Search This Blog

Wednesday, 6 September 2017

கட்டுக்கழுத்தியம்மா

உயிரெழுத்து செப்டம்பர் 2017 இதழில் வெளியானது.



பூசாரி தனக்கு முன்னால் வைக்கப்பட்டிருந்த பூசை சாமான் அடங்கிய பொட்டலங்களை ஒவ்வொன்றாக பிரித்தார். அடுக்கியிருந்த தொன்னைகளை வெளியே எடுத்து தனிதனியாக பரப்பி வைத்தார். விபூதி பொட்டலத்தைப் பிரித்து தொன்னையில் கொட்டிய போது அவர் வாய் தாமாகவே முணுமுணுத்துக் கொண்டது.
ஓம் ஸ்ரீ கணேசாய நமஹ
ஓம் ஸ்ரீ குல தேவதாய நமஹ
ஓம் ஸ்ரீ இஷ்ட தேவதாய நமஹ
ஓம் ஸ்ரீ அதிஷ்ட தேவதாய நமஹ




அவருக்கு வயது அறுபதுக்கு மேலிருக்கும். கண்கள் சாராயத்தின் வீக்கத்திலிருந்து விடுபடாதது போலிருந்தது. மீசையும், தாடியும், புருவமும் முகத்தை அளவுக்கதிகமாவே ஆக்கிரமித்திருந்தது. குளித்த உடலில் காவி நிற வேட்டியை சுற்றியிருந்தார். ஈரம் காயும் முன்பே பூசிய விபூதி வெள்ளை வெள்ளையாக காய்ந்து கருத்த உடலுக்கு தேஜஸ் கொடுத்தது. சந்தன பொட்டலத்தைப் பிரித்தார். பரவால்ல.. துாளு சந்தனந்தான்.. தொன்னையில் கொட்டினார். அருகிலிருந்த பன்னீர் பாட்டிலை எடுத்து சிறுவனிடம் நீட்டினார். மகள் வயிற்று பேரன். பத்து வயதிருக்கும். தாத்தாவின் பார்வையிலேயே தேவைகளை புரிந்துக் கொண்டு பரபரப்பாக செயல்பட்டான். சுவரில் கையை தேய்த்து சொரசொரப்பாக்கிக் கொண்டு பாட்டிலை திறந்து பன்னீரை கொஞ்சமாக சந்தனம் வைத்திருந்த தொன்னையில் ஊற்றினான்.

பொழுது விடிந்தும் விடியாததுமாக இருந்தது. நேற்று காலையில்தான் பெரியவர் பூசாரிக்கு தகவல் சொல்லி அனுப்பியிருந்தார். பெரியவர் ஊரில் முக்கிய தலைக்கட்டு. நிலபுலத்துக்கு குறைவில்லாத குடும்பம். மரியாதைப்பட்ட குடும்பம். முழங்கால் உயர திண்ணையில் கால்களை பின்னலிட்டு அமர்ந்திருப்பவரின் பார்வையை அத்தனை எளிதாக கடக்க முடியாது. “அய்யா.. சாப்டீயல்லா..“ அசடு வழிய கேட்க வேண்டியிருக்கும். பதிலாக தலை அசைப்பு மட்டுமே. மகன் மருதமுத்து வேலைக்காக பிரிந்து சென்றபோதோ பிறகு அங்கேயே வீடு வாங்கி குடியேறியபோதோ கூட ஏற்பட்ட தவிப்பை அவர் வார்த்தைகளாக்க விரும்பவில்லை. என்றோ சில சமயங்களில் தானாகவே வாய் விட்டு பேசுவதை யாராவது பார்க்க நேரிடும். அது குறித்து யாரும் அவரிடம் கேட்டதில்லை.

“பெரியவுக மவன் குடும்பத்தோடு வர்றாப்பலயாம்.. பூசைக்கு ஏற்பாடு செய்ய சொன்னவோ.” ஆளனுப்பி சொன்னார்கள்.

”சுத்த பூசயா..? பலி பூசயாம்மா..?” மருதைய்யனுக்கென்றால் பலி பூசை.

”கட்ளத்தியம்மனுக்கு நேத்திக்கடென் கெடக்காம்.. அதான்..”

உருவிய சாராய பாட்டிலை கூரையின் இடுக்குக்குள் சொருகினார் பூசாரி. கட்டுக்கழுத்தியம்மனுக்கு நேர்த்தியென்றால் சுத்த பூசைதான். படையலுக்கு பொங்கலும் சுண்டலும் போதும். ஆனாலும் பெரியவர் வீட்டு படையலென்றால் தவுசுபிள்ளை ஏற்பாட்டில் வடை பாயாசத்தோடு மதிய சாப்பாடு பெரிய விருந்தாகி விடும். கிளம்பும்போது முழுசாக புது வேட்டி சட்டையோடு இரண்டு ஐந்நுாறு வைத்து நீட்டுவார்கள். மனசு கும்மாளம் போட்டது பூசாரிக்கு. அதிகாலையிலேயே பேரனை எழுப்பி குளிக்க வைத்து அழைத்து வரும்போது பூசாரியின் மனைவி வீட்டை சாணமிட்டு மெழுகிக் கொண்டிருந்தாள். கொண்டைக்கடலை பெரிய அண்டாவில் ஊறிக் கொண்டிருந்தது. சர்க்கரைப் பொங்கலும் சுண்டலும் அவள் பொறுப்பு.


சிறிய கோவில் அது. மருதையன் ஏழுக்கு ஒன்பது அளவிலான கருவறையில் சீரான உயரத்தில் மண்ணாலான சிலைக்குள் குடிக் கொண்டிருந்தார். சிவப்பு நிற உடலும் கரிய பெரிய மீசையும் மஞ்சள் நிற கதுப்பான கன்னங்களுமாக வீரக்களையுடன் கையில் நீண்ட அரிவாள் வைத்திருந்தார். சிறுவன் சிலையின் மடிப்புகளில் இருந்த குளவிக் கூடுகளை தட்டி விட்டு துடைத்தான். சிலையின் முன்பாக தரையில் பதிக்கப்பட்டிருந்த அரிவாள் எண்ணெய் தடவலில் பளபளத்திருந்தது. சிலையின் பீடம் எண்ணெய் பிசுக்கேறியிருந்தது. கரிய சுவரில் மடிப்புகளாக ஒட்டடை தொங்கியது. யாரோ வேண்டுதலுக்காக தொங்க விட்ட சர விளக்கிலிருந்து தரையில் வழிந்திருந்த எண்ணெயின் மீது காற்று மண்ணை இறைத்திருந்தது. சிறுவன் தேங்காய் நாரால் பிசுக்கை பரபரவென்று தேய்த்தான். கற்பூர ஆரத்தி மட்டுமே சிலைக்கு. அபிஷேகம் மற்றதெல்லாம் அரிவாள் வடிவ மருதையனுக்குதான். மருதையனின் கட்டுப்பாட்டில் ஏழெட்டு கிராமங்கள் இருந்ததில் சிறிய கோபுரம் எழுப்பி கோவிலை புனரமைக்க முடிந்தது. முன்புறத்தை விரிவாக்கி பேச.. உட்கார, பிடிக்க.. சமைக்க, பரிமாற.. என சிமிண்ட் தளம் அமைத்து ஆஸ்பெஸ்டாஸ் கூரையை ஆங்கிளால் நிறுத்தி பயன்பாட்டை கூட்டியிருந்தனர்.



கருவறையை தாண்டிய வராண்டா, சுவர்களால் தடுக்கப்பட்டு சிறிய அறை போல ஆக்கப்பட்டிருந்தது. எல்லாம் பெரியவர் வீட்டு கைங்கர்யம்தான். அதிலிருந்த கான்கீரிட் மேடையில் அதீதமான வெண்கல புன்னகையுடன் கட்டுகழுத்தியம்மன் வீற்றிருந்தாள். ஐம்பந்தைந்து வருடங்களை கடந்த புன்னகை. பெரியவரின் மனைவியாக வீரம்மாள் என்ற பெயரில் உயிரும் உடலுமாக நடமாடும்போது தொலைத்த வசந்தமனைத்தையும் மீட்டெடுப்பது போன்ற நித்ய புன்னகை. தெய்வக்கதைகளை கேட்கவும் மெனக்கெட்டு சொல்லவும் ஆளின்றி போனதில் தை, ஆடி வெள்ளிகளுக்கான அம்மனாக மாறிப் போயிருந்தாள். கட்டுக்கழுத்தியம்மன் என்ற அவள் பெயரும் அதற்கு காரணமாக இருக்கலாம்.  அணிவிக்கப்பட்டிருந்த அடர் பச்சையாலான சரிகை சேலையில் துாசி படிந்திருந்தது  ”தப்புதண்டா இருந்தா மன்னிச்சுக்கம்மா..“ பெரிதாக ஒரு கும்பிடு போட்டு விட்டு சிலையின் மேலிருந்த காய்ந்த மாலையை அகற்றி சுத்தப்படுத்தத் தொடங்கினார் பூசாரி.

கருவேல செடி அடர்வில் மறைந்து மறைந்து வந்து நின்றது அந்த சாம்பல் நிற கெட்ஸ் வண்டி. காரின் கதவை ஆதரவாக பிடித்துக் கொண்டு முன்னிருக்கையிலிருந்து மெல்ல இறங்கினார் பெரியவர். எண்பது வயதிருக்கும். வீரம்மாளை மணக்கும் போது இருபத்து மூன்றில் இருந்தார் ஓங்குதாங்கான தேகம். மாநிறத்தை கடந்த நிறம். தங்கநிற சரிகை கரை வேட்டி அணிந்திருந்தார். கழுத்தைச் சுற்றி அணிந்திருந்த துண்டு நெஞ்சு வரை வழிந்திருந்தது. உடல் அதிகம் தளர்ந்திருக்கவில்லை. அவர் வயதையொத்த அங்காளிபங்காளிகள் கொள்ளு பேரனை பார்த்து விட்ட போதிலும், இரண்டு வருடங்களுக்கு முன்புதான் அடுத்த தலைமுறை வித்தாக பேத்தி பிறந்திருந்தாள்.

ஓட்டுநர் இருக்கையிலிருந்து மருதமுத்து இறங்கினான். பெரியவரின் தத்து புத்திரன். முப்பது வயதிருக்கும். அதிகாரிக்குரிய முகவெட்டு. உறங்கிக் கொண்டிருந்த மகளை தோளில் சாய்த்துக் கொண்டு அவன் மனைவி அபிநயா இறங்க கூடவே சின்னவரும். பெரியவரை ஒற்றி எடுத்ததுப் போன்ற தோற்றம் சின்னவருக்கு. தகப்பனை இழக்கும் போது சின்னவருக்கு இரண்டு வயதிருக்கும். தாயின் புடவை தலைப்பே கதியாக்கி கொண்டவருக்கு பிறகு அதுவே சுபாவமாகிப் போனது. அண்ணனை நேருக்கு நேர் நிமிர்ந்து பார்த்து பேசுவது கூட சின்னவருக்கு சவால்தான். வயல் வேலைக்கு அஞ்சாத தேகம். இரவுநேர படுக்கை வயல்காட்டில்தான் என்றாலும் சின்ன மின்னலோ.. இடியோ.. கூட சின்னவரின் உறுதியை குலைத்து விடும்.

”அய்யா.. வாங்கய்யா.. வாங்கய்யா.. எல்லாரும் வரணும்..” என்றார் பூசாரி பணிந்து குழைந்து.

அலங்காரமின்றி பளிச்சென்று துடைத்து விடப்பட்ட மருதைய்யனையும் கட்டுக்கழுத்தியம்மனையும் திருப்தியாக பார்த்து விட்டு பிறகு பெரிய கும்பிடாக வைத்தார் பெரியவர். ”பிரசாதமெல்லாம் ஆயிட்டுருக்கில்ல..”

”ரவைக்கே கடல ஊற போட்டாச்சுங்கய்யா.. அர அவர்ல ரெடியாயிடும்...”

அடர்த்தியாக தொடுக்கப்பட்டு மெல்லிய வெண்பட்டு சரிகையால் சுற்றப்பட்ட மல்லிகை மாலை அடங்கிய பையை கட்டுக்கழுத்தியம்மன் பீடத்தில் வைத்து விட்டு, துாணோரம் கால்களை நீட்டியப்படி அமர்ந்துக் கொண்டார். சுற்றிலும் பரவியிருந்த கருவேல மரங்கள் அதிகாலை பொழுதில் கூட அழகற்று இருந்தன. கட்டுக்கழுத்தியம்மன் சன்னதியையொட்டி மருதமுத்து மனைவியுடன் அமர்ந்துக் கொண்டான். சுற்று சுவர்களில்லாத வெளியில் வீசிய அதிகாலைக் காற்று மடியில் துாங்கிக் கொண்டிருந்த மகளின் உறக்கத்திற்கு தாலாட்டாக இருந்தது.




நீட்டி நிமிர்ந்திருந்த அரிவாளில் விபூதி பட்டையிட்டார் பூசாரி. எலுமிச்சம்பழத்தை கையில் எடுத்தவர் ”அந்த சேப்பு எடுப்பா..” என்றார் பேரனிடம்.

”சேப்ப காங்கலயே தாத்தா..” என்றான் சிறுவன். அந்நிய ஆட்கள் முன் அவன் பேச்சு வெட்கத்தில் குழைந்தது.

”தோ.. இருக்கு பாருப்பா..” குவிந்திருந்த பூசை சாமானுக்குள்ளிருந்து  குங்கும பாக்கெட்டை உருவி நீட்டினான் மருதமுத்து. நழுவி விழாத நவீன வேட்டி அணிந்திருந்தான். வேட்டியின் பாக்கெட்டில் பர்ஸ் துருத்திக் கொண்டிருந்தது. வெற்று மார்பில் முசுமுசுத்து வளர்ந்து கிடந்தன மயிர்கள்.

“இதென்னா தாத்தா சேப்பு ரெத்த கலர்லருக்கு..?” சேப்புன்னா ரோசு கலர்ல்ல இருக்கும்.. என்ற குழப்பம் ஆட்கொண்டதில் தலையை நிமிர்த்தாமலேயே கேட்டான்.

”சொம்மா இர்ரா.. அப்டியெல்லாம் பேசக்குடாது..“ பேரனை அதட்டினார் பூசாரி.

”தம்பி.. எப்போ வந்தீங்க..?” பேச்சுக் கொடுத்தார்.

”ராத்திரி பன்னெண்டாயிடுச்சுல்ல..” மருதமுத்துவின் குரலில் அலுப்பு மீதமிருந்தது.

“அதான் புள்ள துாங்கிடுச்சு..“ சம்பிரதாயமாக பேசிக் கொண்டே எலுமிச்சம் பழத்தை அரிவாளில் சொருக, அதிலிருந்த குங்குமம் சாறோடு கலந்து செந்நீராய் வழிந்தது.

“எங்க..? சின்னய்யாவ காங்கில..?”

“தோ வாரேன்ல..“ வேட்டி நுனியை பிடித்தபடியே செருப்பிலிருந்து கால்களை விடுவித்துக் கொண்டு அருகில் வந்தார் சின்னவர்.  “நல்லாருக்கீயளாய்யா.? உள்ளுருன்னுதான் பேரு.. பாத்து நெடுநாளாச்சு..”

சின்னவரின் விசாரிப்பில் சங்கடப்பட்டு நெளிந்தார் பூசாரி.

“எளநீயெல்லாம் வச்ச வாவுல கெடக்கு.. அருவாள எடுங்க.. கண்ண தொறந்து வச்சிடுறன்..” வந்தவுடனேயே பரபரப்பான சின்னவரிடம் ”நீங்க குந்துங்கய்யா.. பய பாத்துக்குவான் அதெல்லாம்..“ என்றார் பூசாரி.

”புள்ளய குடும்மா.. எம்புட்டு நேரமா கால்ல போட்டுக்கிட்டு.. காத்தாட துாக்கீட்டு போறன்..“ ஓரிடமாக உட்காருவது பழக்கப்படவில்லை சின்னவருக்கு.

“எலேய்.. போய் அம்மாச்சிக்கு வெறகு எடுத்தாந்து போடுய்யா..” பேரனை ஏவினார் பூசாரி.

மந்தையிலே மாரியாயி மல மேல மாயவரே..
சந்திரரே சூரியரே..இந்திரனே மருதைய்யா.
மழை நல்லா பெய்ய வேணும்.. மக்களளெல்லாம் வாள வேணும்..

சுதந்திரம் கிடைத்தது போல பாடிக் கொண்டே துள்ளி குதித்து ஓடினான் சிறுவன்.

”பேரனுக்கும் சொல்லி குடுத்துட்டீங்க போல..” என்றாள் அபிநயா. கால்களை சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டாள்.

”கூடவே கெடக்கற பய.. தன்னால வந்துடும்.. ஆளுங்கள காணவும் வெக்கம் வந்துடுச்சு பயபுள்ளக்கு.. இல்லேன்னா வெளுத்து வாங்கிடுவான்..” என்றார் பெருமையாக. கணவனும் மனைவியுமாக தனித்து விடப்பட்டதில் பூசாரிக்கு பேச்சு வளர்க்க தோதுவாகிப் போனது. வெளியூரில் பிழைக்க சென்றோர்க்கு சொந்த ஊரின் மீது ஒரு கரிசனம் இருக்கும். நேக்கு பார்த்து தட்டு விட்டால் பேச பேச காசுதான்.

”பெரியவரு வூட்ல ராம லச்சுமணன்மாரி ரெண்டே பசங்கதான்.. பெரியய்யாவும் சின்னவருந்தான்.. சிறு வயசுலயே பெரியவரோட அப்பா பொண்டாட்டி புள்ளங்கள வுட்டுட்டு போய் சேந்துட்டாரு.. பொம்பளயாயிருந்தாலும் மல்லுக்கட்டா சொத்த காவந்து பண்ணி கொண்டாந்துருச்சு அந்தம்மா.. பெரிய மவன கேக்காம ஒண்ணு கூட செய்யாது.. பெரியவருக்கும் அம்மான்னா உசுருன்னு வச்சிக்கயேன்.. பக்கத்துல கல்லுக்காரன்பட்டியிலதான் மவனுக்கு பொண்ணெடுத்துச்சு.. ஏளைப்பட்ட பொண்ணுன்னாலும் மவாலட்சுமிகணக்கா இருக்கும் பெரியவரு சம்சாரம்.. வீரம்மானு பேரு.. குடும்பத்துக்கேத்த பொண்ணு.. மாமியாட்ட ஒத்த வாருத்த எதுத்துக்கிட்டது கெடயாது.. ஆரு கண்ணு பட்டுச்சோ தெர்ல.. பெரிய வென ஆயி போச்சு அந்த குடும்பத்துக்கு..”

கட்டுக்கழுத்தியம்மனின் கைகள் ஒவ்வொன்றுக்கும் மஞ்சளால் வளையலிட்டார் பூசாரி.

”ஆச ஆசயா கண்ணாலம் பண்ணி வச்சுது பெரிய மவனுக்கு.. ஆனா என்னா..? வம்சம் தளைஞ்சு வாரத பாக்க குடுப்புன இல்லாம போச்சு அந்தம்மாளுக்கு.. சின்னவருக்கு பொண்ணு தேடிக்கிட்டுருந்த தாவுல அரவம் தீண்டி உசுரு அமைஞ்சு போச்சு..”

திருமணமாகி வருடம் இரண்டு கடந்தும் வீரம்மாள் மலடாகவே இருந்தது  மாமியாருக்கு கோபமாக வெளிப்பட தொடங்கியது. மாதாந்திர ஒதுக்கத்தில் பின்கட்டில் தனித்திருப்பவளுக்கு சாப்பாடு கூட சரியாக கிடைப்பதில்லை. கைக்கும் வாய்க்குமே பிரச்சனையான வீட்டில் பிறந்தவளுக்கு பட்டினி கிடப்பதொன்றும் பெரிய விஷயம் இல்லைதான். ஆனால் எதற்கும் எதிர்வினையாற்றாத கணவனும் திரும்பி போகவியலாத பிறந்த வீடும் தனக்கு எதிராக அமைந்ததில் மௌனம் காக்க வேண்டியிருந்தது வீரம்மாளுக்கு. வீரம்மாளின் தாய்க்கு மகளை நினைத்து நெஞ்சுவரைக்கும் கவலை.  எங்கோ உடுக்கடித்து பார்த்ததில் கர்ப்பவாய் திறந்து கிடப்பதாக சேதி வந்தது. சாமியாடியும் அதையே உறுதிப்படுத்த, சற்று நிம்மதியாக இருந்த நேரத்தில்தான் சம்மந்தியம்மாளின் திடீர் மரணம்.

தாயும் மகனுமாக பார்த்த குடும்ப நிர்வாகம். மாமியாரிடமிருந்து திடீரென தன் கைக்கு மாறியதில் திக்குமுக்காடிப் போனாள் வீரம்மாள். சுதாரித்து கொண்டு நிமிர வருடம் ஒன்று ஓடிப் போனது. தன்னை விட இரண்டொரு வயது மூத்தவரான கொழுந்தனின் சிறுப்பிள்ளை சுபாவம் புரிப்பட்டு போனதில் அதட்டலும் உரிமையுமாக பேச தொடங்கினாள். தொட்டதெற்கெல்லாம் தாயிடம் அபிப்பிராயம் கேட்கும் பழக்கம் அண்ணியிடம் என்றாகி போனது சின்னவருக்கு. “தொட்ட தொண்ணுாறுக்கும் கேட்டுக்கிட்டு கெடந்தா நாளக்கு கட்டிக்கிட்டு வாரவோ கா காசுக்கு ஒன்ன மதிக்க மாட்டா.. சொல்லிட்டேன்.. ஆமா..” என்பாள் கொழுந்தனிடம், தாயையொத்த கண்டிப்பாக.

“இனிமேல்லாம் மாத்திக்க முடியாதுண்ணி..“ என்பார் சின்னவரும் விடாப்பிடியாக.. மகனின் பிடிவாதம் போல.      
   
மருதமுத்துவுக்கு சித்தப்பன் மூலமாக இந்த கதைகள் அத்துப்படி. புகைப்படத்தில் கூட பார்த்திராத வீரம்மாளின் உருவம் மெல்ல மெல்ல தாயாக அவனுக்குள் குடி புகுந்தது அப்படிதான்.

சரிகை பட்டுச்சேலையும் மல்லிகை மாலையுமாக கட்டுக்கழுத்தியம்மன் அத்தனை நேர்த்தியாகத் தெரிந்தாள். மஞ்சள் கிழங்கு தாலி கழுத்தில் எடுப்பாக தொங்கிக் கொண்டிருந்தது. கழுத்தில் அணிவிக்கப்பட்ட தங்கத்தாலான சங்கிலி சிலையின் வயிறு வரை ஓடியிருந்தது. விசேஷ நாட்களில் கையோடு கொண்டு வந்து அணிவித்து பார்ப்பதில் எல்லோருக்குமே விருப்பமிருந்தது.

”மவராசி போயி சேந்து முழுசா ரெண்டு வருசம் முடியில.. மரிமவளயுமில்ல கூப்டுக்குச்சு.. சாவற வயசா தாயி அது.. ஒங்காம நொங்காம நெருப்புல்ல தின்னுட்டுப் போச்சு அந்த புள்ளத்தாய்ச்சி பொண்ண..”.

”பிள்ளத்தாய்ச்சியா..” சின்னவரிடம் ஆச்சர்யமாக கேட்டான் மருதமுத்து. அடிக்கடி மருதமுத்துவை பார்க்க நகரிலிருக்கும் அவன் வந்து விடுவார் சின்னவர்.

”ஊரு மருவாதி.. பேரு மருவாதின்னு ஒண்ணு இருக்குல்ல.. ஆயிரம் பொய்ய சொல்லி கண்ணாலமே பண்ணுதுவோ.. இது சாவு தானே..” என்றார் சின்னவர். முகம் சிறுத்திருந்தது. அன்றைய இரவு முழுக்க சுமையை இறக்கவும் ஏற்றவுமாக இருந்தனர் சித்தப்பனும்.. மருதமுத்துவும்.

சம்மணமிட்டு மரத்திருந்த கால்களை சட்டென்று உதறி கொண்டு எழுந்தான் மருதமுத்து. “அபி.. பாப்பா இந்நேரம் முழிச்சிருப்பா.. போய் பாத்துட்டு வர்றேன்..”

கை குறைய குறைய பூசாரிக்கு கதை சொல்லும் ஆர்வம் மிகுந்துப் போனது.

“செத்துப் போன ஆத்தாதான் மவளா பொறக்குமுன்னு பெரியவரு கனவா கண்டுருக்க.. எல்லாமே நெருப்புல பொசுங்கி போச்சு தாயீ.. பொசுங்கிப் போச்சு..” அப்போதுதான் நிகழ்ந்தது போல் தான் பார்த்தேயிராத இறப்பு பற்றி உருக்கமாக சொன்னார் பூசாரி.

”அன்னீக்கு வெறுத்துப் போனவருதான் பெரியவரு.. அதுக்குபொறவு ஆளு எங்கயும் தட்டுப்படுல.. தேடாத எடம் பாக்கியில்ல.. சின்னவருக்கு ஒரேடியா பதைக்குது.. படுத்தபடுக்கையாவே ஆயிட்டாரு.. மருதைய்யனுக்கு எதோ கொறப்பாடாருக்கும்.. கடா சோறு போட்டு எச்சி எல எடுக்கணும்னு எங்கப்பன் மேல சாமி வந்து சொல்லுச்சாம்.. கடா வெட்டி முளுசா ஏழு நாளு களியில பாத்துக்க.. தாயீ.. ஒம் மாமனாரு திரும்பீட்டாரு.. மருதய்யன் அம்புட்டு பவுருஃபுல்லு..  குரலை தழைத்துக் கொண்டார். “சின்னவருக்கு எங்கிட்டுருந்துதான் அம்புட்டு தகிரியம் வந்துச்சோ தெர்ல.. பொறந்தவன மொகத்துக்கு மொகம் கூட பாக்க முடியாதுன்னுட்டாரு.. அம்புட்டு கோவம் அண்ணாரு மேல.. பொறவு..? அம்புட்டு பேரும் வுட்டுட்டு போயீட்டா அந்த பயங்கொள்ளிப்புள்ள என்னா செய்யும் சொல்லு தாயீ..“

”எங்க போயிருந்தாராம்..?”

”ஆருக்கு தெரியும்.. அவருக்கிட்ட கேக்கற அளவுக்கு அம்புட்டு தகிரியம் ஆருக்கு இருக்கு.. பொண்டாட்டி நெனப்பு தாங்காம போனவரு அந்த மவராசிய செலயா செதுக்கில்ல கொண்டாந்தாரு..”

”சின்னவர் கோவமெல்லாம் எப்போ தீந்துச்சு..?”

”ஒத்த ஒடம்பொறப்புங்க.. எம்புட்டு நாளு அப்டியே இருப்பாவோ.. எல்லாம் மாறிப் போச்சு தாயீ.. பொறவு நல்ல நாளா பாத்து செலய இங்க கொண்டாந்து வச்சாச்சு.. அதுலேர்ந்து ஊருக்காரங்களுக்கு கண்கண்ட தெய்வமா ஆயிட்டா.. அவள கேக்காம ஒரு கண்ணாலம் கூட நடக்கறதில்ல.. சுமங்கலி தெய்வமில்லயா.“

படைப்பதற்காக எடுத்த வந்த பட்டுச்சேலையை பூசாரியிடம் நீட்டினாள் அபிநயா. “கவர் மேலயே சேலய வச்சுடுங்க.. எண்ணெய் கறை பட்டுடும்..”

”செரி தாயி.. சாக்கெட்டு..”

”பொடவைக்குள்ளயே மடிச்சு வச்சிருக்கன் பாருங்க..”

நெகிழிப் பையை கட்டுக்கழுத்தியம்மன் முன் பரப்பி பட்டுப்புடவையையும் சாக்கெட்டையும் வைத்து அதன் மீது வெற்றிலை பாக்குடன் ஒரு இணுக்கு பூவும் மஞ்சள் உருண்டையும் வைத்தார் பூசாரி. பூசாரியின் மனைவி சர்க்கரை பொங்கல் நிறைந்த பெரிய அன்னக்கூடையின் இருபக்க பிடிகளை பிடித்து துாக்க முடியாது துாக்கி வந்து அம்மனுக்கு முன் வைத்து மூங்கில் தட்டால் மூடினாள். நெய்யும், வறுத்த முந்திரியும் வெல்ல வாசமும் மூங்கில் தட்டை மீறியது.

”சாம்ராணி பொக போடணும்.. அடுப்ப அமைக்கங்குள்ளயும் நெருப்பு கரிய எடுத்து வச்சுடு.. மறந்துபுடாத..” என்றார் மனைவியிடம்.

“ஆங்.. தெரியாதாக்கும்..“

”நம்பள எதுத்துக்கலேன்னா இந்த பொட்டச்சிக்கு கண்ணுல இம ஒட்டாது..” சந்தோஷமாக சிரித்தார் பூசாரி. ”வெளையாட.. புடிக்கன்னு ஒருத்தி இருந்துட்டால்ல தேவல.. பொண்டாட்டி போன பொறவு மறு கண்ணாலமே வேணாம்னு கச்ச கட்டிக்கிட்டு நின்னுட்டாரு பெரியவரு.. சின்னவரு தனக்கும் வேணாமுன்னு அண்ணனுக்கு தோதா ஆமாசாமி போட.. அதுக்கு பொறவு ரெண்டு பேத்துக்கும் தொறவு வாழ்க்கதான்.. நெலம் நீச்சுக்கு பஞ்சமா.. வூடு வாசலுக்கு கொறப்பாடா..? ஊரே சொல்லி சொல்லிதேன் ஒன் புருசன உள்ள கொண்டாந்தாங்க.. அதுமுட்டுந்தா ஊர் பாடு.. பொறவு பெரியவருக்கு எல்லாமே மவன்தான்..”

உடன்பங்காளியின் மகன் மருதமுத்துவை தத்தெடுக்கும்போது பெரியவருக்கு வயது ஐம்பதைக் கடந்திருந்தது. ஆறு மாத குழந்தையாக அத்தனை சொத்துக்கும் வாரிசாக வந்த மருதமுத்துவுக்கு தாய் இல்லாததே பெரிய குறை என்பது தாமதமாகதான் புரிந்தது சின்னவருக்கு. அதன் பிறகே அவர் தாயுமாகிப் போனது. இப்போதும், கிராமத்துக்கும் நகரிலிருக்கும் மகன் வீட்டுக்குமான இடைவெளியை கடந்து கடந்தே குறைத்து வைத்திருந்தார்.

பெரியவர் அருகில் வருவது தெரியவும் பூசாரி சத்தமாக  பாட தொடங்கினார்.

காட்டு வழியில கள்ளர் பயமில்ல..
எங்க வீட்டு கொல தெய்வம் வீரம்மா காக்குமடா..

“செரி.. வேலையாயிடுச்சுல்ல.. இன்னும் பத்து நிமிசத்துல நல்ல நேரம் தொடங்குதுன்னு காலண்டர்ல போட்டுருக்கான். தவுசுப்புள்ள வந்துட்டாரு.. மளிய ஒண்ணும் வுட்டுப்புடலியே...”

”எல்லா ஆனந்னேன் மளியில செட்டா வாங்கியாச்சுய்யா..”

”நீங்க ஏம்மாமா மேரேஜ் பண்ணிக்கல..?” ஒருமுறை சின்னவரிடம் கேட்டிருக்கிறாள் அபிநயா. பெரியவரிடம் இப்படியெல்லாம் நெருக்கமாக உணர்வதை நினைத்துக் கூட பார்க்கவியலாது அவளால். இதுவரை தன்னிடம் மொத்தமாக பத்து வார்த்தைகள் பேசியிருந்தால் அதிகம் என எண்ணிக் கொள்வாள்.

ஒத்த பொம்பள ஒம்போது புள்ளய வளத்துடும்.. ஆனா ரெண்டு ஆம்பளங்க ஒத்தப் புள்ளய  வளக்கக்குள்ளயும் நாக்கு தள்ளிப் போச்சும்மா..”

”மாமா.. நா ஒண்ணு கேட்டா நீங்க ஒண்ணு சொல்றீங்க..”

”என்னமோ தோணல ஆயி..” என்றார் சின்னவர். பிறகு தொடர்ந்து “எனக்கு மழையும் ஆவல.. தீயும் ஆவல.. பயங்கொள்ளி ஆம்பளய எந்த பொட்டச்சிக்கு புடிக்கும் சொல்லு..”


அன்றைய இரவு சின்னவருக்கும் மருதமுத்துவுக்கும் கனமாக நகர்ந்துக் கொண்டிருந்தது.

கல்லுக்காரன்பட்டியில் திருவிழா நடந்த சமயம் அது. நட்சத்திரங்களற்ற இரவு வானம் கருங்குடையாக கவிழ்ந்து கிடந்தது. எப்போதும் போல இரவு உணவுக்கு பின் வயல்காட்டுக்கு கிளம்பி விட்டாலும் தலையை உயர்த்தி வானத்தை பார்க்கவே நடுக்கமாக இருந்தது சின்னவருக்கு. மோட்டார் அறை கதவை இழுத்து சார்த்தி உட்புறம் தாளிட்டுக் கொண்டார். அண்ணி இழுத்து வைத்து பரிமாறியதில் அளவுக்கதிகமாவே சாப்பிட்டாயிற்று. தலை வரை போர்வையை இழுத்து விட்டுக் கொண்டு கயிற்றுக் கட்டிலில் சாய்ந்தவர் அப்படியே துாங்கிப் போனார். இரவு வானத்தை மின்னல் வெட்டியதை சிமிண்ட் கிராதி மௌனமாக கடத்திக் கொண்டிருந்ததில் திடுக்கிட்டு விழிப்பு வந்தது. நடுக்கமாக இருந்தது. பெருமழை வருவதற்குள் கிளம்பி விட வேண்டும்.  “பச்சப்புள்ள பச்சப்புள்ளன்னு முந்தானைக்குள்ள சுருட்டி வச்சு வளத்துட்டு எனக்கென்னான்னு வுட்டுட்டு போயிடுச்சு..” அம்மாவின் மீது கோபமாக வந்தது அவருக்கு. ஐந்து நிமிட நடை துாரம்தான். கால்களை எட்டி போட்டு நடந்தார்.

கிழக்கு பார்த்த வீடு. வீடு பெரியதாக இருந்தாலும் திண்ணையையொட்டி இறக்கப்பட்ட கீற்றுக் கொட்டகையில்தான் சமையலெல்லாம். கொண்டான்.. கொடுத்தவர்களெல்லாம் கல்லுக்காரன்பட்டியில் முகாமிட்டு விட ஊர் அரவற்று கிடந்தது. வீரம்மாளுக்கும் போக ஆசைதான். ஆனால் கணவனை மீறி எதுவும் செய்து விட முடியாது. மாவிளக்கு மாவும் அதிரசமுமாக மகளை பார்க்க வந்திருந்தாள் வீரம்மாளின் தாய். தனது பயம் குறித்து அண்ணிக்கு தெரிந்திருந்தாலும் எப்போதும் போல இன்றும் தயக்கமாகதான் இருந்தது சின்னவருக்கு. போதாக்குறைக்கு சம்பந்தியம்மாள் வேறு.

திடீரென்ற ஏற்பட்ட விழிப்பில் கண்களை திறந்து பார்த்தாள் அபிநயா. கணவனின் படுக்கை காலியாக இருந்தது. தலையணையை விட்டு நகர்ந்துக் கிடந்த மகளை இழுத்து தலையணையில் கிடத்தி விட்டு கதவை திறந்து முன்னறையை எட்டிப் பார்த்தாள். சித்தப்பனும் மகனும் முக்கியமான முக பாவனைகளோடு பேசிக் கொண்டிருந்தது தெரிந்தது. “இன்னுமா துாங்கல.. என்னாதான் பேசுவீங்களோ.. குசுகுசுன்னு..” மகள் விழித்துக் கொள்ளக் கூடாது என்ற அக்கறையில் மிக மெதுவாக கதவை மூடி உட்புறமாக தாழிட்டுக் கொண்டாள் அபிநயா.

சமையலறையை கடந்து விட்டால் யார் கண்ணிலும் பட வேண்டியிருக்காது. வேகமாக வந்தவர் சுருட்டின் ஒற்றை நெருப்பில் தயங்கி நின்றார். கீற்றுக் கொட்டகையில் பேச்சுக் குரல் வேறு கேட்டது.

“மாப்ளக்கிட்ட சொல்லிக்கிட்டேன்.. மழ வர்றதுக்குள்ள நா கௌம்பறேன்.. ஒங்கப்பாரு கெடந்து கத்தும்..” சம்பந்தியின் குரல்.

”ம்க்கும்.. மணி பத்தாச்சு.. இந்நேரங்காட்டியும் எங்க போவ.. இங்ஙனயே படுத்துட்டு காலைல கௌம்பு..” அண்ணி பதில் சொல்லியது.

”காரு புடிச்சா போறன்..? ஊரு சனமே திருளாவுல கூடிக் கெடக்கு.. என்னைதான் பெசாசு புடிக்குதாக்கும்..”

“எம்மா.. செத்த இருந்துட்டு போ.. ஒன் வூட்ட ஆரும் துாக்கீட்டு போயிர மாட்டாவோ..”

தாயும் மகளும் பேசிக் கொண்டிருக்கும்போதே நைசாக நழுவி உள்ளே ஓடி விட வேண்டியதுதான். கால்களை ஒரு எட்டு வைத்தவர் இன்னும் சுருட்டின் தீ கங்கு தெரிவதை பார்த்து விட்டு தயங்கி நின்றார்.

”புடிச்சா மொசலுக்கு காலு மூணுன்னு நிப்ப..“ கூரைக்குள் சொருகிக் கிடந்த பாய் தலையணையை உருவும் சத்தம் கேட்டது.

“நா கொட்டாயிலயே படுத்துக்கறன்.. நீ உள்ள போ.. மாப்ள காத்துக்கிட்டுருப்பால..“

”உள்ள போயீ..? எங்க படுக்க..? பட்டாச்சாலல கெடக்கறதும் ஒண்ணுதான்.. இங்ஙன படுக்கறதும் ஒண்ணுதான்..”

”ஏன்டீ.. வெலக்காயிட்டீயா..?” கவலை தோய்ந்திருந்தது சம்பந்தியின் குரலில்.

”சும்மா கெடம்மா.. புள்ளயெல்லாம் மந்திரத்துல மாங்கா காய்ச்சாதான் வரும் பாத்துக்க..”

“மாப்ள ஊர்லதான இருக்காரு..”

”ஊர்ல இருந்தா மட்டும்..? எல்லாம் தனியாதான் படுக்கறது..”

”அடிப்பாவீ.. எம்புட்டு நாளா..?“

”ம்ம்.. கண்ணாலமான நாளாதான்…”

”என்னாடீ சொல்ற..?“

”சொல்றன் சொரக்காயிக்கு உப்பில்லேன்னு…” அழுகிறாள் போலும்.

“அடிப்பாவீ.. மருமவள பிரிச்சு படுக்க வச்சுட்டுதான் ஒன் மாமியாரு வண்ட பேச்சு பேசுனாளா..?”

”நா சொன்னாதானே அதுக்கு தெரியும்.. அவங்கம்மா இருக்கவரைக்கும் ஒரே ரூம்புலதான் படுப்போம்.. அவங்கம்மாவுக்காவ.. அம்புட்டுதான்..”

”அடிப்பாவீ.. படபடங்குதுடீ எனக்கு.. இம்புட்டு பெரிய விசயத்த ஏன்டீ மறச்சே..?”

”ம்ம்… தெரிஞ்சா நீ என்ன பண்ணுவே..? ஒன் வூட்டுக்கு வந்துதான் நா என்னா பண்ணுவேன்.. பேசாம படு.. அந்த மனுசன் சுருட்டு புடிக்க வார நேரந்தான்..”

”வருட்டும்.. வருட்டும்.. என்ன பயமா..? பொளுது விடியுட்டும்.. கேளுங்க இந்த அக்குறும்பத்தன்னு பஞ்சாயத்த கூட்டீட மாட்டேன்..? கஞ்சிக்கு செத்தவங்கன்னா மானம் கெட்டவங்கன்னு நினைச்சு எம்புட்டு பேச்சு பேசியிருப்பா ஒம் மாமியாருகாரி.. ஏயப்பா.. ஒம் புருசன்மாரி சால்சாப்புகார ஆம்பளய என் ஆயுசுக்கும் பாத்ததில்லடீ.. ஊம ஊர கெடுக்கும்ன்னு சும்மாவா சொல்லி வச்சாவோ.. ரெண்டுல ஒண்ணு தெரியாம நவுர மாட்டேன்.. பாத்துக்க..” ஆத்திரமும் ஆவேசமுமாக பேசினாள் சம்பந்தி.


பெரியவருக்கும் ஆத்திரமும் ஆவேசமும் வந்தது. தீக்குச்சியை உரசி கூரை மேல் விட்டெறிந்த பிறகும் கூட அது நீடித்தது. கூரை நெருப்போடு விறகடுப்பில் லேசான கனைப்பிலிருந்த நெருப்பும் லாந்தர் நெருப்பும் சேர்ந்துக் கொண்ட பிறகும் கூட அது தணியாதிருந்தது. கொட்டகைக்கு பின்னே நடுங்கி படபடத்து கிடந்த சின்னவரை பார்க்கவியலாத அளவுக்கும் அது கண்களை மறைத்தது. “சோத்துக்கு நாதியத்த பொட்ட செறுக்கிக்கு ஒடம்பு சொகம் கேக்குதோ.?“

மருதமுத்து மகளை துாக்கிக் கொண்டு வந்தான்.

மீதமிருந்த கதம்ப மாலையை அங்கிருந்த உண்டியலின் கழுத்தில் சுற்றி விட்டார் பூசாரி. “இன்னும் செத்த நேரத்துல இந்த பூவெல்லாம் ஆடு வவுத்துக்குள்ள போயி உருமாறிடும்.. எல்லாம் அப்டிதான்.. தெய்வங்கூட அப்டிதான்.. பதிமூணு தலமொறைக்கு பிற்பாடு அதுங்க கூட மாறிடும்..”
“அதெப்புடீ..?“
”பதிமூணு சென்மத்தோட ஒரு வம்சத்து கணக்கு முடிஞ்சுடும்னு ஒரு நம்பிக்க தாயீ... நம்ம கட்ளத்தி ஆத்தாளுக்கு இதாம் மொத சென்மம்..”
”அதென்ன இப்டியொரு பேரு..?
”புருசன் இருக்க கட்டுக்களுத்தியா போனவ இல்லியா.. அதான்.. கன்னிமாரா இருக்குற சின்ன பொண்டுவ போயிடுச்சுங்கன்னா கன்னிசாமிம்பாங்க.. இந்த பொண்டுவதான் அந்தந்த கொலத்த காக்கற கொலதெய்வம் தாயீ.. வருசந்தவறாம பொங்க வச்சு நேத்தி செஞ்சுட்டோம்னு வையி.. அதுங்களே கொலத்தி விருத்தி பண்ணிடுங்க.. பெரியய்யா செத்து போன பொண்டாட்டிய தெய்வமாக்கி கும்புட்டுதால என்னா கெட்டா போயீட்டாரு..? கட்டுக்களுத்தியா வயித்து புள்ளத்தாய்ச்சியா போன புள்ள அது.. தான் இருந்துட்டு போன வமுசத்த காசும் பணமுமா சீரும் பேருமாதானே வச்சிருக்கா... இந்த தெயிவத்த அடுத்த தலமொறக்கு சேக்கற பொறுப்பு ஒங்கிட்டதான் தாயீ இருக்கு.. மொதல்ல ஒரு ஆம்பளப்புள்ளய பெத்தெடு தாயீ..”
கோயிலுக்கு முன் கும்பல் சேரத் தொடங்கியது.
”அய்யா.. பூசை போட்டுடுலாம் வாரீங்களாய்யா..” கறிவேலங்காட்டில் பார்வையை பதித்து கொண்டிருந்தவரை நோக்கி குரலெழுப்பினார் பூசாரி.
பெரியவரும் சின்னவரும் இம்மாதிரியான நேரங்களில்தான் சேர்ந்து நிற்பதை பார்க்க முடியும். பெரியவரையொட்டி மருதமுத்து குடும்பத்தோடு நின்றிருந்தான்.
முதலில் மருதைய்யனுக்கு சுத்த பூசை போடப்பட்டது. சாம்பிராணி புகையால் மணத்து கிடந்தது அந்த இடம் முழுவதும்.
வாக்கப்பட்ட வூரு இது..
வாழ வச்சு பாரு..தாயி..
கொறவுப்பட்ட ஆயுசுகாரி..
நெறவுப்பட்ட வாழ்க்ககாரி..
நாடு செழிக்க வச்சிடம்மா..
காடு வெளைய காத்திடம்மா..
மழையா பேஞ்சுடம்மா..
நெல்மணியா வௌஞ்சிடும்மா..
கணீரென்ற அவரின் குரல் கூடியிருந்தோரின் உடலை சிலிர்க்க வைத்தது.
“பொண்டுவல்லாம் கட்ளத்தியம்மன கும்புடுக்கங்க..” கூட்டத்தை நோக்கி சத்தமிட்டார் பூசாரி. பெரிய சூட வில்லையை இட்டு பெரு நெருப்பாக்கி அம்மனுக்கு தீபாராதனைக் காட்ட கும்பல் கன்னத்தில் போட்டுக் கொண்டது. 
மனைவியில் கையிலிருந்த மகளின் கரங்களை குவித்து வைத்தான் மருதமுத்து. “பாப்பாவ நல்லா படிக்க வையீன்னு கன்னிசாமிய கும்புட்டுக்கம்மா..”
புரியாமல் கணவனைப் பார்த்தாள் அபிநயா. ”பச்சப்புள்ளக்கு சரியா சொல்லிக் குடுங்க..” பூசாரியின் படிப்பினையில் பொறுப்பு வேறு சேர்ந்திருந்தது அவளிடம்.
”எல்லாம் சரியாதான் சொல்றேன்..” என்றான் மருதமுத்து சத்தமாக. அது பெரியவருக்கும் கேட்டிருக்கும்.
***


No comments:

Post a Comment