Search This Blog

Thursday, 14 September 2017

எங்க ஊர்ல..



ஊரின் மையத்திலிருந்தது அந்த வேம்பு. ஆலமரம் போல தழைத்து நிறைந்திருந்த அதன் படர்வான நிழலில் கிழக்கு நோக்கி ஒரு கருத்த பிள்ளையார் அமர்ந்திருந்தார். கூடவே ஒரு சூலமும். எண்ணெய் மினுங்கிய அவர் மேனியில் வேம்பின் இலையும் பூவும் உதிர்ந்து ஒரு மாதிரியாக புனிதம் குவிந்திருந்தது. ”நம்பூர போட்டோ எடுத்து வெளிநாட்டு நீஸ்பேப்பர்ல்லாம் போடுவாங்களாம்..“ தகவல் வந்ததையடுத்து பெண்கள் காலை வேலையை ஒதுக்கி விட்டு குளித்து முடித்திருந்தனர். சின்தடிக் புடவையும் அதனுடன் இணைந்த சின்தடிக் ரவிக்கையும் அணிந்துக் கொண்டனர். பெரிய பெரிய பூக்களை கொண்ட புடவைகள் புகைப்படத்தில் திருத்தமாக பதிவாகும் என்பதில் நிறைய நம்பிக்கையிருந்தது அவர்களுக்கு. சராசரியாக எல்லோருக்குமே மெல்லிய உடல்தான். அதனை இறுக கவ்விக் கிடந்தது மெல்லிய சின்தெடிக் ரவிக்கைகள். இளந்தாரி பெண்கள் சீவி முடிந்த கூந்தலில் கனகாம்பரம் பூ சூடியிருந்தனர். நடுத்தர வயது பெண்களுக்கு பூக்களின் மீது அத்தனை ஆர்வமில்லை. குட்டியும் குளுவாணிகளுமாக சந்தடியாக கிடந்தது அந்த வேம்படி.

”உங்க ஊரை பத்தி சொல்லுங்களேன்..” என்றார் தாட்சர். முப்பத்தைந்து வயதிருக்கும் அந்த வெளிநாட்டு பெண்மணிக்கு. சமூகநல ஆர்வலராம். கிராமபுற வாழ்க்கை முறையை அறிந்துக் கொள்ளும் ஆர்வத்தில் வந்துள்ளார்களாம்.

”இங்குட்டு பத்தும் அங்குட்டு எட்டுமா சஞ்சதுரமா ஊருங்க..”

”சஞ்சதுரம்..“ மொழிபெயர்க்கும் பெண்மணிக்கு கொஞ்சம் முழி பிதுங்கிதான் போனது. ஆரம்பமே இப்டியா.. வார்த்தையை தேடியவருக்கு சதுரம் கிடைத்தது.

”கிட்டத்தட்ட ஸ்கொயரா இருக்குங்கிறாங்க மேடம்..” என்றார் மொழிப்பெயர்த்து.

“பாப்புலேஷன்..?”

”நாலு தெருவுங்க.. தெருவுக்கு நுாறு பேத்துக்கு கொறையாது.. இதில்லாம ஊருக்கு ஒதுக்கமா கொஞ்சம் குடி இருக்குதுங்க..”

ஓதுக்கத்தை வெளிநாட்டு விருந்தாளிகளுக்கு புரிய வைப்பது கொஞ்சம் சிரமந்தான். நல்லவேளையாக அடுத்த விஷயத்துக்கு தாவி விட்டார் தாட்சருடன் வந்த மற்றொரு பெண்மணி. ”இவங்களோட ஸ்டெடீஸ் பத்தி சொல்லுங்களேன்..” என்றார். அவளை டெய்சி.. டெய்சி என்று அழைத்தார் தாட்சர்.

”தோ.. அங்கன தெரியுது பாருங்களேன் மஞ்சக்கட்டடம்.. அதான் பள்ளியொடம்..”

”அந்த பில்டிங்தான் ஸ்கூல்லாம்.. ஒரு விசிட் வந்து பாக்றீங்களா மேடம்..” சளசளப்பாக பேசி தாட்சரின் மனதில் இடம் பிடித்து விட வேண்டும் என்ற ஆசையிருந்தது மொழிப்பெயர்ப்பாளிக்கு. இரண்டு மகள்களும் ஒரு மகனும் அவருக்குண்டு. கணவனும் மகனும் இருந்தும் இல்லாதது போலதான்.  மகள்களை வளர்க்கும் பொறுப்பு முழுக்கவும் தன்னையே சார்ந்தது என்பதால் என்ஜிஓ அமைப்புகளிடம் இம்மாதிரி வாய்ப்புகளுக்கு சொல்லி வைத்திருப்பார். வெளிநாட்டு விருந்தாளிகள் புறப்படும்போது, தான் வேற்று மதத்தை சேர்ந்தவளாக இருந்தாலும் இளமையில் சர்ச்சில் வளர்ந்ததையும் அந்த பாதிரியார் தனக்கு ஆங்கிலம் கற்க ஏற்பாடு செய்தததையும் கட்டாயம் சொல்லுவார். அது வந்திருப்பவர்களை நிச்சயம் கவர்ந்து விடும். கையை தாராளமாக்குவார்கள்.

”ஓ.. ஷ்யூர்..” என்றார் தாட்சர். அவருடன் டெய்சியும் கிரேசும் எழுந்துக் கொண்டனர். கிரேஸ் குறிப்பெடுக்க வந்த இளம்பெண். ஊர், ஊர்வலமாக பள்ளிக்கூடம் நோக்கி நடந்தது. சிறிய பள்ளி அது. ஐந்தாம் வகுப்பு வரை இங்குண்டாம். வெளி கேட் சரிந்துக் கிடந்தது. அதை தாண்டி உள்ளே குப்பையும் துாசியமாக நீளமான மூன்று படிக்கட்டுகள். வராண்டாவை மரத்துாண்கள் தாங்கியிருந்தன. அங்கு படுத்து கிடந்த நாயை ஒரு பெண் விரட்ட.. அது அவளை நிமிர்ந்து பார்த்து விட்டு மீண்டும் அசட்டையாக படுத்துக் கொண்டது. ஆட்டுப்புழுக்கைகள் கால்களில் பிசுக்கென்று ஒட்டிக் கொண்டன. வராண்டாவையொட்டி கீழிறங்கிய மண் தரையில் மனித மலம் காய்ந்தும்.. புதிதாகவும் கிடக்க, அதை தொட்டு வெளியேறிய காற்று மலமாக வீசியது. அருவருப்போ.. அல்லது அதை தனி விசாரிப்பாக வைத்துக் கொள்ளலாம் என்ற எண்ணமோ.. ஏதோ ஒன்றில் கண்டும்காணாமலுமாக நகர்ந்துக் கொண்டனர் தாட்சர் குழுவினர். வரிசையாக ஆறேழு வகுப்பறைகள். எல்லாமே மூடிக்கிடந்தன.

”ஹாலிடே..?”

”லீவா..?” கிராமத்தாரிடம் தமிழில் மொழிப்பெயர்த்தார் மொழிப்பெயர்ப்பாளி.

”யாரும்ல்ல..”

”டீச்சர் யாருமில்லையா..?”

”டீச்சருமில்ல.. புள்ளீவளுமில்ல..” சொன்னவளுக்கு ஏழாவது படிக்கும் வயதிருக்கும். அவள் இடுப்பில் ஒரு பெண்குழந்தை இருந்தது. நகரமாக இருந்தால் அந்த இடுப்புக் குழந்தையை எல்கேஜிக்கு அனுப்பியிருப்பார்கள். கரிய.. பருத்த உடல் அந்த குழந்தைக்கு. நழுவி நழுவி வந்தவளை இடுப்பில் ஏற்றி ஏற்றி வைத்துக் கொண்டாள் அந்த சிறுமி.

”டீச்சர்ஸ்.. ஸ்டூடண்ட்ஸ் யாருமில்லையாம்.. அதான் லாக் ஆயிருக்கு..”

டெய்சி அங்கிருக்கும் சிறுவர் சிறுமிகளை கைக்காட்ட ”இவங்கள்ளாம் வேலைக்கு போறாங்க..” என்றாள் ஒரு பெண். அவளுக்கு நடுத்தர வயதிருக்கும். மயிரை துாக்கி கொண்டையிட்டிருந்தாள். துடைத்து வைத்தது போன்ற முகம்.

”உங்க எல்லாரையும் ஃபோட்டோ எடுத்துக்கலாமான்னு கேக்கறாங்க..”

பெண்கள் உற்சாகமானர்கள். ”எதுல போடுவீங்க..?” என்றார்கள் வெள்ளந்தியாக.

”இங்கிலீஸ் புக்ல போடுவாங்களாம்.. மொதல்ல ஊர சுத்திப் பாப்போம்.. அப்றம் ஃபோட்டோ எடுத்துக்கலாம்.. ஒகேவா..” என்றார் மொழிப்பெயர்ப்பாளி சிறுப்பிள்ளைக்கு சொல்வது போல.

”தண்ணீயெல்லாம் எங்க..?”

”ஊருக்குள்ளதா இருந்துச்சு.. அப்றம் நாங்கள்ளாம் ஒண்ணு சேர்ந்து வெளிய வைங்கன்னு ஒரேமுட்டா நின்னுட்டோம்.. ஊர் முக்குலதான இருக்கு.. அதுக்கு மேல தள்ள மாட்டோம்னு சொல்லீட்டாங்க..”

மொழிப்பெயர்த்து சொன்னதும் ஆச்சர்யமானது தாட்சர் குழு.

சிறிய அம்மன் கோவில் ஒன்றிருந்தது. அதன் கிரில் கதவுகள் மூடப்பட்டு பூட்டு தொங்கியது. ”தெறந்து வுட முடியுமா..?” என்றார் மொழிப்பெயர்ப்பாளி.

”தெறக்கலாம்.. சாவீ மணியக்காரவுக வீட்ல இருக்கு.. அந்தம்மா அவசர வேலன்னு மவ வீட்டுக்கு போயிருக்கு..”

”அவங்க மக வீடு எங்கயிருக்கு…?”

”பக்கந்தான்.. அர அவுரு பயணம்.. வந்துடுறேன்னு சொல்லுச்சு..”

”வேற யாருமில்லையா அவங்க வீட்ல… சாவி வாங்கி குடுத்தீங்கன்னா உங்க ஊரு அம்மன் வெளிநாட்டு பேப்பர்ல வருமில்ல..” ஆசைக் காட்டினார் மொழிப்பெயர்ப்பாளி.
”ஆரும் இருக்க மாட்டாங்க இந்நேரம்.. மவன் வெளிய போயிருப்பான்.. மத்தப்படி ஆயும் மவளுந்தான்.. மவள பாக்கதான் இந்தாயீ போயிருக்கு..”

ஏமாற்றத்தோடு நகர்ந்தது குழு. இரண்டாவது தெருவில் ஒரு சிறு மைதானம் இருந்தது. அதில் திட்டாக ஒரு சிறு கட்டடம் ஆஸ்பெஸ்டாஸ் கூரையோடு இருந்தது. அருகில் நெருங்கிய போதுதான் பாவேந்தர் பாரதி படிப்பகம் என படிக்க முடிந்தது. புதர் மண்டிய படிகளையும் சீல் வைக்கப்பட்ட துருவேறிய பூட்டையும் புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். மடிந்து திரும்பியது தெரு. தெருவின் மையத்திலிருந்த பெட்டிக்கடையில் தேன் மிட்டாய்கள்.. ஆட்டுக்குடல் வற்றல்.. வண்ணப்பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உருளை சீவல்கள் என தின்பண்டங்கள் தொங்கிக் கொண்டிருந்தன. ஒரு பெரிய அட்டையில் சிறு சிறு பாக்கெட்டுகளாக ஊறுகாய்கள் பின் அடித்து நிறுத்தப்பட்டிருந்தது. தெர்மோகோல் டப்பாவில் தண்ணீர் பாக்கெட்டுகள் சில்லிட்டுக் கிடந்தன.



மஞ்சமசேலென்றிருந்த ஆட்டுக்குடல் வற்றலை வாங்கி மொறுமொறுப்பான அதன் துகள்கள்  தரையில் உதிர உதிர சுவாரஸ்யமாக தின்றது தாட்சர் குழு.

”ரேஷன் கடை எங்கருக்கு..?” என்றார் மொழிப்பெயர்ப்பாளி.

”இருக்கு.. ஆனாங்காட்டி இல்ல..”

”புரியில..”

”தோ.. அந்த தெருவுல நடுசென்டர்ல இருக்கறது ரேசன் கடைதான்.. ஆனா அத யாரும் தெறக்கறதில்ல.. ஷ்டாக்கெல்லாம் ஒண்ணு கூட கெடையாது..”

”ஏன்.. நீங்க யாரும் ரேஷன் சாமான் வாங்கறதில்லையா..?”

”அதுக்கு கார்டு வேணுமில்ல.. எல்லாத்தையும் அடவு வச்சுட்டானுங்க.. ஒருநா.. ரெண்டு நாளா.. தாசில்தாரு ஆபிசுக்கு நடையால்ல நடந்து பாத்தோம்.. ஒண்ணும் கதக்காவல.. அங்கிட்டு அலயற நேரத்தில வேற வேல பாத்தா வவுறு காயாம கெடக்கலாம் பாத்துக்க..”

”யாரு அடகு வச்சா..?”

”எல்லாம் வூட்டு ஆம்பளைங்கதான்.. வேலை வெட்டிக்கு போற சோலி கெடயாது அவனுங்களுக்கு.. நாங்க கொண்டார்ற காச அடிச்சு புடுங்கீட்டு ஒயின் சாப்லயே வுளுந்து கெடந்தானுவே.. கொடலு  வேவாம என்ன பண்ணும்..?”

”அதான் ஒரு ஆம்பளையும் காண்லியா..? வேலைக்கு போயிருப்பாங்கன்னுல்ல நெனச்சேன்..”

”போறானுங்க.. வேலைக்கு.. எல்லாம் ஒரேடியா போய் சேந்தாச்சு..”

”ஒரேடியான்னா.. எதாவது ஆக்சிடெண்ட்டா..?”

”பண்ண பாவத்துக்கு அடிப்பட்டு மக்கி போனாதான் தேவலயே.. கொடலு வெந்து ஆசுத்திரி.. ஆசுத்திரியா அலஞ்சு இருக்கற நாலு காசையும் செலவழிக்க வச்சுட்டல்ல செத்தானுங்க..”

”யாரு.. உங்க வீட்டுக்காரரா..?”

”எல்லா வீட்டுக்காரனுங்களுந்தான்.. பெரிய ஆம்பளையாளு ஒத்தன் கெடையாது இந்துார்ல.. தோ.. அங்க நிக்றாளே பாப்பா.. அவளுக்கு எம்மாம் வயசிருக்குன்னு நெனக்கிற.. பத்து வருசத்துக்கு முன்னாடிதான் பொறந்துச்சு.. அது இடுப்புல இருக்கறதயும் சேத்து நாலு புள்ளைங்க அவங்கூட்ல.. அவங்கப்பன்தான் இந்துாருல இருக்க ஆம்பளையிலயே மூப்பு.. நா பாத்து பொறந்த பய.. முப்பஞ்சிருக்கும்.. அதுக்கே மண்ணா சாஞ்சு கெடக்கான்.. இந்த புள்ளய பாத்துக்க சொல்லீட்டு அவங்க ஆயி டவுன்ல ஒரு ஓட்டல்ல பாத்திரம் களுவுற வேலக்கு போவுது..”

மொழிப்பெயர்ப்பை குறிப்பெடுத்துக் கொண்டே வந்த கிரேஸ் ஒரு நிமிடம் குறிப்பை நிறுத்தி.. திணறி.. பிறகு சுதாரித்துக் கொண்டாள். டெய்சியும் தாட்சரும் அதிர்ச்சியை கண்களில் பரிமாறிக் கொண்டனர்.

கிட்டத்தட்ட ஊரை சுற்றி வந்தாயிற்று. வேம்படி பிள்ளையார் கோவிலையொட்டிய தெருவில் அடிபம்பு ஒன்று, தண்ணீர் வரும் அடையாளங்கள் ஏதுமின்றி துருவேறி இருந்தது. அதை சுற்றியிருந்த வட்டவடிவ கான்கிரீட் கட்டுமானம் சிதிலமடைந்துக் கிடந்தது. எட்டும் பத்துமான வயதுள்ள சிறுவர்கள் அதனருகே உற்சாகமாக விளையாடிக் கொண்டிருந்தனர்.

”தோ.. அந்த பைப்படியாண்ட வெளாண்டுட்டு கெடக்கானுங்கள்ள.. இவனுங்க நாளைக்கு தோ இந்த பொட்டப்புள்ளங்கள்டேர்ந்து காசு பணத்த உருவீட்டு அந்த ரோட்டு முக்கு டாஸ்மாக் கடைக்கு ஓடுவானுங்க.. அந்த கேடு கெட்ட கடயிலயே வுழுந்து கெடக்கற இப்பத்திய எளந்தாரிங்க இன்னும் நாலஞ்சு வருசத்துல செத்துப் போவானுங்க.. இருவது வயசிலயே இங்கருக்க குட்டிங்கள்ளாம் தாலியறுத்துடுங்க.. கட்டங்கடசீல ஊரு மொத்தமும் ஒலகம் மொத்தமும் பொட்டசனமா மாற போவுது பாத்துக்கங்க..”

அந்த பேச்சிலிருந்த அத்தனை ஆவேசத்தையும் மொழிப்பெயர்ப்பில் கொண்டு வரவியலாது மொழிப்பெயர்ப்பாளி திணற, வெளிநாட்டு விருந்தாளிகளுக்கு அதை உணர முடிந்தது.


***


No comments:

Post a Comment