நவம்பர் 2014 உயிரெழுத்தில் வெளியானக்கதை
கிடத்தப்பட்டிருந்த கணவனின் உடலுக்கு அருகே ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தாள் அவள். பத்து பதினைந்து பேர் கூடினாலே நிறைந்து விடும் முன்கூடத்தின் மையத்தில் அவனது உடல் கிடத்தப்பட்டிருந்தது. முன்புறம் ஒரு வராந்தா.. இரண்டு படுக்கையறை.. ஒரு சமையலறை என்ற அளவிலான கச்சிதமான வீட்டின் ஒவ்வோர் இடமும் துhய்மையால் நிறைந்திருந்தது. சிறிய அளவிலான தோட்டம் பராமாpப்புகளால் நிரம்பியிருந்தது. முன் வராந்தாவில் செருப்புக்கென ஒதுக்கியிருந்த சின்ன ரேக்கில் ஒரேயொரு ஜோடி பெண்களுக்கான செருப்பு மட்டுமே இருந்தது. கூடியிருந்த கூட்டத்தின் செருப்புகள் சிதறல்களாக வராந்தாவிலும் வெளியிலுமாக கிடந்தன.
அவனின் இறுதி தாpசன வாpசை யாராரோ தன்னிச்சையாக வந்து ஒழுங்குப்படுத்தியதில் உணர்ச்சி குவியலுடனோ.. இறுக்கமான மௌனத்துடனோ ஒரு நியதிக்குட்பட்டு நகர்ந்துக் கொண்டிருந்தது கர்ப்பகிரக கடவுளை தாpசிப்பது போல. அவள் மீதும் பட்டு சிதறிய பார்வைகளை அவள் எதிர்க் கொள்ளவே விரும்பாதவளாக அமர்ந்திருந்தாள். கடந்து முடிந்த வாழ்க்கை கண்களில் சோகமாக மையம் கொண்டிருந்தாலும் நாற்பது வயதிற்கான புஷ்டியான தேகக்கட்டும் மாஞ்சிவலை நிற உடலும் அவளை இன்னும் அழகியாகவே காட்டியது. போராட்ட வாழ்க்கையில் நகர்ந்து போன உறவுகளில் இவளின் பிறந்த வீட்டு சொந்தம் மட்டுமே மிஞ்சியிருந்தது. அண்ணன்களும் அவர்களின் மனைவிகளும் திட்டாக ஒதுங்கி நின்றிருக்க அம்மா மட்டும் கூடத்தில் அமர்ந்திருந்தாள். அழுவதா.. நகர்வதா.. இருப்பதா.. இறந்து கிடக்கும் கணவனை நீர்வராத கண்களுடன் வெறிக்கும் மகளின் அருகில்; செல்வதா.. என்ற குழப்ப நிலையிலிருந்து அம்மா இன்னும் விலகவில்லை.
ஐம்பது வயதை இன்னும் எட்டியிருக்கவில்லை அவன். ஒரேடியான புகழ் வெளிச்சத்தில் மூழ்கவில்லை என்றாலும் அறிவுஜீவிகளின் வாpசைக்கு நகர்த்தப்பட்டிருந்ததில் அபிமானிகள் மிகுந்திருந்தனர். இத்தனை மனிதர்களை கவர்ந்திழுத்திருப்பனுக்கு தன்னை கவருவதில் ஏன் அக்கறை ஏற்படவில்லை என்ற எண்ணத்தின் இறுதியில் அவளுக்கு கோபம் வந்தது. அவனை உற்று பார்த்தாள். அவன் தனக்கு வரமா.. சாபமா..? தனது வாழ்வில் எந்த பங்கையாவது எனக்கு ஒதுக்கியிருப்பானா.. தொpயவில்லை.. இன்று பண ரீதியாக கண் முன்னே நிற்கும் பெருங்குழப்பம் மன ரிதியாக எந்த தனிமைக்குள்ளும் தன்னை ஆழ்த்தவில்லை என்று உணர்ந்த போது திகைப்பாயிருந்தது அவளுக்கு. சட்டென்று அவன் கண்களை திறந்து பார்த்தால்..?
ஏனோ திறக்க வேண்டாமே என்று தோன்றியது அவளுக்கு. அதனுள் இருக்கும் தேஜசுக்கு பு+வை சுற்றும் வண்டுகள் போல மீண்டும் யாராரோ வந்து மொய்த்து விடுவார்கள். எழுப்ப முடியாத தருணத்தில் தன்னிடம் ஐக்கியப்பட்டு கிடக்கின்ற இவனை உரிமைக் கொண்டாடிக் கொள்வார்கள். எத்தனை பேர் வந்தாலும் அவளுக்கான அந்த இடத்தை யாராலும் கவர முடியவில்லை என்பது சற்று நிறைவாகவே இருந்தது. இந்த நிலை முன்பே இருந்திருந்தால் இருவருக்கும் இத்தனை சண்டைகள் ஏற்பட்டிருக்காது. அவனை எழுப்பி கேட்டால் சண்டைகளுக்கு காரணம் அவள் தான் என்பான். அவளின் குற்றஞ்சாட்டும் விரல்களோ அவனை நோக்கி நீளும். வாக்குவாதம் முற்றும் சமயங்களில் இருவருமே கை நீட்ட தயங்குவதில்லை.
“டைமை பாத்துக்கிட்டே இருந்துட்டு நேரமாச்சுன்னா பைல மூடி வச்சுட்டு வீட்டுக்கு வர்ற உத்யோகமில்ல இது.. உணர்வோட ஒன்றி கிடக்கிற விஷயம்.. கிட்டத்தட்ட உடம்பும் உயிரும் மாதிரி..”
“அதான் அவளோடயே ராத்திரி பகல் தொpயாம கிடக்குறீங்களோ..?”
“கலையயும்
இலக்கியத்தையும் ஆம்பளை பொம்பளைன்னு பிரிக்க முடியாதுடீ..”
“உங்க கலைக்கு பொண்டாட்டி எது.. மத்தவ எதுன்னு கூடவா பிரிக்க தொpயாது..?”
“அந்த வித்யாசம் தொpஞ்சதால தான் உங்கிட்ட பொறுமையா பேசுறன்.. உன்னை உனக்குள்ள உத்து நோக்குற விசயந்தான்டீ கலை.. இலக்கை இயம்பறது தான் இலக்கியம்.. கூர்மையான அக.. புற.. அவதானிப்போட நுணுக்கமான உணர்வுகளை ஆன்மாவுக்குள்ளேர்ந்து எடுத்து வெளிய வைக்கிற விசயம்டீ அது.. கண்டபடி பேசி அசிங்கப்படுத்திடாதே..”
“எனக்கு
புரியாத மாதிரி பேசுனா..? வாயை பொளந்துக்கிட்டு கேப்பேன்னு நினைச்சுட்டீங்களோ..? நீங்க பேசற கண்ட எளவையும் கண்ணெடுக்காம கேட்டுப்புட்டு ஆ..ஊன்னு கிறங்கி போயி கெடக்க நான் என்ன பைத்தியகாரியா அதுங்கள மாதிரி.. படமெல்லாம் எடுத்து தொலைச்சிட்டு வீட்டுக்கு வந்து புருசனா இருங்க.. கண்டவளோட கும்மாளம் அடிக்காதீங்கங்கறேன்..”
“நான் வேற.. இலக்கியம் வேற இல்லடீ.. புரிஞ்சுக்க.. உணர்வுக்குள்ள கிடந்து சதா நச்சாpச்சுக்கிட்டுருந்தது என்னதுன்னு இப்ப தான் கண்டு பிடிக்க ஆரம்பிச்சுருக்கன்.. எல்லாத்தையும் வுட்டுட்டு வான்னா எப்படி வர முடியும்..?”
“எல்லாத்தையும் வுட சொல்லல.. அவள வுட்டுட்டு வந்துடுங்க..”
“எவளைடீ
வுட சொல்ற..?”
“அதானே..
கணக்குவழக்கு இருந்தாதானே எவளைன்னு தொpயும்.. படத்துக்கு படம் ஒருத்திய சேர்த்துக்கிட்டா எவளைன்னு கண்டீங்க.. இந்த சினிமா முடிஞ்சவொடனே இவ சவகாசம் முடிஞ்சுடுமா..? இல்ல இழுத்துக்கிட்டே அலைய போறீங்களா..?”
“ஏன்டீ அந்த பொண்ணையே வம்புக்கிழுக்கிற.. அவ மட்டுமா நடிக்கிறா.. ஆம்பளைங்களும் தான இருக்காங்க..”
“எதுக்கு..? ஒப்புக்கு சப்பாணிக்கா..?”
“வாய அடக்கு.. ஆம்பள பொம்பளைன்னாலே இதை தவிர வேறொண்ணும் தொpயாதா..?”
“அப்ப இதெல்லாம் இல்லேங்கிறீங்களா..? இல்லேன்னா.. அவ மட்டுமில்ல.. இத்தனை பொம்பளைங்க ஏன் உங்கள சுத்தறாளுங்க.. பாத்துக்கிட்டுருந்த கவுருமெண்ட் வேலைய விட்டீங்க.. ஏன்னு கேக்க கூடாதுன்னுட்டீங்க.. குறும்படம் எடுக்கறேன்னு கை காசை செலவழிச்சு காடுமேடெல்லாம் சுத்துனீங்க.. எல்லா எழவையும் பொறுத்துக்கிட்டு கிடந்தேன்.. இப்ப கண்ட பொம்பளைங்களோட சகவாசம் வச்சுக்கிட்டு பொண்டாட்டின்னு ஒருத்தி இருக்கறதையே மறந்துட்டு ஓடுனா பொறுத்து போறதுக்கு நான் என்னா நீங்க வச்சுக்கிட்டு அலையுற கூத்தாடி பொம்பளைங்களா..? பாவீ.. எவன் கெடைப்பான்னு அலையுதுங்க ஒவ்வொண்ணும்.. படம்; முடிஞ்சுடுச்சுன்னா அடுத்த படத்துக்கு ஆளை தேட வேண்டியதுதான.. இன்னும் சுத்திக்கிட்டே அலைஞ்சா..?”
“தொpயுதுல்ல.. என்னை அடிச்சு போட்டாலும் காசு தேறாதுன்னு தொpஞ்சும் எதுக்கு வர்றாங்க..?”
“யோக்கியம்
மயிறு மாதிரி என்ன கேக்குறீங்க.. படுத்துக்க தான் வர்றாளுங்க..”
“ஏன்.. நாம படுத்துக்கலயா..?”
“அது என் தலையெழுத்து..”
“அதான்டீ
நானும் சொல்றன்.. தலையெழுத்தேன்னு நீ இருக்;கிற.. கட்டுன பொண்டாட்டியாச்சேன்னு நானும் நெனக்கிறன்.. ஆனா இது அப்படியில்ல.. எனக்குள்ள ஊறி கிடக்கிற விஷயங்களை நான் நெனச்சா மட்டும் வெளிய கொண்டு வர முடியாது.. அதுக்கு ஒரு டீம் வேணும்.. ஒரு நடிகை வேணும்.. நடிகன் வேணும்.. இடம் வேணும்.. அப்றம் பணம் வேணும்.. காமிராமேன்.. டெக்னீஷியன்.. எடிட்டர்.. சவுண்ட் இன்ஜினியர்..”
“போதும்
நிறுத்துங்க.. உங்க கிட்ட வேலை பாத்தவங்க வேறு இடம் போகலையா.. இல்ல வேற படம் எடுக்கலையா.. இப்ப ஒருத்திய புடிச்சுக்கிட்டு ரெண்டு படமா தொடர்ந்து அவளயே நடிக்க வைக்குறீங்க..”
“அவ உன்னை மாதிரி மடசாம்பிராணி இல்ல.. நான் என்ன நினைக்கறேன்னு துல்லியமா அவளால புரிஞ்சுக்க முடியுது.. என்னோட ஒவ்வொரு அசைவும் அவளுக்கு பழகி போச்சு. ஸ்கிரிப்ட காட்டினாலே கதைக்கு தேவையானதை கொண்டுட்டு வர முடியும் அவளால.. சொல்ல போனா இந்த படத்துக்கு அவ எங்கிட்ட நயா பைசா வாங்கிக்கல..”
“அதான் வேற வழியில வாங்கிக்கிறாள்ள..” திடீரென்று கோபம் தலைக்கேறி கத்தினாள். “நீ போன மாதிரி நானும் போகவா..?”
“உன்னால
முடியாதுடீ..”
“ஏன் முடியாது.. பொறமை உனக்கு.. உன் பொண்டாட்டி உனக்கு மட்டும் தான் சொந்தமா இருக்கணும்.. அப்டி தானே.. அதையே தானே நானுஞ் சொல்றன்;..” வார்த்தைகளில் மாpயாதை தப்பியிருந்தது.
“பொஸஸிவ்நெஸ்லெல்லாம் இல்லடீ.. உன்னால முடியாது.. ஏன்னா உன்னோட இயல்பு அது இல்ல.. அவ்ளோ தான்..”
“நீ யாரு என்ன ஜட்ஜ் பண்ண..? கட்ன பொண்டாட்டி மனச புரிஞ்சுக்க துப்பில்லாதவனுக்கு அவ இப்படீன்னு கணிக்க மட்டும் தொpயுமாக்கும்..”
“ஏய்.. கோவத்த கிளராதே.. ச்சே.. வீட்டுக்கு வந்தா நிம்மதியே தொலஞ்சு போவுது..”
“அதான் அந்த பொம்பள வீட்லயே வுளுந்து கெடக்குறீயோ..? ஒன்ன மாதிரி ஓடுகாலிக்கு அந்த மாதிரி ஒடுகாலி தான் சாpப்பட்டு வரும்னு தொpஞ்சு போச்சோ..?”
“ஆமாண்டீ..
அவ அப்டிதான்.. நானும் அப்டி தான்.. அப்டி தான் படுப்பேன்..” கண்கள் கோபத்தில் படபடத்தது. அவளை ஓங்கி அறைந்தவன் அதே கோபத்தோடு வெறுங்கால்களோடு தெருவில் இறங்கி நடந்தான். ‘பொம்பள தானே.. என்ன செஞ்சாலும் அடங்கி தானே போகணும்ங்கிற திமிறு..’ கன்னத்தை விட மனம் அதிகமாக வலித்தது. இப்போது கூட படுக்க வைக்கப்பட்டிருந்த அவனின் உடலின் மீது கோபம் வந்தது அவளுக்கு.
‘எங்க வீட்டுக்கு அவரோட பாடிய எடுத்துட்டு வந்துடுங்க..’ என்றாள் அவன் உயிர் விட்ட சேதி தொpந்த நிமிடங்களிலேயே. ‘எங்க வீடு’ என்ற வார்த்தைக்கு அவள் வேண்டுமென்ற அழுத்தம் கொடுத்தது வெளிப்படையாக தொpந்தது. ‘பொpய ஆளுங்கள்ளாம் வருவாங்க.. வீடு பத்தாது மேடம்.. சாருக்கு ரசிகர் கூட்டம் ரொம்ப அதிகம்.. பொpயாளுங்களுங்களெல்லாம் வைக்கற மண்டபத்துல சாரோட பாடியையும் கொண்டு வச்சிடலாம்.. அங்க வச்சே சடங்கு சம்பிரதாயமெல்லாம் பண்ணறதுக்கு பர்மிஷனெல்லாம் கூட வாங்கியாச்சு மேடம்..’ துக்கத்திலும் பவ்யம் குறையாது கேட்ட உதவியாளர்களிடம் முகத்திலடித்தாற் போல் தீர்க்கமான தனது முடிவை சொல்ல முடிந்தது அவளால். ‘என் வீட்ட தாண்டி அவரு பொணத்தை எடுத்துட்டு போக கூடாது.. இதென்ன பொது சொத்தா மண்டபத்துல போட்டு வைக்க..?’
இப்போது கூட அவளின் உதாசீனத்தை பொpதுப்படுத்தாமல் முகம் மறைத்த மாலைகளை அவ்வப்போது களைந்து கொண்டேயிருந்தனர் அவனின் உதவியாளர்கள்.. அவர்களின் வீட்டு பெண்களும் இறுக்கமான முகங்களோடு கூடத்தில் அமர்ந்திருந்தனர். அவர்களுக்கும் தத்தமது கணவர்களின் மேல் அதீத கோபம் இருக்கும். அதை பற்றி அவனிடம் கூட கேட்டிருக்கிறாள் அவள். “அசிஸ்டெண்ட்டுங்கிற பேர்ல சுத்திக்கிட்டே கெடக்குதுங்களே சிலதுங்க.. அதுங்களுக்கெல்லாம் குடும்பம்.. குட்டின்னு ஒண்ணுமில்லையா..?”
“உன்னை மாதிரி ராட்சசீ இல்லடீ அதுங்கள்ளாம்.. ரெண்டு நாளா.. ரெண்டு மாசமா..? எத்தனை நாளு மாமா ஷுட்டிங்.. நான் பாத்துக்குறன்னு சொல்லுங்கடீ அதுங்களௌ;ளாம்..”
“இப்டி நேரங்காலம்.. நாளு நட்சத்திரம்னு தொpயாம அலைவேன்னு சொல்லியே கல்யாணம் பண்ணியிருப்பானுங்க.. உன்னை மாதிரி யாரும் ஏமாத்தியிருக்க மாட்டாங்க...”
“என்னாடீ
உன்னை ஏமாத்தீட்டாங்க.. சோறு போடுறன்.. துணிமணி வாங்கி தர்றன்.. உங்கூட படுத்துக்கறன்.. வேறென்னாத்தை ஏமாத்திட்டேன்..?”
“கவுர்மெண்ட் வேலைன்னு சொன்னதை நம்பி தானே எங்கப்பா கட்டிக் குடுத்தாரு.. எல்லாத்தையும் தொலைச்சுட்டு நிக்குறீங்களே.. இதுல ஏமாத்தல..?”
“உங்கப்பன்
கூட தான் அம்பது பவுன் போடறேன்னு அஞ்சு பவுன் போட்டாரு.. என்னான்னு கேட்டுருப்பனா இது வரைக்கும்..”
“ஓஓ.. சாரு சம்பாதிக்கிற சம்பாதிப்புக்கு அம்பது பவுன் கேக்குதோ.. வேணும்னா அன்னைக்கே அடிச்சு கேட்டு வாங்கியிருக்குணும்.. போடறத போடுங்க.. வரதட்சணையெல்லாம் வாங்க மாட்டேன்னு சொல்லிட்டு எங்கப்பாவோட காசுல சொளையா புத்தகமா வாங்கிக்கும் போது அது டெளாpயா தொpயிலயா..”
“ஆமா.. அதுக்கு தான் கேட்டாரே ஒரு கேள்வி.. உங்கப்பா.. ஏன் மாப்ள.. லெண்டிங் லைப்ராp வச்சு சைடு பிசினஸ் பண்ண போறீங்களான்னு.. ச்சே.. சாpயான ஞான சூனியம்.. அவரு பெத்த புள்ள நீ எப்டி இருப்பே.. அப்பவே நீ இப்டீன்னு தொpஞ்சா வேணாம்னு சொல்லியிருப்பேன்..”
“இப்ப மட்டும் என்னை ரொம்ப படிச்சுட்டீங்களாக்கும்.. வேணாம்னு சொல்லியிருந்தா நானாவது நிம்மதியா இருந்துருப்பேன்.. கட்டுனவளை கண் கலங்காம வைச்சுக்க தொpயாத உன்னை விட்டுட்டு அந்த ஞானசூனியம் எனக்கு வேற மாப்ளை பாத்துருப்பாரு.. சந்தோசமா வச்சிருக்கறதுன்னா என்னான்னே தொpயாத அறிவாளிக்கு கட்டிக் குடுத்திருக்க மாட்டாரு..” ஓங்கி அழுதவளை அறைந்தான்.
“சந்தோஷமா
வச்சுக்கறதுன்னா என்னாடீ.. அலுத்து களைச்சு ஒரு மாசம் கழிச்சு வர்றவன்கிட்ட தெருவிலயே நின்னு சண்டை புடிக்கறதா..? ச்சே.. சனியன்.. சனியன்.. உன் செலவுக்கு தான் பணத்த குடுத்து அனுப்படறேன்ல்ல.. தின்னுட்டு.. துhங்கீட்டு.. உங்கப்பன் வீட்டுக்கு போய்ட்டு.. ஊர்வம்பு இழுத்துக்கிட்டு இருக்கலாமில்ல.. நான் இங்க இருந்தாலும் அதை தான செய்யற..?” ஆவேசம் தெறித்தது அவன் பேச்சிலும்.
“பாடிய எப்ப எடுப்பாங்க..” யாரோ கேட்டது காதில் விழுந்தது அவளுக்கு. எடுத்து விடுவார்களோ என்ற பயம் தோன்றியது. ஆவேசங்கள் அடங்கி கண்ணாடி பெட்டிக்குள் ஒடுங்கி கிடந்தவனை பார்த்துக் கொண்டேயிருக்க தோன்றியது அவளுக்கு. ‘புத்திசாலி பையன்.. இப்ப பாக்கறது சின்ன உத்யோகம்ன்னாலும் போவ போவ புரமோசன் வந்துடுங்கிறாரு சம்பந்தி.. கட்டும் செட்டுமா நீ குடும்பம் பண்ணுனீன்னா தோதா வரும்மா.. அரைக்காசு உத்யோகம்ன்னாலும் அரண்மனை உத்யோகமில்லையா..’ அப்பாவின் பேச்சை தட்ட முடியாது என்றாலும் அவனை பார்த்த அந்த முதல் தருணத்தில் அவளுக்கும் பிடித்து தானிருந்தது. அடர்ந்த கேசமும் உயர்ந்த உருவமுமாக மாநிறத்தில் இருப்பான். எவ்வளவு சம்பளம் வாங்குகிறோம் என்று அவனுக்கே தொpயாமல் சம்பள சீட்டோடு மனைவியிடம் நீட்டுவான். சமையலில் கத்துக்குட்டியான அவளுக்கு சாப்பாட்டு விஷயங்களில் கூட அதிக சிரத்தை எடுத்துக் கொள்ளாத கணவனின் குணம் ரொம்பவும் பிடித்து போனது. ஆனால் வீடு முழுவதும் பரப்பியிருக்கும் புத்தகங்களை நகர்த்தி வைத்து விட்டால் சட்டென்று கோபப்படுவான். சமூக அக்கறை பேச்சில் தெறிக்கும்.
இரவுகளில் உருகி உருகி பேசுவான். முயங்கி மயங்கியதில் அவளின் கைகள் தானாகவே அவனை துலாவும். தேடிக் கொண்டு மொட்டை மாடிக்கு வருவாள். அமாவாசை இரவில் கூட இருண்டு பொpய குடை போல விரிந்து கிடக்கும் வானத்தை கைகளை தலையணையாக்கி பார்த்துக் கொண்டிருப்பான். சற்று முன் மோகித்து கிடந்தவன் இவனோ என்று அவனை உற்று பார்க்கும் போது அவன் ஒரு மோனநிலையில் இருப்பது போல் தோன்றும். நட்சத்திரங்களின் அழகையும்.. நிலவையும் சிலாகித்து பேசுவான். கவிதைகள் சொல்வான். அதில் அவளின் அழகும் விளாவி வரும். அந்த ஓரிரு வாpகளுக்காக அவன் பேசுபவற்றை எல்லாம் கேட்டுக் கொள்வாள். காலப்போக்கில் அந்த வாpகள் காணாமல் போக அவள் எதுவும் பேசாது இறங்கி விடுவாள்.
அதே அரசாங்க வேலையில் தொடர்ந்திருந்தால் ஐம்பதை நெருங்கும் இந்த வயதில் நல்ல அந்தஸ்தில் இருக்க முடியும். உறவுக்காரர்களும் இவ்வளவு ஒதுக்கம் காட்டியிருக்க மாட்டார்கள். ஆனால் இப்போது இருப்பது போல் இவனின் மரணத்தை இவ்வளவு எளிதாக எடுத்துக் கொள்ள முடியுமா.. என்று தோன்றியது.
இறுதியாக அவன் எடுத்த படம் வணிகாPதியாகவும் வெற்றி பெற்றிருந்தது. கைகளுக்கு புதிதாக வளையல்கள் வாங்கி கொடுத்தனுப்பியிருந்தான். சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்று சொல்லியிருந்தானாம். அந்த நேரத்தில் தான் சாவு வந்து அழைத்து விட்டது அவனை. தாய் வீட்டில்; சிரமப்படாமலேயே வளர்ந்திருந்தாள் அவள். ‘அவளுக்கென்னா.. அவ புருசன் டிவியில.. சினிமாவுல.. புக்குல எல்லாம் வர்ற திமுறு..’ உடன்பிறப்புகள் பொறமையுடன் பார்த்தார்கள். சகோதரர்களின் புது வீட்டு கிரகபிரவேசத்தில் பட்டுவேட்டி சரசரக்க நடந்த கணவனை வந்தவர்கள் திரும்பி திரும்பி பார்க்க அவளுக்கோ பளபளத்த வீட்டின் தரைகளும் புது வீட்டின் வாசனையும் பித்தம் கொள்ள செய்தது. “உன் மாப்ள ரொம்ப உசரத்துக்கு போயிட்டாரு..” தன்னிடம் வருபவைகளை மகளின் பெருமிதத்தோடு தள்ளிய அம்மாவை ‘எல்லாம் இக்கரைக்கு அக்கரை பச்ச கதை தான்..’ என்று நொடித்து அவளிடமே திருப்பி அனுப்பி விட்டாள். “ஆம்பளன்னா அப்டி இப்டி இருக்க தான் செய்வாங்க..’ என்ற அம்மாவிடம் கோபம் தான் வந்தது அவளுக்கு.
“இப்பல்லாம் அவ பேசறதே இல்ல போலருக்கு..” ஒருநாள் வம்பிழுக்கிழுத்தாள் அவனை.
“புரிஞ்சா
சாp..”
“அப்டி சொல்லல.. அவளை வுட்டுட்டு வேற பக்கம் தாவீட்டதா கேள்விப்பட்டேன்..” இழுத்தாள்.
“உனக்கு
மட்டும் ஏன்டீ இப்டி புத்தி போவுது.. இங்க வா.. வந்து உட்காரு..” அன்பாக பேசியவனின் அருகில் முறுக்கிக் கொண்டது போல அமர்ந்தாள். “ஒரு நல்ல படைப்பு வெளிய கொண்டு வர்றோம்னா கதைய யோசிக்கறது மட்டுந்தான் நானு.. அப்றம் நாங்கள்ளாம் உட்கார்ந்து பேசி பேசி அதை திரைக்கதையா மாத்தறோம்.. வசனமாக்குறோம்.. காட்சியாக்குறோம்.. இசையை உள்ள கொடுத்து அதை பு+ரணமாக்குறோம்.. இதுக்கு நேரங்காலம் கிடையாது.. ஒரு ஃப்லோல போயிட்டிருக்கும் போது போதும்.. நாளைக்கு பாத்துக்கலாம்னு நிறுத்திட முடியாது.. நடுவுல பசிக்கும்.. சாப்புடுவோம்.. துhக்கம் வரும்.. துhங்குவோம்.. துhங்கும் போதே கனவுல எதாவது யோசனை வரும்.. எழுந்துக்குவோம்.. அதை பேசி பேசி கதையாக்குவோம்.. அது மாதிரி தான் நீ சொல்ற படுத்துக்கறதும்..”
“அப்ப..
கற்பு.. ஒழுக்கம்.. அப்டீன்னெல்லாம் சொல்றாங்களே..”
“சொல்றவங்கள போயி கேளு..” வெடுக்கென்று பேசியப்படியே எழுந்தான். தெரு கதவு திறந்து வெளியேறும் ஓசை கேட்டது. இவனை ஜெயித்தே ஆக வேண்டும் என்ற வெறி தோன்ற அப்படியே கிடந்தாள். இவன் இந்த மாதிரியான ஆள் என்று இவனை பற்றி கணிக்க தொpயாத அப்பாவின் மீது கோபம் வந்தது. இன்றைய தினத்தை விட அன்று தான் அதிகமாக அழுகை வந்தது அவளுக்கு. எதுவுமே நடக்காதது போல் வெளியே சென்று திரும்பி வந்தவன் படுத்து கிடந்தவளின் அருகே அமர்ந்து கேட்டான். “ஒரு ரெண்டாயிரம் இருக்குமான்னு பாரேன்..”
“நான் என்னா நோட்டா அடிக்கறன்.. இல்ல நீங்க சம்பாதிச்சு காசு எதும் குடுத்து வச்சிருக்கீங்களா..?”
“இல்லேன்னா
இல்லேட்டு போயேன்.. சாp.. நான் பணத்துக்கு எங்கயாவது ஏற்பாடு பண்ண முடியுமான்னு பாக்றன்..” சட்டையை கழற்றாமலேயே நகர்ந்தவனை பார்த்ததும் மனம் கேட்கவில்லை அவளுக்கு.
“இந்தாங்க..
இருக்கறது இவ்ளோ தான்..” பணத்தோடு வந்தவளின் மற்றொரு கையில் மோர் இருந்தது. கடகடவென்று அவள் நீட்டிய மோரை குடித்து விட்டு டம்ளரை அவளிடம் நீட்டினான். “என்ன அவ்ளோ அவசர செலவு..?” அருகில் அமர்ந்தாள். வெயிலில் களைத்து வந்திருந்தவனின் மீது லேசான வியர்வை நாற்றம் வீசியது. மாநிற தேகம் கருத்திருந்தது. எத்தனை அழகானவன்.. ஏன் இப்படி மாறி போனான்.. தலையை கோதி விட்டாள். வேலைக்கு சாpவர போகவில்லை.. சம்பளத்துடனான விடுமுறை.. அரைசம்பளத்துடன் விடுமுறை.. சம்பளமில்லாத விடுமுறை.. எல்லாம் கழிந்து போனதில் குறைந்தபட்ச பென்சன் வருமளவுக்கான சர்விஸ் கூட இல்லாத நிலையிலும் வேலையே வேண்டாம் என எழுதிக் கொடுத்து விட்டு வந்து விட்டான்.. ‘சர்விஸ்ல இருக்கறவரைக்கும் சம்பள காசு.. பிற்பாடு சாவற வரைக்கும் பென்சன் காசு..’ அப்பா சொன்னது நினைவிற்கு வந்தது அவளுக்கு. நல்லவேளையாக அவளுக்கு அரசாங்க பள்ளியில் இடைநிலை ஆசிரியர் வேலை சீனியாரிட்டி அடிப்படையில் கிடைத்திருந்தது. அவன் கேட்கும் போது பணம் கூட கொடுக்க முடிந்தது.
“அதா.. அசோசியேட்டு வீட்ல ஒரு பொpய காரியம்.. பாவம்.. அழுவ கூட முடியாம கைய பிசைஞ்சுக்கிட்டு நிக்குறான்..” பணத்தை வாங்கிக் கொண்டு ஓடினான். சமைத்த உணவு சாப்பிட ஆளின்றி கிடந்து போனது. அடுத்த நாள் மதியம் தான் வர முடிந்தது அவனால். பாசம் என்ற அஸ்திரத்தால் தான் தோற்று போனது புரிந்தது அவளுக்கு.
வீட்டு சாவியை வாங்கி செல்ல அவளின் பள்ளிக்கு வந்திருந்தான் அவன். “எங்கம்மா வீட்ல சாவு நடந்தப்ப வேலை கிடக்குதுன்னு ஓடுனீங்க.. ஊரான் வீட்டு சாவுன்னா பால் தெளிக்கறவரைக்கும் பக்கத்துலயே இருக்க சொல்லுதா..?” அவளின் கத்தலில் இரண்டொரு டீச்சர்களின் தலை எட்டிப் பார்த்தது.
“உங்கம்மா
வீட்ல எடுத்து கட்டி செய்ய ஆளுங்க இருக்காங்க.. இவன் ஒண்டியாளு.. அம்மா மட்டுந்தான்.. சாங்கியம் சொல்லி தர கூட ஆளில்ல.. ஊர வுட்டு வந்துட்டதால சொந்தக்காரனுங்கள்ளாம் வெலகி போயிட்டானுங்க.. கரேமுரேன்னு அழுவுறான்.. என்னா பண்ண சொல்ற..?”
“அதுக்குன்னு..? பொண்டாட்டி இருக்காளா.. செத்தாளான்னு கூட கேக்க முடியாம ஊர் எழவ எடுக்க சொல்லுதோ..?” கண்கள் ஊற்றெடுக்க வாய் தன்வசமிழக்க தொடங்கியது. “என்னா பண்ணீட்டேன்னு இப்டி கத்தி ஊரக்கூட்டுற..?” சற்று பிரபலமாக தொடங்கியிருந்த அவனையும் அழுதுக் கொண்டிருந்த அவளையும் வியப்பாக பார்த்தது ஊர். சாயங்காலம் திரும்பி வரும் போது வீடு பு+ட்டியிருந்தது. சாவியை பக்கத்து வீட்டில் கொடுத்து விட்டு போயிருந்தான். அவனின் அலுவலகத்திற்கு போன் செய்தாள். யாரோ ஒருவன் எடுத்தான். “சார்.. அவுட்டோர் ஷுட்டிங்க்கு லொகேஷன் பாக்க போயிருக்காங்க மேடம்..” என்றான் பவ்யமாய்.
தனிமைகள் பழைய ஞாபகங்களை கிளறி விடும். திருமணமான முதல் இரண்டு வருடங்கள்; இலக்கிய கூட்டம்.. புத்தக வெளியீட்டு விழா.. கவியரங்கம்.. என்று ஏதோ ஒரு காரணங்களால் அவனது மாலை நேரத்தை நிறைத்துக் கொள்வான். “இன்னிக்கு ஏதும் புரோகிராம் இல்லையே.. சினிமாக்கு போலாம் வர்றீங்களா..?” என்பாள் கண்களில் ஆர்வம் வழிய. “நாளைக்கு இலக்கிய பேரவை ஆண்டு கூட்டம்.. நான் தான் ஆர்கனைஸ் பண்றேன்.. அந்த வேலை இன்னும் முடிஞ்சபாடில்ல.. ரெண்டு நாள் ஆபிசுக்கு லீவு போட்டுடுலாம்னு இருக்கன்.. ப்ளீஸ்.. இன்னோரு நாள் போலாமே..” பேசிக் கொண்டிருக்கும் யாராரோ வந்தார்கள். “வாங்க தோழரே...” உற்சாகமாக வரவேற்று அவர்களுடன் வெளியே கிளம்பும் போது ஞாபகமாக சொல்லி விட்டு சென்றான். “வீடு பு+ரா புத்தகமா தானே இருக்கு.. எதையாது எடுத்து வச்சிட்டு படி.. வந்துடறேன்..” பிறகு அவனுக்கு உலகமே மறந்து போனது.
அவனது குறும்படம் வெகுவாக பேசப்பட்ட போது தோள்களில் இறக்கை வைத்தது போலிருந்தது அவளுக்கும். நிறைய நண்பர்களும் வாழ்த்துக்களும் சுமந்து அலுத்து கிடந்தவனை எழுப்ப தோன்றவில்லை. எதிர்ப்புகளும் ஒளிந்து வாழும் தருணங்களும் கூட ஏற்பட்டது. அப்போதெல்லாம் மிகவும் தளர்ந்து போவாள் அவள். எங்கெங்கோ ஓடி ஒளிந்து பிறகு தனது வீட்டிலேயே தஞ்சமடைய வந்த கணவனை கண்டதும் அவளின் அத்தனை வலிகளும் மறந்து தான் போனது. அவள் ஊட்டி விட்ட உணவை அவசரமாக உண்டு நேரம் காலம் தொpயாது அலுத்து போய் உறங்கினான். இப்போது கூட அலுத்துக் கிடப்பவன் போல் தான் தொpந்தான் அவளின் கண்களுக்கு.
அழுக்குரல்கள்.. நொpசல்கள் என கூடம் திமிலோகப்பட்டது. யாரோ பற்றிக் கொள்வார்களோ என்ற பயந்தது போல் அந்த குளிர்பெட்டியின் கைப்பிடிகளை பிடித்தப்படியே அமர்ந்திருந்தவளுக்கு ஏதோ எண்ணம் தோன்ற அந்த இடத்தை விட்டு எழாமலேயே ஒதுங்கி நின்றிருந்த அண்ணன்கள் இருவரையும் அழைத்து வரச் செய்தாள். ‘சும்மாவே நின்னுக்கிட்டு இருந்தீங்கன்னா வேலைய யாரு கவனிப்பாங்க..’ குரல் சற்று அதட்டலாவே ஓங்கி ஒலித்து போலிருந்தது. உடலை விட்டு நகரவில்லை.
அவனை பற்றிய கிசுகிசுப்புகள் அதிகமாகும் போது அண்ணன்களை தான் துணைக்கு அழைத்திருந்தாள். ‘என் இஷ்டம்;;..’ என்பது போல் நடந்துக் கொண்ட தங்கையின் கணவனை அதன் பிறகு பிணமாக தான் பார்த்தார்கள் மச்சினன்மார்கள் இருவரும். ‘உங்கப்பாவும் போயிட்டாருடீ.. லேட்டா கிடைச்சாலும் ஆண்டவன் புண்ணியத்துல உனக்கு வேல கிடைச்சுருக்கு.. அதை மட்டும் எந்த காரணத்துக்காகவும் விட்டுடுடாத..’ அப்பா பிணமான அன்று அம்மா அடிக்கடி இதையே சொல்லி அழுதுக் கொண்டிருந்தாள். ஆனால் வெளிப்புற படப்பிடிப்புகளும் கிசுகிசுக்களும் அதிகாpத்து போக அவளால் அம்மாவின் பேச்சை கேட்க முடியாமல் போனது.
மறுநாள் ஷுட்டிங் கிளம்புதற்காக அவனுக்கு துணிமணிகளை அடுக்கும் போதே தனது துணிகளையும் அடுக்கி கொண்டே கேட்டாள் அவள். “நான் வர்றது உங்களுக்கு இடைஞ்சலா தானே இருக்கு..”
“உன் நோக்கம் நல்லாயிருந்தா நீ வர்றதுல எனக்கொண்ணும் பிரச்சனையில்ல.. என்னை வேவு பாக்க வர்றது தான் எனக்கு பிடிக்கல..”
“தொpயுமே.. என்னை கண்டா ஒதுங்கறதும் எல்லா மேக்கப்காரிங்ககிட்டயும் வழியறதும்..”
“கத்திரிக்கா சாம்பார் வைக்கறவக்கிட்ட கலையை எதிர்பாக்கறது எந்தப்பு தான்.. இரத்தக்கொதிப்பு வந்துடுச்சு.. சுகர் வந்துடுச்சுன்னு நீ குடுக்கிறியே பத்திய சாப்பாடு.. அதுல நிக்கலடீ என் உசிரு.. இதுல தான்டீ நான் வாழ்ந்துக்கிட்டுருக்கன்.. இதான்டீ என்னோட சுயம்.. தேடி தேடீ அனுபவிக்கும் போது கூட பத்தல.. பத்தலன்னே தோணுதே.. சாவு கூட இதுக்கு எல்லை இல்லியோன்னு நினைக்க வைக்குது..”
“நான் என்ன பண்ணனும்னு சொல்லுங்க செய்யறன்.. உங்களுக்காக வேலையவே துhக்கி போட்டுட்டு வந்தன்.. இன்னும் என்ன செய்யுணும்னு சொல்லுங்க..”
“இதெல்லாம்
சொல்லிக் குடுத்து வர்றதில்ல.. பிறப்புலயே இருந்துருக்கணும்.. நீ அவள வச்சிருக்கியா.. இவள வச்சிருக்கியான்னு கேக்கறீயே.. என் படத்துல நடிக்க வர்ற பொண்ணுங்கள்ளாம்; வயித்து பொழப்புக்கு வர்றங்களோ.. புகழை தேடி வர்றாங்களோ.. வேறெதுக்கு வர்றாங்களோ.. தொpயாது.. ஆனா அதுங்க வயசுல எனக்கு இதெல்லாம் உதிச்சிருக்குமான்னு தொpயில.. நடிக்கறேன்னு வந்தவங்க கிளாப் அடிக்கறதுலேர்ந்து சாங் வைக்கறவரைக்கும் யோசிக்கறாங்க.. நான் ஆர்ட் பிலிம் எடுக்கறவன் தான்.. சம்பாத்தியம் கிடையாது தான்.. தொpஞ்சும் எனக்காக இன்னும்.. இன்னும்னு தேடினாலும் திருப்தி வராம தேடுறாங்க.. இதையெல்லாம் வெறும் பணத்தோட என்னால பொருத்தி பார்க்க முடியல..” உணர்வு வயப்பட்டு பேசும் கணவனை பார்த்தாள்.
“சாPங்க.. நானும் கத்துக்கறன்..” என்றாள் சட்டென்று அடங்கி போனவளாக. கற்றுக் கொள்வதும் தனது கடமைகளுள் ஒன்று என தோன்றியது. ஆனால் புத்தகங்களுக்குள் மனம் செல்லவில்லை. அந்த சினிமாக்காரியின் இறங்கி போயிருந்த கழுத்தும் இறுக்கி பிடித்த உடைகளும் நினைவிலாடியது. ஏதோ தோன்ற கணவன் ஒரு முறை வாங்கி கொடுத்த டைட்டான சூடிதாரை எடுத்து மாட்டிக் கொண்டாள். கண்ணாடியில் பார்க்கும் போது அந்த சினிமாக்காரியின் சாயல் இருந்தது போலிருந்தது. எனக்கு மட்டும் என்ன.. முப்பந்தஞ்சு தான ஆவுது..
மொட்டை மாடியில் மல்லாந்து கிடந்தவனிடம் வந்தாள்.
“தலைகாணி கூட வச்சுக்காம படுத்துருக்கீங்க..?”
“வேண்டாமுன்னு தான்.. இன்னிக்கு கரடுமுரடான லொகேஷன்.. ஏறி எறங்குனது முதுகு வலிக்குது..”
“நான் புடிச்சு விடவா..”
“ம்ம்..ம்ம்..”
“உங்களுக்கொண்ணுனா எனக்கு தான் பதறுது.. கண்ட செறுக்கிங்களுக்கும் இந்த பதட்டம் வருமாக்கும்..”
“என்னால
சண்டையெல்லாம் போட முடியலடீ.. நல்லா அமுக்கி வுடேன்..”
“கொஞ்சம்
பொறுத்துக்கங்க.. அரிசி தவுட சூடு பண்ணி துணியில சுத்தி எடுத்துட்டு வாரன்.. சட்டுன்னு கேக்கும்..”
“ம்ம்..ம்ம்..”
“நான் இன்னிக்கு புடவை கட்டல பாத்தீங்களா..?”
“ஆமா பாத்தன்;.. ஸ்ஸ்..ஆஆ.. இன்னும் கொஞ்சம் நவுத்தி வையீ..”
“இந்த எடந்தானே.. சூடு சாpயா இருக்குல்ல.. அப்றம் ஏன் இன்னும் வலி கேக்கல..?”
“தொpயில.. ப்ரூஃபன் இருந்தா எடுத்துட்டு வா..”
“அதெல்லாம்
போட கூடாதும்பாங்க.. நான் சொன்னா கேக்கவா போறீங்க.. சொல்றவங்க சொல்றாப்பல சொல்லுணும்..”
“வேணாம்..
என்னை கோவப்படுத்தாத..”
“சாp.. நான் எந்த சிறுக்கியையும் ஒண்ணுஞ்சொல்லல.. அப்டியே நெஞ்சுல சாஞ்சுக்கவா..”
“ம்ம்..
அய்யே.. தலைய கலைக்காதடீ.. இதென்னா புதுசா சொடுக்கெல்லாம் போட்டு விடற..”
“அன்னைக்கு
அவ உங்களுக்கு சொடுக்கு போட்டு வுட்டத பாத்தனே..”
மல்லாந்தவாக்கிலேயே அவளை அணைத்துக் கொண்டான். அவளை பார்க்க பாpதாபமாக இருந்தது. “நீ பேசாம வேற கல்யாணம் பண்ணிக்கோயேன்..” விசுக்கென்று நிமிர்ந்தாள்.
“இதென்னா நீங்க எடுக்கற சினிமான்னு நெனச்சீங்களா.. நீங்கன்னா எனக்கு உசுருங்க.. சினிமா எடுக்கறன்.. அதுஇதுன்னு பொண்டாட்டீன்னு ஒருத்தி இருக்கறத மறந்து சுத்துனீங்க.. சினிமாக்காரிங்கள சேர்த்துக்கிட்டீங்க.. நான் போவுணும்னு நினைச்சா அப்பவே போயிருக்குணும்.. அந்த சினிமாக்காரன நம்பி வேலைய வுட்டுடாதேன்னு சொன்னவங்களெல்லாம் துhக்கி போட்டுட்டு உங்க பின்னாடியே வர்றதுக்கு இன்னும் கூட பேசுவீங்க.. அப்டிதான.. அந்த சினிமாக்காரிய நெரந்தரமா கூட்டிட்டு வந்துடுணும்னு என்னை போவ சொல்றீங்களோ..” அழுகையில் குரல் பொpதாகியிருந்தது.
“இல்லம்மா..
சொல்லணும்னு தோணுச்சு.. அவ்ளோதான்..” என்றான் சமாதானமாக. கைகள் அவளை இறுக்கிக் கொண்டது.
“அதுக்குன்னு இப்டியா..?” நெஞ்சு முடிகளை நீவி விட்டாள்.
“ஏன்.. எனக்கு உம்மேல அக்கறை இருக்க கூடாதா..?” அவளின் கைகளை கோர்த்துக் கொண்டான்.
“அப்ப எல்லாத்தையும் வுட்டுட்டு எங்கூட வந்துடுங்க.. எல்லாரு மாதிரியும் நாம்பளும் வாழலாம்.. புதுசா வேலைய தேடிக்கலாம்.. நீங்க வேணும்னா முன்ன மாதிரி சாயந்தர நேரத்துல இலக்கிய கூட்டத்துக்கு போயிட்டு வாங்க.. நான் ஒண்ணும் சொல்ல மாட்டேன்.. புள்ள பொறக்கல.. அதுக்கு டாக்டர்ட்ட போயி என்னான்னு கேப்போம்.. உறவெல்லாம் நம்பள வுட்டு ரொம்ப துhரம் போயிட்டாங்க.. அவங்க வீட்டுக்கெல்லாம் போவோம்.. பழகுவோம்.. எனக்கும் வாழணும்னு ஆசையா இருக்குங்க..” அழுதிருப்பாள் போல். நெஞ்சில் படர்ந்திருந்த ஈரம் அவனுக்கு சொன்னது.
“சாp.. அழுவாத.. எல்லாத்தையும் சாp பண்ணிடலாம்..” காலையில் காலியாக இருந்த அவனது படுக்கைக்கு ஒரு சிறிய கடிதம் பதிலளித்தது.
“என் மீது அன்பு கொண்ட மனைவிக்கு.. என்னால் நீ ரொம்ப கஷ்டப்பட்டுட்டே.. அதெல்லாம் போதும்ன்னு நினைக்கிறன்.. என்னை விட்டுட்டு உன்னால இன்னொரு கல்யாணமும் செஞ்சுக்க முடியாது.. ஆனா அதுக்காக தண்டவாளங்களை இணைக்கவும் முடியாது.. போகிறேன்..’ தோற்று போன அதிர்ச்சியில் வெறி பிடித்தாற் போல அலைந்ததில் மூன்றாம் நாளே அவனை கண்டுப்பிடித்;தாள் ஒரு லாட்ஜ் அறையில். அங்கு கூடியிருந்த உதவியாளர்கள் மத்தியில் அந்த சினிமாக்காரியும் இருந்தாள்.
“அடப்பாவீ..
நீ ஓடிப்போறேன்னு சொல்றதுக்கு பதிலா தான் என்னை ஓடி போன்னு சொன்னீயா.. போயும் போயும்; இந்த பொம்பள கூட ஒடியாந்திருக்கியே.. ஊரு சனத்தை தான் மேக்கப் போட்டு ஏமாத்தலாம்.. அவ மூஞ்சிய பாத்தியா.. என்னை பொண்ணு பாக்க வந்தப்ப என்ன சொன்னே.. ஒரு பொட்டு வச்சா போதும்.. எந்நேரமும் பொண்ணை பாத்துக்கிட்டே இருக்கலாம் போலருக்குன்னு சொன்னில்ல.. அதெல்லாம் மறந்து போச்சா.. இப்டி ஒவ்வொருத்தியா இழுத்தாந்து குடும்பம் பண்ணுறீயேடா.. இதெல்லாம் அடுக்குமா..?”
“ஏய்.. மாpயாதையா போயிடு.. இங்கல்லாம் வராத..”
“அப்போ..
அவ மட்டும் வர்லாமா..? எ அறிவு கெட்ட மனுசா.. நல்ல குடும்பத்துல தான பொறந்த.. ஏன்டா உன் புத்தி இப்டி போவுது..”
“ஏய்.. என்ன ஆச்சுன்னு இவ்ளோ ஆர்ப்பாட்டம் பண்ற.. நான் வீட்டுக்கு வர்றன்.. நீ போயிடு இங்கேர்ந்து..” பேச்சில் அடக்கிக் கொண்ட கோபம் அவனின் கைகளில் தொpந்தது. பக்கத்திலிருந்த அசோசியட்டிடம் ஏதோ சொல்ல அந்த ஆள் வேகமாக வெளியே சென்றான். அதற்குள் அவள் கோபமாக அந்த பெண்ணிடம் திரும்பினாள். “என்னை தோக்கடிச்சுட்டு நீ மட்டும்; அவனோட வாழலாம்ன்னு பாக்குறீயாடீ.. நான் அந்தாளோட ஒரே பொண்டாட்டீ.. ஆனா நீ எத்தனையாவது வப்பாட்டியோ.. நீயும் ஒரு நாள் என்னை மாதிரி ஏமாந்து போவடீ..” அழுகையிலும் வார்த்தைகளை திருத்தமாக உச்சாpத்து கத்தியவளை வெறிக்கொண்டது போல தள்ளிக் கொண்டு வெளியே வந்தான் அவன். அதற்குள் உதவியாளன் அழைத்து வந்த ஆட்டோ வளைத்து வட்டமிட்டு அந்த லாட்ஜின் முன் நின்றது. அவளை தள்ளிக் கொண்டே வந்து ஆட்டோவில் ஏற்றினான். “தரமணியில இறக்கி வுட்டுடுப்பா.. அந்தம்மா இடம் சொல்லும்..” என்றவன் அவளிடம் குனிந்து “இறங்கீட்டு காசு குடுத்துக்க..” என்றான். ஆட்டோ கிளம்பியதும் அசோசியேட்டிடம் திரும்பி “தொpஞ்ச ஆட்டோக்காரன் தானே..” என்றான்.
கையாலாகாத தனிமை நாட்களை கடத்த எதையும் கேட்கும் மனநிலையில் இல்லாதது போல அவள் ஒதுங்கியிருந்த போது தான் அவனின் திடீர் மரணச் செய்தி அவளை தேடி வந்தது. துக்கத்தை விட அமிழ்த்தி வைக்கப்பட்டிருந்த கோபம் தான் அதிகமாக கொப்பளித்து எழுந்தது அவளுள். சுற்றிலும் கூடியிருந்த கூட்டத்தில் யாருக்கும் இப்படியொரு கணவன் வாய்த்திருக்க வாய்ப்பில்லை. அவள் வயது பெண்களுக்கு ஆள் உயர பிள்ளைகள் இருந்தனர். சொந்த வீடும் பேங்க் பாலன்ஸும் சுகர் மாத்திரைகளும் வாக்கிங் வகையறாக்களுடனான சாமான்ய வாழ்வு தனக்கு ஏன் மறுக்கப்பட்டது.. என்று அந்த நேரத்திலும் மனம் ஆராய்ந்தது. எதிலும் தனது தவறு இருப்பதாக அவளுக்கு தோன்றவில்லை. செய்யாத குற்றத்திற்கு சிலுவை சுமக்க அவளால் முடியாது. மனைவியின் மனதை புரிந்துக் கொள்ள தொpயாதவன் அவன் தான். குளிக்க வைக்கப்பட்டு முகத்தை விடுத்து உடலெங்கும் வௌ;ளை துணி சுற்றப்பட்டிருந்த நிலையிலிருந்த கணவனை பார்த்தாள். அவன் கேலியாக சிரிப்பது போலிருந்தது. சண்டைகளின்; போது கூட அவன் அவளை இப்படி தான் பார்ப்பான். பீறிட்டு கிளம்பும் கோபத்தில் அவள் கத்த ‘அதான்டீ நீ.. இதான் உன்னோட புத்தி..’ தாடைகள் இறுக எழும் கோபத்தை அவளின் மீது விழும் அடிகளோடு முடிப்பான். அப்படியே எழுந்து உட்கார்ந்து கத்தி விடுவானோ என்று கூட தோன்றியது அவளுக்கு. வன்மத்துடன் உற்றுப் பார்த்தாள் அவனை.
அவள் வீட்டார் இறுதி சடங்கிற்கான சம்பிரதாயத்தில் ஈடுப்பட்டிருந்தனர். சுற்றிலும் ஒரு வித தயக்கத்தோடு நின்றிருந்தனர் அவனின் உதவியாளர்களும்.. சிஷ்யர்களும். அனைவரும் அவளுக்கு பயப்படுகிறவர்கள் போலிருந்தனர். அதை அவள் உணராமலில்லை.
‘மேல வந்து விழாதீங்க.. நவுருங்க.. என் தெய்வத்தை கடைசியா பாக்கணும்..” ஒருவர் கூட்டத்தை மீறி வந்து கொண்டிருந்தார். “வீடே சின்னது.. இதுல காமிராவ வேற துhக்கீட்டு வந்துட்டானுங்க..’ வேறு யாரோ கோபமாக கத்தினார்கள். சின்னதாக தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ‘பொpய மனுசனை துhக்கி சின்ன வீட்ல அடைச்சு வச்சுட்டீங்களே.. கடைசியா ஒரு தடவை அவர கண்ணார பாக்க தவமா தவம் கிடக்குதுங்க ஜனங்க..’ யாரோ சொல்லிக் கொண்டிருந்தார்கள். கணவன் மீது வைத்த கண்ணை எடுக்கவில்லை அவள். ‘அவ அப்டி தான்.. அவளால யாரையும் புரிஞ்சுக்க முடியாது.. அதான் அவளோட குணம்..’ கூட்டத்தாருக்கு பதில் சொல்லிக் கொண்டே ‘உன்னை பத்தி தொpயாதாடீ..’ என்பது போல அவளை பார்த்தான் அவன்.
கதவோரம் நின்றிருந்த உதவியாளர்களை அருகே அழைத்தாள். ‘சம்பிரதாயமெல்லாம் முடிஞ்சுடுச்சு.. அவரை நீங்க சொன்ன மண்டபத்துல கொண்டு வச்சிடுங்க.. எல்லாரும் பார்த்த பிறகு அடக்கம் பண்ணிக்கலாம்..’ என்றவளை விநோதமாக பார்த்தார்கள் அவர்கள்.
இறுதியாக ஒருமுறை கணவனை பார்த்தாள். அவனை ஜெயித்து விட்டது போலிருந்தது அவளுக்கு. அவனிடம் சண்டை போட வேண்டும் என்று தோன்றியது. அந்த உணர்வு சட்டென அழுகையாக மாறியது.
***
No comments:
Post a Comment