Search This Blog

Sunday, 19 May 2019

உலகின் மிக நீண்ட கழிவறை - அகரமுதல்வனின் குறுநாவல்கள் குறித்து.

19.5.2019 விழாவில்..
உணவும் நீருமின்றி கைகால்களை இழந்து பங்கருக்குள் பதுங்கிக் கிடந்தவர்கள்வெளியே செல்ல முயற்சித்து ஷெல் குண்டுகள் அடித்து இறந்தவர்கள்,இறந்தவர்களை அப்படியே விட்டுவிட்டு நகர்ந்து சென்ற மக்கள்,பெரும் ஓசையுடன் நுழையும் பிரம்மாண்ட ராணுவ டாங்கிகளில் நசுங்கி அழியும் சடலங்கள், பசிக்கு கதறிய குழந்தைகள்,No fire Zone களில் ஒரு குவளை கஞ்சிக்காக நீண்ட வரிசையில் காத்துக் கிடந்தவர்கள்,மருத்துவ உதவியேதுமின்றி காயமும் வலியுமாக இறந்தவர்கள்,ஒரு குவளை அரிசிக்காக தேடி ஓடிய போது முதுகுக்கு பின்புறமாக வானத்திலிருந்து விழுந்த குண்டுகள்,மருத்துவமனைகளாக மாற்றப்பட்ட மர நிழல்கள்,பிளாஸ்டிக் கவர்களில் வைத்து ஏற்றப்பட்ட ரத்தம்,உறவுகளை தொலைத்த இளவல்கள்,காயம்பட்டு இறந்தவர்கள், மருத்துவமனைகளில் மருந்தின்றி இறந்தவர்கள், கொத்துக் கொத்தாய் குண்டுகள் பாய்ந்து இறந்தவர்கள்,இவை அனைத்திற்கும் மத்தியில் நடந்தவை அனைத்தையும் புகைப்படங்கள் எடுத்து ஆவணப்படுத்திக் கொண்டிருந்த ஆவணக் குழு,
பத்தாண்டுகளுக்கு முன் இந்நாளின் அடையாளங்கள் இவை.

அகரமுதல்வனை இரண்டு வருடங்களுக்கு முன் கணையாழி விழாவில் சந்தித்திருக்கிறேன். மீண்டும் இன்று அவரை சந்திக்கும் வாய்ப்பு.. அதுவும் மே 17, 18ன் மிக நெருக்கமான 19ஆம் நாளன்று.
இனஅழித்தொழிப்பின் நீண்ட பத்து வருடங்களை கடந்தாகி விட்டோம். அவற்றை பற்றிய பதிவுகள் இன்றும் தொடர்ந்து கட்டுரைகளாகவும் புனைவுகளாகவும் வந்துக் கொண்டுதானிருக்கின்றன. தமிழ்நதி, அகரமுதல்வன், குணாகவியழகன், சயந்தன், போன்ற ஈழ இலக்கியவாதிகளின் படைப்புகளை வாசித்திருக்கிறேன். சில சமயங்களில் வாசிக்காமல் கடந்துமிருக்கிறேன். இன்று கனத்துமிருக்கிறேன். இந்நாளில் என் கண்களை சந்திக்கும் துணிவு யாருக்கு இருக்கிறது என்று அகரமுதல்வன் தார்மீக சவால் கூட விடலாம். இத்தொகுப்பிலுள்ள மூன்று குறுநாவல்கள் கணையாழியில் வெளிவந்தவை என்றார் அவர். ஆனால் நான் வாசிக்கவில்லை. முதல் புரட்டுதலுக்கு படிக்க வேண்டிய பக்கங்களாக அவற்றை ஓரம் மடித்து வைத்திருந்தேன். மறுபுரட்டலில் சில பத்திகளிலேயே பதைப்புடன் அவற்றிலிருந்து விடுப்பட்டு வெளியே வந்திருந்தேன். ஏனெனில் அது என்னை குற்றவுணர்வோ, மனவலுவின்மையோ ஏதோ ஒன்றுக்கு  நகர்ந்தியிருந்தது.
போல்ஷ்விக் புரட்சியாளனாகிய பாவலின் அம்மா நிலோவ்னா சாதாரணமான தாய். கிராமத்துப் பெண்மணி. கடும் உழைப்பாளி. தன் மகன் ஏன் போராடுகிறான்? அவனை எதற்காக காவல்துறை தேடுகிறது என்பது ஏதும் அவளுக்குத் தெரியாது. அவன் மீது கொண்ட அன்பில் அவனை புரிந்துக் கொள்ள முயலும்போதுதான் அவளுக்கு அரசியல் புரிகிறது. பிறகு பாவல் கைதாகி சிறைக்குச் செல்கிறான். அவன் விட்டுச் செல்லும் அரசியலை நிலோவ்னா கையிலெடுக்கிறான். தீவிரமான அரசியல் போராட்டத்தின் மையத்தில் அவளை நிறுத்தி மாக்சிம்கார்க்கியின் தாய் முடிகிறது. இப்படியாகதான் வாசிக்கும் ஒவ்வொரு மனிதனையும் தீவிரமான அரசியலுக்குள் இறக்கி விடுகிறது அகரமுதல்வனின் எழுத்துகள்.
வாலிப பிள்ளைகளை இயக்கம் பிடித்துக் கொண்டு போய் கட்டாயமாக போர் பயிற்சி அளிக்கிறது. மாட்டிக் கொண்டால் இராணுவம் கைது செய்து கொடுமைப்படுத்தும். இல்லையெனில் விருப்பமோ விருப்பமில்லையோ வீரச்சாவு அடைந்து விட வேண்டும். எதிர்காலம் என்ற ஒன்றே இல்லாத நிலையில் இளம் உள்ளங்கள் எதை செரித்து நாட்களை நகர்த்துகிறது என்ற கேள்வி பயமுறுத்துகிறது. கவிமனதுக்கு ஒரு வசதி இருக்கிறது. ரசனைகளை கற்பனையாக்கிக் கொள்ளலாம்.  காலச்சுவடில் வெளியான எனது கனவு என்ற சிறுகதையில் சொந்தநாட்டில் பல கொடூரங்களுக்கு பிறகு ஏதிலியாகப்பட்ட ஒருவர் அந்நியநாட்டு அகதிகள் முகாமில் அடைப்பட்டு வாழ்வின் எல்லா உரிமைகளையும் உறவுகளையும் இழந்த பின்னும், அங்கிருக்கும் கைக்குழந்தையை கொண்டிருந்த மிக இளம்வயது பெண்ணை மகளாக எண்ணும் மனோபாவத்தின் வழியாக வாழ்விற்கான பற்றை கண்டடைவதாக எழுதியிருப்பேன். காமமும், காதலும் இப்படியாகதான் அகல் என்ற குறுநாவலில் வந்துப்போகிறது. கதைச்சொல்லி இயக்கத்தின் பிடியிலிருந்து தப்பி சதா சளசளக்கும் காடுகளை கடந்து காதலியின் வீட்டில் விழும்போது, அவள் இயக்கத்தில் சேர சென்றிருப்பாள்.
வன்னி காட்டிலிலிருந்து மீள முடிந்த அவனுக்கு காதலும் காமமும் மீளமுடியாத காடாகிப் போகிறது. என்னை சுடு.. என்னை சுட்டு விடு.. சுடுவது உனக்கு சுடுவது பிடிப்பது போல இப்போதும் எனக்கும் பிடித்து விடுகிறது. சாவதற்கு முன் இரண்டு சிப்பாய்களை சுடுகிற கைதியாகவாவது நானிருக்க வேண்டும் என்கிறான். வாழ்வில் சந்திக்கக் கூடாத, அல்லது சாமான்யனின் வாழ்வில் கேள்வியேப்படாத விஷயங்களெல்லாம்  அனுபவங்களாக மாறி விடும் ஒருவருக்கு கனவு கூட சாவதற்கு முன் இரண்டு சிப்பாய்களையாவது சுட இயலும் கைதி என்பதாகவே வருகிறது.
ஒசாமா என்னும் சித்தப்பா, இயக்கத்துக்கு சொந்தமான ஆலையில் வேலை செய்பவர். சராசரி வாழ்நிலையே குலைந்துக் கிடக்கும் பூமியில் கூட அவர் மனைவியை படுத்தியெடுக்கும் சராசரி கணவனாகவே இருக்கிறார். ஓயாது கதைகள் பேசுகிறவர். அவர் சொல்லும் கதைகளில் பொட்டுஅம்மான் அவருடன் கதைத்தாகவும், பிரபாகரன் தேத்தண்ணீ குடிக்க அழைப்பதாகவும் இருப்பதெல்லாம் சர்வசாதாரணம். நடைபெறாத கதையை சொல்லிக் கொண்டிருந்த ஒசாமா நடந்துக் கொண்டிருந்ததை மறைத்த கதை ஒருநாள் அம்பலமாகிறது. அது தங்கச்சங்கிலிகளுக்காக ஞானதம்பியுடன் சேர்ந்து இயக்கத்தை காட்டிக் கொடுக்கும் கதை. இயக்கம் அவரை அழைத்து செல்கிறது.  அவரது துரோகத்தை கேள்விப்பட்ட சித்தி துாக்கிட்டுக் கொள்கிறார். இயக்கம் அவருக்கு மரணதண்டனை விதிக்கிறது. போருக்கான அறங்கள் முழுக்கவும் தொலைந்து மரித்துபோன மனிதத்தில் துரோகம் முளையிடுவதை இக்கதை அடையாளப்படுத்துகிறது. அதேபோல சிங்கள அரசாங்கத்தில் பணியாற்றிக் கொண்டே இயக்கத்துக்கு ஆதரவாக செயல்படும் ஆட்களும் உண்டு. அப்படியான கதாபாத்திரமான தேவதாஸை இராணுவம் அழைத்துச் செல்கிறது. பிறகு அவர் சடலமாக மரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறார்.
பொதுவாக இவரது  கதைகளில் தொடர் சம்பவங்களும் அடுக்கடுக்கான கதாபாத்திரங்களும் வந்து சேர்ந்துக் கொள்வது வெற்று புனைவுக்கும் அனுபவத்துக்குமான நுாலிழை வித்யாசங்கள். சதகால மானுட யதார்த்தத்தை எழுதுவதற்கு எழுத்தாளனுக்கு  கலைத்திறனோடு நேர்மையும் அவசியம். தன் கோபதாபங்களை கொண்டோ, சொந்த லாபநட்ட கணக்குகளை கொண்டோ, அகரன் படைப்புகளை அணுகியிருப்பாரேயாயின், அது காலதீதத்தை எட்டியிருக்காது. “உள்ளது உள்ளபடி“யான எழுத்து கலையை காலதீனப்படைப்பாக்கி விடுகிறது.
கிரேசி அக்காவின் கணவன் கொல்லப்பட்டு விடுகிறான்.  கிரேசி சயனைடை கடித்து விடுகிறாள். அப்போது அவள் நிறைமாத கர்ப்பிணியும் கூட. இயக்கம் அவளை காப்பாற்றி பிள்ளைபேறு பார்க்கிறது. சயனைடின் பாதிப்பில் மூளை பாதிப்போடு வந்து பிறக்கிறாள் அம்பிகா. அகதிகளாக வந்திறங்கும் அவர்களுக்கு ஒட்டியிருக்கும் கடற்கரை மணலை தவிர கையில் ஏதுமில்லை. வீடில்லை. நாடில்லை. அடுத்த வேளை உணவுக்கு உத்தரவாதமில்லை. நெருக்கியடிக்கும் கேள்விகள். துரத்தியடிக்கும் அரசியல். இனவாத வெறுப்பு. திக்குக்கொன்றாய் அல்லது இல்லவேயில்லாத அல்லது கண்முன்னே கொல்லப்பட்டு கோர மரணத்தை சந்தித்த உறவுகளை பார்க்க நேர்ந்த அவலத்தையும் கடந்து வரும் ஒரு மனிதனின் மனநிலை என்னவாக இருக்க முடியும்?
எங்காவது தப்பித்து செல்ல விழையும் மனதோடு ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துச் செல்லும் ஏஜென்ட்டை நம்பி தமிழகத்தை விட்டு கிளம்புகிறாள் கிரேசி அக்கா. அவள் நம்பிய ஏஜென்ட் கைது செய்யப்படுகிறான்.  தொடர்ந்து, தப்ப விழைந்த மக்களையும் அரசு கைது செய்கிறது. எப்படியோ விடுவிக்கப்பட்டு, கேரளத்தோடு திரும்பி வருகிறாள் கிரேசி. உதவி செய்யும் பேர்வழியொருவன் கனடாவிலிருந்து வருகிறான். அனுப்பிய பணத்துக்கு ஈடாக அவளை படுக்க சொல்கிறான். இணங்க மறுத்தபோது அவளை வேசியென பொதுவெளியில் செய்தி பரப்புகிறான். அவள் வீட்டின் வாயிற்கதவும் அலைபேசியும் ஓயாது அலறுகிறது. அடிப்படை மனிதம் கூட இல்லாத கொடூரங்கள் நம் மண்ணிற்கு மிக அருகில் நடந்தபோது நாம் ஏதும் செய்யாமல்தானிருந்தோம்.
இங்கு ஒரு விடயத்தை சொல்ல வேண்டும். தமிழ் இலக்கியச்சூழலில் எழும் குறுங்குழுப்போக்கையும், அதன் தன்மையையும், கொக்கரிப்பை அல்லது இரைச்சலையும் குறித்து கூற விரும்புகிறேன்.  யார் யாருடன் சேர வேண்டும், யாராருக்கு யாராருடன் தொடர்பிருக்க வேண்டும் யாரார் யாராருடன் வாதிக்கலாம்? அல்லது கூடாது? என்பதை நிர்ணயிக்கும் அதிகாரத்தை குறுங்குழுக்கள் தாமாக எடுத்துக் கொண்டு வசைகளை அலைகளை போல உருவாக்கிக் கொள்கின்றனர். அவர்கள் கூறுவதுபோல ஒத்தக்கருத்துள்ளவர்கள்தான் ஒன்று சேர வேண்டுமெனில், அங்கு விவாதத்திற்கு வாய்ப்பேது? விவாதங்களின் வழியேதானே அடுத்தக்கட்ட நகர்வு சாத்தியப்படுகிறது? எதிர்கருத்துள்ளவர்களை எதிரிகளாக பாவிக்கும் போக்கு தமிழ்நாட்டுசூழலில் கூட மாறிவருதை பார்க்கிறோம். இலக்கியத்தில் பிரிவினைவாதம் ஏன் இத்தனை தீவிரப்படுகிறது என புரியவில்லை. 
இயக்கத்தின் விசாரணைகள் இராணுவத்தின் விசாரணைக்கு சற்றும் குறைந்ததில்லை. இராணுவம் போலவே இயக்கத்திலும் தண்டனைகள் உண்டு. இராணுவத்தின் பயங்கரவாத தடுப்புப்பிரிவின் விசாரணையொன்றில் கைது செய்யப்பட்டு சிற்றறை ஒன்றில் அடைக்கப்பட்ட நபரின் மீது முள்கம்பிகள் சீரான லயத்தோடு வீசப்படுகிறது. அது அவரின் உடலிலிருந்த மாமிசத்தை உருவிக் கொண்டு தொடர்ந்து சுற்றுகிறது. எப்பேர்ப்பட்ட சித்ரவதை இது? முலைகளும் தலைகளும் குறிகளும் அறுப்பட்ட பெண்ணுடல்களுக்கு நடுவே இக்கோரம் நடைபெறுகிறது. எப்படியான மனநிலையில் இப்படியான தண்டனைகளை அவர்களால் யோசிக்க முடிகிறது?
எனக்கு சொந்தமில்லாத பூமியின் கடல் என்ற கதையில் கடல் ஊடாடி ஊடாடி மறைகிறது. அன்பை காதலை காமத்தை தேடலை கடலால் மட்டுமே பூர்த்தி செய்ய முடியும்.  கடல் அன்பை அதன் மணலெங்கும் நிரப்பி வைத்திருக்கிறது. காதலை தன் ஊதக்காற்றில் ஒளித்து வைத்திருக்கிறது.  காமத்தின் உசும்பலில் அலைகள் அடங்கி ஏதுமற்றதாகி விடுகிறது. நீரின் கலகலப்பில் நிம்மதி தருமொரு பால்யத்தை கடலை தவிர வேறெதும் தராது என்ற நம்பிக்கிடந்த மக்கள் அதை நீண்டதொரு கழிவறையாக மாற்றிக் கொள்ளும் அவலமும் அந்த மண்ணில்தான் நடந்தேறியிருக்கிறது.  அக்கடலை காண கிரேசி அக்காவுடன் அவனும் பாவையும் அம்பிகாவை அழைத்துக் கொண்டு கடற்கரைக்கு செல்கிறார்கள். மனநலம் குன்றிய அச்சிறுமிக்கு கடல் அப்படியாகவே தோற்றம் தந்திருக்கலாம். உற்சாகம் ஏற்படுகிறது அவளுக்கு. கடலைக் கண்டு ஆர்ப்பரிக்கும் மகளிடம் கிரேசி இவ்வாறு சொல்கிறாள்.
வெள்ளி விழுவதற்கெல்லாம் நீ கூச்சலிடாதே.. எங்களுக்கு வானமே இல்லை. கொஞ்சநேரம் இந்த கடலையே பார்த்துக்கொண்டிரு.. இதுதான் உன் மூதாதையருக்கான கல்லறை.
அகரன் உள்ளபடியே கவிஞர். அது அவரின் கூறுமொழியில் தெரிகிறது. புத்தம்புதிது போன்ற துாய தமிழ்வார்த்தைகளைக் கொண்டு அழகான சொற்கட்டுக்குள் அற்புறபோர் ஒன்றை நிகழ்ததியிருக்கிறார். சில இடங்களில் அதிகப்படியான நிகழ்வுகள் சுயசரிதையோ என்ற கட்டத்துக்கும் இழுத்து செல்கின்றன. 
ஈழத்துக்கான இறுதிப்போர் முடிந்த இப்பத்து வருடங்களாகில் அவரவர் தத்தம் புரிதல்களோடும் அரசியல் சரி தவறுகளோடும் கட்டுரைகளாகவும் புனைவுகளாகவும்  அவற்றை நினைவிலெடுத்துக் கொண்டுதான் வருகின்றனர். ஆனால் அவை சார்போ, சார்பின்மையையோ எடுத்துக் கொள்ளும்போது வரலாறு பிழையாகி விடுகிறது. இப்படியாகதான் ஈழம், இனஅழிப்பு என்ற வார்த்தைகளில் வந்து உட்கார்ந்துக் கொண்ட ஒவ்வாமையும். சாய்தலுக்கும் புரிதலுக்குமான இடைவெளிக்குள் அகரனின் படைப்புகளை வைக்கலாம். மிகை உணர்ச்சிகளின்றி வரலாறை மீளுருவாக்கம் செய்கிறார். 
நெடுநீர் முழை என்ற கதையில் இரண்டு நிமிடங்களுக்கு முன்பு நாய்க்குட்டியை கட்டியணைத்து நீரும் பிஸ்கெட்டும் தந்த போராளியக்கா இரண்டு நிமிடங்களுக்கு பிறகு உயிருடன் இல்லை. இம்மாதிரியான வாழ்வு அவர்களுக்கு பழகிப்போனதொன்று. இப்போது அவர்களின் விருப்பமெல்லாம் நீரும் பிஸ்கெட்டும் உண்ட நாய்க்குட்டியை கட்டியணைத்து வாழ்வதை தவிர வேறெதும் இல்லை.






No comments:

Post a Comment