Search This Blog

Friday, 24 February 2023

தென்னாப்பிரிக்க சத்தியாகிரகம்

காந்திய தொகுப்பு நுால்கள் பதினேழில் முதல் தொகுப்பில் வெளியான தென்னாப்பிரிக்க சத்தியாகிரகம் நுால் குறித்து சிறுபார்வை



மெலிந்தத் தோற்றம் என்றாலும் பலகைப் போன்று அகன்ற தோள்கள், லேசாக பருத்த மூக்கு, பற்களற்ற பொக்கை வாய், சுருக்கங்கள் நிறைந்த முகத்தில் உள்ளொளி பொருந்தியக் கண்கள், சற்றே பெரிய காதுகள். வழுக்கையான தலை என்பதால் காது வரை நீண்டு முழு வடிவம் காட்டி நிற்கும் முட்டை வடிவக் கண்ணாடி, சராசரி இந்தியரின் பொருளாதார நிலையை உணர்த்தும் கதரினாலான நிரந்தர அரையாடை என தன் பின் நாளைய தோற்றத்துக்கு சற்றும் பொருந்தாத தோற்றத்துடன்தான் அவர் தென்னாப்பிரிக்காவிற்கு புறப்பட்டு சென்றார். பிறகு அவர் வாழ்வில் நிகழ்ந்தவைகள் அனைத்தும் அவருடைய தனிப்பட்ட வாழ்வு என்று பிரித்தறியவியலாத நிலைக்கு சென்றிருந்தது. 

இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்களை வெளியேற்றுவதற்கு வன்முறையற்ற அகிம்சையை பயன்படுத்தவிருக்கும் அவர் அப்போது வருவாய்க்கான வேலை தேடி கடல் கடந்து செல்லவிருந்தார். தென்னாப்பிரிக்காவில், டர்பன் நகரை சேர்ந்த ‘தாதா அப்துல்லா என்ற நிறுவனருக்கும் ‘தையப் ஹாஜி கான் முகம்மது என்ற பெயரில் பிரிட்டோரியாவில் இயங்கிக் கொண்டிருந்த நிறுவனத்துக்குமிடையே நிலவிய சச்சரவு நீதிமன்றத்துக்கு வந்திருந்தது. போர்பந்தரை சேர்ந்தவரான தாதா அப்துல்லாவின் கம்பெனி இங்கிலாந்தில் பாரிஸ்டர் பட்டம் பெற்ற அந்த வழக்கறிஞரை ஏற்கனவே தான் அமர்த்தியிருந்த வழக்கறிஞர்களுக்கு உதவியாளராக அமர்த்தி தென்னாப்பிரிக்காவுக்கு அழைத்திருந்தது. போர்பந்தரை சேர்ந்தவர், இங்கிலாந்தில் சட்டம் பயின்றவர், குஜராத்தியும் ஆங்கிலமும் அறிந்தவர் என்ற தகுதிகளோடு அவர் தென்னாப்பிரிக்காவுக்கு புறப்பட்டபோது அவருக்கு கஸ்துார் என்ற பெண்ணுடன் மணமாகி ஹரிலால் என்ற மகனும் பிறந்திருந்தான்.

திரு. மோகன்லால் கரம்சந்த் காந்தி, 1893 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு பயணம் கிளம்பியிருந்தார். சம்பாதிக்கும் நோக்கோடும் புதுமைகளின் மீது இயல்பாக கொண்டிருக்கும் ஆர்வத்துடனும் 1893 மே மாதம் டர்பன் துறைமுகத்தில் இறங்கிய காந்திக்கு சென்று சேர்ந்த இரண்டு வாரங்களுக்குள்ளாகவே கசப்பான அனுபவங்கள் நேர்கின்றன. அங்குள்ள ஐரோப்பியர்கள் இந்தியர்களை நடத்தும் விதத்திலும் தனிப்பட்ட வகையில் நீதிமன்றத்திலும் இரயிலும் தங்க இடம் தேடுகையிலும் அவருக்கு மோசமான அனுபவங்கள் நிகழ்கின்றன. அவற்றை குறித்து அவர் இந்திய நண்பர்களிடம் விவாதிக்கும்போது அவர்கள் இது போன்ற அவமதிப்புகளை இயல்பாக எடுத்துக் கொள்ளும் உள்ளம் படைத்தவர்களாக இருப்பதை அறிகிறார். இதனிடையே வந்த வேலைகளை கவனிக்க தொடங்குகிறார். சந்தர்ப்பம் ஒன்றில் அவருக்கு ‘நேட்டால் மெர்க்குரி என்ற இதழில் “இந்தியர்களின் வாக்குரிமை என்ற தலைப்பின் கீழ் எழுதப்பட்ட கட்டுரையை வாசிக்க நேரிடுகிறது. அச்சந்தர்ப்பம் அவர் தென்னாப்பிரிக்காவுக்கு சென்றதன் நோக்கம் நிறைவு பெற்றதை முன்னிட்டு இந்தியா திரும்பும் முன்பாக அளிக்கப்படும் பிரிவு உபச்சார விழாவில் வாய்க்கிறது. அத்துடன் அவர் இந்தியாவுக்கு கிளம்ப வேண்டும். தனிப்பட்ட வகையில் அவருக்குமே தன்னை அவமதிக்கும் நாட்டில் இருப்பதிலோ பணம் சம்பாதிப்பதிலோ  விருப்பமிருக்கவில்லை. 

“நம்மை அழிப்பதற்கு கையாளப்பட போகும் வழிமுறையில் இது முதல் படிஎன்றார் காந்தி. அந்த கட்டுரை இந்தியர்களின் வாக்குரிமையை இரத்து செய்வதற்காக சட்டசபையில் நிறைவேற்றப்படவிருக்கும் மசோதாவை குறித்து எழுதப்பட்டிருந்தது. 

“இந்தியர்களுக்கிருக்கும் சிறிய உரிமையும் பறிக்கப்பட போகிறது. இதை நீங்கள் கடுமையாக எதிர்க்க வேண்டும் 

விழாவில் குழுமியிருந்தவர்களுக்கு குழப்பமும் அச்சமும் இருந்தது. அவர்களிடம் பணமிருந்தாலும் வழிக்காட்டுவதற்கு ஆளின்றி இருந்தது. 

“மிஸ்டர். காந்தி… அதற்கு உங்கள் துணை வேண்டுமே 

காந்தி மேலும் ஒரு மாதக்காலம் அங்கே தங்குவதற்கு சம்மதிக்கிறார். இந்தியர்களின் நலன்களை பாதுகாக்க நிரந்தர கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டுமென்ற தனது எண்ணத்தை செயலாக்கி அக்கமிட்டிக்கு சேட் ஹாஜி ஆதம் அவர்களை தலைமை வகிக்க செய்தார். இந்தியர்களின் வாக்குரிமைக் குறித்த மசோதா சட்டசபையில் ஆஜர் செய்யப்படும் முன்பாக இந்திய சமூகத்தாரின் நிலையை விளக்கி விண்ணப்பம் ஒன்றை எழுதி அதை ஹாஜி ஆதம் பெயரில் சட்டசபைக்கு அனுப்பி வைக்கிறார். இதுவே தென்னாப்பிரிக்க சட்டசபைக்கு அனுப்பப்பட்ட முதல் விண்ணப்பம். இத்தகைய அவருடைய பொதுப்பணிகளுக்காக தென்னாப்பிரிக்க இந்தியர்கள் அவருக்கு ஊதியம் வழங்க முன்வந்தபோது அதை மறுத்து விடுகிறார். 

காந்தி இந்த வரலாறை ‘தென்னாப்பிரிக்க சத்தியாகிரகம் என்ற பெயரில் 1924ல் பூனாவில் எராவ்டா சிறையிலிருந்தப்படியே எழுதுகிறார். அப்போது அவர் தேசத்துரோக குற்றம் சாட்டப்பட்டு ஆறாண்டு கால தண்டனையிலிருந்தார். முதற்கட்டமாக முதல் முப்பது அத்தியாயங்கள் எழுதப்பட்டன. அவற்றை அவர் தன் துல்லியமான நினைவுகளின் வழியே கூற, அதனை அவருடன் சிறைப்பட்டிருந்த திரு.இந்துலால் யாக்ஞிக் என்பவர் எழுத்தாக்கினார். எந்தவித முன் குறிப்போ ஆதார நுால்களோ இல்லாதபட்சத்தில் அவர் இந்நுாலை தொடங்கிய விதமும் எழுதிய விஷயங்களும் ஆச்சர்யத்தில் ஆழ்த்துபவை. அவர் எதையும் முழுமையாக செய்பவர். சொல்பவர். இப்போது தான் எடுத்து சொல்லிக் கொண்டிருப்பது அந்நிய நாட்டை பற்றியது என்ற நோக்கில் முதலில் அந்நாட்டை வாசகர்களுக்கு முழுமையாக அறிமுகம் செய்து வைக்கிறார். தென்னாப்பிரிக்காவின் அமைவிடம், புவியியல் அமைப்பு, அதன் அரசியல் மற்றும் சமூக வரலாறு, நேட்டால், டிரான்ஸ்வால், ஆரஞ்ச் ப்ரீ ஸ்டேட், புளும்பாண்டீன்,  கேப் டவுன் போன்ற  முக்கிய நகரங்களைப் பற்றிய குறிப்புகள், அதன் ஆட்சியாளர்கள், குடிமக்கள், அதில் வந்தேறிகளின் ஜனத்தொகை, பழங்குடியினரின் இருப்பு மற்றும் வகைப்பாடுகள், அம்மக்களின் பழக்கவழக்கங்கள், இயற்கை வளம், தொழில் என மிக தெளிவான மனச்சித்திரத்தை உருவாக்கி விட்டே நுாலுக்குள் அழைத்துச் செல்கிறார். 

மோகன்தாஸின் அறிவுறுத்தலின்பேரில் தற்காலிகமாக தொடங்கப்பட்ட அக்கமிட்டி ஸ்திரமாகி நேட்டால் இந்தியர் காங்கிரஸ் (1894 மே மாதம்) என்றாகிறது. அந்த பெயரையும் காந்தியே பரிந்துரை செய்கிறார். கமிட்டியின் நோக்கமும் செயல்பாடுகளும் தென்னாப்பிரிக்க இந்தியர்களிடையே எடுத்து சொல்லப்பட்டு அங்கத்தினர்களை பெருக்கிக் கொள்ள ஏற்பாடானது. அதன் செலவுகளுக்காக சந்தா தொகை வசூலிக்க முடிவு செய்தனர்.  அந்த தொகைக்கான கணக்கறிக்கை அதன் மாதாந்திரக் கூட்டங்களில் ஒப்படைக்கப்பட்டன. கூட்டங்களில் புதிய யோசனைகளும், சந்தேகங்களும் அதற்கான விடைகளும் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் விஷயங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. அரசியல் விஷயங்கள் மட்டுமின்றி வீட்டு சுகாதாரம், உடல் நலம் பேணல் இவற்றை குறித்தும் விவாதிக்கப்பட்டன. நேட்டால் இந்தியர்கள் கல்விச் சங்கம் ஒன்றும் அமைக்கப்பட்டது. அங்கத்தினர் சந்தா தொகையைக் கொண்டு நிலம் வாங்கப்பட்டது. இப்படியாக தென்னாப்பிரிக்க இந்தியர்களுக்கு தங்களின் நிலையை புரிந்துக் கொள்ளும் வாய்ப்பும் அதன் மீதான விழிப்புணர்வும் கிடைக்கப் பெற்றது என்கிறார் காந்தி. 

இந்திய சுதந்திரப் போராட்டத்தின்போதும் அவர் அடிமைப்பட்டு கிடக்கும் நிலையை இந்திய மக்களுக்கு உணர்த்தும் முயற்சியில்தான் முதற்கட்டமாக ஈடுபட்டார். மக்களை புரிந்துக் கொள்ளும் நோக்கோடு இந்தியாவில் குறுக்கும்நெடுக்குமாக பயணங்களை மேற்கொள்கிறார். அவரது மொழியானது வார்த்தை ஜாலங்களையோ அடுக்குமொழி வசனங்களையோ கொண்டதல்ல. அவரது எளிய வார்த்தைகள் எளிய மக்களின் ஆன்மாக்களை தொட்டன. தகவல் தொழில்நுட்பங்கள் அதிகமில்லாத காலக்கட்டத்திலும் தேசம் முழுவதும் அவரது செய்திகள் பரவின. கடிதங்கள் மூலமும் பத்திரிக்கைகள் மூலமும் மக்களுடன் விடுபடா தொடர்பிலிருந்தார். தனக்கு வரும் கடிதங்களுக்கு தன் கைப்படவே பதிலெழுதி அனுப்பினார். அவரது அணுகுமுறைகள் புதுமையானதாகவும் எளிமையானதாகவும் இருந்தாலும் கடைப்பிடிக்க கடுமையானதாக இருந்தது. முரட்டுக் கதரை உடுத்துவதாகட்டும்.. துன்பங்களை சகி்த்துக் கொள்வதாகட்டும்… எல்லாமே கடினமானதுதான். தன்னை வருத்திக் கொள்வதன் மூலம் எதிராளியின் மனதை இளக்குமாக்குவதுதான் சத்தியாகிரகம் என்ற நிலையில் சத்யாகிரகிகளுக்கு சிறைவாசம் கிடைக்கலாம்… மரணம் கூட நேரிடலாம் என்று அறிந்திருந்த போதிலும் இந்தியா முழுவதிலும் அவருக்கு ஆதரவாளர்கள் பெருகிக் கொண்டே போயினர். 

தென்னாப்பிரிக்காவிலும் அவருக்கு ஆதரவு கூடிப் போனது. நேட்டாலில் அவர் வெற்றிக்கரமான பதிவுப் பெற்ற வழக்கறிஞராகவும் திகழ்ந்தார். இரண்டரை வருடங்கள் இப்படியாக கழிந்த பிறகு, மேலும் சில ஆண்டுகள் தென்னாப்பிரிக்காவில் இருக்கும் நோக்கோடு தன் குடும்பத்தை அழைத்து வர 1896 ஆம் ஆண்டின் மத்தியில் இந்தியாவுக்கு திரும்புகிறார். இந்தியாவில் பாலகங்காதர திலகர் மற்றும் கோபாலகிருஷ்ண கோகலேயுடன் அறிமுகம் செய்துக் கொள்கிறார். சென்னைக்கும் கல்கத்தாவுக்கும் செல்கிறார். தான் செல்லுமிடந்தோறும் நேட்டால் ஐரோப்பியர், தென்னாப்பிரிக்க இந்தியர்களை நடத்தும் விதம் குறித்தும் ஒப்பந்த தொழிலாளர்களை அடிமைப்படுத்துவது குறித்தும் இந்தியர்கள் மீது சுமத்தப்படும் வரிச்சுமைகள் குறித்தும் பிரசங்கங்கள், துண்டு பிரசுரங்கள், கூட்டங்கள் வழியாக இந்தியாவில் ஆதரவுத் திரட்டினார். இந்நிலையில் அவருக்கு நேட்டால் இந்தியர் காங்கிரஸிடமிருந்து உடனடியாக கிளம்பி வருமாறு அவ்வாண்டு நவம்பரில் அழைப்பு வரவே அவர் குடும்பத்தோடு தென்னாப்பிரிக்காவுக்கு புறப்பட்டார். 

கோர்லண்ட், நாடேரி என்ற பெயர்களைக் கொண்ட இரு கப்பல்கள் காந்தி குடும்பத்தார் உட்பட இந்தியாவிலிருந்து சுமார் எண்ணுாறு பயணிகளை சுமந்துக் கொண்டு நேட்டால் துறைமுகத்தை அடைந்த போது நேட்டால் அரசாங்கம் அவர்களை கரையிறங்க அனுமதிக்கவில்லை. காந்தி நேட்டாலின் மீது படையெடுப்பதற்காக இந்தியர்களை அழைத்து வந்திருப்பதாக தகவல் பரப்பப்பட்டிருந்ததால் நேட்டால் ஐரோப்பியர் அவர் மீது கடுங்கோபத்திலிருந்தனர்.  இந்தியாவில் அவர் செய்திருந்த பரப்புரை அவரை குறித்து தவறான பிம்பத்தை அங்கு உருவாக்கியிருந்தது. இருபத்து மூன்று தினங்கள் கரையிறங்க அனுமதிக் கிடைக்காத நிலையிலும் அவர் மனவுறுதி குலையவில்லை.

 

“நான் இங்கு வந்ததன் நோக்கம் நிச்சயமாக பணம் சம்பாதிப்பதற்காக அல்ல. ஐரோப்பியர்களும் இந்தியர்களுக்குமிடையே தவறான புரிதல் உள்ளது. இரு இனத்தாரும் சேர்ந்து வாழ வேண்டிய தேவை இருக்கும்போது இதனை நிவர்த்தி செய்தாக வேண்டிய அவசியமும் இருக்கிறது. அதன் பொருட்டு இரு சமூகங்களிடையே சுமுகமான பேச்சுவார்த்தைகளுக்கு வழிவகுக்க வேண்டும். இரு சமூகங்களும் ஆட்சேபம் தெரிவிக்கும் வரையில் நான் அப்பணியை செய்ய விரும்புகிறேன்” என்கிறார். அது மேலும் கோபத்தை துாண்டுவதாக இருக்கும் என்பதை அவர் உணர்ந்திருந்தாலும் மனதில் உள்ளதை மறைத்துக் கூறுவதை விரும்பவில்லை.   

அவருக்கு தான் செய்ய வேண்டியது குறித்து தெளிவான பார்வையிருந்தது. கப்பலிலிருந்து நிலத்திற்கு வந்த பிறகு அவர் ஐரோப்பியர்களால் தாக்கப்பட்டார். அதிலிருந்து காப்பாற்றப்பட்டு ருஸ்தம்ஜியின் வீட்டில் அவர் தங்க வைக்கப்பட்டபோதும் ஆபத்து முற்றிலும் விலகி விடவில்லை. குடும்பத்தாரும் உடனிருந்த அந்த நேரத்திலும் சிறிதும் பலவீனமடையாத மனதுடனேயே பிரச்சனையை எதிர்க் கொண்டார். தன்னை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். பின்னாளில் தன்னை யாராவது கொல்ல நேரிட்டால் தான் அவர்கள் மீது கோபம் கொள்ள போவதில்லை என்று கூறியிருந்ததை இதனோடு தொடர்புப்படுத்திக் கொள்ளலாம். 

தென்னாப்பிரிக்காவில் அவருடைய செயல்திட்டங்கள் மெல்ல உருவெடுக்கத் தொடங்கின.  இந்தியர்கள் தங்களுக்குள் பலப்படுவது மட்டுமன்றி இந்தியாவிலும் இங்கிலாந்திலும் தங்களுக்கு கிடைக்கத்தக்க உதவிகளை பெற வேண்டும் என்ற நோக்கோடு இந்திய தேசிய காங்கிரஸின் பிரிட்டிஷ் கமிட்டியுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்வது அவசியம் என்று கருதுகிறார்.

 

“ஏனெனில் நியாயத்தை ஆதாரமாக கொண்ட வாதங்கள் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு ஏறுவதில்லை 

அதற்கென, நடப்பு நிலவரங்களை வாரம் ஒருமுறையேனும் தாதாபாய் நௌரோஜிக்கும் வில்லியம் வெட்டர்பர்னுக்கும் கடிதங்கள் மூலம் தெரியப்படுத்தினார். இது வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களின் பிரச்சனையை நோக்கி பிரிட்டிஷாரின் கவனத்தை குவிக்க உதவியது. குடியேற்ற இந்தியர்களும் தத்தம் நிலைகளை உணரத் தொடங்கினர். இதற்கிடையே போயர் யுத்தம் மூள அதில் காயமடைந்தோர்களுக்கு உதவி புரிவதற்காக ஆம்புலன்ஸ் படைப் பிரிவை ஏற்படுத்தி அதற்கு தலைமை தாங்கி யுத்தக்களத்துக்கு சென்றார். 

அவர் இந்நுாலை எழுதிய காலக்கட்டத்தில் மகாத்மா என அறியப்பட்டிருந்தார். தென்னாப்பிரிக்க சம்பவங்களை குறித்து அதிகம் அறியாதவர்களுக்கு கூட அவர் சம்பராண் விவசாயிகளின் பிரச்சனைகளை தீர்த்து வைத்ததிலும் அதனை அவர் தீர்வை நோக்கி செலுத்திய விதத்திலும் அவர் மீது மிக நல்லதொரு அபிப்பிராயம் ஏற்பட தொடங்கியிருந்தது. 

தென்னாப்பிரிக்காவில், ஜோஹனஸ்பர்க்கிலிருந்து டர்பன் செல்லும் ரயில் பயணம் ஒன்றின்போது அவரது ஐரோப்பிய நண்பரான ஹென்றி போலக் அளித்த ஜான் ரஸ்கினின் கடையருக்கும் கடைத்தேற்றம் (Unto This Last) என்ற புத்தகத்தை இரவு முழுவதும் கண் விழித்து படித்தது அவருக்குள் மேலும் பல திறப்புகளை உண்டாக்கியது. அன்றைய இரவு, வழக்கறிஞர் தொழிலின் மூலம் கிட்டத்தட்ட ஆண்டுக்கு 5000 பவுண்ட் வரை சம்பாதித்துக் கொண்டிருந்த அந்த மனிதரை, சொத்துகள் அனைத்தையும் துறந்து விட்டு ரஸ்கினின் கொள்கைப்படி வாழ்க்கையை நடத்துவது என்ற முக்கியமான முடிவை எடுக்க வைத்திருந்தது. 

டர்பனுக்கு 12 மைல் தொலைவில் அழகான குன்றின் மீது நுாறு ஏக்கர் பரப்பில் நிலம் வாங்கப்பட்டு ரஸ்கின் மற்றும் டால்ஸ்டாயின் கருத்துக்களும் கண்டிப்பான வியாபாரக் கொள்கைகளும் அடங்கிய வாழ்க்கை முறையை அறிமுகப்படுத்திய போனிக்ஸ் குடியிருப்புத் திட்டத்தை அவர் அதிலிருந்து உருவகித்துக் கொண்டார். பின்னாளில் அவர் உருவாக்கிய டால்ஸ்டாய் பண்ணை (தென்னாப்பிரிக்கா) சபர்மதி, வார்தா போன்ற ஆசிரமங்களுக்கு இதுவே முன்னோடியாகும். சத்தியாகிரகப் போரில் அவர் ஈடுபடுத்திய ‘ஆயுதங்களில் ஒன்றான ‘இந்தியன் ஒப்பீனியன்என்ற வார இதழுக்கான அச்சகத்தை அவர் போனிக்ஸுக்கு மாற்றிக் கொண்டார். உள்நாட்டு இந்திய சமூகத்திற்கு விஷயங்களை எடுத்துக் காட்டவும் உலகம் முழுவதும் இருக்கும் இந்தியர்களுக்கு தென்னாப்பிரிக்க இந்தியர்களின் நிலைக் குறித்து தெரிவிக்கவுமான ஒரு ஊடகமாக அப்பத்திரிக்கை செயலாற்றியது. இதே முறையை அடியொற்றியே அவர் இந்திய சுதந்திரப் போராட்டத்திலும் யங் இந்தியா, நவஜீவன், ஹரிஜன் போன்ற பத்திரிக்கைகளை நடத்தி வந்தார். சுதந்திர இந்திய வரலாற்றில் அப்பத்திரிக்கைகளுக்கு குறிப்பிடத்தகுந்த இடமுண்டு. 

‘ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு என்ற மலை பிரசங்கத்தின் புகழ் பெற்ற வாசகம் அவருள் ஆழமான சிந்தனையை உண்டாக்கியிருக்க வேண்டும். கிறித்துவத்தில் அதீத ஈடுபாடு கொண்டிருந்த அவர், ஒருவேளை அதிலிருந்து ‘அகிம்சை என்ற பதத்தை கண்டுக் கொண்டிருக்கலாம். முதிராத அச்சிந்தனைக்கு வடிவம் கொடுக்க வாய்ப்புகள் அவரை தேடி வந்தன அல்லது தன் முன்பாக நிகழ்ந்தவற்றை அவர் தனது அறச்சோதனைக்கு உட்படுத்தியிருக்கலாம். அப்போது அவர் முழுமுற்றாக தன்னை பொதுப்பணிக்கு அர்ப்பணித்தவர் போல பிரம்மச்சர்யத்தை கடைப்பிடிக்கத் தொடங்கியிருந்தார். 

இந்தியர்கள் டிரான்ஸ்வாலில் நுழைவதையும் வசிப்பதையும் கட்டுப்படுத்தும் ஒருதலைப்பட்ச உணர்வோடு ஐரோப்பியர் அரசாங்கம் செயல்பட்டுக் கொண்டிருந்தது. ஜெனரல் ஸ்மட்ஸ் கருப்புச்சட்டத்தை நீக்குவதாக கூறி தந்திரமாக இந்தியர்களை பதிவுச் சட்டத்துக்கு உள்ளாக்கி, நம்பிக்கை மோசடி செய்திருந்தார். செப்டம்பர் மாதம் பதினோறாம் தேதி, 1906ல் சுமார் மூன்றாயிரம் பேர் கூடியிருந்த பழைய எம்பயர் அரங்கில் தீர்மானிக்கப்பட்ட நான்காவது தீர்மானம், அவசர சட்ட மசோதா சட்டமாக நிறைவேற்றப்பட்டால் இந்தியர்கள் அதற்கு கீழ்ப்படிய மாட்டார்கள் என்றும் கீழ்ப்படியாததால் வரும் எல்லா தண்டனைகளையும் ஏற்றுக் கொள்வார்கள் என்றும் சொன்னது. இத்தீர்மானத்தை ஆதரித்து பேசியவர்களுள் ஒருவரான ஹாஜி ஹபீப், அவமானம் இழைக்கும் இச்சட்டத்திற்கு கோழைத்தனமாய் என்றுமே கீழ்ப்படிய மாட்டோம் என்று கடவுளை சாட்சிக்கு அழைத்து பிரதிக்ஞை செய்ததோடு மற்றவர்களை அங்ஙனமே பிரதிக்ஞை எடுத்துக் கொள்ளும்படி அறிவுறுத்தினார். 

இங்ஙனம் பிரதிக்ஞை எடுத்துக் கொள்ள வேண்டுமென்ற முன் திட்டம் ஏதுமில்லாவிடினும் நடப்பவைகள் குறித்து காந்திக்கு உற்சாகமாகவே இருந்தது. அங்கு அவர் ஆற்றிய பெருமை மிகுந்த புகழ் பெற்ற உரையில், இந்தியர்கள் இச்சட்டத்தை எதிர்ப்பதாக பிரதிக்ஞை செய்து தங்களுக்கு தாங்களே உண்மையாக நடந்துக் கொள்வார்களானால் ஒரு வேளை இந்த சட்டம் நிறைவேற்றப்படாமல் போகலாம். அல்லது வெகு சீக்கிரத்தில் இரத்து செய்யப்படலாம்… இல்லையென்றாலும் எக்கஷ்டங்களையும் தாங்குவதற்கு அவர்கள் தயாராக இருக்க வேண்டும். பசியால் வாட நேரலாம். வெயிலிலும் குளிரிலும் துன்புற நேரலாம். கடினமான வேலைகளை செய்ய வேண்டியிருக்கலாம். நம் மீது சவுக்கடிகள் விழலாம். நம் சொத்துகள் ஜப்தி செய்யப்படலாம். நாம் நாடு கடத்தப்படலாம். ஏன்… இறந்தும் போகலாம். என்னை பொறுத்தவரை இக்கஷ்டங்களை எதிர் கொள்ள நான் தனித்து விடப்பட்டாலும் என் பிரதிக்ஞையிலிருந்து மாற மாட்டேன், என்கிறார். நாம் நமக்குள்ள அனைத்தையும் தியாகம் செய்ய முன்வராமல் நடப்பவற்றை கைகளை கட்டிக் கொண்டு கவனித்துக் கொண்டிருந்தால் நம்முடைய தகுதியின்மையையும் கோழைத்தனத்தையும் வெளிப்படுத்தியவர்கள் ஆவோம். அதேசமயம் எடுத்துக் கொள்ளும் பிரதிக்ஞையை இறுதிவரை கொண்டு செலுத்துவதற்கு போதுமான சக்தி நம்மிடம் இருக்கிறது என்பதை நம் மனச்சாட்சி அறிவுறுத்தினால்தான் மட்டுமே  இதனை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றபோது அவர்  கிட்டத்தட்ட சத்தியாகிரகம் குறி்த்து திரண்டதொரு வடிவை அடைந்திருக்கலாம். 

இயக்கம் முன்னேறத் தொடங்கியது. இப்போது அதனை ஐரோப்பியர்கள் பொருட்படுத்த தொடங்கியிருந்தனர். ஆங்கிலேயப் பத்திரிக்கைகள் கூட இயக்கம் குறித்த செய்திகளை அவ்வப்போது வெளியிடத் தொடங்கின. இதற்கிடையே ஜோஹான்னஸ்பர்க்கையடுத்த சிற்றுாரான ஜெர்மிஸ்டன் என்ற இடத்தில் நடந்தக் கூட்டத்தில் காந்தியையும் இயக்கத்தையும் அறிமுகம் செய்து பேசிய ஹோஸ்கன் என்ற ஐரோப்பிய செல்வந்தர், டிரான்ஸ்வால் இந்தியர்கள் தங்கள் குறைகளுக்கு பரிகாரம் தேடிக் கொள்வதற்கு எந்த வழியுமே இல்லை. அவர்கள் எண்ணிக்கையில் சிறுபான்மையினர். ஓட்டுரிமையும் அவர்களிடம் இல்லை. பலவீனமான அந்த மக்களிடம் ஆயுதங்களும் இல்லை. இந்த நிலையில் பலமற்றவர்களின் ஆயுதமான சாத்விக எதிர்ப்பை கைக்கொள்வதை தவிர வேறு வழியில்லை என்று உரையாற்றினார்.

காந்தியால் அந்த செல்வந்தரின் கருத்திற்கு உடன்பட முடியவில்லை. அவர் சத்தியாகிரகப் போரை ஆன்மசக்தியாக கருதுபவர். சாத்விகமான இந்த எதிர்ப்பின்போது எந்தளவுக்கு ஆயுதபலமும் வன்முறையும் பிரயோகிக்கப்படுகிறதோ அந்தளவுக்கு அது ஆன்மசக்தியை குறைத்து விடும். ஏனெனில் இவையிரண்டும்  ஒன்றுக்கொன்று முரணானவை. சாத்விக எதிர்ப்பு பலவீனர்களின் ஆயுதம் என்று எண்ணிக் கொண்டால் சீக்கிரத்திலேயே அதை கை விட்டு விடுவோம். மாறாக சக்தி படைத்தவர்கள் என நம்பி சத்தியாகிரகம் செய்வோமானால் நாம் பலமுள்ளவர்கள் என்ற எண்ணம் பெருகி பலம் கொண்டவர்களாகிறோம். நமக்குள்ள சக்தி அதிகமாக ஆக சத்தியாகிரகத்தின் வலிமையும் கூடுகிறது. பிறகு, எடுத்துக் கொண்ட போராட்டத்தை கை விடுவதற்கு நாம் ஒருபோதும் சந்தர்ப்பத்தை தேடிக் கொண்டிருக்க மாட்டோம் என்பதாக அவர் உரை நிகழ்த்துகிறார்.  இப்போது அவர் சத்தியாகிரகம் குறித்து ஒரு தெளிவான கருத்துக்கு வந்திருக்க வேண்டும்.

இந்திய விடுதலைக்கான போராட்டத்தை ஒடுக்குவதற்காக பிரிட்டிஷ் அரசாங்கம் ரௌலட் சட்டத்தை 1919ல் நிறைவேற்றியது. காந்தி இச்சட்டத்திற்கு எதிராக தன் கனவில் (நிஜமாகவே) கிடைத்த விடையென ஏப்ரல் ஆறாம் நாள் இந்திய மக்கள் அனைவரும் தங்கள் வேலைகளை நிறுத்தி விட்டு உபவாசம் இருந்து பிரார்த்தனை செய்ய வேண்டும் என்றும் சட்ட மறுப்பிற்கு தயார் செய்வதற்கு அவசியமானதொரு கட்டுப்பாடாக சத்தியாக்கிரகிகளும், தங்கள் மனம் புண்பட்டிருப்பதற்கு அறிகுறியாக மற்றவர்களும் இந்த உபவாசத்தை மேற்கொள்ள வேண்டும் என்றும் கிராமங்கள் உட்பட இந்தியா முழுவதிலும் பொதுக்கூட்டங்கள் நடத்தி, ரௌலட் மசோதாக்களை கைவிட வேண்டுமென்று வைசிராயை கோரும் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறார். இந்தியாவின் முழுமுற்றான இந்த அமைதி ஆட்சியாளர்களின் கவனத்தை கவருவதாக அமையும் என்பது அவரின் எண்ணம். ஆனால் இதையும் மீறி சில இடங்களில் வன்முறை வெடித்தது. 

நதியாத்திலும் பம்பாயிலும் கூட்டம் பெருமளவில் கூடியிருந்தது.  அவர் சொற்களை கூட்டி பேச தொடங்கினார்... “சத்தியாகிரகிகளுக்கு இருக்க வேண்டிய பக்குவத்தையும் அதன் ஆழ்ந்த உட்பொருளையும் அறிவதற்கும் முன்னரே சாத்விக சட்டமறுப்பு இயக்கத்தை தொடங்கியது பெரும் தவறு  அவர் முகம் வெறுமையில் ஆழ்ந்திருந்தது. தென்னாப்பிரிக்காவை போன்று மக்கள் இங்கு பக்குவப்பட்டவர்களாக இருக்கவில்லைஇவர் எதையோ செய்ய போக எதுவோ விளைந்துக் கொண்டிருக்கிறது. 

நண்பர்களேநான் இமாலாய தவறை செய்து விட்டேன். திரளான மக்களை ஈடுபடுத்தும் இயக்கத்தைத் தொடங்கியபோது, தீய சக்திகளின் பலத்தை குறைவாக மதிப்பிட்டு வி்ட்டதற்கு பெரிதும் வருந்துகிறேன். இப்போது சற்று நின்று நிதானித்து யோசிக்க வேண்டியிருக்கிறது 

தென்னாப்பிரிக்காவில், அவர் அனுமதியின்றி டிரான்ஸ்வாலில் நுழைந்ததற்காக தண்டனை பெற்று முதன்முதலாக சிறைக்கு செல்கிறார். அப்போது நீதிமன்ற அனுமதியோடு அவர் அளித்த வாக்குமூலத்தில் தனக்கு அதிகபட்ச தண்டனை தருமாறு கோருகிறார். அதாவது சத்தியாகிரகி அதிகப்பட்ச துன்பங்கள் அனுபவிக்கும் மன உறுதி கொண்டவராக இருக்க வேண்டும் என்ற தனது பிரதிக்ஞையை அங்கு மட்டுமல்ல, தனது வாழ்நாள் முழுமைக்குமே கடைப்பிடித்தார். அவர் துன்பங்களோடு இன்பமாகவும் உறுதியோடும் ஒப்பந்தம் செய்துக் கொண்டிருந்தார்.

அவர் சிறையிலிருந்தபோது, இந்தியர்கள் தாமாகவே முன் வந்து பதிவு செய்துக்கொண்டால் கருப்புச் சட்டத்தை ரத்து செய்வதாகவும் சுயேச்சையாக செய்யப்பட்ட பதிவுகளை சட்டப்பூர்வமாக்க சர்க்கார் எற்பாடு செய்யும் என்றும் ஜெனரல் ஸ்மட்ஸ்,  ‘டிரான்ஸ்வால் லீடர் என்ற பத்திரிக்கையின் ஆசிரியரான ஆல்பர்ட் கார்ட்ரைட் மூலம் துாதனுப்ப, அந்த சமாதான ஒப்பந்தத்தில் காந்தி கையெழுத்திடுகிறார்.

“ஸ்மட்ஸ் நம்மை ஏமாற்றி விட்டால் என்ன செய்வது?“ இது மற்றவர்களின் கேள்வியாக இருந்தது.

“சமரசம் என்பது இருசாரரும் அடிப்படைக் கொள்கையை தவிர பிற விஷயங்களில் முடிந்தவரை விட்டு கொடுப்பதேயாகும்என்கிறார். இப்போது அவர் மனம் சத்தியாகிரக கோட்பாட்டில் ஸ்திரப்பட்டிருந்தது.

ஆனால் ஜெனரல் ஸ்மட்ஸ் நம்பிக்கைத் துரோகம் இழைத்திருந்தார். இதே மாதிரியான நம்பிக்கைத் துரோகத்தை அவர் 1919ல் ஜாலியன் வாலாபாக் படுகொலையிலும் சந்தித்திருந்தார். பிறகே, இந்தியாவில் மெல்ல வளர்ந்து வந்த பிரிட்டிஷ் எதிர்ப்புணர்வை மட்டுப்படுத்தும் நோக்கோடும் ஆங்கிலேய ஆட்சியாளர்களுடன் கண்ணியத்துடன் பேச்சு வார்த்தை நடத்தவுமாக ஏற்படுத்தப்பட்ட அமைப்பான காங்கிரஸ் இயக்கத்தின் முழு கட்டுப்பாட்டையும் தனது கைகளுக்குள் ஏந்திக் கொள்ள தளைப்பட்டார். தனது அகிம்சை கொள்கைக்கு இசைந்து செயல்படும் மக்கள் இயக்கமாக அதை மாற்ற முடிவு செய்தார். தன் தேகம், சுகம் அனைத்தையும் தியாகம் செய்து ஊண் உறக்கமின்றி செயல்படத் தொடங்கினார். அவரது வழிமுறைகளும் கொள்கைகளும் பிரிட்டிஷ் அரசாங்கத்தை எள்ளி நகையாட வைத்திருக்கிறது. மெத்த படித்த இந்தியர்களும் இதற்கு விதிவிலக்கில்லை. ஆனால் இந்தியாவின் மூலை முடுக்களிலிருந்த கோடிக்கணக்கான மக்கள் அவரை பின்பற்றினர். சிறைகளுக்கு செல்வது, சொத்துகளை துறப்பது, அதிகாரத்தை எதிர்ப்பது என்ற பொது இயலாமைகளை எல்லாம் அவரால் இயல்பாக்க முடிந்தது.   தனது அடுத்ததொரு செயல் திட்டமான ‘ஒத்துழையாமை கொள்கையை கடைப்பிடிக்குமாறு நாட்டு மக்களை கேட்டுக் கொண்டார். ஒத்துழையாமை இயக்கம், சட்டமறுப்பு இயக்கம் என்ற நிலைக்கு உயர்ந்தது.

நாடே புரண்டிருந்தது.

“அவர்கள் ஆயுதங்களை பெற்றிருக்கிறார்கள். நம்மிடம் அவை இல்லை. ஆனால் இந்தப் போராட்டத்தில் அவர்களைத் தோல்வியுறச் செய்ய முடியும் என்பதற்கான ஒரே உத்திரவாதம் நம்மிடம் இருக்கும் அஹிம்சை போன்ற ஆயுதங்கள் அவர்களிடம் இல்லை என்பதுதான்என்றார் காந்தி.

சௌரிசௌராவில் வன்முறைகள் நிகழ்ந்தபோது அவர் போராட்டத்தை திரும்ப பெற்றுக் கொள்கிறார். அப்போது தன் மீது விழுந்த எதிர்மறை விமர்சனங்களை அவர் பொருட்படுத்தவில்லை.

தென்னாப்பிரிக்காவில் தன் வார்த்தைகளை ஏற்று தன் பின் அணிவகுத்த தென்னாப்பிரிக்க சத்தியாகிரகிகளை போன்று எழுச்சியூட்டும் பயணத்துக்கு இந்திய மக்களை தயார்ப்படுத்தும் வேலையில் அவர் முன்னை விடவும் தன்னை மேலதிகமாக தயார்ப்படுத்திக் கொள்கிறார். சிறைக்கு செல்வதை ஒரு தவம் போன்று ஏற்றுக் கொள்வது, அத்தனிமை நாட்களை சரியான வகையில் உருவாக்கிக் கொள்வது, நீதிமன்றத்தில் ‘குற்றத்தை ஒப்புக் கொண்டு அதிகபட்ச தண்டனை கோருவது போன்று தென்னாப்பிரிக்காவில் தான் கண்டுப்பிடித்த பல புதுமையான அற நடவடிக்கைகளை இங்கும் கடைப்பிடிக்கத் தொடங்குகிறார். அதன் ஒரு பகுதியாக கூட இந்நுாலைக் கருதிக் கொள்ளலாம். ஏனெனில், அவர் மக்களுடன் பேசுவதற்கான மொழிகளுள் ஒன்றாக பத்திரிக்கைகளை கருதிக் கொள்வதில் முழு நம்பிக்கை கொண்டவர்.

மகாத்மா காந்தி தொகுப்பு நுால்களில் முதலாவதான இந்நுாலில், காந்தி எழுதிய தென்னாப்பிரிக்க சத்தியாகிரகம், இந்திய சுயராஜ்ஜியம் ஆகிய இரு நுால்களோடு அவற்றை சேர்ந்த கடிதங்களும் கட்டுரைகளும் ஆற்றிய உரைகளும் இணைக்கப்பட்டுள்ளன. இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் பெயர்கள், இடங்கள், சம்பவங்கள் முதலியன எக்காலத்தோரும் புரிந்துக் கொள்ளும் வகையில் தெளிவான அடிக்குறிப்புகளுடன் இடம் பெற்றுள்ளன. ‘தென்னாப்பிரிக்க சத்தியாகிரகம் என்ற இம்முதல் நுால் இரண்டு பகுதிகளையும் ஐம்பது உபத் தலைப்புகளையும் 434 பக்கங்களில் அடக்கியிருக்கிறது. பிற்சேர்க்கைப் பகுதியாக காலக்குறிப்புகளுடன் சில முக்கியமான விடுபடுதல்களும் இணைக்கப்பட்டுள்ளன. காலம் எதை நோக்கியோ பயணப்பட்டுக் கொண்டிருக்கும் இவ்வேளையில் இப்படியான மனிதர் இப்படியாக வாழ்ந்தார் என்பதற்கு இப்படியானவைகளெல்லாம் முக்கியமான சாட்சிகள்.

அரசியல் சாணக்கியம் பேசும் இவ்வுலகில் இந்த அரசியல் ஞானி தரும நெறிப்படி அரசியல் தந்திரம் என்பதே தவறான எண்ணம் என்பதோடு அரசியல் நெறிப்படி இது உசிதமற்றதுமாகும் என்கிறார். அவர் யாரையுமே விரோதிகளாக கருதிக் கொள்வதில்லை. நேட்டாலில் தன்னை தாக்கிய மிர் ஆலத்தின் மீதோ, கப்பலை விட்டு இறங்கிய பிறகு தன் மீது கூட்டுத் தாக்குதல் நடத்திய ஐரோப்பியர் மீதோ விரோதம் பாராட்டாத அவரது மனநிலை இறுதி வரையிலுமே தொடர்கிறது. ஆங்கிலேயர்களை கூட கருத்தியல் எதிர் நிலையர்களாகவே கருதிக் கொள்கிறார். வைணவத்தில் தீவிர ஈடுபாடு கொண்டவர் என்றாலும் இந்துக்கள் அவரை முகம்மது காந்தி.. என்று சாடுமளவுக்கு இஸ்லாமியர்கள் மீது ஆழமான அன்புக் கொண்டிருந்தார். கிறித்துவ நெறியின் மீதும் ஈடுபாடும் பற்றும் நம்பிக்கையும் கொண்டிருந்தார்.  அவரது தென்னாப்பிரிக்க வழக்கறிஞர்  அலுவலகத்தில் மாட்டப்பட்டிருந்த புகைப்படம் இயேசு கிறித்துவினுடையது.

காந்தியின் எழுத்துக்கள் அவரது கால, மனக்குறிப்புகளென வரலாற்றில் பல்வேறு மொழிகளில் இன்றும் பதியப்பட்டுக் கொண்டு வருகிறது. அவ்வகையில் ‘நவஜீவன் புத்தக வெளியீட்டு நிறுவனத்தார், அதன் தமிழ் மொழிக்கான உரிமையை ‘தமிழ்நாடு காந்தி நினைவு நிதியின் ஆதரவில் இயங்கி வரும் ‘காந்தி நுால் வெளியீட்டு கழகத்திற்கு வழங்க, திரு.தி.சு.அவினாசிலிங்கம் அவர்களின் தலைமையிலான பதினைந்து பேர்கள் அடங்கிய குழு (திரு.கோ.வேங்கடாசலபதி, திரு.கே.காமராஜநாடார், திரு.சி.சுப்ரமணியம், திரு.எம்.பக்தவச்சலம், திரு.நா.ம.ரா.சுப்பராமன், திரு.அ.வேதரத்தினம்பிள்ளை, திரு.மு.அருணாச்சலம்,  திரு.ரா.விநாயகம்,  திரு.ம.பெ.பெரியசாமிதுாரன், திரு.நா.ராமஸ்வாமி, திரு.லா.நா.கோபாலசாமி, திரு.ரா.வேங்கடராஜுலு, திரு.கி.வ.ஜகந்நாதன், திரு.செ.மெ.பழனியப்ப செட்டியார்) அதனை தவமென பெற்று தமிழுக்கு வரமென வழங்கியிருக்கிறது.

தென்னாப்பிரிக்காவுக்கு நாம் மோகன்லால் கரம்சந்த் காந்தி என்ற மனிதரை அனுப்பி வைத்தோம், நன்றிக்கடனாக அவர்கள் மகாத்மா காந்தியை திருப்பியளித்தார்கள் என்று அவரை நோக்கிய கூற்று ஒன்றுண்டு. அது ஓரளவுக்கு சரியானதும் கூட. ஒருவேளை அதற்கான வாய்ப்பையும் வயதையும் பெற்றிருந்தபோது அவர் தென்னாப்பிரிக்காவில் இருந்திருக்கிறார் என்றும் சொல்லலாம். அதேசமயம் இங்கிருந்து செல்லும்போதே அதற்கான மனநிலைகளை கொண்டிருந்தார் என்றும் சொல்லலாம். ஏனெனில், இயல்பிலேயே உள்ளொளி கொண்டவருக்கு மட்டுமே இம்மாதிரியான மனநிலை வாய்க்கப் பெறும். எது எப்படியிருப்பினும், அவர்கள் கையளித்ததை நாம் வன்முறையால் தவற விட்டு விட்டோம் என்பது மட்டும் உண்மை. நம்மை கூனி குறுக வைக்கும் உண்மை.

அவர் இந்த நுாலை எழுதி கிட்டத்தட்ட நுாறாண்டுகள் நெருங்கி விட்டன. இதிலிருக்கும் விஷயங்களை சிலர் அறிந்துமிருக்கலாம். ஆனால் இதனை ஒவ்வொரு முறை வாசிக்கும்போதும் புதிது போன்ற ஒரு உணர்வை எழுப்புவது எனக்கு மட்டும்தானா என தெரியவில்லை. வியப்பின் வாசம் குறைவதேயில்லை. இது சாத்தியம்தானா…? இது சாத்தியம்தானா….? என்ற கேள்விக்கு இது சத்தியம்தான்… இது சத்தியம்தான்… இதுவே சத்தியம் என்கிறது இந்நுால்.

மகாத்மா காந்தி எழுதியவைகளையும் அவரைக் குறித்து எழுதப்பட்டவைகளுமாக தொகுக்கப்பட்ட பதினேழு நுால்களுக்கும் மேற்சொன்ன குழுவினரின் அசுரத்தனமான உழைப்பும், மகாத்மாவின் மீதான ஆழமான ஈடுபாடும், அவர் கொள்கைகளின் மீதான தீவிரப் பிடிப்பும் மட்டுமே பின்னணியாக இருந்திட முடியும்.

நாம் அனைவரும் இவை அனைத்திற்கும் நன்றிக்கடன்பட்டிருக்கிறோம்.

 

***


No comments:

Post a Comment