Search This Blog

Tuesday 29 August 2017

அம்சம் பாட்டி

காக்கை சிறகினிலே செப்டம்பர் 2017 இதழில் வெளியான சிறுகதை




”கட்டிலெல்லாம் சொகுசுதான்.. என்னவோ பேர் சொன்னாளே.. இந்த மெத்தைக்கு.. கலாவோ என்னவோ… எங்க சுத்துனாலும் அவ பேர்லதான் நிக்குது.. ஒங்க தாத்தன் நல்ல நெறக்க கலையரசின்னு கூப்டுவாரு.. நா கலரசிம்பேன்..” வாய் நிற்காமல் பேசும் அம்சம் பாட்டிக்கு.

”பாட்டி அது கலால்ல.. கர்லான் மெத்தை..” கலாவின் பேரப்பிள்ளை திருத்தி சொல்லிக் கொடுத்தாலும் அம்சத்துக்கு அது கலாதான். 

”எதோ ஒண்ணுடீ குட்டீ..” கண்களை இடுக்கி முகத்தின் வரிகளுக்கிடையே சிரிப்பாள் அம்சம்பாட்டி. இளமை மீதமிருந்த நாற்பதுகளின் தொடக்கத்தில் பாட்டியான போது கொஞ்சம் நெருடலாகதான் இருந்தது அம்சத்துக்கு. பிறகு ஆணில் இரண்டும் பெண்ணில் இரண்டுமான கலையரசியின் வாரிசுகள் அவளை சூழ்ந்துக் கொள்ள மதிமயங்கிதான் போனாள்.

“என் மருமகேன் தங்கம்.. கலரசிய தாங்கு தாங்குன்னு தாங்குவாரு.. நான் வீட்டோட தங்கீட்டேன்னு ஒத்த வார்த்த சொன்னதில்ல.. யாராது கேட்டாங்கன்னா.. மூச்.. பேச மாட்டாரு.. நவுந்துக்குவாரு.. எனக்கு மட்டும் பொண்ணு வீட்ல இருக்குணும்னு வேண்டுதலா.. கலரசிதான் மொதப்புள்ள பொறந்தப்ப எம்மா.. ஒடனே வா.. புள்ள நெளுநெளுன்னு நளுவுதும்மா.. பயமாருக்குன்னா.. சம்பந்தக்காரம்மாவும் தங்கந்தான்.. ஒங்களுக்கு யாருருக்கா.. இங்கயே தங்கிடுங்களேன்னுச்சு அந்த மவராசி.. தெருவில ஐஸ்காரன் போனா கூட பாட்டீக்கு வேணும்மான்னு கேளும்பாரு என் மருமவேன்..”

தெளிவின்றி விழுந்த வார்த்தைகளில் ஐஸ் என்பது மட்டும் புரிய ”பாட்டீ.. ஐசு வேணுமா..? என்றாள் இந்திரா குனிந்து.

”நீ யாருடீம்மா..? ஐசு என்னாத்துக்கு..?” அம்சம் யோசனையோடு கேட்ட போது அவளின் எண்பத்தேழு வயதும் முகத்தில் வரிக்கோடுகளாக மாறியிருந்தன

இந்திராவுக்கு புரிந்தது. அம்சம்பாட்டிக்கு பழைய நினைப்பு வருவதும்.. பின் எல்லாமே மறந்து போவதும் புதிதல்ல. எப்போதும் எதையாவது புலம்பிக் கொண்டேயிருக்கும் வாய் இன்று மருமகனை பற்றியே பேசிக் கொண்டிருந்தது.

இந்திரா அம்சத்தை பார்த்துக் கொள்ள வந்திருப்பவள். முடிந்தவரை மனசாட்சியோடு நடந்துக் கொள்ள கொள்ள வேண்டும் என்ற எண்ணமிருந்தது அவளிடம்.  ‘ஒத்தரோட கஷ்டத்தில ஒத்தரோட பொழப்பு.. பாட்டி இப்டீங்கவும்தான் பாத்துக்கறதுக்கு என்னை வச்சிருக்காங்க..  மூணு வேளயும் நல்ல சாப்பாடு.. அஞ்சாயிரம் சம்பளம்.. நெழலுக்குள்ளயே இருந்துக்கலாம்..’ என்பதெல்லாம் இந்த வேலையின் சிறப்பம்சங்களாக தோன்றியது அவளுக்கு. கலையரசி மாதத்தில் இரண்டு முறையாவது அம்மாவை பார்க்க வந்து விடுவாள். அவளுக்கும் எழுபதை நெருக்கும் வயதுதான்.. முட்டி வலி வேறு.. வரும்போது மளிகை.. தீனி.. என எதிலும் குறைவிருக்காது. அம்மாவும் மகளும் பேசிக் கொள்ள.. மருமகன் முன்னறையில் டிவி ரிமோட்டோடு உட்கார்ந்துக் கொள்வார்.

“பாவம்.. பாட்டியோட மருமகன் போய் சேர்ந்துட்டாரு.. பாட்டி நல்ல நெனப்புல இருந்தா மகளுக்கு பொறந்த வீட்டு நேத்தியெல்லாம் செஞ்சாவணும்..” மனதில் ஓடிய வரிகளோடு அம்சத்தை ஏறிட்டாள் இந்திரா.

”என்னா அப்டி பாக்கறே..” ஏறிட்ட அம்சத்தின் கண்களில் கோடாக கண்ணீர் வழிந்திருந்தது. பாட்டிக்கு நினைவு வந்து விட்டது. 

”எம் மருமவேன் பெரிய ஆபிசரு.. இருந்தா கூட எம் பொண்ணு பேச்ச மீர்றதில்ல.. அத்தன மருவாதி குடுப்பாரு.. வம்பு.. சண்ட.. சச்சரவு.. ஊம்.. ஒண்ணும் கெடையாது புருசன் பொண்டாட்டிக்குள்ள.. அந்த டீவிய செத்த நிறுத்தும்மா.. காது குறுகுறுங்குது..” பேசிக் கொண்டே இருந்தால் அம்சத்துக்கு வார்த்தைகள் கூடி வரும். அல்லது இந்திராவுக்கு பேச்சு பழகி.. புரிந்துக் கொள்ள ஏதுவாக தோன்றும். 

தொண்ணுாறை நெருங்கும் அம்சம்பாட்டிக்கும் ஐம்பதை நெருங்கும் இந்திராவுக்கும் இருக்கும் இடைவெளியை தொலைக்காட்சிதான் இட்டு நிரப்பிக் கொண்டிருந்தது. அந்தி நெருங்கும்போது மின் விளக்கை போடுவது போல.. தலைக்கு மேலே மின் விசிறி சுற்றுவது போல அந்த தொலைக்காட்சியின் இயல்பும் ஓடிக் கொண்டேயிருப்பதாக இருந்தது.

”டிவி பாக்றீயா.. பாரு.. பாரு.. நா செத்த படுக்கறேன்.. முதுவு வலிக்குது..” மெதுவாக சாய்த்து சாய்த்து தன்னை படுக்க வைத்துக் கொண்டாள் அம்சம். கண்களை மூடி வலது கையை நெற்றி மேல் குறுக்காக வைத்துக் கொண்டாள். சிறு வயதிலிருந்து இது வழக்கம்.

பகல் நேர குட்டித் துாக்கத்தின் போது கலையரசி, அம்சம் நெற்றி மீது வைத்திருக்கும் வலதுகையை பட்டென்று தட்டி விட்டு விளையாடுவாள். சிறுமிக்கு என்ன தெரியும்.. அம்மாவின் கஷ்டம் உட்பட எதுவுமே தெரியாது கலையரசிக்கு. கூட்டுக் குடும்பம் அது. மாமனார்.. மாமியார்.. கொழுந்தன்கள் என எல்லோருமே துணையுடன் இருந்த போது அம்சம் மட்டும்.. அம்மா மட்டும்.. தனியாக.. தனக்கென துணையின்றி.. அல்லது தன்னையே துணையாக பற்றிக் கொண்டிருப்பது கலையரசிக்கு தெரியாது. ஆனால் அம்சத்தின் மாமியாருக்கு மருமகளின் துயரம் புரிந்துதானிருந்தது. கணவனுக்கும் வீட்டுக்கும் தெரியாமல் தாயையும் மகளையும் சினிமாவுக்கு அனுப்பி வைப்பார். தெருமுக்கு வீடு என்பதால் கொல்லை வழியாகவும் வந்து விடலாம். ”எத்தே..” என்ற அம்சத்தின் ஒற்றை குரல் போதுமானதாக இருக்கும் அவருக்கு. கொல்லைக் கதவை திறந்து விட்டு, பேத்தி கலையரசியை துாக்கிக் கொண்டு கொலுசு சத்தம் கேட்காமல், அவள் கால்களிலிருந்து செருப்பை பதமாக உருவி எடுப்பாள். முன்கட்டிலிருக்கும் கணவனுக்கும் கொல்லைக்கும் அதிக துாரம் இருந்தாலும் அதை கலையரசியால் கூட குறைய விட மாட்டார்.

”அது என் மாமியா இல்ல.. கொல தெய்வம்..” வாய் பிதற்றியதில் அம்சத்தின் வலது கை  ஏறி இறங்கியது.

பேச்சரவம் கேட்டு ”எதும் வேணுமா பாட்டி..” என்றாள் இந்திரா.

”ஒண்ணும் வேணாம்.. சாதாரண கவுனு போதும் கலரசிக்கு.. சேட்டு வூட்டு குட்டி மாதிரி வெள்ளவெளுக்க சம்முன்னு இருப்பா..” சம்பந்தாசம்பந்தமில்லாமல் பேசும் அம்சம்பாட்டியை விழித்து பார்த்து விட்டு ”பாட்டீ சாப்பாடு போட்டு தரட்டுமா..” என்றாள் இந்திரா.

”சாப்பாடா.. ம்ம்ம்.. தயிர்ல பெசைஞ்சு குடு..”

பிசைந்த தயிர் சோற்றில் ஸ்பூனை குத்தி நீட்டினாள் இந்திரா.

”மாமியா வீட்ல தெனமும் கறிசோறுதான்.. புருசன் செத்த பொம்பளை வாரி வளச்சு திங்கறதப் பாருன்னு ஊரொலவம் பேசுமுன்னு எங்கத்தே நா மென்னு துப்புன எலும்பக் கூட பொறுக்கீட்டு போவும்.. மவராசி ஒருநா.. என்ன வுட்டுட்டு மொத்தமா போயி சேந்துடுச்சு..”

”சரி வுடுங்க பாட்டீ.. பழசை நெனச்சு என்ன பண்ண போறீங்க.. சாப்டுங்க..” என்றாள் இந்திரா.

”மவராசீ.. எங்கத்தே மவராசீ.. எங்கொலதெய்வம்.. அது இல்லாம இந்த மரிமவ என்ன பண்ணுவான்னு தோணல அதுக்கு.. பொசுக்குன்னு போயிடுச்சு.. கலரசிய வுட்டுட்டு எம் மருமவேன் போன மாரி..”

பாட்டிக்கு நினைவிருக்கிறது.. அதுதான் புலம்புகிறாள். ஆதரவாக கையை பிடித்து ”நீங்க மொதல்ல சாப்டுங்க.. அப்றமா பேசிக்கலாம்..” என்றாள் இந்திரா.

அதை கேட்டுக் கொள்ளும் மனநிலையை கடந்தவள் போல வாய் மூடாமல் பேசினாள் அம்சம்.. ”என் புருசேன் சாவும்போது எனக்கு வெவரமில்லாத வயசு.. கலரசி கைல நாலு மாசம்.. பொட்டப்புள்ளய வச்சிட்டு என்ன பண்ணுவான்னு ஊரு சனமே ஒப்பாரி வக்குதுங்க.. ஆனா எங்கத்தே கலங்கல.. மகன் செத்ததை வுட எம்மருமவள நாசம் பண்ணாதீங்க.. பண்ணாதீங்கன்னுதான் கத்துச்சு..”

”நேத்து புளிமொளகா செய்யுன்னு சொன்னீங்கள்ள பாட்டீ.. நெனப்புருக்கா.. செஞ்சு வச்சிருக்கேன்.. கொஞ்சம் எடுத்து வைக்குட்டுமா..?” என்றாள் இந்திரா பேச்சை மாற்றும் கோணத்தில். 

”ம்ம்.. வையீ..” தட்டை முன்னுக்கு நீட்டினாள் அம்சம்.

கட்டிலை விட்டு அதிகமாக இறங்குவதில்லை. தாயை பார்க்க வரும்போதெல்லாம் கலையரசி கிண்டலடிப்பாள்.. “பெத்தது ஒரே ஒரு பொட்டப்புள்ள.. ஆனா எங்கம்மாவுக்கு ஃபிங்கர் பவுல் குடுத்து வச்சிருக்கு.. எனக்கு எப்படியோ..?” சுகமாக அலுத்துக் கொள்வாள். சுகம்தான்.. கலையரசியின் வாழ்க்கை சுகம்தான். மகன்கள் இருவரும் பெரிய வேலையில் இருக்க, கலையரசியும் அவள் கணவனும் நவீன அடுக்ககத்தில் தனிக்குடித்தனம் இருந்தனர். வார கடைசிகளில் மகன்களோ.. மகள்களோ.. வந்து விடுவதால் தனிமை தெரியாது.. அம்சத்தை பிரித்து அனுப்பும் எண்ணமில்லை கலையரசிக்கு. அம்சம்தான் “ஒங்கப்பாவோட பிஞ்சின் வருது.. எனக்கென்ன ஒண்டியாளுக்கு செலவு.. இனிமப்பட்டாவது நீங்க ரெண்டு பேரும் தனியா இருந்துக்கங்க..” என்று பிடிவாதமாக ஒதுங்கிக் கொண்டாள். அப்போதெல்லாம் இத்தனை தளர்ச்சியில்லை அவளுக்கு.

”ரொம்ப புளிச்சு கெடக்கு.. பச்ச மொளகா இன்னும் ரெண்டு அரிஞ்சு போட்டுருக்கணும்..”

“அங்க மருமவன் பொணமா கெடக்குறாரு.. பாட்டீக்கு நாக்கு ஒணக்கைய பாரு..” முணுமுணுப்பாக பேசினாலும் கடைசி வார்த்தை மட்டும் அம்சம்பாட்டிக்கு விழுந்திருக்க வேண்டும்.

”நாக்குக்கு ஒணக்கையா ஒக்கார வச்சு சோறு போடும் எங்க மாமியா.. யாருக்கு கெடைக்கும் அப்பேருப்பட்ட வாழ்க்க.. பொறந்த வீட்டுக்கு போன்னு ஒரு சொல்லு சொன்னதில்ல.. என்னைக்காவது போவுணும்னா வண்டி கட்டி.. அதுல வய தானியம் பூரா ஏத்தி வுட்டு அனுப்பி வுடும்.. ரெண்டு நாள்ல வந்துடுறீன்னு எம்பது தடவை சொல்லியனுப்பும்..”

கையலம்ப நீர் வேண்டும். உட்கார்ந்தவாறே இந்திராவை எட்டிப் பார்த்தாள். அவள் யாருடனோ அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தாள். “எம்மா.. தண்ணீ தாரீயா..” புலம்பியபடியே இருந்த வாயை சற்றே அடக்கி, சத்தம் கூட்டி இந்திராவை அழைக்க.. ”தோ.. வரன் பாட்டி.. ஒங்க பேத்திதான் லைன்ல.. பேசுறீங்களா..”

அலைபேசியில் பேசுவதற்கு அம்சத்துக்கு பிடிபடுவதில்லை. வார்த்தைகள் படபடப்பாக.. கிரகிக்க முடியாமல் விறுவிறுவென்று ஓடுவதாக எண்ணிக் கொள்வாள். அவற்றை பிடிக்க நினைக்கும் போது பேச்சு முடிந்து விடுவதாக தோன்றும்.

”இல்ல.. பேசுல..” இந்திரா அலைபேசியை துண்டித்து விட்டு அம்சத்திடம் வந்தாள்.

”சாப்டீங்களா பாட்டீ.. தோ.. தண்ணீ எடுத்தாரேன்..”

பாட்டி நல்ல மூடில் இருந்தால் “எதாது பேசும்மா..” என்பாள் இந்திராவிடம்.

வயதானவர்களிடம் என்ன பேசுவது.. அதுவும் கொழகொழப்பாக எதையோ பேசி கொண்டே இருக்கும் அம்சத்திடம் என்ன பேசுவது..?

”சரி.. நா கேக்கறன்.. ஒன் புருசன் எங்க போனான்..?”

”அவன்தான் தொடுப்பு வச்சுட்டு என்ன வுட்டுட்டு ஓடி போனானே.. கழிச்சல்ல போறவன்.. ஒழுங்கா குடும்பம் நடத்தியிருந்தன்னா நானும் இந்நேரம் பேரப்புள்ள எடுத்திருப்பன்..”

இந்திரா பேசுவது தெளிவாக கேட்கும். ”செல்போன்ல பேசறது ஒண்ணும் புரிய மாட்டேங்குது.. காது சோலி முடிஞ்சு போச்சுன்னு நெனக்கேன்.. எதாருந்தாலும் நீ கேட்டு சொல்லு தாயீ..” என்பாள்.

அம்சத்தின் மருமகன் இறந்த தகவலையும் இந்திராதான் கேட்டு சொன்னாள். ”கார் அனுப்பி வைக்கிறேன்.. பாட்டிய அழைச்சிட்டு வந்துருங்க..” என்றாள் அம்சத்தின் பேத்தி. அனுப்பிய காருக்கும்.. அதை தொடர்ந்து வந்த ஆளுக்கும் ஒரே பதிலாக வரவில்லை என்று சொல்லி விட்டாள் அம்சம்.

”அவங்க அப்டிதான்.. ஒரு நேரம் நெனவு தெரியுது.. மத்த நேரம் எதையாவது பேசிக்கிட்டே இருப்பாங்க.. நீங்க போங்க.. நான் ஆட்டோவுல மெதுவா கூட்டீட்டு வந்துடுறேன்..” என்றாள் இந்திரா.

சரிங்க.. நாளைக்கு சாயந்தரமாயிடும் எடுக்கறதுக்கு.. அப்ப கூட்டீட்டு வந்தா போதும்.. சாவு வீட்ல இவங்களுக்கு தோதுபடாது..”.

வாசல் வரை வழியனுப்பி விட்டு தொலைக்காட்சியின் முன்னமர்ந்தாள் இந்திரா. ஆறு மணியிலிருந்து எட்டரை வரை சீரியல் நேரம். ரிமோட்டும் கையுமாக உட்கார்ந்து விட்டால் இரண்டரை மணி நேரம் சுலபமாக பறந்து விடும். இரவு உணவு பெரும்பாலும் இட்லிதான். ஆறு இட்லி ஊற்றி வைத்தால் பாட்டிக்கு இரண்டு.. இவளுக்கு நான்கு.. பூண்டை நசுக்கி மிளகாய் உப்பு சேர்த்து ஒன்றிரண்டாக சாயங்காலமே அரைத்து வைத்திருந்தாள். இரண்டு சொட்டு எண்ணெய் விட்டு கொடுத்தால் பாட்டிக்கு இரண்டு இட்லியும் மளமளவென்று இறங்கி விடும்.

”பாட்டீ.. இட்லி எடுத்துட்டு வரவா.. மணி எட்ரையாயிடுச்சு..” படுக்கையறைக்குள் நுழையும்போதே சிறுநீர் வாடை.. அம்சம்பாட்டி யாருடனோ பேசிக் கொண்டிருந்தாள்.

”அய்யய்யோ.. பாட்டீ.. ஒண்ணுக்கு போய்ட்டீங்களா..?” கவலையும் எரிச்சலுமாக கேட்டாள் இந்திரா. இதுவரை  இம்மாதிரி பிரச்சனையெல்லாம் ஏற்பட்டதில்லை. அறையையொட்டி இருந்தது கழிப்பறை. லேசாக தடுமாறும்.. பட்டும்படாமலும் பிடித்துக் கொண்டால் போதும்..

”போக்குபாதை தெரியல அந்த எமனுக்கு..” யாரிடமோ சொல்லிக் கொண்டிருந்தவளை உலுக்கி ”பாட்டீ.. படுக்கைல ஒண்ணுக்கு போய்ட்டீங்க பாருங்க..” என்றாள் இந்திரா. படுக்கை நனைந்திருந்தது. வீச்சம் நிற்க விடாது விரட்டியது. திடீரென்று போக்கிடம் இன்றி அனாதையாகி விட்டது போலிருந்தது இந்திராவுக்கு.

உடுப்பையும் படுக்கை விரிப்பையும் மாற்றி விடும்போதும் ஒரே புலம்பல்தான் பாட்டிக்கு. ”எல்லாரையும் படுத்தறேன் நானு.. என்ன பண்ண சொல்றே.. எப்டி சாவ வரவழைக்கன்னு தெரியிலயே..”

இந்திராவுக்கு சட்டென பரிதாப உணர்வு தோன்ற.. ”பாட்டீ.. அதெல்லாம் ஒரு செரமமுமில்ல..  நீங்க சாப்டுங்க.. அது போதும்..”

”எனக்கு வேண்டாம்மா..” என்றாள்.

மாமியார் வேண்டாம் என்று சொல்லவே விட மாட்டார். அதிர்ந்து பேசாத சுபாவம் என்றாலும் ஒருமுறை அம்சத்தின் அம்மாவிடம் சற்று குதர்க்கமாக பேசி விட்டார். அப்போது அம்சத்தின் அம்மா நிறைமாத கர்ப்பிணி..  பிரசவ உதவிக்கு மகளை அழைத்து போக வந்திருந்தார்.. ”கொஞ்சம் பாத்து நடந்துக்கலாமில்லதாச்சீ.. பெத்த மவ ஓஞ்சு கெடக்கா ஒண்ணுமில்லாம..” வாய் வரை வந்து விட்ட வார்த்தையை மாமியாரால் நிறுத்த இயலவில்லை. ”எம்மவளை இடுப்பொடிய வேல வாங்குணும்.. அதுக்கு ஆயிரத்தெட்டு நொட்டை பேசறத பாரு..” அம்மாவும் விடவில்லை. இது ஒப்புக்கு பேசும் பேச்சு என்று அவளுக்கும் தெரியும்.

அம்சத்துக்கு புரிந்தது. இருபதை நெருங்காத சிறிய வயதுதான்.. ஆனால் மாமியாரின் தியாகங்கள் எல்லாமே புரிந்தது. கல்யாணம்.. விசேஷங்களுக்கு சென்று விட்டு திரும்பும்போது வீட்டுக்குள் நுழையும் முன்பே தலையிலிருக்கும் பூவை கழற்றி சாக்கடையில் வீசி விட்டு உள்ளே நுழைவதும்.. கண்ணுக்கே தெரியாதமனிக்கு பொட்டிட்டுக் கொள்வதும் அம்சத்துக்கு புரிந்திருந்தது.. இரவு படுக்கைக் கூட மருமகளுடன் புழக்கடையில்தான். கல்யாண அழைப்பிதழை துாக்கிக் கொண்டு வருபவர்கள் கூடவே குங்குமச்சிமிழையும் எடுத்து வந்து விடுவதை தவிர்க்க முடியாது மாமியாரால். அப்போதெல்லாம் அம்சத்தை ஏறெடுக்கும் பார்வை ஏதோ ஒருவித குற்றவுணர்வுடன் தழைந்து தழைந்து தரையை பார்க்கும். இதே பார்வையை மருமகனிடமும் பார்த்திருக்கிறாள். படுக்கையறையிலிருந்து வெளியே வரும்போது.. கலையரசியுடன் நெருக்கமாக பேசும் தருணங்கள்.. என்று எப்போதாவது நேருக்கு நேர் கண்களை பார்க்க நேரிட்டால் அது மாமியாரின் கண்களை போல தழைந்து போயிருப்பதை கண்டிருக்கிறாள் அம்சம்.

பேச்சு சத்தம் ஓய்ந்திருப்பதை கண்டு அறையை எட்டிப் பார்த்தாள் இந்திரா. பாட்டி விழித்திருப்பது தெரிந்தது.

”சாப்டுலேன்னா தெம்பு எப்டி வரும் பாட்டீ.. ஆட்டோவுல ஏறி ஒக்கார வேணாமா..?”

”இட்லி வேணாம்.. மூஞ்சிலடிச்சாப்பல இருக்கு.. கொஞ்சமா ரவா கிண்டி தர்றியா..?”

என்றைக்கும் இப்படி கேட்டதில்லைதான். ஆனால் அது கூட தாங்க முடியாத எரிச்சலாக இருந்தது இந்திராவுக்கு.. ”மருமவனை சாவக் குடுத்துட்டு… எப்டிதான் மனசு வருதோ..” அழுத்தி அழுத்தி கிண்டினாள். மேலுக்கு இரண்டு ஸ்பூன் நெய் ஊற்றினாள். நெய் வாசம் இந்திராவுக்கு பிடிக்கும். ஸ்பூனை போட்டு நீட்ட, பாட்டி கடகடவென்று சாப்பிட்டு முடித்தாள். கலையரசிக்கு, பிரசவத்தின்போது அம்சம்தான் மருத்துவமனையில் துணைக்கிருப்பாள். அப்போதெல்லாம் மருமகன் பெண்டாட்டிக்கும் மாமியாருக்கும் உப்புமாவைதான் கிளறிக் கொண்டு வருவார்.

”குடுத்த வச்ச சாவுதான் ஒங்க மருமகனுக்கு.. படுக்காம புடிக்காம போய் சேந்துட்டாரு..” என்றாள் இந்திரா. பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்தால் துாக்கம் தள்ளிப் போகும். படுக்கையில் சிறுநீர் கழிக்காமல் இருக்க அது உதவும்.

”பாட்டீ.. உங்க கொள்ளுப்பேரன் தாத்தாவ பாக்க அமெரிக்காவுலேர்ந்து பறந்து வந்துட்டுருக்கான்.. நாளைக்கு காலைல வெள்ளன வந்துடுவான்னு ஒங்க பேத்தி சொன்னாங்க.. நாம எப்போ கௌம்பறது..?”

”கொஞ்சம் சுடுதண்ணி வச்சு குடுக்கிறியா.. நாக்கெல்லாம் வெள்ளை படிஞ்சு கெடக்கு..”

சுடுதண்ணியை டம்ளரில் ஊற்றி நீட்டினாள் இந்திரா.

”இன்னும் கொஞ்சம் கொண்டுட்டு வா..”

பொதுவாக இரவு எட்டரை மணிக்கு பிறகு எந்த தொந்தரவும் இருக்காது இந்திராவுக்கு. கலையரசி கூட அந்நேரங்களில் அலைபேசியில் அழைத்து தொந்தரவு கொடுப்பதில்லை.

”இந்தாங்க பாட்டீ..” வெதுவெதுப்பான நீரை குவளையில் ஊற்றிக் கொடுத்தாள்.

”மெதுவா வாங்க.. பாத்ரூமுக்கு கூட்டீட்டுப் போறேன்..” விளம்பர இடைவேளையிலிருந்தது பத்து மணி சீரியல். கொப்பளித்து.. கொப்பளித்து துப்பினாள் அம்சம்பாட்டி. கை நடுக்கத்தில் புடவையின் முன்பகுதி முழுவதும் நனைந்திருந்தது.  புடவையை மாற்றி விட நேரம் பிடிக்கும்.

”சரி.. வாங்க.. படுத்துக்கலாம்.. மணியாச்சு.. காலைல வெள்ளன கௌம்பணும்.. ஏழு மணிக்கெல்லாம் அங்க இருக்க சொன்னாங்க.. ஆறரைக்கு கௌம்பினாதான் சரியாருக்கும்..” பாட்டியை அவசரமாக தள்ளிக் கொண்டு வந்து படுக்கையில் கிடத்தினாள் இந்திரா.

போர்த்திக் கொண்டிருந்தாலும் புடவையின் ஈரம் உடலை குளிர வைத்தது. வாய் புலம்ப தொடங்கியது.

“எங்கப்பாருக்கு கல்யாணமாயி ஏழெட்டு வருசம் கழிச்சுதான் நான் பொறந்தேனாம்.. மண் சோறு தின்னுச்சுங்களாம்.. புள்ளவரம் வேணுமுன்னு தங்கத்தொட்டிலு கட்டுச்சுங்களாம்.. அங்கம் பொரண்டே கோவில வலம் வந்துருக்குதுங்க.. கடசியா கட்டங்கடசியா ஏழு வருசங்கழிச்சு பொறந்தேன் நானு.. அம்சம்.. அம்சம்.. அம்சமாதான் பேரு வச்சாரு அப்பாரு.. வாழ்க்கை கெட்டு போச்சு.. என் கொலத்தெய்வம் இல்லீன்னா இன்னிக்கு நா இல்ல.. கலரசி இல்ல.. இப்பேருபெத்த மருமவேன் இல்ல.. எனக்கு பொறவு ஏழெட்டு புள்ளைங்க.. ஆனா எங்கப்பாருக்கு எம் மேல அவ்ளோ பிரியம்..”

இந்திரா அங்கிருப்பதாக நினைத்துக் கொண்டோ.. அல்லது தொலைக்காட்சியின் ஒலியை இந்திரா பேசுவதாக நினைத்துக் கொண்டோ விடாமல் பேசிக் கொண்டேயிருந்தாள் அம்சம்.

”சாவுறப்ப கூட அம்சோம்.. அம்சோம்னே கூப்டுக்கிட்டே கெடந்தாரு.. நாப்பது கூட முடியில.. கொறை வயசு.. என் ஆயுசு அம்புட்டையும் எம்மவளுக்கு குடுத்துடு.. குடுத்துடுன்னாரு.. கைய எடுத்தெடுத்து கும்புட்டாரு.. அவர பாக்க வந்த சனம் பூரா இதயே சொல்லுச்சுங்க..

”எதாது வேணுமா பாட்டீ.. நா துாங்க போறேன்..” டிவியை அணைத்து விட்டு வந்தாள் இந்திரா.

”ஒண்ணும் வேணாம்மா.. நீ போய் படுத்துக்க தாயீ..”

”காத்து போதுமா.. காத்தாடிய இன்னும் கொஞ்சம் சுத்த வுடுட்டுமா..?” என்றாள் மடக்கு கட்டிலை விரித்தப்படி.

”போதும்.. போதும்.. எல்லாம் போதும்.. ஆயுசு போதும்.. வாந்தது போதும்.. கூட்டீட்டு போன்னு சொல்றேன்.. எங்கப்பன் எமங்கைய புடிச்சுட்டு வர வுட மாட்டேங்கிறாரு.. மருமவேன் போயிட்டாரு.. எப்பேருப்பெத்த மருமவேன்.. கலரசி மாப்ள ஆறடி ஆம்பள.. ஒக்காந்தாலே நிக்கறாப்பல தெரிவாரு.. பொணமா கெடத்துனா கூட கட்டில் நெறஞ்சு கெடப்பாரு.. கலரசி நெத்திப் பொட்டுமாரி.. எமங்கைய எங்கப்பன் புடிச்சுக்கிட்டான்.. எமன், தர்மராசா இல்ல.. அவனுக்கு தர்மம் தெரியில.. தகப்பன் பாசந்தான் பெருசா போச்சு.. அந்த ஆம்பளைய சாய்ச்சுட்டான்.. சாவு வீட்டுக்கு வாரவுக அவ்ளோ பேரும் இந்த கெழவி இன்னுஞ் சாவுலியான்னு என்னை தான் பாப்பாக.. ஒட்டுக்கா என்னைதான் பாப்பக.. நா அங்க போவ மாட்டேன்.. கடவுளே.. கடவுளே.. கலரசி.. கலரசி..”

வெளியில் படுத்திருந்த இந்திராவின் குறட்டையொலியையும் மிஞ்சி ஒலித்தது அம்சம்பாட்டியின் குரல்.


***

No comments:

Post a Comment