Search This Blog

Friday, 24 February 2023

இந்திய சுயராஜ்ஜியம் – சாமான்யப் பார்வையில்

 



அன்று 1909 ஆம் ஆண்டின் ஜுன் மாதத்தின் மத்திய நாளான பதினாறாம் தேதி. தென்னாப்பிரிக்க இந்தியர்களால் உருவாக்கப்பட்ட பிரிட்டிஷ் இந்திய சங்கத்தின் பொதுக்கூட்டம் ஃபோர்ட்ஸ்பர்க் மசூதிக்கு வெளியே அவசரமாக கூடியது. அதன் அவசரத்திற்கு பின்னிருந்தது களையப்பட வேண்டிய அவசரச் சட்டம். அது தென்னாப்பிரிக்காவில் வாழும் இந்தியர்களுக்கு எதிரானது. அங்கு இந்தியர்களின் குடியேற்றத்தைக் கட்டுப்படுத்தும் விதிகள் அடங்கிய ஆசியச் சட்டத்தை நிறைவேற்றுவதில் பிரிட்டிஷ் அரசு முனைப்புடனிருந்தது. முதற்கட்டமாக, அங்கு வாழும் இந்தியர்கள் அனைவரும் கை ரேகை பதிந்து உரிமைச்சீட்டு வாங்க வேண்டுமென்றும் அதை எப்போதும் கைவசம் வைத்திருக்க வேண்டும் என்றும் அனுமதிச்சீட்டு இல்லாமல் நடமாடுவது தண்டனைக்குரிய குற்றம் என்றும் அச்சட்டம் வலியுறுத்தவிருந்தது. சுமார் 1500 இந்தியர்கள் பங்கேற்ற அக்கூட்டத்தில், லண்டன் இம்பீரியல் அரசாங்கத்திடம் இச்சட்டத்தின் நியாயமின்மை குறித்து முறையிட தீர்மானிக்கப்பட்டது. இதற்கென சங்கத்தின் சார்பாக துாதுக்குழு ஒன்றை இங்கிலாந்துக்கு அனுப்பவும் முடிவு செய்தது. அக்குழுவில் காந்தியும் ஹாஜி ஹபீப் என்பவரும் இடம் பெற்றிருந்தனர்.

அப்போது மோகன்தாஸ் காந்தி பம்பாய் துறைமுகத்திலிருந்து தனிப்பட்ட நபரின் வழக்கறிஞராக தென்னாப்பிரிக்காவின் டர்பன் துறைமுகத்தை அடைந்து பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாகியிருந்தது. இப்போது அவர் தனது செயல்பாடுகளிலும் கொள்கையில் முதிர்ந்துக் கொண்டிருந்தார். வயதோ வெறும் நாற்பது மட்டுமே ஆகியிருந்தது. அதற்குள் இந்தியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா என நாடுகள் அறிந்த முகமாகவும் தென்னாப்பிரிக்கா வாழ்இந்தியர்களுக்கு நம்பிக்கையூட்டுபவராகவும் ஆளும் பிரிட்டிஷ் வர்க்கத்தினருக்கு எரிச்சலுாட்டுபவராகவும் ஆகியிருந்தார். 

கையெழுத்துப்பிரதியாக 271 பக்கங்களை கொண்டஇந்திய சுயராஜ்ஜியம் என்னும் இந்நுாலை அவர் இலண்டன் துாது முடித்து தென்னாப்பிரிக்கா திரும்பும் கப்பல் பயணத்தின்போது எழுதி முடித்திருந்தார். எழுத வேண்டிய விஷயங்களை தான் லண்டனில் கழித்திருந்த நான்கு மாதக்காலத்தில் அவர் முடிவு செய்திருக்க வேண்டும். தென்னாப்பிரிக்காவுக்கு கப்பல் ஏறியதுமே எழுத தொடங்கியிருந்தார். அவரின் இறுதி வரைக்குமே சாத்தியப்பட்ட அதே வேகம், அதே ஒழுங்கு. நவம்பர் 13-ல் தொடங்கிய நுால் நவம்பர் 22-ல் கையெழுத்துப் பிரதி முடிந்தே விட்டது. அடித்தல் திருத்தல்கள் பெரிதாக இல்லை. கிட்டத்தட்ட 30000 வார்த்தைகளில் மூன்றே வரிகளை மட்டுமே அடித்திருக்கிறார். வலது கை வலிக்கும்போது இடதுக்கையை உபயோகப்படுத்துகிறார்.

இத்தனை விரைவாகவும் அவசரமாகவும் எழுத வேண்டியதன் அவசியம் ஒருவேளை துாதுக்குழு எதையும் சாதிக்க முடியாமல் திரும்பியதாக இருக்கலாம். ல்லது மற்றொன்றாகவும் இருக்கலாம். அதாவது அவர் துாதுக்குழுவின் இரட்டை அங்கத்தினரில் ஒருவராக இங்கிலாந்தின் சௌத்தாம்ப்டன் துறைமுகத்தில் ஜுலை 10 ஆம் தேதி இறங்குவதற்கு சரியாக ஒன்பது தினங்களுக்கு முன்பாக அங்கு நிகழ்வு ஒன்று நடந்து விடுகிறது. லண்டன் பல்கலைக்கழக கல்லுாரியில் பொறியியல் படித்து வந்த மதன்லால் திங்ரா என்ற பஞ்சாபி இளைஞன் சர் கர்சன்வைலி என்ற ஆங்கிலேய அதிகாரியை ஒரு விருந்து நிகழ்வின்போது கொன்று விடுகிறான். அவனுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. அவன் தனது ஒப்புதல் வாக்குமூலத்தில், என் தாய்நாடு தன்னுடைய இலட்சியத்தில் வெற்றியடைந்து மனித வர்க்கத்தின் நன்மைக்காகவும் கடவுளின் கீர்த்திக்காகவும் சுதந்திரத்துடன் நிற்கும் வரையில், இதே மண்ணில் பிறந்து இதே தெய்வீக இலட்சியத்திற்காக சாக வேண்டும் என்கிறான். 

தீவிரமான தேசாபிமானி என்றபோதிலும் திங்ராவின் செயலும் அதற்கு பின்பான ஒப்புதல் வாக்குமூலமும் தனது விதிக்கப்பட்ட மரண தண்டனை நாட்டு மக்களின் பழிவாங்கல் உணர்வை இன்னும் முனைப்பானதாக ஆக்கும் என்ற அந்த இளைஞனின் எண்ணமும் மராட்டிய மாணவரான சாவர்க்கர் வழியாக இந்தியாவில் பரவியபோது இது இளைஞர்களின் உணர்வுகளை வன்முறை நோக்கி அழைத்துச் செல்வதாக இருந்தது. லண்டனில், இந்தியா ஹவுசில் தங்கியிருந்த இந்த ஆயுதப்புரட்சி நம்பிக்கையாளர்களின் நோக்கம் சரியானதாக இருந்தாலும்  அதனை அடையும் வழிமுறை குறித்த சிந்தனையின் போக்கு அந்நிய மண்ணில் இதிலிருந்து மாறுப்பட்டதும் உயர்வானதுமான ஒரு தற்காப்பு ஆயுதத்தை உபயோகித்துக் கொண்டிருக்கும் காந்திக்கு பதற்றத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். 

அவர், கொல்லப்பட்ட அதிகாரியான சர்.கர்சன் வைலி இந்திய மாணவர்கள் மத்தியில் விருந்தினராக வந்தபோது சுடப்பட்டது துரோக செயல் என்பதோடு சுதந்திரம் அடைவதற்கு மதன்லால்திங்ரா தேர்ந்தெடுத்த வழிமுறையும் பழிவாங்கலும் இந்தியாவுக்கு அதிக தீங்கை ஏற்படுத்தியுள்ளன என்கிறார். மேலும் இது துாதுக்குழுவின் முயற்சிகளுக்கு பின்னடைவு ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாகவும் கருதினார். காந்தி, தன் நண்பர் ஹென்றி போலக்குக்கு எழுதிய கடிதமொன்றில், பிரிட்டிஷார் இம்மாதிரியான படுகொலைகள் காரணமாக நாட்டை விட்டு சென்று விட்டாலும், அவர்களுக்கு பதில் ஆளப் போவது யார்? இதற்கான ஒரே பதில்.. கொலைக்காரர்கள் என்பதே.  கொலைக்காரர்கள் ஆட்சியில் யார் மகிழ்ச்சியாக இருக்க முடியும்? ஆங்கிலேயர் ஆங்கிலேயராக இருப்பதாலேயே மோசமானவர்களாகி விடுவரா? இந்தியர்கள் என்பதாலேயே அனைவரும் நல்லவர்களா? கொலைக்காரர்களின் ஆட்சியால் இந்தியாவுக்கு எந்த நன்மையும் வந்து விடாதுஅவர்கள் வெள்ளையர்களாக இருந்தாலும் சரி.. கருப்பர்களாக இருந்தாலும் சரி.. இதைதான் இந்நுாலிலும் எழுதுகிறார்.. புலி வேண்டாம். புலியின் தன்மை  மட்டும் வேண்டியிருக்கிறதா என்று. இலட்சியத்துக்கும் அதை அடைய வேண்டிய வழிமுறைக்கும் நிச்சயம் தொடர்புண்டு. விஷப்பூண்டை விதைத்து விட்டு ரோஜா மலரை அடைய முடியாது என்கிறார்.   

இந்திய சுயராஜ்ஜியம், இந்தியன் ஒப்பீனியன் இதழில் குஜராத்தி மொழியில் தொடராக வெளிவந்தது.  இருபது அத்தியாயங்களுடன் அளவில் சிறியதாக இருப்பினும் இதிலிருக்கும் கருத்துகளின் காரணமாக சர்ச்சைகள் சிறியதாக இருக்கவில்லை. இதன் ஆங்கில வடிவை ரஷ்ய தத்துவார்த்த எழுத்தாளர் டால்ஸ்டாய்க்கு அனுப்பி வைத்தபோது, இந்நுாலில் சி்த்தரிக்கப்பட்டிருக்கும் சாத்விக எதிர்ப்பு என்ற வழிமுறை இந்தியாவுக்கு மட்டுமல்ல, மனித வர்க்கம் முழுமைக்குமே முக்கியமானதாகும் என்றார். ஆனால் காந்தியின் அரசியல் குருவான கோபாலகிருஷ்ண கோகலே, இது அவசரத்தில் எழுதப்பட்டிருக்கும் ஒரு அரைக்குறையான நுால். காந்தி இந்தியாவுக்கு வந்து ஓராண்டு இருப்பாரேயானால் அவரே இதனை கிழித்து விடுவார் என்று விமர்சித்திருந்தார். தாராளவாத சிந்தனை கொண்ட ஐரோப்பியர்களிடம் கூட இந்நுாலுக்கு எதிர்ப்பிருந்தது. மேற்கத்திய நாகரீக மோகம் காலனியாதிக்கம் மூலம் உலகெங்கும் பரவத் தொடங்கியிருந்த இக்காலக்கட்டத்தில் காந்தியின் வாதங்கள் அதனை பின்னுக்கிழுக்கிறது என்றனர். ஆனால் காந்தி, முப்பதாண்டுகளுக்கு பின்னரும் இதிலுள்ள தன் கருத்துக்கள் எதிலிருந்தும் பின் வாங்கவில்லை. அவர், 1939 ‘ஆரியன் பாத் இதழின் இந்து சுயராஜ்ஜியம் விசேஷ மலருக்குஎழுதிய கட்டுரையில், இந்நுாலில் தான் கூறியிருக்கும் கருத்துகளை மாற்றிக் கொள்ள காரணம் ஏதும் தனக்கு தோன்றவில்லை என்கிறார். தென்னாப்பிரிக்க இந்தியர் சிலரிடம் தோன்றிவிடவிருந்த அபாயத்தை இது நிறுத்தியது என்பதையும் வாசகர் அறிய வேண்டும் என்று எழுதுகிறார். 

இந்நுாலின் முதல் சில அத்தியாயங்கள், காங்கிரஸ், அதன் ஸ்தாபிதம் மற்றும் அதன் மீதான விமர்சனங்களுக்கான பதில் என தொடங்குகிறது. சுயாட்சி என்பதற்கான ஆரம்ப ருசியை ஊட்டியது காங்கிரஸ்தான். இந்தியாவில் பல பகுதிகளில் வாழும் மக்களை ஒன்றுத்திரட்டி ஒரே நாட்டினர் என்ற எண்ணத்தை நமக்குள் ஏற்படுத்தியது காங்கிரஸே. இந்திய தேசிய காங்கிரஸ் என்பது போன்ற ஸ்தாபனத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற யோசனை ஆங்கிலேயரான ..ஹியூம்க்கே பிறந்தது. அதிகாரிகளுக்கும் மற்ற முக்கியஸ்தர்களுக்கும் நல்லுறவு இருப்பதற்கு இத்தகைய நிறுவனம் அவசியம் என்று அவர் கருதினார். அவர் உருவாக்கிய இயக்கத்தை தாதாபாய் நௌரோஜியும், பெரோஜ்ஷா மேத்தாவும் வில்லியம் வெட்டர்பர்ன்னும் வளர்த்தார்கள். தாதாபாய்  பண்படுத்தியிருக்காவிட்டால் சுயாட்சி என்பதை பற்றி நம் இளைஞர்கள் பேசியிருக்கவும் மாட்டார்கள். ஆங்கிலேயர்கள் நமது உயிரையும் இரத்தத்தையும் உறிஞ்சி விட்டார்கள் என்பதை அவர்தான் நமக்கு உணர்த்துகிறார்., கோபாலகிருஷ்ண கோகலே, நீதிபதி பக்ரூதின் தயாப்ஜி போன்றோர் சுயாட்சி விதையை நம்முள் விதைத்தனர் என்று காங்கிரஸின் பாதையையும் போக்கையும் தெளிவுப்படுத்துகிறார். 

சாதாரணனின் இயல்பான கேள்விகளும் பொதுவான சந்தேகங்களும் வாசகர் தரப்பில் கேட்கப்படுவதும் இதழாசிரியர் அதனை விளக்கி கூறுவதுமாக ஆக்கப்பட்டுள்ள இந்நுாலில், அமைதியின்மை, அதிருப்தி குறித்த வாசகரின் கேள்விக்கு, குறைகளை நிவர்த்திக்க மன்னரிடம் முறையிடுவது, பரிகாரம் கிடைக்கவில்லையெனில்  மனுக்கள் அளிப்பது போன்று காங்கிரஸில் நிலவி வந்த வழிமுறைகள் வங்காளப் பிரிவினைக்கு பிறகு மாறிவிட்டது. கஷ்டப்படுவதற்கு தயாராக இருக்க வேண்டும் என்று மக்கள் உணர்ந்து விட்டனர். ஆங்கிலேயரைக் கண்டதும் ஓடி விடும் மனோபாவம் மறைந்து சச்சரவு ஏற்படுத்துவதற்கோ சிறைப்படுவதற்கோ அஞ்சாத மனநிலை ஏற்பட்டு விட்டது. கிளர்ச்சி வடக்கில் பாஞ்சாலத்துக்கும் தெற்கில் கன்னியாக்குமரி வரைக்கும் பரவி விட்டது. மொத்தத்தில் ஆங்கில ஆட்சியின் மீதான அதிருப்தி பரவி வருகிறது. அதுவே அமைதியின்மைக்கு காரணம். காங்கிரஸ் இதை அதிருப்தி என்கிறது. இருக்கும் நிலையில் ஒருவன் திருப்தி கொண்டிருந்தால் அதிலிருந்து வெளியேறுவது கடினம். ஆகையால் எந்த சீர்த்திருத்ததுக்கும் முன்னால் அதிருப்தி இருந்தாக வேண்டும் என்று பதிலளிக்கிறார். 

அவர் ஆங்கில பாராளுமன்றம் மீது நம்பிக்கை வைத்திருக்கவில்லை. அவை சுயநலபோக்கில் நேரத்தையும் பொருளையும் விரயமாக்கிறது அதன் உறுப்பினர்கள் யாரும் மக்களுக்கு தொண்டு செய்யும் நோக்கம் கொண்டிருக்கவில்லை என்கிறார். இதனை எடுத்தியம்பும்போது மலட்டுப் பெண், விலைமாது போன்ற கடுமையான சொற்பிரயோகங்களையெல்லாம்  உபயோகிக்கிறார். 

இந்தியாவை நாம் ஏன் அவர்களிடம் இழந்து விட்டோம்? என்ற கேள்விக்கு பதிலளிக்கையில், ஆங்கிலேயர்கள் இந்தியாவை எடுத்துக் கொள்ளவில்லை. நாம் தான் அவர்களுக்கு கொடுத்திருக்கிறோம். ஆரம்பத்தில் வியாபாரத்துக்காக இந்தியாவுக்கு வந்தபோது அவர்களுக்கு இங்கு ஆட்சியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று எண்ணம் இருந்திருக்காது. கிழக்கிந்திய கம்பெனி அதிகாரிகளுக்கு உதவியவர்கள் யார்? அவர்களின் காசை பார்த்து மயங்கியவர்கள் யார்? அவர்களுடைய பொருட்களை வாங்கியது யார்? நாம்தானே? நம் ராஜாக்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டு கம்பெனி பகதுார்களின் உதவியை நாடினார்கள். அந்த வர்த்தக ஸ்தாபனம் போர், வாணிபம் இரண்டிலும் திறமையானது. ஒழுக்கத்தை பற்றிய தடையேதும் அதற்கு கிடையாது. இந்து முஸ்லிம்களுக்குள் இருந்த பிரச்சனையும் அவர்களுக்கு வாய்ப்பளித்து விட்டது. எந்த காரணங்கள் இந்தியாவை அவர்களுக்கு கொடுத்தனவோ அவையே இந்தியாவின் மீது ஆதிக்கம் வைத்திருக்கவும் செய்கின்றன என்கிறார்.  அவர் தாய்மொழியின் பயன்களை நன்றாகவே உணர்ந்திருந்தார். இந்தியாவுக்குள் ஆங்கிலம் அல்லாத பிற மொழிகளின் பயன்பாட்டை ஆதரித்தார். இந்தியை இணைப்பு மொழியாக முன்னெடுப்பது இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் நெருங்கிய தொடர்பை உண்டாக்கும் என்பதோடு ஆங்கில மொழியை களத்திலிருந்து இறக்கி விடவும் முடியும் என்கிறார். 

சுயராஜ்ஜியம் என்பது ஆங்கிலேயர்களை வெளியேற்றி விட்டு அவர்களை போல ஆட்சி செய்வதல்ல என்பது அவரது வாதம். இந்தியா இங்கிலாந்தை போல நடக்க தளைப்பட்டால் அது அழிந்து போய் விடும். ஐரோப்பிய நாடுகள் நாகரிகம் என்ற பெயரால் நாளுக்கு நாள் உயர்வை இழந்து நாசம் அடைந்து வருகின்றன. அவர் பார்வையில் நாகரிகம் என்பது உடலின்பத்தை மையப்படுத்தி சந்தையை விரிவுப்படுத்துவது என்பதாக இருந்திருக்கலாம். அதன் பலனாக, விதவிதமான உடைகள், காலணிகள் அணிவது. உடலுழைப்புக் கோராத விவசாய வேலைகள், எவர் எதை வேண்டுமானாலும் எழுதி அச்சாக்கலாம் என்று கட்டுப்படுத்தப்படாத எழுத்து, ரயில், ஆகாய விமானம், பித்தானை அழுத்தினால் ஆடை வந்து விடும், பத்திரிக்கைகள் வந்து சேரும், உணவுப் பண்டங்களை உண்ணலாம், மோட்டார் வண்டி வந்து காத்து நிற்கும். உழைப்பேயின்றி இயந்திரங்களே அனைத்தையும் செய்து விடும். நாகரிகம் பெருகியதில் திறந்த வெளி வேலைகளை மனிதர்கள் பிரியமோடு செய்து வந்த நிலை மாறி, மூடுண்ட சுரங்கங்களிலும் புகைக் கக்கும் தொழிற்சாலைகளிலும் லட்சாதிபதிகளின் நன்மைக்காக உழைக்க வேண்டியவர்களாக இருக்கிறார்கள். பணம் மனிதனை அடிமைக் கொண்டு விடுகிறது. பணத்தினால் வாங்கக் கூடிய ஆடம்பர வாழ்க்கை பெயர் தெரியாத நோய்களை கொண்டு வந்து விடுகிறது. இதனால் பட்டாளம் போல மருத்துவர்களும் வைத்தியசாலைகளும் பெருகி விட்டன. மேலும் ஒழுக்கத்தை குறித்தோ மதத்தை குறித்தோ நாகரிகம் கவலைப்படுவதில்லை என்கிறார். 

ஆங்கிலேயர்கள் இங்கு வருவதற்கு முன்பே நாம் ஒரே தேசிய இனமாகவே இருந்திருக்கிறோம். நாம் தேசிய சமுதாயமாக இருந்ததால்தான் அவர்களால் ஒரே ஆட்சியை அமைக்க முடிந்தது. இந்தியா பிரிக்க முடியாத ஒரு நிலப்பரப்பு என்பதால்தான் புண்ணியஸ்தலங்களாக தெற்கில் ராமேஸ்வரமும் கிழக்கில் ஜகந்நாதமும் வடக்கில் ஹரித்துவாரத்தையும் அமைத்திருக்கிறார்கள். இவ்வாறு ஆன்மிகத்தால் ஒன்றுப்பட்டு கிடக்கும் இந்தியா, நவநாகரிகத்தின் கீழ் நசுக்கப்பட்டுக் கிடக்கிறது. ரயில்கள் இல்லாமலிருந்திருந்தால் ஆங்கிலேயர்கள் இப்போது உள்ளதை போன்று தீவிர ஆதிக்கம் செலுத்தியிருக்க முடியாது என்கிறார். மக்கள் ஒரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு செல்லும்போது ஒட்டுவாரொட்டி என்று சொல்லப்படும் பிளேக் போன்ற நோய்கள் பரவி விடுகின்றன. போக்குவரத்து வசதி இருப்பதால் மக்கள் தாங்கள் விளைவித்த தானியங்களை வெளியாட்களுக்கு விற்று விடுவது உள்ளுரில் பஞ்சத்தை உருவாக்குகிறது என்கிறார். 

ஆனால் அதற்காக காந்தி ரயிலில் பயணிக்காதவர் அல்ல. அது அவரை நோக்கி கேள்வியாக எய்யப்பட்டபோது, என்னுடைய லட்சியத்துக்கும் எனக்கும் உள்ள இடைவெளியை நான் வெளிப்படையாக காட்டிக் கொள்கிறேன். என் இலட்சியப்பாதையில் நான் எதிர்கொள்ளும் தோல்விகளையும் பலவீனங்களையும் உலகறிய வெளிப்படுத்திக் கொள்கிறேன். இதன் மூலம் போலித்தனங்களிலிருந்து என்னை காப்பாற்றிக் கொள்வதோடு, தோல்வியால் ஏற்படும் அவமானத்தை கருதியாவது இலட்சியத்தை அடைய தொடர்ந்து முயற்சிப்பேன் அல்லவா என்கிறார். 

வழக்கறிஞர்கள், மருத்துவர்கள் மீதும் அவருக்கு விமர்சனம் இருந்தது. வக்கில்கள் மனிதர்களுக்குள் தகராறு ஏற்படும்போது மகிழ்கிறார்கள் என்கிறார். இத்தனைக்கும் அவருமே வழக்கறிஞர்தான். தாதா அப்துல்லா என்பவரின் வழக்குக்குகாகதான் அவர் தென்னாப்பிரிக்காவுக்கு செல்கிறார். ஆனால் நீதிமன்றங்களின் தீர்ப்பை விட சமரசங்களின் மீது அவருக்கு அதிக நம்பிக்கை இருக்கிறது. அவர் ஈடுபட்ட தாதா அப்துல்லா வழக்கின் தீர்ப்பு காந்தி தரப்புக்கு சாதகமாக வந்தபோதிலும் எதிர்தரப்பினரான தயாப்கான் தர வேண்டிய 37000 பவுண்ட் அவரை திவலாக்கி விடும் என்ற நிலையில் காந்தி தலையிட்டு அந்த தொகையைத் தவணை முறையில் செலுத்தலாம் என்று சமரசம் செய்து வைக்கிறார். அவர், நீதிமன்றங்களை அன்றாடத்தில் தலையிட்டு தன் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ளும் அமைப்பாக காண்கிறார். நவீன மருத்துவம் என்பது நம்மை அடிமைகளாக வைத்திருக்க ஆங்கிலேயர்கள் உபயோகப்படுத்தும் முறை என்ற அவரது கருத்து இன்று உலகளாவிய நோய்களும் அதன் மருத்துவ சிகிச்சைக்கு தேவைப்படும் மருந்துகளுக்கு பின்னிருக்கும் மிகப் பெரிய சதி வலைப்பின்னலும் அவர் கூற்றை மெய்யாக்குவது போல்தானுள்ளது. 

நாகரிக மோகத்துடன் ஒப்பிடும்போது மத மூட நம்பிக்கை அத்தனை தீமை இல்லை என்கிறார். மத மூட நம்பிக்கைகளை ஒழிக்க வேண்டும் என்பதில் அவருக்கு மாற்று கருத்தில்லை. ஆனால் அதனை மதத்தை அவமதிப்பதன் மூலம் செய்யாமல் மதத்தை பாதுகாப்பதன் மூலமே செய்ய முடியும் என்கிறார்.  வெவ்வேறு மதங்கள் என்பவை, ஒரே இடத்துக்கு இட்டுச் செல்லும் வெவ்வேறு பாதைகள் மட்டுமே. ஒரே இலக்கை அடையும் வரை, எந்த பாதையில் செல்கிறோம் என்பதற்கு என்ன முக்கியத்துவம் இருக்கிறது என்கிறார். 

துன்பத்தை தானே ஏற்றுக் கொண்டு அதன் மூலம் உரிமைகளை பெறும் முறையே சாத்விக எதிர்ப்பு என்று கூறும் அவருக்கு 1907லிருந்து தற்போதைய 1909 வரையிலான காலகட்டத்தின் டிரான்ஸ்வால் போராட்டங்கள் சத்தியாகிரகத்தின் செயல்திறன் பற்றியும் அதன் அறம் சார்ந்த உயர்நிலை பற்றியும் உறுதியான நம்பிக்கை கொள்ள செய்திருந்தன. வரலாறுகள் போர்களை மட்டுமே விவரிக்கிறது. உலகில் நடந்தவை இவை மட்டுமே என்றால் இன்று மனிதக்குலமே இருந்திருக்காது.  இன்று நாமெல்லாம் இருக்கிறோம் என்பதே சத்தியம் அல்லது அன்பின் அடிப்படையில்தான் உலகம் இயங்குகிறது என்பதற்கு சாட்சி. வன்முறை போராட்டத்தை விட அகிம்சை போராட்டத்துக்கே அதிகமான வீரம் தேவை. பீரங்கிக்கு பின்னாலிருந்து சுட்டு வீழ்த்துவதை விட முன்னிருந்து சிதறுவதே வீரம். நீதியில்லா சட்டங்களுக்கு கீழ்ப்படிவது மனிதத்தன்மையற்றது என்பதை மாத்திரம் மனிதன் உணர்ந்துக் கொள்வானெனில், எந்த மனிதனின் கொடுமையும் அவனை அடிமைப்படுத்தி விட முடியாது என்கிறார். அவர் செய்துக் காட்டியதும் அவற்றைதானே. 

இந்நுாலை அவரின் அரசியல் பார்வைகளின் தொகுப்பாக எடுத்துக் கொள்ளலாம்.  அவர் துவேஷத்திற்கு மாற்றாக அன்பு நெறியையும் வன்முறைக்கு பதிலாக தன்னல தியாகத்தையும் மிருக சக்திக்கு எதிராக ஆன்ம சக்தியையும் முன் வைக்கிறார். பழமையை இலட்சிய நிலையாக உயர்த்தி பிடிக்கும் மனோபாவம் ஒருவேளை அவர் அந்நிய தேசத்திலிருந்து இந்தியாவை பார்த்துக் கொண்டிருந்தால் ஏற்பட்டிருக்கலாம் என்று தோன்றினாலும், முக்தியடைவதற்கும் ஆன்மாவின் பூரணமான விடுதலையை அடைவதற்கும் உதவியாக இல்லாத இச்சடலத்தை எப்படி நிராகரித்து விடுவேனோ அதேபோல் கொள்கையளவில் எல்லா இயந்திரங்களையும் நிராகரிப்பேன். ஆனால் உடலை போல அவற்றையும் தவிர்க்க முடியாதாகையால் இயந்திரங்கள் இருக்க வேண்டியதுதான். அதேசமயம் ஆன்மா மேன்மையடைவதற்கு இவ்வுடல் தடையாக இருக்குமானால் அதையும் நிராகரித்து விட வேண்டியதுதான் என்ற அவரது கருத்தியல் இதனை நிராகரிக்க வைத்து விடுகிறது. ஆங்கிலேயரை அந்நியராக கருதாது கருத்து நிலையில் எதிர்ப்பரப்பினராகவே இறுதி வரை எண்ணம் கொண்டிருந்தார். இந்நுாலிலும், அவர்கள் மீது நமக்கிருக்கும் வெறுப்பை அவர்களுடைய நாகரிகத்தின் மீது மாற்ற வேண்டும் என்று எழுதுகிறார். அவர்கள்தான் நாகரிக மோகத்தை இந்தியரிடம் ஏற்படுத்துகின்றனர் என்ற கவலை அவருக்கிருந்தது. நம் சிந்தனைகளில் ஏற்படும் மாற்றம் நம்மை காலனியாக நீடிக்கச் செய்யும் அல்லது அவர்களே இங்கிருந்து விலகினாலும் அது நம்மிடம் ஏற்படுத்தும் தாக்கம் அவர்களின் சந்தைப்படுத்தலுக்கான களத்தை இங்கு உருவாக்கி விடும் என்ற அவரது சிந்தனை இன்றைய காலத்தின் நிதர்சனம். இந்நுாலின் காலகட்டம் அவர், அகிம்சா தத்துவம் மிக புனிதமானது. கடவுளை போல எட்டுவதற்கரியது. பலவீனம் நிறைந்த ஊன் வாழ்க்கையில் ஆழ்ந்திருக்கும் மனிதனின் சிந்தனைக்கு அப்பாற்பட்டது. எனவே மனிதன் செய்யக்கூடியதெல்லாம் அந்த லட்சியத்தை நோக்கி பாடுபடுதலேயாகும் என்ற புரிதலை முழுமையாக வந்தடைவதற்கு முந்தைய கணமாக இருக்கலாம். மொத்தத்தில் இந்நுாலை முதிரா மகாத்மாவின் சிந்தனைகளின் தொகுப்பு  எனலாம். 

***

No comments:

Post a Comment