Search This Blog

Saturday, 9 September 2017

பெண் எனப்படுபவள் யாரெனில்..

பேசும்புதியசக்தி மார்ச் 2017ல் வெளியானக் கட்டுரை

சமீபகாலமாக விமரிசையாக கொண்டாடப்பட்டு வரும் பெண்கள் தினம் எங்கள் அலுவலகத்திலும் கொண்டாடப்படுகிறது.. அதே விமரிசையோடு.. அதன் அத்தனை அசட்டுத்தனங்களோடும் கூட.. அன்றைய நாள் முழுக்கவும் கும்மாளமும் குதுாகலமும்தான். ஆண்களுக்கு அங்கு முற்றுமுழுக்க தடா. ஒரே விதமான ஆடை.. (பெண்கள் தினம் செவ்வாய்.. வெள்ளி கிழமைகளில் வந்து விட்டால்.. ‘செவ்வா..வெள்ளி உடுத்தற புடவைல கொஞ்சமாச்சும் சரிகை இருக்கணும்..’)அணிகலன்கள்.. உணவகத்திலிருந்து வரவழைக்கப்பட்ட மதிய உணவு.. போதாக்குறைக்கு போட்டிகள்.. பேட்டிகள் என்றெல்லாம் களைக்கட்டும். உயர் பெண் அலுவலர்கள் தாங்கள் இந்நிலையை அடைவதற்கு காரணமாக இருந்த தகப்பனைக்கும் இன்று குழந்தை பராமரிப்பு.. குடும்ப பராமரிப்பில் அனுசரிப்பாக இருக்கும் கணவனுக்கும் கண்ணோரம் நீர் கோர்க்க தழுதழுப்பான குரலில் நன்றி தெரிவிப்பார்கள். இந்நேரத்தில் பிரச்சனைக்குரிய அலுவலக கோப்புகளை நீட்டினால் உடன் கையெழுத்தாக வாய்ப்புள்ளது. யாரும் இதுவரை முயன்றதாக தெரியவில்லை. சென்ற ஆண்டும் கோலப்போட்டி.. பாட்டுப் போட்டி.. நடனம் என களைக் கட்டியது எங்கள் மினி அரங்கம். அதில் ஒப்பனை போட்டி என்றொரு போட்டி.. அதுதான் பெண்மையின் அதிஉச்சம் என சொல்லலாம். இதில் கலந்துக் கொண்ட பெண் அலுவலர்களுக்கு தனித்தனியே ஒப்பனைப் பெட்டி கொடுக்கப்பட, ஒப்பனை செய்து கொள்ள பெண் அலுவலர்கள் உற்சாகமாக முன் வந்தனர். அரை மணி அனுமதிக்கப்படும் அதற்குள் முகம் மற்றும் தலை அலங்காரம் செய்து விடுவதுதான் போட்டி. கோலப்போட்டியின் கலர் பொடிகள் ரங்கோலியாக  முகத்தில் படிந்ததை மேக்கப்பாக கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது என்று ஜட்ஜம்மா சொன்னது தனிக்கதை. மருந்துக்கும் இலக்கியம்.. வாசிப்பு என்ற தளங்களுக்கு யாரும் நகரவில்லை என்பது விவாதிக்கப்பட வேண்டிய விஷயம். ஒருவேளை கொண்டாட்ட மனப்போக்குக்குள் சிந்தனையான விஷயங்களை அனுமதிக்க வேண்டாம் என்று நேர்மறையாகயும் எண்ணிக் கொள்ளலாம்.

இப்படியாக போட்டிகள் இனிதாக முடிவடைய பரிசு வென்ற பெண் அலுவலர்களுக்கு நான்ஸ்டிக் தவா.. ஹாட் பாக்ஸ்.. பழக்கூடை எனவும் கலந்துக் கொண்ட அனைத்து பெண் அலுவலர்களுக்கும் கோல அச்சு உருளையும் பரிசுகளாக தரப்பட்டன.

இதை அபத்தம் என்பதா அறியாமை என்பதா..? கல்வி, பெண்களுக்கு சுயசார்பு சார்ந்த எந்த விழிப்புணர்வையும் பெரும்பாலும் தரவில்லை என்றே முடிவுக்கு வர வேண்டியிருக்கிறது. கோலம்.. நடனம்.. ஒப்பனை என சமூகம் பெண்களுக்கு ஒதுக்கியிருக்கும் இடத்தை உறுத்தல்களோ.. நெருடல்களோ.. இன்றி பெண்கள் மகிழ்வுடன் ஒப்புக் கொள்வதன் வெளிபாடாக இந்த கொண்டாட்டத்தை வகைப்படுத்தலாம். அல்லது ‘சுயம் மீள்வது’ என்ற பதமே மனதில் எழாவண்ணம் கட்டிக் காக்கும் ஆணாதிக்கத்தின் வெற்றி முகமாகவும் இதைக் கொள்ளலாம்.
இம்மாதிரியான மூளை மழுங்கடிக்கப்படலுக்கு பின்னிருக்கும் ஆணாதிக்க அரசியல் பெண்ணின் உடலை மையப்படுத்தியே கட்டமைக்கப்பட்டுள்ளது. பொதுவாக பெண்ணுக்கு தன்னுடல் மீதான உரிமையை நீக்கம் செய்வதை இதன் ஆரம்பமாக கொள்ளலாம். மதம்.. சாதி.. சடங்கு.. சம்பிரதாயம்.. குடும்பமானம் என்பன போன்ற திரைகள் தன்னுடைய உடல் மீதான உரிமை நீக்கத்தை அவளே உணராவண்ணம் அவளை ஆக்கிரமிக்கிறது. பிறகு இவை பண்பாடாக மாறி அடுத்தடுத்த தலைமுறைகளிடம் ஒப்படைக்கும் பணியையும் அவளிடமே வழங்குகிறது. இதன் பின்னிருக்கும் அரசியல்  உணரப்படாமலேயே, கலாச்சாரம் என்ற பெயரில் சந்ததிகளுக்கு கடத்தப்பட்டு அதன் மீது ஆணாதிக்க சமுதாயம் வலுவாக.. வகையாக கட்டமைக்கப்படுகிறது.. ஆண்களுக்கு தோதாக.  

பூப்பெய்தும்வரை மனுஷி என்பதற்கான நியாயங்கள் பொதுவாக அதிக பழுதின்றி கிடைத்து விடுகிறது. பூப்படைதல் என்பது இயற்கையான உடல் மாற்றம். சம்பந்தப்பட்ட சிறுமிக்கு உடல் அவஸ்தையும் புதிதானதொரு உடல் அசூசையும்.. நிறைய ஆச்சர்யமும்.. கொஞ்சம் பயமும்.. சற்று அருவருப்பையும்  கூட இது ஏற்படுத்துகிறது. அது குறித்த புரிதல்கள் நேரிடையாக அல்லாமல் இலைமறைவு காய்மறையாக அவளுக்கு உணர்த்தப்பட்டிருக்கும்.. பட்டிருக்கலாம். இருப்பினும் அனுபவமாக அதனை அவள் உணரும் போது முதலில் அச்சம்தான் தோன்றும். சமூகம் அதை அப்படியே வெட்கமாக மாற்றி மனையில் துாக்கி உட்கார வைத்து கொண்டாடி விடுகிறது.. திண்டாடவும் செய்யலாம். ‘தாட்டி விட வேண்டிய’ பொறுப்பு.. அளிக்க வேண்டிய பாதுகாப்பு என்பதையெல்லாம் கருத்தில்கொண்டு.

இக்கொண்டாட்டங்கள் சடங்குகளுக்குள் பொதித்து வைக்கப்பட்டு, அந்த சிறுமி தாம்பத்தியத்துக்கான முழு உடல் தகுதி அடைந்து விட்டதை முரசுக் கொட்டி அறிவிக்கிறது. இன்றும் கிராமப்புறங்களில் மாதந்திர ஒதுக்கங்களை ரகசியங்களாக, குறைந்த குரலிலோ.. அல்லது சாடைமாடையாகவோ அக்காக்களோ.. அல்லது தோழிகளோ.. பகிர்ந்துக் கொள்வார்கள். பூப்படையா சிறுமிகள் அப்பாவியாக, என்ன பேசிக்கிறீங்க.. என்று சற்றே கூடிய குரலில் கேட்டு விட்டாலும் வாய் பொத்தி நமுட்டு சிரிப்பையோ.. ச்சீ.. போடீ என்ற வெட்க பாவனையோ வெளிப்படுத்துவார்கள். இந்த கொண்டாட்டங்கள் அந்த நமுட்டு சிரிப்பும் வெட்கமும் பெற தனக்கும் முழு தகுதி கிடைத்து விட்டது என்ற மகிழ்ச்சியை அந்த சிறுமிக்கும் அளிக்கிறது.. அல்லது பாவனைகளின் கதவு அவளுக்கு திறக்கப்படுகிறது.

பூப்புச் சடங்குகளுக்கு பிறகு நடை உடை பாவனைகளில் சிறு கர்வமும் வெட்கமும் வந்து விடுகிறது அவளுக்கு. அவளின் உலகமும் வேறுபட தொடங்குகிறது. இதுவரை நண்பர்களாக இருந்த சிறுவர்களிடம் பார்த்து பழகுமாறு சொல்லி அனுப்புவாள் அம்மா. புரியாது விழிக்கும் சக சிறுவர்களோ “அந்த புள்ள ஏம்மா பேச மாட்டேங்குது..” என்று அம்மாவிடம் ஓட, அதெல்லாம் ஒனக்கு தேவையில்லாதது.. என்ற அம்மாவின் சொல்லில்தான் பெண் மீதான கவர்ச்சி அவனுக்கு தோன்ற தொடங்குகிறது. நகர்புறங்களில் இது கொஞ்சம் நவீனமாக கற்பிக்கப்படுகிறது. ஆனால் உட்கருத்து ஒன்றுதான்.

பாலியல் குறித்த கல்வியோ.. ஆண் பெண் நட்பு குறித்த பார்வையோ தெளிவாக கொண்டிராத தமிழ் சமூகத்தில் இருபாலினருக்குமிடையே கிளர்ச்சியாக திரை விழுகிறது. புரியாத விஷயங்களை சக நண்பர்களிடம் பேசி பேசி களைத்தாலும் தீராத சுகமாக மாறிப் போகிறது. எதிர்பாலினத்தின் மீது கவர்ச்சியை கூட்டுகிறது. நட்பு என்ற பதமொன்று இருவருக்குமிடையே எழ வாய்ப்பற்று போவதால், பேசி பழகும் தருணங்கள் காதல் என்றே அடையாளப்படுகிறது. தாயின் பணிதலும் தகப்பனின் உருட்டலுமான குடும்பச் சூழலில் வளர்ந்து திரண்ட அந்த “ஆண்மகன்“ தன்னை ஒருபடி உயர்வாக எண்ணிக் கொள்ள, பெண்ணோ அவனுக்குள் பாதுகாப்பாக உணர தொடங்கி.. கிட்டத்தட்ட “ஜெனிலியா“வாக தன்னை மாற்றிக் கொள்கிறாள் தனது “காதலனுக்கு“ பிடித்தாற்போல. நீ ஆண்.. உறுதியானவன்.. அழுகைக்கு அப்பாற்பட்டவன்.. ஆளுமை மிகுந்தவன்.. சகலவித அதிகாரங்களும் கொண்டவன்.. என்ற கற்பிதங்களை குடும்பமும் குறிப்பாக தாயும், பிறகு சமூகமும் அவனுக்கு புகட்ட, திமிறி நிமிர்கிறது ஆண் வர்க்கம்.  கூடவே  பெண் அடக்கமானவள்.. அடக்கியாளப்பட வேண்டியள்.. குசினிக்கும் படுக்கையறைக்குமாக படைக்கப்பட்டவள் என்பதை ஆணோடு பெண்ணுக்கும் உணர்த்தி விடுகிறது.

இதில் அவர்கள் கற்றுக் கொண்டிருக்கும் கல்வி எவ்வித தலையீடும் செய்யாது. திருமணம் ஒன்றே பெண்கள் உய்வதற்கான தெளிவான.. சரியான.. வழி என்ற கருத்தியலிலும் கல்விக்கு எந்த விமர்சனமும் இல்லை. இந்த இயல்புகளில் சிறுபிசகுகள் ஏற்பட்டாலும் ஜோதிடம்,. பரிகாரம்.. தோஷம்..  என்பது போன்ற பதாகைகளுடன் பெரு வணிகம் ஒன்று மக்களை குறி வைத்து வீழ்த்துவது வேறு கதை.

திருமணம் முடித்த எந்த பெண்ணுக்கும் குழந்தை பெறுதல் குறித்து சுய கருத்து என்றொன்று இருப்பதாக தெரியவில்லை. அரசாங்கம் கூட டியூபெக்டோமி அறுவை சிகிச்சையில் பெண்ணுடலை வெறும் கேஸ்களாகவே அடையாளப்படுத்துகிறது. அதன் முன் பின் விளைவுகள் முழுக்க சம்பந்தப்பட்ட பெண்ணுக்கே சமர்ப்பிக்கப்படுகிறது. கர்ப்பம் தரித்ததும் திரைப்படங்களில் காட்டுவது போல மயக்கம் அடைந்து யாரும் விழுந்து விடுவதில்லை. சொல்லப்போனால் தலை பிரசவமெனில் பயம்தான் தொண்டை வரை அடைத்துக் கொள்ளும். “அடிக்கள்ளி“ என்ற வசனங்களையெல்லாம் எந்த கணவனும் சொல்வதில்லை. தன் கவனம் முழுவதையும் வயிற்றுக்குழந்தையின் மீது செலுத்தும் கணவன் நல்லவன் எனப்படுகிறான். இது கூட ஒரு மௌன புறக்கணிப்புதான்.

வலி.. அசூசை.. பயம்.. மூடி மூடி வைக்கப்பட்டிருந்த உடல் பிரசவங்களினால் திறக்கப்படும் அவலம்… இவைகளையெல்லாம் தாய்மை என்ற புனித பூச்சுகளால் மூடப்பட்டிருப்பதால், குழந்தையை வாரியெடுத்து கொள்ளும் பெண்மை தனது வாழ்க்கைக்கான அர்த்தம் கிடைக்க பெற்றிருப்பதை முழுமையாக உணர்ந்து கொள்ளும். மிஞ்சியிருக்கும் கொஞ்சநஞ்ச தேடலும்.. சுயசார்பும்.. பெரும்பான்மை பெண்களிடமிருந்து விலகும் தருணமும் இதுதான்.

ஆண் மடிவது வரை அவனுக்கு பெயர் மாறுவதில்லை. பத்தினி.. உத்தமி.. சுமங்கலி.. பதிவிரதை.. வாழவெட்டி.. விதவை.. மலடி.. என்று விதவிதமான பெயர்களை அவளின் நடவடிக்கைகளுக்கேற்ப சமுதாயம் வழங்கிக் கொண்டேயிருக்கும்.  சுயசார்பற்ற பெண்களுக்கு பிரச்சனையில்லை. தகப்பன்.. கணவன்.. மகன்.. என கைமாறிக் கொண்டே நிழலாகவே வாழ்ந்து.. மடிந்து உதாரண புருஷிகளாகி விடுவர். ஒன்றுமில்லையடா.. வேறு ஒன்றுமில்லையடா.. உடைக்குள்ளிருப்பது உங்களை போன்ற உடல்தான்.. அதற்குள்ளிருப்பது தன்னுணர்வு கொண்ட அகம்தான்.. வேறொன்றுமில்லையடா.. என்ற விழிப்புணர்வு பெண்களுக்குள் உறுத்த தொடங்குவது நல்ல ஆரம்பமே. மிக குறைந்த சதவீதத்திலான இவர்கள் தங்களை சுற்றி பிணைக்கப்பட்டிருக்கும் அத்தனை விலங்குகளையும் குடும்ப மானத்தோடு சேர்த்து கழற்றி எறிய முற்படும்போது அன்பு வளையத்துக்குள் அமிழ வைக்கப்படலாம்.. அல்லது மூர்க்கமாக தோற்கடிக்கப்படலாம். அல்லது கொல்லப்படலாம். இவற்றை கடந்து விடுவார்களெனில், தன் மீது விழும் விமர்சனங்களை கடந்து முன்நகர்தலே அவர்களின் வாழ்க்கையாகி விடுகிறது. பெண்கள் தரப்பிலிருந்து கூட இவர்களுக்கு ஆதரவில்லை என்பது வருந்தத்தக்க விஷயமே. கற்பு.. கன்னி போன்ற ஆண்பாலற்ற வார்த்தைகள் எவ்வித கூச்சமுமின்றி சரளமாக சமுதாய வலம் வருகின்றன. பௌதீக பெண்ணை அப்பட்டமாக பிட்டு வைக்க பெண் கவிகள் முனைவதும் இதனால்தான்.

தற்காலத்தில் இருபாலின கல்வி நிலையங்கள் அதிகரித்து வருகின்றன. இது பதின்பருவத்தினருக்கு ஆரோக்கியமான ஒரு புரிதலை அளிப்பதற்கு பதிலாக கவர்ச்சியை கூட்டி விடுகின்றது எனலாம். ஏனெனில் இவர்கள் ஒருவருக்கொருவர் பார்க்கவோ.. பேசவோ அனுமதிக்கப்படுவதில்லை. இயற்கையான இயல்புகள் கூட தண்டனைக்குரிய குற்றங்களாகுவதும் இங்குதான்.

வேலைநிமித்தம் கிடைக்க பெறும் இயல்பான நெருக்கம் தவறான நெறியில் எடுத்தாளப்பட்டு கட்டற்ற பாலியல் சுதந்திரமாக புரிந்துக் கொள்ளப்படுவதும் இத்தவறான கவர்ச்சியினால்தான். இயல்பான தோழமை உணர்வு நீங்கி ஆண் ஆணாகவும் பெண் பெண்ணாக மட்டுமே பார்க்கப்படும் நிலைதான் இன்று வரை நிலவுகிறது. இது கண்டதும் காதல் வசப்படவும், ஒருவர் மீது ஒருவர் ஆக்கிரமிப்பு நிகழ்த்தவும், விரும்பாத பெண்களின் மீது ஆக்ரோஷம் கொள்ளவும், விரும்பப்படாது போகும்போது தன்னையே கொன்றுக் கொள்வதுமாக அடுத்ததொரு பரிணாம நிலைக்கு மாறி விடுகிறது. 

மெத்த படித்த என் தோழி ஒருவர் “புருஷன் இல்லேன்னாலும் மேக்கப் கொறையுதா.. பாரேன் அந்த பொம்பளைக்கு..” என்று மற்றொரு தோழியை பகிரங்க விமர்சனம் செய்தது என்னை துடிக்க வைத்தது. எத்தனை கட்டுப்படுத்தினாலும் அவர் மீதான மரியாதை சரசரவென இறங்கியதை என்னால் தடுக்க முடியவில்லை. பெண் முழுக்க முழுக்க ஆணுக்கான பேக்கேஜ் பண்டமாக வளர்த்தெடுக்கப்படும் எண்ணங்களின் நீட்சி அவருக்குள்ளிருப்பதை அவர் கற்ற கல்வி அவருக்கு எடுத்துரைக்கவில்லை.

குடும்பம்.. சமூகம்.. கல்வி.. இவை  பெண்களுக்கு தார்மீகமாக நியாயம் செய்யாதபட்சத்தில், சட்டத்தின் வழியாக கிடைக்க பெறும் ஆதரவு பெரிய அளவில் எதையும் சாதித்து விடாது. பெண்ணொருவர் தன் நிலை குறித்து உணர்தலே விழிப்பின் முதல் நிலை எனலாம். அகத்தேடல்கள் குறித்து குற்றவுணர்வு கொள்ள தேவையில்லை. சாதி.. மதம்.. சம்பிரதாயம்.. என்ற கட்டுகள் பெண்களை வகையாக கட்டி போடுகின்றன. இந்த பிணையல் அவளை புனிதப்படுத்தப்படுகின்றன.. அல்லது நேர்மாறாக கீழ்மைப்படுத்துகின்றன. இவையிரண்டுமே சரியல்ல என்ற புரிதலை பெண்ணின் அகம் உணர வேண்டும். சக இனமாக கருதாத சமூகத்தில் தனக்கான நியாயங்களுடன் வாழ தளைப்படுவது அவளின் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக இருக்கலாம். அச்சம்.. மடம்.. நாணம்.. பயிர்ப்பு.. போன்ற பசப்புகளை புரிதலோடு அணுகுவது தெளிவின் படிநிலைகளாகலாம். தேவையான நேரங்களில் பெண்ணியம் பேசுவதும், நேர்மாறாக பெண் என்பதை சலுகையாக்கும் இரட்டை மனப்போக்கும் தனக்குள்ளிருந்தால் அதற்குதான் அவள் நாணமுற வேண்டும்.

கிராமப்புறங்களில் ‘புடுவாதக்காரி.. ஆங்காரம் புடிச்சவ.. வீம்புக்கார பொம்பள..’ என்ற வினோத பட்டங்களில் வலம் வந்த அப்பத்தாக்கள்.. அம்மாச்சிகளை தோண்டி துருவினால் அவர்கள் அகவிழிப்பு கொண்டவராக இருப்பது தெரியவரும். பெயரிடத் தெரியாத அவ்வுணர்வின் வீச்சு வீம்பாக வழிந்து.. ஒற்றைச் சொல்லிலோ. அல்லது சிறு செயலிலோ கூட கிளர்ந்தெழுந்து வாழ்க்கை முழுமைக்கும் போதுமானதாகி விடுகிறது. இது அவர்களை வேறுவிதமாக அடையாளப்படுத்தினாலும், அவர்கள் தன்னளவில் அனுபவித்த சுயதிருப்தி அடிநாக்கின் தித்திப்பாக அவர்களை வழிநடத்துவது என்பதே தார்மீகமாக அவர்களின் வாழ்வாகி விடுவதால் எதையும் சுமக்கும் வல்லமை அவர்களுக்கு கிடைத்து விடுகிறது.

ஒரு பெண்பிறவியாக இருப்பதன் துயரம்தான் இந்த அரசியலின் அடிப்படை. மனித சமூகத்தை இரண்டு பகுதிகளாகப் பிரித்து, அதில் ஒன்றை கீழ்நிலைப்படுத்தி, அடக்கி வைத்திருப்பதுதான் உலகின் வரலாறு. இந்த வரலாற்று உண்மையை ஒப்புக் கொண்டால்தான் நாம் தீர்வுகளை நோக்கி செல்ல முடியும். – சிமாமந்தா எங்கோசி அடிச்சி.. தமிழில் - பிரேம்.

உணர்தல் மட்டுமே தெளிவுக்கு வழிவகுக்கும்.

யட்சி என்பது ஒரு ஆளுமையல்ல.. அது ஒரு தருணம்தான்.. எல்லா பெண்ணும் ஒரு தருணத்தில் யட்சியாக ஆகி திரும்பி வருகிறாள் – ஜெயமோகன்.

புரிதல்கள், யட்சிகளாகும் தருணத்தை எட்டி விடும் தொலைவிற்குள்ளேயே வைத்திருக்கிறது.

***

No comments:

Post a Comment