Search This Blog

Saturday 9 September 2017

எதற்காக எழுதுகிறேன்..

பதாகை இணையஇதழில் ஜுன் 2016 வெளியான கட்டுரை..

எதற்காக என்பதை விட நான் எப்போது எழுத தொடங்கினேன் என்பதை யோசிக்கிறேன்.  பிறப்பும் கல்வியும் நெய்வேலி நகரத்தில். வாசிப்பிற்கு நேரம் செலவிட தோதான வாழ்க்கையமைப்பு வாய்க்கப் பெற்றிருந்தது. ஆனாலும் அதிகபட்ச இலக்கிய புத்தகங்களாக அறிமுகமானவை அமுதசுரபி, மஞ்சரி போன்றவைதான். பிறகு உயர்கல்வி, திருமணம், அரசாங்கப்பணி, குழந்தைகள் என்ற பரபரப்பான வாழ்க்கை எனக்கும் தொற்றிக் கொண்டது. எனக்கு பணிப்புரிவதில் விருப்பம் இருப்பதில்லை. அப்பா சொல்கிறார்.. நான் செய்கிறேன்.. என்பதைத் தாண்டி வேறேதும் வேலைக்கான தேர்வுகள் குறித்து எனக்கு தோன்றியதில்லை. வங்கித்தேர்வில் வெற்றி பெற்றேன். ஆனாலும் வேலைக்கு செல்ல விருப்பம் இல்லை. அடுத்தடுத்த இரண்டு அரசு தேர்வுகளில் வெற்றி பெற, இதற்கிடையே திருமணம் நடைபெற ஏதோ ஒரு வேலைக்குள் என்னை முழ்கடிக்க வேண்டியிருந்தது.

எவ்வித விருப்பமும் அற்று கடமைக்கு சென்றேன் கடமையாற்ற. என் நேரத்தை என் விருப்பப்படி செலவிட முடியாத நிலை எனக்கு வாழ்க்கையில் மிகப் பெரிய தோல்வியை அளித்தது போன்ற உணர்வு. விடுப்புகளே எனக்கு கைக்கொடுத்தன. கிட்டத்தட்ட முழு மொத்த பணிக்காலத்துக்கும் தேவைப்படும் விடுப்பை எடுத்து முடித்திருந்தேன். குழந்தைகள் வளர்ப்பில் ஆழ்ந்துப் போனதில் வேறெதும் தோன்றாத நிலை. புத்தகங்களை கையில் எடுப்பதேயில்லை. ஆனாலும் விட்டகுறை தொட்டக்குறையாக புத்தகக் கண்காட்சிகளுக்கு செல்ல தவறுவதில்லை. ஒருவேளை குடும்பத்தோடு வெளியே செல்ல ஒரு இடமாக அதை நான் கருதியிருக்கலாம். பெண்களை நோக்கிய பொதுபார்வையாக முன் வைக்கப்படும் சமையல் புத்தகமும் வாங்கத் தோன்றாது. கோலப்புத்தகங்களும் வாங்கத் தோன்றாது. தால்ஸ்தோய், தஸ்தாயெவஸ்க்கி என்றும் அலையத் தோன்றாது. வாஸந்தி, அனுராதாரமணன், சுஜாதா இவர்களின் புத்தகங்களை பார்ப்பேன், வாங்கும் எண்ணமின்றி. என் கணவர் இப்புத்தகங்களை விரும்புகிறேனோ என்று எண்ணி அதை பில்லுக்கு அனுப்பி விடுவார். வாங்கிய புத்தகங்களைத் தொடும் எண்ணமும் தோன்றுவதில்லை.

காலம் நல்லப்படியாகவே நகர்ந்தது. ஆயினும் மனதில் ஏதோ ஒரு வெறுமை. தேடல்களற்ற வாழ்க்கை எதையோ கைகளிலிருந்து அடித்துச் செல்வது போலிருந்தது. வழக்கமான வாழ்க்கைச் சுற்றுப்பாதைக்குள் மனம் திருப்திக் கொண்டாலும் எனக்கென ஒரு பாதை தேவைப்பட்டதை… அல்லது என் மனம் தேடுவதை.. நான் புரியாமல் உணர்ந்துக் கொண்டிருந்தேன். சிறு பள்ளியொன்றை ஆரம்பித்தோம். அதில் நிறைய புதுமைகளை புகுத்த ஆர்வம் கொண்டது என் மனம். காலை வழிபாடு முதல் பள்ளி முடியும் தருணங்கள் வரை புத்தம்புதிதான செய்திகளுடன் கல்வி கற்பித்தோம். அதற்கான எண்ணங்களை எழுத்தாக்கும் போது, நான் எழுதியதை திரும்ப வாசித்த போது நன்றாக எழுதியிருப்பதாக தோன்றியது. ஆனாலும் அதைத் தாண்டி வேறேதும் செய்ய தோன்றவில்லை. அதிலும் குடும்பம், அலுவலகம் தாண்டி குறைவாகவே நேரத்தை செலவிட முடிந்தது.

தேடல்கள் ஓயவில்லை என்பது புரிந்தது. எதுவும் முழுமையடையாமலே இருப்பதுபோல தோன்றும். எனக்குள் என்னை சமாளிப்பதே பெரும் பிரச்சனையாக இருந்தது. சுயபச்சாதாபம் ஆட்கொள்வதில் அழுகை முந்திக் கொண்டு வந்து விடும். சிந்தனைகள் நிறுத்த முடியாமல் தோன்றிக் கொண்டேயிருந்தன. அந்த நேரம் நிறைய வாசிக்கவும் தொடங்கியிருந்தேன். அசோகமித்ரன், ல.சா.ரா, கு.பா.ராஜகோபாலன், புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், ஜி.நாகராஜன், நா.பிச்சமூர்த்தி, அம்பை, ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், ஆ.மாதவன், சா.கந்தசாமி என்றும்  கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ், ஆல்பெர் காம்யு, மாப்பசான், இடாலோகால்வினோ, விர்ஜினாஉல்ஃப் எனவும் கலந்து கட்டி வாசிக்க தொடங்கினேன். தமிழ் இலக்கிய வரலாறு, சங்க இலக்கியங்கள், சேரர், சோழர் வரலாறு என தமிழார்வமும் வந்தது. சுற்றுலாக்களை கூட அதையொட்டி அமைத்துக் கொள்ளத் தளைப்பட்டேன். ஆனால் பகிரவோ பேசவோ யாரும் இருக்கவில்லை.

தனிமையுணர்வு என்னை ஆக்ரமிக்க தொடங்க, அந்த அழுத்தத்தில் முதன்முதலாக நான் பேச வந்ததை.. அல்லது நினைத்ததை.. எழுத்தாக்கினேன். அது கதையென்று நினைத்து எழுதவில்லை. ஆனால் கதை போன்ற தோற்றமிருந்தது.  அந்த நேரம் பார்த்து தினமணி நெய்வேலி புத்தகக்கண்காட்சி 2012க்கான சிறுகதைப் போட்டி அறிவிப்பு வெளியாகியிருந்தது. இதை அனுப்பி பார்ப்போமே.. என்று அனுப்பினேன். அந்த முதல் கதையே இரண்டாவது பரிசு பெற்றது. ஆனந்தம் என்பதை விட அதிர்ச்சிதான் அதிகமிருந்தது. கதை என்பது இத்தனை சுலபமான ஒன்றா என்றெல்லாம் கூட தோன்றியது சிறுப்பிள்ளைதனமாக. நான் பிறந்து வளர்ந்த அதே ஊரில் பரிசு, பாராட்டு எனக் கிடைத்தபோது எழுதும் உத்வேகம் கூடிப் போனது. அந்நேரம் சிற்றிதழ்கள் அறிமுகமாகியிருந்தன. கணையாழி, உயிரெழுத்து என் கதைகளை வெளியிட ஏதோ எழுத வருகிறது என்று எண்ணிக் கொண்டேன். செய்தித்தாளில் என் பெயருக்கு முன்னிருந்த எழுத்தாளர் என்ற அடைமொழி புதிதாக தோன்றியது. அடுத்த ஆண்டு இதே தினமணி சிறுகதைப் போட்டியில் (2013) புனைப்பெயரில் (சுப்ரமணியன்.. எனது தகப்பனார் பெயர்) எழுதி அனுப்பினேன். அக்கதைக்கு முதல் பரிசு வழங்குவதாக சேதி சொன்னார்கள். மீண்டும் நெய்வேலி. மீண்டும் பரிசு. செய்தித்தாளில் வண்ணப்புகைப்படம். மிக அதிக விவேரணைகளோடு தினமணிக்கதிரில் கதை வெளியானது. நிறைய கடிதங்களும், தொலைப்பேசி அழைப்புகளும் வந்தன.  பிறகு வாசிப்பிலிருந்து அதிமேதாவித்தனமாக எழுத்தையே நாடியது மனம். இப்போது நினைத்தால் சற்று கூச்சமேற்படுகிறது.

எழுத்திலிருந்து மீண்டு(ம்) வாசிக்கும்போது அவை முற்றிலும் புதியதொரு களத்தை எதிர்க்கொள்வது போல தோன்றியது. எழுத்தாளர்கள் மீது முன்பைக் காட்டிலும் மிக அதிக பக்தியும் பிரேமையும் தோன்றியது. ஆனாலும் தனிப்பட்ட வாழ்க்கையில் அப்போது எனக்கு எந்த எழுத்தாளரையும் தெரியாது.


தேடலின் நீண்ட வெளி குறைந்துக் கொண்டே வந்தது. நடந்து கிடந்து அதனை களைந்து விடும் நம்பிக்கை முனைப்பாக வெளிப்பட எனது பயணம் தொடர்ந்துக் கொண்டுள்ளது.

No comments:

Post a Comment