பொதுப்பணித்துறையில் பணியாற்றும்
தாங்கள் தமிழ் இலக்கியத்தின் மீது ஆர்வம் கொண்டு நாவல் சிறுகதைகள் எழுதி வருகின்றீர்கள்.
தாங்கள் எழுத தொடங்கியது எப்போது? முதல் படைப்பு சிறுகதையா.. நாவலா..?
பொதுப்பணித்துறை பணி என்பது எனது படிப்பிற்கான பணி. இலக்கியமோ
எனக்கு வாழ்விற்கான ஆதாரம் என்று தோன்றுகிறது. சிறு வயது முதற்கொண்டு வாசிப்பில் ஆர்வம்
உண்டு. என் தந்தையார் வழி வந்த ஆர்வம். அதிகபட்ச இலக்கிய புத்தகங்களாக அத்தருணத்தில்
எனக்கு அறிமுகமானவைகள் அமுதசுரபி, கலைமகள், மஞ்சரி போன்றன. ஆனாலும் நுாலகங்கள் மூலமாக
நுால் வாசிப்பு தீவிரப்பட்டது. திருமணம், அரசுப்பணி, குழந்தைகள் என்ற சூழலுக்குள் அல்லது
சுழலுக்குள் சிக்கி மீண்ட போது காலம் பத்து வருடங்களை நகர்த்தியிருந்தது. மீண்டும்
வாசிப்பு. இம்முறை வாசிப்பு பல்வேறு தளங்களை நோக்கி நகர்ந்தது. சிற்றிதழ்கள் நிறைய
வாசிக்கத் தொடங்கினேன். அதன் மூலமாக அயல் நாட்டு இலக்கியங்கள் அறிமுகமாயின.
தொடர்ந்த வாசிப்பும் ஏகாந்தமான தனிமை உணர்வும் என்னை எழுத்துக்குள்
செலுத்தியது எனலாம். கதை எழுதும் நோக்கமென்று இல்லாமல் ஒருமுறை கணினியில் நான் அனுபவித்த..
கேள்விப்பட்ட.. விஷயங்களை கோர்வையாக்கி எழுதினேன். அது தானாகவே கதை போன்று வடிவெடுத்திருந்தது.
ஒரு பெண்ணின் காத்திருப்பு அது. அல்லது சமுதாயம் பெண்ணின் மீது திணித்துள்ள பொதி எனவும்
கொள்ளலாம். வைதேகி காத்திருந்தாள் என்று பெயரிட்டேன். அப்போது தினமணியில் சிறுகதை போட்டி
அறிவிப்பு வந்திருந்தது. நடந்த ஆண்டு 2012. நெய்வேலி புத்தகக்கண்காட்சியும் தினமணி
நாளிதழும் இணைந்து நடத்தும் போட்டி அது. இக்கதையை அந்த போட்டிக்கு அனுப்பி வைத்தேன்.
இரண்டாவது பரிசு கிடைத்தது. என் முதல் கதையே பரிசு பெற்றது ஒரு நிறைவு என்றால் பரிசு
பெறும் நிகழ்வு என் பிறந்த ஊரான நெய்வேலியில் நடைப்பெற்றது மற்றுமொரு நிறைவு.
தங்கள் முதல் படைப்புக்கு கிடைத்த வெற்றி மற்றும் விமர்சனம் பற்றி கூறுங்கள்
தினமணி நாளிதழ் ஆசிரியர் திரு. வைத்தியநாதன் அவர்கள் என் கதையை
வெகுவாக பாராட்டினார். செய்தித்தாளிலும் பிறகு தினமணி ஞாயிறு இணைப்பிலும் புகைப்படத்தோடு
கதையும் செய்தியும் வெளி வந்தது. ஏராளமான தொலைபேசி அழைப்புகள். தபால்கள் என புதிதான,
புதிரான அனுபவமாக இருந்தது.
தங்கள் படைப்புகளில் சித்தரிக்கப்பட்ட பாத்திரங்கள் கற்பனை பாத்திரங்களா..?
நடை முறையில் தாங்கள் சந்தித்த மனிதர்களின் பிரதிபலிப்பா..?
உண்மையில் உலவும் பாத்திரங்கள்தான் புனைவு பூசிக் கொள்கின்றன.
ஆனால் ஒரு பாத்திரத்திற்கு பல மனிதர்கள் தேவைப்படுவார்கள். அதனை கோர்வையாக்கியே புனைவான
பாத்திரம் படைக்கப்படுகிறது.
தங்களுக்குள் தாக்கத்தை ஏற்படுத்திய எழுத்தாளர் யார்?
முன்பு வாஸந்தி அவர்களின் கதைகள் மிகவும் பிடிக்கும். இப்போது
ஜெயமோகன் அவர்களின் எழுத்துக்கள் எனக்குள் மிகுந்த தாக்கத்தை உண்டாக்குகிறது. அயல்
இலக்கியம் எனில் தஸ்தாயெவஸ்க்கி, மாப்பசான் ஆகியோரின் எழுத்துக்கள் நமக்குள் ஏதோ ஒன்றை
நிகழ்த்தி விடுபவனாக இருக்கின்றன. கு.பா.ரா, ஜி.நாகராஜன், புதுமைப்பித்தன், தி.ஜானகிராமன்
போன்றோர் என்னை மிகவும் பாதித்தவர்களாக சொல்வேன்.
யாருடைய படைப்புகளை தாங்கள் விரும்பி வாசிக்கின்றீர்கள்?
இன்னாருடைய படைப்பு என்பதில்லை. விருப்பம் என்பது பாதிப்பு என்ற
பொருளில் கொள்வோமானால் மேற்கூறிய படைப்பாளிகள் என்னை கவர்ந்து விடுவார்கள். மற்றபடி
கைக்கு கிடைக்கும் எல்லா படைப்புகளையும் படித்து விடும் பழக்கம் உண்டு. படைப்புக்குள்
நுழைந்த பிறகு வாசிப்பும், வாசிப்பை நோக்கிய கண்ணோட்டமும் வெகுவாக மாறியுள்ளது என்றுதான்
சொல்வேன் இன்னென்ன நுால்கள் வாங்க வேண்டும் என்ற பட்டியல் தயாரிப்பில் எல்லோருடைய புத்தகங்களும்
இடம் பெறுபவனவாக இருக்கும்.
தங்களை பெண்ணிய எழுத்தாளர் எனக் குறிப்பிடலாமா?
“இசங்களுக்குள்“ செல்வது அத்தனை உவப்பானதாக இல்லை. அறம் சார்ந்த
படைப்பாளி என சொல்லலாம்
8 கலை இலக்கியம் படைப்பதன் மூலம் தாங்கள் அடைய விரும்பும் இலக்கு என்ன?
ஒரு விளையாட்டு வீரரிடம் தங்களின் இலக்கு என்ன என்று கேட்கலாம்.
அவரும் முதலிடம் பிடிப்பது என்பார். ஒரு அரசியல்வாதியிடம் இலக்கை பற்றி விசாரித்தால்
மாவட்டம்.. வட்டம்.. மாநிலம் எனலாம். ஆனால் இலக்கியம் படைப்போரிடம் கேட்டால் உண்மையிலுமே
சொல்வது கடினம்தான். அகத்தை நோக்கிய பயணம் மனதை இல்லா வெளியாக்கும். புற வாழ்க்கையிலிருந்து
சற்றே விலகி அறத்தை நோக்கிய பயணத்தை முன்னெடுக்க துவங்கும். இலக்கில்லாத, வெற்றிடம்
நோக்கிய அதன் பாய்ச்சலில் எதனை இலக்கென்பது..? அப்படிதான் தோன்றுகிறது எனக்கு. அதே
நேரத்தில் பாராட்டுகளும் பரிசுகளும் இப்பயணத்தை ஊக்குவிக்கும் என்பதில் மாற்றுக் கருத்து
இருக்க முடியாது.
9 பெண்ணிய படைப்பாளிகள் பெண்மொழிப் புனைவு வேண்டும் என்கின்றனர். இது குறித்து தங்கள் கருத்து என்ன?
படைப்புக்குள் பால் வேறுபாடு தேவையில்லை என்பது என் கருத்து.
பெண் இலக்கியம் என்றால் பெண்கள்தான் பேச வேண்டும் என்றில்லை. பெண்களை நோக்கி.. அவர்களின்
இரண்டாம்பட்ச சமுதாய போக்கு குறித்த அவலங்கள் நோக்கி.. ஆண் படைப்பாளர்கள் மூலமாக பேச,
எழுத வைப்பதும் கூட நல்ல விஷயம்தான்.
பெண் படைப்பாளியான உங்களுக்கு கலை இலக்கிய உலகில் கிட்டும் ஆதரவு பற்றி
கூறுங்கள்.
இதுவரை கிட்டத்தட்ட இரண்டொரு கதைகளை தவிர்த்து பிரசுரத்திற்கு
தகுதியில்லை என என் கதைகள் திருப்பியனுப்படவில்லை. அதனாலேயே இலக்கிய உலகில் பெருத்த
ஆதரவு கிட்டியுள்ளது என்று என்னால் குறிப்பிட முடியவில்லை. எழுத்துக்களுக்கு வாசகர்கள்
இருந்தால்தானே ஆதரவு கிடைக்கிறது என கூற முடியும்..? இந்த வகைப்பாட்டில் எல்லா எழுத்தாளர்களின்
எழுத்துக்களையும் அடக்கலாம். முன்னிலையில் இருக்கும் எழுத்தாளர்களின் எழுத்துக்கள்
கூட ஒரு ஆயிரம் பேரிடம் போய் சேருமா என்பது சந்தேகமே. புத்தகங்கள் பதிப்பிக்கப்படும்
எண்ணிக்கையில் இந்நிராதரவான போக்கு தெரிய வரும்.
எனது முதல் நாவலான “சக்கை“ நேரு மெமோரியல் கல்லுாரி, புத்தனாம்பட்டியில் தமிழ், இளங்கலை பட்டப்படிப்பிற்காக பாடத்திட்டத்தில்
சேர்க்கப்பட்டுள்ளது என்பது என்க்கு எழுத்துக்கு கிடைத்த அங்கீகாரமாக கொள்கிறேன்.
தவிர, நிறைய பரிசுகளும் விருதுகளும் கிடைத்துள்ளது.. இதை எனக்கு கிடைத்த ஆதரவாக எடுத்துக் கொள்வேன்.
தவிர, நிறைய பரிசுகளும் விருதுகளும் கிடைத்துள்ளது.. இதை எனக்கு கிடைத்த ஆதரவாக எடுத்துக் கொள்வேன்.
தங்கள் வாசகர் வட்டம் பற்றிக் குறிப்பிடுங்கள்
படைப்பு பிரசுரமான பிறகு எழுத்தாளர் தோழர்கள் படைப்பை விமர்சனம்
செய்யலாம்.. அவ்வளவுதான்
பெண்ணுக்குப் பெண் எதிரி என்பது பற்றித் தங்கள் கருத்து என்ன?
பெண்ணுக்குப் பெண் எதிரி என்பது பற்றித் தங்கள் கருத்து என்ன?
படைப்பாளியை நோக்கி இந்த கேள்வியை முன்னிறுத்துவது எதன் காரணமாக..?
படைப்பாளி பெண் என்பதன் பொருட்டுதானே..? இதிலிருந்தே இக்கேள்விக்கான பதிலை பெறலாம்.
பெண்ணுக்கான சட்டமில்லா கட்டங்கள் (Frames) விஷ விதைகளாக சமுதாயம் முழுக்க துாவி விடப்பட்டுள்ளது.
பெண்ணின் உறுதியான மனோபாவமும் அவள் உடல் மீதான ஆண்களின் நாட்டமும் இதற்கு பின்னிருக்கும்
உளவியல் எனலாம். இத்தனை ஆளுமைக் கொண்ட பெண்ணினத்தை கட்டுக்குள் கொண்டு வர வெறும் புஜபலம்
மட்டும் போதாது என்பதை உணர்ந்த ஆணாதிக்க மனபோக்கு மாய கட்டுகள் கொண்ட சமுதாயத்தை திட்டமிட்டு
வளர்த்தெடுத்தது. சமுதாயத்தின் ஒரு அங்கம்தானே பெண்களும். சங்கிலியால் பிணைக்கப்பட்டு
தன் பலம் உணராத வேழம் போல பயிற்றுவிக்கப்பட்ட பொறுப்புகளுக்குள்ளும் கட்டப்பட்ட சங்கிலிகளுக்குள்ளுமிருந்து
சிந்திக்கிறார்கள். அது தன் இனத்திற்கெதிராகவே மாறிப் போவதென்பது இயல்பாகி விடுகிறது.
அதைதானே ஆணாதிக்க சமதாயம் வளர்த்தெடுத்துக் கொண்டிருக்கிறது.
வாசிப்பு விழிப்புணர்வை கொண்டு வரும். விழிப்புணர்வு தன்னிலையை
உணர வைக்கும். சுயம் கண்டுப்பிடிக்கப்பட்டு விசும்பி எழும் போது கட்டுக்கள் அறுந்து
விழும். ஆக எதிரிகள் அல்ல அவர்கள். எதிரிகளை போன்று பயிற்றுவிக்கப்பட்டுள்ள “பாவைகள்“
என சொல்லலாம்.
சிறுகதை உலகில் புதுமைப்பித்தனை சிறுகதை மன்னன் எனலாம். பெண்ணெழுத்து அவ்வாறு ஏன் பரிணமிக்கவில்லை?
சிறுகதை உலகில் புதுமைப்பித்தனை சிறுகதை மன்னன் எனலாம். பெண்ணெழுத்து அவ்வாறு ஏன் பரிணமிக்கவில்லை?
சுயத்தை இழந்துள்ளோம் என்ற கண்டெடுப்பே அந்த
பயணத்தை நோக்கிய முதல் படியாகக் கொள்ளலாம்.
தாங்கள் நாவலாசிரியரும் கூட.. தாங்கள் எதற்கு முக்கியத்துவம் தருவீர்கள்..? சிறுகதையா..? நாவலா..?
தாங்கள் நாவலாசிரியரும் கூட.. தாங்கள் எதற்கு முக்கியத்துவம் தருவீர்கள்..? சிறுகதையா..? நாவலா..?
விரிந்த பரப்பிற்குள் எண்ணமிட்டப்படி உலாவ இயலும் சுதந்திரம்
கொண்ட இலக்கிய வடிவே நாவல். அதனையே குறிப்பிட்ட வரம்பிற்குள் தரமான ஒழுங்கமைவுடன் சொல்ல
விழைவது சிறுகதை. எனக்கு இரண்டுமே பிடிக்கும். முக்கியத்துவம் என்றெல்லாம் சொல்ல முடியவில்லை.
அதே சமயத்தில் வியாபார ரீதியாக நாவலுக்கு சற்றே அதிக வாசக பரப்புண்டு என கருதுகிறேன்.
அதற்காகவெல்லாம் இலக்கியத்தை வர வைத்து விட முடியாது. பிறகு மயில் இறகு போடும் கதையாகி
விடும்.
இலக்கிய உலகில் தங்களது எதிர்கால திட்டம் குறித்து..?
இலக்கு என்று ஏதுமில்லை. மனம் விரும்புகிறது எழுதுகிறேன்.
No comments:
Post a Comment