மௌனச்சவால்
கதை போர்ச்சுகல்லில் நடக்கிறது. அங்கிருக்கும் கன்னிமடத்தை சார்ந்த கன்னியாஸ்த்ரிகள்
ஆகச்சிறந்த சணலை சாகுபடி செய்பவர்கள். அச்சணலைக் கொண்டு செய்யப்படும் மிருதுவான லினன் துணி,
அரசக்குடும்பத்தின் இளவரசிகளுக்கு, அவர்களின் மணஇரவுக்கான படுக்கைவிரிப்புகளாக பயன்படுவதை அம்மடம் ஒரு மகத்தான நிகழ்வாக கருதிக் கொள்கிறது.
உபயோகம் முடிந்த மறுநாளின் காலைப்பொழுதில், அரண்மனையின் முக்கிய
பணியாளர் அந்த இரவின் விரிப்பை உப்பரிகையிலிருந்து தொங்க விட்டு “இப்பெண்ணை கன்னியென்று
அறிவிக்கிறோம்“என்று பறைச்சாற்றுவார். அந்த விரிப்பு பிறகெப்போதும் உபயோகிக்கப்படுவதில்லை. குருதிப்படிந்த அப்படுக்கை விரிப்பின் நடுப்பகுதி அதே கன்னிமடத்துக்கே திருப்பி அனுப்பப்படுகிறது. அவை அங்கு தங்கமூலாமிட்ட சட்டகங்களில் அவ்விளவரசியின் பெயரோடு கிரீடமும் பொருத்தப்பட்டு கன்னிமடத்து தாழ்வாரத்தின் சுவர்களில் காட்சிக்கு வைக்கப்படுகிறது. குறிப்பிட்ட காலங்களுக்கு பிறகு, அவ்விளவரசிகள் பட்டத்தரசிகளாக அச்சட்டகங்களை பார்வையிட
வருவதும் வழக்கம். இளவரசி ஒருத்திக்கு விசுவாசமான தோழியாகவும், ரகசியங்களை
நம்பிக்கையுடன் பாதுகாத்த
சினேகிதியாகவும் இருந்த தோழிப்பெண்ணொருவர் அச்சட்டகத்தை பார்வையிட வருகிறார். கன்னியாஸ்திரி
அழைத்து வந்து முன்நிறுத்திய தங்கமூலாம்
சட்டகங்களில் அடைப்பட்டு கிடந்த அச்சதுரவிரிப்பு பனி வெண்மை மாறாது வெற்றுப்பக்கமாகவே இருக்கிறது.
குருதிப்படியாத அச்சட்டத்தை உலகின் பார்வைக்கு வைக்கப்பட்ட மௌனச்சவால் எனவும்
கொள்ளலாம். கன்னியாஸ்திரிகள் வாழ்ந்துப்பார்க்காத வாழ்வின் வெற்றுப்பக்கமாகவும்
கொள்ளலாம்.
No comments:
Post a Comment