சாமநாதுவின் அண்ணன் மகன் சுப்பராயன். நல்ல புத்திசாலி. படிப்பு ஏறினாலும் செலவழிக்க
பணமின்றி, படிப்பு முடிவதற்குள்ளாகவே ஊருக்கு அழைத்து வந்து விடுகின்றனர். அதேநேரம்
சுப்பராயனுக்கு செய்தொழில் வசப்பட்டு விடுகிறது. சாமநாதுவின் மனைவி வாலாம்பாள். அவர்களுக்கு
நாலைந்து பிள்ளைகள் உண்டு. ஆனால் யாரும் சுகப்படவில்லை. சுப்பராயனின் வாரிசுகளை கொண்டு
கொடுத்த வகையில் ஏற்படும் சொந்தங்கள்.. அவரின் செல்வாக்கு.. அதனால் ஊருக்கு கிடைக்கும்
நன்மைகள் எல்லாவற்றையுமே வன்மத்தோடு பார்க்கும் சாமநாதுவின் மனதை நெருக்கமாக அறிந்துக்
கொள்ளும் வாலாம்பாள் கிட்டத்தட்ட அவரின் மனச்சாட்சியாக பேசுகிறாள். அவருக்கே கூட தன்னுடைய
இயல்பு பிடிக்காமல்தான் போகிறது. அதனால்தான் இறந்துபோன மனைவியை ராட்சச முண்ட.. சாவற
வரைக்கும் நியாய புத்தி.. தர்ம புத்தி.. என்று திட்டுகிறார். சுப்பராயனின் மூன்றாவது
மகளோடு ஒரே பந்தலில் திருமணமான தனது முப்பத்தோறு வயது மகளின் நார்மடிக்கட்டுக்குள்ளிருக்கும்
இளம் முகம்.. அண்ணன் மகன் வீட்டு திருமணத்தில் எடுபிடியாக அலையும் மகனி்ன் நிலை என
குமையும் மனம், கேட்பாரின்றி தடுப்பாறின்றி பாயாச கொப்பரைக்கு முன் வந்து நிற்கிறது.
கடந்தவைகளும் நிகழ்பவைகளுமாக கதை தன்னியில்பாக நகர்கிறது. ஒரு சொல்லோ சம்பவமோ
மிகையில்லை. இசைக்கச்சேரி தொடங்கி விட்டது. சங்கதிகளில் பிசகில்லை. இத்தனைக்கும் கச்சேரி
உச்சஸ்தாயிலேயே நடக்கிறது. நாம் கண்களை மூடி லயித்துக் கிடக்கிறோம். ஜதிகளில் பிசகில்லை.
உச்சஸ்தாயிலேயே குரல் தன்னியில்பாக மாயாஜாலம் நிகழ்த்துகிறது, சுருதி பிறழவில்லை. இயல்பு..
எல்லாமே இயல்பு. அடக்கவியலாத உச்சக்கட்டத்தில் பொங்கி பிரவகித்து ஓடுகிறது வன்மம். முள்ளாய் குத்தும்
பார்வையை எதிர்க்கொள்ளும் திராணியின்றி, செயலுக்கு நியாயம் கற்பிக்க, மனம் பறந்தலைகிறது.
நாயன இசை வாலாம்பாளின் குரலையொத்தது. பௌதீகமாக நடமாடிக் கொண்டிருந்த வாலாம்பாளிடம்
இம்மாதிரியான ஒரு சந்தர்ப்பத்தில் நீ என் ஆம்படையாளா.. அண்ணனோட ஆம்படையாளான்னு தெரியில..
என்பார் சாமநாது. ஸ்துாலமாகி போன சரீரத்தின் குரல் நாயனமாக ஒலிக்கும்போது அவரால் எதுவும்
செய்து விட முடியாது.
No comments:
Post a Comment