Search This Blog

Tuesday, 29 August 2017

அம்சம் பாட்டி

காக்கை சிறகினிலே செப்டம்பர் 2017 இதழில் வெளியான சிறுகதை




”கட்டிலெல்லாம் சொகுசுதான்.. என்னவோ பேர் சொன்னாளே.. இந்த மெத்தைக்கு.. கலாவோ என்னவோ… எங்க சுத்துனாலும் அவ பேர்லதான் நிக்குது.. ஒங்க தாத்தன் நல்ல நெறக்க கலையரசின்னு கூப்டுவாரு.. நா கலரசிம்பேன்..” வாய் நிற்காமல் பேசும் அம்சம் பாட்டிக்கு.

”பாட்டி அது கலால்ல.. கர்லான் மெத்தை..” கலாவின் பேரப்பிள்ளை திருத்தி சொல்லிக் கொடுத்தாலும் அம்சத்துக்கு அது கலாதான். 

”எதோ ஒண்ணுடீ குட்டீ..” கண்களை இடுக்கி முகத்தின் வரிகளுக்கிடையே சிரிப்பாள் அம்சம்பாட்டி. இளமை மீதமிருந்த நாற்பதுகளின் தொடக்கத்தில் பாட்டியான போது கொஞ்சம் நெருடலாகதான் இருந்தது அம்சத்துக்கு. பிறகு ஆணில் இரண்டும் பெண்ணில் இரண்டுமான கலையரசியின் வாரிசுகள் அவளை சூழ்ந்துக் கொள்ள மதிமயங்கிதான் போனாள்.

Tuesday, 22 August 2017

வீடு

கிழக்குப் பதிப்பகம் சிறுகதைப் போட்டி 2017ல் 3வது பரிசுப் பெற்றக் சிறுகதை


நாளை எல்லோரும் ஒன்று கூடுவதாக பேச்சு. ஞாயிறு அல்லவா. வனமாலாவுக்கு ஞாயிறும் ஒன்றுதான் திங்களும் ஒன்றுதான். மாலைக்கு மேல்தான் நாஷ்டா கடை மளமளப்பாக நகரும். நாஷ்டா கடையே  நகரும் கடைதான். தட்டு வண்டி டிபன் கடை.. முன்பெல்லாம் இட்லிக்கான அரிசி.. உளுந்தை கடையில் கொடுத்து அரைத்து வாங்கிக் கொள்வாள். வீட்டுக்கு பக்கத்திலேயே அரவை இருந்தது. அதற்கெல்லாம் இங்கு வசதியில்லை. இட்லி மாவாக வாங்கிக் கொள்ள வேண்டும்.  எல்லாவற்றையும் விட்டு விட்டு நாளை மீட்டிங் செல்ல வேண்டும். அப்போதுதான் துாங்கி எழுவதற்காவது ஒரு வீடு கிடைக்கலாம்.

சென்னை தினம் - கிழக்கு பதிப்பகம் நடத்திய சிறுகதைப் போட்டி முடிவுகள்

வெற்றி பெற்ற சிறுகதைகள்:

எம்டன் செல்வரத்தினம், ஸ்ரீதர் நாராயணன் - முதல் பரிசு - 7.500 ரூ
காம தகனம், செம்பூர் ஜெயராஜ் - இரண்டாம் பரிசு - 3.000 ரூ
வீடு, கலைச்செல்வி - மூன்றாம் பரிசு - 1,500 ரூ

ரூ 750 பரிசு பெறும் கதைகள்:

பிட்டு, அபுல்கலாம் ஆசாத்
உப்பு அரசியல், தம்பி கூர்மதியன்
பாலாவிற்காக..., அரவிந்த் சச்சிதானந்தம்
வெள்ளம், டேவி. சாம் ஆசீர்
காட்டுக்கு வெளியே ஒரு வீடு, ஏ.ஏ. ஹெச். கே. கோரி
மெர்லின் மரினா, முகுந்த் நாகராஜன்
ஓட்டம், வல்லபா ஶ்ரீநிவாசன்
முகம், எஸ்.எஸ்.ராகேஷ் குமார்
மட்ராஸ், ஏ.சந்திர சேகர்
அசுவத்தாமா, ந.பானுமதி
கற்பாந்தம், பாஸ்டன் பாலா
அடைக்கும் தாழ், பார்கவி சந்திரசேகரன்
மார்ஷல் ரோடு, தங்க.ஜெய்சக்திவேல்


Monday, 21 August 2017

தளம் ஆகஸ்ட் 2017ல் வெளியான “இவள பிடிக்கல..“ கதைக்கு தோழர் கண்மணிராசாவின் விமர்சனம்

தளம் இதழ் எண் 17&18 ல் வந்துள்ள கலைச்செல்வியின் 
"இவள பிடிக்கல..." சிறுகதை வெகுசிறப்பாக வந்துள்ளது.இக்கதையை நிச்சயமாக ஒரு ஆணினால் எழுதமுடியாது.வாடகைத் தாயாக இருக்கநேர்ந்த ஒரு ஏழைப்பெண்ணின் மனம் படும்பாட்டை வலியோடு பதிவுசெய்யும் கதை.ஆனால்....அப்பெண்ணின் கணவன் வார்த்தைகளிலயே இத்துயரத்தை பதிவிட்டுள்ளார்.குழந்தையை பெற்றுக்கொடுத்து விட்டு பத்துமாதம் கழித்து வந்தவளிடம் இவளின் வீட்டிலிருக்கும் குழந்தைகள் ஒட்டாமல் அந்நியமாய் பார்க்கின்றன.இந்த வேதனையோடு பெற்றவுடன் தூக்கிக்கொடுத்துவிட்டு வந்த பிஞ்சின் நினைவும் மனதில் பாரமேற்ற தனககுள்ளே அழுது மருகுகிறாள்.கணவனுக்கோ வேறுவேறான சந்தேகங்கள்.....எல்லாவற்றையும் நுட்பமாக கணவனின் வாயினாலேயே கதையாட வைத்துள்ளார்...
நாம் புரிந்துகொள்ளமுடியாத பெண்மனதை தன் கதைகளின் பதிவுசெய்வதில் கனலச்செல்வி வாகைசூடுகிறார்.
வாழ்த்துக்கள் தோழர்.

கல்கி 27.08.2017ல் “அற்றைத்திங்கள்“ நாவல் குறித்து வெளியான விமர்சனம்


அற்றைத் திங்கள் - நாவல் அறிமுகக் கூட்டம், இக்சா மையம், சென்னை, நாள் 19.08.2017


Wednesday, 16 August 2017

கீர்த்தியின் அப்பா

அகநாழிகை ஆகஸ்ட் 2017ல் வெளியான சிறுகதை


அத்தனை சுலபமாக தனக்கு குணமாகி விடும் என்று தோன்றவில்லை அவருக்கு. பாவம் வேலைக்கு செல்லும் மகளின் பாடுதான் திண்டாட்டமாக போய் விட்டது. சதா நச்சரிப்பு இருந்துக் கொண்டே இருக்கும் வேலை அவளுக்கு. வீட்டிற்கு வந்தோம்.. நிம்மதியாக வேறு வேலைகளில் ஈடுபடுவோம் என்றிருக்க முடிவதில்லை. ஒன்றுமில்லாத விஷயத்தை இவள்தான் பெரிதுப்படுத்திக் கொள்கிறாளோ என்று தோன்றியதுண்டு. மனைவி உயிருடன் இருக்கும் வரை அவளிடம் இதை சொல்லிக் கொண்டேயிருந்தார். இவர் சொல்வதற்காக ஆமோதிப்பது போல தலையாட்டுவாள் மனைவி. வேறொரு பக்கம் போய் முணுமுணுத்திருக்கலாம். ஒருமுறை ஓயாமல் அடித்த மகளின் கைபேசியை இவர் எடுக்க போக “நேரமாச்சுன்னா பொறுப்பில்லாம அப்டியே ஓடிடுவீங்களா..? பொம்பளங்கன்னா எப்பவும் சலுகைதான்.. அதை வேலையில காட்டணும்..” கோபமாக யாரோ பேசினார்கள். இப்படியான இரண்டொரு சந்தர்ப்பங்களை இப்போதுதான் நினைக்க தோன்றுகிறது.

Saturday, 12 August 2017

இவள பிடிக்கல..

ஆகஸ்ட் 2017 தளம் இதழில் வெளியான சிறுகதை



திரும்பி வந்ததுலேர்ந்தே எம் பொண்டாட்டீ சரியா இல்ல.. போறதுக்கு மின்னாடி நாஸ்டா கடையில பெருக்கி துடைக்கிற வேலை பாத்துச்சு.... சரி.. போயாச்சு.. வந்தாச்சு.. பழையப்படி வேலைக்கு போவ வேண்டியதுதானே... இன்னிக்கு போறேன்.. நாளைக்கு போறேன்னு தாக்காட்டிக்கிட்டே இருந்தா என்ன அர்த்தங்கிறேன்... தெனக்கூலிக்காரங்களுக்கு வேலைக்கு போனதான காசு.. மணி ஒம்போதாச்சு.. இன்னிக்கும் போறாப்பல தெரில.... இந்த லட்சணத்துல இவளுக்கு வீட்டு வேலைக்கு பண்ணயம் அடிக்குணுமாம் நானு.. போடீ மசிறு.. நீயாச்சு.. ஒன் தண்ணீயுமாச்சுன்னு கொடத்த துாக்கி கெடாசீட்டு போலாம்னுதான் தோணுது.. ஆனா நா அப்படிப்பட்டவன் கெடையாது.. வந்த கோவத்தை அடக்கிக்கிட்டேன்.
”எப்பா.. புத்தவ பையி கிளிஞ்சு போச்சுன்னு சொல்றேன்ல..” என் பெரிய பொட்டை.. எட்டு வயசிருக்கும்னு நெனக்கேன்.. அதிகாரம் துாள் பறக்கும்.. அதும் அவங்கம்மா நடுவுல காணலேங்கவும் எங்கிட்ட ரொம்ப எடுப்பாதான் அலையுது.. என்ன பண்றது.. பெத்த புள்ளையாச்சே.. அதட்டி ஒரு வார்த்தை பேசுனமுன்னா கண்ணு கலங்கீடுது..
”ஒங்கம்மாட்ட கேளு போ..” ன்னு வெரட்டுனேன்.

Thursday, 10 August 2017

அற்றைத்திங்கள் விமர்சனக்கூட்டம்

யாவரும் நிகழ்வு - 45
தலைமை : கே.என்.சிவராமன்
வாழ்த்துரை :
சீராளன் ஜெயந்தன் 
பாக்கியம் சங்கர்
கணபதி சுப்ரமணியன்
நூல் குறித்துப் பேசுபவர்கள்
கனவு ராட்டினம் குறித்து – கிருஷ்ணமூர்த்தி
அற்றைத் திங்கள் குறித்து – நாச்சியாள் சுகந்தி
வெட்டாட்டம் குறித்து கவிதைக்காரன் இளங்கோ
ஏற்புரை:
ஷான், மாதவன் & கலைச்செல்வி
தொகுப்பு : வேல்கண்ணன்
ஒருங்கிணைப்பு : யாவரும்.காம்
நாள் 19/08/2017 ; நேரம் : 05.30 மணி
இடம் : இக்சா மையம் சென்னை

அகநாழிகை ஆகஸ்ட் 2017

அகநாழிகை (ஆகஸ்ட் 2017)
சிறுகதைகள்
-------------------
1. கீர்த்தியின் அப்பா - கலைச்செல்வி
2. மாயம் - ஜீ.முருகன்
3. துளிர்தல் உதிர்தல் - ந.அருண் பிரகாஷ் ராஜ்
4. கிடாய் - அனோஜன் பாலகிருஷ்ணன்
5. தற்செயலாய்ப் பறிக்கப்பட்ட ஒரு மலர் - பொன். வாசுதேவன்
6. மிக ரகசிய இயக்கம் - தர்மு பிரசாத்
கட்டுரைகள்
------------------
1. விரியும் மலரைப்போல ஒரு பொழுதைப் பழக்குதல் - இளங்கோ
2. இரண்டு கவிகள் இரண்டு விதம் - லஷ்மி மணிவண்ணன்
3. உண்மையும் மகத்தான உண்மையும் - ஜீவ கரிகாலன்
4. காற்று வழி மனிதர்களும் கரையும் மனங்களும் - பி.என்.எஸ்.பாண்டியன் (அப்பணசாமி எழுதிய ‘கொடக்கோனார் கொலை வழக்கு’ நாவலை முன்வைத்து)
5. ரகசியங்களோடு வாழ்ந்து மறைந்தவர்கள் - சிவானந்தம் நீலகண்டன் (சீ.முத்துசாமி எழுதிய ‘இருளுள் அலையும் குரல்கள்’ குறுநாவல் தொகுப்பை முன்வைத்து)
6. கவனத்தை ஈர்க்கும் நுண்வரலாற்று ஆவணம் - துலாஞ்சன் விவேகானந்தன் (க.சபாரெத்தினம், சோ.பிரசாத் எழுதிய ‘ஆரையூர் கண்ணகை - வரலாறும் வழிபாடும்’ கட்டுரைத் தொகுப்பை முன்வைத்து)
7. வாசிப்புக்குச் சவாலான பிரதி - தேவகாந்தன் (சீனிவாசன் நடராஜன் எழுதிய ‘விடம்பனம்’ நாவலை முன்வைத்து)
கவிதைகள்
-----------------
சஹானா
சாந்தி மாரியப்பன்
சுபா செந்தில்குமார்
பாம்பாட்டிச் சித்தன்
கடங்கநேரியான்
நேர்காணல்
-----------------
“உலகம் சுருங்கிக்கொண்டு வருகிறது; நாம் பிரிந்து போய்க்கிடக்கிறோம்”
- சித்துராஜ் பொன்ராஜ்
சந்திப்பு: பொன். வாசுதேவன்
அஞ்சலி
------------
அணில் அகன்ற முன்றில் ‘ம.அரங்கநாதன்’
- அஜயன் பாலா
**
விலை: ரூ.120
இதழைப் பெற:
99945 41010 | 70101 34189 | aganazhigai@gmail.com

Monday, 7 August 2017

இலக்கியச் சிந்தனை 2016 ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதைகள்

   என் செல்வராஜ்



இலக்கிய சிந்தனை  அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் அந்த ஆண்டில் பத்திரிக்கைகளில் வெளிவந்த சிறுகதைகளில் பன்னிரண்டு சிறந்த கதைகளைத் தேர்ந்தெடுத்து பரிசளிக்கிறது.அதில்  சிறந்த ஒரு கதையை ஆண்டின் சிறந்த சிறுகதையாக ஒரு எழுத்தாளர் தேர்ந்தெடுத்து அந்த கதையின் தலைப்பில் 12கதைகளையும் வானதி பதிப்பகம் மூலம் வெளியிட்டு வருகிறது.2016 ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதைகளின் தொகுப்பை கைபடாமல் குச்சி ஐஸ் தயாரிப்பது எப்படி?மற்றும் கப்/கோன்/குல்ஃபி சாப்பிடுவது எப்படி என்ற கதையின் தலைப்பை புத்தகத்தின் தலைப்பாகக் கொண்டு வெளியிட்டிருக்கிறதுஇது இலக்கிய சிந்தனை அமைப்பின் 47 ஆவது ஆண்டு .இந்த பரிசளிப்பு விழாவும் புத்தக வெளியீடும் 2017ஏப்ரல் 14 ல் சென்னையில் நடந்தது. 2016 ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதையாக கைபடாமல் குச்சி ஐஸ்தயாரிப்பது எப்படிமற்றும் கப்/கோன்/குல்ஃபி சாப்பிடுவது எப்படிஎன்ற கதையை தேர்ந்தெடுத்தவர் இந்திரா பார்த்தசாரதி அவர்கள்.அவரின் பன்னிரண்டு கதைகளைப்பற்றிய மதிப்புரை தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளது.

  2016 ஆம் ஆண்டின் சிறந்த பன்னிரண்டு கதைகள்

   1. நாலு ஜனம் - ஜி விஜய பத்மா -   ( கல்கி)

   2. புரிதல் - லலிதா ராம்         ( குமுதம் தீராநதி)

   3. ஆழம் - கலைச்செல்வி     ( கணையாழி )

Thursday, 3 August 2017

அவனும் அவளும் இடைவெளிகளும்

நவம்பர் 2014 உயிரெழுத்தில் வெளியானக்கதை

கிடத்தப்பட்டிருந்த கணவனின் உடலுக்கு அருகே ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தாள் அவள். பத்து பதினைந்து பேர் கூடினாலே நிறைந்து விடும் முன்கூடத்தின் மையத்தில் அவனது உடல் கிடத்தப்பட்டிருந்தது. முன்புறம் ஒரு வராந்தா.. இரண்டு படுக்கையறை.. ஒரு சமையலறை என்ற அளவிலான கச்சிதமான வீட்டின் ஒவ்வோர் இடமும் துhய்மையால் நிறைந்திருந்தது. சிறிய அளவிலான தோட்டம் பராமாpப்புகளால் நிரம்பியிருந்தது. முன் வராந்தாவில் செருப்புக்கென ஒதுக்கியிருந்த சின்ன ரேக்கில் ஒரேயொரு ஜோடி பெண்களுக்கான செருப்பு மட்டுமே இருந்தது. கூடியிருந்த கூட்டத்தின் செருப்புகள் சிதறல்களாக வராந்தாவிலும் வெளியிலுமாக கிடந்தன.

அவனின் இறுதி தாpசன வாpசை யாராரோ தன்னிச்சையாக வந்து ஒழுங்குப்படுத்தியதில் உணர்ச்சி குவியலுடனோ.. இறுக்கமான மௌனத்துடனோ ஒரு நியதிக்குட்பட்டு நகர்ந்துக் கொண்டிருந்தது கர்ப்பகிரக கடவுளை தாpசிப்பது போல. அவள் மீதும் பட்டு சிதறிய பார்வைகளை அவள் எதிர்க் கொள்ளவே விரும்பாதவளாக அமர்ந்திருந்தாள். கடந்து முடிந்த வாழ்க்கை கண்களில் சோகமாக மையம் கொண்டிருந்தாலும் நாற்பது வயதிற்கான புஷ்டியான தேகக்கட்டும் மாஞ்சிவலை நிற உடலும் அவளை இன்னும் அழகியாகவே காட்டியதுபோராட்ட வாழ்க்கையில் நகர்ந்து போன உறவுகளில் இவளின் பிறந்த வீட்டு சொந்தம் மட்டுமே மிஞ்சியிருந்தது. அண்ணன்களும் அவர்களின் மனைவிகளும் திட்டாக ஒதுங்கி நின்றிருக்க அம்மா மட்டும் கூடத்தில் அமர்ந்திருந்தாள். அழுவதா.. நகர்வதா.. இருப்பதா.. இறந்து கிடக்கும் கணவனை நீர்வராத கண்களுடன் வெறிக்கும் மகளின் அருகில்; செல்வதா.. என்ற குழப்ப நிலையிலிருந்து அம்மா இன்னும் விலகவில்லை