Search This Blog

Friday, 31 May 2019

குமுதம் தீராநதி நேர்காணல் ஜுன் 2019

1)         கலைச்செல்வியைப் பற்றிய அறிமுகம் குமுதம் தீராநதி வாசகர்களுக்காக..?


வாசிப்பின் வழியாகவே எழுத்துக்கு வந்தேன். மௌனித்திருப்பதையும், தனிமை நாடுவதையும் நான் விருப்பமாக கொண்டிருப்பதால், ஒருவேளை எழுதுவதை விரும்பியிருக்கலாம். எழுத தோன்றும் நேரங்களிலெல்லாம் எதையாவது எழுதுவதற்கு எனக்கென நோட்டுகளையும் காகிதங்களையும் மட்டுமே அப்போது கைக்கொண்டிருந்தேன். பிறகொரு சமயம், தினமணியில் சிறுகதை போட்டி அறிவிப்பு வெளியாகியிருந்தது.  அது 2012ஆம் வருடம். சம்பிரதாயமாக கரு, சம்பிரதாயமான தலைப்பையிட்டு அனுப்பி வைத்தபோது, அது இரண்டாம் பரிசுக்குரிய கதையாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது.  முதல் கதையே பரிசு பெற்றதும், நான் பிறந்து வளர்ந்த நெய்வேலி நகரில், எனக்கு அதற்கான பரிசு வழங்கப்பட்டதும் கொஞ்சம் நெகிழ்வுதான்.    பின்பு தொடர்ச்சியாக இதுவரை 104 சிறுகதைகள் பிரசுரமாகியுள்ளன.

நாவலை பொறுத்தவரை கல்லுடைக்கும் தொழிலாளிகளின் பிரச்சனைகளை மையப்படுத்திய “சக்கை“ என்பதுதான் என்னுடைய முதல் படைப்பு. அந்நேரம் ஆறேழு சிறுகதைகள் மட்டுமே எழுதியிருந்தேன். நாவல் எழுத தொடங்கியபோது கூட அதன் பிரசுரிப்பு சாத்தியம் குறித்து என்னிடம் எந்த முன்முடிவும் இருந்ததில்லை.  கணினிப்பிரதியாக திரு.வி.நா.சோமசுந்தரம் அவர்களிடம் இதை அளித்திருந்தேன். அவர் அதனை உடனடியாக இரா.காமராசு அவர்களுடன் பகிர்ந்துக் கொள்ள, என்னஏதென்று புரிவதற்கு முன்பே, இந்நாவலை நியூ செஞ்சுரி புத்தக நிலையம் நாவலாக்கிக் கொடுக்க, இவ்வாறாகதான் நான் இலக்கியஉலகிற்குள் அறிமுகமானேன்.

தேடல்களில் தீராதவெளியில், இலக்கியத்தை நிரப்பிக் கொள்ள பிடித்திருக்கிறது.  இயல்பாக எழும் எண்ணங்களின் மீது என் எழுத்தை கட்டமைத்துக் கொள்கிறேன். அதை “இசங்களுக்குள்“ அடக்கி விடவோ, அடங்கி விடவோ விரும்புவதில்லை.  அதேசமயம், எப்படியானவற்றுள் என்னை அடக்கிக் கொள்வது என்ற திட்டமும் என்னிடமில்லை.

2)         தீராநதி: இது வரைவெளி வந்த நாவல்கள்?சிறுகதைகள்..?

சக்கை என்ற எனது முதல் நாவலைத் தொடர்ந்து புனிதம், அற்றைத்திங்கள் என்ற இரு நாவல்களும், வலி, இரவு, சித்ராவுக்கு ஆங்கிலம் தெரியாது, மாயநதி என்ற நான்கு சிறுகதைத் தொகுப்புகளும் இதுவரை வெளியாகியுள்ளன.  பத்திரிக்கைகளிலும், இணைய இதழ்களிலும் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன். தற்போது நாவல் ஒன்றும்  எழுதிக் கொண்டிருக்கிறேன்.

3)         தீராநதி: சக்கை என்கிற முதல் நாவல் வழியே அடிமட்ட தொழிலான கல் தொழிலை மையப்படுத்தி எழுதியிருக்கிறிங்க. நம் சமூக சூழலில் இத்தகு அடிநிலை தொழிலாளர்களின் நிலை மாறியுள்ளது என சொல்ல முடியுமா?

நம் சமூகம் சாதிகளால் ஆனது. மதம் இனம் என எல்லாவற்றிலும் பிளவுப்பட்டுக் கொண்டு போவதே, இந்நாளில், அதற்கான விருப்பமாக இருக்கிறது.  இதனடிப்படையில், இங்கு திட்டமிட்டும் எதேச்சையாகவும் கட்டமைக்கப்படும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அடிநிலை தொழிலாளர்களின் நிலையை மாற்றி விடாமல், அந்நிலைப்பாட்டில் தொடர்ந்து இருத்தி வைக்கவே விரும்புகின்றன.

4)         தீராநதி: எந்த வகை இலக்கியங்கள் மீது ஆர்வம் அதிகம்?

வாசிப்பை பொழுதைபோக்கும் பாணியில் என்னால் அணுக முடிவதில்லை. அது ஒருவித தேடல். தீராத்தவிப்பின் மாறா வெளிப்பாடு. தீவிர இலக்கியங்களையே வாசிக்க பிடித்திருக்கிறது.

5)         தீராநதி: பிரசவவெளி சிறுகதையில், பெண் மொழி வெளிப்பட்டுள்ளதாக பலரும் விமர்சனம் வைத்துள்ள நிலையில் அந்த பிரசவவெளி கதையில் கதையாசிரியர் வெளிப்படுத்திய பெண்ணியம் என்ன?

பிரசவவெளி சிறுகதையில் பெண் மொழி வெளிப்பட்டுள்ளதாக பலரும் விமர்சனம் வைத்துள்ளனர்.. என்று நீங்கள் கூறுவதே எனக்கு செய்திதான். இச்செய்யுளில் பயின்று வரும் கருத்து யாது என்பது போன்ற கருத்துகள் உள்ளபடியே சோர்வளிக்கிறது.

இச்சமுதாயம் முழுக்கவும் ஆண்வயமானது. அது நிறைய இனங்களில், சுலபமானவற்றை தனக்கும், சுலபமல்லாதவற்றை பெண்களுக்குமாக பிரித்து வைத்து “சுமூகத்தீர்ப்பு“ வழங்கியுள்ளது. அவ்வாறான ஒதுக்கீடுகளை, அது மிகவும் தந்திரமாக செயல்படுத்துகிறது. சிலவற்றை அடக்குமுறையாலும், சிலவற்றை அதிகாரத்தாலும், சிலவற்றை அன்பாலும், சிலவற்றில் புனிதமேற்றியும் தம் ஒதுக்கீடுகளுக்கு நியாயம் கற்பிக்கிறது. அப்படியான ஒரு தீர்ப்புதான் தாய்மையின் மீது ஏற்றப்பட்ட புனிதமும். ‘தாய்மையடையாத பெண் முழுமையானவள் அல்ல. தாய்மை பெண்களுக்கு இயற்கை வழங்கியிருக்கும் கொடை, தாய்மை தியாகவடிவானது’ என்றெல்லாம் அதன்மீது செய்யப்படும் செயற்கை ஜாலங்களை கடந்து பிரசவத்துக்கு பின்னிருக்கும் உடல் மற்றும் மனத்தின்பாடுகளை அக்கதை வெளிப்படுத்துகிறது.

6)         தீராநதி: அந்த கதையைப் பொறுத்தவரை பிரசவத்திற்கு பின்பான உறவுகளின் விசாரிப்புகளை பாசம் என நினைத்த சூழலை அப்படியே மாற்றி, அதுவும் பெண்களுக்கான உளவியலை சோதிக்கிறது என்ற நுட்பம் மிகவும் அருமை. குழந்தை கொடுக்க பால் இருக்கு இல்ல. இது வெறும் கரிசனையின் குரலாக மட்டும் இல்லாமல் பெண்ணின் மாண்பை குலைக்கும் கூறாக எப்படி வெளிப்படுத்தினிங்க?

பெண்ணின் மாண்பு என்ற பதமே பொய்யான கற்பிதம் என்கிறேன் நான். குழந்தை பெற்ற பெண், உடல்ரீதியாக கசங்கி போயிருப்பாள். மனரீதியாகவும் அவள் குழம்பிப் போக வாய்ப்புள்ளதாக மருத்துவம் கூறுகிறது. குழந்தை ஈன்றவுடன், அவளின் உடல் உபாதைகள் நின்று விடுவதில்லை. பிரசவவலி என்பது அந்த நேர வலியை மட்டுமல்ல.. பின்தொடரும் வலிகளையும் உட்படுத்தியதுதான். இவ்வுடலையும், சோர்ந்திருக்கும் மனதையும் சுமந்துக் கொண்டு, விருந்தினர்களுக்கு, குறிப்பாக கணவன் வீட்டை சேர்ந்தோருக்கு, புன்னகையாலாவது அவள் பதிலளிக்க வேண்டும். வழுக்கிக் கொண்டோடும் புத்தம்புது சிசுவுக்கு பாலுாட்ட வேண்டும். சொல்லப்போனால், யாதொன்றுமற்று, நம்மை மட்டுமே நம்பிக் கொண்டு வரும் அக்குழந்தையின் மீது  பாசத்தை விட அக்கறையும் பொறுப்புமே முதலில் தோன்றும். உறவுகள் சூழ்ந்திருக்கலாம். ஆனால், அசத்திப்போடும் உடலின் வலியை யாரும் வாங்கி விடுவதில்லை. பலவீனப்பட்ட இந்நிலையை “தாய்மை“ என்ற கட்டுக்குள் அடைக்கும்போது, இந்நோய்மைகளை மறுக்க  பெண்களுக்கென்று ஏதேனும் உரிமை இருப்பதாக எனக்கு தோன்றவில்லை. தாய்மையை சினிமாக்கள் போல வேறேதும் இத்தனை கொச்சைப்படுத்தியதுமில்லை.

7)         தீராநதி: பிரசவம்   பெண்களை குடும்ப அடிமைத்தனத்தில் முடக்கி போடுகிறது என்கிற கூற்றை எழுத்தாளராக எப்படி பார்க்கிறிங்க கலைச்செல்வி?

இயற்கை அப்படியான ஒரு அமைப்பை பெண்களுக்கு அளித்திருப்பது பெரும் பிழையுமல்ல. அதே நேரம் கொண்டாட்டமுமல்ல. ஆனால், தாய்மையின் பொறுப்புகள் பெண்களை முடக்கிப்போடுவதென்னவோ உண்மைதான்.

8)         தீராநதி: பெண்களின் வாழ்க்கை வலிகளை, போராட்டங்களை ஆண் எழுத்தாளர்களால் பெண் மன நிலையோடு எழுதி விட முடியுமா?

இந்த கேள்வி நான் பெண் என்பதால் எழுப்பப்பட்டிருக்கலாம்.  சட்டென்று நிகழ்ந்து முடிந்து விடும் நிலையற்ற வாழ்வில் வலி என்பதை பெண்களோடு மட்டும் சம்பந்தப்படுத்தி பார்க்க வேண்டியதில்லை. உலகம் பெண்களை சுற்றி மட்டுமே சுழலுவதுமில்லை. சொல்லப்போனால், வலி, போராட்டம் என்பது அவரவர் கொள்ளும் மனோபாவத்தை பொறுத்ததே.
என்னை பொறுத்தவரை எழுதுவதற்கான எத்தனையோ வெளிகள் இன்னும் தொடப்படாமலேயே காத்துக்கிடக்கின்றன. பெண் எழுதுகிறார் என்றால், அவர் பெண்களை குறித்தே எழுத வேண்டும் என்ற சமுதாயத்தின் பொதுபுத்தியை கடந்து விடவே விரும்புகிறேன். 
இலக்கியத்தை பொறுத்தவரை, உணர்வுரீதியாக உள்வாங்க முடிந்த எவரும் எதையும் எழுதலாம் என்றாலும், அனுபவரீதியாக, நீங்கள் குறிப்பிடும் வலிகளை குறித்து, பெண்கள் எழுதுவது ஒரு நுாலிழையளவுக்கு நுணுக்கமானதாக இருக்கலாம்.

9)         தீராநதி: ஆண் எழுத்து, பெண் எழுத்து என்கிற வேறுபாடு தேவை தானா?

நிச்சயமாக தேவையில்லை. ஆனால், ஆண்கள் இதை துாக்கி சுமப்பது எரிச்சலுாட்டுகிறது. அவர்கள் யார் சட்டாம்பிள்ளைகள் என்றாலும், சமுதாயம் அவர்களையும் உள்ளடக்கியதுதானே? இலக்கியத்தை அவர்கள் பொதுமைப்படுத்துவதில்லை. படித்த நுால்களின் பட்டியல், எழுத்தாளர்களின் பட்டியல் என்று ஆளுக்காள் சமுதாய வலைத்தளங்கள் உட்பட கிடைக்குமிடமெங்கும் பட்டியலிட்டு பகிர்ந்து விடுகிறார்கள். தீவிரமாக எழுதித்தள்ளும் ஒருவர், என்னுடைய சிறுகதைத்தொகுப்பொன்றை தான் வாங்கியிருப்பதாகவும், அதை அவரது மனைவி வாசித்து விட்டு அது குறித்து என்னிடம் பகிர்ந்துக் கொள்வார் என்றும் சொன்னார். அதாவது பெண்ணெழுத்து, ஆண்கள் வாசிக்க தகுதியற்றது என்ற முன்முடிவிலேயே அவர் இயக்கப்பட்டிருக்கிறார். தமிழ்ச்சூழலில், எழுத்தாளர்கள், விமர்சகர்களாகவும் ஆகி விடுவதுண்டு. இவர்கள் சுட்டும் எழுத்துக்காரர்கள், எவ்வகையிலாவது அவர் குழுவைச் சார்ந்தவராகவோ அல்லது அவருக்கு வேண்டப்பட்டவராகவோ இருந்து விடவே அதிகம் வாய்ப்புள்ளது.  பெண் எழுத்து என்றாலும், பெண்ணாக இருப்பினும்.. இப்படியான அடைமொழிகளோடு அவர்களிடமிருந்து எழும் குரல்களை நான் வெறுக்கவே செய்கிறேன். இலக்கியம் ஒரு சார்புடையதன்று. அது எல்லா தளங்களிலும் இயங்க வேண்டியுள்ளது. அனாவசியமான கூச்சலும் அவசியமற்ற ஆரவாரமுமாக படைப்பாளிகள் இட்டுக் கொள்ளும் சண்டைகள் அவர்களின் படைப்பின் மீதான மதிப்பை குறைத்து விடுகிறது.

10)      தீராநதி: உடல்மொழியை தான் பெண்கள் தூக்கி எழுதுகிறார்கள் என்கிற விமர்சனத்தை என்ன சொல்லுறிங்க?

ஓரளவுக்கு ஒப்புக் கொள்கிறேன். அதேநேரம் தேவைதான் அளிப்பை நிர்ணயம் செய்கிறது என்பதையும் மறந்து விடக்கூடாது. பெண் தன் உடலை துறப்பது என்பது அவளுக்கு முன்னிறுக்கும் சவால். அதை எழுதி கடக்க எண்ணியதிலும் பிழையில்லை. அதேநேரம் இவை குறைந்து வருவதும் ஆறுதல்தான்.

11)      தீராநதி: கல்வித்தரத்திலும், பொருளாதார நிலையிலும் மேம்பட்ட பெண்கள் தற்கொலை முயற்சிக்கு போவதற்கான காரணம்?

தற்கொலை என்பதை பால்பேதத்தில் அணுக முடியாது. படித்த பெண்கள் தற்கொலை செய்துக்கொள்ள சமுதாயமும் முக்கிய காரணமே. கல்வியில் ஆணை விட உயர உயர செல்லும் பெண், திருமணம் என்ற அமைப்பின் மூலம் பலவீனப்பட்டுப் போகிறாள். பணிச்சூழலில், துடிப்பும் அறிவுமான பெண்களை, ஒழுக்க வளையத்துக்குள் அளவீடு செய்து பலவீனப்படுத்தும் நிகழ்வுகள் நிகழாத இடம் ஏதுமில்லை. நுாற்றாண்டுகளாக அடைப்பட்டிருந்த வெளி, சட்டென்று நுழையும் காற்றிலும் வெளிச்சத்திலும் தடுமாறி போவது இயல்பே. அத்தடுமாற்றத்தை தங்களின் பலவீனமாக உணரும் பெண்கள் தற்கொலையை தீர்வாக எண்ணிக் கொள்கிறார்கள் என்று கருதுகிறேன். அதேநேரம் இத்தடுமாற்றத்தின் இடைவெளிக்குள் அடிப்படைவாதம் புகுந்து விடும் என்பதை பெண்கள் மறந்து விடக்கூடாது.

12)      தீராநதி:விழிப்புணர்வுகளும், பகுத்தறிவுகளும் அதிகமாக வெளிப்படும் இக்கால சூழலில் தான் பெண்களுக்கான வன்முறைகளும் அதிகமாக நடந்தேறிக் கொண்டிருக்கிறது. இதற்கான காரணம் என்னவென தோன்றுகிறது?

மீண்டும் அந்த கற்பிதத்திற்கே வருகிறேன். விழிப்புணர்வு என்பது குறித்து சமுதாயத்தில் நிலவும் கருத்து சரியான புரிதலுடன் இருப்பதாக நான் கருதவில்லை. இது மிகவும் பிற்போக்கான, அடிப்படைவாதத்தையே முன்னெடுக்கிறது. உடல் குறித்த விழிப்பு, கற்பை பேணுவதில்தான் கரை சேருகிறது. ஆண் பிள்ளைகளை மதர்த்தப்போக்குடன் வளர்த்தெடுப்பதில், பெண்களின் பங்களிப்பு ஆண்களை விட அதிகமே. தாயோ, தமக்கையோ, தங்கையோ, காதலியோ, மனைவியோ, மகளோ யாராக இருப்பினும், பெண் உறவுகள் மீது ஆண் கொள்ளும் “பாதுகாத்தருளும்“ உணர்வின் நீட்சியே வன்முறைக்கானதும் கூட.  அறம்சார்ந்த விழுமியங்கள் சரிந்து வருவதில், பெண்களை மீண்டும் இருளறைக்கு அனுப்பி விடும் அபாயமும் கலந்திருக்கிறது.

13)      தீராநதி: திருவண்ணாமலையில் என் சிறகுகள் என்கிற பெண் எழுத்தாளர்களர்களின் கூட்டமைப்பு நிகழ்வு நடந்த போது, எழுத்தாளர் பரமேஸ்வரியோடு எழுத்தாளர் ஜெயமோகனின் படைப்புகள் பற்றி விமர்சனம் நிகழ்த்திய போதே ஜெயமோகனின் எழுத்து ப்ரியை என்பது உணர முடிந்தது. ஜெயமோகனின் எந்த படைப்பு கலைச்செல்வியை தொட்டது?

இலக்கியம் என்பது ஒரு அறிவார்ந்த தேடலும்தான். நம் தேடலோடு ஒத்திருக்கும் படைப்புகள் நம் மனதை நிறைப்பது ஒன்றும் புதிதல்ல. அவரின் “காடு“ வழியாகவே அவரை கண்டடைந்தேன். விரிந்து பரந்திருக்கும் அவரின் படைப்புவெளியில் நிறையவே என்னை கவர்ந்திருக்கின்றன.

தீராநதி: பெண் எழுத்தாளர்களின் படைப்புகளை கண்டமேனிக்கு விமர்சிக்கும் படைப்பாளர், பெண் எழுத்தாளர்களை ஜெயமோகன் மதிப்பதேயில்லை என்கிற விமர்சனம் குறித்து உங்கள் கருத்து?

ஆழமான நுட்பமான பெண் படைப்பாளுமைகளை பாராட்டவும் அவர் தயங்கியதில்லை.  ஆஷாபூர்ணாதேவியையும் குர்ரதுலைன்ஹைதரையும் அவர் வழியாகவே நான் கண்டடைந்தேன். மஹாசுவேதாதேவி மற்றும் நம் அம்பையின் சில படைப்புகளிலும் பெண்ணெழுத்துகளிலும் பிரச்சாரத்தொனி தென்படுவதாக அவர் விமர்சித்துள்ளார்.  ஒடுக்கப்படும் வெளிகளை, வெளிச்சத்திலிடுவது என்பது காலத்தின் தேவை என்பதை யாரும் மறுக்கவியலாது.

14)      தீராநதி: சுதந்திரமான எழுத்தை வெளிப்படுத்துகிறேன் என சொல்ல முடியுமா?

தடைகள் இல்லாமலில்லை. ஆனால் இப்போதைக்கு, ஒரளவு சுதந்திரமாக செயல்படுகிறேன் என்றே கருதுகிறேன். 

15)      தீராநதி: இலக்கிய உலகில் பெண்களுக்கான பங்களிப்பு எப்படி இருக்கிறது என்பதை கலந்துக்கொண்ட நிகழ்வுகளிலிருந்து சொல்ல முடியுமா?

வாசிப்புப் போதாமை. அதிலிருந்துதான் எழுத்திற்கான போதாமை ஏற்படுவதாக தோன்றுகிறது. இங்கு இலக்கியம் என்பது குறுங்குழுக்களுக்குள் குறுகிக்கிடக்கிறது. குறுங்குழுவாசிகள் ஒருவரையொருவர் புகழ்ந்துத் தள்ளிக் கொள்கின்றனர்.  தெளிவான தீர்க்கமான விமர்சனம் என்ற ஏதொன்றும் பெரும்பாலும் இங்கிருப்பதாக தோன்றவில்லை. வேண்டப்பட்டவரின் படைப்பு, வேண்டப்படாத குழுவினை சேர்ந்த படைப்பு என்பதாகவே பெரும்பாலும் இங்குள்ள விமர்சனப்போக்கு அமைந்துள்ளது. சுயதம்பட்டங்கள், சுய விளம்பரங்கள் இவற்றின் வழியே தங்களை முன்னிறுத்துவதை விட, படைப்பின் வழியே முன்னிறுத்திக் கொள்ளலாம். இது பெண்களுக்கும் பொருந்தும்.

தீராநதி: கலைச்செல்வியின் படைப்புகள் எவையெல்லாம் கல்லூரித்தளங்களில் பாடப்புத்தகமாக அமைந்திருக்கிறது?

நேரு மெமோரியல் கல்லுாரி மற்றும் பிஷப்ஹீபர் கல்லுாரி, திருச்சியில் என் நாவல்கள் பொதுத்தமிழ் பிரிவில் பாடமாக்கப்பட்டுள்ளது.

தீராநதி: தற்போது வெளியான அற்றைத்திங்கள் நாவலின் மையம்?

வளரும் நாடுகளில் எதேச்சையாகவும், திட்டமிட்டும் அழிக்கப்படும் காட்டு வளங்களின் மீதிருக்கும் குறைந்தப்பட்ச அக்கறை கூட அங்கு வாழும் பழங்குடியினரின் மீது காட்டாத அதிகாரத்தின் அலட்சியத்தை மையப்படுத்துகிறது “அற்றைத்திங்கள்“.

தீராநதி: இலக்கியம் கொடுத்த விருதுகள்?

எனது “சக்கை“ நாவலுக்கு ‘தமிழ்நாடு கலைஇலக்கிய பெருமன்ற விருதும்’, ‘திருப்பூர் தமிழ்ச்சங்க விருதும்’ கிடைத்தது. வலி சிறுகதைத்தொகுப்புக்கு ‘கவிதை உறவு’ பரிசும், இரவு சிறுகதைத்தொகுப்புக்கு ‘பாரதி கலை இலக்கிய பேரவை’ பரிசும், ‘நாங்கள் இலக்கியகம் அமைப்பின்’ பரிசும் கிடைத்தது. புனிதம் நாவலுக்கு ‘புதுக்கோட்டை புத்தகக்கண்காட்சி விருது’ கிடைக்கப்பெற்றது. தற்போது வெளியான மாயநதி தொகுப்புக்கு “தாழ்வாரம்“ அமைப்பு சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கான விருதளித்தது. கணையாழியில் சிறந்த சிறுகதைக்கான விருது, திருப்பூர் அரிமா சங்க விருது போன்ற விருதுகளோடு 2017 ஆண்டுக்கான இலக்கிய சிந்தனை விருதை கணையாழியில் வெளியான எனது சிறுகதை “அலங்காரம்“ பெற்றது. போடிமாலன் பரிசுப்போட்டியில் தொடர்ந்து மூன்றாண்டுகள் என் சிறுகதை முதல் மற்றும் இரண்டாவது பரிசுகளை வென்றது. கிழக்கு பதிப்பகம் நடத்திய சிறுகதைப் போட்டியில் இரண்டாம் பரிசு, தினமணி நெய்வேலி புத்தகக்கண்காட்சி 2012 இரண்டாம் பரிசு, தினமணி நெய்வேலி புத்தகக்கண்காட்சி 2013ல் முதல் பரிசு, சிகரம் பரிசுப்போட்டியில் முதல் பரிசு மற்றும் பற்பல சிறுகதைக்களுக்காக பல பரிசுகளையும் பெற்றிருக்கிறேன்.

***

Tuesday, 28 May 2019

தடம்

அதன் எல்லைகள் நீண்டு
கூர்மையான ஒற்றைக் கோடுகளாகின்றன
அதன் கற்றைகள் 
வீச்சம் கொண்டு பரவுகின்றன
ஆம். ஆணவத்தின் குணமே அதுதான்
அவை ஆளற்ற வெளி என்றுணராது
வெற்றிக் களிப்போடு முட்டி மோதுகின்றன
ஆனால் ஒன்று மட்டும் சொல்வேன்
அதன் தடம் வேறெங்கும் பதியவில்லை.

Sunday, 19 May 2019

உலகின் மிக நீண்ட கழிவறை - அகரமுதல்வனின் குறுநாவல்கள் குறித்து.

19.5.2019 விழாவில்..
உணவும் நீருமின்றி கைகால்களை இழந்து பங்கருக்குள் பதுங்கிக் கிடந்தவர்கள்வெளியே செல்ல முயற்சித்து ஷெல் குண்டுகள் அடித்து இறந்தவர்கள்,இறந்தவர்களை அப்படியே விட்டுவிட்டு நகர்ந்து சென்ற மக்கள்,பெரும் ஓசையுடன் நுழையும் பிரம்மாண்ட ராணுவ டாங்கிகளில் நசுங்கி அழியும் சடலங்கள், பசிக்கு கதறிய குழந்தைகள்,No fire Zone களில் ஒரு குவளை கஞ்சிக்காக நீண்ட வரிசையில் காத்துக் கிடந்தவர்கள்,மருத்துவ உதவியேதுமின்றி காயமும் வலியுமாக இறந்தவர்கள்,ஒரு குவளை அரிசிக்காக தேடி ஓடிய போது முதுகுக்கு பின்புறமாக வானத்திலிருந்து விழுந்த குண்டுகள்,மருத்துவமனைகளாக மாற்றப்பட்ட மர நிழல்கள்,பிளாஸ்டிக் கவர்களில் வைத்து ஏற்றப்பட்ட ரத்தம்,உறவுகளை தொலைத்த இளவல்கள்,காயம்பட்டு இறந்தவர்கள், மருத்துவமனைகளில் மருந்தின்றி இறந்தவர்கள், கொத்துக் கொத்தாய் குண்டுகள் பாய்ந்து இறந்தவர்கள்,இவை அனைத்திற்கும் மத்தியில் நடந்தவை அனைத்தையும் புகைப்படங்கள் எடுத்து ஆவணப்படுத்திக் கொண்டிருந்த ஆவணக் குழு,
பத்தாண்டுகளுக்கு முன் இந்நாளின் அடையாளங்கள் இவை.

Wednesday, 15 May 2019

மாயநதி விமர்சனக்கூட்டம் 12.5.2019



எதுவுமேயின்றி என்ன வேண்டுமானாலும் பேசி விட முடிகிறது ஆர்ஜேக்களுக்கு. அட.. கூட்டம் கூட தேவையில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்..


பேராசிரியர்கள் எல்லோரும் ஒன்றுபோல் இருப்பதில்லை. படைப்பில் பயின்று வரும் திரண்ட கருத்தையெல்லாம் இவர் கேட்கவில்லை. படைப்பின் மீதான தெளிவான புரிதலும், தீர்க்கமான மொழியுமாக உரையாடினார். 

நிகழ்வை சுஜாதாசுந்தர் ஒருங்கிணைத்தார்.



Saturday, 11 May 2019

அன்னையர்

அன்னை என்ற வார்த்தையை விட அம்மா, அம்மை என்ற வார்த்தைகள் கூடுதல் பிணைப்புக்குள் இட்டுச் செல்கிறது. பெண்களுக்கென இயற்கை ஒதுக்கியிருக்கும் இச்செயல் பிழையுமன்று. கொண்டாட்டமுமன்று. இயல்பை, இயல்பாக்கவியலாத தருணங்களில் அன்னைகள் தனக்கென ஒரு உரு பெற்றுக் கொள்வதாக தோன்றுகிறது. தாய்மை மீது பொதிய வைக்கப்பட்ட “புனிதக்கட்டை“ அவிழ்ப்பதல்ல இப்பதிவின் நோக்கம்.அன்னையின் தன்மைகளை சற்றே விரிக்கத் தோன்றுகிறது. இதில் பாசம் என்பதை சற்று விலக்கி நிறுத்திக் கொண்டு அலசலாம்.
தாய்மையை கடமைகளுக்குள் நிறுத்தி அசராது உழைக்கும் பெண்கள் ஒருவகை. கற்பனைக்கெட்டாத தியாகமும் தன்னலமின்மையும் இதன் கூறுகள். ஆனால் இவையேதும் அவர்கள் உணர்வதில்லை. துாசிவரும்போது கண்களை இறுக்கிக் கொள்வது போன்று இதை அனிச்சை செயலாகவே கருதிக் கொள்கிறார்கள்.
சிலரால் இதை பிரித்தறிய முடியும். தம் மக்களுக்கு, தாயாக தாம் செய்தவற்றை உரிய நேரங்களில் பட்டியிலிடலாம். தனக்குவதாது என்ற தெரிந்த பிறகு, சிலபல சாபங்களால் நிறைக்கலாம். உறவில்லை என்று விலகலாம். ஆனால் பெரும்பாலும் இவையெல்லாம் மேம்போக்கான செயல்பாடுகளாக இருக்கும். தம் மக்களுக்கு பிரச்சனையென்று வரும்போது, அவர்களால் வாளாவிருக்க முடியாது. மறைந்தும் ஒளிந்துமாக அவர்களின் கருத்தும் கவனமும், பெற்ற மக்களையே சுற்றி வருகிறது. சண்டையும் சச்சரவும் மேம்போக்காக சுற்றினாலும், பாசமும் அக்கறையுமான உள்ளுணர்வு ஒன்று ஓடிக் கொண்டிருக்கும்.
இன்னும் சிலதாய்மார்கள் இருக்கிறார்கள். எல்லாவற்றையும் ஒரு கணக்கிற்குள் அடக்கி கொள்ள முடிகிறது அவர்களால். தாய்மை இங்கு ஆயுதமாக பயன்படும். குடும்பத்தில் தன் முக்கியத்துவத்தை உருவாக்க அல்லது அதிகப்படுத்திக் கொள்ள தாய்மை ஒரு துருப்புச்சீட்டு அவர்களுக்கு. பாசம், அக்கறை என்ற போர்வைக்குள் சுயநலம் என்ற உணர்வை ஒளித்துக் கொள்வர். குழந்தையிலிருந்தே, தாய்மையின் “பேருரு“ குறித்த அதிகப்பட்ச போதனைக்கு ஆளாகும் அக்குழந்தைகள், பிற்பாடு “அம்மாக்கோண்டுகளாக“ மாறி விடுவர். அதற்காக, அம்மாக்கோண்டுகளின் தாய்மார்கள் ஒட்டுமொத்தமாக இந்த வகைமைக்குள் அடங்கி விடுவதில்லை.
அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள்.

Tuesday, 7 May 2019

தி.ஜா.வின் பாயாசம்


சாமநாதுவின் அண்ணன் மகன் சுப்பராயன். நல்ல புத்திசாலி. படிப்பு ஏறினாலும் செலவழிக்க பணமின்றி, படிப்பு முடிவதற்குள்ளாகவே ஊருக்கு அழைத்து வந்து விடுகின்றனர். அதேநேரம் சுப்பராயனுக்கு செய்தொழில் வசப்பட்டு விடுகிறது. சாமநாதுவின் மனைவி வாலாம்பாள். அவர்களுக்கு நாலைந்து பிள்ளைகள் உண்டு. ஆனால் யாரும் சுகப்படவில்லை. சுப்பராயனின் வாரிசுகளை கொண்டு கொடுத்த வகையில் ஏற்படும் சொந்தங்கள்.. அவரின் செல்வாக்கு.. அதனால் ஊருக்கு கிடைக்கும் நன்மைகள் எல்லாவற்றையுமே வன்மத்தோடு பார்க்கும் சாமநாதுவின் மனதை நெருக்கமாக அறிந்துக் கொள்ளும் வாலாம்பாள் கிட்டத்தட்ட அவரின் மனச்சாட்சியாக பேசுகிறாள். அவருக்கே கூட தன்னுடைய இயல்பு பிடிக்காமல்தான் போகிறது. அதனால்தான் இறந்துபோன மனைவியை ராட்சச முண்ட.. சாவற வரைக்கும் நியாய புத்தி.. தர்ம புத்தி.. என்று திட்டுகிறார். சுப்பராயனின் மூன்றாவது மகளோடு ஒரே பந்தலில் திருமணமான தனது முப்பத்தோறு வயது மகளின் நார்மடிக்கட்டுக்குள்ளிருக்கும் இளம் முகம்.. அண்ணன் மகன் வீட்டு திருமணத்தில் எடுபிடியாக அலையும் மகனி்ன் நிலை என குமையும் மனம், கேட்பாரின்றி தடுப்பாறின்றி பாயாச கொப்பரைக்கு முன் வந்து நிற்கிறது.

கடந்தவைகளும் நிகழ்பவைகளுமாக கதை தன்னியில்பாக நகர்கிறது. ஒரு சொல்லோ சம்பவமோ மிகையில்லை. இசைக்கச்சேரி தொடங்கி விட்டது. சங்கதிகளில் பிசகில்லை. இத்தனைக்கும் கச்சேரி உச்சஸ்தாயிலேயே நடக்கிறது. நாம் கண்களை மூடி லயித்துக் கிடக்கிறோம். ஜதிகளில் பிசகில்லை. உச்சஸ்தாயிலேயே குரல் தன்னியில்பாக மாயாஜாலம் நிகழ்த்துகிறது, சுருதி பிறழவில்லை. இயல்பு.. எல்லாமே இயல்பு. அடக்கவியலாத உச்சக்கட்டத்தில் பொங்கி பிரவகித்து ஓடுகிறது வன்மம். முள்ளாய் குத்தும் பார்வையை எதிர்க்கொள்ளும் திராணியின்றி, செயலுக்கு நியாயம் கற்பிக்க, மனம் பறந்தலைகிறது. நாயன இசை வாலாம்பாளின் குரலையொத்தது. பௌதீகமாக நடமாடிக் கொண்டிருந்த வாலாம்பாளிடம் இம்மாதிரியான ஒரு சந்தர்ப்பத்தில் நீ என் ஆம்படையாளா.. அண்ணனோட ஆம்படையாளான்னு தெரியில.. என்பார் சாமநாது. ஸ்துாலமாகி போன சரீரத்தின் குரல் நாயனமாக ஒலிக்கும்போது அவரால் எதுவும் செய்து விட முடியாது.

அம்பையின் கதைகள்


பொதுவெளியில் பெண்களின் புழக்கம் வெகுவாக குறைந்திருந்த காலக்கட்டம் அது. கல்வி பயில்வதற்காகவும் பொருளீட்டவும் வெளிக்கிளம்பும் பெண்கள் கூட, பொதுவாக, இருக்கும் சட்டகத்துக்குள் எவ்வித முரண்களுமின்றி தங்களை பொருத்திக் கொள்ளவே விரும்பினர். இலக்கியத்தை பொறுத்தவரை, பரவலாக்கப்பட்ட கல்வியால், பெண்களுக்கு வாசிக்கவும் எழுதவும் வாய்ப்பு கிடைத்தது. சமூகத்தில் அவற்றுக்கு கிடைத்த அங்கீகாரம், எழுபதுகளில் பெண்ணெழுத்துகள் பெருகி வர காரணமாகின. ஆனால், அவை ஆண் மைய சமூகத்தின் பொது விதிகளை மீறாமல் அல்லது, ததும்பும் தன்மை கூட அற்று, விளிம்புகளுக்குள்ளேயே அடங்கியிருந்தன. அதன்பொருட்டே இத்தகைய அங்கீகாரம் என்பதை உணராத அவ்வெழுத்துகள், சமூகம் தம்மை நோக்கி வலியுறுத்துபவற்றையே தாமும் படியெடுக்கிறோம் என்ற தன்னுணர்வற்று நீண்டுக் கொண்டேயிருந்தன. விதிவிலக்குக்கான படைப்புகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக தலைக்காட்டினாலும், பெரிதான வேறுபாடுகளற்று “இயக்கப்படும்“ படைப்புகளாகவே அவை நீடித்தன. போல சொல்லும் முறை, பழக்கமான சொல்லாடல்கள், கற்பிதமான உறவுநிலைப்பாடுகள் என்ற தளங்களில் அவை ஜல்லியடித்தன.

மறுபுறம், ”நீ சுத்தமாயிட்டேடி... உன் மேலே கொட்டினேனே அது ஜலமில்லேடி... நெருப்புன்னு நெனைச்சுக்கோ. உன் மேலே இப்போ கறையே இல்லே..“ என்ற ஜெயகாந்தனின் “அக்னிபிரவேசத்தின்“ புரட்சியை இலக்கிய உலகம் கொண்டாடித் தீர்த்தது.

ஐசக் டினேசன் – The Blank Page


மௌனச்சவால்

கதை போர்ச்சுகல்லில் நடக்கிறது. அங்கிருக்கும் கன்னிமடத்தை சார்ந்த கன்னியாஸ்த்ரிகள் ஆகச்சிறந்த சணலை சாகுபடி செய்பவர்கள்.  அச்சணலைக் கொண்டு செய்யப்படும் மிருதுவான லினன் துணி, அரசக்குடும்பத்தின் இளவரசிகளுக்கு, அவர்களின் மணஇரவுக்கான படுக்கைவிரிப்புகளாக பயன்படுவதை அம்மடம்  ஒரு மகத்தான நிகழ்வாக கருதிக் கொள்கிறது. 

உபயோகம் முடிந்த மறுநாளின் காலைப்பொழுதில், அரண்மனையின் முக்கிய பணியாளர் அந்த இரவின் விரிப்பை உப்பரிகையிலிருந்து தொங்க விட்டு “இப்பெண்ணை கன்னியென்று அறிவிக்கிறோம்“என்று பறைச்சாற்றுவார். அந்த விரிப்பு பிறகெப்போதும் உபயோகிக்கப்படுவதில்லை. குருதிப்படிந்த அப்படுக்கை விரிப்பின் நடுப்பகுதி அதே கன்னிமடத்துக்கே திருப்பி அனுப்பப்படுகிறது. அவை அங்கு தங்கமூலாமிட்ட சட்டகங்களில் அவ்விளவரசியின் பெயரோடு கிரீடமும் பொருத்தப்பட்டு கன்னிமடத்து தாழ்வாரத்தின் சுவர்களில் காட்சிக்கு வைக்கப்படுகிறது. குறிப்பிட்ட காலங்களுக்கு பிறகு, அவ்விளவரசிகள் பட்டத்தரசிகளாக அச்சட்டகங்களை பார்வையிட வருவதும் வழக்கம். இளவரசி ஒருத்திக்கு விசுவாசமான தோழியாகவும், ரகசியங்களை நம்பிக்கையுடன் பாதுகாத்த சினேகிதியாகவும் இருந்த தோழிப்பெண்ணொருவர் அச்சட்டகத்தை பார்வையிட வருகிறார். கன்னியாஸ்திரி அழைத்து வந்து முன்நிறுத்திய தங்கமூலாம் சட்டகங்களில் அடைப்பட்டு கிடந்த அச்சதுரவிரிப்பு பனி வெண்மை மாறாது வெற்றுப்பக்கமாகவே இருக்கிறது.

குருதிப்படியாத அச்சட்டத்தை உலகின் பார்வைக்கு வைக்கப்பட்ட மௌனச்சவால் எனவும் கொள்ளலாம். கன்னியாஸ்திரிகள் வாழ்ந்துப்பார்க்காத வாழ்வின் வெற்றுப்பக்கமாகவும் கொள்ளலாம். 

Monday, 6 May 2019

A clean well-lighted place


எர்னெஸ்ட் ஹெமிங்கவேயின் A clean well-lighted place என்ற கதையில் செவிக்கேளாத கிழவர் ஒருவர் மதுபானவிடுதியை நாடி வருகிறார். அந்த விடுதி சுத்தமான, ஒளியூட்டப்பட்ட இடமாக இருக்கிறது. நடுநிசியை கடந்தும் செல்ல மறுப்பவராக அவர் மேலும் மேலும் மதுவை நாடுகிறார். பரிமாறுனரில் ஒருவன் இளைஞன். மற்றொருவனுக்கு நடுத்தர வயதிருக்கலாம். இளம்பணியாளருக்கு விடுதியில் நேரம் கடத்துவதில் விருப்பமில்லை. அநாகரிகமான வார்த்தைகளை கையாண்டு கிழவரை அனுப்பி விடுகிறான். இருவரும் விளக்குகளை அணைத்து, கதவை மூடி விட்டு கிளம்புகின்றனர்.

இளைஞனுக்கு இளமை, வேலை, நம்பிக்கை கூடவே அவனுக்காக காத்திருக்கும் மனைவி இருக்கிறாள். வேலையை தவிர்த்து மற்றேதும் தன்னிடம் இருப்பதாக கருதாக நடுத்தரவயதாளன், வேறொரு விடுதிக்கு செல்ல விழைகிறான். துரத்தப்பட்ட கிழவர் அங்கேயும் சென்றிருக்கலாம். அவர்கள் பணிப்புரியும் விடுதியை போல இவ்விடுதி, சுத்தமான ஒளியூட்டப்பட்ட இடமாக இல்லாது, மினுக்கென்று இருப்பதாக எண்ணி அங்கிருந்து கிளம்பி அறைக்கு வருகிறான். சொல்லப்போனால், அவனுக்கு தான் வேலைசெய்யும் விடுதியை விட்டு கிளம்ப மனமில்லை. இம்மாதிரியான ஒளியூட்டப்பட்ட இடம் தன்னை போல வேறு யாருக்கேனும் தேவைப்படலாம்.  அறையில் உறக்கம்வராது புரளும்போது இன்சோம்னியாகவாக இருக்கும் என்று தனக்குள் சொல்லிக் கொள்கிறான்.

இந்நாள் கிழவருக்கு எல்லாமும் இருக்கிறது.. ஆனால் வயதேறி விட்டது. நாளைய கிழவனான நடுத்தரவயதாளனுக்கு நம்பிக்கையின்மை ஏற்பட்டு விட்டது. மதுபான விடுதியின் விளக்கொளியை அணைக்கும்போது ஏற்படும் இருளை, தன்னை சூழும் வெறுமை என்பதாக உணர்கிறான். ஒருவேளை  அந்த கிழவர் வெளிச்சமான அந்த விடுதிக்கு வெறுமையை விரட்டும் பொருட்டே வந்திருக்கலாம். இன்றைய இளைஞனுக்கு இவை எல்லாமே இருப்பதால், தன்னை சூழப்போகும் வெறுமையை உணராதவனாக இருக்கிறான். அவனை பொறுத்தவரை, அந்த கிழவர் பணக்காரராக இருந்து தற்கொலை முயற்சி செய்ததை அர்த்தமற்றதாக எண்ணிக் கொள்கிறான். இளமை, அழகு, நம்பிக்கை, பணம் என்பதான புறவுலகின் இன்பங்கள் வயதாகும்போது வெறுமையாக மாறுவதை  மூன்று வெவ்வேறு பருவங்களின் வழியே கடத்தியிருப்பார் ஹெமிங்வே.

ஊட்டி ஆய்வரங்கு 2019ல் தெரிவு செய்யப்பட்ட கதை.
http://howzzatbyswe.blogspot.com/2019/04/blog-post.html?m=1