Search This Blog

Thursday, 21 September 2017

புகார்

குறி சிற்றிதழ் ஜுலை - செப்டம்பர் 2017ல் வெளியான சிறுகதை

‘மணமேடு’.. பேருந்தின் விரைவோடு தேசிய நெடுஞ்சாலையின் பெயர் பலகையில் கண்ணில் அகப்பட்டு நழுவியோடியது ஊர்.. மணமேடு.. “அட..இங்கதான் இருக்கா இந்த ஊரு..”  எஸ். கதிரேசன்.. B/o பூங்கோதை, பிரதான வீதி.. மணமேடு அஞ்சல்.. மணமேடு.. இந்த முகவரி எனக்கு மனப்பாடம். ஒன்றா இரண்டா எத்தனை புகார் மனுக்கள் அந்த முகவரியிலிருந்து..? எல்லாமே பதிவஞ்சலில். புகார் மனுவுக்கு பதில் எழுத வேண்டியது என் இருக்கைக்கான பணி. பொதுவாக பதில்கள் “நடவடிக்கை எடுக்கப்படும்… சம்பந்தப்பட்டவரிடம் பதில் கோரி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது..“ என்பது மாதிரியான டெம்ப்ளேட் வகையறாதான்.  ஆனால் கதிரேசன் விடாக்கண்டர். அந்த பதிலிலிருந்து கூட எதாவது கேள்வியை கண்டுப்பிடித்து விடுவார்.



திரும்பி போகும்போது அந்த பெட்டிஷன் பார்ட்டியை’ ஒரு எட்டு பார்த்து விட்டு போகலாமா என்று திடீரென தோன்றியது. இது எனக்கே கொஞ்சம் ஆச்சர்யம்தான். என் இருக்கைக்கே தேடி வருபவர்களை கூட நான் உபசரிப்பதெல்லாம் கிடையாது. “தபால் அனுப்பியிருக்கேன்.. பாத்துக்கங்க..“ என்று எதையாவது வெட்டி விட்டு பேசி விடுவேன். கதிரேசனின் புகார் கொஞ்சம் வித்யாசமாக இருக்க போக இந்த ஆர்வம் எழுந்திருக்கலாம். பூங்கோதை என்றொரு தங்கை அவருக்கு. போர்முனையில் புகைப்படம் எடுத்தாராம். அவரை யாரோ நாசப்படுத்தி கொன்று விட்டார்களாம். புகைப்படங்களும் கையாடலாகி விட்டனவாம். அதற்கான நியாயம் வேண்டும் என்பதுதான் மனுவின் சாரம்.

திடீர் பயணம் இது. மனைவியின் தங்கையை பெண் கேட்டு வந்தவர்களின் வீட்டுக்கு, மாப்பிள்ளை என்ற முறையில் சம்பிரதாய செல்லுகை.. மாமனாரின் அன்புக் கட்டளை. டிக்கெட் எடுத்து கையில் கொடுத்து விட்டார். மணமேட்டிலிருந்து அரைமணி நேர பயணத்திலிருந்தது எதிர்கால சகலையின் வீடு. உபசாரத்துக்கு குறைவில்லை. பெண் கொடுக்கும் வரை அப்படிதானிருக்கும். இதற்கெல்லாம் மயங்கி விடக் கூடாது. சாப்பிட்டு கை கழுவிய கையோடு விடைப்பெற்றுக் கொண்டேன். இத்தனைக்கும் இரவு ரயிலில்தான் சென்னை பயணம். ஒருவேளை மணமேடு செல்வதை  மனம் உறுதி செய்திருக்கலாம்.

கிடைத்த வெளியூர் வண்டியில் ஏறிக் கொண்டு ”மணமேடு” என்றேன். நடத்துநர் கடிந்துக் கொண்டார். “அங்கல்லாம் நிறுத்த மாட்டோம் சார்.. நீங்க லோக்கல் வண்டில ஏறிக்கங்க..” என்றார். நல்லவேளை.. பேருந்து நிறுத்தத்துக்கு வந்திருந்த மாப்பிள்ளை அலைபேசியில் பிசியாக இருந்தார். ”அடுத்தது எங்க நிறுத்துறீங்களோ அதுவரைக்கும் டிக்கெட் போட்டுக்கங்க.. சன்னமா ஸ்லோ பண்ணீட்டீங்கன்னா மணமேட்ல இறங்கிக்கறனே..” என்றேன் கெஞ்சலாக. யோசனையோடு சரி என்றார். அதற்குள் மாப்பிள்ளை ஜன்னலுக்கருகே அசட்டு சிரிப்பொடு வந்து “சாரீங்க.. அர்ஜெண்ட் கால்.. அவாய்ட் பண்ண முடியில..“ என்றார். “பரவால்ல..“ என்றேன் பெருந்தன்மையாக. என் மாமனாரின் ஞாபகம் வந்தது. இரண்டு மகள்கள் அவருக்கு. பெரிய மாப்பிள்ளையாகிய நான் தலைமைச் செயலகத்தில் எழுத்தர். சின்ன மாப்பிள்ளையாக வரவிருப்பவர் பாரத ஸ்டேட் வங்கியில் எழுத்தர். நிரந்தர உத்யோகஸ்தர்களாக கிடைத்து விட்டார்கள். இனி கவலையில்லை அவருக்கு.

மணமேடு வந்திருந்தது. சுதாரிப்பதற்குள் நடத்துநர் பெரிய விசிலாக அடிக்க.. மளமளவென்று படிக்கட்டுக்கு சென்றேன். பேருந்து வேகத்தை குறைக்க.. இறங்கி நாலடி ஓடி உடலை நிதானப்படுத்தினேன். எந்த சொந்தத்தை தேடி இங்கு வந்திருக்கிறேன்.. எங்கு போகிறோம். யாரை பார்க்க போகிறோம்.. அவர்களுக்கும் நமக்கும் என்ன தொடர்பு.. முதலில் இதுதானா அந்த “மணமேடு“.. கேள்விகள் ஓட ஓட ஒரு பக்கம் வெறுமையும்.. மறுபுறம் ஆர்வமும் ஒருமித்து எழுந்தது.

“சார்.. டீ சாப்டுட்டு போலாமில்ல…” டீக்கடைக்காரர் அழைத்தார். டீக்கடை அநியாயத்துக்கு சிறியதாக இருந்தது. உள்ளே அவர் மட்டுமே நிற்க முடியும். முன்னால் நீட்டியிருந்த கொட்டகையில் கீற்று பிய்ந்து தொங்கியது. ஹாலோபிளாக் கல்லை உயரவாக்கில் நிறுத்தி உட்காரும் பலகையாக்கியிருந்தார். ஹாலோபிளாக்கை மண் பிடித்துக் கொண்டதால் தைரியமாக உட்கார்ந்தேன்.

”கதிரேசன்னு ஒத்தரு.. அவங்க வீடு தெரியுங்களா..?“

”அவங்களுக்கு சொந்தங்களா நீங்க..”

”இல்ல.. வேண்டியப்பட்டவங்க..”

”யாரு.. மம்மதுவா.. அவங்க வீட்டுக்காரம்மாவா..?”

”மம்மதுன்னா.. அப்டியெல்லாம் யாரும் தெரியாதுங்க.. கதிரேசன்னு ஒத்தரு.. அவ்ளோதான்..”

”ஒத்தரு இல்ல.. இங்க நெறய கதிரேசங்க இருக்காங்க.. நீங்க சொல்றவரு சின்ன ஆளா.. வயசாளியாங்கா..?”

“வயசானவருந்தான்..” அப்படியாகதான் இருக்க முடியும். டீக்கடைக்காரரை முறைத்து பார்த்தேன். இவ்ளோ வெசாரிப்பெல்லாம் ரொம்ப அதிகம்..

”அப்டீன்னா மம்மதோட அப்பாதான்.. இந்த தெரு நெட்டுக்கும் வூடுங்கதான்.. பத்து வூடு தள்ளி பாதை கொஞ்சம் சோத்தாங்கை பக்கமா வளஞ்சுக் குடுக்கும்.. அதுல ஒண்ணு.. ரெண்டு.. மூணு.. நாலாது வூடு.. பச்ச பெயிண்டு அடிச்சிருக்கும்..”

டீக்குப்பியை குப்பைமேட்டில் எறிந்து விட்டு நடந்தேன். சொன்னது போலவே தெரு வலதுபக்கமாக நெளிய நாலாவது வீடு வந்தது. சிறிய எளிமையான வீடு. குழந்தைகளின் சத்தத்தோடு கலகலப்பாக இருந்தது.

”கதிரேசன் சார் இருக்காங்களா..” படலை சாத்தி விட்டு திண்ணையருகே நின்று குரல் கொடுத்தேன்.

”யாருங்க..?”

சிறுமி ஒருத்தி என்னை பார்த்ததும் அறிமுகமற்ற தொனியில் திகைத்து நின்று.. “ப்பா.. யாரோ ஒரு அங்கிள் வந்துருக்காங்க..” என்றாள்.

வெளியே வந்தவருக்கு நாற்பதிருக்கலாம்.

”உள்ள வாங்க சார்.. இந்த வீடுதான்..” என்றார். இவர்தான் மம்மதுவா.. வித்தியாசமான பெயர். பின்னாலிருந்து அவர் மனைவி எட்டிப் பார்த்து வாங்க என்றாள். முன்பின் தெரியாதவனுக்கு இந்த வரவேற்பெல்லாம் சற்று அதிகம்தான்.

”சார்.. நீங்கதான் கதிரேசன்ங்களா..?” நிச்சயமாக இருக்காது. இருந்தாலும் பேச்சை இப்படிதானே ஆரம்பிக்க வேண்டும்.

”இல்லீங்க.. அவர் எங்கப்பா.. நான் முகம்மது.. இங்க எலிமெண்ட்ரி ஸ்கூல்ல டீச்சரா  இருக்கேன்..” கையை நீட்டினார். அடப்பாவீ.. முகம்மதுதான் மம்மது ஆகியிருக்கிறது.
“உள்ள வாங்க..” என்றார்.

”இல்லைங்க.. இங்கயே ஒக்காந்துக்கறேன்..”

திண்ணையை லேசாக தட்டி விட்டு அமர்ந்தேன். அந்த பெண் பதறியவளாக தடுக்கு கொண்டு வந்து போட்டார். சொம்பு நிறைய நீர் கொடுத்தார்.

”அப்டீன்னா பூங்கோதைங்கிறவங்க உங்க அத்தையா..?” எனக்கு தெரிந்த சிம்பிள் கால்குலேஷனை போட்டு சொல்ல அவர் ஆடி போனார்.

”ஆமா சார்.. அத்தைய உங்களுக்கு எப்டி தெரியும்ங்க..”

”ஏன் தெரியாதா..? தெரியக் கூடாதா..” எனக்கும் பிடித்திருந்தது இவர்களிடம் நெருங்க.
”க்ரேட் சார்.. எங்க அத்தைக்கு தெரிஞ்சா எவ்ளோ சந்தோஷப்படுவாங்க..”

இவர் யாரை சொல்லுகிறார். கதையில் இப்படி ஒரு தடாலடி திருப்பம் வரும் என்று எதிர்பார்க்கவில்லை.  மனுவே பூங்கோதையின் சாவை குறித்துதான்.

”அவுகளுக்கு தெரியாம போயிருமா.. நாம பேசறதெல்லா ஒண்ணு பாக்கியில்லாம அந்த சாமியாடி சொல்லுல.?.”

அந்த பெண் கணவனின் சந்தேகத்தை நிவர்த்தி செய்ய, நான் இருவரையும் மாறி மாறி பார்த்தேன். ஒன்றும் புரியவில்லை.

”எங்க மாமனாருக்கு தங்கச்சி இப்டி செத்து போச்சுன்னு ரொம்ப வருத்தங்க.. அவுக செத்து ரெண்டு மூணு நாளு கழிச்சுதான் தகவலே வந்துச்சாம்.. இன்ன நாளுதான் செத்தாங்கன்னு தெரியாம பொத்தாம்பொதுவா தெவசம் குடுக்கறதால தங்கச்சி பேயா அலையுமோன்னு பயந்துக்கிட்டுதான் சோசியம் பாக்கறது.. நாடி கேக்கறது.. சாமியாடீட்ட போறதுன்னு எதாவது செஞ்சிக்கிட்டு இருப்பாரு.. பாவம்.. தஞ்சாவு வந்து சாவாதவுக கதி இப்படிதான்..” என்றார் அந்த மனைவி.

இந்த பக்கம் ஜோசியம்.. அந்த பக்கம் பெட்டிஷன்னு மனுஷன் ரொம்ப பிசியா இருப்பார் போல இந்த வயசிலயும்.. அதும் இத்தனை சின்ன கிராமத்தில இருந்துக்கிட்டு. ஆனால் இந்த மாதிரி புகார் மனுவெல்லாம் யாரு சின்சியரா விசாரிச்சு நடவடிக்கை எடுத்து இவருக்கு தகவல் தெரிவிக்கப் போறாங்க..? எங்களை பொறுத்தவரைக்கும் எதையாவது எழுதி அந்த ஃபைல குளோஸ் பண்ணனும்.. அவ்ளோதான்.. காசு வர்ற சமாச்சாரம்னா அதிகாரிக்கு ஆர்வம் இருக்கும்.

”எங்கத்த மிலிட்டிரிக்கு போவும்போது நானெல்லாம் பொறக்கல.. எழுவத்தொண்ணுன்னு நெனக்கிறேன்.” என்றார் முகம்மது.

இடையில் புகுந்தேன். ”இது கொஞ்சம் வித்யாசமா இருக்கில்ல.. அத்தை மிலிட்டிரிக்கு போறதுங்கறது..”

”மிலிட்டிரிக்குன்னா சண்டை போடறதுக்கு இல்லைங்க.. ஃபோட்டோ புடிக்கறதுக்கு..”
”இது அதை விட வித்யாசமா இருக்குங்க..” என்றேன்.

”சின்ன வயசுலேர்ந்து அத்தைக்கு ஃபோட்டோ எடுக்கறதுன்னா ரொம்ப பிடிக்குமாம்.. ஃபோட்டோன்னா ஆளுங்கள ஃபோட்டோ எடுக்கறது இல்லைங்க.. காடு கரை.. மோடு.. பள்ளம்.. மல.. ஓடை.. இப்டீன்னு நெனச்ச பக்கமெல்லாம் காமிராவ துாக்கீட்டு சுத்தியிருக்காங்க..”

இந்த விஷயம் எனக்கு புதுசு. மனுவில் இல்லாதது.

”என்ன சார் ஆச்சர்யத்துக்கு மேல ஆச்சர்யமா சொல்றீங்க.. ஒரு பொம்பளப்புள்ள.. அதும் அந்த காலத்தில.. காமிராவ துாக்கீட்டு அலைஞ்சாங்கன்னா நம்பவா முடியுது.. ஊரு சும்மா வுட்டுருக்குமா..”

”ஊருல ஆயிரம் பேசுனாலும் எங்க தாத்தா மகளுக்கு ரொம்ப சப்போர்ட்டா இருந்தாங்கன்னு அப்பா சொல்லுவாரு சார்.. அத்தை வீட்டுக்காரரு கூட அத்தைக்கு சப்போட்டா இருந்தாங்களாம்..”

”ப்பா.. வெளாண்டுட்டு வர்றேன்..” அந்த சிறுமி வெளியே ஓட, கூடவே ஒரு சிறுவனும் ஓடினான். நாலைந்து வயதிருக்கும்.

”வேலிக்கருவக்கிட்ட போவக்கூடாது புரியுதா..” என்றார்.

நான் விட்டதை எடுத்துக் கொடுத்தேன். ”ஓ.. கல்யாணம் ஆயிதான் மிலிட்ரிக்கு போனாங்களா.. எல்லாமே புதுசாதான் இருக்கு..”

அதற்குள் அந்த பெண் காபி கலந்து எடுத்து வந்தாள். அஞ்சறைப்பெட்டி முறுக்கும் கூடவே வந்தது.

”ஆமாங்க.. அத்தை மகனைதான் கட்டி வச்சிருக்காங்க.. ஒரு பொம்பளப் புள்ள கையில.. மாமா மாடு முட்டி செத்துப் போயிறவும், மகளையும் பேத்தியையும் எங்க தாத்தா வீட்டோட கூட்டீட்டு வந்துட்டாங்களாம்.. அப்போ தான் எங்கப்பாவுக்கு கல்யாணம் ஆன புதுசு.. எங்கத்த வயசுப்புள்ள.. மறு கல்யாணம் பண்ணி வைக்கற அளவுக்கு தோணலேன்னாலும் மகளுக்கு புடிச்ச ஃபோட்டோ எடுக்கற துறையில சேர்த்து வுட்டுடுணும்னு தாத்தாவுக்கு ஆசை..”

நல்லவேளை.. மணமேடுக்கு வர தோன்றியதே.. கதையை போன்ற வாழ்க்கை.. பெருந்தன்மையான மனிதர்கள். சுவாரஸ்யமாக இருந்தது.

”அதுக்குன்னு மிலிட்ரிக்கா..?”

”மிலிட்ரி வேலைக்குன்னு போவலயாம்.. எங்கப்பாவோட சித்தப்பன் மகன் மிலிட்டிரி கேன்ட்டின்ல குக்கா இருந்தாராம்.. அவருதான் தங்கச்சிய இங்க அனுப்பி வுடு.. நா பாத்துக்கிறேன்னு சொல்லியிருக்காரு..”

”அப்போ.. கைப்புள்ள..? அதும் பொம்பளப்புள்ளேன்னு வேற சொன்னீங்க..”

”அதுக்குதான் எங்கப்பா அம்மா.. தாத்தா.. பாட்டீன்னு ஒரு கும்பலே இருந்துச்சே..”

”சரி.. அத்தை மிலிட்ரிக்கு போயாச்சு.. அதுக்கப்பறம்….?”

”போர் நடந்த சமயம் அது.. அத்தை அங்கயே வீடு எடுத்து தங்கீ.. பாதிக்கப்பட்டவங்களுக்கு சமைச்சு போட்டு நிறைய உதவியெல்லாம் செஞ்சிருக்காங்க.. தைரியமா நின்னு நெறைய ஃபோட்டோ எடுத்திருக்காங்க.. அதுல ஒரு ஃபோட்டோ ரொம்ப ஃபேமஸ் ஆச்சு.. ஆனா எதுலயும் இவங்க பேர் இல்ல..”

புகார் மனுவின் தொடக்கத்திற்குள் நுழைந்திருந்தார்.. நுழையட்டும்.. நுழையட்டும்..

அவரின் மனைவி ஒரு ஆல்பத்தை கொண்டு வந்து என் முன்னே வைத்தாள்.

”அத்தையோட ஆல்பம்.. பாருங்க சார்..” என்றார் முகம்மது. எடுத்து மடியில் வைத்துக் கொண்டேன். நல்ல கனம். பழையக்கால புகைப்படங்கள். திருப்ப திருப்ப ஆச்சர்யமாக இருந்தது. சைக்கிளிலிருந்து கீழே கால்களை ஊன்றியப்படி பெண்ணொருத்தி.. வேலியோரம் தொற்றிக் கிடந்த பாம்பு.. குருவியின் கூட்டுக்குள்ளிருக்கும் முட்டைகள்.. சிகிச்சை செய்யப்படும் அடிப்பட்ட மான்.. மரமேற எத்தனிக்கும் சிறுத்தை.. அம்பாசிடரின் மீது தண்ணீரை பீய்ச்சியப்படி மலர்ந்த சிரிப்பில் ஒரு பெண்.. திருப்பிக் கொண்டே வந்தேன்.. அடுத்தடுத்து எல்லாமே போர்க்கள புகைப்படங்கள். துப்பாக்கி ஏந்தியபடி மலைச்சரிவில் ஏறிக் கொண்டிருக்கும் ராணுவ வீரன்.. ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமாக நாடோடிகளாக தலை சுமையுடன் செல்லும் காட்சி.. பனிச்சரிவில் பனியையொத்த துப்பாக்கி புகை.. புகைப்படலத்தின் ஊடே துப்பாக்கிகளுடன் முன்னேறும் வீரர்கள்.. இந்த படம் பழக்கப்பட்டதாக தோன்றியது. கையிழந்த வீரனின் பரிதாப பார்வைக்குள் அவனின் கடைசி உயிர்த்துடிப்பு.. துப்பாக்கியுடன் சரிந்துக் கிடந்த ராணுவ வீரன்.. மண்ணில் வெகு நுணுக்கமாக பதிந்து கிடந்த பீரங்கியின் தடம்.. உண்மையிலுமே ஆச்சர்யம்தான்.  அதிலும் ஒரு பெண்.. அத்தனை ஆண்டுகளுக்கு முன்.. நிமிர்ந்து உட்கார்ந்தேன்..


”உங்கத்தை ஒரு போராளி சார்..” என்றேன்.

”அப்டியில்ல சார்.. அவங்களோட மனசுக்கு இதெல்லாம் பிடிச்சிருந்திருக்கு.. மகளோட மனசுப்போக்கில வாழ்க்கைய அமைச்சுக் குடுத்த எங்க தாத்தாவ வேணும்னா போராளின்னு சொல்லலாம்.. அடுத்த தலைமுறையா அத்தைக்கு நியாயம் கேட்டு எங்கப்பா போராடிக்கிட்டுருக்காரு… ஆனா அப்பாவுக்கு ஒரு நம்பிக்கை சார்.. போன உயிரு திரும்ப வரப்போறது இல்ல தான்.. ஆனா அவங்க சாவை பத்தி முறையா விசாரணை நடக்கும்.. அவங்களோட ஃபோட்டோகிராஃபி திறமை வெளிய தெரிய வரும்னு நம்பிக்கயா சொல்லுவாரு..”

முகம்மதுவின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

”மொழி தெரியாத ஊர்.. போர் கூடாரம்.. யாரை யாருக்கு தெரியும்..  எங்கத்த கையால சோறு வாங்கி தின்னவங்க கூட அவங்கள நாசப்படுத்திருக்கலாம்.. பனிமலைச்சரிவுல புகைக்கு மத்தியில கைல துப்பாக்கியோட ராணுவ வீரர்கள் ஓடற இந்த படத்தை நிறைய இடத்தில பாத்திருப்பீங்க.. புகழ் பெற்ற படம்.. இந்த படம் எங்கத்த அவங்க கேமிராவுல எடுத்தது.. இந்த ஃபோட்டோஸெல்லாம் கையாடுறதுக்காக கூட அவங்கள கொலை பண்ண நெனச்சிருக்கலாம்.. அந்த நேரத்தில இவங்க பொம்பளைங்கிற கூடுதல் நெனப்பும் வந்துருக்கும்.. இதையெல்லாம் கண்டுப்புடிக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு இல்லையா சார்..”

விரக்தி இருந்தது முகம்மதுவின் பேச்சில். எனக்கு பேசவே வார்த்தையில்லை.

”இன்னும் சொன்னா.. எங்க பெரிப்பா அங்க போகலேன்னா அத்தை ஒத்தங்க இருந்தாங்கற சுவடேயில்லாமயே போயிருக்கும்..”

அவரை நிமிர்ந்து பார்த்தேன்.

”அவரு சொல்லிதான் எங்கத்தைக்கு நடந்த கொடுமையெல்லாம் தெரிய வந்துச்சு.. எங்க தாத்தாவும் அப்பாவும் அடிச்சுப் பொராண்டுட்டு ஓடியிருக்காங்க.. பாடிய கூட ஊருக்கு கொண்டு வர முடியாத சூழ்நிலை.. அப்றம் முகம்மதுசலீம்ங்கிற ஒரு ஆபிசர்தான் பாடிய தமிழ்நாட்டுக்கு கொண்டு வர ஏற்பாடு பண்ணியிருக்காரு..”

முகம்மதுவின் பெயர்க்காரணம் புரிந்தது.

”நியாயம் கேக்க போன எடத்துலெல்லாம் பொம்பளப்புள்ளைக்கு அங்க என்ன வேலைன்னு எங்கள திருப்பி கேக்குறாங்க.. எங்க தாத்தா அதுலயே ஓஞ்சு போயிட்டாரு.. இந்த ஃபோட்டாவெல்லாம் பாருங்க சார்.. ஆர்வமும் அர்ப்பணிப்பும் இல்லாம இதெல்லாம் சாத்தியப்படுமா.. அப்படிப்பட்டவங்கள முடக்கி உள்ளே ஒக்கார வைக்கறது என்ன நியாயம் சார்..”

ஆவேசமிருந்தது பேச்சில்.

”இப்பவும் நிலமை மாறல சார்.. தன்னலமில்லாம.. சுயமா.. தன்னியல்பா செயல்படற ஒரு பொண்ணுக்கு இந்த சமுதாயம் என்ன மதிப்பு கொடுத்திருக்கு பாருங்க..  நாட்டை காப்பாத்தற இடத்தில கூட ஒரு பொண்ணுக்கு பாதுகாப்பில்லே.. இதெல்லாம் எல்லாத்துக்கும் தெரியுணும்… இருட்டெல்லாம் வெளிச்சப்படுத்தினாதான் எங்கல்லாம் இருண்டு கெடக்குன்னு உலகத்துக்கு புரியும்.. புரியணும்.. இதான் எங்க தாத்தா நெனச்சது.. இதுல இருக்கற உணர்வை புரிஞ்சுக்காம தியாகி பென்ஷனுக்கு வேணும்னா அப்ளை பண்ணுங்க.. ஏற்பாடு பண்றேன்னு சொன்னாராம் ஒரு கலெக்டர்.. வெறுத்துப் போயிடுச்சு அவருக்கு.. ஆனா உண்மைக்கு எப்பவுமே ஒரு வேல்யூ உண்டு.. நிச்சயமா வெளிய வரும்னு அப்பா நம்புவாரு..”

மகள் விளையாடி விட்டு வந்திருந்தாள். இயல்பாக அப்பாவின் இடுப்பை வளைத்துக் கொண்டாள். அவரது கை அனிச்சையாக மகளின் தலையை வருடிக் கொடுத்தது. நான் அந்த சிறுமியை பார்த்து புன்னகைக்க, அவள் சிறு வெட்கத்தோடு சிரித்தது மிக அழகாக இருந்தது.. சிறுவன் திண்ணையில் தாவி ஏறி இரண்டு துாண்களுக்கிடையே உடலை நுழைத்துக் கொண்டான்..

”சரி.. வாங்க சாப்டுலாம்..” என்று அழைத்தாள் அந்த பெண்.

அய்யய்யோ.. இதென்னது.. எனக்கு கூச்சமாக போய் வி்ட்டது. யாரோ.. எவரோ.. இவர்களுக்கும் எனக்கும் என்ன தொடர்பிருக்கப் போகிறது..? ஆனாலும் கதிரேசன்.. பூங்கோதை என்று பெயரை சொன்ன மாத்திரத்தில் யார் என்ன என்ன விபரம் கூட கேட்காமல் நேரம் ஒதுக்கி உரையாடுகிறார்கள்.. டீ.. டிபன் தருகிறார்கள்.

”எங்களுக்காக இவ்ளோ துாரம் வந்துருக்கீங்க.. சாப்டாம போனா எப்படீ.. அப்பா இப்ப வந்துடுவாரு..” என்றார் முகம்மது.

”வேணாங்க.. சாப்டுதான் வந்தேன்..” கதிரேசன் சாரை பற்றி விசாரிக்கவேயில்லை என்பது அப்போதுதான் நினைவுக்கு வந்தது. என் மறுப்புக்கு அவர்கள் காது கொடுக்கவேயில்லை. உள்ளே அழைத்தார்கள்.

விசாலமான பட்டாசாலை. நாற்காலியையும் மரபெஞ்சையும் இணைத்து அவசரமாக சாப்பாட்டு மேசையாக்கியிருந்தனர். அடுப்பங்கரை உள்ளொடுங்கலாக இருந்தது. எங்கிருந்தோ வருவது போல தோசைகளை எடுத்து வந்தார் அந்த பெண். சங்கோஜமாக அமர்ந்தேன். நிச்சயமாக இது ஒரு புது அனுபவம்தான். தோசைக்கு தொட்டுக் கொள்ள பொட்டுக்கடலை சட்னி. இரண்டாவது தோசைக்கு வந்தபோது வெளியிலிருந்து குரல் கேட்டது.

”அப்பா.. ஒங்களை தேடி ஒத்தரு வந்துருக்காரு..” முகம்மதுவின் குரல். பரபரப்பானேன். கதிரேசன்தான் வந்திருப்பாராக இருக்கும். எழுந்துக் கொள்ள எத்தனித்தேன்.

”நீங்க சாப்புடுங்கண்ணா.. மாமா உள்ளதான் வருவாரு.” என்றார் அந்த பெண். ஆனாலும் ஆர்வமாக எழுந்துக் கொண்டேன்.

முன்கூடத்துக்குள் நுழைந்த அந்த பெரியவர் பதறிப் போனார். ”அய்யோ.. தம்பீ.. சாப்டுற நேரத்தில எந்திரிச்சுக்கிட்டு.. ஒக்காருங்க.. ஒக்காருக்க..  ஒங்கள தேடீ யாரோ வந்தருக்காங்கன்னு டீக்கடைக்கார் சொன்னாரு.. வாங்க தம்பீ.. வணக்கம்..” கைகளைச் சேர்த்து கூப்பினார்.

எழுபதிருக்கும் வயது. தளராமல் திடமாக இருந்தார். ஒல்லியான தேகம்.. கண்களும் மூக்கும் கூர்மையாக இருந்தன. இவர்தான் கதிரேசனா.. தங்கைக்காக போராடும் அண்ணன். கடிதம் முழுக்க நியாயம் கேட்டு கேள்விகளால் துளைத்தெடுத்து விடுவார். கடிதத்தில் எந்த இடத்திலும் புலம்பல் இருக்காது.. ஆதங்கமிருக்கும்.

கைக்கூப்ப முடியாமல் சாப்பாட்டு கையோடு தடுமாறினேன். என் தோளைத் தொட்டு அமர்த்தி, அவரும் அருகிலிருந்த மடக்கு நாற்காலியில் அமர்ந்துக் கொண்டார். ”மன்னிச்சுக்கங்க தம்பீ.. நீங்க வர்றப்ப வீட்ல இல்லாம போயிட்டேன்..” என்றார்.

முகம்மது இடையில் புகுந்து ”அப்பா.. சார் அத்தைய பத்தி கேள்விப்பட்டு வந்துருக்காரு..” என்றார். மகனின் வார்த்தையில் பெரியவரின் முகம் வெளிச்சமாகியது.

”உங்கள சந்திச்சது ரொம்ப சந்தோஷமா இருக்குங்கய்யா.. ஒவ்வொரு தியாகமும்.. அரிய செயலும் மதிக்கப்படணும்ங்க..” என்றேன் சம்பிரதாயமாக.

அவர் முகம் மேலும் மலர்ந்தது.

”நீங்க எங்கேர்ந்து வர்றீங்க தம்பீ..” என்றார் வெகு ஆர்வமாக.

”செகரடேரியட்லேர்ந்துங்கய்யா..”

“மகனை பெருமிதமாக நிமிர்ந்து பார்த்தார்.

”உங்க நம்பிக்கை சரிதாம்ப்பா..”

முகம்மதும் பெருமிதத்தோடுதான் சொன்னார்.

***
.



No comments:

Post a Comment