என் மனவலிமையும் கூடி விட்டது.

சிறையிலிருக்கும் தந்தைக்கு மகன் தனது கல்வி கற்கும் விருப்பத்தைக் குறித்து கடிதம் எழுதுகிறான். மணிலாலுக்கு அப்போது பதினேழு வயதிருக்கலாம்.

வெறும் எழுத்தறிவு கல்வியாகி விடாதுநன்னடத்தையை விருத்தி செய்வதுதான் உண்மையான கல்விகடமையை பற்றிய அறிவே கல்விஅம்மாஅண்ணியை பார்த்துக் கொள்ளும் அரிய வாய்ப்பு உனக்கு இப்போது கிட்டியிருக்கிறது. இதன் வழியே நீ கல்வி கற்றுக் கொண்டிருக்கிறாய் என்று மகனுக்கு பதில் எழுதுகிறார். கல்வி குறித்த கணவரின் கருத்தியல் கஸ்துாரை வருந்தியிருக்கலாம். ஆரம்பக்காலங்களில் அவர் ஹென்றி போலாக்கின் மனைவி மிலிகிரகாமிடம் பிள்ளைகளின் படிப்புக்காக கணவரிடம் சிபாரிசு செய்ய சொல்லி கேட்டிருக்கிறார்.

நாட்டின் நன்மைக்கா படிக்க வேண்டுமென்கிறான் மகன். இப்போது அதைதானே செய்துக் கொண்டிருக்கிறாய் என்கிறார் தந்தைதன்னைத்தானே அறிந்துக் கொள்ள கல்வி அவசியம் என்பது மகனின் எண்ணம். தன்னைத்தானே அறிந்துக் கொள்வது என்பது மனிதனை பண்புடையவனாக்கும். நீ இப்போதும் அப்படிதான் இருக்கிறாய் என மற்றவர்கள் சொல்கிறார்கள்பிழைப்புக்கு சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக நீ படிக்க விரும்பினால் அது தவறானதுஏனெனில் ஒவ்வொருவருக்கும் படியளப்பவர் கடவுள்உடலை வருத்தி வேலை செய்து பணத்தை சம்பாதித்துக் கொள்ளலாம்ஃபீனிக்ஸில் செய்வதை தொடர்ந்து செய்து வாநமது லட்சியம் ஃபீனிக்ஸை உயர்த்துவதுஅதன் வழியாகவே நம்மால் நம் ஆன்மாவை கண்டடையவும் நாட்டுக்கு தொண்டு செய்யவும் முடியும் என்கிறார். யாராவது நீ எங்கு படிக்கிறாய் என்று கேட்டால், பாப்புவின் பள்ளியில் படிப்பதாக சொல் என்கிறார். ஆனால் அவருடைய நான்கு மகன்களில் மூத்தவரான ஹரிலாலுக்கு தந்தையின் கல்வியில் நம்பிக்கையில்லை. தந்தையைப் போன்று கல்வி பயில்வதில்தான் நாட்டம். கடைசியில் அதுவே அவர்களுக்குள் தீராத பிணக்கு ஏற்படுவதற்கான பிரதான காரணமாயிற்று.

பனிரெண்டு வயதிற்குட்பட்ட வாலிபப்பருவத்தோடு வேடிக்கைவிளையாட்டு எல்லாவற்றையும் முடிவுக்கு கொண்டு வந்து விட வேண்டும்பிறகு புலனடக்கம்உண்மையை அறிவதற்காக ஆர்வம்பிற உயிர்க்கு தீங்கு எண்ணாமை போன்றவற்றை மனதின் இயல்புகளாக்கி கொள்ள வேண்டும். வற்புறுத்தலின் காரணமாக வற்றை கடைப்பிடிப்பதை விட மகிழ்ச்சியோடு இச்செயல்களில் ஈடுபட வேண்டும். ஏழ்மையே நமக்குள்ள நிலைமைஅதுவே பாக்கியம் என்று மகனுக்கு அறிவுறுத்துகிறார். இவை மகனுக்கான வெற்று அறிவுரைகள் மட்டுமல்ல. தான் அனுபவித்து உணர்ந்தவற்றையே அவர் பிறருக்கு சிபாரிசு செய்கிறார். இப்போது அவர் மனம் பற்றற்ற நிலையை நோக்கி பயணப்பட தொடங்கியிருந்தது. கர்மயோகம் என கீதை சொல்வதுபோல செயலை செய்து விட்டு முடிவை பரம்பொருளிடம் விட்டு விடுவது என்ற கருத்தில் அவருக்கு பூரண நம்பிக்கை உண்டாகியிருந்தது.

அவரது உள்ளம் மேம்பாடு அடைந்து வருவதை இந்நாளில் அவரது எழுத்துகளின் மூலம் அறிந்துக் கொள்ள முடிகிறது. அவர் எல்லாவற்றையும் குறிப்பெடுத்துக் கொள்கிறார். தென்னாப்பிரிக்க இந்தியர் போராட்டம் சம்பந்தமாக 1911 மார்ச் 27 அன்று ஜெனரல் ஸ்மட்ஸை சந்திந்து பேசியதை தொடர்ந்து அவசர வேலைகள் அவருக்கிருந்தன. அப்போதும் கூட சந்திப்பு விபரங்களை ஞாபகம் கொள்ளக்கூடிய குறிப்புகளாக எழுதி வைக்கிறார். அதையேதான் மகன்களுக்கும் மற்றவர்களுக்கும் கற்று தருகிறார். தன் மகனுக்கு எழுதிய கடிதத்தில் கணிதம்சமஸ்கிருத்தில் அதிக கவனம் செலுத்தும்படியும் படித்தவற்றில் சிறந்தவற்றை நோட்டுப்புத்தகத்தில் குறித்து வைக்கும்படியும் கூறுகிறார்.

அவருடைய கண்டிப்பையும் கறார் போக்கையும் மற்ற மகன்கள் எப்படி எடுத்துக் கொண்டாலும் அதனை மூத்தவனை போல அதிகம் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. அப்படியே இருப்பினும் அந்த முணுமுணுப்புகள் தாயாரின் காதுகளோடு தன் பயணத்தை முடித்துக் கொண்டு விடும். அவரும் தான் பிள்ளைகளிடம் கண்டிப்புக் காட்டியதை மறந்து இயல்பாகி விடுவார். சொல்லப்போனால், அவர் யாரையும் எதிரிகளாக கருதிக் கொள்வதில்லை. ஜெனரல் ஸ்மட்ஸின் நம்பிக்கை துரோக செயல்கள், அவரின் இனவாத நம்பிக்கை குறித்தெல்லாம் அவர் நன்றாகவே அறிந்திருந்தாலும் அவரை எதிர்த்து நிற்க வேண்டிய சூழல்கள் இருப்பினும், இறுதிவரை அவரை எதிரியாகவே கருதிக் கொள்ளவேயில்லை.

மிஸ்டர் காந்தி ஃப்ரீ ஸ்டேட்டுக்குள் நுழைய அனுமதிக்க வேண்டும் என்ற உங்கள் கோரிக்கை முற்றிலும் நியாயமற்றதுஇதுவரை எழுப்ப்படாது” என்கிறார் ஸ்மட்ஸ், சந்திப்பு ஒன்றின்போது.

“இது இனவாத தடைஇதை எதிர்த்து சத்தியாகிரக போராட்டம் நடத்த வேண்டியிருக்கும்“ பணிவாகதான் கூறுகிறார்.

“ஆனால், நீங்கள் முன் வைக்கும் மாற்றங்களை ஃப்ரீஸ்டேட்கார்ர்கள் ஒப்புக் கொள்ள மாட்டார்களே“

“அவர்களை ஒப்புக் கொள்ள வைப்பது உங்கள் பொறுப்பு“ என்கிறார் காந்தி.

விவாதம் கருத்தில் மட்டுமேதான். இரு தரப்புக்குமான பொதுப்புள்ளியில் முற்றுப் பெறாத விவாதத்திற்கு பிறகு ஜெனரல் ஸ்மட்ஸ், காந்தியிடம், தற்போது அவர் என்ன செய்துக் கொண்டிருக்கிறார் என விசாரிக்கிறார். காந்தி சிறைக்கு சென்றிருக்கும் சத்தியாகிரகிகளின் குடும்பங்களை கவனித்துக் கொண்டிருப்பதாக பதிலளிக்கிறார். அதற்கு ஸ்மட்ஸ் என்ற அந்த கடின மனதுக்காரர் அளித்த பதில், காந்தியின் நன்னடத்தையால் உருவானது.

மிஸ்டர் காந்திசத்தியாகிரகிகளை சிறைக்கு அனுப்புவது உங்களை விட எனக்கு அதிக துன்பம் தருகிறதுதம் மனசாட்சிக்காக கஷ்டங்களை அனுபவிப்பவர்களை சிறை வைப்பது என்பது என் வாழ்வின் கசப்பான காலக்கட்டம்“

இந்நுாலில் குறிப்பிடப்பட்டிருக்கும் கடிதங்கள், உரைகள், பிரசங்கங்கள், சம்பவங்கள், பெயர்கள், இடங்கள், அது தொடர்பான நிகழ்வுகள் என எதுவாக இருப்பினும் அடிக்குறிப்பில் அவை தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது கிட்டத்தட்ட மொழிப்பெயர்ப்புக்கிணையான உழைப்பு கோருபவை. காந்தியக் கொள்கைகளின் மீதான பிடிப்பம் ஆர்வமுமின்றி இத்தனை பெரிய பணியை செய்து விட முடியாது. ஆனால் இத்தகைய அளப்பறிய கூட்டு உழைப்பை ஒரு தனி மனிதர் கோருகிறார் எனில், அவர் வாழ்ந்த வாழ்க்கையின் பரிமாணத்தை புரிந்துக் கொள்ளலாம்.  

தாகத்துக்கு நீர் கொடுத்தவருக்கு நீ

திரும்ப நீர் கொடுத்து விடுவதில் பெரிது ஏதுமில்லை

தீமை செய்தவருக்கு நன்மை

செய்வதிலேயே உண்மை பெருமை உண்டு

 

என்ற இந்த குஜராத்திப்பாடல் சிறு வயதிலேயே மனதில் அதிக மாறுதலை உண்டாக்கியது என்கிறார்.

பைபிளின் புதிய சித்தாந்தம் நியாயமாக நடப்பதில் எனக்கு விழிப்புண்டாக்கியதோடு சாத்விக எதிர்ப்பின் மேன்மையையும் உணரச் செய்ததுமலைபிரசங்கத்திலிருக்கும்,  தீயவனாக இருப்பவனை எதிர்க்காதேவலது கன்னத்தில் அடித்தால் இடதுக்கன்னத்தைக் காட்டுஉன்னுடைய விரோதிகளிடமும் அன்பு செலுத்துஉன்னை துன்புறுத்துபவர்களும் பரலோகத்திலிருக்கும் உன் பிதாவின் மக்களாக இருக்க வேண்டுமென்று அவர்களுக்காக பிரார்த்தனை செய்  என்ற உபதேசங்களை பகவத்கீதை உறுதிப்படுத்தியது. டால்ஸ்டாயின் “உன்னுள் இருக்கும் கடவுளின் ராஜ்யம்“ என்ற புத்தகம் அதற்கு நிரந்தரமான உருவை அளித்தது என்கிறார்.

மனித வர்க்கம் எவ்வளவு தொன்மையானதோ அவ்வளவு தொன்மையானது சாத்விக எதிர்ப்பு என்ற ஆன்மசக்திஏசு கிறிஸ்துசாக்ரடீஸ்டேனியல் போன்றோர் ஆன்மாவோடு ஒப்பிட்டால் உடல் மிக மிக அற்பமானது என்றனர். தீயச்செயல்களின் தொந்தரவிலிருந்து நிவாரணம் பெறுவதற்கு நாம் ஆன்மசக்தியை உபயோகிப்பின் இன்றிருக்கும் துன்பங்களை தவிர்க்க முடியும்இதனால் மற்றவர்களுக்கும் துன்பம் விளையாதுஇதை தவறாக உபயோகித்து வி்ட்டால்உபயோகிப்பவருக்குதான் சிரமமே தவிர யாருக்கு எதிராக பிரயோகிக்கபட்டதோ அவருக்கு துன்பத்தை உண்டாக்குவதில்லைதீமையை தீமையால் எதிர்ப்பதை விட நல்லது செய்வதனால் எதிர்க்க வேண்டும்அதாவது மிருகபலத்தைமிருகபலத்தால் எதிர்க்காமல் ஆன்மபலத்தால் எதிர்க்க வேண்டும்இதுவே இந்திய வேதாந்தத்தில் “எந்த ஜீவராசிக்கும் தீங்கிழைக்காத தன்மை“ என்று விவரிக்கப்பட்டுள்ளதுஇதை அனுசரிக்கும்போது சரீரத் துன்பங்களை அனுபவிக்க நேரிடும்ஆனால் அது உலக துன்பங்களை விட குறைவானது. இந்த சக்தியை வெற்றிகரமாக உபயோகிக்கஉடலிலின்று ஆன்மா வேறானது என்பதையும் அது நிரந்தரமானதுஉயர்வானது என்பதையும் உணர வேண்டும் என்கிறார்.

உளிகள் தயாராகதானிருக்கின்றன எப்போதும். அதை உபயோகிப்பதும் உபயோகிக்காதும் சிற்பியின் தனிப்பட்ட விருப்பம் சார்ந்தது. காந்தியின் வாழ்வில் சிற்பியும் சிற்பமும் அவரே என்றாயிற்று.  

அதிகார வர்க்கத்தினருக்கு கடிதம் எழுதியவர், பொது மேடைகளில் உரையாற்றியவர், ஆளுமைகளோடு சந்திப்பு நிகழ்த்தியவர், இதழ் நடத்தியவர், வெற்றிகரமான வழக்கறிஞர், இலண்டனுக்கு துாது சென்றவர், லியோ டால்ஸ்டாயிடமும் ரஸ்கினிடமும் மனதை பறிக் கொடுத்தவர், அவர்களின் நெறிகளின்படி கூட்டுறவு சமுதாயத்தை முயன்று வெற்றிக் கண்டவர், உடைமைகளை துறந்தவர், சத்தியாகிரகம் என்ற புதிய போர் பாணியை அறிமுகப்படுத்தியவர், அகிம்சையை போற்றியவர், தனி வாழ்க்கையை பொதுவிலும் பொது வாழ்க்கையை தனி வாழ்க்கையிலும் கலந்தவர், பிரம்மச்சர்யத்தை கடைப்பிடித்தவர் என துலங்கி வரும் தனது பல்வேறு பரிமாணங்களோடு தென்னாப்பிரிக்க சத்தியாகிரகkம’’’ என்ற நுாலின் வழியாக இடைவிடாது நம்முடன் பேசியபடியே கைகளை கோர்த்துக் கொண்டும் தோளை அணைத்துக் கொண்டும் நம்முடன் கலந்திருந்தவர், இந்த தொகுப்பில் நட்போடு எதிரில் அமர்ந்துக் கொள்கிறார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால் கடிதங்கள், உரைகள், உரையாடல்கள், பயணங்கள் என்பவற்றின் வழியாக அவரை அணுகும்போது அணுக்கம் குறைவது போலவும் ஏதோ ஒன்று நழுவுவது போலவும் பதற்றம் உண்டாகிறது.

mகாந்தி தம்பதிகள் தாயகம் திரும்பியதும் 1915 ஏப்ரல் 21ல் சென்னை விக்டோரியா பப்ளிக் ஹாலில் நடந்த பாராட்டுக்கூட்டத்தில் ஜி..நடேசன் வாசித்த வரவேற்பு பத்திரத்திற்கு பதிலளித்து அவர் ஆற்றிய உரையில்,  சத்தியாகிரகம் நடந்த இந்த எட்டு ஆண்டுகளில் ஒருமுறையாவது அல்லது இருமுறையாவது சிறை செல்லாத தமிழர்களே இல்லைஅப்படி யாரேனுமிருந்தால் அவரை சென்னை மாகாணத்துவாசிகளே மானமில்லாதவன் என்று அழைத்து விடுவார்கள். நாகப்பன்நாராயணசாமிவள்ளியம்மையின் தியாகத்தை பற்றி குறிப்பிடும்போது நான் அவர்களுக்கு இத்தகைய உணர்ச்சியை ஊட்டினேன் என்று பாராட்டியுள்ளீர்கள்ஆனால் ஒரே உறுதியும் இலட்சியத்தில் முழு நம்பிக்கையும் வைத்து வெகுமதி என்பதை சிறிதும் எதிர்பாராமல் பாடுப்பட்ட எளிமை மிக்க அவர்களே எனக்கு இத்தகைய தியாக உணர்வை உண்டாக்கியவர்கள்என்னை சரியான நிலையில் வைத்தவர்கள்தங்களுடைய தியாகம்திடமான நம்பிக்கைகடவுளிடம் கொண்ட உறுதியான பற்று இவற்றின் மூலம் நான் செய்ய வேண்டிய வேலையை செய்து முடிக்க உதவினார்கள். தமிழர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதை முன்னிட்டாவது தமிழ் புத்தகங்களை சரியாக படித்தாக வேண்டும் என்று நினைத்தேன்படிக்க படிக்க அதன் இனிமையை உணர்ந்தேன் என்கிறார்.

இந்த தொகுப்பை வாசித்தபிறகு காந்தியின் எண்ணங்களும் அதை நோக்கி அவர் வகுக்கும் செயல்திட்டங்களையும் நம்மால் அறிந்துக் கொள்ள முடிகிறது.   ஒவ்வொரு செயலையும் அவர் திட்டமிட்டே செய்கிறார். கடிதம் எழுதுவதாகவோ, போராட்டம் நடத்துவதாகவே, அரசதிகாரத்தை சந்திப்பதாகவோ எதுவாக இருப்பினும் தன்னுடைய நடவடிக்கைகளில் திட்டமிட்ட மிகத் தெளிவான போக்கை கடைப்பிடிக்கிறார். திட்டமிடும்போதே அதன் கடின சூழ்நிலைகளையும் கருத்தில் எடுத்துக் கொள்கிறார்.   தனது போராட்ட செயல்திட்டங்களை முன்னரே அறிவித்தும் விடுகிறார்.  தியாகத்தின் வழியே, எதிர் கருத்தாளருக்கு சொந்தத் தரப்பை நுட்பமாக புரிய வைக்க முயல்கிறார். தமது பாடுகளை தலைமை அதிகாரம் தொடங்கி கடை நிலை எளிய மனிதன் வரை சீரிய கண்ணோட்டத்தோடு எடுத்து முன் வைப்பதன் மூலம் போராட்டத்தின் வெற்றி வாய்ப்பை அதிகப்படுத்திக் கொள்கிறார். மேலும் எளிய மக்களின் எழுச்சி வெறும் உணர்வுகளின் வழியே கட்டமைக்கப்படுதலை அவர் விரும்புவதில்லை. உணர்வுகள் நிதானமற்றவை. ஆனால் கட்டுப்பாடும் புரிதலும் போராட்ட மக்களுக்கு அவர்களது சுயபலத்தை அடையாளம் காட்டி விடும். அப்பலத்தை வென்று விட முடியாதென அதிகாரமும் உணர்ந்துக் கொள்ளும் என்பதான திட்ட செயல்பாடுகள்தான் எத்தனை நுணுக்கமானவை!

அவர் எதிராளி என யாரையும் கருதுவதில்லை. எதிராளி என்பவர்  கொள்கை வேறுபாட்டின் காரணமாக எதிரணியில் இருப்பவர்ஆனாலும் அவர் நம் நண்பர் என்ற எண்ணம் கொண்டவர்அதனால்தான் போராட்ட வாழ்வில் அரசாங்க அதிகார மையத்திலிருப்பவர்கள் மட்டுமன்றி சிறையதிகாரிகள்சிறை மருத்துவர்கள் போலிஸ்கார்கள் என அவருக்கு நிறைய நண்பர்கள் இருந்தனர்.

அவர் போராட்டத்துக்கான ஆதரவை எல்லா தரப்புகளிலிருந்தும் திரட்டுகிறார்.   தங்கள் போராட்டம் நியாயமானது என்றாலும் சட்டத்திற்கு எதிரானது என்பதை ஒப்புக்கொண்டு நீதிமன்றத்தில் அதற்கான அதிகபட்ச தண்டனையை கோருகிறார். தியாகம்பிரம்மச்சரியம்தொண்டு என தன்னை போலவே எல்லோரையும் மாற்ற எண்ணுகிறார். அதிகாரிகளை சந்திக்கவோ கடிதங்கள் எழுதுவதற்கோ அவர் தயங்குவதேயில்லைமேலைகீழை நாடுகள் என்ற உயர்வு தாழ்வு மனப்பான்மைகெல்லாம் அவர் நோக்கில் இடமேயில்லை. சொன்னவற்றையே சளிப்புறாது மீண்டும் மீண்டும் கூறுகிறார். எதிராளிகள் என்ன செய்வார்கள் என்பதை முன்கூட்டியே அறிந்த பிறகு போராடுவதால் அவர்களுடைய நடவடிக்கையை ஒப்பி ஏற்றுக் கொள்ளும் மனநிலையை உருவாக்குகிறார். எதிராளியை ஏமாற்றக்கூடாதுஅவன் இக்கட்டில் மாட்டிக் கொண்டிருக்கும்போது அத்தருணத்தை நமக்கு சாதகமாக மாற்றிக் கொள்ளக்கூடாது என்பதில் அவருக்கு நேர்மையான தெளிவுண்டு.

சிறை என்பதை குற்றவாளிகளின் இருப்பிடமாகவும் அணுகவோ எண்ணவோ கூட தகுதியற்ற இடங்கள் என்றும் ஒதுக்கப்பட்டிருந்ததை அன்றாட நிகழ்வாக்கியதோடு மட்டுமன்றி, சிறைவாசம் அனுபவித்திராதவரை மற்றவர் தாழ்வாக நினைக்குமளவுக்கு எடுத்துச் சென்றன அவருடைய செயல்பாடுகள். பெண்களை தனி இயக்கமாக திரட்டியதும் கூட அவரது இந்திய விடுதலைப் போராட்ட செயல்பாடுகளுக்கு முன்னோடி நடவடிக்கையாக கூறலாம்.

தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு திரும்பும் முன் பல இடங்களிலும் அவருக்கு நடத்தப்பட்ட பிரிவுச்சார விழாக்களை அவர் நன்றியறிவிப்பு விழாவாக மாற்றிக் கொள்கிறார். அவரது ஏற்புரைகள் அவ்வாறாகவே அமைகின்றன.

      காந்தியடிகளின் எழுத்துகள், உரைகள் அனைத்தையும் திரு.தி.சு.அவினாசிலிங்கம் அவர்களின் தலைமையின் கீழ் அமைக்கப்பட்ட காந்தி நுால் வெளியீட்டுக் கழகம் 1957ல் வெளியிட்டுள்ளது. இந்நுாலை திரு.இரா.வேங்கடராஜுலு அவர்கள் மொழிப்பெயர்த்துள்ளார்.மொழிப்பெயர்ப்பு செய்து கிட்டத்தட்ட 64 வருடங்களை கடந்த பிறகும் வாசிப்பதற்கு தடைகள் ஏற்படுத்தாத புனைவுமொழி என்பதோடு ஆர்வமும் இணைந்துக் கொள்வதால் நுாலுக்குள் புழங்குவதில் சிரமமேற்படுவதில்லை.

தனிப்பட்ட வாழ்வில், தென்னாப்பிரிக்கா சென்று பொருளாதாரத்தில் மிக பெரிய உச்சத்தை எட்டியிருக்க வேண்டிய அந்த பாரிஸ்டர் பொருளாசையை துறந்ததோடு, செயல்களுக்கான பலன்களையும் துறக்க முனைகிறார். விரும்பி ஏற்றுக் கொண்ட வறுமையை குடும்பத்தாருக்கு அறிமுகப்படுத்தியதோடு மனைவியின் உதவியோடு இல்லற சுகத்தையும் துறந்து விடுகிறார்.  

பொது வாழ்வில் அவரால் சாத்தியப்பட்டவைகள் குறித்து நிறையவே பட்டியலிடலாம்.

1907 ஆம் ஆண்டைய பதிவுச்சட்டம் ஒழிக்கப்பட்டது. தென்னாப்பிரிக்க இந்தியர்களின் துயரங்களை இந்தியாவும் உலகமும் அறிந்துக் கொண்டதோடு   இந்திய அரசாங்கம் நேட்டாலுக்கு ஒப்பந்தக்கூலிகளை அனுப்புவதும் தடை விதிக்கப்படுகிறது.  நேட்டால் அனுமதிச்சீட்டு விவகாரத்தில் விரும்பத்தக்க மாறுதல்கள் ஏற்பட்டன. வெள்ளையர் மற்றும் வெள்ளையர் அல்லாதோர் என்ற இனப்பாகுபாட்டை பயன்படுத்தி ஏற்படுத்தப்பட்ட ரயில்வே சட்டத்திட்டங்கள் ரத்தாயின. இந்த போராட்டம் நடத்தப்பட்டிருக்காவிட்டால், டிரான்ஸ்வாலில் கொண்டு வரப்பட்டது போல குடியேற்ற கட்டுப்பாட்டு சட்டங்களை தென்னாப்பிரிக்காவின் மற்ற காலனிகளும் கொண்டு வந்திருக்கும். பதிவுச்சட்டத்தை தொடர்ந்து கொண்டு வரப்படவிருந்த சட்டங்களும் வரமுடியாதபடி தடுக்கப்பட்டன. இந்த போராட்டத்தால் இந்திய சமூகம் தன் தேசிய சுயமரியாதையை காத்துக் கொள்ள முடிந்தது.

மனிதசாத்தியங்களை மீறும் பரிசோதனைக் களமாக தன் வாழ்வை உருமாற்றிக் கொண்டு இந்தியா திரும்பியபோது அவருக்கு நாற்பத்தைந்து வயதுதான் ஆகியிருந்து. கஸ்துாரும் இப்போது பக்குவப்பட்டிருந்தார். கணவரை அவரால் புரிந்துக் கொள்ள முடிந்தது. பொருளாதார குறைவற்ற வீட்டில் பிறந்து திவான் குடும்பத்தில் வாழ்க்கைப்பட்ட அந்த நடுத்தர வயது பெண் இப்போது சத்தியாகிரகப் போராளியும் கூட. அடுத்தக்கட்டத்தை நோக்கி நகர்ந்துக் கொண்டிருக்கும் அவரது பௌதீக பெண்ணுடல் சற்று தளர்ந்திருந்தாலும் எதிர்கால தியாக வாழ்வுக்கேற்ப மனமுதிர்ச்சி அவருக்கு வந்திருக்க வேண்டும். ஏனெனில் அவரது கணவர் வாழ்வின் எல்லா துறைகளிலும் அனுபவமுதிர்ச்சியும் பக்குவமும் பெற்ற மகாத்மாவாக மாறி ஒட்டுமொத்த இந்தியாவையும் தன்னுடைய கதகதப்புக்குள் பொதிந்துக் கொள்ள தயாராகி விட்டிருந்தார். 


No comments:

Post a Comment